2016-17 அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை – மக்களுக்கு ஏமாற்றமே

மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசின் முதலமாண்டு நிதிநிலை அறிக்கையில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட குறிப்பான திட்டங்கள் ஏதுமில்லை.

மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 100 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்த பின்னணியில் விலைவாசியை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

சிறு – குறு விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என்பதை தவிர்த்து வேளாண் வளர்ச்சிக்கு முக்கிய அம்சங்களான விளை பொருட்களுக்கு நியாய விலை வழங்குவது பற்றியோ, பாசன வசதிகளை விரிவாக்குவது பற்றியோ நிதிநிலை அறிக்கையில் ஏதுமில்லை. கிராமப்புறங்களில் விவசாய வேலைகளில் பண்ணை இயந்திரம் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்கும் என உள்ளது. வேலைக்கு போதுமான ஆள் இல்லாத இடத்தில் பண்ணை இயந்திரத்தை பயன்படுத்தலாம். வேலைக்கு ஆள் கிடைக்கும் இடங்களில் பண்ணை இயந்திரத்தை பயன்படுத்துவது விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 55 நாட்களே வேலையளிக்கப்படுகிறது, அதிலும் மத்திய அரசு தீர்மானித்த கூலி முழுமையும் வழங்கப்படுவதில்லை. தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் சிறு – குறு தொழில்களை ஊக்குவிக்க தேவையான திட்டங்கள் அறிக்கையில் இல்லை.

வறுமையை ஒழித்திட பொருத்தமான திட்டங்கள் எதுவும் முன்மொழியப்படவில்லை. சுயஉதவிக் குழுக்கள் மூலம் மட்டுமே வறுமை ஒழிப்பு சாத்தியமல்ல.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல. மேலும் உள்ளாட்சி மன்றத் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி சட்டங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு சுழற்சி முறையில் மாற்றிட வேண்டுமென்ற விதியை அமலாக்குவது பற்றி நிதிநிலை அறிக்கை மௌனம் சாதிக்கிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும், மாணவர்கள் இல்லாததால் சில பள்ளிகள் மூடப்பட்டு வருவது பற்றியும் உண்மையான தகவல் நிதிநிலை அறிக்கையில் தரப்படவில்லை. அரசுப் பள்ளிகளை பாதுகாக்க தேவையான திட்டங்கள் அறிக்கையில் இல்லை. உயர்கல்வி 90 சதவிகிதம் தனியார்மயமாக்கப்பட்ட சூழலில் அரசு தீர்மானித்த கல்விக் கட்டணத்திற்கும் மேலாக தனியார் கல்வி நிறுவனங்கள் வசூல் செய்வதை தடுத்திட ஆலோசனைகள் இல்லை.

சமூக நலன் பற்றி குறிப்பிடும் நிதிநிலை அறிக்கை சமூகக் கொடுமைகளை தடுத்து நிறுத்திட எந்த நடவடிக்கையையும் முன்மொழியவில்லை. மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோர் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள சூழலில் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டுமென்று பரவலாக வலியுறுத்தப்பட்ட சூழலில் இதுபற்றி நிதி நிலை அறிக்கையில் ஏதுமில்லை. மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோர் அச்சுறுத்தப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறையின் தனியான பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென்று உயர்நீதி மன்றம் அளித்த ஆலோசனையை அமலாக்கிட அறிக்கையில் எந்த திட்டமும் இல்லை.

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்தோர் எண்ணிக்கை 73 லட்சம். தற்போது இந்த எண்ணிக்கை சுமார் 90 லட்சமாக உயர்ந்துள்ளது. படித்தோருக்கு வேலைவாய்ப்பு அளிக்க நிதிநிலை அறிக்கை கூறும் ஆலோசனையால் வேலையில்லா திண்டாட்டத்தை  போக்க முடியாது. மேலும் அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எந்த முன்மொழிவும் இல்லை.

மாநிலம் முழுவதும் கிராமங்களிலும், நகரங்களிலும் 20, 30, 40 ஆண்டுகள் என அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்குவது பற்றி அறிக்கையில் ஏதுமில்லை. கோவில் நிலங்களில்  பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களின் பிரச்சனைக்கு எந்த தீர்வும் அறிக்கையில் இல்லை.

கடந்த மே மாதம் மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு அதிகரித்து வருகிறது. சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி சட்டம் – ஒழுங்கை சரி செய்ய நிதிநிலை அறிக்கையில் சரியான திட்டமுமில்லை, உரிய உத்தரவாதமும் தரப்படவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்து அமைப்புகளும் வலியுறுத்தின. ஆனால் நிதிநிலை அறிக்கையில் இது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இந்த பட்ஜெட்டில் கல்விக்கு மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2 சதவிகிதம் தான் ஒதுக்கீடு செய்துள்ளது. அதைவிட குறைவாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 0.66 சதவிகிதம் ஒதுக்கீடு செய்துள்ளது. கல்வி மீதும், சுகாதாரம் மீதும் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

கடந்தாண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அதிமுக அரசு தம்பட்டம் அடித்தது. ஆனால்  இந்த நிதிநிலை அறிக்கையில் இதுவரை 23,258 கோடி ரூபாய் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 10 சதவிகிதத்திற்கும் குறைவானது.

தாது மணல், கிரானைட், ஆற்று மணல் போன்ற இயற்கை வளக் கொள்ளையை தடுத்து நிறுத்தி, இவைகளை அரசே ஏற்று நடத்தி வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்திட நிதிநிலை அறிக்கையில் உருப்படியான எந்த அறிவிப்பும் இல்லை.

மொத்தத்தில் நவீன தாராளமய பொருளாதார கொள்கையை மாநிலத்தில் அமலாக்கிடும் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பாதகமானதாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது .

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...