நான் சந்தித்ததில் மிகவும் நேர்மையில்லாத பத்திரிக்கையாளர் அர்நாப் – தோழர் எம்.பி.ராஜேஷ்

28-05-2017

மிஸ்டர் அர்நாப் கோஸ்வாமி,

26.05.2017 அன்று இரவு 10 மணிக்கு நானும் பங்கேற்ற நிகழ்ச்சி குறித்து இந்தத் திறந்த மடலை எழுதுகிறேன். அந்த நிகழ்ச்சியின் போக்கில் நீங்கள் முரட்டுத்தனமாக என்னை நோக்கி “உன்னை விட பெரிய தலைவர்களையெல்லாம் நான் கையாண்டிருக்கிறேன்” என்று சொன்னீர்கள். அந்த நிகழ்ச்சியிலேயே நீங்கள் பேசிய ஒரே உண்மையும் அதுதான். அந்த ஒரே ஒரு வாக்கியம் போதும் உங்கள் அகங்காரத்தையும், முரட்டுத்தனத்தையும், சிறுபிள்ளைத்தனத்தையும் புரிந்து கொள்ள என்னைவிட பெரிய அரசியல் தலைவர்களை நீங்கள் கையாண்டதைப் போலவே, நானும் உங்களை விடவும் நேர்மையான, நல்ல அணுகுமுறையுடைய, நாகரீகமான, அறிவுப்பூர்வமான நெறியாளர்களோடு விவாதிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். எல்லோரையும் விடப் பெரியவனாக உங்களை கற்பனை செய்து கொள்ளும் எல்லா அதிகாரமும் உங்களுக்கு உண்டு. ஆனால் உங்களைப் பற்றிய எனது கருத்து என்னவென்றால், ஒருதலைப்பட்சமான, முன் அனுமானங்கள் கொண்ட பத்திரிக்கையாளர் நீங்கள் என்பது மட்டுமல்ல, சாரமில்லாத, நேர்மையில்லாத, நம்பகத்தன்மையில்லாத, ஒரு பத்திரிக்கையாளருக்குரிய உறுதிப்பாடு இல்லாதவர் நீங்கள். உங்களின் பலவீனங்களை நீங்கள் அறிந்தேயிருப்பீர்கள், நீங்கள் சத்தமிடும்போதும், கூச்சலிடும்போதும் அடிக்கடி வெறுப்போடு தன்னம்பிக்கையின்மையை மறைக்க முயல்கிறீர்கள்.

நான் சந்தித்ததில் மிகவும் நேர்மையில்லாத பத்திரிக்கையாளர் நீங்கள். 2017 மே 26 ஆம் தேதி உங்கள் தொலைக்காட்சியில் ‘மோடி ஆட்சியின் 3 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் 10 மணி முதல் 10.15 மணி வரையிலான விவாதத்தில் பங்கெடுக்க எனது நேரத்தைக் (!) கேட்டு ஒரு அழைப்பு வந்தது. கேரளத்தில் உங்கள் தொலைக்காட்சியுடன் டை-அப் கொண்டுள்ள ஏசியாநெட் (ஸ்டுடியோவுக்கு) 9.50 மணிக்கு நான் சென்றபோது பாஜகவின் ரவி சங்கர் ப்ரசாத், மோடி ஆட்சி பற்றிய விவாதத்தில் பேசி முடிக்கவிருந்தார், அந்த விவாதம் முடியப்போவது எனக்கு தெரியவந்தது. உடனே நான் பாலக்காடு ஸ்டுடியோவிலிருந்த ஏசியாநெட் ஊழியரிடம் எனக்கு சொல்லப்பட்ட தலைப்பு ‘மோடியின் 3 ஆண்டு கால ஆட்சி’தானா என்று கேட்டு மீண்டும் உறுதி செய்தேன். ஏசியாநெட் தொலைக்காட்சியின் ஊழியர் அரவிந்தனை தொடர்பு கொண்டேன் அவர் என் முன்நிலையில் ‘‘மோடி ஆட்சியின் 3 ஆண்டுகள்’ – தான் என உறுதி செய்தார். நேரலையில்தான் நீங்கள் “ராணுவத்திற்கு எதிரான கொடியேறியின் பேச்சு” என தலைப்பை மாற்றியதையே அறிந்து கொள்ள முடிந்தது. அந்த விவாதத்திலிருந்து எழுந்துசென்றிருக்க முடியும் ஆனால் நான் அமர்ந்திருக்க முடிவுசெய்தேன் ஏனென்றால் நான் இல்லாவிட்டால் திரும்பத் திரும்ப நான் நிகழ்ச்சியிலிருந்து ஓடிவிட்டதாக ஒரு பொய்யை கத்திக் கொண்டிருப்பீர்கள். அப்படியானதொரு சூழலை தவிர்க்கவும், திரிக்கப்பட்ட உங்கள் செய்தியின் மீது எனது கருத்தை தெரிவிக்கவும் முயன்றேன்.

உங்களின் நாகரீகமற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம், இந்திய ராணுவம் பற்றிய கொடியேறியின் பேச்சு என்ற ஒருதலைப்பட்சமான உங்களின்  கருத்தை விமர்சித்தேன். கேரளத்தில் ஒரே ஒரு தொலைக்காட்சி கூட, உங்களின் சொந்த தொலைக்காட்சியான ஏசியாநெட் உட்பட இதனை ஒரு தலைப்பாக எடுத்து விவாதிக்கவில்லை, கேரளத்தில் இதுவொரு சர்ச்சையே இல்லை ஏனென்றால் கேரளத்தில் அனைவருக்கும் அது ’AFSPA’ (ராணுவ சிறப்பு அதிகாரச்) சட்டத்தின் பேரால் நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்களுக்கு எதிரான கருத்தே அன்றி ராணுவத்திற்கு எதிரானவை அல்ல என்று தெரியும். ஆனாலும் நீங்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான, முன்பே திட்டமிடப்பட்ட திரைக்கதையின் ஒரு பகுதியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தீர்கள்.

27.04.2016 அன்று உச்ச நீதிமன்றம், மணிப்பூரில் AFSPA சட்டத்தின் கீழ், பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட 1528 கொலைகளைக் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்திருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். உங்களுக்கு வசதிப்படாத உண்மைகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டீர்கள், ஒருவேளை நீங்கள் AFSPA குறித்த அத்தகைய பிரச்சனைகளை கவனிக்காமல் விட்டிருக்கலாம். (எல்லாவகையிலான பத்திரிக்கை தர்மங்களை விடவும், உங்கள் முறையிலான நிகழ்ச்சி நெறியாள்கையானது, மிக அதிகமான கூச்சலிடும் திறமையைக் குறித்ததே அன்றி, கவனமாக வாசிப்பது, புதிய கருத்துக்களை உள்வாங்குவது, எடுத்த தலைப்பில் முழுமையான அறிவைப் பெறுவது, உள்வாங்குவது என்பதாக இல்லை. உங்களைப் போன்ற நபர்கள் உங்கள் குரல் வளத்தால் நீடித்திருக்கலாமேயன்றி, சிந்தனைத் திறனால் அல்ல). பிறகு ஒரு கோழையைப் போல சங்கி குண்டர்கள் சூழ மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக விஷம் தோய்ந்த பொய்களை துப்பத் தொடங்கினீர்கள், அதில் தலையிடுவதற்கு எந்த வாய்ப்பையும் எனக்குத் தரவில்லை.

இந்திய ராணுவத்தை நாங்கள் ஒருநாளும் அவமதித்ததில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லும்போதும் எனது பெயருக்கு மேல், ராணுவத்துக்கு எதிரானவர் என்று போட்டு தொலைக்காட்சியில் காட்டினீர்கள். இது உங்களின் முதலாளி ராஜீவ் சந்திரசேகரனுக்கும், உச்சத் தலைமையான சங்க பரிவாரங்களுக்கும் மனம் குளிரச் செய்வதற்கான அசிங்கமான நடவடிக்கை ஒன்றாகவே அமைந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியை தாக்கும் தகுதியற்ற, வசைபாடல்கள், இந்திய வரலாற்றைக் குறித்த உங்களின் அறிவு – ஒரு ஆரம்பப் பள்ளிக் குழந்தை அளவிற்குக் கூட இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. பள்ளியில் உங்களுக்கு பாடமெடுத்த வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்று அறிவே இல்லாத, வெட்கமில்லாத உங்கள் பேச்சையும், அறியாமையையும் கண்டு வெட்கப்படுவார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், ஆரம்ப நிலை வாசகர்களுக்காகத் தரப்படும் பிரசுரங்கள் சிலவற்றை பரிந்துரை செய்கிறேன், வரலாற்றைக் குறித்த வேறு ஏதும் தீவிரமான எழுத்துக்களை வாசித்தால் உங்களுக்கு அது அஜீரணமாகலாம். கம்யூனிஸ்டுகள் அல்ல, வி.டி.சாவர்க்கார்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார், திரும்பத் திரும்ப மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார் என்று நான் சொல்லியபோது, உங்கள் வாழ்க்கையிலேயே முதல் முறையாக அதனைக் கேள்விப்படுவதாகத் தெரிந்தது. அந்த மன்னிப்புக் கடிதங்களின் நகல்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன், அடுத்தமுறை பேசும்போது உங்கள் ‘தேச பக்த’ இந்துத்துவ ஆசான்களை பாதுகாக்க மேலும் எச்சரிக்கையுடன் பேச அது உதவிடும்.

நம் வரலாற்றைக் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்ள தனிப்பயிற்சி (ட்யூசன்) வகுப்புகளில் சேரவும் நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இந்த வயதில் அடிப்படை நடத்தை விதிகளையும், நாகரீகமான செயல்பாடுகளையும் வளர்த்துக் கொள்ள முடியுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இத்தகைய தகுதிகள், நாம் எந்த வகையில் சிறு வயதிலிருந்தே வளர்க்கப்பட்டோம் என்பதைப் பொருத்தே  நம்மிடம் வந்து சேரும். இங்கே நான் ஒன்றை உங்களிடம் சொல்லியாக வேண்டும். எனக்கு ராணுவம் என்பது ஒரு தொலைக்காட்சி அரங்க அனுபவம் அல்ல. நான் பிறந்ததே ஒரு ராணுவ மருத்துவமனையில்தான், எனது இளமைப் பருவம் முழுவதும் ராணுவச் சூழலிலேயே கழிந்தது. அர்நாப், நான் இந்திய ராணுவத்திற்கு பல ஆண்டுகள் சேவையாற்றியவரின் பெருமைக்குரிய மகன். அவர் 1971 ஆம் ஆண்டு போரிலும் பங்கேற்று சண்டையிட்டார். ஒரு முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் என்கிற முறையில் ஒரு ராணுவக் குடும்பத்தின் தியாக வாழ்க்கையில், மற்ற பல குடும்பத்தாரைப் போலவே, பங்கேற்றுள்ளேன். ராணுவத்தின் பேரால் வார்த்தை ஜாலங்களும், நாடகத்தனமான பேச்சுக்களையும் கொண்டு ரேட்டிங் உயர்த்துவதைத் தவிர, ராணுவத்திற்காக நேர்மையாக நீங்கள் மேற்கொண்டிருப்பவை என்ன? இப்போது சொல்லுங்கள்.

இறுதியாக எனது ஆலோசனை, இந்திய ராணுவத்தின் தானே வழிந்து முன் நிற்கும் தூதுவராக, நீங்கள் நடத்திய ‘பர்பார்மென்ஸ்’-ஸை, நேரமெடுத்து ஒருமுறை பார்க்கவும். அது எத்தனை அருவெறுப்பான ஒன்று என்பதை நீங்கள் உணர்வதுடன், வேறொரு வேலையைத் தேடிக் கொள்ளவும் அது உதவும். அதற்கு நேரம் கிடைக்கும் வரையில், பார்வையாளர்களாகிய எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை. உங்களின் உச்ச ஸ்தாயையில் உருவாக்கப்படும் புத்தியற்ற கூற்றுக்களின் மாசுக்களை நாங்கள் பொருத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதற்கு காரணம், நீங்கள் சரியாகவே குறிப்பிட்டதைப் போல, நானொரு பெரிய தலைவருமில்லை, அப்படியொரு தலைவனாக வர நான் விரும்பவுமில்லை.

வாழ்த்துக்கள்…

எம்.பி.ராஜேஷ்

மாநிலக்குழு உறுப்பினர், கேரள மாநிலக்குழு, சிபிஐ(எம்)

(தமிழில் : இரா.சிந்தன்)

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...