மோடியின் ஈராண்டுகள்: சுகாதாரத் துறையின் நிலைமை என்ன?

-டாக்டர் அமித் சென்குப்தா

மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அளிப்பதில் தற்போதுள்ள அரசாங்கத்திற்கு திறமையோ அல்லது விருப்பமோ இல்லை என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டதிலிருந்து இந்த அரசாங்கத்தின் மீது விரக்தி வளர்ந்து கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கம் கைகழுவி விட்ட துறைகளுக்கு சுகாதாரத்துறை ஓர் எடுத்துக்காட்டாகும். மக்கள் நலன் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சுகாதாரத்துறையை அது முற்றிலுமாகக் கைகழுவிவிட்டிருக்கிறது. சுகாதாரத்துறையில் கொள்கையை வகுப்பதிலோ அல்லது அதனை அமல்படுத்துவதிலோ அது சிறிதும் அக்கறை காட்டவில்லை. மோடி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன் சுகாதார நலன் உறுதிப்படுத்தப்படும் என்று காட்டுவதற்காக ’சுகாதார உறுதிமொழி’ என்னும் முழக்கத்தை உருவாக்கியது, கடந்த ஈராண்டு கால மோடி ஆட்சி, அது வெற்று முழக்கமே என்பதை உறுதிப் படுத்தி இருக்கிறது.

சுகாதாரம் தொடர்பான கொள்கையைப் பொறுத்தவரை அதற்கு ஒரு தொலைநோக்குப் பார்வை எதுவும் கிடையாது என்று நன்கு தெரியத் தொடங்கி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்தசமயத்தில் சுகாதாரத்துறை சார்பாக ஒரு துல்லியமான கொள்கையை வகுத்துத்தருமாறு கோரி ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எனினும் அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது தூசி அடைந்து, மவுனமாக புதைக்குழிக்குள் தள்ளப்பட்டுவிட்டது போன்றே தோன்றுகிறது.

புதிய தேசிய சுகாதாரக் கொள்கையின் வரைவு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு, அதன்மீது பொதுமக்களின் கருத்துக்களும் வரவேற்கப்பட்டன. அவ்வாறு வரப்பெற்ற கருத்துக்களும் தொகுக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் வரைவு மாற்றி யமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அந்த வரைவு அறிக்கை கடந்த ஆறு மாத காலமாக அமைச்சகத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது வீணே கிடக்கிறது. சுகாதாரக் கொள்கையின் வரைவு குறித்து அரசாங்கம் சந்தோஷமாக இல்லை என்பது சில பத்திரிகைச் செய்திகள் மூலமாகத் தெரிய வருகின்றன. இந்த வரைவு அறிக்கையை நிட்டி ஆயோக் விரும்பவில்லை என்று சில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. நிட்டி ஆயோக், அமைச்சகத்திற்கு எழுதியுள்ள ஒரு கடிதம் பத்திரிகை ஒன்றிற்கு கசிந்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“சுகாதாரப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஈரடக்கு முறை இருப்பது என்பது, — அதாவது வசதி படைத்தோருக்கும், செல்வாக்கு மிக்கவர்களுக்கும் ஒரு முறையும், வறியவர்களுக்கும், செல்வாக்கு இல்லாதவர்களுக்கும் மற்றொரு முறையும் இருப்பது என்பது அறநெறிப்படியும், சமூக மாண்புகளின்படியும் சரியல்ல என்றபோதிலும், — அந்த முறையே தொடர வேண்டும். அதனை மாற்றுவது என்பது அதாவது தற்போது பெரும்பாலான மக்கள் தனியாரிடம் சிகிச்சைக்காகச் செல்வதை மாற்றி, அவர்களைப் பொதுத்துறை மூலம் சிகிச்சை பெற வைப்பது என்பது நடைமுறைச் சாத்தியமல்ல.’’ நிட்டி ஆயோக் மேலும் இந்த அறிக்கை, பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதையும் கடுமையாகச் சாடி இருக்கிறது.

மத்திய அரசாங்கம் தன்னுடைய பட்ஜெட்டில் ஏற்படுத்தியுள்ள நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்திட, சுகாதாரத்துறைக்கு ஒதுக்கிய நிதியில்தான் கைவைத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டின் இறுதியில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கிய நிதியில் சுமார் 20 சதவீதத்தை வெட்டிக் குறைத்துள்ளது. 2015-16ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டிலும் அதே அளவிற்கு வெட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. சுகாதாரத் துறைக்கான மொத்த ஒதுக்கீட்டில் 5.7 சதவீதம் அளவிற்கு வெட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. 2014-15ஆம் ஆண்டில் 35,163 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீடு, இந்த ஆண்டு 33,152 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது. அதேபோன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்திற்கு (ஐசிடிஎ° திட்டத்திற்கு) முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், சரிபாதியாகக் குறைத்திருக்கிறது. அதாவது சென்ற ஆண்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 8 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு ஸ்தாபனத்தின் பட்ஜெட்டிற்கு முன்பு 1785 கோடி ரூபாயாக இருந்தது, 1395 கோடி ரூபாயாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. இதே திசைவழியில்தான் 2016-17ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டும் தொடர்கிறது, அரசாங்கத்தால் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட தேசிய சுகாதார திட்டத்திற்கு அற்ப அளவிலேயே தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2015-16ஆம் ஆண்டில் 19,135.37 கோடி ரூபாயாக இருந்தது, 2016-17இல் 19,437 கோடி ரூபாயாக ஆகி இருக்கிறது. தற்போதுள்ள பணவீக்கத்தையும் மற்றும் மக்கள்தொகை அதிகரித்திருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டோமானால், இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 6-7 சதவீதம் குறைவாகும்.

இவ்வாறு சுகாதாரத் துறையில் செலவினங்களில் வெட்டினை ஏற்படுத்தி இருப்பதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் நடைமுறையில் நன்கு தெரிகின்றன. இதன் விளைவாக, தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் (சூயவiடியேட சுரசயட ழநயடவா ஆளைளiடிn) நடவடிக்கைகள் பல மாநிலங்களில் தடுமாறுகின்றன. மோடி அரசாங்கம் பொறுப்பேற்றபின், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை செலவிடப்படுவதில் சிக்கனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 2014-15இன் முதல் ஆறு மாதங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் 42 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது. அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிற தரவுகளே மிகவும் மோசமான சித்திரத்தைக் காட்டுகின்றன. இத்திட்டத்தின்கீழ் பணிபுரிந்துவந்த கிராம சுகாதார செவிலியர்களின் எண்ணிக்கை 2014க்கும் 2015க்கும் இடையே குறைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதேபோன்று இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த ஸ்பெஷலிஸ்ட்டுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருக்கிறது. 2015 மார்ச்சில் வழங்கப்பட்ட °பெஷலி°ட்டுகளின் பணியிடங்களில் வெறும் 18.8 சதவீத அளவிற்கே நிரப்பப் பட்டிருக்கின்றன.

இத்திட்டத்தின் கீழான கட்டமைப்புவசதிகளும் மிகவும் மந்தமாகவே உருவாக்கப்பட்டு வருகின்றன. 2014-15ஆம் ஆண்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 288ம், புதிய சமூக சுகாதார மையங்கள் 33ம் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் திட்டமிட்டபடி இவை முறையே 572ம் 176ம் திறக்கப்பட்டிருக்க வேண்டும். எச்ஐவி மற்றும் காசநோய் திட்டங்களுக்கான மருந்துகளின் இருப்பில் மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது.

இவ்வாறு மோடி அரசாங்கத்தின்கீழ் சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டு முடக்கப்பட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது. உலகில் மிகப்பெரிய அளவில் சுகாதார அமைப்பு முறை தனியார்மயப்படுத்தப்பட்டிருப்பது இந்தியாவில்தான், இதற்கான பொது செலவினம் இந்தியாவில்தான் மிகவும் குறைவானதாகும். இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான மொத்த செலவினத்தில் 32 சதவீதம் மட்டுமே பொது செலவினத்தின்கீழ் செலவிடப்படுகிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள தரவின்படி பொது சுகாதாரத்திற்காக செலவிடும் 190 நாடுகளில் இந்தியா கடைசியில் 16ஆவது நாடாக இருக்கிறது, சியர்ரா லியோன், ஆப்கானி°தான், ஹைத்தி, கினி போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீத அடிப்படையிலும்கூட இந்தியா மிகவும் மோசமாகத்தான் செலவு செய்கிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம் மட்டுமே இந்தியாவில் செலவிடப்படுகிறது.

உலக நாடுகளில் கடைசியில் 12ஆவது நாடாக இந்தியா இருக்கிறது. மியான்மர், ஹைத்தி, தெற்கு சூடான், டிமோர்-லெஸ்டே மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் இந்தியாவிற்கும் கீழே இருக்கின்றன. ஐமுகூ அரசாங்கத்தின் கடைசி பத்தாண்டு கால ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் குறைந்த அளவே பொது சுகாதாரத்திற்கு செலவிடப்பட்டது. இப்போது தேஜகூ ஆட்சியில் அது மேலும் குறைந்துள்ளது.

பாஜக அரசாங்கம் பொது சுகாதாரத்துறையில் பொது செலவினத்தைக் குறைத்திடும் அதே சமயத்தில், இதன்கீழ் தனியார் கொழுப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கிறது. முந்தைய திட்டக் கமிஷன் உயர்மட்டக் குழு, அரசாங்கத்தின் சார்பில் செயல்பட்டுவந்த சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை ரத்து செய்துவிடலாம் எனப் பரிந்துரைத்திருந்த அதே சமயத்தில், மோடி அரசாங்கம் இன்சூரன்ஸ் திட்டங்களைத் தனியாரிடம் தள்ளிவிட மூர்க்கத்தனமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. தற்போதுள்ள இன்சூரன்ஸ் திட்டங்கள் எதுவுமே ஏழை மக்களின் சுகாதாரச் செலவினங்களை ஏற்பதில்லை.

பல மாநிலங்களில் செயல் படும் தனியார் இன்சூரன்° நிறுவனங்கள் மக்களை மோசடியாக ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் சூறையாடி இருக்கின்றன, தேவையற்ற செலவுகளைச் செய்ய வைத்து மக்களின் சுகாதாரத்தையே பாழ்படுத்தி இருக்கின்றன.

மோடி அரசாங்கம். 2015-16 பட்ஜெட்டில் தனியார் சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்வோருக்கு வரிச் சலுகைள் அளித்திருக்கின்றன. அதே சமயத்தில், பாஜக ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் நடைமுறையில் செயல்பட்டு வந்த கிராமப்புறப் பொது சுகாதார அமைப்புகளைத் தனியாரிடம் ஒத்தி அடிப்படையில் ஒப்படைத்திருக்கின்றன.
பாஜகவின் சிந்தனாவாதிகளும் தனியார்துறையிடம் தங்களுக்கிருக்கின்ற பாசத்தினை மறைப்பதில்லை, மருத்துவத்துறையைத் தனியாரிடம் தாரை வார்ப்பதன்மூலம் தாங்கள் மிகப் பெரிய அளவில் ஆதாயம் அடைய முடியும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். தனியார் மருத்துவத் துறையில் நடைபெறும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவத்துறை மிக வேகமாக கார்ப்பரேட் துறையாக மாறிக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுதும் செயல்படும் பல்வேறு கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ஒரு கண்ணியாக இந்தியத் தனியார் மருத்துவமனைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

அதே சமயத்தில் மத்திய அரசும் தனியார் மருத்துவ மனைகளை முறைப்படுத்தக்கூடிய விதத்தில் நாட்டிலுள்ள மருத்துவமனைகள் நிறுவனச் சட்டத்தை நடைமுறைப்படுத்திடவும் தயங்குகிறது.
சுகாதாரத்துறையில் அரசின்கீழ் இயங்கி வந்த பல துறைகளை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் பொது செலவினத்தின்கீழ் பணம் எதுவும் ஒதுக்கிடாது, இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலம் அவற்றை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள சுகாதார சேவைகள் என்பவை அநேகமாக அடிப்படை சேவைகள் சார்ந்தவைகளேயாகும். மருத்துவத்துறையின் உயர்ரக மருத்துவ சேவைகளைத் தனியாரிடம் தள்ளிவிட்டிருக்கிறது.

இறுதியாக 2015 பட்ஜெட்டை நாம் பார்க்குங்கால், தனியார் சுகாதார இன்சூரன்° திட்டங்கள் வசதி படைத்தவர்கள் மற்றும் மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. மொத்தத்தில் சுகாதாரப் பாதுகாப்பைப் பொறுத்தவரை மோடி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை என்பது இதுதான்.

(தமிழில்: ச. வீரமணி)

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply