7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றுபட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதை சிபிஐ(எம்) ஏற்கனவே வரவேற்றுள்ளது. தற்போது 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

ஒரு வாரத்திற்கு முன் 4 வார அவகாசம் கோரிய ஆளுநர், இன்று, தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதே உண்மையில் ஆளுநருடைய நோக்கமாக இருந்திருக்கும். அது தடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் வழக்கமாக எதிர்நிலை எடுக்கும் பா.ஜ.கவால் கூட எதிர்த்துச் சொல்ல முடியாத அரசியல் சூழல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து எதிர்க் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் போராட்டம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, நேற்றைய தினம் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்திய பின்னணியில் தான் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர் உடனடியாக இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்திருந்தால், நீண்ட கால தாமதத்தையும், மருத்துவ கல்விக்காக காத்திருக்கும் மாணவர்களின் மன உளைச்சலையும் தவிர்த்திருக்க முடியும்.

வரும் காலத்திலாவது ஆளுநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் அதிகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காடடுகிறது.

அதே சமயம் இன்று வரையிலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கான விலக்கு பெறுவதற்கான அவசியம் உள்ளது, மத்திய அரசு பறித்துக் கொள்ளும் மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டினை பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழக கட்சிகளும், மக்களும் அதை தொடர்ந்துபோராடி வெல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...