CPIM 22nd Congress

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தாக்கல் செய்யப்படவுள்ள அரசியல் நகல் தீர்மானத்தை, ஜனவரி 19 முதல் 21 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மத்தியக்குழு கூட்டம் நிறைவேற்றியது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதற்காக அரசியல் நகல் தீர்மானம் பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் சர்வதேச, தேசிய நிலைமைகள் குறித்த விவரங்களை நகல் தீர்மானம் முழுமையாக அளிக்கிறது. அரசியல் மற்றும் நடைமுறை உத்தியை தீர்மானிப்பதுடன், கட்சி நிறைவேற்ற வேண்டிய எதிர்கால கடமைகளை குறிப்பிடுகிறது. நகல் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நகல் தீர்மானம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் முழுமையாக CPIM-xxii-congress-draft-pol-resolution என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மொழிகளில் விரைவில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

சர்வதேச நிலைமை

கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகான சர்வதேச நிலைமையின் முக்கியமான அம்சங்கள் :

உலகப் பொருளாதாரம் மிதமான அளவில் மீட்சியடையும் என மதிப்பீடுகள் குறிப்பிட்ட போதும், 2008ல் ஏற்பட்ட சர்வதேச மூலதனத்தின் நிதி நெருக்கடியானது உலக முதலாளித்துவத்தின் மீது ஏற்படுத்தியுள்ளஅமைப்பு ரீதியான நெருக்கடி தொடர்கிறது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதை இது மேலும் தீவிரமடையச் செய்துள்ளது. மேலும், அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கச் செய்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான கண்டன இயக்கங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உலக முதலாளித்துவத்தின் இத்தகைய பொருளாதார நெருக்கடி நீடித்து வருவது, உலகளவில் நாடுகளுக்கிடையேயும், அந்தந்த நாடுகளுக்குள்ளேயும் பொருளாதார அசமத்துவத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

உலகளவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதுடன், பொருளாதார நெருக்கடியின் எதிர்மறை தாக்கத்தை சமாளித்திடும் முயற்சியில் அனைத்துவிதமான வழிகளிலும் தனது அராஜகமான ஆக்கிரமிப்பை அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அரசியல் மற்றும் ராணுவ தலையீடுகளின் வாயிலாக அதைச் செய்கிறது.

லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ தலையீடுகளுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இக்கண்டத்தின் நாடுகளில் அதிகாரத்தில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசுகளை சீர்குலைத்திடவும், மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பலையை தடுத்து பின்வாங்கச் செய்யவும், தனது அனைத்து ஆயுதங்களையும் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

அதிதீவிர வலதுசாரிகளும், நவீன பாசிச சக்திகளும் ஐரோப்பிய கண்டத்தில் வளர்ந்து வருகின்றன. இத்தோடு உலகின் பல்வேறு நாடுகளின் அரசியலில் வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டிருப்பதை இக்காலகட்டத்தில் காண முடிந்துள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிக பிற்போக்குத்தனமான பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது, இத்தகைய போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஏகாதிபத்திய முகாமின் ஒருங்கிணைப்பையும், ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையேயான முரண்பாடுகள் மட்டுப்படுத்தப்படுவதையும் 21வது மாநாட்டில் நாம் சுட்டிக் காட்டினோம். இந்த இடைப்பட்ட காலத்தில், ஏகாதிபத்திய மையங்களுக்கிடையே புதிய மோதல்களும், முரண்பாடுகளும் தோன்றி வருவதன் காரணமாகவும், நவீன தாராளவாதத்தின் நீடித்த நெருக்கடியின் காரணமாகவும் நாம் சுட்டிக் காட்டிய போக்கு நடைபெறாது உள்ளது.

இந்தியா போன்ற சில நாடுகளின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டின் காரணமாக, சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்குமுறையில் பலதுருவ அமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன.

காலநிலை மாற்றம் குறித்து, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்டவை தொடர்பாக சர்வதேச அளவில் பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா தன்னிச்சையாக இத்தகைய ஒப்பந்தங்கள் சிலவற்றை திரும்பப் பெற்றுள்ளது. மேலும், பலதரப்பு ஏற்பாடுகளுக்கு பதிலாக அந்தந்த நாடுகளுடன் இருதரப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள முயல்கிறது. இவற்றின் காரணமாக இத்தகைய ஒப்பந்தங்கள் நிச்சயமற்ற நிலையை எட்டியுள்ளன.

இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்திலும் மிக முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற்று வருகின்றன. இவை நமது நாட்டின் உறுதித் தன்மையிலும், அண்டை நாடுகளுடனான நல்லுறவிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

சோசலிச நாடுகள்:

இந்த இடைப்பட்ட காலத்தில் சீனாவின் வலுவும், உலகளவிலான செல்வாக்கும் அதிகரித்துள்ளன. வியட்நாம் மற்றும் கியூபா தங்களது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க, நீடிக்கத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன. அணு ஆயுதத்திட்டம் மற்றும் ஏவுகணை பயன்பாடு ஆகியவற்றைச் சுற்றியே கொரிய மக்கள் ஜனநாயக குடியரசின் பிரதான பிரச்சனை இருந்து வருகின்றது.

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் வருடாந்திர சர்வதேச கூட்டங்களுடன், அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமும் சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகளிடையேயான ஒற்றுமையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமையை வலுப்படுத்துவோம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பாஜக அரசின் வெறுக்கத்தக்க சரணாகதி போக்கிற்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்திடுவதற்கு எதிராகவும் இந்திய மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தை சிபிஐ(எம்) மேற்கொள்ளும்.

பொருளாதாரம், போர்த்திறன், ராணுவம் மற்றும் அயலுறவுக் கொள்கைகள் என அனைத்துத் துறைகளிலும் இத்தகைய இளைய பங்காளியைப் போன்ற நிலைபாட்டை எடுப்பதை சிபிஐ(எம்) எதிர்த்திடும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களின் தாய் நாட்டிற்கான கோரிக்கையை அடைந்திடவும் சிபிஐ(எம்) தனது முழு ஆதரவை தொடர்ந்து அளித்திடும்.

தற்போதைய பாஜக அரசால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா ஆகியவற்றிற்கிடையே தொடர்ந்து வளர்ந்து வரும் பிணைப்பை சிபிஐ(எம்) கடுமையாக எதிர்த்திடும். தனிநபர் குழுக்களின் ஆதரவுடனான அல்லது அரசு ஆதரவு பெற்ற அனைத்து வகையிலான, வடிவங்களிலான தீவிரவாதத்தையும் சிபிஐ(எம்) தொடர்ந்து உறுதியாக எதிர்த்திடும்.

சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா மற்றும் லாவோஸ் போன்ற சோசலிச நாடுகளுக்கு சிபிஐ(எம்) தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அவை தத்தமது நாடுகளில் சோசலிசத்தை வலுப்படுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறது.

அடிப்படைவாதம், மதவெறி, தீவிரவாத மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகப் போராடும் அனைத்து சக்திகளுக்கும் சிபிஐ(எம்) தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள, குறிப்பாக தெற்காசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள, இடதுசாரி புரட்சிகர இயக்கங்களுடனான தனது தொடர்பை சிபிஐ(எம்) மேலும் வலுப்படுத்திடும். ஏகாதிபத்தியத்தால் பல்வேறு வழிகளில் குறிவைத்து தாக்கப்படும் சோசலிச நாடுகளுக்கு தனது முழுமையான ஆதரவை சிபிஐ(எம்) தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய நிலைமை

மோடி அரசின் கிட்டத்தட்ட நான்காண்டு கால ஆட்சி, வலதுசாரி எதேச்சதிகார மற்றும் மதவாத ஆட்சியதிகாரத்தை ஏற்படுத்திட வழிகோலியுள்ளது. நவீன தாராளவாதக் கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்படுவதால் உழைப்பாளி மக்களின் மீது எல்லா விதத்திலும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அமலாக்கிட திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால், அரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்புகளுக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது. அத்தோடு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவுடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவதும், அதன் இளைய பங்காளியைப் போன்று நடந்து கொள்வதும் நடைபெற்று வருகிறது. மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை கட்டுப்படுத்துவது, ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் சாசன அமைப்புகளை தலைகீழாக்குவது போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக எதேச்சதிகாரப் போக்கை கட்டமைத்து வருகிறது. இவையெல்லாம் இந்த அரசின் ஆட்சிமுறையின் குறிப்பிட்ட அம்சமாக உள்ளன.

