16வது மக்களவைத் தேர்தல் – சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

16வது மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து தமிழகத்தில் 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்;

  1. வடசென்னை –    உ. வாசுகி
  2. கோயம்புத்தூர்    –    பி.ஆர். நடராஜன்
  3. கன்னியாகுமரி –    ஏ.வி. பெல்லார்மின்
  4. மதுரை – பா. விக்ரமன்
  5. திருச்சி    – எஸ். ஸ்ரீதர்
  6. விருதுநகர் – கே. சாமுவேல்ராஜ்
  7. திண்டுக்கல் – என். பாண்டி
  8. விழுப்புரம் (தனி)    – ஜி. ஆனந்தன்
  9. தஞ்சாவூர் – எஸ். தமிழ்ச்செல்வி

ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வேட்பாளர்கள் பற்றிய அறிமுகக் குறிப்பு

1. வடசென்னை : உ.வாசுகி

வடசென்னை மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான உ. வாசுகி (வயது 57) போட்டியிடுகிறார். பி.காம் படித்துள்ள இவர் 1977-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார்.

வங்கி ஊழியராகப் பணியாற் றிய இவர் 2000-ல்-விருப்ப ஓய்வு பெற்று கடந்த 14 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக செயல் பட்டு வருகிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் மாநிலம் முழுவதும் பிரேமானந்தா, சிதம்பரம் பத்மினி போன்ற போராட்டங்கள் உள்ளிட்டு முக்கிய பங்காற்றியவர். கோகோ கோலாவை எதிர்த்து சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்.

அதேபோல் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, விடுதி மாணவி கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், உத்தப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீண்டா மை ஒழிப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். இவரது கணவர் ஏ.பி.விஸ்வநாதன், மகள் அனுபமா. இவரது தந்தை ஆர். உமாநாத் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர்.

தற்போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது தாய் மறைந்த பாப்பா உமாநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

2. கோயம்புத்தூர் : பி.ஆர். நடராஜன்

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர். நடராஜன் (வயது 64) மீண்டும் போட்டியிடுகிறார். கல்லூரியில் இளங்கலை படிக்கும் பொழுதே அர சியலில் ஈர்க்கப்பட்டு மாணவர் சங்க தலைவராக செயல்பட்டவர், பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் கோவை மாவட்டத் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றியவர்.

இவர் கடந்த 38 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய கடந்த 5 ஆண்டு காலத்தில் இவருடைய முயற்சியின் கார ணமாக கோவை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டதோடு, 11 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பாலக்காடு செல்லும் 5 ரயில்கள் கோவை வழியாக செல்லாமல் போத்தனூர் சென்று கொண்டிருந்தன.

இவருடைய முயற்சியின் காரணமாக அந்த 5 ரயில்களும் கோவை வழியாக தற்போது செல்கின்றன. இதற்காக கோவை தொழில்துறை அமைப்பு, இந்திய வர்த்தகர் சங்கம், மலையாளிகள் சங்கம் ஆகியவை இணைந்து பாராட்டு விழா நடத்தியுள்ளன. கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது சுரங்க நடைபாதை, எக்ஸ்லேட்டர் மற்றும் லிப்ட் வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மாநில அரசு நீண்ட காலமாக இழப்பீடு வழங்காமல் இருந்தது. இவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையில் முதல் தவணையாக ரூ. 42 கோடியை பெற்றுத் தந்தார்.

கோவையில் இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தற்பொழுது திறக்கும் நிலையில் உள்ளது. மேலும் கரும்பு ஆராய்ச்சி நிலையம், ஜவுளித்துறை ஆராய்ச்சி நிலையம், தேசிய பஞ்சாலைக் கழகம், அரசு அச்சகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வை பெற்றுத் தந்தார். நாடாளுமன்றத்தில் தொழிலாளர்துறை, தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை, தொழில்துறை ஆகிய துறையில் நிலைக்குழு உறுப்பினராகவும், பெட்ரோலியம் மற்றும் இயற் கை எரிவாயு துறையின் உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

இவர் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றி மறைந்த தோழர் கே. ரமணி அவர்களின் மூத்த மருமகன் ஆவார். இவருக்கு வனஜா என்ற மனைவியும், ஆர்த்தி, அருணா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

3. கன்னியாகுமரி : ஏ.வி.பெல்லார்மின்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக ஏ.வி.பெல்லார்மின் (வயது 60) போட்டியிடுகிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., மற்றும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுத்தொழிலாளர் சங்கத்திலும், மீனவ தொழிலாளர் சங்கத் திலும், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்திலும் பொறுப்பு ஏற்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். தற்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அன்புசெல்வி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று நாடாளு மன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறையில் நிலைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவர்.

