மோடியின் ஈராண்டுகள்: தலித், பழங்குடியினர் மற்றும் பெண்கள்

நாட்டில் பல நூறு ஆண்டுகளாகவே பாகுபாட்டுக்கு உள்ளாகிய தலித்துகள் மற்றும் பழங்குடியினர், தற்போது மோடி அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக தொடர்ந்து பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் இதுநாள் வரை பட்ஜெட்டுகள் மூலம் அளித்துவந்த ஆதரவும்கூட மோடி ஆட்சியின்கீழ் எப்படியெல்லாம் வெட்கக்கேடான முறையில் வெட்டி சுருக்கப்பட்டுள்ளன என்று கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இத்துடன் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றன.

1.பட்ஜெட்டில் தலித் துணைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி தலித்துகளுக்கு மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 16.6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் கடந்த ஈராண்டுகளாக வெறும் 8.5 சதவீதம்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2016-17ஆம் ஆண்டு பட்ஜெட்டில்கூட வெறும் 7.6 சதவீதம்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மொத்த பட்ஜெட் தொகையில் தலித் துணைத் திட்டத்திற்கு 91,301 கோடி ரூபாய் (16.6 சதவீதம்) ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 38,823 கோடி ரூபாய் (7.06 சதவீதம்) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும்கூட, தலித் சமூகத்தினர் இதன்மூலம் நேரடியாகப் பயனடைந்தது, வெறும் 6,570 கோடி ரூபாய் (1.19 சதவீதம்) மட்டுமே. தலித் பெண்களுக்கு 1 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2. மெட்ரிகுலேசன் வரை தலித் மாணவர்களுக்கு அளித்துவந்த கல்வி உதவித்தொகை (°காலர்ஷிப்) ஒதுக்கீடு 34 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தலித் பெண்கள் மற்றும் பையன்களுக்கான விடுதி நிதி (ழடிளவநட கரனேள) முறையே 21 சதவீதமும், 80 சதவீதமும் குறைந்துவிட்டது.

3. துப்புரவு தொழிலாளர்கள் புனர்வாழ்விற்கான மொத்த ஒதுக்கீடு இந்த ஆண்டு வெறும் 201 கோடி ரூபாய் மட்டுமேயாகும்.

4. 2014ஆம் ஆண்டு தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிடும் தலித்துகள் 32.4 சதவீதமாகும்.

5. பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் மொத்த பட்ஜெட் தொகையில் 8.6 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட இதில் பாதியளவுதான் – அதாவது 4.4 சதவீதம்தான் – ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது.

6. 2016-17ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒதுக்க வேண்டிய பாக்கித்தொகை மட்டும் 47,300 கோடி ரூபாயாகும். இதில் 24,005.39 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. பண்டைய பழங்குடியினக் குழுக்களின் வளர்ச்சித் திட்டங்கள், தகுதி மற்றும் பொருளாதாரரீதியான கல்வி உதவிப்பணம், மொழி ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பஞ்சாயத்துப் பயிற்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் கணிசமாக வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் உள்ள இரு பழங்குடியினர் பல்கலைக் கழகங்களுக்கும் வெறும் 15 லட்சம் ரூபாய்தான் அவற்றின் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

7. 2015-16ஆம் ஆண்டில் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான ஒதுக்கீடு 40,014 கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும். ஆனால், 19,980 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. 2014-15இல் இத்தொகை 26,714 கோடியாக இருந்தது.

8. “குறைந்த படிப்பறிவு உள்ள’’ மாவட்டங்களில் பழங்குடியின சிறுமிகளின் கல்வியை வலுப்படுத்துவதற்காக ஒரு திட்டம் செயல்பட்டு வந்தது. 2016-17 பட்ஜெட்டில் இது முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது.

9. அரசாங்கத்தின் 2012ஆம் ஆண்டு பொது கொள்முதல் கொள்கையின்படி, அரசின் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் தலித்துகள்/ பழங்குடியினருக்குச் சொந்தமான நிறுவனங்களிலிருந்து குறைந்தபட்சம் 4 சசதவீத அளவிற்கு பொருள்கள் வாங்குவதை உத்தரவாதம் செய்திட வேண்டும். ஆனால் இந்த ஆணை எந்த சமயத்திலும் அமல்படுத்தப்படவில்லை.

10. கல்விக்கான ஒதுக்கீடு தலித் துணைத் திட்டத்தின்கீழ் 10,194.7 கோடி ரூபாயும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் 5,486.44 கோடி ரூபாயும் 2015-15ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குறைக்கப்பட்டிருக்கிறது.

11. மெட்ரிகுலேசனுக்கு மேலே படிக்கும் தலித்/பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை (°காலர்ஷிப் தொகை)-யும், 1904.78 கோடி ரூபாயிலிருந்து 1,599 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

12. தேசிய குற்றப் பதிவு நிலையத்தின் (NCRB) தரவின்படி, 2014ஆம் ஆண்டில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 47,064 பதிவாகியிருக்கின்றன. இது 2013இல் 39,408ஆகவும், 2012இல் 33,655ஆகவும் இருந்தது. அதாவது 19 சதவீதம் அதிகமாகும்.

13. மேற்படி தேசிய குற்றப் பதிவு நிலையத்தின் 2014ஆம் ஆண்டின் தரவின்படி தலித்துகளுக்கு எதிரான குற்றங்களுக்காகக் குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டவை 92.3 சதவீதமாகும். இதில் தண்டனை அடைந்தோர் விகிதம் 28.8 சதவீதமாகும்.

பெண்கள் மகளிரை மேம்படுத்துவதற்காகவும் குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதற்காகவும் செயல்பட்டு வந்த பல திட்டங்கள் மோடி அரசாங்கத்தின் கீழ் கைவிடப்பட்டுவிட்டன.

1. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்திற்கு (ஐசிடிஎ° திட்டத்திற்கு) 15,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இது இப்போது மாற்றியமைக்கப்பட்டு வெறும் 1,300 கோடி ரூபாயாக சுருக்கப்பட்டுவிட்டது. குழந்தைகளுக்கு சமைத்த உணவுப் பண்டங்கள் முறையாக அளிக்கப்படுவதில்லை. அங்கன்வாடி ஊழியர்கள்/உதவியாளர்களுக்கு ஊதியம் முறையாக அளிக்கப்படுவதில்லை.

2. உணவுப்ப பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் 6 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு உரிமை பெற்றிருந்தார்கள். ஆயினும் இதற்கான ஷரத்து எதுவும் பட்ஜெட்டில் இல்லை. இந்தத் திட்டத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் நடப்பில் இத்திட்டம் 53 மாவட்டங்களில் மட்டும் 500 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

3. அதேபோன்றே பெண்கள் மற்றும் தாய்மார்களின் உடல்நலம் தொடர்பாகக் கொண்டுவரப் பட்டிருந்த மேலும் பல திட்டங்களும் வெட்டி சீர்குலைக்கப்பட்டுள்ளன.

4. 2014-15ஆம் ஆண்டில் மொத்த பட்ஜெட் தொகையில் 4.19 சதவீதம் பாலினத்தவருக்காக (பநனேநச) ஒதுக்கப்பட்டிருந்தது. அது இப்போது 2015-16ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 3.71 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

5. புதுதில்லியில் 2013ஆம் ஆண்டில் பெண் ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து. நாடு முழுதும் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நிர்பயா நிதியம் என்று 3 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் நாடு முழுதும் மொத்தம் உள்ள 653 மாவட்டங்களில் வெறும் 14 மாவட்டங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு, திட்டங்களுக்காக 1800 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

(தமிழில்: ச. வீரமணி)

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply