2011 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கை

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)                            

தமிழ்நாடு மாநிலக்குழு

2011 தமிழ்நாடு சட்டப் பேரவைத்
தேர்தல் அறிக்கை

தமிழக வாக்காளப்பெருமக்களுக்கு, வணக்கம்.

பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணி என்ப நாட்டிற்கு இவ்வைந்து

வள்ளுவப் பேராசான் ஒரு நாட்டிற்கு வகுத்த இலக்கணம் இவை. நோயின்மை, செல்வ வளம், வேளாண் பொருள் வளம், மக்கள் அனைவருக்கும் இன்ப வாழ்வு, நல்ல காவல் ஆகியவை கெண்டதுதான் ஒரு நல்ல நாட்டிற்கும், ஆட்சிக்கும் இலக்கணம் என்பது இதன் பொருள்.

ஆனால் கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சி இவை அனைத்திற்கும் மாறாக இருந்தது என்பதே நடைமுறை அனுபவம். தமிழ்நாடு கேடுகளால் சூழப்பட்டதும், வாழ்க்கைப் பாடுகளால் மக்கள் வதைபட்டதும் திமுக ஆட்சியின் ஐந்தாண்டு கால அவலட்சணம்.

இந்தப்பின்னணியில்தான் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2011 ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஏமாற்றங்களையே சந்தித்து வரும் தமிழ்நாடு ஏற்றம் காணவும், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவும் ஆட்சி மாற்றம் அவசியமாகும்.

இந்திய அரசியல் வானில் மாற்றுப்பாதை காட்டும் துருவ நட்சத்திரமாகவும், தமிழக மக்களின் மனசாட்சியாகவும் விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் வளம் பெறவும் தமிழகமக்களின் வாழ்வு நலம் பெறவும் இந்த தேர்தல் அறிக்கையை முன்வைக்கிறோம்.

மார்க்சிட் கட்சி தலைமையில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆட்சி நடத்திவரும் இடதுசாரி அரசுகள், ஊழலற்ற நிர்வாகத்திற்கு எடுத்துகாட்டுகளாகத் திகழ்கின்றன. அதே போல், நாடாளுமன்றத்திலும் மாநிலங்களின் சட்டமன்றங் களிலும் மார்க்சிட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பொதுவாழ்வில் நேர்மையை நிலைநாட்டி மக்களின் நன்பமதிப்பைப் பெற்றுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக விலை உயர்வு, மின்சார வெட்டு, வேலையின்மைக்கு எதிராகவும் மக்க ளின் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படவும் தொழில் பொருளாதார வளர்ச்சிக் காகவும் பல்வேறுபட்ட உழைக்கும் மக்களின் நலன்கள், உரிமை களை பாதுகாக்கவும் இடையறாத போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் நடத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மக்களை பாதிக்கும் இத்தகைய பிரச்சனைகளில் தனது வலுவான குரலை பதிவு செய்துள்ளதோடு. எண்ணற்ற போராட்டக் களங்களையும் கண்டுள்ளது. எதிர்வரும் காலத்திலும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மக்களுக்காக அயர்வின்றி போராட உறுதிபூண்டுள்ளது. தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் திருவிழா அல்ல. வேடிக்கை விளையாட்டும் அல்ல. தமிழகத்தின் எதிர்கால திசைவழியை தெளிந்து தேர்வு செய்ய மக்களுக்கு கிடைத்துள்ள நல் வாய்ப்பாகும்.

இப்பின்னணியில் தமிழக மக்கள் முன்புள்ள கடமைகள் குறித்தும், உரிமைகளை பாதுகாக்க நடத்த வேண்டிய போராட் டங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டியது அவசியமாகும்.

தேர்தல் களத்தில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கை களையும் அவற்றை நிறைவேற்ற வேண்டிய அறைகூவலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக மக்கள் முன் வைக்கிறது.

2006-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகளின் ஆதரவுடன் நடைபெறுகிறது. மேலும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் தி.மு.. முக்கிய பங்காளியாக அங்கம் வகித்து வருகிறது.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தி.மு.. தனது பல தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை காற்றில் பறக்க விட்டு, மத்திய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கடைபிடித்து வரும் மக்கள் விரோத, தாராளமயக் கொள்கைகளை ஆதரித்து நிற்பது மட்டுமன்றி, தமிழகத்திலும் அக்கொள்கைகளை தடம்புரளாமல் செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் தொழில் நெருக்கடி தீவிரமாகியுள்ளது. விவசாயத்துறையும் கடும் வீழ்ச்சியடைந் துள்ளது. பெருகி வரும் வேலையின்மை, மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் தொடர்கின்றன. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் கடும் மின்வெட்டு காரணமாக சிறு, குறு நடுத்தர தொழில்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த ஆட்சியில் ஊழலும், முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன. மக்கள் பிரச்சினைகளுக்காக நடைபெறும் ஜனநாயகப் போராட்டங்களை திமுக அரசு அடக்கி ஒடுக்க முனைகிறது. இத்தகைய மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவது தமிழக மக்களின் பிரதான கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்த நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஇஅதிமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டும், அக்கட்சி உடன்பாடு செய்துள்ள இதர கட்சிகளோடு இணைந்தும் தேர்தல் களத்தில் தமிழக மக்களைச் சந்திக்கிறது.

விலைவாசி உயர்வு

மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் தவறான பொருளாதாரக்கொள்கைகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை அடிக்கடி உயர்த்தி வருவதாலும், முன்பேர வர்த்தகம் தங்கு தடையின்றி நடைபெற அனுமதிப்பதாலும் வர்த்தகச் சூதாடிகள் உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாலும் தாங்கமுடியாத விலை உயர்வை மக்கள் சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் வெங்காயம், பூண்டு, பருப்புவகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகிறோம் என்று கூறிக் கொண்டே தமிழக அரசு இதர உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தது. இதனால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மற்றும் உயர்தர மக்களும் துன்ப துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு

தி.மு.. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் சீர்கெட்டுப் போயுள்ளது. படுகொலைகள் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன. கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை போன்ற தொழில்கள் அதிகரித்து அதில் ஈடுபடும் சமூகவிரோதிகளின் நடவடிக்கைகள் காரணமாக படுகொலைகள் தொடர்கதையாகி விட்டன. மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கத்தோடு குழந்தைகள் கடத்தப்படும் நிகழ்வுகளும் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. ஆளும் கட்சி அரவணைப்புடன் செயல்படும் சமூக விரோதிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பளையம் கிளை செயலாளர் வேலுச்சாமியும், கள்ளச்சாராயக் கும்பலை எதிர்த்துப் போராடிய திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ. நாவலனும் ஆளும் கட்சிக்கு சாதகமான சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இதர பல படுகொலைகளும் இக்காலத்தில் நடந்துள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதில் காவல்துறை தயக்கமும், காலதாமதமும் காட்டியது வெட்கக் கேடான நிலை மட்டுமல்ல வலுவான கண்டனத்துக்குரியதுமாகும்.

ஜனநாயக உரிமைகள்

தமிழ் நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் கொளுத்தப்பட்டு 3 ஊழியர்கள் கொல்லப்பட்டதும், பின்னர் குற்றவாளிகள் தப்பவிடப்பட்டதும் மனிதத் தன்மையற்ற செயல் ஆகும். திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கிலும் குற்றச்சாட்டடப்பட்ட அனைவரும் விடுவிக் கப்பட்டுவிட்டனர். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆகியவற்றில் ஆளுங்கட்சி நடத்திய தில்லுமுல்லுகளும், வன்முறைகளும், வாக்காளர்களுக்கு பண விநியோகமும் நாடாளுமன்ற ஜனநயகத்தையே கேலிக்கூத்தாக்கிய நிகழ்ச்சிகளாகும். மேலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்கள் மிகவும் குறைக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளைப் பேச எதிர்கட்சிகளுக்கு போதுமான வாய்ப்புகள் தரப்படுவதில்லை. பல்வேறு முக்கிய சட்டமசோதாக்கள் எவ்வித விவாதத்திற்கும் இடம் தராமல் நிறைவற்றப்பட்டன. இப்போக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பெரும் கேடு ஏற்படுத்துபவையாகும்.

மின் வெட்டு

தமிழகத்தை இன்று மிகப்பெரிய அளவில் பாதித்து வரும் பிரச்சினை மின்வெட்டு. இதை திமுக அரசின் சாதனை என்றே கூறலாம். தினசரி 3 முதல் 4 மணி நேரம் வரையிலும் மின்தடை ஏற்படுத்தப்பட்டு அனைத்துப் பிரிவினரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர அறிவிக்கப்படாத மின்வெட்டு அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. தொழிற்சாலைகள், விவசாயம், வணிகம், வீட்டுபயன்பாடு உள்பட அனைத்தும் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டு காலத்தில் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உருப்படியான எந்தத் திட்டமிடலையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கு மேலும், மின்துறையைத் தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு மின்சார வாரியத்தை தமிழ்நாடு அரசு மூன்று கூறுகளாகப் பிரித்துள்ளது. மத்திய மாநில உறவுகள்

தாராளமய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக மாநில அரசின் அதிகாரங்கள் மத்திய அரசால் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தனியார்மய நடவடிக் கைகளால் பல்வேறு துறைகளில் மாநில அரசின் பங்கு பறிபோகிறது. மாநில அரசுகளுக்கு மானியம் வழங்குவது, நிதி ஆதாரங்கள் வழங்குவது போன்ற பிரச்சனைகளில் தாராளமய கொள்கை அமலாக்கத்தை மத்திய அரசு முன் நிபந்தனையாக் குகிறது. 13-வது நிதிக் கமிஷன் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதில் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. வரிகளில் 50 சத பங்கை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. கல்வித்துறையில் மாநில அரசின் பங்கை பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி மத்திய அரசு சீர்குலைத்து வருகிறது. இவ்வாறு மாநில உரிமைகளும், நிதி மற்றும் அதிகாரம் மத்திய அரசால் பறிக்கப்படும் போது மாநில திமுக அரசு எவ்வித எதிர்பார்ப்பும் தெரிவிக்காமல் முழுமையாக ஒத்துப்போகிறது. திமுக அரசு கடந்த 5 ஆண்டுகாலமாக மாநில சுயாட்சிக் கொள்கையை கைவிட்டு விட்டது.

ஊழல்களும் முறைகேடுகளும்

மத்தியில் ஆளும், காங்கிரஸ் திமுக கூட்டணி அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளன. சமீபத்தில் வெளிவந்துள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் திமுகவைச் சார்ந்த அமைச்சர் ஆ.ராசா மட்டுமன்றி தமிழக முதல்வரின் குடும்பத்தினரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். தேசத்தையே அதிர்ச்சியடைய வைத்த 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய ஊழலில் சிக்கிய திமுகவின் முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட பலரும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். கலைஞர் டிவி நிறுவனத்தில் சிபிஐ புலனாய்வு விசாரணை நடைபெற்றுள்ளதோடு முதல்வரின் குடும்பத்தினரும் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

திமுக ஆட்சியில் பரவலான முறைகேடுகளும், அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினரின் சொத்துக் குவிப்புகளும் மக்களை மலைக்கச் செய்துள்ளன. மேலும் தொலைக்காட்சி, திரைப்படத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தி.மு.. தலைவரின் குடும்ப ஆதிக்கம் அனைத்துத் தரப்பு மக்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்துறை

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தி.மு.. கூட்டணி அரசும், தமிழகத்தில் திமுக அரசும் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தாராளமயக் கொள்கைகளால் சிறு,குறு தொழில்கள் கடுமையாக பாதித்துள்ளன. கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, இன்ஜினியரிங், பீடி, பட்டாசு, தீப்பெட்டி, உப்பு உற்பத்தி உட்பட பல தொழில்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பருத்தி, நூல்விலை உயர்வு மற்றும் ஏற்றுமதியால் ஜவுளித்தொழில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பலலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரில் ஏற்பட்டுள்ள சாயப்பட்டறை நெருக்கடிக்கும் தீர்வுகாண திமுக அரசு எத்தகைய உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்நிய மூலதனத்திற்கு மத்திய அரசு இந்திய சந்தையை தாராளமாகத் திறந்து விடுவதன் காரணமாக உள்நாட்டு தொழில்கள் நாசமடைந்து வருகின்றன. பல கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் சில்லறை வர்த்தகத்தைக் கூட அந்நிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு திறந்துவிடுவது என்பது சிறு வர்த்தகர்களின் வாழ்வை நிர்மூலமாக்கிவிடும். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பை உயர்த்தவும் வழி செய்யும் அந்நிய நேரடி மூலதன வரவு மிகக்குறைவே. மேலும் தமிழக திமுக அரசு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரால் அந்நிய தொழில் நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள பல மர்மமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் என்ன என்பதைக் கூட தமிழக மக்களுக்குத் தெரிவிக்க மறுக்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மார்க்சிட் கட்சி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தியது. ஆனால் திமுக அரசு இதை மூடு மந்திரமாகவே வைத்துள்ளது.

தினசரி அமலாக்கப்படும் பல மணி நேர மின்வெட்டால் தொழில்கள், விவசாயம் மற்றும் சாதாரண மக்கள் அவதியுறும்போது அந்நிய முதலாளிகளுக்கு மட்டும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவது அவர்களின் கொள்ளைக்கு துணைபோகும் செயலாகும்.

விவசாயம்

தமிழகத்தில் விவசாயம் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இக்காலத்தில் விவசாய சாகுபடிக்கான நிலப்பரப்பும் மொத்த விவசாய உற்பத்தியும் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளன. மேலும் மரபணு மாற்றம் செய்யப்படட விதைகள் எவ்வித சோதனையும் இல்லாமல் கொல்லைப்புற வழியாக தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் ஒருபுறம் கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் விவசாயத்தை விட்டே வெளியேறிவரும் நிலையில் மறுபுறம் ஏராளமான விவசாயிகள் கந்து வட்டிக் கொடுமையால் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகின்றனர். நெல், கரும்பு, பருத்தி, மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிக்காத வண்ணம் விவசாயிகளுக்கு உதவித் தொகையும், ஆதரவு விலையும் வழங்குவோம் என்றும், கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட 3 மாத காலத்திற்குள் மத்திய அரசு நிர்ணயம் செய்யும் கரும்பு ஆதார விலை மற்றும் மாநில அரசு வழங்கும் கூடுதல் விலை இரண்டையும் சேர்த்து முழுமையாக வழங்கச் செய்வோம் என்றும் 2006 தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் திமுக அரசு அதை நிறைவேற்றாததால் விவசாயிகள் போராடி வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களும் ஒரு சிறிய விலை உயர்வைப் பெற கடும் போராட்டம் நடத்த வேண்டி வந்தது.

விவசாய விளைநிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமே ஏராளமான நிலங்களை விலைக்கு வாங்கி பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் அரசியல் செல்வாக் குள்ளவர்கள் ஈடுபடுவதால் கணிசமான விவசாய விளை நிலங்கள் வீட்டு மனைகளாகின்றன. மறுபுறம் ஆளும் கட்சியினரின் ஆதரவோடு நடைபெறும் நில மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென 2010-ஆம் ஆண்டில் போடப்பட்ட அரசு உத்தரவின் படி சிறு விவசாயிகளின் கையில் ஆண்டாண்டுகாலமாக இருந்த குடியிருப்புகளும் உள்ளடக்கிய விவசாய நிலங்கள்தனியார் காடுகள் என தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் நிலத்திற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் 7,000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் பாக்கிகளை தள்ளுபடி செய்த திமுக அரசு மீண்டும் கூட்டுறவு சொசைட்டி செயல்படவும், புதிய கடன்கள் வழங்கவும் உரிய நடவடிக்கைகளை செய்யவில்லை. இதனால் சிறு குறு விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

தமிழகத்துக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையிலான நதி நீர் தாவாக்களை முடிவுக்குக் கொண்டு வந்து சுமுகத் தீர்வு காண உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ள திமுக அரசு தவறியுள்ளது. இதனால் காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு உள்பட நதி நீர் தாவாக்கள் தீர்க்கப்படாமல் தமிழக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நெய்யாறு இடது கரை கால்வாய் பிரச்சினையில் பேசித் தீர்வுகாண ஒரு குழுவை அனுப்புமாறு கேரள அரசு கடந்த 5 ஆண்டுகளில் 5 முறை கடிதம் எழுதியும் இது வரை ஒரு குழுவை அனுப்பி வைக்க முன்வராத திமுக அரசின் நிலையால் தீர்வு காணப்படாத நிலை நீடிக்கிறது. தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், பாரமரிக்கவும் உரிய திட்டங்கள் இல்லாததால் மழை நீரை சேமிக்க இயலாமல் கடலில் கலந்து வீணாகும் நிலை நீடிக்கிறது.

விவசாயத் தொழிலாளர் நிலை

கிராமப்புற வேலை வாய்ப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டுமென்ற அக்கறை திமுக அரசுக்கு இல்லை. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மிகக் குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுகிறது. சட்டப்படியான குறைந்தபட்சக் கூலி வழங்கப்படுவதில்லை. பல மாநிலங்களில் ரூ. 150/-க்கு மேல் தினசரி கூலி வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் ரூ. 80/- கூட வழங்கப்படாத நிலை தான் தொடர்கிறது. அதிலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தமிழகத்தில் உள்ள சுமார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பண்படுத்தி, நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம் என்று திமுக 2006-ஆம் சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. ஆனால் அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஏராளமான புறம்போக்கு நிலங்கள் பெருமுதலாளிகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுயநல சக்திளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்போது அதை மீட்பதற்கு திமுக அரசு தயாராக இல்லை என்பதே உண்மை. நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் அரசின் சட்டங்களாலும், செயல்பாடுகளாலும் அரசே நிலக்குவியலுக்கு வழி செய்கிறது. தமிழகத்தில் நிலமற்ற ஏழைகள் நிலத்திற்கான போராட்டத்தை நடத்துகின்றனர். அப்போராட்டங்களை ஒடுக்கும் நிலைபாட்டையே திமுக அரசு மேற்கொள்கிறது. இதோடு புறம்போக்கு நிலங்களில் வாழும் ஏழை எளிய மக்களை நிலத்தைவிட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றுகிறது. சென்னை மாநகரில் மட்டும் வளர்ச்சித் திட்டம் என்ற பெயராலும், அழகுபடுத்துவது என்ற பெயராலும் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் மாநகர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு மாநகருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்ணகிநகர், செம்மஞ்சேரி போன்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கும் இத்தகைய பகுதிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாத அவல நிலை உள்ளது.

தொழிலாளர் நலன்

திமுக ஆட்சியில் தொழிலாளர் நலன்களும், உரிமைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. தொழிற்சங்க உரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. காண்ட்ராக்ட், கேசுவல் என்ற முறையில் தொழிலாளர்களின் உழைப்பு கொள்ளையிடப்படுகிறது. ஊதியம், உரிமைகள் கோரி நடைபெறும் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்கள் காவல்துறையின் தடியடி, கைது, சிறை போன்ற அடக்குமுறைகளால் ஒடுக்கப்படுகின்றன. தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தொழிலாளர்துறை செயல்படாமல் முடக்கப் பட்டுள்ளது. தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான சட்டத்தையோ விதிமுறைகளையோ உருவாக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. முறைசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படாமல் விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கின்றன.

