5, 8 வகுப்பு பொதுத் தேர்வு திட்டத்தை உடனே கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலை ஏற்று தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டே (2018-19) 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்திட அதிமுக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009க்கும், குழந்தைகள் குறைந்தபட்ச கல்வி பெறும் உரிமைக்கும் எதிரானதாகும். இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 6வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படையான கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்யும் சட்டமாகும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வியில் இடை நிற்றலும் குறைந்துள்ளது. தற்போது இந்த சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மத்திய பாஜக அரசு கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் 5ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்ச்சி பெறாத மாணவர்களை அதே வகுப்பில் தொடரச் செய்யும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் வற்புறுத்தலால் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக நடப்பாண்டே பொதுத்தேர்வு நடத்திட பள்ளிக் கல்வித்துறையை முடுக்கி விட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழை-எளிய குடும்பத்து மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இடை நிற்றல் அதிகரிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் இடைநிற்றல் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இளம் மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். தேர்ச்சி பெறாத குழந்தைகள் தாழ்வு மனோநிலையால் பாதிக்கப்பட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலையை ஏற்படுத்தும்.

குழந்தைகள் கல்வி பெறும் உரிமை மீது மத்திய பாஜக, தமிழக அதிமுக அரசுகள் இணைந்து தொடுத்துள்ள இந்த தாக்குதல் மாணவர்கள், இடதுசாரி இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் போராடி பெற்ற குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் அடிப்படையையே தகர்த்தெறியும் நடவடிக்கையாகும்.

எனவே தமிழக அரசு 5ம், 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கிராமப்புற, ஏழை-எளிய மாணவர்கள் கல்வி பெறும் உரிமையை தொடர்ந்து உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், 2009 கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாப்பதோடு 3 வயது முதல் 18வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி சட்டம் பொருந்துகிற வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், அனைவருக்கும் முன்பருவக் கல்வி, தரமான அருகமை பள்ளிக் கல்வி உறுதிபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...