அப்துல் கலாம் மறைவுக்கு சிபிஐ(எம்) இரங்கல்!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களுடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சொந்த முயற்சியால் உயர்ந்தவர்.

அவர் தமிழகத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வி முடித்து சிறந்த விஞ்ஞானியாக உயர்ந்தவர். அறிவியல் நாட்டு வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக பயன்பட வேண்டுமென்று கருதியதோடு, அதற்காக அரும்பாடு பட்டவர்.

மத்திய அரசினுடைய அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய போதும், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அங்கம் வகித்த போதும், அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.

எல்லாத்துறைகளிலும் நமது நாடு வளர்ச்சியடைந்த நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு வளர வேண்டுமென்று கனவு கண்டவர், அதற்காகப் பணியாற்றியவர்.

மாணவர்களையும், இளைஞர்களையும் கனவு காணச் சொன்னதாக சொல்வார்கள். அல்ல, கனவு என்பது உறக்கத்தில் வருவது அல்ல, ஒருவரை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று கனவுக்கே புதிய விளக்கம் கொடுத்தவர்.

அக்கினிச்சிறகு என்ற அவருடைய சுயசரிதை இன்றைக்கும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக பாடுபடுவது என்பதைத் தவிர வேறு எந்த அடையாளத்தையும் விரும்பாதவர். \ தனக்காக வாழாமல், நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர். தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சிறந்த மனிதர் அப்துல் கலாம் ஆவார். அவரது மறைவு தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பேரிழப்பாகும்.

அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரைப் பிரிந்து வாடக்கூடிய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...