தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக! : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

நடாளுமன்றம் பிப்ரவரி 23, திங்கட்கிழமை அன்று கூடுகிறது. இன்று (22.2.15) பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் மக்களவை உறுப்பினர் முகமது சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றம் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முக்கியமான மசோதாக்கள் குறித்து அரசினால் விளக்கமளிக்கப்பட்டது. இதன் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு;

விவசாயிகளை பாதிக்கும் மசோதாவான நிலம் கையகப்படுத்தும் மசோதா மற்றும் இன்சூரன்ஸ் மசோதா ஆகியவைகளை ஜனாதிபதியின் அவசரச் சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்தது.

இந்திய பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் சந்திப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேபோல பிரதமர் மோடி இலங்கை செல்வதை வரவேற்பதோடு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையில் அல்லலுறும் தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இந்திய பிரதமர் அழுத்தம் தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் இலங்கை செல்வதற்கு முன்னால் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்தி கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே (மேகதாது) அணை கட்டும் பிரச்சனை குறித்து இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது. காவிரியில் எந்தவொரு புது அணை கட்டுவது என்பது தமிழகத்தின் டெல்டா பிரதேச விவசாயத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால் மத்திய அரசு தலையிட்டு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

மேலும், தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியது.

இந்தியாவில் விவசாயத் துறையும், தொழிற்துறையையும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும், சுகாதார சீர்கேட்டினால் பன்றிக் காய்ச்சல் பரவி மரணங்கள் சம்பவிப்பதையும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சிறுபான்மையினர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போன்றவைகளையும் இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டியது.

மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்ற முக்கியமான சமயங்களில் பாராளுமன்றத்தில் கட்சிகள் தங்களது கருத்துக்களை எடுத்துரைக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

டி.கே.ரங்கராஜன்

மக்களவை உறுப்பினர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...