விவசாய சங்கங்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

விவசாய சங்கங்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வரட்சியின் காரணமாக விவசாயம் கடுமையாக பாதித்து சுமார் 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியினாலும் மரணம் அடைந்துள்ளார்கள். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும், மரணமடைந்த விவசாயி குடும்பங்களுக்கும் போதிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் இதுவரையில் வழங்கிடவில்லை. தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரணமாக 39,565 கோடி ரூபாய் வழங்கிட வேண்டுமென தமிழக அரசு கோரியிருந்த போதிலும், மத்திய அரசு 1,748 கோடி ரூபாய் மட்டும் வழங்கியுள்ளது. மத்திய அரசின் வறட்சி நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொரியை வழங்குவது போன்றுள்ளது.

பலமுறை வற்புறுத்திய பின்னரும் தமிழக அரசின் வறட்சி நிவாரண அறிவிப்பானது விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. பல லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை. அழிந்த பயிர்களுக்கான கடன் தள்ளுபடியும் செய்யவில்லை.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பதையும் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயம் தொடர் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்ற பொதுமக்களின் போராட்டத்தின் காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் தற்போது மத்திய அரசு அங்கு அத்திட்டத்தை துவக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதானது ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக பொதுமக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து மீண்டும் பொதுமக்கள் போராட்டக்களத்தில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும், கடன் தள்ளுபடி, முழுமையான வறட்சி நிவாரணம் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 17 நாட்களாக புதுடில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை ஆதரித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். இக்கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வருகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலும், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  31-3-2017 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், 3-4-2017 அன்று தஞ்சையில் கறுப்புகொடி ஆர்ப்பாட்டமும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் இதே கோரிக்கைகளுக்காக 3-4-2017 அன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் இப்போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்து பகுதி மக்களும் ஓரணியில் திரண்டு குரலெழுப்ப வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

ஐநா சபை வாக்கெடுப்பு : இலங்கை தமிழர்களுக்கு மோடி அரசாங்கம் துரோகம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் !

இலங்கையில் நீண்டகாலமாகவும், இறுதிக்கட்ட போரின் போதும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து ஐ.நா. மனித ...