4. மதுரை : பா. விக்ரமன்

மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான பா. விக்ரமன் (வயது 53) போட்டியிடுகிறார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவர் 1979ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 35 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். பஸ் கட்டண உயர்வு எதிர்ப்பு, அரசு மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட போராட்டங்களில் தலைமையேற்று நடத்தியவர். பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போ ராட்டங்களில் பங்கேற்ற இவர் கைது செய்யப்பட்டு 21 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ராதாமணி என்ற மனைவியும், அருண் என்ற மகனும், ஆதிரா என்ற மகளும் உள்ளனர். இவரது தந்தை வி.பாலகிருஷ்ணன் சிஐடியு மதுரை மாவட்டச் செயலாளராக பணியாற்றியவர்.

5. திருச்சி : எஸ். ஸ்ரீதர்

திருச்சி மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான எஸ். ஸ்ரீதர் (வயது 56) போட்டியிடுகிறார். எம்.ஏ., வரை படித்துள்ள இவர் 1974ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 40 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். கட்சி மற்றும் தொழிற்சங்க போராட்டங்கள் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட முயற்சி போன்ற போராட்டங்களில் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியவர். பொன்மலை பணி மனையில் தேர்வு செய்யப்பட்ட கலாசி தொழிலாளர்களை வேலைக்கு எடுத்திட வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ ருக்கு எஸ். ருக்மணி என்ற மனைவியும், எஸ். விவேக் என்ற மகனும், எஸ்.ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர்.

6. திண்டுக்கல் : என். பாண்டி

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான என். பாண்டி (வயது 55) போட்டியிடுகிறார். பி.யு.சி. வரை படித்துள்ள இவர் 1978ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 36 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். வேலை அல்லது நிவாரணம், பழனி வட்டம், நெய்க்காரப்பட்டி நிலப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் தலைமையேற்று பங்கேற்று வெற்றி கண்டவர். பல்வேறு மக் கள் நலன் சார்ந்த போராட்டங்களில் பங்கேற்றதன் காரணமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், சுகதேவ் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளனர்.

7. விருதுநகர் : கே. சாமுவேல்ராஜ்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் (வயது 46) போட்டியிடுகிறார். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் +2 வரை படித்துள்ளார். 1986ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 28 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழி யராக பணியாற்றி வருகிறார்.

அருந்ததியர் மக்களுக்கான உள்இட ஒதுக்கீடு மற்றும் மாநிலம் முழுவதும் ஆலய நுழைவு போராட்டங்கள் உள்ளிட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். குடியாத்தம் தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை கண்டித்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினரால் கைது செய் யப்பட்டு 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பி. சுகந்தி என்ற மனைவியும், சிந்தியா, சுபாஷினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். பி.சுகந்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

8. விழுப்புரம் (தனி) : ஜி. ஆனந்தன்

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன் (வயது 53) போட்டியிடுகிறார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். 1983ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 31 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார்.

1991 ஆம் ஆண்டு பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான மறியல் போராட்டம் (கடலூர் சிறையில் 15 நாட்கள் அடைக்கப்பட்டார்), காங்கேயனூர் ஆலய நுழைவுப் போராட்டம், கரும்புக்கு கட்டுபடியான விலை கேட்டு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் தலைமையேற்று நடத் தியவர். காங்கேயனூர் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியில் படுகாயமுற்றவர். மக்கள் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதன் காரணமாக கைது செய்யப்பட்டு சுமார் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கு எ. சக்தி என்ற மனைவியும் (ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்), எ. ஜானகி, எ. ஜான்சிராணி ஆகிய இரண்டு மகள்களும், எ. ஜான்சன் என்ற மகனும் உள்ளனர்.

9. தஞ்சாவூர் : எஸ். தமிழ்ச்செல்வி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளருமான எஸ். தமிழ்ச்செல்வி (வயது 42) போட்டியிடுகிறார். எம்.ஏ., பி.எட். படித்துள்ள இவர் 1994ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 20 ஆண்டுகளாக கட்சியின் முக்கிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நடுக்காவேரி டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய போராட்டம், 100 நாள் வேலைத் திட்டம், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்த போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் தலைமையேற்று நடத்தியவர். இவரது கணவர் என்.வி. கண்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற் குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தமிழ்ச்செல்வி தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களால் படுகொலை செய்யப்பட்ட கட்சியின் தலைவர்களில் ஒருவரான தியாகி என்.வெங்கடாசலத்தின் மருமகள் ஆவார்.

 

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply