அமைச்சர் சரோஜா மீது புகார் உரிய விசாரணை நடத்திடுக

11.05.2017

அமைச்சர் சரோஜா மீது புகார்

உரிய விசாரணை நடத்திடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராகப் பணியாற்றும் ராஜம் மீனாட்சி, மாநில சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா பணியில் நீடிக்க தம்மிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ராஜம் மீனாட்சி புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார். மாநில அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில் பணிநியமனம், பணி மாறுதல் போன்றவற்றிற்கு வெளிப்படையாகவே உயர் பொறுப்பில் உள்ளவர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இதே போன்று முன்பு வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் மிரட்டப்பட்டார். இதனால் முத்துகுமாரசாமி தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் நிகழ்ந்தது.

இந்தப் பின்னணியில் அமைச்சர் சரோஜா மீதான புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மையை வெளிக்கொணர்வதோடு தவறிழைத்தவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு காண்ட்ராக்டர் சேகர் ரெட்டி சில அமைச்சர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அதிகாரிகளுக்கு ரூ. 300 கோடி ரூபாய் கமிஷன் பிரித்துக் கொடுத்ததாக அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் குறிபிடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்துகிறது,

இதைப்போலவே ரூ. 30 லட்சம் மிரட்டி வாங்கியதாக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்றத்தினுடைய தலையீட்டினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,  அடுத்து நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா – ஊழல் தடுப்புச் சட்டம் நிறைவேற்றிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

 

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...