தோழர் ஏ.பாலசுப்ரமணியம்

.பாலசுப்ரமணியன் வாழ்வும் வழியும்

என். ராமகிருஷ்ணன்

ஏ.பாலசுப்ரமணியம்

உள்ளே…

 • ஆசிரியர் குறிப்பு
 • சட்ட வல்லுனர்கள் குடும்பம்
 • கல்லூரிப் படிப்பு
 • கட்சியுடன் தொடர்பு
 • அவலங்கள் நிறைந்த வாழ்வு
 • தொழிற்சங்கத் தலைவராகிறார்
 • அன்னை அக்னீஸ் மேரி
 • மதுரை சதிவழக்கு
 • மீண்டும் சிறைவாசம்
 • செங்கொடிக் கிழங்கு
 • நெஞ்சம் பதறும் நிகழ்ச்சி
 • பேய்களின் ஆட்டம்
 • தலைமறைவிலிருந்து மீண்டு
 • “பாடுபட்ட சுரூபம்”
 • இல்லற வாழ்வு துவக்கம்
 • உண்ணாவிரதப் போராட்டம்
 • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயம்
 • சி.ஐ.டி.யு. உதயம்
 • ஆழ்ந்த படிப்பு, கண்டிப்பில் கடுமை
 • இலக்கியவாதி ஏ.பி.
 • எழுத்தாளர் ஏ.பி.
 • இறுதி நாட்கள்

ஆசிரியர் குறிப்பு

ஏ.பி. என்றும் ஏ.பாலசுப்ரமணியன் என்றும் தமிழகத்தின் லட்சோப லட்சக்கணக்கான உழைக்கும் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, காலஞ்சென்ற தோழர் ஏ.பாலசுப்ரமணியம் அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறே இந்நூல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், அக்கட்சியின் தமிழ்மாநிலக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றி மறைந்த ஏ.பி. அவர்களின் வரலாற்றுப் பணியை சுருக்கமாக சுட்டிக் காட்டுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.

வசதிமிக்க குடும்பத்தில் பிறந்து, வருவாய் மிக்க வழக்கறிஞர் பணியைத் தொடங்கும் நேரத்தில் மார்க்சீய தத்துவத்தின் தாக்கத்திற்கு ஆளான பாலசுப்ரமணியம், அந்த உயரிய லட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட நாளிலிருந்து இறுதி நாள் வரை அந்த லட்சியத்தையே தன் உயிர்மூச்சாகக் கொண்டார். அதே நினைவிலேயே உயிர்நீத்தார்.

அவர் தொண்டால் பொழுதளந்தார், தியாகம் என்னும் நெருப்பில் புடம் போட்டெடுக்கப்பட்டார். தன்னலமற்ற தலைவராகத் தலைநிமிர்ந்து நின்றார். உயரியதொரு சமுதாயத்தைப் படைக்க தங்களைப் பணித்துக் கொண்டுள்ளோருக்கு உத்வேகமூட்டக் கூடியவாறு தன் வாழ்வுப் பணியை நடத்திக் காட்டினார்.

பாட்டாளி வர்க்கத்திற்காகவும், பரிதவிக்கும் மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள் தங்கள் பணியை பெரும்பாலும் குறித்து வைக்க மாட்டார்கள். தங்கள் அர்ப்பணிப்பை, தாங்கள் செய்ய வேண்டிய கடமையாகத்தான் அவர்கள் கருதினார்கள். ஆனால் தொடர்ந்து முன்னேறும் வரலாற்றுச் சக்கரம், அந்தப் பணியை மகத்தான தியாகமாகக் கருதுகிறது. அவர்களது வாழ்க்கையை வர்க்கப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாகவே காண்கிறது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைமுறை உருவாகிக் கொண்டும், பழைய தலைமுறை மறைந்து கொண்டுமிருக்கும் நிலையில், பழைய போராட்டங்களின் வரலாறு, பாரம்பரியம் ஆகியவை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலம் என்னும் சங்கிலியின் கண்ணிகளாக கோர்க்கப்படுவது வரலாற்றுத் தேவையாகி விடுகின்றது.

இந்நூலானது கடந்த ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாக அரசியல், தொழிற்சங்கக் களத்தில் கடமை ஆற்றி வந்த, கடமை ஆற்றி வருகின்ற, மறைந்த தோழர் ஏ.பாலசுப்ரமணியத்தின் சக தோழர்களை சந்தித்துப் பெறப்பட்ட விவரங்களையும் அவரைக் குறித்து அவர்கள் எழுதிய கட்டுரைகளையும், குடும்ப வாழ்க்கை குறித்து அவருடைய துணைவியார் திருமதி கிரிஜா பாலசுப்ரமணியம் அவர்களிடமிருந்து கிடைத்த விபரங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதற்காக,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களிடமிருந்து மறைந்த தோழர்கள் பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன்;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர்கள் ஏ.நல்லசிவன், ஏ.அப்துல்வஹாப், என்.வரதராஜன், கே.அனந்தன் நம்பியார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஏ.தங்கராஜன், பாப்பா உமாநாத்;   திருமதி.கிரிஜா பாலசுப்ரமணியம், தோழர். எஸ்.சேஷகிரி, தமிழ்நாடு கைத்தரி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தோழர்.வி.கார்மேகம்;

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த (ஐ.சி.பி.), தோழர். வி.மதனகோபால், திண்டுக்கல் பழம்பெரும் தோழர்.சின்னச்சாமி ஆகியோருக்கும்;

இந்நூலின் மூலப்பிரதியைப் படித்து தக்க ஆலோசனைகள் நல்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர்களான கே.வரதராஜன், கே.வைத்தியநாதன் ஆகியோருக்கும், தீக்கதிர் நூலகர் ப.முருகனுக்கும், இந்நூலை குறைந்தகால அவகாசத்தில் சிறப்பாக வெளியிட்டுள்ள சக்கரம் புக்ஸ், சென்னை மீடியா & பிரிண்ட்ஸ் நிறுவனத்தாருக்கும் எனது உளங்கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

என்.ராமகிருஷ்ணன்

மதுரை

29-1-91

சட்ட வல்லுனர்கள் குடும்பம்

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை மாவட்டம் அகரமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வழக்கறிஞர் தொழிலில் சிறப்புற்று விளங்கினர். தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா வந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்று வந்த சுதந்திரப் போராட்டம் வெகுஜன இயக்கமாக உருப்பெறத் தொடங்கிய காலம் அது. சுதந்திரம் என்ற இலட்சிய வேட்கை எண்ணற்ற அறிவுஜீவிகளை தன்னகத்தே ஈர்த்து வந்த நேரம் அது. எனவே வளர்ந்து வந்த தேசிய உணர்வு இந்த மூன்று வழக்கறிஞர் சகோதரர்களையும் ஈர்த்ததில் வியப்பில்லை.

இந்த மூவரும் வழக்கறிஞர் தொழிலைச் செய்து வந்த நேரத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்வது போன்ற இலட்சியங்களைப் பின்பற்றுபவர்களாக விளங்கினர்.

இந்த மூன்று சகோதரர்களில் மூத்தவரான சதாசிவம் அன்றைய சென்னை ராஜதானியில் சிறந்த சட்டமேதை என்ற பெயரை பெற்றிருந்ததோடு பின்னாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதியாகத் திகழ்ந்தார். நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஜஸ்டிஸ் சதாசிவம் சமூக சேவைகளில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இரண்டாவது சகோதரரான பரமசிவம் மைசூர் சமஸ்தானத்தில் பிரதம நீதிபதியாக விளங்கினார்.

மூன்றாவது சகோதரரான அமிர்தலிங்கம் மதுரையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். அவருடைய மூன்றாவது புதல்வர்தான் பாலசுப்ரமணியம்.

பாலசுப்ரமணியத்தின் பெரியப்பாவான ஜஸ்டிஸ் சதாசிவம் அன்னிபெசண்ட் அம்மையார் உருவாக்கியிருந்த பிரம்மஞான சபையின் ஆதரவாளர். அவர் சாதியப் போக்குகளுக்கு எதிரானவர். மதாவத, மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்து வந்தவர். அவர் கொண்டிருந்த சாதிய எதிர்ப்புக் கொள்கை எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கூற முடியும். அவர் தன்னுடைய இரு புதல்வர்களையும் அழைத்து, ”நீங்கள் விரும்பும் எந்த இந்தியப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளுங்கள். எனக்கு அதில் பரிபூரண சம்மதம்” என்று கூறினார். அவர் ஆங்கிலேயர் எதிர்ப்பு மனநிலை கொண்டிருந்த காரணத்தால் ஆங்கிலேயப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டாமென்று இதன்மூலம் மகன்களுக்கு உணர்த்தினார். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு சாதிய மரபுகளும், சனாதனப் போக்குகளும் தலை விரித்து ஆடிய காலத்தில் அவைகளுக்கெதிராக அவர் உறுதியாக நின்றதோடு மட்டுமல்ல, தன் குடும்பத்திலேயே சமூக சீர்திருத்தங்களை செய்வதற்கும் அனுமதி அளித்தார் என்பதிலிருந்தே அவருடைய முற்போக்கான கருத்தோட்டங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜஸ்டிச் சதாசிவத்தின் புதல்வர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி பின்னாட்களில் கோவை அரசாங்கக் கலைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார். மற்றொரு புதல்வர் டி.எஸ்.ராமச்சந்திரன் ஐ.சி.எஸ். பட்டம் பெற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார் என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அரசாங்கம் அவரை அடிக்கடி இடமாற்றம் செய்தது.

பாலசுப்ரமணியத்தின் மற்றொரு பெரியப்பாவான ஜஸ்டிஸ் பரமசிவம் ஆங்கிலத்திலும், வடமொழியிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார். அவர் தன்னுடைய மூத்த சகோதரர் சதாசிவத்தைப் போலவே பரந்த நோக்கமுடையவர். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரானவர்.

வடமொழியில் கரைகண்ட ஜஸ்டிஸ் பரமசிவம் இராமாயணம் குறித்து விஞ்ஞான பூர்வ ஆராய்ச்சியை மேற்கொண்டார். இராமாயணம் என்பது ஒரு அரசகதை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நடைபெற்றது. இராமாயணத்துக்கும், விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள தக்காணத்துக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இலங்கை என்று இராமாயணத்தில் குறிப்பிடப்படுவது இன்றைய இலங்கை அல்ல என்று விளக்கியதோடு, வரைபடம் தயாரித்து அதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கக்கூடிய முறையில் இராயாயணா & இலங்கை என்ற புத்தகத்தை எழுதினார். அதேபோல் ரிக்வேதத்தையும் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதியுள்ளார்.

ஒரு முறை தஞ்சையைச் சேர்ந்த வேதவிற்பன்னர்கள் தாங்கள் தஞ்சை நகரில் ஒரு யாகம் செய்ய விரும்புவதாகவும், எனவே அது குறித்த சமஸ்கிருத புத்தகங்களை தந்து விளக்கிக் கூற வேண்டுமென்றும் ஜஸ்டிஸ் பரமசிவத்தைக் கேட்டனர். ”அன்றைய ஆரியர்கள் உணவை வேகவைத்து சாப்பிட அக்கினியை உருவாக்கினர். அதை யாகம் என்றனர். இன்று யாகம் செய்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஹோட்டலிலேயே வாங்கிச் சாப்பிடுங்கள்” என்று ஜஸ்டிஸ் பரமசிவம் தன்னைத் தேடி வந்தவர்களுக்கு விளக்கம் கூறித் திருப்பி அனுப்பினார்.

ஜஸ்டிஸ் பரமசிவத்தின் ஒரே மகனான கைலாசம் கன்னட மொழியில் பிரசித்தி பெற்ற கவிஞர். தமிழகத்தின் மகாகவி பாரதியாரைப் போன்று கன்னடத்தில் கவிஞர் கைலாசம் புகழ்பெற்று விளங்கினார். அவருடைய நினைவு நாள் இன்றும் கர்னாடக மாநிலம் முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கைலாசத்தின் சகோதரியான கமலா தன் தந்தையைப் போன்று சமஸ்கிருத மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். மகாபாரதம், பாகவதம், இராமாயணம் முதலியவற்றை சமஸ்கிருத மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

பாலசுப்ரமணியத்தின் தந்தையார் டி.அமிர்தலிங்கம் தன் மூத்த சகோதர்களைப் போன்று முற்போக்கான சிந்தனையோட்டத்தைக் கோண்டிருந்ததோடு, காங்கிரஸ் இயக்கத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதிலும் முன்னின்றார். காலஞ்சென்ற பிரபல தேசபத்தர் ஏ.வைத்தியநாதைய்யருடன் சேர்ந்து மதுரை மாவட்ட அரிஜன சேவா சங்கத்தின் உயர்பொறுப்புக்களிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டு வந்தார். அவர் கடவுள் இல்லையென்று கூறியதில்லை. ஆனால் மதச்சடங்குகள் செய்வதில்லை. சிவில் சட்டத்திலும், இஸ்லாமியச் சட்டத்திலும் வல்லுனராக டி.அமிர்தலிங்கம் விளங்கினார். விஞ்ஞானம், இயற்பியல், ஆங்கில இலாக்கியம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அமிர்தலிஙகம், சமஸ்கிருத மொழியில் புலமை மிக்கவராக விளங்கினார். அவருடைய துணைவியார் ராதாலஷ்மி அம்மையார்.

அமிர்தலிங்கம், ராதலஷ்மி தம்பதிகளுக்கு ஞானாம்பாள் என்ற மகளும், காளஹஸ்தி, சுந்தரம், பாலசுப்ரமணியம், சிவராமன், நடராஜன், ஸ்ரீநிவாசன் என்ற ஆறு மகன்களும் இருந்தனர். மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த அமிர்தலிங்கம் சிறிது காலத்துக்குப் பிறகு திண்டுக்கள் மாவட்டத்திற்குக் குடி பெயர்ந்தார். வெகு விரைவிலேயே புகழ்பெற்ற வழக்கறிஞராகப் புகழ் பெற்றார்.

அமிர்தலிங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வது, அவர்களுக்கு சம அந்தஸ்து கிடைக்க வேண்டுமென்பதற்காகப் பாடுபடுவது என்பதை நடைமுறையிலேயே செய்து காட்டினார். அவருடைய அலுவலகம் மற்றும் இல்லத்து உதவியாளர்கள் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இல்லத்திலும், அலுவலகத்திலும் சரிசமமாக நடத்தினார். உணவு அருந்துவதிலும், வேலை செய்வதிலும், தன் குடும்ப உறுப்பினர்களைப் போலவே அவர்களை சமமாக நடத்தினார். வீட்டில் யாரும் அவர்களைப் பெயரைச் சொல்லி அழைக்கக் கூடாது. ’ஐயா’ என்றும், ‘அண்ணா’ என்றும்தான் அழைக்க வேண்டுமென்று அமிர்தலிங்கம் உத்தரவிட்டிருந்தார். கையெழுத்திடும்போது டி.அமிர்தலிங்கம் என்றுதான் கையெழுத்திடுவார். சாதியப் பெயரை எழுத மாட்டார்.

எனவே, தந்தையின் கொள்கை மகள் மீதும், மகன்கள் மீதும் பெரும் செல்வாக்கு செலுத்தியதில் வியப்பில்லை.

பாலசுப்ரமணியத்தின் பெரியப்பா ஜஸ்டிஸ் சதாசிவம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் தன் இரு மகன்களையும் அழைத்து, ”நீங்கள் நல்ல பதவியில் இருக்கிறீர்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளலாம். பரம்பரைச் சொத்து தேவையில்லை. அவற்றை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்” என்று கூறினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். எனவே சதாசிவம் ஒரு அறக்கட்டளையாக்கி – டிரஸ்ட்- அந்தப் பணத்தின் மூலம் தன்னுடைய பூர்வீக கிராமமான அகரமாங்குடியில் ஒரு கோவிலைக் கட்ட வேண்டுமென்றும், தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்காக, ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டுமென்றும்,தீபாவளி தினத்தன்று அந்த மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக உடை தர வேண்டுமென்றும் கட்டளையிட்டிருந்தார். தன் சார்பாக இந்தப் பணியை தன்னுடைய இளைய சகோதரர் அமிர்தலிங்கம் நிறைவேற்ற வேண்டுமென்றும் பொறுப்பளித்திருந்தார்.

அதன்படி அமிர்தலிங்கம் செயல்பட்டார். கோவில் கட்டப்பட்ட பின் சாமி ஊர்வலம் அமிர்தலிங்கம் குடும்பத்தினர் முன்னிலையில் புறப்பட்டது. அது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெரு வழியாகச் செல்ல வேண்டுமென்று அமிர்தலின்கம் கூறினார். ஆனால் வைதீகர்கள் அதை எதிர்த்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெரு வழியாக சாமி ஊர்வலம் செல்லவில்லையானால், தான் அதில் பங்கேற்க முடியாது என்று கூறி அமிர்தலிங்கம் அதோடு செல்ல மறுத்து விட்டார்.

அமிர்தலிங்கத்திற்குப் பிறகு அந்த அறக்கட்டளைப் பணி அவரது மூன்றாவது மகன் பாலசுப்ரமணியத்திடம் அளிக்கப்பட்டது. பின்னாட்களில் அவர் அரசியலில் தீவீரமாக ஈடுபட்டபோது அந்தப் பணியை தனது இளைய சகோதரர் சிவராமனிடம் ஒப்படைத்தார்.

கல்லூரிப் படிப்பு

அமிர்தலிங்கம்-ராதாலட்சுமி தம்பதிகளின் மூன்றாவது புதல்வரான பாலசுப்ரமணியம், 1917ம் ஆண்டில் மதுரையில் பிறந்தார். அமிர்தலிங்கம், குடும்பத்துடன் திண்டுக்கல் சென்ற பிறகு, பாலசுப்ரமணியம் அங்கே ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதன் பின் செயிண்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றவுடன், மேல்படிப்பிற்காக 1935ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவருடைய மூத்த சகோதரர்கள் காளஹஸ்தியும், சுந்தரமும் ஏற்கனவே அங்கே படித்து வந்தார்கள்.

உயர்நிலைப்பள்ளிப் படிப்பிலும், கல்லூரிப் படிப்பிலும் பாலசுப்ரமணியம் முதல் தர மாணவராக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாலசுப்ரமணியம் பி.எஸ்.ஸி பட்டத்திற்காக தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். அச்சமயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் டாக்டர் சேஷையா என்ற புகழ் பெற்ற பேராசிரியர் விலங்கியல் வகுப்பையும், ராகவன் என்ற தலைமைப் பேராசிரியர் தாவரவியல் வகுப்பையும் நடத்தி வந்தனர். பாலசுப்ரமணியம் இவ்விரு ஆசிரியர்களின் கவனிப்பில் படித்தார்.

அங்கே படிக்கும்பொழுதே பாலசுப்ரமணியம் பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதுண்டு. தவிரவும், கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டுக்களிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

ஒரு மாணவரின் குணநலன்கள் குறித்து அவருடைய ஆசிரியர் பராட்டுவதைக் காட்டிலும், வேறு சிறப்பு உண்டா? அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஏ.பாலசுப்ரமணியத்தின் ஆசிரியராக இருந்தவரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான திரு.சி.அய்யாறு அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்:

”எனது மதிப்புக்குரிய மாணவரும், நண்பருமான ஏ.பாலசுப்ரமணியம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் படித்தார்கள். அவரை இங்கு படித்த நாட்களிலிருந்தே நான் நன்கு அறிவேன். அவருடைய குடும்பம் திண்டுக்கல்லில் மிகவும் சீரும், சிறப்புடனும் விளங்கியது. பல்கலைக்கழகத்தின் கால்பந்து விளையாட்டில் அவர் மிகவும் தேர்ச்சி பெற்றவராய் விளங்கினார். கால்பந்துக் குழுவுக்கு தலைமை வகித்த காலத்தில் அநேக வெற்றிகளையும் பெற்றுப் பலராலும் பாராட்டப்பட்டார்.

பலரிடம் இல்லாத, சிலரிடம் மட்டுமே காணப்படும் சிறந்த பல நல்லியல்புகளைப் பெற்று விளங்கினார். பதவியும், செல்வமும், செல்வாக்கும் உள்ள பலரிடமும் இல்லாத பெருந்தன்மையை இவரிடம் நான் கண்டேன்.

”சூழ்நிலையும், சுற்றுச்சார்புகளும் சிலரைப் பெரிய மனிதர்களிலிருந்து சிறிய மனிதர்களாகவும், சிறிய மனிதர்களிலிருந்து பெரிய மனிதர்களாகவும் ஆக்கி விடுவதை நாம் உலகியலில் காண்கிறோம். ஆனால் நண்பர் பாலசுப்ரமணியம் அவர்களைப் பொறுத்த வரையில், அவர் எப்பொழுதுமே பெரிய மனிதராகவே விளங்கினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே நாங்கள் பழகினோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே இவர் ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

”பல்கலைக்கழகத்தில் பயின்ற நாட்களிலே இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த முறையில் சொற்பொழிவாற்றும் திறமை பெற்றிருந்தார். நல்ல தோற்றமும், கள்ளமில்லாத உள்ளப் பொலிவும், தெளிந்த நாநலமும் உடையவராய் விளங்கினார்.”

பாலசுப்ரமணியன் அண்ணாமலைப் பல்கழகத்தில் படித்து வந்தபோது, அங்குள்ள மாணவர்களுக்கிடையே சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்குப் பெரும் ஆதரவு இருந்தது.   நாட்டை ஆண்டு வந்த வெள்ளையர்களை வெளியேற்றும்படிக் கோரி அகிம்சைப் போராட்டங்களை நடத்தி வந்த காங்கிரஸ் ஆதரவுக் கருத்தோட்டம், இந்தியாவின் உழைக்கும் மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்களை நடத்தி வெள்ளையர்களை விரட்டி அடிக்க வேண்டுமென்று கூறி அதற்காக,ப் பாடுபட்டு வந்த கம்யூனிஸ்ட் ஆதரவு கருத்தோட்டம் என்று இரு வித கருத்தோட்டங்கள் அங்கே நிலவி வந்தன.

பாலசுப்ரமணியம், முதலில் சொல்லப்பட்ட காங்கிரஸ் கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தார். சுப்ரமணிய சர்மா, கே.முத்தையா, கே.பாலதண்டாயுதம், எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.உமாநாத், ப.மாணிக்கம் போன்ற மாணவர்கள் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் கருத்தோட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தனர். பாலசுப்ரமணியன் காங்கிரஸ் ஆதரவு என்ன போக்கைக் கொண்டிருந்தாலும், கம்யூனிஸ்ட் மாணவர்களின் செயல்பாடுகளை எதிர்த்தது கிடையாது.

1936ம் ஆண்டில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ’ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி’ கம்யூனிஸ்ட் மாணவரான பாலதண்டாயுதத்தை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் மாணவர்கள் தலைமையில் அனைத்து மாணவர்களும் ஒன்று திரண்டு போராடினர். “உங்கள் போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள்.” என்று பாலசுப்ரமணியம் அச்சமயத்தில் தன்னிடம் கூறியதை கே.முத்தையா நினைவு கூர்ந்தார். “தீக்கதிர்” நாளிதழ் மற்றும் ”செம்மலர்” மாத இதழின் ஆசிரியரான கே.முத்தையா அச்சமயத்தில் பி.ஏ.(ஆனர்ஸ்) படித்து வந்தார். கே.முத்தையா, கே.பாலதண்டாயுதம் ஆகிய கம்யூனிஸ்ட்மாணவர்களை விட பாலசுப்ரமணியம் ஓராண்டு சீனியர் மாணவர்.

1937ம் ஆண்டு பி.எஸ்.சி. தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்ற பாலசுப்ரமணியம், மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பினார். ஆனால், அங்கே இடம் கிடைக்கவில்லை. எனவே, தந்தைக்கு உதவியாக இருக்கும் பொருட்டு வழக்கறிஞராக இருக்க விரும்பினார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். தன் பெரியப்பா ஜஸ்டிஸ் சதாசிவத்தின் மகன்கள் வீட்டில் தங்கிச் சட்டப்படிப்புப் படித்தார். படிப்பில் மிகுந்த அக்கரை செலுத்திய சமயத்திலேயே, கிரிக்கெட், ஹாக்கி விளையாட்டுகளில் தீவீர ஆர்வம் காட்டினார்.

பாலசுப்ரமணியம் சட்டப்படிப்புப் படித்து வரும்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவருடைய சக மாணவராய் இருந்த சுப்ரமணிய சர்மா மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக தன்னை மாற்றிக் கொண்ட சர்மா, கட்சி அமைப்புக்களை உருவாக்குவதிலும் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்ப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். அவர் கம்யூனிஸ்ட் பிரசுரங்கள், பத்திரிகைகள் முதலியவற்றை பாலசுப்ரமணியத்துக்கு தொடர்ந்து அளித்து வந்ததோடு, தான் நடத்தி வந்த அரசியல் வகுப்புகளிலும் அவரை பங்கேற்கும்படிச் செய்தார். இவ்வாறு பாலசுப்ரமணியத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. மார்க்சிய இலக்கியங்களுடன் பரிச்சியம் ஏற்பட்டது.

1940ம் ஆண்டில் சட்டப்படிப்பில் தேர்வு பெற்று திண்டுக்கள் நகருக்குத் திரும்பிய பாலசுப்ரமணியம் ஓராண்டு காலம் தனது தந்தைக்கு உதவியாக இருந்தார். பின்னர் திண்டுக்கள் நீதிமன்றத்தில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.

கட்சியுடன் தொடர்பு

பாலசுப்ரமணியம் திண்டுக்கல்லுக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள் திண்டுக்கல் நகர் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளருக்கு கட்சியின் மேலிடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. பாலசுப்ரமணியத்தை அடிக்கடி சந்தித்து அவருக்குக் கட்சிப் பத்திரிகைகள், பிரசுரங்கள் முதலியவற்றைக் கொடுத்து அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தொழிலாளிகளுக்கு உதவுவதற்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கட்சியின் மேலிடத் தலைமை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அந்தக் கடிதத்தை கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சர்மா எழுதியிருந்தார். இதே போன்ற கடித்தத்தை அவர் பாலசுப்ரமணியத்துக்கும் எழுதியிருந்தார்.

அச்சமயத்தில் கட்சியின் திண்டுக்கல் நகரச் செயலாளராக ஏ.சின்னச்சாமியும், மதுரை மாவட்டச் செயலாளராக எஸ்.கிருஷ்ணசாமியும் பணியாற்றி வந்தனர்.

சுப்ரமணிய சர்மாவின் கடிதம் கிடைத்ததும் கட்சியின் உறுப்பினர்களான வி.மதனகோபாலும், சுருளிராஜனும் அதை எடுத்துக் கொண்டு பாலசுப்ரமணியத்தின் வீட்டுக்குச் சென்றனர். அவருடைய இல்லம் கோபாலசமுத்திரம் வடக்கு வீதியில் இருந்தது.

இவ்விருவரும் பாலசுப்ரமணியத்தை சந்தித்து சர்மாவின் கடிதத்தைக் கொடுத்தனர். குறிப்பிட்ட நாட்களில் கட்சி அலுவலகத்துக்கு வருவதாகக் கூறினார் பாலசுப்ரமணியம். அதன்படியே வரவும் செய்தார். அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தங்கியிருப்பார். கட்சிச் செயலாளரோடும், இதரத் தோழர்களோடும் விவாதங்கள் நடத்துவார். கட்சியின் ஆங்கில வார இதழுக்கு சந்தா கட்டினார். படிப்படியாக அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவது அதிகரித்தது.

காலையில் தந்தையாருடன் நீதிமன்றத்துக்குச் செல்லும் பாலசுப்ரமணியம் மாலையில் யூனியன் கிளப் என்று அழைக்கப்படும் பொழுதுபோக்கு மன்றத்துக்குப் போய் விடுவார். யூனியன் கிளப் என்பது திண்டுக்கல்லில் உள்ள பெரிய மனிதர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மாலை நேரத்தில் கூடி பொழுது போக்கும் இடமாகும். பாலசுப்ரமணியம் தினமும் தவறாமல் அங்கு செல்வார்.

ஆனால் வெகு விரைவிலேயே பாதிக்கப்பட்ட மக்களும், தொழிலாளிகளும் அவரைத் தேடி யூனியன் கிளப்பிற்கே வர ஆரம்பித்தனர். நாளாக, நாளாக இவ்வாறு தேடி வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

இத்தகையதொரு நிலைமையை திண்டுக்கல் கட்சித் தலைவர்கள் திட்டமிட்டே உருவாக்கினர். அவர்கள் நோக்கம் முழுவதும் பாலசுப்ரமணியம் தினமும் யூனியன் கிளப்பிற்குப் போவதை நிறுத்தச் செய்து படிப்படியாக அவரை தொழிற்சங்க வேலைக்கும், கட்சி வேலைக்கும் கொண்டு வந்து விட வேண்டுமென்பதாகும். இந்தக் காரணத்திற்காகவே கட்சி அலுவலகத்திற்கு பிரச்சனைகளுடன் வரும் தொழிலாளிகளையும், பொது மக்களையும், யூனியன் கிளப்பிற்குப் போய் பாலசுப்ரமணியத்துடன் பேசுமாறு அனுப்பி வைத்தனர். கட்சித் தலைவர்களின் இந்தத் திட்டம் விரைவிலேயே நிறைவேறியது.

தினமும் தன்னைத் தேடி ஏராளமானோர் யூனியன் கிளப்பிற்கு வருவதால் இதர உறுப்பினர்களுக்கு சிரமம் ஏற்படும் என்று கருதிய பாலசுப்ரமணியம் அனைவரையும் கட்சி அலுவலகத்திற்கு வரும்படிக் கூறி, மாலை நேரங்களில் கட்சி அலுவலகத்திற்கே செல்லத் தொடங்கினார். இதுவரை நீதிமன்றத்திற்குப் போகும்பொழுதோ, அல்லது நீதிமன்றத்திலிருந்து வரும்பொழுதோ சிறிது நேரம் கட்சி அலுவலகத்திற்கு வந்து போகும் பாலசுப்ரமணியம் வர வர அதிக நேரம் கட்சி அலுவலகத்திலேயே அதிக நேரம் செலவிட ஆரம்பித்தார்.

நிராதரவான நிலையில் இருந்த தோல் பதனிடும் தொழிலாளிகள், சுருட்டுத் தொழிலாளிகள், நகரசுத்தித் தொழிலாளிகள் ஆகியோரின் துன்ப துயரங்கள் மனிதாபிமானியான அவரது உள்ளத்தில் பெரும் வேதனையை ஏற்படுத்தின. யூனியன் கிளப்பிற்குப் போவது குறைந்து போய் இறுதியில் அங்கு போவதையே அவர் நிறுத்தி விட்டார்.

அதேபோல் பகலில் நீதிமன்றத்தில் தந்தையாருக்கு உதவியாக அதிக நேரம் இருப்பது என்பது போய், பகலில் கட்சி அலுவலகத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதிகாலையில் தன் நண்பருடன் டென்னிஸ் விளையாடப் போவதுண்டு. அதுவும் படிப்படியாகக் குறைந்து போய் இறுதியில் அங்கு போவதையே அவர் நிறுத்தி விட்டார். விரைவில் நீதிமன்றத்துக்குப் போவதையும் அவர் நிறுத்தி விட்டார்.

இந்த நேரத்தில் தனியார் கப்பலொன்றில் பெரிய அதிகாரியாகப் பணியாற்றி வந்த சகோதரர் சிவராமனிடமிருந்து பாலசுப்ரமணியத்துக்கு ஒரு கடிதம் வந்தது. மற்றொரு தனியார் கப்பலில் பாலசுப்ரமணியத்துக்கு ஒரு பெரிய வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், உடனே அவர் சென்னைக்கு வந்து அந்த வேலையில் சேர வேண்டுமென்றும் சிவராமன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ள வேலை அது.

பாலசுப்ரமணியம் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு கட்சி அலுவலகத்திற்கு வந்தார். நகரக் கட்சிச் செயலாளர் சின்னச்சாமியும், இதர தோழர்களும் அங்கிருந்தனர். அவர்களிடம் தன் சகோதரரிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்துக் காட்டிய பாலசுப்ரமணியம் தான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார். அவரிடம் அனைவரும் ஒருமித்த குரலில் பதில் கூறினர்.

”தொழிலாளி வர்க்கத்திற்கு உங்கள் சேவை மிகவும் தேவை. உங்களுடைய சேவை என்றைக்கும் வீண் போகாது. பெரிய தலைவராகும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு. கப்பல் வேலை வேண்டாம்!”.

தோழர்கள் கூறிய பதிலைக் கேட்ட பாலசுப்ரமணியம் ஒரு விநாடி நேரம் கூடத் தாமதிக்கவில்லை. கடிதத்தைக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டார். அந்த விநாடியிலிருந்து தொழிலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்வது, அதன் போராட்டங்களில் ஈடுபடுவது என்ற பணிக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார். இந்த முடிவை நினைத்து அவர் தன் வாழ்க்கை முழுவதிலும் பெருமிதம் கொண்டிருந்தார். ஒரு பொழுதும் பின்னோக்கிப் பார்த்ததில்லை.

பாலசுப்ரமணியம் எடுத்த இந்த உறுதியான முடிவு திண்டுக்கல் கட்சித் தலைவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளித்தது. திண்டுக்கல் நகரில் வாயில்லாப் பூச்சிகளாக கொத்தடிமைகளைப் போன்று நடத்தப்பட்டு வந்த தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க உணர்வூட்டி அவர்களைப் போராட்டப் பாதையில் அழைத்துச் சென்று உரிமை பெற்றவர்களாக அவர்களை ஆக்குவது என்ற வரலாற்றுக் கடமையைச் செய்யக் கூடிய திறம் படைத்த மனிதர் பாலசுப்ரமணியம் என்றே அவர்கள் உறுதியாக நம்பினர். அந்த நம்பிக்கையை பாலசுப்ரமணியம் மெய்ப்பித்துக் காண்பித்தார்.

எத்தகைய கடுமையான சூழ்நிலையில் பாலசுப்ரமணியம் செயல்பட வேண்டியிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள அன்றைய திண்டுக்கல் நகரின் சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் காண்பது அவசியம்.

அவலங்கள் நிறைந்த வாழ்வு

அன்றைய திண்டுக்கல் நகரத்தில் பிரதானத் தொழில்களாக இருந்தவை தோல் பதனிடும் தொழில், சுருட்டுத் தொழில், பூட்டு செய்வது உள்ளிட்ட சிறு பட்டறைத் தொழில் போன்றவையாகும். அன்று திண்டுக்கல் நகரில் நாற்பது தோல் பதினிடும் தொழிற்சாலைகள் இருந்தன. இவற்றுக்கு தோல் ஷாப்புக்கள் என்று பெயர். தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நடத்தி வந்தவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் வேலை செய்து வந்த தொழிலாளிகளோ, கிருஸ்தவ மற்றும் இந்து சமயங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்களில் கிருஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மிக அதிகம். தொழிலில் தினக்கூலி என்பது இரண்டணா. அதாவது ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு. தினமும் பன்னிரண்டு மணி நேரம் முதல் பதினாலு மணி நேரம் வரை தொழிலாளி வேலை செய்ய வேண்டும். ஆண் தொழிலாளியின் இரண்டணா கூலியில் ஒரு குடும்பம் உயிர்வாழ முடியாது. எனவே மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பம் முழுவதுமே உழைக்க வேண்டும். ஒவ்வொரு தோல் பதனிடும் தொழிற்சாலையும் தோல்ஷாப் என்று அழைக்கப்பட்டு வந்தது. அத்தகைய ஒவ்வொரு தோல்ஷாப் வாசலிலும் அதன் முதலாளி ஷெட் போட்டு வைத்திருப்பார். அங்கேதான் தொழிலாளிகள் குடும்பத்துடன் வசிக்க வேண்டும். வெளியாட்கள் யாரும் அவர்களை நெருங்க முடியாது. முதலாளியின் அனுமதியின்றி தொழிலாளி வெளியே போக முடியாது. உற்றார் உறவினர் இறந்து விட்டால் கூட முதலாளியிடம் அனுமதிச் சீட்டு வாங்கிய பின்புதான் அதில் கலந்து கொள்ள வெளியே செல்ல முடியும். முதலாளியிடம் வாங்கிய கடனுக்காக ஒவ்வொரு தொழிலாளியும் பாண்டு பத்திரம் கைரேகை வைத்தோ, அல்லது கையெழுத்திட்டோ தர வேண்டியிருந்தது. ”இந்தக் கடனை அடைப்பதற்காக நான் வேலை செய்வேன். நான் அதை அடைக்க முடியாமல் இறந்து விட்டால், என் மகன் வேலை செய்வான். நான் கொடுக்க வேண்டிய கடனை என் முதல் மகன் அடைப்பான். இல்லையென்றால் நடு மகன் அடைப்பான். இல்லையென்றால் கடைசி மகன் அடைப்பான்” என்று அந்தப் பத்திரத்தில் எழுதப்பட்டிருக்கும்.

முதலாளியிடம் பட்ட கடனைக் கொடுக்காமல் தப்பித்து வெளியூர்களுக்கு ஓடி விடலாம் என்று தொழிலாளி கனவில் கூடக் கருத முடியாது. ஏனென்றால், ரயில் நிலையத்தில் தோல் ஷாப் புரோக்கர் சுற்றிக் கொண்டிருப்பான். தப்பி ஓட விரும்பும் தொழிலாளியை மீண்டும் தோல் ஷாப்பிற்குப் பிடித்துக் கொண்டு வந்து விடுவான்.

ஒரு தோல் ஷாப்பில் வேலை பார்க்கும் தொழிலாளி வேறு தோல் ஷாப்பிற்கு வேலைக்குப் போக விரும்பினால், முதலில் தான் கடன் பட்டிருக்கும் முதலாளியின் கடனைத் தீர்த்து அவரிடமிருந்து அனுமதிச் சீட்டுப் பெற்ற பின்புதான் போக முடியும்.

தோல் பதனிடும் முறையோ தொழிலாளிகளுக்கு வேதனை நிரம்பியதாக இருந்தது. கல்சுண்ணாம்பு நிரம்பிய குழியில் முதலில் ஆட்டுத் தோலையும், மாட்டுத் தோலையும் தொழிலாளி முக்கி வைக்க வேண்டும். தினமும் மாற்றி மாற்றி வைக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால்தான் தோல் வேகும். அதன் பின் அதன் மேலுள்ள ரோமம் தனியாக எடுக்கப்பட்டு அதன் உள்புறம் வெந்து போன ஜவ்வு போன்றவை கத்தியினால் சீவி எடுக்கப்படும். இவ்வாறு முதலில் சுத்தம் செய்யப்பட்ட தோல் கடுக்காய், பட்டை, தண்ணீரில் தனித்தனியாக ஊற வைத்து உரமேற்றப்படும். அதன் பின் தொழிலாளி அதை புங்க எண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணை கலந்து தடவி நிழலில் காய வைப்பான். அதைத் தொடர்ந்து கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அதை நீவி விட வேண்டும். கடைசியாக சொறசொறப்பான எமரித் தாளை கட்டையில் வைத்து நீவி விட்டால், தோல் முற்றிலும் பதப்படுத்தப்பட்டு விடும். அக்காலத்தில் இந்த முறையில் ஒரு தோலை சுத்தம் செய்ய்ய சுமார் 45 நாட்களாகி விடும்.

இவ்வாறு சுண்ணாம்பிலும், ரசாயனத்திலும் வேலை செய்து கொண்டிருந்து தொழிலாளிகள் அடிக்கடி நோய் வாய்ப்பட்டனர். அவர்களுடைய கை விரல்கள், கால் விரல்கள், தோல்கள் வெந்து கிடந்தன. கையுறையோ, பாதுகாப்பு சாதனங்களோ எதுவுமே கிடையாது. அத்துடன் இந்த வேலையை துர்நாற்றம் வீசும் அறுவெறுப்பான நிலைமைகளில் செய்ய வேண்டியிருந்ததால் அதை மறைக்க தொழிலாளிகள் தங்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த அளவு கூலியில் ஒரு பகுதியை சாராயத்தில் செலவிட்டு விடுவார்கள்.

இரவு ஏழு மணி, எட்டு மணிக்கு வேலையை முடித்த பின் தொழிலாளிகள் அன்றைய கூலியை வாங்க முதலாளியின் அலுவலக வாயிலருகே போய்க் காத்திருக்க வேண்டும். ‘கம்மாம்ஸ்’ என்றழைக்கப்பட்ட அந்த இடத்தில் சில மணி நேரங்கள் காத்திருந்த பின்புதான் அன்றைய கூலி கிடைக்கும். சில சமயங்களில் பல மணி நேரம் காத்திருந்த பின்னர் இன்று போய் நாளை வா என்ற உத்தரவு முதலாளியிடமிருந்து பிறக்கும்.

தோல் பதனிடும் தொழிலாளிகள் இத்தகைய பொருளாதார அடிமைத்தனத்தில் உழன்றதோடு, மற்றொரு கொடிய சமூக ஒடுக்குமுறைக்கும் ஆளாகியிருந்தனர்.

தோல் பதனிடும் தொழிலாளிகள் தங்கள் முதலாளிகளின் முன் காலில் செருப்பு போட்டு நடக்கக் கூடாது. தோளில் துண்டு போடக் கூடாது. முதலாளியைக் கண்டால் செருப்பைக் கழற்றி முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். நெஞ்சுக்கு முன்பாக வைத்துக் கொள்ளக் கூடாது. டீக்கடைகளில் அவர்களுக்கென்று தனியாக கிளாஸ்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு பச்சைச் சாயம் பூசப் பட்டிருக்கும். அதில்தான் டீ குடிக்க வேண்டும். சில இடங்களில் அதுகூட இருக்காது. தேங்காய் சிரட்டையில்தான் டீ ஊற்றிக் கொடுப்பார்கள். பொருளாதார அடிமைத்தனத்தோடு, இத்தகைய சமூக அவமானங்களையும் தாங்கி தோல் பதனிடும் தொழிலாளிகள் வாழ வேண்டியிருந்தது.

அவை மட்டுமல்ல, தோல் ஷாப் முதலாளிகளின் அடி, உதை தண்டனைகளையும் தொழிலாளிகள் தாங்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தோல் ஷாப்பிலும் ஒரு குத்துக்கால் நட்டு வைக்கப்பட்டிருக்கும். எந்தத் தொழிலாளியாவது முதலாளியின் கோபத்துக்கு ஆளானால், உடனே அந்தக் குத்துக்கல்லுக்குக் கொண்டு வரப்பட்டு அதோடு சேர்த்துக் கயிற்றினால் கட்டப்படுவான், ஈவிரக்கமின்றி அடிக்கப்படுவான்.

தோல் ஷாப்பில் வேலை செய்யும் பெண்களும் அவமானகரமாக நடத்தப்பட்டனர். அற்பக்கூலியில் உயிர்வாழ்வதற்காக அனைத்து வித வேதனைகளையும், கொடுமைகளையும் அவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

தொழிலாளிகள் மிகக் குறைந்த கூலியிலும் வட்டக்காசு, மகிமைக்காசு என்ற பெயர்களில் தோல்ஷாப் முதலாளிகள் பிடித்தம் செய்வார்கள்.

ஆக, பொருளாதாரத் தன்மையிலும், சமூகத் தன்மையிலும் மிகவும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த இத்தகைய தோல் பதனிடும் தொழிலாளிகளை ஒன்று திரட்டிப் போராடுவதென, திண்டுக்கல் நகரிலுள்ள இளம் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டது. அதன் பொருட்டு, ஏ.பாலசுப்ரமணியத்தை மையமாக வைத்து அந்தப்பணியில் இறங்கியது.

தொழிற்சங்கத் தலைவராகிறார்

திண்டுக்கல் நகரில் ஏற்கனவே “தொழிலாளர் பொதுநலச்சங்கம்” என்ற பெயரில் 1930ம் ஆண்டுகளின் கடைசிப் பகுதியில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. இதைத் துவங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டியவர் ஜமால் மொய்தீன் என்ற தோல்ஷாப் முதலாளி. இதர தோல்ஷாப் முதலாளிகளைப் போலின்றி ஜமால் மொய்தீன் தொழிலாளர்கள் மீது பச்சாதாபம் கொண்டிருந்தார். கருணை உள்ளம், மனிதாபிமானமும் கொண்டிருந்த அவர் இதர முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார். ஆனால் வசதியான பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்ததாலும், இந்து, முஸ்லீம் என்று பாகுபாடு பார்க்காமல் ஏழைப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து பிரபலமானவராக விளங்கியதாலும், அவருடன் மோதுவதற்கு இதர முதலாளிகள் தயாராக இல்லை.

இந்தத் தொழிலாளர் பொதுநலச்சங்கத்தைத் துவக்குவதற்கு ஆதரவு தெரிவித்த மற்றொருவர் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த மேட்டுப்பட்டி பங்குச் சாமியார் மைக்கேல் பாதிரியார் என்பவராவார். அவர் இதில் ஆர்வமாக இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. தோல் ஷாப் முதலாளிகள் அனைவரும் முஸ்லீம்களாக இருந்த நேரத்தில் அந்தத் தோல் ஷாப்புக்களில் வேலை செய்து வந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் கத்தோலிக்க கிருஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களாவர். தோல் ஷாப் முதலாளிகளின் சுரண்டல் முறையை எதிர்த்து கத்தோலிக்க மத குருக்கள் குரல் எழுப்பத் தயாராக இல்லை என்ற போதிலும் இத்தகைய சங்கங்கள் அமைப்பதினால் தங்களுடைய மதத்தைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கு சில நன்மைகள் கிடைக்கலாமென்று அவர் கருதினார். ஞாயிற்றுக் கிழமையிலும் தொழிலாளிகள் வேலை செய்ய வேண்டியிருந்ததால் அவர்கள் அந்த தினத்தில் நடைபெறும் சர்ச் பிரார்த்தனைகளுக்கு வர முடியவில்லை. எனவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட வேண்டுமென்று மதகுருக்கள் கோரினர். இதன் காரணமாகத்தான் தொழிலாளர் பொதுநலச்சங்கத்தை ஜமால் மொய்தீன் துவக்கி வைத்த பொழுது அதன் கொடியை மைக்கேல் பாதிரியார் மந்திரித்துக் கொடுக்க முன்வந்தார். அத்துடன் அந்தக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

1940ம் ஆண்டுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.அப்துல் சத்தார் இந்தச் சங்கத்திற்குத் தலைவராகவும், கே.வி.ஸ்ரீராம் செயலாளராகவும் இருந்தனர். இந்தச் சங்கம் என்பது பெயரளவுக்கான சங்கமாகவே இருந்தது.

திண்டுக்கல் நகரில் தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புக்களை உருவாக்கி, தொழிலாளர்களை அவற்றில் சேரச் செய்து அவர்களை வர்க்க உணர்வு பெற்றவர்களாக ஆக்குவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. முதலில் தோல் பதனிடும் தொழிலாளரிடையே வேலை செய்து அவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று அது முடிவு செய்தது. அதன்படி இளம் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் தோல் பதனிடும் தொழிலாளிகள் வசிக்கக் கூடிய இடங்களுக்குச் சென்று அவர்களை ஒவ்வொருவராக சந்தித்து விளக்கம் தந்தனர். விரைவில் கணிசமான தொழிலாளிகளை அவர்கள் தங்கள் பக்கம் திருப்ப முடிந்தது. ஒவ்வொரு தோல் பதனிடும் தொழிற்சாலைக்கும், ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வசித்து வந்த ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குழு அமைக்கப்பட்டது. இவை அனைத்தின் விளைவாக, தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலமான ஆதரவு கிடைத்தது.

இந்தப் பணியைச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.எஸ்.இருதயதாசன், ஸ்ரீராம், பாக்கியநாதன் ஆகியோராவர். எஸ்,எஸ்.இருதயதாசன் அச்சமயத்தில் கிருஸ்தவப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்தார். அந்தோணியார் தெருவில் வசித்து வந்த தோல் பதனிடும் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த வாலிபர்களைத் திரட்டுவதில் அவர் முன்நின்றார்.

அவ்வாண்டு இறுதியில் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தில் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டுமென்று பாலசுப்ரமணியத்தைக் கட்சி கேட்டுக் கொண்டது. அப்பொழுது அவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நேரம். சங்க வேலைக்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்குவது என்று அவர் கவலை கொண்டார். “நீங்கள் அங்கே வர வேண்டியதில்லை. நாங்களே அனைத்தையும் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் தலைவராக மட்டும் இருந்தால் போதும்” என்று கட்சித் தலைவர்கள் பாலசுப்ரமணியத்திடம் கூறினர். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். சங்கத்தின் ஆண்டுவிழாவில் தொழிலாளிகளின் பெரும் ஆதரவுடன் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் கொடியாக செங்கொடி ஏற்றப்பட்டது.

சங்கம் என்பது பெயரளவிற்குத்தான் இருந்தது. நம்மை மீறி தொழிலாளிகள் எதுவும் செய்ய முடியாது என்று இறுமாந்திருந்த தோல் ஷாப் முதலாளிகளுக்கு பாலசுப்ரமணியம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் கண்டு ஆத்திரம் ஏற்பட்டது. ஆண்டுவிழா நிகழ்ச்சிகளிலிருந்து முதலாளிகள் வெளிநடப்புச் செய்தனர்.

சங்க மாநாடு ஸ்ரீராமை சங்கச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. அவர் சங்கத்தின் சார்பாக மாநாட்டில் ஒரு கோரிக்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் முதல் தடவையாக ஒரு போராடும் சங்கமாக உருவெடுத்தது.

பாலசுப்ரமணியம் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதானது, தோல் பதனிடும் தொழிலாளரிடையே ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் சவேரியார்பாளையத்தில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில்தான் பாலசுப்ரமணியம் முதன்முறையாக உரையாற்றினார். ஸ்ரீராம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் மதனகோபாலும் பேசினார். கூட்டத்திற்கு வந்த பாலசுப்ரமணியத்தைப் பார்க்க சவேரியார் பாளையம் முழுவதுமே திரண்டு விட்டது. பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தங்களுக்காகப் பாடுபட முன்வந்திருக்கிறாரே என்று இந்த உழைப்பாளி மக்களிடம் பெரும் வியப்பும், மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன.

தொழிலாளிகள் கூட்டம் காலை நேரம் நடைபெறும். தோல் ஷாப்புக்கு வெளியிலுள்ள மரத்தடியில் அது கூடும். மதனகோபாலும் இதர தலைவர்களும் ஸ்தலநிலைமை, தொழிலாளர் பிரச்சனைகள் குறித்துப் பேசுவார்கள். சிறிது நேரத்தில் பாலசுப்ரமணியம் ஒரு தயாரிக்கப்பட்ட பேச்சுக்குறிப்புடன் கூட்டத்திற்கு வருவார். அது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த காலம்!. பாசிஸ்ட் இட்லரின் ஜெர்மானியப் படைகளுக்கெதிராக சோவியத் மக்கள் தீரமுடன் போராடி வந்த காலம். இந்தியாவிலோ, மகாத்மா காந்தி, நேரு முதலான காங்கிரஸ் தலைவர்களும், ஊழியர்களும் ஆங்கிலேய ஆட்சியினரால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த காலம்.

பாலசுப்ரமணியம் தனது உரையில், உலகைக் காப்பதற்காக சோவியத் மக்கள் செய்து வரும் மகத்தான தியாகத்தினை விளக்கிக் கூறுவார். காங்கிரஸ் தலைவர்களை சிறையிலடைத்திருப்பதைக் கண்டித்தும் இதர இடங்களில் தொழிலாளிகள் நடத்தி வரும் போராட்டங்களை விளக்கியும் பேசுவார். சங்க ஒற்றுமையை வலியுறுத்திப் பேசுவார். அவருடைய உரை என்பது பதினைந்து நிமிட அளவிலேயே இருக்கும்.

அக்காலத்தில் தோல் ஷாப்பில் முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்குமிடையே ஏதாவாது ஒரு பிரச்சனையில் வாக்குவாதம் நடைபெறுமானால் முதலாளிகள் உடனே போலீசை வரவழைப்பார்கள். போலீஸ் எதையும் விசாரிக்காமல் தொழிலாளிகளை அடித்து லாக்கப்பில் தள்ளுவது என்பது அன்று சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிலைமைக்கு பாலசுப்ரமணியம் ஒரு முடிவு கட்டினார். முதலாளிக்கும், தொழிலாலிக்குமிடையிலான தகறாறுகளில் போலீஸ் தலையிடக் கூடாதென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், காவல்துறை கண்காணிப்பாளருடனும் பலமுறை வாதாடி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நேர்மையான வழக்கறிஞர் என்ற சமூக அந்தஸ்தும் இதில் அவருக்கு உதவி புரிந்தது. தோல் ஷாப்புக்குள் போலீசார் போவது நிறுத்தப் பட்டது. பயந்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளுக்கு இது மிகவும் நிம்மதியை அளித்தது.

சங்க மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்த முதலாளிகள் எந்த வழியிலாவது இதை உடைத்தெறிவது என்று முடிவு செய்தனர். அவர்கள் அடைந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை. வெறும் பொம்மைச் சங்கமாகயிருந்தது வர்க்க உணர்வுள்ள உயிருள்ள சங்கமாகச் செயல்படத் துவங்கியதால், அவர்களுக்கு பயம் ஏற்பட்டது. அறியாமையிலும், சமூக ஒடுக்குமுறையிலும் ஆட்படுத்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட தொழிலாளிகள் தங்களுக்கு சமமான சமூக அந்தஸ்து கோருவதா என அவர்கள் கொதிப்படைந்தனர். இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமென்று தீர்மானித்து தொழிலாளிகள் மீதும், சங்கத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்கினர். சங்கத்தில் சேரும் தொழிலாளிகள் மீது குண்டர் தாக்குதல் ஏவி விடப்பட்டதுடன் அவர்கள் மீது பொய் வழக்குகளும் போடப்பட்டன. எனவே தோல் பதனிடும் தொழிலாளிகள் தினமும் பாலசுப்ரமணியத்தைத் தேடி வர ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இவ்வாறு வருவது அதிகரித்துக் கொண்டே போனதால் தானே தினமும் சங்க அலுவலகத்திற்குப் போவதென்று பாலசுப்ரமணியம் முடிவு செய்தார்.

தன்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததால் பெரும் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருப்பதைக் கண்டு அவர் வேதனைப் பட்டார். அந்த வேதனையிலிருந்து ஒரு உறுதி பிறந்தது. அந்தத் தொழிலாளி மக்களுக்காகப் போராடியே தீருவது என்ற வைராக்கியம் அவர் உள்ளத்தில் உருவெடுத்தது. வழக்கறிஞர் தொழில், காலை விளையாட்டு, மாலை பொழுதுபோக்கு அனைத்தையும் நிரந்தரமாகக் கைவிட்டார்.

பாலசுப்ரமணியத்தின் தொழிற்சங்கப் பணியை அவருடைய தந்தையார் வேறு விதமாகப் பார்த்தார். தோல் பதனிடும் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருந்தபடியால் தன்னைப் போலவே தனது மகனும் அரிஜன சேவை செய்கிறான் என்று கருதி மகிழ்ச்சியடைந்தார். நீ செய்வது மிகச் சரியானது என்று தன் மகனைப் பாராட்டினார்.

தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் விரைவிலேயே பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளிகளைத்திரட்ட ஆரம்பித்தது. எட்டு மணி நேர வேலை, நாள்கூலி உயர்வு, வாரம் ஒருநாள் விடுமுறை, தொழிலாளிகள் மரியாதையாக நடத்தப்படுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தத் துவங்கியது. தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டாயிரம் தொழிலாளிகளில் ஆயிரத்து ஐநூறு பேர் வரை சங்கத்தின் உறுப்பினராக இருந்தனர். மாத சந்தா இரண்டணாவாகும். அது தொழிலாளியின் ஒரு நாள் கூலியாகும். நாள் முழுவது சுண்ணாம்புக் குழியில் உழைத்தால் கிடைக்கும் தொகையை சங்க உறுப்பினர் சந்தாவாக ஒரு தொழிலாளி செலுத்துவது என்பது அன்று மிகப் பெரிய தியாகமாகும்.

தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்க முதலாளிகள் முதலில் மறுத்தனர். ஆனால் தொழிலாளிகளை முன்போல் அடித்து மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதைக் கண்ட பிறகு பணிந்தனர். பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். சமூக ஒடுக்குமுறையிலிருந்து தோல் பதனிடும் தொழிலாளிகள் விடுபட்டு முதன்முறையாக தலை நிமிர்ந்து நடக்க முடிந்தது. சங்கத்தின் செயல்பாடுகள் ஒரு சில மாதங்ளுக்குள்ளேயே தொழிலாளிகள் மத்தியில் ஒரு பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தோற்றுவித்தது. சங்கத்தைப் பலப்படுத்துவதில் பாலசுப்ரமணியத்திற்கு உறுதுணையாக நின்றவர்களில் இருதயதாசன், பாக்கியநாதன், துரைராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

சங்கம் தனக்கு அங்கீகாரம் அளிக்கக்கோரி அரசாங்கத்துக்கு மனு அனுப்பியது. தலைமை தொழிலாளர் நல அதிகாரியின் (லேபர் கவுன்சிலர்) விசாரணைக்கு தயாரிப்புக்கள் நடைபெற்று வந்தன. ஆனால் தோல் ஷாப் முதலாளிகள் சங்கத்துக்கு அங்கீகாரம் கிடைத்து விடக் கூடாதென்பதற்காக பெரும் முயற்சிகள் செய்தனர். அந்த முயற்சியில் அவர்களுடன் மற்றொருவரும் சேர்ந்து கொண்டார். அவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த மேட்டுப்பட்டி மைக்கேல் பாதிரியார். அவரது கோபத்துக்கு ஒரு காரணம் இருந்தது. தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் வேலைகளினால் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு வளர்வதும், தொழிற்சங்கம் பலமடைவதும் ஆபத்தானதென்று அந்தப் பாதிரியார் கருதினார்.

தொழிலாளர்நல அதிகாரி விசாரிக்கும்போது தொழிலாளர்களை வெளியில் விடக்கூடாதென்பதற்காக முதலாளிகள் சதித்திட்டம் தீட்டினர். அந்த அதிகாரி வருவதற்குள் எப்படியாவது சங்கத்தை உடைத்து விட வேண்டுமென்று திட்டமிட்டு ஒரு கலவர் நிலைமையை உருவாக்கினர். ஒரு தோல் பதனிடும் தொழிலாளி வெட்டப்பட்டார். தொழிலாளர் மத்தியில் பய பீதியை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. இவற்றைக் கண்ட கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கமும் எதிர்நடவடிக்கை எடுத்தன. தொழிலாளர்களை அணி அணியாக தொழிலாளர் நல அதிகாரி முன்பு அழைத்து வந்து காண்பித்தனர்.

அந்த அதிகாரியிடம் மேட்டுப்பட்டிப் பாதிரியார் ஒரு மனுவை சமர்ப்பித்தார். தொழிலாளிகள் ஞாயிற்றுக்கிழமையன்று சர்ச்சில் நடைபெறும் பிரார்த்தனைக்கு வரும் பொருட்டு அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டுமென்று முன்பு கோரிய அந்தப் பாதிரியார் ஒரு வினோதமான மனுவை சமர்ப்பித்தார். அதில் தொழிலாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டாம். சங்கத்திற்கு அதிகாரம் தரக்கூடாது. அது ரவுடிகள் சங்கம் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

ஆனால் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியபின் அந்த அதிகாரி சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அதற்கு அங்கீகாரம் கொடுத்தார். வேலைநேரம், கூலி, போனஸ் ஆகியவற்றைக் குறித்து தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளையும் அந்த அதிகாரி ஏற்றுக் கொண்டார். முதலாளிகளின் சதித்திட்டம் படுதோல்வி அடைந்தது.

சங்கத்துக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதால், ஒவ்வொரு தோல்ஷாப் வாரியாக சங்கத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டது. இதைக் கண்டு முதலாளிகள் மேலும் ஆத்திரமடைந்தனர். இந்தச் சமயத்தில் அங்கே நடைபெற்ற ஒரு கொலையில், சங்கத் தலைவர்களை சிக்க வைக்க முதலாளிகள் ஒரு வழக்கை ஜோடித்தனர். சங்கத்தின் செயலாளர் ஸ்ரீராம், பாக்யநாதன் உள்ளிட்டு நால்வர் இந்தக் கொலையைச் செய்தனர் என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் பாலசுப்ரமணியத்தையும் சேர்க்க அந்த முதலாளிகள் முதலில் திட்டமிட்டனர். ஆனால் நகரிலேயே பிரபலமான வழக்கறிஞரும், அதிகாரிகள், நீதிபதிகளிடையே மதிப்பைப் பெற்றவருமான பாலசுப்ரமணியத்தின் மீது குற்றம் சுமத்தினால் யாரும் நம்பமாட்டார்கள், வழக்குப் பாதமாகிவிடும் என்று கருதி அவரை அந்த வழக்கில் சேர்க்கவில்லை. பாலசுப்ரமணியத்தை அந்த வழக்கில் சேர்ப்பதற்காக முயற்சி செய்யப்பட்டதை அறிந்த தோல் பதனிடும் தொழிலாளிகள் மட்டுமல்ல, சாதாரண ஏழை, எளிய முஸ்லீம் மக்களும் ஆத்திரமடைந்தனர். அப்டுல் சத்தார் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

அந்தக் கொலை வழக்கு திண்டுக்கல்லிலும், நிலக்கோட்டையிலும் நடைபெற்றது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக பாலசுப்ரமணியமே வாதாடி, வழக்கைத் தவிடு பொடியாக்கி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலையடையச் செய்தார். இவையனைத்தும் சேர்ந்து திண்டுக்கல் பகுதி முழுவதிலும் பாலசுப்ரமணியத்தை பிரபலமான தொழிற்சங்கத் தலைவராக்கியது. தோல் பதனிடும் தொழிலுக்கு அடுத்தபடியாக, திண்டுக்கல் நகரில் பெரிய தொழிலான சுருட்டுத் தொழிலிலிருந்து தொழிலாளிகள், பாலசுப்ரமணியத்தைத் தேடி வரத் தொடங்கினர்.

அச்சமயத்தில் திண்டுக்கல் நகரில் பல பிரபலமான சுருட்டுக் கம்பெனிகள் இருந்தனர்.   அங்கிலேயர்கள் நடத்தி வந்த ஸ்பென்சர் சுருட்டுக் கம்பெனி, பகவதி விலாஸ் கம்பெனி, மயில் மார்க் கம்பெனி என்ற பெயரில் பல கம்பெனிகள் இருந்தன. இவைகள் ஒவ்வொன்றிலும் நூற்றுக் கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து வந்தனர். “இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தினமும் புகைப்பது திண்டுக்கல் ஸ்பென்சர் சுருட்டு” என்று கூட அந்தக் காலத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்தத் தொழிற்சாலைகளில் மிகக் குறைவான கூலியே கொடுக்கப்பட்டு வந்தது. வார விடுமுறை கிடையாது. தினமும் பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டும். தொழிற்கூட சட்டம் கிடையாது. தொழிற்சங்கம் வைக்க முயற்சித்தாலோ, தொழிலாளர்களைக் கூட்டி வைத்துப் பேசினாலோ, அது சட்ட விரோதம் என்ற நிலை இருந்தது. தோல் பதனிடும் தொழிலில் இருந்தது போலவே, இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் பெரும்பான்மையினராக இருந்தனர். ஒரு வித்தியாசம் எதிவென்றால், தோல் பதனிடும் தொழிலில் பெரும்பாலோர் கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனரென்றால், சுருட்டுத் தொழிலில் இந்து, கிருஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் சரிபாதியாக இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி, சுருட்டுத் தொழிலாளிகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக சங்கம் அமைத்துப் போராடுவதென்று முடிவு செய்து செயலிலும் இறங்கியது. சுருட்டித் தொழிலாளர் சங்கம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. பாலசுப்ரமணியம் தலைவராகவும், ஏ.சின்னச்சாமி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏ.வி.மதனகோபால், கே.டி.அரசு போன்றோரும் இந்த அமைப்பில் இருந்தனர். வெகு விரைவிலேயே இந்தச் சங்கம் தொழிலாளிகளைத் திரட்டி போராட்டத்தில் இறங்கியது. பல கோரிக்கைகளை வென்றெடுத்தது.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் நகரில் லாரி, பஸ் தொழிலாளர் சங்கம், நகர சுத்தி தொழிலாளர் சங்கம், ஓட்டல் தொழிலாளர் சங்கம், நெசவுத் தொழிலாளர் சங்கம் போன்ற பல சங்கங்கள் அமைக்கப்பட்டன. இவை அனைத்திற்கும் பாலசுப்ர்மணியம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் என்பது போய், “தலைவர் ஏ.பி.” என்று உழைக்கும் மக்கள் அனைவராலும் அவர் அன்புடன் அழைக்கப்படலானார். நீதிமன்றத்துக்குப் போவதையே நிறுத்தி விட்டார். இரவும், பகலும் தொழிற்சங்கப்பணி, கட்சிப் பணி என்று அவைகளிலேயே மூழ்கினார். போதாக்குறைக்கு அது இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்று வந்த காலம்!. எங்கு பார்த்தாலும், பற்றாக்குறை, பதுக்கல்!. மலுவு தானியங்கள், விறகு, துணி போன்றவைகளுக்கு எங்கும் பஞ்சம். நகர கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கு இத்தகைய அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் முறையில் முறையாக வினியோகிக்கப்பட வேண்டுமெனப் போராடியது. அந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் ஏ.பி. தலைமை தாங்கி வழிகாட்டினார். மக்கள் மத்தியில் அவர் பெயர் மேலும் பிரபலமடைந்தது.

ஏ.பி. 1942ம் ஆண்டில், இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். கட்சி மீதிருந்த தடை நீக்கப்பட்டு அது சட்டபூர்வமான கட்சியாகச் செயல்பட்டு வந்த காலம் அது! அச்சமயத்தில் கட்சியின் திண்டுக்கல் நகரச் செயலாளராக ஏ.சின்னச்சமி செயல்பட்டு வந்தார். வெகு விரைவில் ஏ.பி. கட்சியின் நகர்குழு உறுப்பினராகவும் ஆனார். ஏ.சின்னச்சாமி, வி.மதனகோபால், சுருளிராஜ், ஏ.பி. ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தனர்.

அன்னை அக்னீஸ் மேரி

1940ம் ஆண்டுகளின் முற்பகுதியில் ரயில்வே தொழிற்சங்க இயக்கம் வலுவான அமைப்பாக வளர்ந்து வந்தது. ரயில்வே தொழிலாளிகள் மிகக் குறைந்த ஊதியத்தில், தினமும் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்து வந்தனர். வார விடுமுறை என்பதே அவர்களுக்குக் கிடையாது. மாத சம்பளம் பன்னிரண்டு ரூபாய் மட்டுமே!. ஃபிட்டர் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு தினக்கூலி பன்னிரண்டு அணாக்கள் (75 புதிய காசுகள்); கலாசி வேலை பார்க்கும் தொழிலாளிக்கு 9 அணா 4 பைசா(சுமார் 60 புதிய காசுகள்) தினக்கூலி; எழுத்தர் வேலை செய்பவர்களுக்கு மாத சம்பளம் 25 ரூபாய்; வருடத்துக்கு அவர்களுக்கு ஒன்றரை ரூபாய் ஊதிய உயர்வு. ஸ்டேஷன் மாஸ்டருக்கு மாத சம்பளம் 30 ரூபாய்!. இவற்றின் காரணமாக ரயில்வே தொழிலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகி வந்தது. இந்தத் தொழிலாளிகளுக்கு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம்(எஸ்.ஐ.ஆர்.எல்.யு) தலைமை தாங்கிப் போராடி வந்தது. கே.ஆனந்தன் நம்பியார், எம்.கல்யாண சுந்தரம் ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த சங்கத்தின் பிரதான தலைவர்களாக விளங்கினார்கள். இவ்விருவரும் அன்று ரயில்வேயில் எழுத்தர்களாக வேலை செய்து வந்தனர். 1946ம் ஆண்டு வாக்கில் இந்த சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 50,000 ஆக இருந்தது. இது, தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் எண்ணிக்கையில் சரிபாதியாகும்.

திண்டுக்கல் பகுதியில் ரயில்வே தொழிலாளிகளை சங்கத்தில் இணைப்பதிலும், அவர்களுக்கு அரசியல் உணர்வு ஊட்டுவதிலும் ஏ.பி. முன்னின்றார்.

தொழிலாளிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து 1946ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரயில்வே தொழிலாளிகள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தனர். ஆகஸ்ட் 24ம் தேதி முதல் பொது வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டிய ரயில்வே தொழிலாளிகளின் வேலைநிறுத்தம் கொடிய தாக்குதலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அப்பொழுது நேருவின் தலைமையில் இருந்த இடைக்கால காங்கிரஸ் அரசாங்கமும், பிரகாசத்தை முதலமைச்சராகக் கொண்டு சென்னை ராஜதானி காங்கிரஸ் அமைச்சரவையும், போராடும் தொழிலாளிகளின் மீது பெரும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். செப்டம்பர் 5ம் தேதி ரயில்வே தொழிற்சங்க இயக்கத்தின் ஜீவநாடியான பொன்மலையில் கொடுமையான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 5 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். ரயில்வே தொழிலாளிகளின் முக்கியத் தலைவரான கே.ஆனந்தன் நம்பியார், போலீசாரின் கடுமையான தாக்குதலுக்கு இலக்கானார். அவரது எலும்புகள் உடைக்கப்பட்டன. குற்றுயிராகக் கிடந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் நகரில், ரயில்வே தொழிலாளர்கள், உருக்குப் போன்ற உறுதியுடன் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். ஏ.பி. ஸ்தலத்திலிருந்து அவர்களுக்கு வழிகாட்டி வந்தார். இதைக்கண்டு கோபமடைந்த காங்கிரஸ் அரசாங்கம் ஏ.பி.ஐயும் இதர பத்துத் தொழிலாளர்களையும் கைது செய்து அப்பொழுது தேரடியிலிருந்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

ஏ.பி. கைது செய்யப்பட்டாரென்ற செய்தி ஒரு சில நிமிடங்களுக்குள் திண்டுக்கல் நகரம் முழுவதும் பரவியது. இதைக் கேட்டுக் கொதித்தெழுந்த தோல் பதனிடும் தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுமாக ஓடோடி வந்து காவல் நிலையத்தைச் சுற்றி நின்று தலைவர் ஏ.பி.ஐ விடுதலை செய் என்று முழக்கமிட்டனர். நகரத்தின் இதரத் தொழிலாளிகளும் சேர்ந்து கொண்டனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள், 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் மறியல் செய்தனர். திண்டுக்கல் நகரில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள், போலீசாருடன் மோதினர். ஸ்தலப் போலீசாரால் சமாளிக்க முடியாமல், வெளியிலிருந்து ஆயுதப் போலீசார் வரவழைக்கப்பட்டனர். நகர் முழுதும் முழுக் கடையடைப்பு நடத்தப்பட்டது. இவற்றைக் கண்ட காவல் துறையினர், ஏ.பி. பலத்த பாதுகாப்போடு மதுரை மத்தியச் சிறைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் அத்துடன் நிற்கவில்லை. ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்பதற்காக மதுரை முதலிய இடங்களிலிருந்து ஆயுதப் போலீசை உடனே கொண்டு வந்தனர். தோல் பதனிடும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் இந்தப் போலீசை ஏவி காட்டுமிராண்டித் தனமாக தொழிலாளிகளின் மீது தாக்குதல் தொடுத்தனர். பெண்களென்றும், குழந்தைகள் என்றும் பாராது ஈவிரக்கமற்ற முறையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

சவரியார் பாளயம் என்ற இடத்தில் தொழிலாளிகளுக்கும், போலீசுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. குடிசைகளை போலீசார் உடைத்து நொறுக்கினர். அதை எதிர்த்த அக்னீஸ்மேரி போன்ற பெண் தொழிலாளிகளை தடி கொண்டு அடித்தனர். அவர் தீரமுடன் போலீஸ் தாக்குதலை சந்தித்தார்.

பல மணி நேரத் தாக்குதலுக்குப் பின் 60க்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளர்களையும், 8 பெண்களையும் போலீஸ் கைது செய்து நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது. அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் 3 மாதக் கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை சிறைச்சாலைக்கு அனுப்பியது. தலைவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்பட்டு விட்டதால் இந்தத் தொழிலாளிகளை ஜாமீனில் எடுப்பதற்கு வழியில்லாது போய்விட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட ஆக்னீஸ்மேரி, அம்லோர் அம்மாள், அம்மணியம்மாள், மர்லீஸ்,புஷ்பம்மாள், ஞானமேரி, அந்தோணியம்மாள் மற்றும் மரியம்மாள் ஆகிய எட்டு பெண்களில் அம்லோர் அம்மாள் தன்னுடைய இரு கைக்குழந்தைகளுடன் சிறையில் இருக்க வேண்டி வந்தது. போலீஸ் தடியடியில் காயமடைந்திருந்த ஆக்னீஸ்மேரியின் உடல்நிலை சிறையிலடைக்கப்பட்ட சிறிது காலத்துக்குள் மோசமாகியது. சரிவர கவனிப்பின்றி சிறையிலேயே அவர் மரணமடைந்தார். சிறைச்சாலையில் தனிக்கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆக்னீஸ் மேரியின் இறந்த உடலை, இதயம் மரத்துப்போன சிறை அதிகாரிகள் கொட்டும் மழையில் திறந்த வெளியில் போட்டு விட்டனர். அவருடன் தண்டனை விதிக்கப்பட்ட பெண்கள் அழுது புரண்டனர். அதன்பின் அன்னை ஆக்னீஸ் மேரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உள்ளத்தை உருக்கும் மற்றொரு நிகழ்ச்சியானது அம்லோர் அம்மாவின் இரண்டு கைக்குழந்தைகளும் சரியான போஷாக்கின்றி சிறையிலேயே மடிந்து விட்டன என்பதாகும். அம்லோர் அம்மாவின் வேதனையை விவரிக்க வார்த்தை ஏது?

3 மாத சிறைவாசத்துக்குப் பின் மீதமிருந்த 7 பெண்களும், இதர ஆண்களும் மதுரைச் சிறையிலிருந்து விடுதலையாகி ரயில் மூலம் திண்டுக்கல் வந்தனர். அவர்களை வரவேற்க தொழிலாளிகள் ரயிலடியில் காத்திருந்தனர். அதில் ஒருவன் அம்மணியம்மாளின் 4 வயது மகன் சிறுவன் ரெங்கர்!. ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த தன் தாயை ஆவலுடன் ஓடிவந்து அணைத்த ரெங்கர் தாயின் கரங்களிலேயே உயிர்நீத்தான். அம்மணியம்மாள் அழுது புரண்டார். ஊர்வலத்தினர் அனைவரும் கண்ணீர் சிந்தினர். சிறை மீண்டவர்களுக்கான வரவேற்பு ஊர்வலம் தாயன்பிற்காக ஏங்கி நின்ற இளஞ்சிறுவன் ரெங்கரின் சவ ஊர்வலமாக மாறியது.

தோல் பதனிடும் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் தாங்க வேண்டியிருந்த வேதனைகளும், செய்த தியாகங்களும் ஏ.பி.யின் மனதை உருக்கின. அந்தப் பாட்டாளி மக்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிப்பதுதான் அந்த மக்களுக்குச் செய்யும் நன்றிக்கடன் என்று அவர் உறுதியாக நம்பினார். அதுவரை அவ்வப்போது தந்தையுடன் பெயரளவிற்கு நீதிமன்றத்துக்குச் சென்று வந்த ஏ.பி. வழக்கறிஞர் பணியை முற்றிலுமகத் துறந்து விட்டார். தன்னுடைய வழக்கறிஞர் உடைகளைத் தூக்கியெறிந்து விட்டார்.

தராள மனப்பான்மையும், மிதவாதக் கண்ணோட்டமும் கொண்டிருந்த ஏ.பி.யின் தந்தையார், தனது மகனுடைய முடிவிற்குக் குறுக்கே நிற்கவில்லை. அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கும் வயதாகிக் கொண்டு வந்ததால், தனியாக நீதிமன்றத்துக்குச் சென்று வழக்காட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, படிப்படியாக நீதிமன்றத்துக்குப் போவதையே அவரும் நிறுத்திவிட்டார்.

1940ம் ஆண்டுகளின் நடுப்பகுதி, திண்டுக்கல் உள்ளிட்ட அன்றைய மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், அதனுடைய வெகுஜன அமைப்புக்களும் வலுமிக்க சக்தியாகப் பரிணமித்ததைக் கண்ட ஆண்டுகளாகும்.

1943ம் ஆண்டில் தோன்றிய மதுரைப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருந்த சங்கமாக வீறுடன் திகழ்ந்தது. தீரமிக்க போராட்டங்கள் பலவற்றை அது நடத்தியது. பி.ராமமூர்த்தி, அந்தச் சங்கத்தின் தலைவராகவும், எஸ்.கிருஷ்ணசாமி அதன் செயலாளராகவும் செயல்பட்டு வந்தனர். ஏ.பி. அந்தச் சங்கத்தின் பொருளாளராக இருந்தார்.

அதைத் தொடர்ந்து மதுரை மோட்டார் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதுவும் வெகு விரைவிலேயே பலமான அமைப்பு என்ற நிலையை எட்டியது. ஏ.பி. அந்த அமைப்பின் தலைவராகச் செயல்பட்டார்.

அதே சமயத்தில் மதுரை, உத்தமபாளையம், வேடசந்தூர் தாலுக்காக்களில் விவசாயிகள் சங்கம் வலுவான அமைப்பாக உருவாகி வந்தது. பழனி தாலுக்காவில் பெரிய ஜமீன் எஸ்டேட்டுகளுக்கெதிராக குத்தகை விவசாயிகள் பலமான போராட்டங்கலை நடத்தி வந்தன.

மதுரை சதி வழக்கு

அதே காலகட்டத்தில் இந்தியா முழுவதிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போர்க்குணமிக்க அமைப்பாக உருவாகி வந்தது. வங்காளத்தில் மாபெரும் ‘தேபாகா போராட்டம்’, ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் விவசாயிகளின் ஆயுதமேந்திய போராட்டம், கேரளத்தில் புன்னப்புரா-வயலார் பகுதியில் சர்.சி.பி.ராமசாமி அய்யரின் திவான் ஆட்சிக்கெதிராக விவசாயிகளின் தீரமிக்க போராட்டம், பம்பாய் ஜவுளித் தொழிலாளர்கள் போராட்டம், தஞ்சைத் தரணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் விவசாயத் தொழிலாளிகளின், விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டம், கோவையிலும், மதுரையிலும் மில் தொழிலாளிகள் போராட்டம், தென்னிந்திய ரயில்வே தொழிலாளிகளின் மகத்தான ஒன்றுபட்ட போராட்டம் ஆகிய நடவடிக்கைகளின் மைய இயக்குசக்க்தியாக, தலைமை தாங்கி வழிநடத்தும் சக்தியாக, தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருப்பெற்று வந்த நேரம் அது!.

மதுரை மாவட்டத்தில், குறிப்பாக மதுரை நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பலமடைந்து வருவதையும், பஞ்சாலைத் தொழிலாளர்களிடையே அது வலுவான அமைப்பாக உருப்பெற்று வருவதையும் கண்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் 1946ம் ஆண்டு டிசம்பர் மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஒரு பெரும் தாக்குதலைத் தொடுத்தது. மதுரையிலும், சென்னையிலும் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் தலைவர்களைக் கைது செய்து, “மதுரை சதி வழக்கு” என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு சதிவழக்கை உருவாக்கியது.

பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமணியம், எஸ்.கிருஷ்ணசாமி, எம்.எஸ்.எஸ்.மணி, ஆர்.கே.சாந்துலால், தியாகி மணவாளன், ப.மாணிக்கம், பி.பாலசந்திரமேனன், நாராயண கொத்தனார் ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களையும், மதுரை முன்னாள் மேயர் எஸ்.முத்து போன்றோரையும் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோரை இந்தச் சதிவழக்கில் சேர்த்தது.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன? கம்யூனிஸ்டுகள் தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காக பலாத்காரத்தை ஏவி விட்டார்கள். மில் நிர்வாகத்தை ஆதரிக்கும் எம்.எல்.யூ. சங்கத்தைச் சேர்ந்தவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள், அந்த சங்கத்திற்கு தீ வைத்தார்கள், இத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று குற்றஞ்சாட்டினார்கள்.

முதலில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வழக்கின் இறுதி விசாரணையின்போது, பி.ராமமூர்த்தி உள்ளிட்டு 32 பேர் மீது குற்றப்பத்திரிகை சுமத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சார்பில் பி.ராமமூர்த்தி வாதாடினார். வழக்குக்கான குறிப்புக்களை தயாரிப்பதில் அவருக்கு கே.டி.கே.தங்கமணியும், ஏ.பி.யும் உதவி செய்தனர்.

ஆனால் எம்.ஆர்.வெங்கடராமன், பி.பாலசந்திரமேனன், ஏ.பாலசுப்ரமணியம் ஆகியோர் மீது குற்றஞ்சுமத்த வழியில்லாததைக் கண்ட அரசாங்கம், இம்மூவரையும் பாதுகாப்புச் சட்டத்தின்படிக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தது. அச்சமயத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், என்.கே.கிருஷ்ணன் ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களும் பாதுகாப்புச் சட்டப்படி அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மதுரை சதிவழக்கில் 1947 ஆகஸ்ட் 14ம் தேதி, அதாவது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒருநாள் முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லையென்று கூறி பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, என்.சங்கரய்யா உள்ளிட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர் சிறையிலடைக்கப்பட்டிருந்த ஏ.பி.யும், எம்.ஆர்.வெங்கட்ராமனும், பாலசந்திர மேனனும் சுதந்திர தினத்தன்று விடுதலையாயினர்.

மீண்டும் சிறைவாசம்

பல மாதங்களுக்குப் பிறகு விடுதலையான ஏ.பி. விரைவிலேயே மீண்டும் விரைவிலேயே சிறை செல்ல வேண்டியிருந்தது. சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த காங்கிரஸ் கட்சியும், அதன் அரசாங்கமும், வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒழித்துவிட வேண்டுமென்பதற்காக 1948ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. அதன் தலைவர்களை விசாரணையின்றி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தது. கட்சி அலுவலகங்களையும், இதர வெகுஜன அலுவலகங்களையும் மூடி சீல்வைத்தது. இந்தியா முழுவதிலும் பல்லாயிரக்கணக்கானோரைக் கைது செய்து கடும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.   ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்களும், ஊழியர்களும் தலைமறைவாயினர்.

ஏ.பி., திண்டுக்கல் நகரில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம், மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டன. சங்கத்திலிருந்த ஆவணங்களையும், இதர பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். வி.மதனகோபால், என்.வரதராஜன் போன்ற தலைவர்கள் தலைமறைவாயினர்.

கம்யூனிஸ்ட் பாதுகாப்புக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்து சேலம், கடலூர், வேலூர், மதுரை மத்திய சிறைச்சாலைகளில் கொடூரமான ஒடுக்குமுறை ஏவிவிடப்பட்டது. ஏ.பி. இருந்த வேலூர் மத்தியச் சிறையில் கம்யூனிஸ்ட் கைதிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கே.ரமணி, அனந்தன் நம்பியார், கே.டி.கே.தங்கமணி, ஆர்.ராமராஜ், வி.பி.சிந்தன் போன்ற தலைவர்கள் குற்றுயிராகுமளவுக்கு அடித்து நொறுக்கப்பட்டனர். ஏ.பி.யும் இதர கம்யூனிஸ்ட் தலைவர்களும் பலத்த தடியடிக்கு ஆளாக வேண்டியிருந்தது.

அதேபோல் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் பாதுகாப்புக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த கே.பி.ஜானகியம்மாள், நெல்லிக்குப்பம் ஷாஜாதி, சென்னை என்.எஸ்.ருக்மணி அம்மாள் போன்ற பல தலைவர்களும் தாக்குதலுக்கு ஆளாயினர்.

இவ்விரு சிறைகளிலுமிருந்த கம்யூனிஸ்ட் காவல் கைதிகள், தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக பல நாட்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இவை அனைத்திலும் ஏ.பி. பங்கு கொண்டார்.

பல மாத சிறைவாசத்துக்குப் பின், தன்னை விடுதலை சேய்யக்கோரி ஏ.பி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஹிபையஸ் கார்பஸ்’ (ஆட்கொணர்வு) மனுவைத் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமும் அதை ஏற்று, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த ஏ.பி., மீண்டும் போலீசாரால் கைது செய்யப்படக்கூடிய ஆபத்து இருந்ததால், தன்னுடைய பெட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். தலைமறைவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சித் தலைமையுடன் தொடர்பு கொண்டார்.

ஏ.பி. திண்டுக்கல்லுக்குச் செல்ல வேண்டாமென்றும், உடனே தலைமறைவாகி சென்னைக்குச் செல்ல வேண்டுமென்றும் கட்சி கட்டளையிட்டது. ஏ.பி.யும் அவ்வாறே செய்தார்.

திண்டுக்கல்லிலிருந்த ஏ.பி.யின் தந்தையார், இனியும் தான் திண்டுக்கல்லிலிருக்க வேண்டிய அவசியமில்லையென்று கருதினார். இதுவரை ஏ.பி.க்காகவேதான் அவர் திண்டுக்கல்லில் தங்கியிருந்தார். அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால், தன்னுடைய சொந்த கிராமமான அகரமாங்குடிக்குப் போவதென்று முடிவு செய்தார். திண்டுக்கல் நகரிலிருந்த தனது சொந்த வீட்டை விற்று விட்டுத் தனது பூர்விக கிராமத்திற்குத் திரும்பிச் சென்றார்.

இதற்குப் பின்னர், ஏ.பி. திண்டுக்கல் வந்த போதெல்லாம், கட்சி அலுவலகத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டார்.

செங்கொடிக் கிழங்கு

1948-50ம் ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தன் வரலாற்றில் முன்னெப்பொழுதும் கண்டிராத கொடிய அடக்குமுறையை சந்தித்த காலகட்டமாகும். கம்யூனிஸ்டுகள் என்று சொன்னாலே, சிறையிலடை, சுட்டுத்தள்ளு என்று காங்கிரஸ் அரசாங்கம் நரவேட்டையாடிய காலம் அது.

சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏ.கே.கோபாலனும், எம்.ஆர்.வெங்கட்ராமனும் மயிரிழையில் உயிர் தப்பினர். வேலூர் சிறையில் மதுரை ஐ.வி.சுப்பையா உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். மதுரையில் மாரி, மணவாளன், தில்லைவனம் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாலு மதுரை சிறையில் தூக்கிலிடப்பட்டார். தஞ்சைத் தரணியில் இரணியன், சிவராமன், ஆறுமுகம், ராஜூ, நடேசன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தன்சை விவசாயிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் களப்பால் குப்பு, திருச்சி சிறையில் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.

சென்னை, மதுரை, கடலூர் சிறைச்சாலைகளில் கம்யூனிஸ்ட் கைதிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. 28 நாள் உண்ணாவிரதமிருந்து சென்னை சிறையில் அன்னை லட்சுமி உயிர் நீத்தார். நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் தலைவர்கள், ஊழியர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைச்சாலைகளில் தள்ளப்பட்டனர். தமிழ்நாடு தொழிற்சங்கக் காங்கிரஸ் (டி.என்.டி.யூ.சி) உள்ளிட்டு 19 தொழிற்சங்க அமைப்புக்கள் சட்ட விரோதமானவை என்று அறிவிக்கப்பட்டன. திண்டுக்கல் நகரில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகுஜன அமைப்புக்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதற்காக, மிருகத்தனமான போலீஸ் ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த அடக்குமுறையைப் பயன்படுத்திக் கொண்டு, தோல்பதனிடும் தொழிலாளர் இயக்கத்தையும் அழித்து விட அந்தத் தொழிலை நடத்தி வந்த முதலாளிகள் திட்டமிட்டனர். அந்தத் தொழிலாளிகள் அந்த ஒடுக்குமுறையையும் தாங்கி வாழ வேண்டியிருந்தது. கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வெறி எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுவது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். அச்சமயத்தில், திண்டுக்கல் நகரிலிருந்த தேவசகாயம் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுங்கோன்மை என்பதன் மொத்த உருவமாக இருந்தார். பொதுமக்களை அடித்து உதைப்பது, கடைவீதியில் பய பீதியை ஏற்படுத்துவது என்பது இவருடைய சிறப்பு அம்சங்களில் ஒன்று.

இந்த அதிகாரி ஒருநாள் கடைத் தெருப்பக்கம் வந்த பொழுது ஒரு விவசாயி தள்ளுவண்டியில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். திண்டுக்கல், வேடசந்தூர் தாலுகாக்களில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்றழைக்கப்படும் சீனிக் கிழங்கை செங்கிழங்கு கொடி என்று மக்கள் கூறுவதுண்டு. அது பழக்கத்தில் ‘செங்கொடிக் கிழங்கு’ என்று கூறப்படுவதுண்டு. எனவே அதை விற்றுக்கொண்டிருந்த விவசாயி, “செங்கொடிக்கிழங்கு, செங்கொடிக்கிழங்கு” என்று கூவி விற்றுக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே விஷமாகக் கருதி வந்த இன்ஸ்பெக்டர் தேவசகாயத்துக்கு, ‘செங்கொடி’ என்ற பெயரைக் கேட்டதுமே வெறி பிடித்து விட்டது. ‘என்னடா, செங்கொடிக் கிழங்கு’ என்று கத்தியபடி அந்த விவசாயியைத் தடியால் அடித்து விரட்டினார்.

கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வெறி எந்த அளவுக்கு தலைவிரித்தாடியது என்பதற்கு மற்றொரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.

நெஞ்சம் பதறும் நிகழ்ச்சி

போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாகிப்போன கம்யூனிஸ்ட் தலைவர்கள், மிகுந்த சிரமங்களுக்கிடையே பணியாற்ற வேண்டியிருந்தது. அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட்டு வந்ததால் அவர்கள் பகலில் நடமாட முடியாத நிலை இருந்தது. இவ்வளவு இடர்பாடுகளையும் ஆபத்துக்களையும் சமாளித்துத்தான் தலைமறைவாக இருந்தவர்கள் செயல்பட வேண்டியிருந்தது. தலைமறைவானவர்களைப் பிடிப்பதற்காக போலீஸ் வெறித்தனமான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது.

இந்த நிலையில்தான் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி மாலையில், தலைமறைவாகியிருந்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.மதனகோபால், திண்டுக்கல் நகருக்கு வெளிப்புறத்தில் கைது செய்யப்பட்டார். இன்றிரவு திண்டுக்கல் நகர போலீஸ் ஸ்டேஷனில் கைவிலங்கிடப்பட்டு அவர் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டு ஏராளமானோர் அவரைக் காண்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். கொடுமைகள் புரிவதில் நிகரற்ற சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தேவசகாயம் கூட்டத்தினரை அடித்து விரட்டினார். பூட்ஸ் காலால் மதனகோபாலை மாறி மாறி மிதித்தார். “பாலசுப்ரமணியணியம் எங்கே இருக்கிறார்?”, “நீ எங்கே தங்கியிருந்தாய்?” என்று கேள்வி மதனகோபாலை மாறி மாறி அடித்தார்.

அடுத்த நாள் காலையில் நீளமான சங்கிலியில் மதனகோபாலைக் கட்டி, ரிசர்வ் போலீஸ் சுற்றி நிற்க, அவரை நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்றார். போகும் வழியெல்லாம் பெண்களும் குழந்தைகளும் கூடி நின்று கண்கலங்கியவாறு இந்தக் கோரக் காட்சியைக் கண்டனர். அவர்களையும் போலீஸ் அடித்து விரட்டியது.

நீதிபதி முன் மதனகோபாலை நிறுத்திய போலீஸ், அவரை விசாரிப்பதற்காக போலீஸ் காவலில் மேலும் இரண்டு நாட்கள் வைக்க அனுமதி கோரிப் பெற்றது. பின்னர் பழையபடி தெரு வழியே அவரை இழுத்து வந்தது. “கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க”, ”போலீஸ் அடக்குமுறை ஒழிக”,”நேரு அரசாங்கம் ஒழிக” என்று குரல் கொடுத்த மதனகோபாலை ஈவிரக்கமின்றி போலீஸ் அடித்து அவர் மண்டையை உடைத்தது. அவருடைய மண்டையிலிருந்து ரத்தம் வழிந்தோடி அவர் அணிந்திருந்த பனியனையே ரத்தச் சிவப்பாக்கியது. ஜனநாயகவாதிகள் வெட்கித் தலைகுனிய வேண்டிய மற்றொரு நிகழ்ச்சியும் அப்பொழுது நடந்தது.

தோல் பதனிடும் தொழில் அதிபர்களின் கையாளும், தொழிற்சங்க விரோதியுமான மாரிமுத்து என்பவனின் குடும்பத்தைச் சேர்ந்த பேயாடி, அருமைநாதன் மற்றும் சந்தானம் ஆகிய மூவரின் கைகளில் செருப்புக்களைக் கொடுத்து போலீசார் மதனகோபாலை அடிக்கும்படி கூறினர். அந்த வெறியர்களும் கைவிலங்கிடப்பட்டிருந்த மதனகோபாலின் தலையிலும், முகத்திலும், கழுத்திலும் தங்கள் மிருக பலம் முழுவதையும் கொண்டு செருப்பால் அடித்தனர். தெருத்தெருவாக மதனகோபாலை இழுத்து வரும் பொழுது ஒரு செருப்பை வாயில் கவ்வும்படி அவரை அடிதனர். அவர் அவ்வாறு செய்ய மறுத்து வாயை இறுக மூடிக் கொண்டார். வெறி பிடித்த போலீஸ், அவருடைய வாயைத் திறப்பதற்காக அவருடைய தாடையில் ஓங்கிக் குத்தினர். அவருடைய பல் உடைந்து ரத்தம் கொட்டியபோது அவர் வாயைத் திறக்க மறுத்துவிட்டார். தோல் பதனிடும் தொழிலாளிகள் வசிக்கும் அந்தோணியார் தெரு, சவேரியார் பாளையம், தோமையார் தெரு, பேகம்பூர் பகுதிகளுக்கு அவரை செருப்பால் அடித்தபடியே இழுத்துச் சென்றனர். பேயாடி குடும்பத்துப் பெண்களை வைத்து விளக்குமாறால் அடிக்கும்படிச் செய்தனர். தோல் பதனிடும் தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சியிலோ, தொழிற்சங்கத்திலோ சேரக்கூடாதென்று எச்சரிக்கை செய்வதர்காக போலீசார் இவ்வாறு காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டனர்.

மதனகோபாலை மீண்டும் கடைவீதிக்கு இழுத்து வந்து அடித்தனர். உடலெங்கும் ரத்தம் பெருக்கோடும் நிலையில் அவர் தெருவில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அதன்பின் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றனர். அங்கேயும் பூட்ஸ் காலால் அவர் மிதிக்கப்பட்டார். இறுதியில் 14 வழக்குகளை அவர் மீது சுமத்தி மதுரை சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பேய்களின் ஆட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தொழிற்சங்கங்களும் தடை செய்யப்பட்டு, கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டதை தங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக தோல் ஷாப் முதலாளிகளும், கத்தோலிக்க திருச்சபையினரும் நினைத்தனர். தோல் பதனிடும் தொழிலாளிகள் மீதும், அவர்களது குடும்பத்தினர் மீதும் சமுக, பொருளாதார ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. தொழிலாளிகள் போராடிப் பெற்ற உரிமைகள் மீதும் கைவைப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையில் கிறிஸ்துவ தொழிலாளிகள் விசாரிக்கப்படுவார்கள். அந்தத் தொழிலாளி கம்யூனிஸ்டா என்று விசாரிக்கப்படுவார். சங்கத்திற்கு சந்தா கொடுத்தாரா என்று கேட்கப்படுவார். ஆம் என்று பதில் கூறினால், அவருடைய குடும்பத்தில் நடைபெற வேண்டிய திருமணத்திற்கு பாதிரியார் தாலி தர மாட்டார். கிறிஸ்துவ தேவாலயத்தில் தாலி கட்டவில்லையென்றால் அந்தத் தொழிலாளி மஸ்வாதி (மதப்பிரஷ்டம் செய்யப்பட்டவர்) என்று பிரகடனம் செய்யப்படுவார். ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவரை ‘மஸ்வாதி’ என்று திருச்சபை வர்ணிக்குமானால், இதரர்கள் அவரைப் புறக்கணிப்புச் செய்வார்கள். அந்தத் தொழிலாளி குடும்பத்தில் யாராவது இறந்து போனால் கல்லறையில் புதைக்க அனுமதி தரப்படமாட்டாது. திருச்சபையின் அனுமதி இல்லையென்றால், கல்லறையின் கதவு திறக்கப்படமாட்டாது. குழிதோண்ட ஜெபிக்கப்படமாட்டாது. மேலும் அந்தத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு ‘ஞானஸ்நானம்’ தரப்படமாட்டாது. கத்தோலிக்க திருச்சபை இத்தோடு நிற்கவில்லை. கம்யூனிஸ்டுகளை நிந்தனை செய்வதற்காக மற்றொரு நிகழ்ச்சியையும் பயன்படுத்தியது.

திண்டுக்கல் நகரில் ஆண்டுதோறும் கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, பாஸ்க் பண்டிகை விழா நடைபெறும். இது பாவனச் சாவடி என்ற இடத்தில் நடைபெறும். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்கள் கூடும் அந்த விழாவில் நாடங்கள் நடத்தப்படுவதுண்டு. அந்த நாடக நிகழ்ச்சிகளுக்கு இடையில் திடீரென்று கருப்பு கௌன் அணிந்த ஒரு உருவம் பேய் போல வேடமிட்டு அரங்கில் தோன்றும். அதன் முதுகில் அரிவாள், சுத்தியல் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அது பெருங்கூச்சலிட்டுப் பேசும்;

”நான் தான் பாலசுப்ரமணியம் பேய்! தொழிலாளிகளை வேலைநிறுத்தம் செய்யத் தூண்டிவிட்டு நான் மட்டும் போலீசாரிடமிருந்து தப்பித்துக் கொள்ள தலைமறைவாகி விட்டேன். ஹா! ஹா!” என்று கூச்சலிட்டு அது மறையும். அதன்பின் மற்றொரு பேய் உருவம் தோன்றும். “நான்தான் மதனகோபால் பேய்” என்று கூறி முதலில் சொல்லப்பட்ட வாசகங்களையே திருப்பிக் கூறும். அதன்பின் “தங்கராஜ் பேய்” தோன்றும். அதுவும் கூச்சலிட்டு மறையும்.

பயங்கரமான அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டிருந்த கத்தோலிக்க தொழிலாளிகள் இந்த சமூக ஒடுக்குமுறைகளையும், நிர்ப்பந்தங்களையும் தற்காலிகமாக சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதன் பொருட்டு சில யுத்திகளையும் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.

தலைமறைவிலிருந்து மீண்டு

1950ம் ஆண்டின் நடுப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு கருத்து வேறுபாடு உருவாயிற்று. 1948ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் உருவாக்கிய கொள்கை வழியானது தவறானது, அதை மாற்ற வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு கட்சியில் பலமாக எழுந்தது. எனவே தலைமறைவாகச் செயல்பட்டு வந்த கட்சி ஊழியர்களிடையே இதுகுறித்து முறையான விவாதம் நடத்த வேண்டியிருந்தது. இந்தப் பணியை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. சிறிது பிசகு ஏற்பட்டாலும் கூட அது கட்சிக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.

தமிழகத்தில் இந்தப் பணியை ஏ.பி. திறம்படச் செய்தார். தன்னைப் போலவே தலைமறைவாக இருந்த சுப்ரமணிய சர்மாவுடனும், பாலச்சந்திர மேனனுடனும் சேர்ந்து கட்சிக் கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து ஒரு ஆவணம் தயாரித்து விவாதத்திற்கு அனுப்பினார். சேர–சோழ–பாண்டியர் ஆவணம் என்று அது அழைக்கப்பட்டது. அத்துடன் பம்பாயில் தலைமறைவாக இருந்த பி.ராமமூர்த்தி தமிழகத்துக்கு வந்தால்தான் தமிழகத்தில் கட்சியில் ஒற்றுமையை உருவாக்க முடியுமென்று ஏ.பி. வாதாடியதோடு அதில் வெற்றியும் பெற்றார். பி.ஆர். தமிழகத்துக்கு வந்து கட்சியைப் புனரமைக்கும் பணியில் ஏ.பி.யின் உதவியுடன் இறங்கினார்.

அச்சமயத்தில் பி.ஆர்.ஐக் கண்டுபிடித்துக் கொடுத்தாலோ, கைது செய்தாலோ 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படுமென்று காங்கிரஸ் அரசாங்கம் அறிவித்திருந்தது. அத்துடன் ஏ.பி. மீதும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், பி.ஆருக்கு ஒரு கால் ஊனமாகியிருந்ததால், அவர் நடந்து செல்லும் பொழுது யாரும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் ஆபத்து இருந்தது. எனவே, இருட்டிய பிறகு, ஏ.பி. தனது சைக்கிளில் பின்புறத்தில் பி.ஆரை அமர வைத்து கட்சித் தோழர்களை சந்திக்க அழைத்துச் செல்வார். நள்ளிரவில் தங்களுடைய இருப்பிடத்துக்குக் கொண்டு வந்துவிடுவார். இந்தப் பணி பல நாட்கள் தொடர்ந்தது.

1951ம் ஆண்டு, கடலூர் சிறையில் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், தன்னைக் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானதென்று கூறி சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். அவருடைய வாதத்தை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் புதிய அரசியல் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், அதற்கு முந்தைய குற்றத்திருத்த சட்டம் செல்லாது என்று நீதிமன்றம தீர்ப்பளித்தது. ஏ.கே.கோபாலனையும் விடுதலை செய்தது.

ஏ.கே.கோபாலன் விடுதலையைத் தொடர்ந்து இதர கம்யூனிஸ்ட் கைதிகள் நீதிமன்றத்தை அணுகத் தொடங்கினர். விடுதலை பெறத் தொடங்கினர். எனவே வேறு வழியின்றி காங்கிரஸ் அரசாங்கம் கம்யூனிஸ்ட் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கட்சி அலுவலகங்களோ அல்லது தொழிற்சங்க அலுவலகங்களோ சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை இருந்தது. போலீஸ் கெடுபிடியும், மிரட்டலும் தொடர்ந்து நீடித்து வந்தது. ஏ.பி. உள்ளிட்டு தலைமறைவாக இருந்த பல தலைவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு ரத்து செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலைமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது. அதற்காக ஒரு திட்டமும் தீட்டியது. அதன்படி தமிழகத் தொழிலாளி வர்க்கத்தின் முதுபெரும் தலைவர் வி.சர்க்கரைச் செட்டியாரும், ப.ஜீவானந்தத்தின் துணைவியார் பத்மாவதியும் தமிழகம் முழுதும் சுற்றுப்பிரயாணம் செய்தனர். மூடி சீல் வைக்கப்பட்டிருந்த தொழிற்சங்க அலுவலகங்களின் சாவிகளை போலீசிடமிருந்து பெற்றுத் திறந்து வைத்தனர். தொழிலாளிகளிடையே நம்பிக்கையை உருவாக்கி பய உணார்வைக் குறைத்தனர். பொன்மலை ரயில்வே தொழிற்சங்க அலுவலகத்தித் திறந்து வைத்த பின் இவ்விருவரும் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அங்கே வந்து, ‘திண்டுக்கல் மத்திய தொழிற்சங்க கவுன்சில்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினர். தொழிற்சங்க செயல்பாட்டைத் துவக்கி வைத்தனர். இவ்வாறு அவர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று உத்வேகமூட்டினர்.

இதைத் தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் நடத்துவதென்று கட்சி முடிவு செய்தது. ஏ.பி. திண்டுக்கல்லுக்குச் சென்று கட்சிப் பணிகளை சீரமைப்பதென்றும், பொதுக்கூட்டத்தில் பேசுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. சில நாட்கள் கழித்து ஒரு பொதுக் கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தக் கூட்டம் எவ்வாறு நடைபெற்றது என்பதை, ஏ.பி.யின் சக தோழரும், திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஏ.தங்கராஜன் விவரிக்கிறார்;

”1951ம் வருடம் ஜூன் மாதம் காந்தி மைதானத்தில் ஏ.பி. பேசுகிறார் என்று அறிவிப்பு செய்தோம். மீண்டும் அடக்குமுறை துவங்கியது. அறிவிப்புத் தட்டிகளை போலீசார் மறுநாள் அகற்றிவிட்டனர். அனுமதி கேட்கச் சென்ற தோழர்களும், பிரச்சாரம் செய்யச் சென்ற தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நோட்டீஸ் அடிக்க முடியவில்லை. இந்த நிலையிலும், மின்சாரம் இல்லாமல், பெட்ரோமாக்ஸ் லைட், பேட்டரி செட் மைக் வைத்து இரவு 7 மணிக்குக் கூட்டம் துவங்கியது. காந்தி மைதானத்தைச் சுற்றி ஆயிரம் பேருக்கு மேல் வேடிக்கை பார்க்க வந்தனர். ஏ.பி.யுடன் நானும், தோழர் சுப்ரமணியமும் மைதானத்திற்குள் வந்து இறங்கினோம். எங்களைத் தொடர்ந்து 200 பேர் வந்தனர். அவர்களில் சீருடை அணியாத போலீசார் 50 பேர் இருந்தனர்.

அரை மணி நேரம் கடந்த பின் கூட்டத்திற்கு கருப்பையா தலைமை வகிப்பார் என அறிவிப்பு செய்தேன். நகரின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தேவசகாயம் என்ற ஒரு முரடர் வண்டியிலிருந்து குதித்தார். மேடையருகே அமர்ந்திருந்த போலீசார் எழுந்து ஓட கூட்டமும் கலைந்து ஓடியது. இறுதியில் மேடையருகே மிஞ்சி நின்றது 15 பேர்தான். வேனிலிருந்து குதித்து ஓடிவந்த அந்த போலீஸ் அதிகாரி நேராக ஏ.பி.ஐ நோக்கி வர, நாங்கள் ஏ.பி.ஐச் சுற்றி நின்றோம்.

”எங்களை விலக்கிவிட்டு, நெஞ்சை நிமிர்த்தி முன்னேறிய ஏ.பி.ஐப் பார்த்து “வந்தவன் யாரடா” என்று போலீஸ் அதிகாரி உறும, “நான்தாண்டா ஏ.பி.” என்று முழங்கிய ஏ.பி. மீது பாய்ந்தார். “உனக்கு என்ன சண்டியர் என்ற நினைப்போ, ஒண்டிக்கு ஒண்டியாய் சண்டைக்கு வாடா” என்று கத்தினார். உடனே வேஷ்டியை மடித்துக் கட்டி, சட்டையின் கைப்பகுதிகளை சுருட்டி மேலேற்றி ஏ.பி. வேகமாக முன்னேறினார். இதை எதிர்பாராத அதிகாரி, ஒரு அடி பின் வாங்கி ஏசினார். வார்த்தைகள் தடித்தன. போலீசார் கூட்டத்தை அடித்து விரட்டிக் கலைத்தனர். ஒரு மணி நேரம் நடந்த கோதாப் போராட்டத்துக்குப் பின் போலீஸ் அதிகாரி பின்வாங்க நேர்ந்தது. ஏ.பி.யின் துணிச்சலையும், நெஞ்சுறுதியையும் கண்ட நாங்கள் புதிய உணர்வு பெற்றோம். மைதானத்துக்கு வெளியே அச்சத்துடன் வேடிக்கை பார்த்திருந்த மக்களும் துணிவு பெற்று மைதானத்துக்குத் திரண்டு வர கூட்டம் வெற்றிகரமாக நடந்தது. ஏ.பி. அன்று முதல் தலைமறை வாழ்க்கையை விட்டு வெளியேறினார்”.

பாடுபட்ட சுரூபம்

ஏ.பி. தலைமறைவு வாழ்க்கையிலிருந்து மீண்டு வெளிவந்து செயல்படத் துவங்கியதானது தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு மிகவும் தெம்பூட்டியது. ஆனால் அவர்கள் வசித்து வந்த சவேரியார்புரம், தோமையார்புரம், அந்தோணியார் தெரு பகுதிகளில் போலீஸ் தினமும் வந்து அவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அத்துடன் தோல்ஷாப் முதலாளிகளுடைய குண்டர்களின் தாக்குதல்களையும், கத்தோலிக்க திருச்சபையின் பயமுறுத்தல்களையும் அவர்கள் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருந்தது. எனவே, இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து அவர்களுடைய பய உணர்வைப் போக்கி சங்கத்தையும் கட்சியையும் வலுப்படுத்த வேண்டியது உடனடிக் கடமை என்று ஏ.பி. கருதினார். இந்தப் பணியில் அவருக்கு வி.மதனகோபாலும் உறுதுணையாக இருந்தார்.

இவ்விரு தலைவர்களும் மேலே கூறப்பட்ட மூன்று பகுதிகளிலும் மாறி மாறித் தங்கினார்கள். போலீசார் வந்து மிரட்டும் நேரத்தில் இவ்விரு தலைவர்களும் குறுக்கிட்டு தகராறு செய்தனர். இவ்வாறு இரு நாட்கள் தகராறு செய்தபின் போலீஸ் வந்து மிரட்டுவது நின்றது.

ஏ.பி.யும் இதரத் தலைவர்களும் பகிரங்கமாக வெளிவந்து செயல்படத் துவங்கியதைக் கண்ட தோல்ஷாப் முதலாளிகள் ஆத்திரங் கொண்டனர். கட்சி மற்றும் தொழிற்சங்கம் மீது தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளிகளை பலாத்காரத்தின் மூலம் அடக்கி வந்த அந்த முதலாளிகள், ஏ.பி.ஐ எவ்வாறாவது கொலை செய்துவிடுவது என்று சதித் திட்டம் தீட்டினர். குண்டர்களை ஏவிவிட்டனர். விஷப் பாம்பை ஏ.பி. உறங்கும்போது வீசி எறிந்தனர். ஏ.பி.யும், மதனகோபாலும் இரவு நேரத்தில் திறந்த வெளியில் கட்டில் போட்டு படுத்திருப்பார்கள். அவர்களைச் சுற்றி 10,15 தொழிலாளிகள் இரவு முழுவதும் கையில் தடிகளோடு காவல் காத்தனர். ஏ.பி. எங்கு போனாலும் 10, 15 தொழிலாளிகள் பாதுகாவலர்களாகக் கூடவே செல்வதுண்டு.

இவ்விருவரையும் எவ்வாறேனும் சிறையிலடைக்க வேண்டுமென்பதற்காக ஏ.பி. மீதும், மதனகோபால் மீதும் வழக்கு ஜோடிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்துவிட்டது. கட்சிக்குப் பணக் கஷ்டம் மிகுந்த அந்த நேரத்தில் ஏ.பி. எவ்வாறு செயல்பட்டார் என்பதை எஸ்.ஏ.தங்கராஜன் நினைவு கூர்கிறார்;

”அக்காலத்தில் கட்சிக்கு வீடு எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் பள்ளிவாசல் சந்தில் ஒரு கூரை வீடு 15 ரூபாய் வாடகையில் கிடைத்தது. வசூலிக்கவும் வழியில்லை. வருமானமில்லாத நிலைமை. வாரம் ஒரு நாள் வட்டாரங்களில் அரிசி வசூல் செய்வோம். பிந்திய இரவில் தொழிலாளர் வீடுகளுக்குச் சென்று ஏ.பி. ஒரு வேளை சாப்பிடுவார். அந்த நேரம் ரம்ஜான் தொழுகை நேரம். மாலைத் தொழிகை எப்பொழுது முடியும் என்று காத்திருப்போம். ஒரு புதிய கலையத்தில் சுப்ரமணி என்ற சுருட்டுத் தொழிலாளி நோன்புக் கஞ்சி கொண்டு வந்து தருவார். எங்களை முதலில் குடிக்கச் சொல்லிவிட்டு இறுதியில் ஏ.பி. குடிப்பார். கிட்டத்தட்ட ஏ.பி.யும் காலை நேர காப்பிக்குப் பின் நோன்பு இருந்து முடிப்பது போல் மாலை ஐந்தரை மணிக்கு கஞ்சியால் எங்கள் விரதமும் முடியும். இப்படியாகச் சில மாதங்கள் கழிந்தன”.

கம்யூனிஸ்ட் கட்சி, முதலாளிகளை எதிர்த்து தீவீரமாகப் போராட வேண்டியிருந்த சமயத்திலேயே கத்தோலிக்கப் பாதிரியார்களின் விஷங்கக்கும் கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் முறியடிக்க வேண்டியிருந்தது. ஏழை, எளிய கத்தோலிக்க கிறிஸ்துவ உழைப்பாளி மக்கள் தங்களை வாழ்விக்க வந்த சமூக, பொருளாதார ஒடுக்குமுறையிலிருந்து மீட்க வந்த ரட்சகனாகவே ஏ.பி.யைக் கருதினர். சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்துவை “பாடுபட்ட சுரூபம்” என்றழைப்பது போலவே, தங்களுக்காகப் பாடுபடும் ஏ.பி.ஐயும் “பாடுபட்ட சுரூபம்” என்றே அழைத்தனர். ஏ.பி.யின் சகதோழரும், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினருமான என்.வரதராஜன் நினைவு கூர்கிறார்;

”சாதிய அகந்தை எங்கு தலைதூக்கினாலும், அந்த இடத்தில் அதை எதிர்க்கும் ஆவேச உணர்வுடன் ஏ.பி.யைக் காணலாம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வாதாடுவார். தனது பொதுக்கூட்டப் பேச்சுக்களிலும், திருமண விழா பேச்சுக்களிலும் சாதிய சடங்குகளை – பெண்ணடிமைத்தனத்தைச் சாடுவார். திண்டுக்கல் ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்களுக்கும் – கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பல சர்ச்சைகள் நடந்த காலம் என்று அன்றைய காலத்தை வர்ணிக்கலாம்.

திண்டுக்கல்லில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ மக்கள் தோழர் ஏ.பி.யை ஏற்றுக் கொண்டார்கள். “மதத்தை அழிப்பவர்கள்”, “பாதிரிகளை கொலை செய்பவர்கள்” என ஞாயிற்றுக் கிழமை தோறும் சர்ச்சுகளில் பாதிரிமார்கள் விஷம் கக்கும் பிரசங்கங்கள் செய்வர். தேர்தல் காலங்களில் இந்தப் பிரச்சாரம் கூடுதலாக நடைபெறும். இருப்பினும், அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் தோழர் ஏ.பி. அவர்களை “பாடுபட்ட சுரூபம்” என்று கூறி ஏசுவுக்கு சமமாக மதித்து பக்தியுடன் நேசித்தார்கள். அதன் விளைவாக, மேற்கூறியவாறு பாதிரிமார்களின் தவறான பிரச்சாரங்கள் நடைபெறும் காலங்களில் சர்ச்சுகளுக்குப் போவதையே உழைப்பாளி மக்கள் தவிர்த்து வந்தார்கள்.”

1952ம் ஆண்டில் இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஏ.பி.யும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வி.மதனகோபாலும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்தது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. திண்டுக்கல் நகரில் மாரியம்மன் கோவில் மைதானத்தில் ஏ.பி.ஐ ஆதரித்து ஒரு பெரும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

பெரியார் ஈ.வெ.ரா. பேசுவதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் கட்சி நிலைபாடுகளை விளக்கி ஏ.பி. பேசினார். தேசிய இனப்பிரச்சனை குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணோட்டத்தை ஏ.பி. விவரித்துக் கூறினார். ஏ.பி. பேசுவதை உன்னிப்பாகக் கேட்ட பெரியார், தனது உரையில், “தோழர் பாலசுப்ரமணியம் பேசியதுதான் இந்திய கம்யூனிஸ்டுகளின் கொள்கை என்றால் நான் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கத் தயார்” என்று பேசினார்.

ஆனால் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே பெரியார் அவர்கள் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு காமராஜரை ஆதரிக்கத் தொடங்கினார்.

அந்தத் தேர்தலில் ஏ.பி. தோல்வியுற்றார். ஆனால் வேடசந்தூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மதனகோபால் வெற்றி பெற்றார். அச்சமயத்தில் சிறையிலடைக்கப்பட்டிருந்த பி.ராமமூர்த்தி, மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கியது.

அதே 1952ம் ஆண்டில் திண்டுக்கல் நகரிலிருந்த சுருட்டுக் கம்பெனிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. மயில்மார்க் சுருட்டுக் கம்பெனி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக ஏ.பி. பெரும் முயற்சிகள் செய்தார்.

திண்டுக்கல் நகரசுத்தித் தொழிலாளர்கள் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கியிருந்தனர். தொழிலாளிகள் தாங்கள் வாங்கிய சம்பளத்தை ‘கையில வாங்கினேன், பையில போடல’ என்ற பாடலைப் போல் அப்படியே கொண்டுபோய் கந்துவட்டிக்காரர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து ஒவ்வொரு வாரமும் வட்டிக்குக் கடன் வாங்குவதுண்டு. ஏ.பி. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். தனக்குத் தெரிந்த அரிசி மண்டிக்காரர் ஒருவரைக் கொண்டு இந்தத் தொழிலாளிகளுக்கு அரிசியைக் கடனாகப் பெற்றுத் தந்தார். சம்பளம் வாங்கியவுடன் தொழிலாளிகள் அரிசிக்கடை பாக்கியைக் கொடுத்து விட வேண்டுமென்று கூறி ஏ.பி. இந்த ஏற்பாட்டைச் செய்தார். இது சில மாதங்கள் மட்டுமே நீடித்தது.

ஏ.பி. படிப்படியாக மாவட்டக் கட்சி வேலைகளிலும், தொழிற்சங்க வேலைகளிலும், மாநில அளவிலான வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்தார். தமிழ்நாடு தொழிற்சங்கக் காங்கிரசின் (டி.என்.டி.யூ.சியின்) நிர்வாகக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை மாவட்டப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் உப-தலைவராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டார். 1952ம் ஆண்டில் தீபாவளி போனஸ் கோரி மதுரை ஹார்வி மில்லிலும், அம்பாசமுத்திரம் ஹார்வி மில்லிலும் இருந்த ஏ.ஐ.டி.யு.சி. சங்கங்களும், தூத்துக்குடி ஹார்வி மில்லில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் இருந்த சங்கமும் முதன் முறையாக கூட்டுப் போராட்டம் நடத்தின.

பல ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு 1952ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விடுதலையாகியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.நல்லசிவன், அச்சமயத்தில் அம்பாசமுத்திரம் ஹார்வி மில் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

1952 முதல் 1956 வரைப்பட்ட காலத்தில், மதுரை மற்றும் அம்பாசமுத்திரம் ஹார்வி மில் பஞ்சாலைத் தொழிலாளர் கட்சியின் சங்கங்களுக்கு ஏ.பி. தலைவராயிருந்தார். நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஏ.பி.யும், நல்லசிவனும் பங்கேற்பதுண்டு.

அத்துடன், மதுரை மோட்டார் தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம் போன்றவற்றின் தலைமைப் பொறுப்புக்கும் ஏ.பி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மேலும், மதுரை மாவட்டத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் ஏ.பி. செயல்பட்டார். உத்தமபாளையம் உசேன்மீர், அந்த அமைப்பின் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

1953ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏ.பி.யின் குடும்பத்தினருக்கு ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஏ.பி.யின் அருமைத் தாயார் ராதாலெட்சுமி அம்மையார் காலமானார்.

1954ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராகவிருந்த என்.சங்கரய்யா, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏ.பி. கட்சியின் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச தோல் கம்பளித் தொழிலாளர் சம்மேளன மாநாடு போலந்து நாட்டின் தலைநகரான வார்ஸா நகரில் நடைபெற்றது. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், அந்த மாநாட்டில் கலந்து கொள்ளத் தனது சார்பாக ஏ.பி.யைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் சென்னை மாநில அரசாங்கம் ஏ.பி.க்கு வெளிநாடு செல்ல அனுமதி தர மறுத்து விட்டது. எவ்விதக் காரணமும் காட்டாமல், மாநாடு முடிந்தபின் 8-7-54ந் தேதியன்று அவருடைய மனுவை நிராகரித்து விட்டது.

இல்லற வாழ்வு துவக்கம்

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏ.பி.யின் திருமணம் நடைபெற்றது. கோவை விவசாயக் கல்லூரியில் ஆராய்ச்சி உதவியாளராகவிருந்த (Research Assistant) செல்வி கிரிஜாவுக்கும், ஏ.பி.க்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. கிரிஜா எம்.எஸ்.ஸி பட்டம் வாங்கியவர். திருமணம் நிச்சயிக்கப்படும் முன்னரே, கிரிஜாவை சந்தித்து தனது அரசியல் பணி குறித்து ஏ.பி. தெளிவுபடுத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்பதுதான் தனது பிரதான கடமையென்றும், குடும்பமென்பது தனக்கு இரண்டாம்பட்ச பொறுப்பு என்றும் ஏ.பி. கூறினார். தான் அடிக்கடி சிறை செல்ல வேண்டியிருக்குமென்றும், கிரிஜாவினுடைய வருவாயில்தான் குடும்பம் நடைபெற வேண்டுமென்றும், தான் கட்சியின் முழுநேர ஊழியராக இருப்பதால் தன்னிடமிருந்து குடும்பச் செலவிற்குப் பணம் எதிர்பார்க்கக் கூடாதென்றும் ஏ.பி. நிபந்தனை விதித்தார். அதேபோல் தன்னுடைய செலவிற்கும் கிரிஜா பணம் தர வேண்டியதில்லை என்றும் ஏ.பி. கூறினார். கிரிஜா இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய குடும்பத்திற்கு உதவ வேண்டிய அவசியம் கிரிஜாவுக்கும் இருந்ததால், இந்த நிபந்தனைகள் அவருக்கு ஏற்புடையதாக இருந்தது. “ஏ.பி. தான் கூறியது போலவே தனது இறுதி நாள் வரை நடந்து கொண்டார். ஒரு போதும் என்னிடம் பணம் கேட்டதில்லை, கணக்கும் கேட்டதில்லை” என்று கிரிஜா நினைவு கூர்கிறார்.

திருமணம் நடைபெறும் முன்னர் ஏ.பி.யின் தந்தையாரையும் கிரிஜா சந்தித்துப் பேசினார். தன் மகனுடைய கட்சிப்பணி குறித்துப் பேசிய அமிர்தலிங்கம் ஒரு அறிவுரையை வழங்கினார்.

”அவன் ஒரு முழு கம்யூனிஸ்ட். நீயோ அரசாங்கப் பணியில் இருக்கிறாய். நீங்கள் இருவரும் ஒருவர் வேலையில் மற்றவர் குறுக்கிடக் கூடாது. அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்” என்று தந்தையார் அறிவுரை நல்கினார்.

ஏ.பி.-கிரிஜா திருமணம் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி சென்னையில் நடைபெற்றது. 1955ம் ஆண்டு இறுதியில் அவர்களது மூத்த மகன் முரளி பிறந்தான்.

உண்ணாவிரதப் போராட்டம்

1959ம் ஆண்டு ஆரம்பத்தில் மதுரை ஹார்வி மில் நிர்வாகம் (இன்று மதுரை கோட்ஸ் மில்) அதன் தொழிலாளர்களில் 656 பேர் உபரி என்றும், அவர்களை வேலைநீக்கம் செய்யப் போவதாகவும் அறிவித்தது. மில் தொழிலாளர்களும், ஏ.பி.யைத் தலைவராகக் கொண்ட மதுரை மில் தொழிலாளர் சங்கமும், இந்த ஆட்குறைப்புத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன. தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் இறங்க வேண்டுமென்று மில் தொழிலாளர் சங்கம் அறைகூவல் விடுத்தது. மார்ச் 18ம் தேதி காலையிலிருந்து மில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் இறங்கினர். மில் நிர்வாகம் கதவடைப்புச் செய்யப் போவதாக அறிவித்தது. அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசின் பிரபல தலைவர்களான பி.ராமமூர்த்தியும், எம்.கல்யாண சுந்தரமும் அன்றைய தமிழக முதலமைச்சர் காமராஜரையும், மாநிலத்தொழில்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமனையும் (இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர்) சந்தித்து இந்தப் பிரச்சனையில் தலையிடும்படி வற்புறுத்தினர். ஆனால் காமராஜரும், ஆர்.வெங்கட்ராமனும் தலையிட மறுத்ததோடு, “ஆட்குறைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உபதேசம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சியைத் தவிர இதர கட்சிகள் அனைத்தும் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அணி திரண்டன. தமிழக அரசாங்கம் இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று கோரி ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வர் காமராஜரிடம் சமர்ப்பித்தார்கள். அவரோ பிடிவாதமாக இருந்தார்.

போராட்டம் 48வது நாளை எட்டிவிட்டது. வேலையின்றி இருந்ததால் தொழிலாளர் குடும்பங்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாயிற்று. சங்கத்தின் தலைவர் ஏ.பி.யும், உபதலைவர் கே.டி.கே.தங்கமணியும் உண்ணாவிரதப் போராட்டம் துவங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. மே 4ம் தேதியன்று இவ்விரு தலைவர்களும் சங்கத்தின் வாசலில் உண்ணாவிரதம் தொடங்கினர்.

காங்கிரஸ் அரசாங்கம் இந்த உண்ணாவிரதத்தைத் தடுக்க பயமுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியது. முதல் நாள் இரவில் மதுரை நகரில் தடை உத்தரவைப் பிறப்பித்தது. உண்ணாவிரதம் நடக்கவிருந்த பந்தலை போலீஸ் பிய்த்தெறிந்தது. ஆனால் வீராவேசமிக்க தொழிலாளிகளின் உறுதியை எத்தகைய மிரட்டல் நடவடிக்கையும் பணிய வைக்க முடியவில்லை. “தடைகள் உடையும், உண்ணாவிரதம் நடக்கும்” என்று ஏ.பி. முழக்கமிட்டார்.

மே 4ம் தேதி காலையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள், ஏ.பி.ஐயும், கே.டி.கே.தங்கமணியையும் கம்யூனிஸ்ட் நகர்க்குழு அலுவலகத்திலிருந்து உணர்ச்சிப்பெருக்குடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். சங்க அலுவலகத்தை வந்தடைந்ததும், எம்.கல்யாணசுந்தரம் உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார்.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இவ்விரு தலைவர்களையும் காண வந்தனர். தலைவர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் குவிந்தன. உண்ணாவிரதமிருந்த தலைவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுமையிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழக அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தம் அதிகரித்தது. இதன் விளைவாக தமிழக அரசாங்கம் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு அரசிடம் பேச்சுவார்த்தை துவங்குமாறு தமிழக அரசிடமிருந்து உண்ணாவிரதமிருந்த தலைவர்களுக்கு தந்தி வந்தது. இதன் விளைவாக உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ம் நாளன்று இவ்விரு தலைவர்களும் வெற்றிகரமாக உண்ணாவிரதத்தை நிறுத்தினர்.

சென்னையில் தொழிலாளர் நல ஆணையர்(லேபர் கமிஷனர்) முன்பு பேச்சுவார்த்தை துவங்கியது. மதுரை மில் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பி.ராமமூர்த்தி கலந்து கொண்டார். 235 தொழிலாளிகளின் வேலை பாதுகாக்கப்பட்டது. போராட்டம் தொடங்கி 65 நாட்கள் கழித்து மில் மீண்டும் திறக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.பி. 1958ம் ஆண்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து எம்.ரத்தினம், கட்சியின் மாவட்டச் செயலாளரானார்.

1950ம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்தே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு கருத்து வேறுபாடு உருவாகத் தொடங்கியது. கட்சியின் உடனடி நடைமுறைக் கொள்கை வழி, நீண்டகால நடைமுறைக் கொள்கை வழி குறித்து ஒரு விவாதம் தீவீரமாக உருவாகத் துவங்கியது. பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையின் கீழிருந்த மத்திய காங்கிரஸ் அரசாங்கம் பின்பற்றும் கொள்கை முற்போக்கான கொள்கை, அது நாட்டை சோஷலிசப் பாதையில் அழைத்துச் செல்லுமென்று ஒரு பகுதியினர் கூறினர். அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, காங்கிரஸ் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அவர்கள் வாதாடினர்.

கட்சியிலிருந்த மற்றொரு பகுதியினர் இந்தக் கருத்தைப் பலமாக எதிர்த்தனர். இந்தியாவின் முதலாளித்துவப் பகுதியினர் வளர்ச்சியடைவதற்கு கன இயந்திரத் தொழில்கள், உருக்கு, மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவை பெரிதும் தேவையாகியுள்ளன. இவற்றை உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்த முதலாளித்துவப் பகுதியினரிடம் கிடையாது. எனவே ஐந்தாண்டு திட்டங்களின் கீழ் இந்தத் தொழில்களை உருவாக்கி, இந்திய முதலாளித்துவப் பகுதியினருக்கு உதவி புரிய நேருவின் மத்திய அரசாங்கம் விரும்புகிறது. இந்த நடவடிக்கையானது இந்தியத் தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்ற போதிலும், அது முதலாளித்துவப் பகுதியினரை, குறிப்பாக ஏகபோக முதலாளித்துவத்தை வளர்ப்பதற்குத்தான் உதவும் என்று இந்தப் பகுதியினர் கருத்துத் தெரிவித்தனர். அத்துடன் மற்றொரு அம்சத்தையும் இந்தப் பகுதியினர் சுட்டிக் காட்டினர். அதாவது, இந்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை மத்திய காங்கிரஸ் அரசாங்கம் எவ்வாறு திரட்டப் போகிறது? சாதாரண, ஏழை, எளிய உழைக்கும் மக்கட்பகுதிகளின் மீது வரிச்சுமை, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்க பளுவைச் சுமத்துவதன் மூலம் இந்த நிதி ஆதாரங்கள் திரட்டப்படப் போகின்றன. அன்னிய நாடுகளிடம் பெருமளவு கடன் வாங்கும் நிலைமை ஏற்படப் போகின்றது என்று இந்தப் பகுதியினர் எச்சரித்தனர். எனவே மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தோடு ஒத்துழைக்க வேண்டுமென்று கூறுவது கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர இலட்சியத்திற்கே குழி பறித்து விடுமென்று இந்தப் பகுதியினர் எச்சரித்தனர்.

ஏ.பி. இந்த இரண்டாவதாகச் சொல்லப்பட்ட கொள்கையை உறுதியாக ஆதரித்து நின்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கொள்கைப் போராட்டத்தில் இந்த நிலைக்கு ஆதரவாக உறுதியாக வாதிட்டார்.

இந்தப் பின்னணியில்தான் 1962ம் ஆண்டில் இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையே எல்லையில் மோதல் ஏற்பட்டது. இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதன் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. நேரு அரசாங்கத்தின் கொள்கை முற்போக்கானது, அதை ஆதரிக்க வேண்டுமென்று கூறிய பகுதியினர், எல்லை மோதலில் இந்திய அரசாங்கம் எடுத்த நிலைதான் சரியானது, சீன அரசாங்கம்தான் தவறு செய்துள்ளது என்று கூறினர். கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த மற்றொரு பகுதியினர் வேறொரு கருத்தை முன்வைத்தனர். 1960ம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நேருவும், சீனப்பிரதமர் சூ-என் -லாயும் பேச்சு வார்த்தைகள் நடத்திய சமயத்தில் இருந்த நிலைகளுக்கு இரு படைகளும் போய்விட வேண்டும். அந்த அடிப்படையில் இருந்து பேச்சு வார்த்தை தொடங்க வெண்டும் என்று இந்தப் பகுதியினர் வலியுறுத்தினர். ஏ.பி.யும் இந்த நிலைபாட்டையே கொண்டிருந்தார். இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசாங்கம் இந்தியா முழுவதிலும் ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்களைக் கைது செய்தது. இவ்வாறு கைதானோர்களில் மிகப் பெரும்பான்மையினர் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட கொள்கை நிலைபாட்டை ஆதரித்தவர்கள். தமிழகத்தில் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமணியம், என்.சங்கரய்யா, வி.பி.சிந்தன், கே.ஆனந்தன் நம்பியார், கே.ரமணி, ஏ.நல்லசிவன், கே.முத்தையா, ஏ.அப்துல் வஹாப், சி.கோவிந்தராஜன், ஆர்.ராமராஜ், ஏ.பி.பழனிச்சாமி, என்.வரதராஜன், ஆர்.உமாநாத், கே.கஜபதி, பாப்பா உமாநாத், கே.பி.ஜானகியம்மாள் உள்ளிட்டு ஏராளமான தலைவர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்திய அரசாங்கம் எடுத்த நிலைபாடுதான் சரியானது என்று கூறிய எம்.கல்யாணசுந்தரம், கே.டி.கே.தங்கமணி, எம்.ரத்தினம் போன்ற தலைவர்களும் இவர்களுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டனர்.

ஏ.பி.கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சில வார காலத்திற்குள், 1963 ஜனவரி மாதத்தில் அவருடைய இரண்டாவது மகன் லட்சுமணன் பிறந்தான். ஒரு மாத காலத்திற்குப்பின், கிரிஜா பாலசுப்ரமணியம், பிறந்த மகனை சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்று தன் கணவரிடம் காண்பித்த பொழுது அவர் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

1963ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஏ.பி.யும், இதர தலைவர்களும் விடுதலையானார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வலுவடைந்து வந்த கருத்து வேறுபாடு, மேலும் தீவீரமடைந்து 1964ம் ஆண்டில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் உயர் அமைப்பான தேசியக் கவுன்சிலிலிருந்து வெளியேறிய 32 உறுப்பினர்கள் ஒரு கொள்கைப் பிரகடனம் செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். ஏ.பி.இந்தப் பிரகடனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முழுமூச்சுடன் பாடுபட்டார்.

அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் கட்சியின் 7வது அகில இந்திய மாநாடு (காங்கிரஸ்) கல்கத்தா நகரில் நடைபெற்றது. அந்த மாநாடு ஒரு புதிய மத்தியக் கமிட்டியைத் தேர்ந்தெடுத்தது. பி.சுந்தரய்யாவை செயலாளராகக் கொண்டிருந்த அந்த மத்தியக் கமிட்டிக்கு ஏ.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தையும், அதன் வளர்ச்சி வேகமாக இருக்கப் போவதையும் கவனித்த லால்பகதூர் சாஸ்திரியின் மத்திய காங்கிரஸ் அரசாங்கம், அதன் மீது தாக்குதல் தொடுக்க முடிவு செய்தது. அதே ஆண்டு டிசம்பர் 29ம் தேதி நள்ளிரவில் இந்தியா முழுவதிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களையும், தலைவர்களின் இல்லங்களையும் சோதனையிட்டு, ஆயிரக்கணக்கான தலைவர்களைக் கைது செய்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தது.

தமிழகத்தில் ஏ.பி.யும் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏ.பி. கைது செய்யப்பட்ட பொழுது தாய்மைப்பேற்றை எதிர்நோக்கியிருந்த அவரது துணைவியார் 1965 ஜூன் மாதத்தில் மகள் சுதாவைப் பெற்றெடுத்தார்.

16 மாத சிறைவாசத்திற்குப்பின் ஏ.பி.யும் இதர தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர். விடுதலையானதும் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஏ.பி. முழுமூச்சுடன் இறங்கினார்.

1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஏ.பி. திண்டுக்கல் தொகுதியிலிருந்து முதன்முறையாக வெற்றி வாகை சூடினார். அவர் 1952 முதல் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வந்த போதிலும், இம்முறைதான் அவர் வெற்றி பெற முடிந்தது. அண்ணாவின் தலைமையில் தி.மு.க. அமைச்சரவை ஆட்சி பீடமேறியது. 12 உறுப்பினர்களைக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராக ஏ.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார். என்.சங்கரய்யா உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் திண்டுக்கல் தொகுதி மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்பியதோடு நிற்கவில்லை. தமிழக மக்களின் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் சட்டமன்றத்தில் அவரது குரல் கணீரென்று ஒலித்தது. திண்டுக்கல் நகர மக்கள் ஏ.பி.யின் பணி சிறப்பாக நடைபெற வேண்டுமென்பதற்காக, நிதி வசூலித்து, ஒரு காரை அன்பளிப்பாகத் தந்தனர். அது கட்சியின் மாநிலக்குழு அலுவல்களுக்காக அளிக்கப்பட்டுவிட்டது.

சிடியு உதயம்

கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவானது அதன் சார்பு அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசிலும் (ஏ.ஐ.டி.யூ.சி) அதன் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. எஸ்.ஏ.டாங்கே தலைமையிலிருந்த ஏ.ஐ.டி.யு.சி. தலைமையானது தொழிற்சங்க செயல்பாட்டில் ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற மறுத்ததாலும், முதலாளித்துவ வர்க்கத்துடன் தொழிலாளி வர்க்கம் கூட்டுச்சேர வேண்டுமென்று கூறி வர்க்க சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்ததாலும், அந்த அமைப்பிலிருந்து பிரிந்து தொழிலாளி வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1966ம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற ஏ.ஐ.டி.யு.சி மாநாட்டில் இருதரப்பினருக்குமிடையே காரசாரமான கருத்துப் போராட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏ.பி. பேசத் துவங்கியபோது, “திருவாளர் டாங்கே” என்று கூறியதை, டாங்கே தரப்பு பிரதிநிதிகள் ஆட்சேபித்தனர். “தோழர் டாங்கே” என்றழைக்க ஏ.பி. மறுத்து விட்டார். இனியும் ஒன்று சேர்ந்து செயல்பட முடியாது என்பதை இந்த மாநாடு உணர்த்தியது.

எனவே, 1968ம் ஆண்டு மே மாதத்தில், ஏ.ஐ.டி.யூ.சி.யில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டம் கோவா மாநிலத்தில் நடைபெற்றது. தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கவும், அதன் புரட்சிகரப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் தனியான ஒரு தொழிற்சங்க அமைப்பை உருவாக்க வேண்டுமென்று இந்தக் கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிக்குப் பரிந்துரை செய்தது. இக்கூட்டத்தில் ஏ.பி., கே.ரமணி, ஆர்.உமாநாத், ஏ.நல்லசிவன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

1969ம் ஆண்டு ஏ.ஐ.டி.யூ.சி. பிளவுபட்டது. 1970ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய தொழிற்சங்க மையம்(சி.ஐ.டி.யூ) என்ற புதிய தொழிலாளி வர்க்க அமைப்பு கல்கத்தாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் உதயமானது. ஏ.பி. அந்த மாநாட்டின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியத் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழும் அந்த மாநாட்டில், சி.ஐ.டி.யூ.வின் தலைவராக பி.டி.ரணதிவேயும், பொதுச்செயலாளராக பி.ராமமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சி.ஐ.டி.யூ.வின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஒருவராக ஏ.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக சி.ஐ.டி.யூ. மாநாட்டில் ஏ.பி. அதன் உதவித் தலைவர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கே.ரமணி தலைவராகவும், ஆர்.உமாநாத் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1968ம் ஆண்டு கொச்சியில் நடைபெற்றா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8வது மாநாட்டில், ஏ.பி. மீண்டும் கட்சியின் மத்தியக்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏ.பி.க்கு மிகவும் துயரத்தை அளித்த சம்பவம் நடந்தது. அவருடைய பாசத்துக்குரிய தந்தையார் அமிர்தலிங்கம் காலமானார். ஏ.பி.க்கும் அவருடைய குடும்பத்துக்கும் இது மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. தங்கள் தந்தையார் நினைவாக, அவர் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருந்த ‘ராமாயண விமர்சனம்’ (Ramayana vimarasa) என்ற ஆய்வு நூலை ஏ.பி.யும் அவரது சகோதரர்களும் ஒரு புத்தகமாக வெளியிட்டனர்.

ராமாயணம் குறித்த பல கட்டுக்கதைகளைத் தகர்த்தெறியும் இந்த நூலானது, டாக்டர் சங்காலியா, ஜஸ்டிஸ் பரமசிவம் போன்றோரின் ஆய்வுகளுக்கு இணையானதாகும்.

1971ம் ஆண்டு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. அதில் கட்சியின் மாநிலச் செயலாளராக ஏ.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு ஜூலை மாதத்தில் மதுரையில் நடைபெற்ற கட்சியின் 9வது அகில இந்திய மாநாட்டில், ஏ.பி. மீண்டும் மத்தியக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும், தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள் ‘மிசா’ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். கட்சியின் முடிவுப்படி, ஏ.பி. உள்ளிட்டு ஏராளமான தலைவர்கள் தலைமறைவாகச் சென்று கட்சிப் பணிகளைத் தொடர வேண்டியிருந்தது. 1977ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப் போவதாக இந்திராகாந்தி அறிவித்த பின்னர்தான் கட்சியின் முடிவுப்படி ஏ.பி. தலைமறைவிலிருந்து வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.பி. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை

1978ம் ஆண்டு கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. ஏ.பி. மீண்டும் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவே அவர் கலந்து கொண்ட கடைசி மாநாடாகவும் அமைந்தது.

A Balasubramaniam Elected as Polit Bureau Member at the 10th Congress Jullandar, April 02-08, 1978.

http://www.cpim.org/content/members-pb-7th-19th-congress

1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.பி. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இம்முறையும் வெற்றி பெற இயலவில்லை.

ஆழ்ந்த படிப்பு, கண்டிப்பில் கடுமை

புத்தகங்களை ஏராளமாகப் படிக்கும் பழக்கம் உடையவர் ஏ.பி. இதில் அவருக்கு இணையாக ஒரு சிலரைத்தான் சுட்டிக்காட்ட முடியும். மார்க்சீய நூல்களை மட்டுமல்ல, விஞ்ஞானம், இலக்கியம், வரலாறு, அரசியல் போன்றவை குறித்து வெளிவரும் சிறந்த நூல்களையும் அவர் படிக்கத் தவறியதில்லை. சுற்றுப்பயணம் செய்யும் நாட்களிலும் அவருடைய பையில் சில புத்தகங்கள் கட்டாயம் இருந்தே தீரும். ஏ.பி.யின் சகதோழரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளராக இருந்தவருமான எம்.ஆர்.வெங்கட்ராமன் கூறுகிறார்:

”ஏ.பி. மார்க்சிசத்திற்கு அவர் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை அளித்திருந்ததை முதலில் குறிப்பிட வேண்டும். லெனின் நூல்கள் அனைத்தையும் தனது உபயோகத்திற்காகப் பிரத்யேகமாக வாங்கி வைத்திருந்தார். இதைத் தவிர, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஸ்டாலின், மா-சே-துங் நூல்களும் அவரிடத்தில் இருந்தன. அடிக்கடி இந்த மூல நூல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பார். நானும் அவரும் சென்னை, வேலூர், சேலம், திருச்சி, மதுரை, கடலூர் முதலிய ஊர்களில் இருந்த மத்திய சிறைச்சாலைகளில் சேர்ந்து இருக்க நேரிட்டது. அப்போது இருந்த அவகாசத்தின் பெரும் பகுதியை மார்க்சீயப் படிப்பிற்கே செலவிட்டார். . . .”

”கட்டுரைகள் எழுதும்போதோ, ஒரு அரசியல் வகுப்புக்குக் குறிப்புக்கள் தயாரிக்கும்போதோ, பொருத்தமான மேற்கோள்களை மார்சீய நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுவார். கட்சி அணிகளுக்கு மார்சீயக் கல்வியை அளிப்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார். தெய்வ வழிபாடும், மதக்கோட்பாடுகளும், மூட நம்பிக்கைகளும் நிறைந்துள்ள நமது நாட்டில் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான இயக்கங்களோடு பொருள்முதல்வாதக் கருத்துக்களை நன்கு மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டுமென்று ஏ.பி. அடிக்கடி கூறுவார்…”

”அரசியல்,கல்வி வேலைகளில் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். நமது வேலைகலை அப்போதுதான் உண்மையான அரசியல் வேலைகளாக இருக்குமென்று ஏ.பி. கூறுவார். வேலைகளில் அரசியல் ஆதிக்கம் மிகத்தேவை (Politics in command) என்று ஏ.பி. வலியுறுத்துவார்.”

கட்சியின் ஒற்றுமை, கட்டுப்பாடு என்பதை ஏ.பி. மிக உயர்வாக மதித்தார். கட்சித் தோழர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் அவர் கறாராகவிருந்தார். அதே சமயத்தில் அவர் சுட்டிக்காட்டும் விதமானது சம்பந்தப்பட்ட தோழர் தன்னுடைய தவறை மனப்பூர்வமாக உணரும் வண்ணமிருக்கும். அத்தகைய கடுமையான விமர்சனத்திற்காக ஏ.பி. மீது யாரும் கோபம் கொள்வதில்லை.

கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மிகவும் பொறுமையாக ஏ.பி. பதிலளிப்பார். மிகவும் கடினமான விஷயத்தையும் எளிமையாகப் புரிந்து கொள்ள வைப்பதில் அவர் மிகுந்த திறமைசாலி.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தீவீரவாதப் போக்கை எதிர்த்தும், இடது அதிதீவீர நக்சல்வாதப் போக்கை எதிர்த்தும் நடைபெற்ற தத்துவார்த்த, அரசியல் போராட்டத்துக்கு ஏ.பி.க்கு பெரும் பங்குண்டு. தவறான வழியில் சென்றவர்களை மீட்பதற்காக மிகவும் பொறுமையுடன் ஏ.பி. பாடுபட்டார்.

இலக்கியவாதி .பி.

தணியாத இலக்கிய ஆர்வம் கொண்டவர்களில் ஏ.பி.யும் ஒருவர். கல்லூரியில் படிக்கும் நாட்களிலிருந்தே அவருக்கு ஆங்கில இலக்கியம், கவிதைகள் முதலியவற்றில் பெரும் ஆர்வம் உண்டு. ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியரின் அனைத்து நூல்களும் ஏ.பி.க்கு மனப்பாடமாகத் தெரியும். ஆங்கிலக்கவி மில்டனுடைய ‘சுவர்க்கம் இழந்த கிரிஸ்து’ (Paradise lost) என்ற நூல் ஏ.பிக்கு மிகவும் பிடித்த நூலாகும். மில்டனுடைய எழுத்துக்களில் ஏ.பி.க்கு மிகுந்த பிடிப்பு உண்டு. “இயற்கை குறித்து சிறப்பாகக் கவிதை எழுதியுள்ள வேர்ட்ஸ்வொர்த் போன்று ஆயிரம் கவிஞர்கள் ஒன்று திரண்டாலும் அவர்கள் மில்டனுடைய ஒரு வாக்கியத்துக்கு இணையாக மாட்டார்கள்” என்று ஏ.பி. கூறுவதுண்டு.

அதேபோல் எமிலி ஜோலா, அனதோ பிரான்ஸ், விக்டர் ஹியூகோ போன்ற தலைசிறந்த பிரெஞ்ச் நாவலாசிரியர்களின் நூல்களும் ஏ.பி.க்கு மிகவும் விருப்பமானவை.

”பிரெஞ்ச் நாவல்களில் இருக்கக் கூடிய புரட்சிகர உள்ளோட்டமும், வேகமும் அவை ஏற்படுத்துகிற கிளர்ச்சியும் வேறு எந்த மொழி இலக்கியத்திலும் பார்க்க முடியாது” என்று ஏ.பி. கூறுவது வழக்கம்.

விக்டர் ஹியூகோவின் நாவல்களில் வரும் முக்கியமான அம்சங்களையெல்லாம் ஏ.பி. அப்படியே சித்தரித்து விளக்குவார்.

அத்துடன், சார்லஸ் டிக்கன்ஸ், மார்க் ட்வைன் போன்ற நாவலாசிரியர்களின் எழுத்துக்களும் ஏ.பி.க்கு மிகவும் விருப்பமானவை.

ஆங்கிலத்தைப் போன்றே வட மொழியிலும் ஏ.பி. ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்.

மகாகவி பாரதியின் தேசபத்திப் பாடல்களில் ஏ.பி. கொண்டிருந்த ஆர்வத்திற்கு ஈடு இணையே கிடையாது. அத்தகைய பாடல்களை, தெருக்களிலேயே அவர் பாடுவதுண்டு. ஏ.பி.யின் சக தோழரான என்.வரதராஜன் பின்வருமாறு நினைவு கூர்கிறார்:

”பாரதி நூற்றாண்டு விழாவினை பலர் தடபுடலாகக் கொண்டாடும் நேரமிது. ஆனால் அக்காலத்தில் பாரதியின் பாடலைப் பாடுவதும், நினைப்பதும் தண்டனைக்குரியது என்று எண்ணிய காலம். அன்று திண்டுக்கல் நகர வீதிகளில் பாரதி பாடல்களைப் பாடும் தோழர்களுடன் சேர்ந்து பாரதி விழாவை ஏ.பி. நடத்தினார்.

”உடலெல்லாம் சந்தனம் பூசி, கழுத்தில் மாலை அணிந்து, செங்கொடியைத் தோளில் சுமந்து, “ஆடுவோமே, பள்ளூ பாடுவோமே” என்றும், “பார்ப்பானை ஐய்யரென்ற காலமும் போச்சே” என்றும் 1946ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பாரதி நினைவு நாளில் பாடி வந்த ஏ.பி.யின் பணியைத் திண்டுக்கல் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.”

ஏ.பி.யின் பேச்சும், எழுத்தும் சுருக்கமாக இருக்கும். எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்கும். ஏ.பி.யினுடைய பேசும் முறையைக் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்புக்குரிய தலைவர், காலஞ்சென்ற பி.டி.ரணதிவே அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்;

  ”கட்சியின் மத்திய கமிட்டியிலும், அரசியல் தலைமைக் குழுவிலும் உறுப்பினராக இருந்த காலம் முதலாக, விவாதங்களின் போது அவர் கூறிய கருத்துக்களும், விவரங்களும் மிகவும் பாராட்டத்தக்கதாயிருந்தன. ஆனால் அந்த வார்த்தைகளில் தெளிவு இருந்தது. மத்தியக் கமிட்டியில் இருந்த ஏ.பி.யும் அரிகிருஷ்ணக் கோனாரும் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைக்கின்றபோது தவறில்லாதவாறு சரியாகவும், வார்த்தைகளில் சிக்கனமாகவும் இருப்பார்கள். குறைந்த நேரத்தில், அதிகமான பயன் விளைவிக்கக் கூடியவாறு அவர்களது பேச்சுக்கள் இருக்கும்.”

எழுத்தாளர் ஏ.பி.

ஏ.பி. ஏராளமான கட்டுரைகளையும், பிரசுரங்களையும் எழுதியுள்ளார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்நோக்கி வந்த பிரச்சனைகள் குறித்தும், தமிழகத்தின் தொழிலாளி வர்க்கமும் இதர உழைக்கும் மக்களும் நேரிட வேண்டியிருந்த பிரச்சனைகள் குறித்தும், தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்தும், பல்வேறு தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்தும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார்.

திராவிட நாடு கோரிக்கை உச்சகட்டத்தை எட்டியிருந்த 1960ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் “ஜனசக்தி” நாளிதழில் ஏ.பி. எழுதியிருந்த ஒரு கட்டுரைத் தொடர் குறித்து இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். இந்தியாவா? திராவிடமா? தமிழகமா?” என்ற தலைப்பில் வெர்ளிவந்த அந்தக் கட்டுரைத் தொடர் திராவிடநாடு கோரிக்கை எவ்வாறு தவறானது என்பதையும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் ஒன்றுபட்ட நாடாக இருப்பதுதான் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்பதையும் ஏ.பி. அந்தக் கட்டுரைத் தொடரில் தெளிவுபட விளக்கியிருந்தார்.

கடவுள் உண்டா இல்லையா?” என்ற பிரசுரமானது ஒரு ஆத்திகருக்கும், ஒரு நாத்திகருக்கும் இடையில் நடக்கும் கேள்வி-பதில் வடிவில் அமைந்ததாகும். இதில் இயற்கைதான் முதன்மையானது என்பதையும், அதிலிருந்துதான் மனித சமூகம் தோன்றியது என்பதையும், ‘கடவுள்’ எனப்படுபவர் யாரும் இவற்றைப் படைக்கவில்லை என்பதையும் ஏ.பி. தெளிவுபட விளக்கியுள்ளார். மார்க்சீய தத்துவஞானத்துக்கு வலுவூட்டும் நூலாகும் இது.

காந்தீயம், சுரண்டல் வர்க்கத்தின் கேடயமே” என்ற பிரசுரத்தில் காந்திஜியின் கோட்பாடானது, குறிப்பாக அவருடைய தர்மகர்த்தா கொள்கையானது இந்தியாவை ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்கள்க்கே துணை புரிகின்றது என்பதை ஏ.பி. எளிய முறையில் விளக்கியுள்ளார்.

அதேபோல், நக்சலைட்டுகள் எங்கே செல்கிறார்கள்?” என்ற பிரசுரத்தில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பின்பற்றும் கொள்கையானது எவ்வாறு தவறானது என்பதையும், அவர்கள் பின்பற்றும் பாதையானது இந்தியாவின் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும், அதன் புரட்சிகர இலட்சியத்திற்கும் எவ்வாறு ஊறு விளைவிக்கிறது என்பதையும் ஏ.பி. கூர்மையாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏ.பி. எழுதிய பிரசுரங்களையும், ஏராளமான கட்டுரைகளையும் இங்கே விளக்க இயலாது. “வரலாறு வகுத்த கணக்கு”, “ஆத்திக-நாத்திகப் போராட்டம்”, “முதலாளித்துவமற்ற பாதை எங்கு சாத்தியம்?”, “தேசிய ஜனநாயகம் என்றால் என்ன?”, “நாம் புரட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களே”, “ஓர் ஓடுகாலியின் ஓலம்” போன்ற சிறந்த கட்டுரைகளும் அதில் அடங்கும்.

அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றான “மார்க்சிஸ்டுகளுக்கு மாஸ்கோவும்-பீகிங்கும் குருபீடமல்ல” என்ற கட்டுரை குறித்து இங்கே குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, மார்க்சீய-லெனினிய கோட்பாட்டை இந்தியாவின் நிலைமைகளுக்கேற்றாற்போல் பயன்படுத்துகிறது என்பதையும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியையோ அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையோ பின்பற்றாமல் சுதந்திரமாக தனது வழிமுறையை வகுக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி எடுத்த நிலைபாட்டை ஏ.பி. அந்தக் கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஏ.பி. எழுதியகாவேரி நம்ம காவேரி” என்ற பிரசுரமானது காவேரி நதிநீர்ப் பிரச்சனையை மிக அற்புதமாக விளக்கும் பிரசுரமாகும். அதில் 1892ம் ஆண்டில் சென்னை ராஜதானி அரசுக்கும், மைசூர் சமஸ்தான் அரசுக்கும் காவேரி நீரைப் பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக ஏற்பட்ட உடன்பாட்டிலிருந்து தொடங்கி 1924ம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் விளக்கி எவ்வாறு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்பதையும் ஏ.பி. சுருக்கமாக விளக்கியுள்ளார். கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மூன்று மாநில மக்களுக்கும் பயனுள்ள வகையில் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்பதையும் அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மாநில சுயாட்சி ஏன்?” என்ற பிரசுரத்தில், மத்திய அரசாங்கம் தன் கையில் அதிகாரங்கலைக்குவித்து வைத்துக் கொண்டு, மாநில அரசாங்கங்களுக்குரிய உரிமைகளைப் பறிப்பதன் விளைவாக, இந்திய ஒற்றுமை மங்குகிறது என்பதையும் மக்கள் மத்தியில் ஏற்கனவே வளர்ந்து வந்துள்ள ஒற்றுமை உணர்வைச் சிதைத்து வருகிறதென்பதையும் ஏ.பி. தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் விளைவாக மூலதனம், ஒருசில ஏகபோக முதலாளிகளிடமும், பெருமுதலாளிகளிடமும் குவிவதும், பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து அவைகளுக்கிடையேயுள்ள இடைவெளி அதிகரிப்பதும், மத்திய-மாநில உறவில் எத்தகைய ஆபத்தான போக்கை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் ஏ.பி. இந்தப் பிரசுரத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். மூலதனக் குவியலின் நேர்விளைவே அதிகாரக் குவியல் என்பதையும் ஏ.பி. அதில் திட்டவட்டமாக எடுத்துக் கூறியுள்ளார்.

மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கமானது மொழிப்பிரச்சனை சம்பந்தமாகவும், மாநில சுயாட்சிக் கோரிக்கை சம்பந்தமாகவும், அது போன்றே அதிகாரப் பகிர்வு கோரிக்கை சம்பந்தமாகவும் எவ்வாறு தவறான கொள்கையைக் கடைப்பிடித்து வந்ததென்பதையும் ஏ.பி. தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

மாநிலங்களுக்கான உரிமைகளை வாதாடிப் பெற முடியாது, போராடித்தான் பெற வேண்டும் என்று ஏ.பி. இந்தப் பிரசுரத்தில் அழுத்தந்திருத்தமாக தெளிவுபடுத்தியதோடு, இந்திய அரசியல் அமைப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான கண்ணோட்டத்தையும் இப்பிரசுரத்தில் சுருக்கமாக விளக்கியுள்ளார்.

இறுதி நாட்கள்

ஏ.பி. மதுரையையும், சென்னையையும் மையமாகக் கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த வருடங்களில் அவருடைய மனைவி திருமதி கிரிஜாவும், மகன்கள் முரளியும், லெட்சுமணனும், மகள் சுதாவும் கோவையிலேயே வசித்து வந்தனர். கோவை விவசாயக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த திருமதி கிரிஜா, பல வருடங்களுக்குப் பிறகு மதுரை விவசாயக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் 1969ம் ஆண்டில் மதுரைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஏ.பி.யும் அதிக நாட்கள் மதுரையிலேயே தங்க வேண்டியிருந்தது. இச்சமயத்தில்தான் ஏ.பி. தன் குடும்பத்தாருடன் அதிக நாட்கள் இருக்க முடிந்தது.

ஆனால் 1979ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுவின் தலைமையகம் மதுரையிலிருந்து மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டது. எனவே, மாநிலச் செயலாளராகவிருந்த ஏ.பி.யும் மாதத்தில் பெரும்பகுதி நாட்கள் சென்னையிலேயே இருக்க வேண்டியிருந்தது. இதனால் பிரிந்திருந்து சேர்ந்த அவரது குடும்பம் மீண்டும் பிரிந்தது. ஏ.பி. சென்னையிலும், அவருடைய குடும்பத்தினர் மதுரையிலும் வாழ்ந்து வர வேண்டியிருந்தது.

ஏ.பி., தன் பிள்ளைகளுக்கு ஒரு நண்பரைப் போலவே விளங்கினார். பெற்றோருக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தும் வழக்கம் அவரிடம் இருந்ததில்லை.

ஏ.பி. பல வருடங்களாகவே அதீத ரத்தக் கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார். மருத்துவர்களின் முறையான கவனிப்பு இருந்தபோதிலும் கூட, அந்த நோய் அவருடைய கட்டுக்கடங்காமலே இருந்து வந்தது. இது அவருடைய செயல்வேகத்தையே மட்டுப்படுத்தி வந்தது. ஒருமுறை அவருக்கு லேசான மாரடைப்பு நோய் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் அவர் அதை உணரவில்லை. சிலகாலம் கழித்து டெல்லியில் இதய நோய் வல்லுனர்கள் அவரைப் பரிசோதித்த பொழுதுதான் அந்த விபரமே அவருக்குத் தெரிய வந்தது.

ரத்தக்கொதிப்பு நோயின் சிரமத்தை தாங்கிக் கொண்டேதான் அவர் தன் பணிகளைச் செய்ய வேண்டி வந்தது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என்ற முறையில் அவர் அடிக்கடி டெல்லிக்குச் சென்று வர வேண்டியிருந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஏராளமான கூட்டங்களில் பேச வேண்டியிருந்தது.

அது 1981ம் வருடன் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகவை மாவட்டக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராஜபாளையம் நகருக்கு ஏ.பி. வண்டிருந்தார். தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் குளிப்பதற்காகப் போன ஏ.பி. அந்த அறையிலேயே வழுக்கி விழுந்து விட்டார். ஏ.பி.யுடன் தங்கியிருந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.பெருமாள் உடனடியாக மருத்துவர்கலை வரவழைத்து ஏ.பி.க்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார். ஏ.பி. நல்ல ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் ஏ.பி. அதைப் புறக்கணித்து விட்டார்.

ராஜபாளையம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் 26ம் தேதி காலையில் மதுரை தீக்கதிர் அலுவலகத்திற்கு ஏ.பி. வந்தார். அப்பொழுதே அவர் மிகவும் சிரமப்பட்ட நிலையில் இருந்தார். அவர் அன்று மாலை திண்டுக்கல் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. தீக்கதிர் தோழர்கள், ஏ.பி. தனது பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, தீக்கதிர் அலுவலகத்திலேயே சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்று மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஏ.பி. அதற்கும் சம்மதிக்க மறுத்து விட்டார்.

தீக்கதிர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு திண்டுக்கல் நகரத்திலுள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்ற ஏ.பி.க்குப் பழைய தோழர்களைக் காண வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது. வாலிபர் சங்கச் செயலாளர் வி.கல்யாணசுந்தரத்தை அழைத்துக் கொண்டு தோல் பதனிடும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றார்.

தங்களின் பெருமதிப்புக்குரிய அன்புத் தலைவர் ஏ.பி. வந்திருக்கின்றார் என்ற செய்து பரவியதும் ஏராளமான தொழிலாளிகள் ஓடோடி வந்தனர். அவர்களிடம் சிறிது நேரம் அளவளாவியபின் ஏ.பி. கட்சி அலுவலகத்திற்குத் திரும்பி வந்தார்.

அன்று மாலையில் நடைபெற்ற ஒரு பெரும் பொதுக்கூட்டத்தில் ஏ.பி. மிகுந்த சிரமத்திற்கிடையே ஒரு சில நிமிடங்கள் பேசினார். இதுவே அவர் பேசிய கடைசிப் பொதுக்கூட்டமாக அமைந்தது. எந்த திண்டுக்கல் நகரில் 1940ம் ஆண்டுகளில் தன் அரசியல் வாழ்வைத் துவக்கினாரோ அதே நகரிலேயே அவருடைய கடைசிப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

ஏ.பி. அவருடைய பேச்சைப் பின்வருமாறு துவக்கினார்;

“அருமைத் தாய்மார்களே, பெரியோர்களே! நண்பர்களே!

நான் பேசக்கூடாது என்பது டாக்டரின் உத்தரவு. நேற்று எதிர்பாராத விதமாக ராஜபாளையத்தில் நான் தங்கியிருந்த விடுதியிலே வழுக்கி விழுந்துவிட்டதால் என் முதுகில் பலமான அடி. என் விலா எலும்பு முறிந்திருக்கிறது. ஆகவே மூச்சு விடுவதே கஷ்டமாக இருக்கிறது. ஆனால் பொதுக்கூட்டத்திற்கு விளம்பரப்படுத்தியிருப்பார்கள். ஆஜராகாவிட்டால் மரியாதையாக இருக்காது என்ற காரணத்திலேயே உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

“நீண்ட பிரசங்கம் செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை. பேச வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. நாட்டு மக்களின் கட்சியின் சார்பாகச் சொல்ல வேண்டிய விஷயங்களே அதிகமாக இருக்கின்றன. அவற்றை சொல்லுவதற்கு எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து அப்போது நான் வந்து பேசும்போதுதான் அது சாத்தியமாகும்.

“சுருக்கமாக ஓரிரு விஷயங்களை மட்டும் – இந்த நாட்டிலிருக்கிற தேசபக்தர்கள் கவலைப்பட வேண்டிய விஷயங்களை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்”.

இவ்வாறு தன் சொற்பொழிவைத் தொடங்கிய ஏ.பி. இந்திய அரசியல் நிலைமை குறித்து சிறிது நேரம் பேசினார்.

பொதுக்கூட்டம் முடிந்த பின் இரவு இரயிலில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.

செப்டம்பர் 1 ம் தேதியன்று காலையில் திருமதி கிரிஜா சென்னைக்கு வந்தார். அவருடைய பணிக்காலம் மேலும் சில வருடங்களுக்கு இருந்த போதும், ஏ.பி.யின் அருகிலிருந்து அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து தன்னுடைய வேலையிலிருந்து தானாகவே ஓய்வு பெற்று அன்று காலையில்தான் சென்னைக்கு வருகிறார். ஆனால் அவர் வீட்டிற்குள் நுழைந்த சமயத்தில் ஏ.பி.யின் இரண்டு கால்களிலும் இரத்த ஓட்டம் நின்று அவர் செயலற்ற நிலையில் இருப்பதைத்தான் காண முடிந்தது. ஏ.பி.யின் உடல்நிலை குறித்து தகவல் கிடைத்தவுடன் பி.ராமமூர்த்தியும் இதர தலைவர்களும் ஏ.பி.யின் இல்லத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். உடல்நிலை சிறிது தேறி வருவது போல் தோன்றியது. அடுத்த மூன்று நாட்களிலும் மருத்துவர்களின் தீவீர கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் செப்டம்பர் 5ம் தேதி அதிகாலையில் ஒரு கடுமையான மாரடைப்பு ஏ.பி.யைத் தாக்கியது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்களால் இயன்றதனைத்தையும் செய்து பார்த்தனர். அனைத்தும் பயனற்றதாயின!.

அந்தோ! ஏ.பி. என்று லட்சக்கணக்கான மக்களாலும், தோழர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட, நேசத்துடன் போற்றப்பட்ட ஏ.பாலசுப்ரமணியம் காலை 9 மணிக்கு உயிர் நீத்தார்.

மார்க்சீய லட்சியத்தைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொழிலாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கென்றே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தியாகச் செம்மலின், பாட்டாளி வர்க்க உன்னதத் தலைவரின் வாழ்வு அமைதியாக முடிந்தது.

ஏ.பி. என்று வர்க்க பாசத்துடன் நினைவு கூறப்படும் வர்க்கப் புரட்சியாளருக்கு, மார்க்சீய அறிஞருக்கு, இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அழியாத சிறப்பிடம் உண்டு.

* * *

Check Also

மருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…

மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ...