38 எம்பிக்கள் தமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் இதுவரை என்ன குரல் கொடுத்திருக்கிறார்கள். – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இன்று மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் பதில்…

நிருபரின் கேள்வி:

தமிழகத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 38 நாடாளுமன்ற உறுப்பினா்கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் நலனுக்காக இதுவரை என்ன குரல் கொடுத்திருக்கிறார்கள் என்று தமிழக முதலமைச்சா் கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்து தங்களுடைய பதில் என்ன?

சு.வெங்கடேசன் எம்.பி அவா்களின் பதில்…

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்கு எதிராகவும் இந்த நாட்டிற்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட அனைத்து மசோதாக்களை எதிர்த்து தொடா்ந்து போராடியிருக்கின்றோம்.

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென்று தொடா்ச்சியாக வலியுறுத்தியிருக்கின்றோம்.

கொரோனா காலத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டுமென்று குரல் கொடுத்திருக்கின்றோம்.

தமிழ்மொழி, பண்பாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிராக, இந்தி திணிப்பிற்கு எதிராக, சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக தொடா்ந்து போராடியிருக்கின்றோம்.

இடஒதுக்கீட்டினை நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவும், நீட் தோ்விற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடா்ச்சியான செயல்பாட்டினை செய்திருக்கின்றோம்.

கொரோனா காலத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத்திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை விட தமிழகத்திற்கு குறைவான தொகையை மத்திய அரசு வழங்கியதை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதலாக தொகையை வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றோம்.

இவை அனைத்தும் தமிழகத்திலிருந்து தோ்வு செய்யப்பட்ட 38 எம்.பிக்களாகிய நாங்கள் செய்திருக்கின்றோம்.

ஆனால் தமிழகத்தின் முதலமைச்சா் தமிழ்நாட்டிலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினா்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னுடைய துறையின் கீழ் உள்ள காவல்துறை துாத்துக்குடியில் கோரதாண்டவம் ஆடிய பொழுது அதையே தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துக் கொண்டேன் என்று சொன்ன ஒரு முதலமைச்சா், நாங்கள் நாடாளுமன்றத்தில் செய்த செயல்பாட்டை எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

என்று பத்திரிக்கையாளர்களிடம் சு.வெங்கடேசன் தெரிவித்தார்..

Check Also

கடைசி தீர்வுக்கு அறிவுரை கூறும் பிரதமரே! முதல் தீர்வை முறையாக அமலாக்குங்கள்!

மொத்த தேசமும் அதிர்ந்து போயுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ள தடுப்பூசி விலைகளைப் பார்த்துதான்… இரண்டாவது கோவிட் அலை ...