10ம் வகுப்பு பொதுத் தேர்வு – பள்ளிகளைத் திறந்து இரு வாரங்கள் கழித்து நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழக அரசு ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்தக் காலம் முழுவதும் தொடர்ந்து முற்றிலும் வேறான உளவியல் மற்றும் குடும்பச் சூழலில் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய சூழல் வெவ்வேறு விதமான மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்கு தேர்வு எழுதும் மனநிலையை உருவாக்கிட வேண்டும்.

இம்மாத இறுதியிலும், ஜூன் மாதம் துவக்கத்திலும் கொரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் என பரவலான கருத்து நிலவுகிறது. இச்சூழ்நிலையில் மாணவர்களை தனிமனித இடைவெளியுடன் தேர்வு எழுத வைக்க என்ன ஏற்பாடுகள் அரசிடம் உள்ளது என்பதும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான போக்குவரத்து ஏற்பாடுகள் என்ன என்பதும் தெரியாத சூழ்நிலையில் ஜீன் 1ம் தேதி தேர்வுகள் என்ற அறிவிப்பு பொருத்தமானதாக இருக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு அதன் பிறகு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும். பாடம் நடத்துவது என்ற நோக்கில் இல்லாமல், கல்வி பயில்வதற்கான மனநிலைக்கு மாணவர்களைக் கொண்டு வந்து தேர்வு எழுத வைப்பது என்ற நோக்கில் தமிழக அரசு இதை அணுக வேண்டும்.

தற்போதைய பணியமர்த்துதல் முறையில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அனைத்து உயர்கல்வி, பணியமர்த்தல் மற்றும் பணி உயர்வுகளுக்கு அடிப்படைக் கூறாக கணக்கில் கொள்ளப்படுகிறது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, அதற்கு உகந்த முறையில் பள்ளிகள் இயங்குவது, அதன் பிறகு தேர்வுகள் நடத்துவது என்கிற முறையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு திட்டமிட்டு நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...