டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம் சிபிஐ(எம்) வாழ்த்து

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமத்துவமான உலகை 2030-ல் உருவாக்க உரிய கல்வியை உத்தரவாதப்படுத்துவது, உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளையும் ஈடுபடுத்த வலியுறுத்துவது, சமூக-பொருளாதார-அரசியல் நடவடிக்கைகளில் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்க கோருவது உள்ளிட்ட சமீபத்தில் ஐ.நா-வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 அம்ச இலக்குகளை அடைவதே (Achieving 17 Goals for the Future We Want) இந்த ஆண்டின்  கருப்பொருளாக கடைப்பிடிக்க உலக நாடுகளை ஐ.நா. சபை, கேட்டுக் கொண்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

உலக தின வார்த்தைகளும், உத்தரவாதங்களும் சம்பிரதாயமான ஒன்றாக கருதி இருந்துவிடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய உள்ளார்ந்த உணர்வுகளுடன் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் நல்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நமது நாட்டை பொருத்தவரை கடந்த 2 1/2 வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரக்கூடிய பாஜக அரசு, தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. மாறாக போதிய நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லாமல்,  தடையில்லா சூழலுடன் இந்தியா திட்டம் (Accessible India Scheme), திறன் மேம்பாடு திட்டம் (Skill Development) போன்றவைகள் பாஜகவின் விளம்பர நோக்கங்களுக்காக மட்டுமே பயன்பட்டுள்ளன,

மாற்றுத்திறனாளிகளுக்கான 2006 ஆம் ஆண்டு ஐ.நா. கன்வென்ஷன் நடைபெற்று  தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த கன்வென்ஷன் விதிகளுக்கு உட்பட்டு புதிய சட்டத்தை எதிர்பார்த்து நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய சட்டத்தை நிறைவேற்றி தருவோம் என வாக்குறுதி அளித்த பாஜக, தனது வாக்குறுதியை மறந்து செயல்படுகிறது. பாராளுமன்ற நிலைக்குழு, புதிய சட்ட மசோதா மீதான தனது பரிந்துரைகளை 2015 மே மாதமே அளித்துவிட்ட நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டது பாஜக அரசு. மாற்றுத்திறனாளி அமைப்புகள் ஒவ்வொரு முறை போராடுகிறபோதும் உப்புசப்பு இல்லா காரணத்தை சொல்லி தட்டிக்கழித்தே வந்தது.  வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அமைச்சரவைக்குழு ஒன்றை அமைத்து தயாரிக்கப்பட்டிருந்த சட்ட சரத்துக்களை வலுவிழக்கச் செய்யும் வேலையிலேயே ஈடுபட்டது,

தற்போது நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி அமைப்புகள் ஒன்றினைந்து போராட்டங்களை  தீவிரப்படுத்திய  பின்னரே, இன்றைய தேதியில் உலக தினம் வருவதை கண்டு உஷாரடைந்து  பாராளுமன்ற மேலவையில் இந்த சட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது.  எனினும், கல்வி வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்டு அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட சட்ட மசோதா, தற்போது அதிலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக எல்லாம் புகார்கள் எழுந்துள்ளதை மத்திய அரசு கணக்கில் கொண்டு ஐ.நா. கன்வென்ஷன் விதிகளுக்கு உட்பட்டு புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டுமென்பதற்காக கடுமையான போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நடத்திய பின்னரே தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டது.  எனினும், அந்த அரசாணை இன்னும் முழுமையாக அமலக்கு வராததும், இதற்காகவே மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் வேதனை அளிக்கிறது.

கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகளுக்காக மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களுக்கு சென்றே தங்களது உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய அவலநிலை தொடர்கிறது.  சட்டத்தின்படியான மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைக்காததை உயர்நீதிமன்றம் கண்டித்த பின்னரும் இன்னும் அமைக்கவில்லை, ஏற்கனவே செயல்பட்டு வந்த நலவாரியத்தையும் அதிமுக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு முடக்கி வைத்துள்ளது,  பெண் மாற்றுத்திறனாளிகள் மீதான பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதை மாநில அரசு கண்டுகொள்ளாமலேயே உள்ளது.

எனவே, உலக அளவிலும், தேசிய அளவிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும் நியதிகளையும் நிலைநாட்ட முன்னெப்போதையும் விட மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுடைய அனைத்து உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உற்ற துணைவனாக விளங்கும் என்பதை இந்த உலக தினத்தில் உறுதியுடன் தெரிவிக்கிறோம், வாழ்த்துகிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...