பொருளாதார நிலை

மோடி அரசின் கடந்த மூன்றாண்டு மற்றும் ஒன்பது மாத கால ஆட்சியில், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியின் விளிம்பிற்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. பொய்யான புள்ளிவிபரங்களின் மூலம் பொருளாதார மந்தத்தை மூடி மறைத்திட அரசு தீவிரமாக முயன்றபோதும், உண்மை வெளிவந்துவிட்டது. இந்தியப் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டிட மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த கணக்கீடுகள் (GDP series) மாற்றியமைக்கப்பட்டன. இருந்தபோதும், மாற்றியமைக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையின் கீழும் 2015-16 இல் 8% இருந்த வளர்ச்சி 2017-18 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டில் 6.5 % வீழ்ச்சியடைந்தது. கடந்த நான்காண்டுகளில் இது மிகக் குறைவான வளர்ச்சி விகிதமாகும். தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளபுள்ளி விவரங்களின்படி, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக, 2013-14 மற்றும் 2016-17 ஆகிய வருடங்களுக்கு இடையேயான காலத்தில் முழுமையான வேலைவாய்ப்பின் அளவு (absolute level of employment) சுருங்கியுள்ளது. பல்வேறு துறை சார்ந்த காரணிகள் பொருளாதார மந்தத்திற்கு தங்களது பங்களிப்பைச் செலுத்தின என்றபோதும், அரசு மேற்கொண்ட கொள்கைப் பூர்வமான முயற்சிகளான பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி முறையின் (ஜிஎஸ்டி) அமலாக்கமும் அனைத்து பிரதானமான துறைகளையும் கடுமையாக பாதித்துள்ளன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது, சிறு வர்த்தகர்களை மிக மோசமாக பாதித்தது. மேலும் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ) மூடுவிழா நடத்தி, பெருமளவிலான வேலையிழப்பிற்கு இட்டுச் சென்றது. முறைசாராத் துறையில் பணியாற்றிடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்தது. விவசாயிகளால் தங்களது விளைபொருளை சந்தையில் விற்க இயலாமல் போனதோடு, அடுத்த நடவு காலத்திற்கான விதைகளையும், உரங்களையும் அவர்களால் வாங்க இயலவில்லை. ஜிஎஸ்டியின் அறிமுகம் என்பது, மக்கள் மீது சுமையை அதிகரிக்கச் செய்த கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும். மேலும், இது இந்த அரசின் நவீன தாராளவாத தாக்குதலின் ஒரு பகுதியேயாகும்.

ஜிஎஸ்டி அமலாக்கம் கூட்டாட்சி கோட்பாட்டை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. இதன் காரணமாக, மாநிலங்களின் உரிமைகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதோடு, மறைமுக வரியின் அளவை அதிகரிக்கச் செய்துள்ளது. சாதாரண மக்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் முறைசாராத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி புதிய சுமைகளை ஏற்றியுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் சேவைத் துறையின் பல்வேறு துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நவீன தாராளவாதக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்குவதின் ஒரு பகுதியாக மோடி அரசு பெருமளவிலான தனியார்மய நடவடிக்கையைத் துவக்கியுள்ளது. இது மூன்று அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

(அ) ராணுவத் தளவாடங்களின் உற்பத்தி,ரயில்வே, வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது,

(ஆ) அரசுத் துறைகளில் 100 சதவீத அளவில்அந்நிய நேரடி முதலீட்டிற்குகதவுகளைத் திறந்து விடுவது,

(இ) மின் விநியோகம், குடிநீர் விநியோகம் மற்றும் போக்குவரத்து போன்றஅடிப்படை சேவைத் துறைகளை தனியார்மயமாக்குவது என்பனவே அந்த மூன்று அம்சங்களாகும்.

இதன் வாயிலாக, இந்திய மற்றும் வெளிநாட்டு பெரு மூலதனத்திற்கு மிகப் பெரிய செல்வத்தை மோடி அரசு அள்ளித் தருகிறது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலச் சீர்திருத்தக் கொள்கை, விளைச்சலுக்கான செலவு மற்றும் விளைபொருட்களின் விலை, கடன் மற்றும் காப்பீட்டு பாதுகாப்பு ஏழை மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்வது, உணவுப் பாதுகாப்பு, கால்நடை வளம் மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் கிராமப்புற இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கையின் ஒவ்வொரு அம்சமும் மோடி அரசின் கொள்கைகளால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

கிராமப்புற விவசாயப் பொருளாதாரத்தில் ரொக்கப் பரிமாற்றமே பிரதானமாக உள்ளதால், பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கிராமப்புறப் பொருளாதார வாழ்வில் ஆழமான பாதிப்பும், எதிர்மறைத் தாக்கமும் ஏற்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் இறைச்சிக்காக கால்நடைகள் கொல்லப்படுவதற்கும், கால்நடைகளின் வர்த்தகத்திற்கும் எல்லா விதத்திலும் தடை விதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பில் மோடி அரசு மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE)வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2016 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகிறபோது, ஜனவரி-ஏப்ரல் 2017ல் கிட்டத்தட்ட 15 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் உழைப்புச் சந்தையில் நுழைகின்றனர். இவர்களில் பலருக்கு வேலை எதுவும் கிடைக்காமல், அவர்கள் வேலையில்லாமலேயே உள்ளனர்.

Check Also

CPIM 21st Congress

21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்

ஏப்ரல் 14 முதல் 19 வரை விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 21வது கட்சிக் காங்கிரசில் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள். ...