ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்திட வேண்டும்! – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

மத்திய உள்துறை அமைச்சர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மேலும் ஆறு மாதங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டித்து நாடாளுமன்றத்தில் தலையிட்டிருப்பது, காஷ்மீர் மாநில மக்களை மேலும் தனிமைப்படுவதற்கே இட்டுச் செல்லக்கூடிய ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். இது இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணக் கூடியதோர் ஆரோக்கியமான நடவடிக்கை அல்ல.

இவ்வாறு காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்படுவது என்பது, இந்த நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு நின்று முறியடித்திட தீர்மானித்திருக்கின்ற பயங்கரவாதத்தை அங்கே ஊட்டி வளர்ப்பதற்கே உதவிடும்.

அம்மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்திட நிலைமைகள் சுமுகமாக இருந்தது என்றால், சட்டமன்றத் தேர்தல்களை நடத்திட மட்டும் அதற்கான நிலைமைகள் சுமுகமாக இல்லை என்று கூறப்படுவது நம்பக்கூடிய காரணமாக இல்லை.

அங்கேயுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அம்மாநிலத்திற்கு உடனடியாக சட்டமன்றத் தேர்தல்களை நடத்திட வேண்டும் என்று கேட்டிருக்கின்றன. காஷ்மீர் மக்களை ஜனநாயகப் பாதையில் ஈர்த்திட இதுவே மிகவும் சிறந்த வழி என்று அவை கருதுகின்றன.

யாரையும் சந்திக்காத உள்துறை அமைச்சர்

மத்திய உள்துறை அமைச்சர் அம்மாநிலத்திற்குப் பயணம் செய்த இரு நாட்களிலும் அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் எவரையும் சந்திக்காதது என்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

மேலும் அவர் நாடாளுமன்றத்திலும், நாட்டிலேயே ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மட்டும்தான் அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் சிறப்பு ஷரத்துக்களைப் பெற்றிருக்கின்றன என்று கூறியிருக்கிறார். இது அரசமைப்புச்சட்ட ஷரத்துக்களை இழிவுபடுத்தும் போக்காகும்.

அரசமைப்புச் சட்டமானது, மகாராஷ்டிரா, குஜராத், நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்கானா), சிக்கிம், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 371, 371(A) முதல் (I) வரையிலான பிரிவுகளின் கீழ் சிறப்பு ஷரத்துக்களை வழங்கியிருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் நிலைமை வெறுமனே ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசாங்கம் ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிகளான,
(1) அங்கே இயங்கும் அனைத்துத் தரப்பினருடனும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தைக்கான நடைமுறையைத் தொடங்கப்படும் மற்றும்
(2) அங்கு வாழும் மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பனவற்றின் அடிப்படையில் மத்திய அரசு அவற்றை அமல்படுத்திடவும் முன்வர வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடத்துவதுடன் இவற்றையும் பொருத்தமான விதத்தில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

English Version: Hold Assembly Elections in the State of Jammu & Kashmir

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...