கல்வி

மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசும், மாநிலத் திமுக அரசும் கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி விட்டன. இதனால் இன்றைய தினம் தனியார் கல்வி நிறுவனங்கள் மிகப்பெரும் கொள்ளைக் கூடாரமாக மாறியுள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததாலும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததாலும் மக்கள் தனியார் கல்வி நிறுவனங்களை நாடும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் கொள்ளைக்கார கல்வி வியாபாரிகளின் கையில் கணிசமான மாணவர்களின் எதிர்காலம் சிக்கியுள்ளது. ஆரம்பக்கல்வி கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பாதியிலேயே பள்ளிகளிலிருந்து வெளியேறும் நிலை தொடர்கிறது. சமச்சீர் கல்வி என்பது வெற்று முழக்கமாகவே உள்ளது. கல்விக் கட்டணத்தை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பித்துள்ள சட்டமோ, அதற்கான அதிகார அமைப்போ செயலற்று உள்ளன. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகள் மிக, மிகச் சீரழிந்துள்ளன. போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால் அடிப்படை வசதிகள் இல்லாமலும் தரம் குறைந்த உணவாலும் விடுதி மாணவர்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்தியஅரசு அந்நிய பல்கலைக் கழகங்களையும், கல்வி நிறுவனங்களையும் இந்தியாவில் அனுமதிக்கும் கொள்கையை அமலாக்கிடத் துடிக்கிறது. இது இந்தியாவின் கல்விச் சூழலையே சீர்குலைத்து விடும் என்ற கல்வியாளர்களின் கவலையை அரசு கண்டுகொள்ளவில்லை.

சுகாதாரம்

தமிழகத்தில் சுகாதார நிலை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவக் கல்லூரிகளும் போதிய மருத்துவர்கள் இல்லாமலும், போதிய மருத்துவ பரிசோதனைக் கருவிகள் இல்லாமலும் உள்ளன. அரசு பொது மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்து உள்பட போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில்தான் கலைஞரின் உயிர்காக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களையும், மருத்துவமனைகளை யும் கொழுக்க வைக்கும் இத்திட்டத்திற்குக் காட்டும் ஆர்வத்தை அரசு மருத்துவமனைகளையும், மருத்துவக் கல்லூரிகளையும் சீரமைக்கப் பயன்படுத்தினால் ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்க முடியும். தனியார் மற்றும் அந்நிய மருந்துக் கம்பெனிகளின் நலன்களுக்காக பொதுத் துறையில் அமைந்துள்ள நோய் தடுப்பு மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அரசு பெரும்பாலும் கைவிட்டுள்ள நிலையில் மக்கள் புதிய, புதிய தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் பலியாகியும் வருகின்றனர்.

பெண்கள் நிலை

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வரதட்சணை கொடுமைகள் அதிகரித்துள்ளன. பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளதோடு பெண் குழந்தைகள் இதில் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை கொடூரமானதாகும். குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படவில்லை. இதற்கு போதுமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. தொழிற் சாலைகளிலும் இதர நிறுவனங்களிலும் உழைக்கும் பெண்களுக்கு அடிப்படை தேவைகளும் சட்டப்பூர்வமான உரிமைகளும் முழுமையாக அமலாக்கப்படுவதில்லை. நூற்றுக்கணக்கான பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரால் பெண்கள் நவீன கொத்தடிமைகளாக சுரண்டப்படும் நிலை நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் 2009-இல் 5333 ஆக இருந்தது, 2010-இல் 6127 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு 17 குற்றங்கள் பதிவாகின்றன. நுண்நிதி நிறுவனங்களின் நவீன கந்து வட்டிக் கொடுமைகளின் காரணமாக பல ஏழை பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவது, ஊரை விட்டு வெளியேறுவது போன்ற அவல நிலை உள்ளது. தனித்து வாழும் பெண்கள் சமூகப் பிரச்சனைகளையும், தலித் பெண்கள் சாதிய பிரச்சனைகளையும் கூடுதலாக சந்திக்கின்றனர். குடும்ப கௌரவம் காக்க என்கிற பெயரில், இளம் பெண்கள் பெற்றோர்களாலேயே கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

தலித், பழங்குடியினர் நலன்

தீண்டாமைக் கொடுமைகள் தமிழகத்தில் பரவலாகத் தொடர்கின்றன. இதற்கு முடிவு கட்ட திமுக அரசு உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் ஆதிக்க சக்திகளால் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர்ச்சியான இயக்கங்களால் அப்புறப்படுத்தப்பட்டு தலித் மக்களுக்கு ஒரு பொதுப்பாதை உருவாக்கப்பட்டது. ஆயினும் திமுக அரசு அங்கு தலித் மக்களுக்கு பேருந்து நிறுத்த நிழற்குடை உட்பட அடிப்படை வசதிகளைச் செய்து தரவோ, அங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் தலித்துகள் வழிபட அனுமதிக்கவோ தயராக இல்லை. தமிழகத்தின் பல கிராமங்களிலும் நிலவி வரும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தீண்டாமை கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு உரிய முறையில் அமல்படுத்தவில்லை. தலித் பழங்குடி உபதிட்டங்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கியதாக தமிழக அரசு தம்பட்டம் அடித்தபோதிலும் இம்மக்களின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அந்நிதி செலவிடப்படவில்லை என்பதே உண்மை. மேலும் அருந்ததியர் அமைப்புகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலகட்டப் போராட்டங்களுக்குப் பின் அருந்ததியர் மக்களுக்கு 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் வேலைவாய்ப்பில் தமிழக அரசு அதை முறையாக அமலாக்கவில்லை. உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னரும் கூட அதனை அமலாக்குமாறு போராட வேண்டிய சூழ்நிலையே தமிழகத்தில் நிலவுவது வருந்ததக்கது.

மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை தொடர்கிறது. பாதாளச் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதால் விஷவாயு தாக்கி மரணம் அடையும் பரிதாப நிலை தொடர்கிறது.

இடதுசாரிகளின் வற்புறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள வன உரிமைச் சட்டம் தமிழகத்தில் அமலாக்கப்படவில்லை. பழங்குடி மக்கள் அவர்களது பூர்வீக வன நிலங்களில் இருந்து பல்வேறு காரணங்களை கூறி வெளியேற்றப்படுகின்றனர். பழங்குடியினர் நலத் திட்டங்கள் முறையாக அமலாக்கப்படுவதில்லை. பரவலான பழங்குடி மக்கள் மின் இணைப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்வி, சுகாதார மற்றும் சாலை வசதிகள் இன்றியே வாழ்கின்றனர். பழங்குடி மக்கள் சாதிச் சான்றிதழ் பெறுவது என்பது பெரும்பாலோருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.

மீனவர் பிரச்சனைகள்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். டீசல் விலை உயர்வு, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு மீன்பிடிக்க அனுமதி போன்ற பல பிரச்சினைகளால் தமிழக மீனவர்கள் அவதிக்குள்ளாகிறார்கள். கடலோர மேலாண்மைச் சட்டம் என்ற புதிய சட்டம் அவர்களின் மீன்பிடி உரிமையைப் பெரும் ஆபத்திற்குள்ளாக்குகிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர். இவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப் படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாக நீடிக்கின்றன. தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளுக்கு மத்திய மாநில அரசுகள் இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் காணவில்லை.

சிறுபான்மையினர் நிலை

தமிழகத்தில் வாழும் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு உரிய பாதுகாப்பும், வாய்ப்புகளும் வழங்க வேண்டியது அரசின் கடமை. மத்தியில் ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைப்படி முஸ்லீம்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித வேலை வாய்ப்பு வழங்க மறுத்து வருகிறது. கிறிஸ்தவ தலித்துகளுக்கும் இதர தலித்துகளைப் போல் பட்டியலினமாகக் கருதி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற பரிந்துரையும் ஏற்கப்படவில்லை. மேலும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கான அனுமதி வழங்கப்படாமலேயே பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுகின்றன. தங்களுக்கு சமநீதி மறுக்கப்படுவதாக அவர்கள் வருந்தும் நிலைதான் இன்றும் உள்ளது. மொழி வழி சிறுபான்மை மக்களுக்கு தங்கள் மொழியில் கல்லூரியில் கல்வி பயிலவும், அரசியல் சட்டம் அங்கீரித்துள்ள உரிமைகள் வழங்கவும் தி.மு.. அரசு தயாராக இல்லை.

பிற்படுத்தப்பட்டோர் உரிமை

தமிழகத்தில் பெரும்பகுதியினர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்தவர்களாவர். அவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்ந்தாலும் தனியார்மயம் காரணமாக இடஒதுக்கீடுக்கான வாயப்புகள் மிகவும் குறைந்துள்ளன. எனவே கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அரசுத் துறைகளில் மட்டுமன்றி, தனியார் துறைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அது குறித்து உறுதியான எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை.

வீட்டுவசதித் திட்டம்

தமிழக முதல்வரின் பெயரில் குடிசை வீடுகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருவாரியான ஏழை, எளிய மக்கள் அரசு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்தும் பட்டாக்கள் வழங்கப்படாததால் அவர்களுக்கு இத்திட்டத்தால் பயன் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் கட்டுமானப் பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ள நிலையில் பட்டா உள்ளவர்ளும் கூட அரசு வழங்கும் ரூ. 75,000/-இல் கான்கிரீட் வீடு கட்ட இயலாமல் கடனாளிகளாக மாறியுள்ளனர். இந்நிலையில்தான் தேர்தலை முன்னிட்டு பயனாளிகள் என்ற பெயரில் பல லட்சக்கணக்கானோருக்கு இத்திட்டத்திற்கான அனுமதியோ, உத்தரவோ தராமல் வெறும் டோக்கன்கள் வழங்கி வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் பெரும் மோசடியை திமுக அரசு அரங்கேற்றி வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகள்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்க திமுக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆளும் கட்சியின் தலையீட்டால் உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் போக்குகள் தலைவிரித்தாடுகின்றன. இதோடு தமிழக அரசு தனது வரி வருவாயில் 10 சதவீதம் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கியுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் பெருமளவில் முடங்கியுள்ளன. தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் முறையால் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் தேர்தல் நடைபெறும் போது பிரதிநிதிகளைக் கடத்திக் கொண்டு செல்லுவதும், பணம் கொடுத்து பேரம் பேசுவதும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. கூட்டுறவு அமைப்புகள்

தமிழகத்தில் மோசடியான தேர்தல் மூலம் கூட்டுறவு அமைப்புகளை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வர திமுக முயற்சிகளை மேற்கொண்டது. அதற்குக் கடுமையான எதிர்ப்பும், நீதி மன்றங்களின் தலையீடும் இருந்ததால் தடுக்கப்பட்டன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலே நடத்தப்படாமல் அதிகாரிகள் மூலமே நிர்வாகம் நடத்தப்படுகிறது. இதனால் கூட்டுறவு அமைப்புகளின் அடிப்படையே தமிழகத்தில் தகர்ந்து வருகிறது.

தமிழின் பரிதாப நிலை

செம்மொழி மாநாடு, தஞ்சைப் பெரியகோவில் 1000வது ஆண்டு விழா என ஆடம்பரமான விழாக்களை நடத்துவதில் காட்டிய அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட தமிழ்மொழியின் மெய்யான வளர்ச்சிக்கு காட்டப்பட்டதில்லை. அரசியல் சாசனத்தின் 8வது அட்டவனையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை மத்திய ஆட்சிமொழியாக்கவும், நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரவர் தாய்மொழியில் பேசவும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் மத்திய அரசை திமுக அரசு உரிய முறையில் வலியுறுத்தவில்லை. தமிழகத்தின் ஆட்சிமொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆண்டுகள் பல கடந்தபின்பும் தமிழ் முழுமையாக ஆட்சிமொழி ஆக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் முதல் ஆலயங்கள் வரை தமிழ்நாட்டில் தமிழை தலைமை தாங்கச் செய்ய திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழில் தடையின்றிப் பயில்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

தமிழக மக்களின் நலன் காத்திட வாக்காளர்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
முன்வைக்கும் உறுதிமொழிகள்

 • மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்து வரும் திமுக காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடித்து தமிழகத்தில் திமுக ஆட்சியை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களம் காண்கிறது.

 • புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக தமிழகத்தில் தொழில்களும் பொருளாதாரமும் நலிந்து, மக்களின் துயரங்கள் பெருகி வருவதால் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனும் நாசகரக் கொள்கைகளை முறியடிக்கவும், மக்கள் நலன் காக்கும் மாற்று கொள்கையை முன்நிறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்.

 • சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பாதுகாக்கவும் அவற்றை மேம்படுத்தவும் கட்சி பாடுபடும். இத்தொழில்களுக்கு வரிச்சலுகை, மின்சாரம், கடன்வசதி மற்றும் கட்டமைப்புகள் பலப்பட அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி மேற்கொள்ளும்.

 • சிறு வணிகத்தில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க கட்சி உறுதியாகப் போராடும்.

 • விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்யவும், பதுக்கலை ஒழிக்கவும்,அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பொது விநியோக முறை மூலம் நியாய விலையில் அனைவருக்கும் வழங்கவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் தலா 35 கிலோ அரிசி வழங்கிடவும், உணவுப் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக உத்தரவாதப் படுத்தவும் கட்சி பாடுபடும்.

 • மின்தடை அறவே ரத்து செய்யப்படவும், தடையில்லா மின்சாரம் அனைத்துப் பகுதியினருக்கும் கிடைத்திடும் வகையில் புதிய மின் திட்டங்கள் கொண்டுவரப்படவும் கட்சி பாடுபடும். மின்வாரிய பிரிவினையை ரத்து செய்ய குரல் கொடுக்கும். இலவச மின்சாரம் கோரி மனுச் செய்த தகுதியுடைய அனைவருக்கும் உடனுக்குடன் மின்இணைப்பு கிடைக்க போராடும்.

 • சீரழிந்துவரும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், கட்டப் பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், மணல் கொள்ளை, மற்றும் நில மோசடிகளை முடிவுக்கு கொண்டு வரவும் கட்சி போராடும். கிரிமினல்மயமாகிவரும் அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி போராடும்.

 • வேலையின்மை பெருகி இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி வரும் நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தையும் நிரப்பவும் கட்சி பாடுபடும். வேலையில்லா காலத்திற்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்க கட்சி வற்புறுத்தும்.

 • தற்போதைய நடைமுறையில் உள்ள பல்வேறு நலத் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் அகற்றப்படவும் அவற்றை மேம்படுத்தி விரிவுபடுத்தவும் கட்சி போராடும்.

 • நிலச் சீர்திருத்த சட்டங்களை அமலாக்கவும், நிலக்குவியலை முடிவுக்குக் கொண்டு வரவும், மிச்ச நிலங்களையும், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களையும் நிலமற்ற தலித் மற்றும் ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் பகிர்ந்து வழங்கவும் கட்சி பாடுபடும்.

 • பல லட்சக் கணக்கான ஏழை, எளிய மக்கள் குடியிருக்க வீடுகளின்றி அவதிப்படுகின்றனர். இந்நிலையைப் போக்கிட இலவச வீட்டுமனை வழங்கவும், தற்போது குடியிருக்கின்ற வீட்டுமனை களுக்கு பட்டா வழங்கவும், கான்கிரீட் வீடுகள் கிராமம், நகரம், மாநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடிசைவாசிகள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் வீட்டு வசதித் திட்டம் உருவாக்கிடவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும். வளர்ச்சிப் பணி தொழில்மயம் என்ற பெயரால் சென்னை மாநகரில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களை வெளியேற்றும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்திடப் போராடும். கோவில் நிலங்களில் குடியிருப்போர் நலன்களைப் பாதுகாத்திட கட்சி குரல் கொடுக்கும்.

 • தேசிய வேலை உறுதிச்சட்டத்தை கிராமங்களில் மட்டுமன்றி நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்கும் விரிவுபடுத்திடவும், வருடத்தில் குறைந்தபட்சம் 150 நாட்கள் வேலை வழங்கிடவும், குறைந்தபட்ச தினக்கூலி ரூ.200/ வழங்கிடவும் அரசை வற்புறுத்தும்.

 • விவசாய விளை நிலங்களை தொழில் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்து வதற்கு எதிராக கட்சி போராடும். விவசாயிகள் ஒப்புதலுடன் கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கப் போராடுவதோடு அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் குரல் கொடுக்கும்.

 • அரசுப் பணிகளில் தொகுப்பூதியம், தற்காலிகம், காண்டிராக்ட் என்ற அடிப்படையில் பணியிலமர்த்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பணிவரன்முறையுடன் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிடவும், சுயநிதிக் கல்லூரிகளில் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர உரிமைகள் வழங்கவும் கட்சி குரல் கொடுக்கும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு காணவும் கட்சி பாடுபடும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போன்றோரின் ஊதிய உயர்வுக்கும், பணி நிலைமைகளில் முன்னேற்றம் காண்பதற்கும் கட்சி போராடும். பாதகமான புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்படவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவும், அவர்களது சங்கங்களுக்குத் தேர்தல் மூலம் அங்கீகாரம் வழங்கவும் வற்புறுத்தப்படும்.

 • விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கப்பெற கட்சி பாடுபடும். குறிப்பாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 1,500 வழங்கிடவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 3,000 வழங்கிடவும் கட்சி குரல் கொடுக்கும்.

 • வங்கிகளும், கூட்டுறவு அமைப்புகளும் வழங்கிய விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்யவும், கந்துவட்டிக் கொடுமைகளிலிருந்து ஏழை நடுத்தர விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேவையான புதிய கடன்களை அரசுடமை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாமல் வழங்கவும் கட்சி வற்புறுத்தும்.

 • விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடு பொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்க உரிய தலையீடுகள் செய்யப்படும்.

 • முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், முல்லைப் பெரியார், காவிரி, நெய்யாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு விரைந்து கிடைத்திடவும் கட்சி பாடுபடும். பாசன வசதியைப் பெருக்கிட புதிய அணைகள் கட்டுவது, ஏரிகளை ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கட்சி பாடுபடும்.

 • மீனவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவும், மானிய விலையில் அவர்களுக்கு டீசல் வழங்கவும், இலங்கை கடற்படையினரால் நடைபெறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய மாநில அரசுகளை கட்சி வற்புறுத்தும்.

 • இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வும், அவர்களுக்கு சம உரிமையும் கிடைக்க கட்சி பாடுபடும். முள்வேலி முகாம்களில் இன்னமும் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களை அவர்களின் பூர்வீகக் குடியிருப்புப் பகுதிகளில் மீள் குடியமர்த்தவும், குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவும் மத்திய அரசு தலையிட கட்சி வற்புறுத்தும். வடக்குகிழக்கு மாகாணங்களை இணைத்து மாநில சுயாட்சி வழங்க உரிய தலையீடுகளைச் செய்யும். இலங்கையில் தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரம் பாதுகாக்கப்படவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொழில், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் பலப்பட மத்திய அரசின் மூலம் உரிய நிர்ப்பந்தங்களைக் கட்சி கொடுக்கும். கிடப்பில் போடப்பட்டுள்ள சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும்.

 • அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்க அங்கீகாரம் கிடைத்திடவும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகளை உத்தரவாதப்படுத்திடவும், தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்கவும் கட்சி போராடும்.

 • அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்க்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்கீழ் மாத ஊதியம் ரூ. 10,000 என அறிவிக்கப்படுவதையும், அவ்வூதியம் முறையாக வழங்கப் படுவதையும் உத்தரவாதப்படுத்த கட்சி பாடுபடும்.

 • முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் காலதாமதமின்றி வழங்கப்படவும், அத்தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 1000 பென்ஷன் வழங்கிடவும், விபத்துக்குள்ளான தொழிலாளர் களுக்கு நிவாரணம் உயர்த்தப்படவும் கட்சி போராடும்.

 • பெண் தொழிலாளர்களுக்குப் பணியாற்றும் இடங்களில் சட்டப்பூர்வமான உரிமைகள் கிடைத்திடவும், அவர்களுக்கு உரிய வசதிகள் பணியிடங்களில் கிடைத்திடவும் கட்சி பாடுபடும்.

 • தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்திடவும், பலப்படுத்திடவும் கட்சி உறுதியாகப் போராடும். தனியார்மயத் திட்டங்களையும் முயற்சி களையும் முறியடிக்க உறுதியாக போராடும்.

 • கல்லூரிக் கல்வி வரை இலவசக் கல்வி வழங்கிடவும், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், தலித் மற்றும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளச் செய்யவும் கட்சி பாடுபடும்.

 • பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:40 விகிதத்தில் உருவாக்கவும், அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மாணவர்களின் கல்விக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தவும் கட்சி குரல் கொடுக்கும்.

 • சமச்சீர் கல்வி தமிழகத்தில் முறையாக அமலாக்கிட கட்சி பாடுபடும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை, எளிய நடுத்தரக் குடும்ப மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ரயில் மற்றும் பஸ் பாஸ் வழங்க கட்சி வற்புறுத்தும்.

 • பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்,பழங்குடி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்திடவும், அவர்களுக்கு தரமான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், இவற்றிற்குத் தேவையான அரசு மானியம் உயர்த்தப்படவும் கட்சி பாடுபடும்.

 • எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தல் ஆண்டுதோறும் முறையாக நடைபெறவும், பல்கலைக் கழகங்களின் ஆட்சி மன்றக்குழு, பேரவை ஆகியவற்றில் மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவும் கட்சி குரல் கொடுக்கும்.

 • இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் அவர்களது ஆற்றலை மேம்படுத்த உரிய திட்டங்கள் வகுக்கப்படுவதற்கு கட்சி பாடுபடும். விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் உலகமய கலாச்சார சீரழிவிலிருந்து இளைஞர்களை பாதுகாக்கவும் உரிய திட்டங்கள் வகுக்கக் குரல் கொடுக்கும். இளைஞர்கள் அனைத்துத் துறைகளிலும் மேம்பட வழிவகுக்கும் இளைஞர் கொள்கை ஒன்றை உருவாக்கிட அரசை கட்சி வற்புறுத்தும்.

 • தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் முதல் கல்விக்கூடங்கள் வரை தமிழ் மொழிப் பயன்பாட்டை உறுதி செய்யவும், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக மாறவும், மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மலரவும் மார்க்சிட் கட்சி பாடுபடும்.

 • சமூகஅக்கறையுடன் கூடிய பன்முகப் பண்பாட்டுச்சூழலை உருவாக்க கட்சி பாடுபடும், அதற்கு உதவிடும் வகையில் தரமான திரைப்படங்களை வெளிக்கொணரவும், கலை இலக்கிய வளர்ச்சிக்கு உரிய ஊக்கம் கொடுக்கவும் அரசை கட்சி வற்புறுத்தும்.

 • பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கிடைக்கவும், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கவும் கட்சி போராடும். பெண்களின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கி அமலாக்கவும், பெண்கள் மீதான கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கவும், வரதட்சனை கொடுமைகளிலிருந்தும் இதர சமூகக் கொடுமை களிலிருந்தும் பெண்களை விடுவிக்கவும் கட்சி தொடர்ச்சியாகப் போராடும். தனித்து வாழும் பெண்களின் வாழ்நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் காண கட்சி குரல் கொடுக்கும். பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் 4 சதவிகிதம் வட்டியில் பாரபட்சமின்றி கடன் கிடைக்கவும் பெண்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் நிதி உதவி கிடைக்கவும் கட்சி போராடும். பெண்கள் மீதான கொடுமைகளைத் தடுக்கவும், உரிமைகளைப் பாதுகாக்கவும், நிறைவேற்றப்பட்ட சட்டங்களை உறுதியுடன் அமல்படுத்தவும், மேம்படுத்தவும் கட்சி போராடும். நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கவும், அவற்றின் சுரண்டலைத் தடுக்கவும் தமிழக அரசு சட்டம் இயற்றக் குரல் கொடுக்கும்.

 • மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிய முன்னுரிமையும் இடஒதுக்கீடு முழுமையாக அமலாகவும் கட்சி போராடும். இவர்களுக்கு கல்வி நிலையங்களில் கல்விக்குக் கூடுதலான மானியம் கிடைக்கவும், குறைந்த கட்டணத்தில் விடுதிகள் அமைத்துக் கொடுக்கவும் சுயதொழில் நடத்த 40 சதவிகித மானியத்துடன் கடனுதவி கிடைக்கவும் கட்சி குரல் கொடுக்கும். அவர்களது மேம்பாட்டிற்கான அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட கட்சி பாடுபடும்.

 • சிறுபான்மையினர் நலன் காக்க நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படவும்,அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவும் கட்சி பாடுபடும். தலித் கிறித்துவர்களுக்கும் மதம் மாறிய இதர தலித்துகளுக்கும் பட்டியலின சாதியினருக்குரிய அனைத்து உரிமைகளும், சலுகைகளும் கிடைக்க கட்சி போராடும்.

 • தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் அகற்றவும் கட்சி போராடும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உறுதியுடன் அமலாக்கக் குரல் கொடுக்கும். கல்வி வேலைவாய்ப்பில் தலித் பழங்குடியினர் இட ஒதுக்கீடு முழுமையாக அமலாகவும், அனைத்துப் பின்னடைவு காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படவும் கட்சி குரல் கொடுக்கும். தலித் பழங்குடி உபதிட்ட நிதி மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கப்படவும் அந்நிதி அம்மக்களின் மேம்பாட்டிற்கே முழுமையாகச் செலவிடப்படவும் உரிய முறையில் தலையிடும். அருந்ததியர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு உயர்த்தப்படவும், உள்ஒதுக்கீடுக்கு சட்டப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவும், அனைத்துத் துறைகளிலும் உள்ஒதுக்கீடு முறையாக அமல்படுத்திடவும் பாடுபடும். மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமை உள்பட அனைத்து இழிதொழில்களையும் மாற்றுப்பணி அளித்து ஒழித்திட கட்சி போராடும். தமிழகம் முழுதுவம் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் மீண்டும் ஒப்படைக்க கட்சி போராடும்.

 • மலைவாழ் மக்களை நிலத்திலிருந்து வெளியேற்றுவதைத் தடுக்கவும், நிலச்சீர்திருத்தச் சட்டம் உறுதியுடன் அமலாக்கப்படவும், பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் முறையாகவும், காலதாமதமின்றியும் கிடைக்கச் செய்யவும் கட்சி போராடும்.

 • குழந்தைத் தொழிலாளர் முறை தடைச் சட்டத்தை உறுதியுடன் அமல்படுத்த கட்சி போராடும். 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியும், விளையாட்டு, உடல்நலம் மற்றும் இதர உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் குரல் கொடுக்கும். தற்போதைய கல்வித் திட்டத்தை மேம்படுத்தவும் எளிமைப்படுத்தவும் பாடுபடும். நிராதரவான குழந்தைகளைப் பாதுகாக்கும் அரசுத் திட்டங்களை உருவாக்க கட்சி பாடுபடும். பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் அக்குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரவும் கட்சி போராடும்.

 • பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் கட்சி போராடும்.

 • கட்டுமானப் பொருட்களின் விலைஉயர்வைத் தடுக்கவும், அனைவருக்கும் வீட்டுவசதி கிடைப்பதற்கான திட்டங்களை உருவாக்கவும் கட்சி பாடுபடும்.

 • காவல் துறை சீர்திருத்தத்திற்காக கட்சி குரல் கொடுக்கும். மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும், சிறைத்துறை சீர்திருத்தத்திற்கும் கட்சி பாடுபடும். காவலர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமை வழங்க கட்சி வற்புறுத்தும்.

 • ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்தவும், ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தும் இடங்களை பரவலாக்கவும், போராட்ட உரிமைகளை மேம்படுத்தவும் கட்சி குரல் கொடுக்கும்.

 • கூட்டுறவுத் தேர்தலை முறையாகவும், ஜனநாயக ரீதியாகவும் உடனடியாக நடத்த கட்சி போராடும். கூட்டுறவுத் தேர்தலை நடத்திட சுயேச்சையான அமைப்பை உருவாக்கவும், கூட்டுறவு நிறுவனங் களின் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் கட்சி பாடுபடும்.

 • உள்ளாட்சிகளின் ஜனநாயகச் செயல்பாட்டை வலுப் படுத்தவும், உள்ளாட்சிகளுக்கு மாநில அரசின் மொத்த வருவாயில் 30 சதவிகிதம் வழங்கிடவும், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கிடவும், உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல்கள் முறைகேடுகள் ஆகியவற்றை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு அதிகார அமைப்பை உருவாக்கவும் கட்சி வற்புறுத்தும். உள்ளாட்சி அமைப்புகளின் (ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொணர கட்சி குரல் கொடுக்கும்.

 • நீதிமன்றம் உள்பட அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழி என்பதை நடை முறைப்படுத்தவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு சீரிய திட்டங்களை உருவாக்கவும், குறிப்பாக மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், மென்பொருள் போன்ற துறைகளில் மேற்கொள்ளச் செய்யவும் கட்சி பாடுபடும்.

 • சிறுபான்மை மொழி பேசும் மக்களுக்கு அவர்களின் மொழிவழி கல்விக்கான வசதிகளை ஏற்படுத்தவும், அவர்களது மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் கட்சி பாடுபடும்.

 • மாநிலம் முழுவதும் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணிகாக்கவும், நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கட்சி போராடும். மூடப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளைத் திறந்திட பாடுபடும். அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ வசதிகளையும், கட்டமைப்பையும் பலப்படுத்தவும், அனைத்து வகை சிறப்பு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் குரல் கொடுக்கும். தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையிலிருந்து சாதாரணமக்களைக் காக்க சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர கட்சி பாடுபடும்.

 • சுற்றுச் சுழலை பாதுகாக்கவும்,சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கழிவுகளைத் தடை செய்து அகற்றவும் உரிய திட்டங்கள் வகுக்க கட்சி குரல் கொடுக்கும். சாயத் தொழில், தோல் பதனிடும் தொழில், இரசாயன ஆலைகள், காகித ஆலைகள் வெளியே தள்ளும் கழிவுகளால் சுற்றுச் சூழல் மற்றும் ஆறுகள் நீர்வளம் பாதிக்காதவாறு நவீன தொழில்நுட்பத் துறையுடன் கூடிய சுத்திகரிப்பு ஏற்பாடுகளை உத்தரவாதப்படுத்த கட்சி பாடுபடும்.

 • நீதித்துறை சீர்திருத்தங்களில் கட்சி அக்கறை செலுத்தும். நீதித்துறையில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரவும், நீதிபதிகள் நியமனத்தில் நேர்மையான வழிமுறைகளைக் கடைபிடிக்க சுயேச்சையான நீதித்துறை ஆணையம் அமைக்கப்படவும் கட்சி வலியுறுத்தும். சட்டமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சட்டமன்றம் கூடும் நாட்களை அதிகப்படுத்தவும், அங்கு மக்கள் பிரச்சினைகள் மீது உரிய முக்கியத்துவத்துடன் விவாதம் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்தவும், எதிர்கட்சிகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படவும் கட்சி குரல் கொடுக்கும். பொதுவாழ்வில் மக்கள் நலனுக்கே முழு முன்னுரிமை அளித்து அர்ப்பணிப்பும், நேர்மையும், தூய்மையும் நிறைந்த அரசியல் பண்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் பற்றிநிற்கும்; அதற்காகத் தொடர்ந்து போராடும்.

 • இந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி மாற்று ஆட்சியைக் கொண்டு வருவதன் மூலமே தமிழக மக்களின் நலன்களையும் உரிமை களையும் பாதுகாக்க முடியும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்;

தமிழக சட்டமன்றத் தேர்தலில்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர்களுக்கு

அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு

இரட்டை இலை சின்னத்திலும்

தேசிய முற்போக்கு திராவிடர் கழக வேட்பாளர்களுக்கு

முரசு சின்னத்திலும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு

கதிர் அரிவாள் சின்னத்திலும்

மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம், இந்திய குடியரசு கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களிலும் வாக்களித்து அமோகமாக வெற்றி பெறச் செய்யுமாறு தமிழக வாக்காளப் பெருமக்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு மாநிலக்குழு

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply