ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக!

ஸ்டெர்லைட் ஆலை:  தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: பொதுமக்களுக்கு ஏமாற்றம்!

தமிழக அரசே! ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு 

சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக!

சுற்றுச் சூழலை பாதித்து மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் நடத்திய தொடர் போராட்டம், அதை ஒட்டி நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, கொடுமையான மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் பின்னணியில் தான், தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. அதை ரத்து செய்யுமாறு ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகிய சூழலில்,  ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற பலதரப்பு வாதங்களையும் நிராகரித்து பசுமைத் தீர்ப்பாயம் ஆலையைத் திறக்க அனுமதி அளித்தது. தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழு வரம்பை மீறி செயல்பட்டதாகவும், தீர்ப்பாயம் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாக  தீர்ப்பளித்ததாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள், அமைப்புகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.  இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில்  உச்சநீதிமன்றம் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், மக்களின் நலனுக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. தமிழக அரசு ஒரு கொள்கை முடிவாக மேற்கொண்டு அவசர சட்டம் நிறைவேற்றியிருந்தால் இத்தகைய நிலைமை தவிர்த்திருக்க முடியும் என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டி வந்துள்ளோம். எனவே, தமிழக அரசு இப்போதாவது ஒரு கொள்கை முடிவாக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தும், ஆலை திறப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
துப்பாக்கி சூட்டிலும், காவல்துறையின் அடக்குமுறையாலும் 15 உயிர்கள் பறிக்கப்பட்டன; 50க்கும் மேற்பட்டோர் குண்டு காயங்களால் பலத்த காயமடைந்துள்ளனர். இவ்வளவு விலை கொடுத்த பிறகும், ஆலையைத் இயக்க அனுமதிப்பது அநீதியாகும். ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்ட பல பிரச்சனைகளில் உறுதியான தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை மூடும் பிரச்சனையில் வழங்கியுள்ள தீர்ப்பு பொதுமக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த சட்டரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டே, மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க அனைத்துப் பகுதி மக்களையும், ஜனநாயக அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.

 

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...