வாலிபர் சங்க தலைவர் மீது தாக்குதல் …

25.03.2017

பெறுநர்

உயர்திரு. காவல்துறை தலைவர் அவர்கள்,

தமிழ்நாடு காவல்துறை,

சென்னை – 600 004.

 

அன்புடையீர், வணக்கம்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூர் வட்டாரக்குழு உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரி மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டு வரும் தோழர். எபிலைசியஸ் ஜோயல் கடந்த 18.3.2017 அன்று மாலை 6 மணியளவில் கருங்கல் சந்திப்பில் உள்ள தனது கடையிலிருந்து கருங்கல் துண்டத்து விளை பகுதிக்கு அலுவல் சம்பந்தமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தலைக் கவசம் அணியவில்லை எனக் கூறி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, அவரது வண்டியை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஜோயல் தனது வாகனத்தில் இருந்த தனது தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், கட்சி குறிப்பேட்டையும் எடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மோகன் ஜோயலை ஆபாசமாக கெட்ட வார்த்தையால் திட்டியதோடு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து அருகிலிருந்த காவல்துறையினரும் உடன் சேர்ந்து ஜோயலை கடுமையாக தாக்கியதுடன் “நீ என்ன டி.ஒய்.எப்.ஐல் பெரிய தலைவரா? உன்னை லாக்கப்புக்குள் வைத்தே கொன்று விடுவோம், அதை எவனும் கேட்க முடியாது” என கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி, அரை நிர்வாணமாக்கி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவரது இடது கை உடைந்ததோடு பலத்த காயமுற்றுள்ளார்.

இச்சம்பவம் அறிந்து எங்களது கட்சித் தோழர்கள் காவல் நிலையத்திற்கு சென்று தோழர் ஜோயலை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக  பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜோயலை தாக்கியவர்களில் பால்ராஜ் என்பவர் ஏற்கனவே வாலிபர் சங்க மாநாட்டின் போது அத்துமீறி மிரட்டியுள்ளார். இவர் பாஜக கட்சியின் தீவிர அனுபதாபியாகவும், வகுப்புவாத மதவெறி சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஜனநாயக இயக்கங்களை அச்சுறுத்தி, தாக்குதல் தொடுத்து முடக்கும் நோக்கத்துடன் அப்பகுதி காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையீடு செய்து,  தோழர் எபிலையஸ் ஜோயல் மீது அத்துமீறி கொடும் தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் மோகன், கஸ்பார் ராஜ், ஜான் கென்னடி, ரசல் ராஜ், பால்ராஜ், பிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

/ஒப்பம்….

(ஜி. ராமகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...