ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கூட்டம் ஜுலை 23,24 தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் ஈரோட்டில் கூடியது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், மாநிலச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-


ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும்!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி 1954-ம் ஆண்டில் துவக்கப்பட்டது. பொதுமக்களின் நன்கொடையும், ஈரோடு நகராட்சியின் நிதியுதவியும் பெற்று, சில நல்லெண்ணம் கொண்ட கல்வியாளர்கள் இந்தக் கல்லூரியை உருவாக்கினார்கள். இது ஈரோடு மாவட்டத்தில் துவங்கப்பட்ட முதல் கல்லூரி, தந்தை பெரியார் தலைமையில் சில ஆண்டுகள் செயல்பட்ட பெருமையும் இக்கல்லூரிக்கு உண்டு.

கல்லூரியில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகத் தமிழ்நாடு அரசு, இந்தக் கல்லூரியை ஏற்றுக் கொண்டு, கோவை, கல்லூரிக் கல்வி உதவி இயக்குநரைக் கொண்டு செயல்படுத்தி வந்தது. இதை எதிர்த்துக் கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்திற்குச் சென்றது. உச்சநீதிமன்றம், கல்லூரி அரசின் சொத்து. அரசே கல்லூரி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு ஏற்று நடத்தத் துவங்கிப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இப்போது, இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரி ஆக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.

தற்போது இருபால் மாணவர்கள் சுமார் 1500 பேர் பயிலும் கல்லூரியாகத் திகழ்கிறது. ஈரோடு மாவட்டத்தில மட்டுமின்றி, சுற்றுப் பகுதியில் இருந்தும் ஏழை மாணவ, மாணவிகள் இங்கு வந்து கல்வி கற்கிறார்கள். அரசு தீர்மானிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அரசுக் கல்லூரியாகவும், இல்லாமல், அரசு உதவி பெறும் கல்லூரியாகவும் இல்லாமல், அரசு ஏற்று நடத்தும் கல்லூரியாக இருப்பதால், அரசின் நிதியுதவி இந்தக் கல்லூரிக்குக் கிடைப்பதில்லை. ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் உள்ளன. புதிய கட்டிட வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. மாணவர் தங்கும் விடுதி செயல்படவில்லை. கல்லூரி உணவகமும் கவனிக்கப்படவில்லை. இச்சூழலில், இந்தக் கல்லூரியில் சில கட்டுமானப் பணிகளுக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியாக ஆக்கப்பட்டால், கூடுதல் படிப்புகளை துவக்க முடியும், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியும், பொறியியல் கல்லூரியையும் கொண்டு வரமுடியும். இவைகளுக்கான தாராளமான இடவசதி இருக்கிறது. இவை அனைத்தும், ஏழை மாணவ- மாணவிகளுக்கு அரசுக் கட்டணத்தில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகள் உருவாகும். இப்போது பயிலும் 1500 மாணவ மாணவிகளின்; எண்ணிக்கை 3000 ஆக உயரும் வாய்ப்பும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி ஏதும் இல்லை.

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும் என்று ஈரோடு மக்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டில், மூன்று வார காலம் தொடர்ச்சியாக மக்கள் அமைப்புகளும், இந்திய மாணவர் சங்கமும் போராட்டம் நடத்தினார்கள். தொகுதி சட்டமன்ற உறுப்பினர், 3 மாத காலத்தில் அரசுக் கல்லூரி ஆக்குவதாக மாணவர் சங்கத் தலைவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அரசுக் கல்லூரி ஆக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள் 11 பேர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது.

எனவே ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரி ஆக்க வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் 11 பேர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டுமென்று மாநிலக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...