சீமைக் கருவேல மரங்களை, பகிரங்க டெண்டர் மூலம் அகற்றுக …

21.02.2017

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 20,21.02.2017 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர்கே.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தீர்மானம்:1

தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை பிப்ரவரி 27-ந் தேதிக்குள் அகற்ற வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பல இடங்களில் அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவில் தனியார் நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை சம்பந்தப்பட்டவர் அகற்றவில்லை என்றால் அரசே அகற்றிவிட்டு செலவினத்தில் இரு மடங்கு தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான வறட்சியின் காரணமாக வேலையின்றி வருமானமின்றி மக்கள் வாழ வழியின்றி இருக்கிறார்கள். பிழைப்பு தேடி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பணம் செலவழிப்பது சாத்தியமற்றது என்பதை அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து பொதுமக்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கோருகிறது.

அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதில் தீவிரமான நடவடிக்கை எடுப்பதுடன் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பகிரங்க டென்டர் மூலம் இப்பணி மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அத்துடன் மாற்று மரங்களை நடுவதற்கும் அரசு திட்டமிட வேண்டும்.

சீமைக் கருவேல மரங்களை பயன்படுத்தி கரி தயாரித்து விற்பனை செய்வதை பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இத்தகைய குடும்பங்களின் மறுவாழ்விற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலைபாடு

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 26.4.2021 அன்று காலை 9.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை ...