கால்நடை விற்பனை குறித்த மத்திய அரசின் புதிய சட்டவிதிகளுக்கு கண்டனம்

 

கால்நடை விற்பனை குறித்த மத்திய அரசின்  புதிய சட்டவிதிகளுக்கு கண்டனம்

உடனடியாக திரும்பப்பெற சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கால்நடைகளின் விற்பனைக்கு புதிய தடைகள் விதித்து சட்டவிதிகளை உருவாக்கியிருக்கிறது. காளைகள், பசுக்கள், எருமைகள், கன்றுக்குட்டிகள், வயதான கால்நடைகள் ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் சட்ட விதிகளை இயற்றியுள்ளது. இந்த சட்டவிதிகளின் படி யாரும் இளம் கால்நடைகளை விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது.

இதர கால்நடைகளை ஒருவர் சந்தைக்கு  கொண்டு வந்தால் அந்த கால்நடைக்கு சொந்தக்காரரின் பெயர், முகவரி, அடையாள ஆவணம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். அதேபோன்று கால்நடையைப் பற்றிய அடையாளங்களை அவர் தெரிந்திருக்க வேண்டும். கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த கொண்டு வரவில்லையென்று கால்நடையின் உரிமையாளர் உறுதியளித்திருக்க வேண்டும்.

கால்நடைகளை வாங்குபவர் விவசாய நோக்கத்திற்காகத்தான் வாங்கப்பட்டது என்றும், அது இறைச்சிக்காக விற்கப்படாது என்றும் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க வேண்டும். கால்நடைகளை வாங்குபவர் விவசாயிதான் என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கால்நடைகளை வாங்கியவர் 6 மாத காலத்திற்குள் அதை விற்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். கால்நடைகளை வாங்கியவர் அதை வாங்கியதற்கான ஆவணத்தை ஆய்வாளர்கள் கேட்கும்போதெல்லாம் காட்டும் வகையில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வெளி மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு கால்நடைகளை விற்கக்கூடாது. கால்நடைகளை விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் 5 நகல்கள் வைத்திருக்க வேண்டும். முதல் நகல் வாங்குபவரிடமும், 2வது நகல் விற்பவரிடமும், 3வது நகல் வாங்குபவர் குடியிருக்கும் பகுதியின் தாசில்தாரிடமும், 4வது நகல் தலைமை கால்நடை அதிகாரியிடமும், 5வது நகல் கால்நடை விறபனை கமிட்டியிடம் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிகளாக்கி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

கால்நடைகளை வைத்து அரசியல் நடத்துவதன் மூலம் மக்களிடம் பிளவை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெற்றுக் கொண்டிருக்கும் பாஜக, இந்திய நாடு முழுவதும் கால்நடை விறப்னைக்கு கொண்டு வந்திருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக விவசாயிகளை பாதிக்கும்.  உழைக்க இயலா நிலையிலுள்ள மாடுகளையும், கன்று ஈனுவதற்கு வாய்ப்பில்லாத பசுக்களையும், எருமை மற்றும் ஒட்டகங்களையும் விவசாயிகள் இப்போது விற்று வரும் நிலையை இது தடுக்கும். இதன் காரணமாக விவசாயிகள் மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள். மத்திய அரசின் இந்த சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த சட்ட விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இந்திய மக்களுக்கு துயரம் இல்லாத ஒருநாளும் இருந்து விடக்கூடாது என்கிற வெறியோடு மத்திய அரசு 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தினத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்திய விவசாயிகளுக்கு மிகக்கடுமையான நஷ்டத்தையும், சமூக பதட்டத்தையும் , பொருளாதார இழப்புகளையும் உருவாக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென அனைத்து ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...