மக்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மாநிலந்தழுவிய பிரச்சார – களப்போராட்டம்

13.5.2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று (13.5.2017) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை:

மக்கள் வாழ்வாதாரத்தைக் காக்க

மாநிலந்தழுவிய பிரச்சாரகளப்போராட்டம்

சிபிஎம் மாநிலக்குழு அறைகூவல்

மத்தியில்  ஆட்சிப்பொறுப்பேற்ற பாஜக நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை வேகமாக அமலாக்கி வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார அமைப்புகளின் வகுப்புவாத, மதவெறி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

வரலாறு காணாத வறட்சியினால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசு சொற்பத் தொகையே ஒதுக்கியுள்ளது. ஊருக்கு சோறு போடும் உழவர்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டும், கருகிய பயிரை கண்டு நெஞ்சடைத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் விவசாயிகள் வறட்சியினால் இறக்கவில்லை என மாநில அரசு கூறுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், விவசாயத்தை நம்பி வாழும் விவசாயத் தொழிலாளர்களும் வாழ வழியின்றி குடிபெயர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய பின்னணியில் மத்திய, மாநில அரசுகளுடைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற உள்ள நாடு தழுவிய இயக்கத்தினையொட்டி தமிழகத்தில் மே 15- முதல் மே 21 வரை மக்கள் வாழ்வாதாரத்தைக் காத்திட பிரச்சார இயக்கமும், களப்போராட்டங்களும் நடத்திட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு திட்டமிட்டுள்ளது.

*             வறட்சியினால் தற்கொலை செய்து கொண்டு/ அதிர்ச்சியினால் இறந்த அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும்.  தேசிய வங்கிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும்.  விவசாய விளைபொருட்களுக்கு சாகுபடி செலவில் ஒன்றரை மடங்கை விலையாகத் தீர்மானிக்க வேண்டும்.

*             ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வெட்டிச்சுருக்கியிருக்கிறது. வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை கொடுப்பதோடு, நாள் ஒன்றுக்கு ரூ.400 கூலியாக வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் வேலை உறுதித்திட்டத்தை அமலாக்கிட வேண்டும்.

*             மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ.  5 முதல் 10 வரை விற்கப்படுகிறது. கடந்த காலங்களில் நீர்நிலைகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் தூர்வாரி  பராமரிக்கப்படவில்லை. உடனடியாக நீர்நிலைகளில் தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி குடிநீர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும்.

பொது விநியோக முறை:

தமிழகத்தில் ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. ஆதார் அட்டையைக் காரணம் காட்டி பல்லாயிரம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேசன் கடைகளில் அரிசி. மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. தமிழகத்திற்குத் தேவையான ரேசன் பொருட்களில் பாதியளவு மட்டுமே மோடி அரசு தருகிறது. சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றை ரேஷன் முறையிலிருந்து நீக்குவதற்கும் மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. பொதுவிநியோக முறையையே முற்றாக ஒழித்துக்கட்ட மத்திய-மாநில அரசுகள் முயல்வது ஏழை-எளிய மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதியாகும்.

பொதுத்துறையைப் பாதுகாப்போம்:

சேலம் உருக்காலையை தனியாருக்கு தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. 74-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மோடி அரசின் தீர்த்துக்கட்டப்பட வேண்டிய பட்டியலில் உள்ளன. இது இந்தியப் பொருளாதாரத்தின் சுய சார்பைத் தகர்ப்பதோடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்துவரும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யும் சமூக அநீதியுமாகும்.

தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு:

இந்தியாவிலேயே அரசு மருத்துவக்கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் ஆகும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் கிராமப்புறங்களில், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு ஓரளவு மருத்துவக் கல்லூரி இடங்கள் கிடைத்துவந்தன. ஆனால், நீட் தேர்வு என்ற பெயரில் தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு பறிக்கப்படுகிறது.

கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் இடஒதுக்கீடும் ரத்து செய்யப்படுகிறது.

ஆறாய் ஓடும் மதுபானம்:

குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் போதை ஏறுவதற்கான தண்ணீரை ஆர்வமாய் விற்றுக்கொண்டிருக்கிறது மாநில அதிமுக அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதியில் திறக்க துடியாய்த் துடிக்கிறது. இதை எதிர்த்து பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வீதிக்கு வந்து போராடினால் வெறிநாயாய் விழுந்து பிடுங்குகிறது தமிழகக் காவல்துறை. சாலைகளின் பெயர்களை மாற்றி டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்து குடி கெடுக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

வேற்றுமையில் ஒற்றுமை ஒழிக்கப்படுகிறது:

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெருமை படைத்தது. பல்வேறு மதங்களை பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளை பேசக்கூடிய பல்வேறு பண்பாட்டை பேணக்கூடிய மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதுதான் நமது நாட்டின் பெருமை. ஆனால், தமிழ் மக்கள் உட்பட இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழியை கட்டாயமாக திணிக்க முயல்கிறது மத்திய பாஜக தலைமையிலான அரசு.  கிலோமீட்டர் கல் துவங்கி திரைப்படங்களில் சப் டைட்டில் வரை இந்தி திணிக்கப் படுகிறது.எந்த ஒரு மொழியையும் திணிக்காமல் அனைத்து மொழிகளுக்கும் சமவாய்ப்பும் மரியாதையும் அளிக்கப்படுவதே ஜனநாயக மாண்பாகும்.

மத்திய அரசு

மோடி அரசு. மத, இன, மொழி, சாதி அடிப்படையில் மக்களை மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதில் தொடங்கி நீட் தேர்வு வரை, உணவுப்பொருள் ஒதுக்கீடு துவங்கி ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை தமிழகத்தை வன்மத்துடன் வஞ்சிக்கிறது மோடி அரசு.

மாநில அரசு

இரண்டு அணியாகப் பிரிந்து கடந்த கால ஊழல் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பதவியைத் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து கொள்ளையடிக்கவும் முயல்கிறது ஆளும் கட்சியான அதிமுக. வருமான வரித்துறையும், மத்திய புலனாய்வு துறையும் மத்திய அரசுக்கு சாதகமாகப்  பயன்படுத்தப் படுகின்றன.   இதனால் மோடி அரசை தட்டிக்கேட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் தைரியம் இவர்களுக்கு இல்லை.

இத்தகைய சூழலில் மாநில மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க,

மே 15 அன்று மாநில முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும்.

மே 16 முதல் 21ம் தேதி வரை மாநில முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கம் உள்ளிட்ட களப்போராட்டங்கள் நடைபெறும்.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...