ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

20.12.2018

பெறுநர்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை- 600 009.

வணக்கம்.

பொருள்; தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கும் தொழில்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் தொடர்ச்சியாக கேடு விளைவிப்பதால் நிரந்தரமாக மூட தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற கோருதல் சம்மந்தமாக…

1997 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது என்பதாலும், தாமிரம் உற்பத்தி செய்வதன் மூலமும் இதர உப பொருட்கள் மூலமும் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து வருகிறது என்கிற காரணத்தினாலேயே அந்த ஆலை சுற்றுச்சூழலுக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு பகுதியினர் போராடிக் கொண்டிருக்கும் போது சிலர் ஆதரித்து வந்தனர்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் கிடைக்கும் பொருளாதார நலன்களை விட ஆலையின் மாசுக்களும் கழிவுகளும் இயற்கையின் மீதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் ஏற்படுத்திய பாதிப்புகளும் அச்சுறுத்தல்களும் அதிகம் என்பதால்தான் அனைத்துப் பகுதி மக்களும் போராடினார்கள்:  14 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவையனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த ஆலையை மூட உத்தரவிட்டன.

ஆயினும், தமிழக அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள், மக்களின் உணர்வுகள், சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இவற்றையெல்லாம் புறந்தள்ளி ஆலையை திறக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. ஆரம்பம் முதலே பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவான நிலையே மேற்கொண்டிருந்தது என்பது இந்தத் தீர்ப்பின் மேலும் உறுதியாகியுள்ளது.

தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பானது சுற்று வட்டார பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலை இயங்க அனுமதித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையும், அமைதிக்குலைவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆலை இயங்குவதால் ஏற்படும் பொருளாதார பலன்களை விட, அது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மீள முடியாத பாதிப்புகள் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழகத்திலுள்ள ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பம், கட்சிகளின் மூலமாகவும் சட்டமன்ற உறுப்பினர்களின் மூலமுமாகவே பிரதானமாக வெளிப்படுத்தப்படுகிறது.

இவையனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமெனவும் இறுதி வரை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்

.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...