ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியது வருமாறு;

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் துத்துக்குடியின் சுற்றுச்சூழலும், மக்களின் வாழ்வாதாரமும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், எனவே அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஆலை மூடியது முடியதுதான். அதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். உச்சநீதிமன்றத்தில் நடைபெறக்கூடிய வழக்குக்கு தேவையான விவரங்களை மேற்கொண்டு தந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள தேசிய மருத்துவ கவுன்சில் சட்டமசோதா, நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற பிரதமர் மோடி துடிக்கிறார். அந்த மசோதா நிறைவேறினால், மாநில உரிமை பறிபோகும். நீட் தேர்வு நிரந்தரமாகிவிடும். எனவே. அந்த மசோதாவை அதிமுக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்தக் கோரிக்கையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் சண்முகம், அந்த மசோதாவை அதிமுக ஏற்கெனவே எதிர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறபோது அதை எதிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களும், கே.பாலகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு;

கேள்வி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் அமைச்சரவை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து கேட்டீர்களா?

பதில்: இது தொடர்பாகவும் கேட்டோம். துப்பாக்கிசூடு நடந்து பதற்றமான சூழல் நிலவியநேரத்தில் உடனடியாக ஆலையை மூட அரசாணை வெளியிட்டோம். அரசாணை வெளியிடுவது கூட அரசின் முடிவுதான். அனைத்து விசாரணைகளிலும் ஆலை மூடுவதற்கு வலுவான ஆதாரங்களை எடுத்துரைத்து வருகிறோம். உச்சநீதிமன்றத்திலும் வாதாடுவோம் என்று அமைச்சர் கூறினார்.

கேள்வி: மேகதாது அணை குறித்து பேசப்பட்டதா?

பதில்: மேகதாது அணை குறித்தும் பேசினோம். கர்நாடக அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தமிழக அரசுதான் வெற்றி பெறும். கர்நாடக அரசின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. சட்டம், தீர்ப்புகள் அனைத்தும் தமிழகத்திற்கு சாதகமாக உள்ளது. எனவே, கர்நாடகம் அணை கட்டுவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்று அமைச்சர் பதிலளித்தார்.

கேள்வி: தனிப்பட்ட ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியிருக்கிறார். அது சரியா?

பதில்: சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறபோது, மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். அப்போது தொழிற்சாலையை அனுமதிப்பதா வேண்டாமா என்று அரசு கொள்கை முடிவு எடுத்து, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி: பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் ஆலை மூடப்பட்டது உரிமை மீறல் என்று கூறியிருக்கிறதே?

பதில்: பசுமை தீர்ப்பாயம் துவக்கத்திலிருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, சாதகமாக செயல்படுவதாகவே தோன்றியது. விசாரணைக்குழுவில் தமிழக நீதிபதிகள் இருக்கக்கூடாது என்று ஸ்டெர்லைக் கோரிக்கையை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. டிச.10ந் தேதி நடக்க வேண்டிய வழக்கை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை ஏற்று 7ந் தேதியே நடத்தியது. இறுதியாக வழங்கிய தீர்ப்பின் மூலம் சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை எங்களது மனுவிலேயே குறிப்பிட்டுள்ளோம்.

கேள்வி: ஆலை திறப்புக்கு பின்னால் ஏதாவது விளையாட்டு நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு மக்களுக்கு விரோதமாக உள்ளது. அவங்களுக்குள் என்ன உள்ஏற்பாடு இருக்கிறது என்பது பற்றி ஏதும் தெரியாது.

கேள்வி: தூத்துக்குடியில் ஜனநயாக ரீதியாக போராட்டம் நடத்துகிறவர்களை அரசு கைது செய்கிறது. கருப்புகொடி ஏற்றக்கூட அனுமதி மறுக்கப்படுவது குறித்து?

பதில்: ஆலையை திறக்க அணு அளவு கூட ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக இருக்க மாட்டோம். ஆலை மூடியது மூடியதுதான்  என்று அமைச்சர் கூறினார். இன்றுள்ள நிலையில் அதை நம்பாமல் இருக்க முடியாது. அதேசமயம், அரசை மட்டும் நம்பியிருக்க முடியாது. மக்களை திரட்டி போராடுவது அவசியமாக உள்ளது. அரசும் ஆலையை மூட நினைக்கும்போது, மக்கள் போராட்டங்களை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் முழுவதும் ஜனநாயக இயக்கங்களை நடத்த அனுமதிப்பதில்லை. இது அரசின் பொதுவான அனுகுமுறையாக இருக்கிறது. அதை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறோம்.

இந்த சந்திப்பின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், துத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, பேச்சிமுத்து, வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...