69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க விழிப்புடன் செயல்படுக!

69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க விழிப்புடன் செயல்படுக!

மாநில அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

தலித், பழங்குடி இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அருந்ததியர், இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீடு என 69 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நடைமுறையில் உள்ளது.

மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தை மேற்கோள் காட்டி, தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக்கு எதிராக பலமுறை வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 2010 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதி ஜானார்த்தனம் அவர்கள் தலைமையில் பிற்படுததப்பட்டோர் கமிசன் அமைக்கப்பட்டு மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படைடயில் 69 சதமான இட ஒதுக்கீடு பொருத்தமானது என சிபாரிசு அளிக்கப்பட்டு இப்பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் 1993 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அவ்வப்போது உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளும், நீதிபதிகளின் கருத்துகளும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே இருந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் நடப்பில் உள்ள இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள அவசர வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், சட்ட நிபுணத்துவம் உள்ள வழக்குரைஞர்களைக் கொண்டு வாதாடி, இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் பொறுப்பு அதிமுக அரசுக்கு உள்ளது. வேறு சில வழக்குகளில் மெத்தனம் காட்டியது போல, இந்த வழக்கிலும்  இருந்துவிடக் கூடாது.

69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், தலித், பழங்குடியினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெரும் பாதிப்புக்கு ஆளாவதோடு, உள் ஒதுக்கீடும் கேள்விக் குறியாகும். இந்நிலையில், தமிழகத்தில் 69 சதமான இடஒதுக்கீடு முறையை பாதுகாக்க மாநில அரசு விழிப்போடு செயல்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...