சர்வதேச மகளிர் தினம்: சிபிஐ(எம்) வாழ்த்து1

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே’ என்ற பாரதிதாசனின் வரிகள், சமுதாயத்தின் சரிபாதி விடுதலை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் அனைத்துவித பாகுபாடுகளையும் களைவதற்கான போராட்டங்களுக்கு சொந்தக்காரர்கள் என்ற முறையில் உலகெங்கிலும் உயர்ந்த லட்சியத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் பெண்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்நாளில் தன் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

முதலாளித்துவத்தின் இன்றைய முகமான நவீன தாராளமயம் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும் வாழ்வாதாரத்துக்கும் எதிராக யுத்தம் நடத்துகிற காலம் இது. பொருளாதார பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி ஏறுமுகமாகவே இருக்கிறது. அனைத்தும் வணிகமயமாகும் சூழலில், இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வெட்டிச் சுருக்கப்படும் போது பெரும்பாலான குடும்பங்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றன. ஏற்கனவே சமமற்றதாக உள்ள பெண்களின் நிலை இதனால் மேலும் பின்தள்ளப்படுகின்றது.

சாதி வெறியும், மத வெறியும் திட்டமிட்டுக் கிளப்பப்படுகின்றன. இவற்றின் முக்கிய கூறாக ஆணாதிக்கம் நிலவுகிறது. பெண்களின் சம உரிமை கருத்தியலை இவை மறுதலிக்கின்றன. வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. சாதி, மத தாக்குதல்களில் தலித் மற்றும் சிறுபான்மை பகுதிகளைச் சார்ந்த பெண்கள் கூடுதல் பாதிப்புகளை சந்திக்கின்றனர். பண்டிகைகளும், வழிபாடும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துக்காக மதவெறி சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பெண்களும் இரையாகின்றனர், இலக்காகின்றனர். மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படும் பிஜேபி அரசாங்கத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு திசை வழி, சம நீதி, சமூகநீதி கோட்பாடுகளை சிதைக்கின்றது.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. கௌரவக் கொலைகள் பரவலாக நடக்கின்றன. குடும்ப வன்முறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. காவல்துறையின் மனித உரிமை மீறல்களும் இக்காலத்தில் தொடர்கின்றன. மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் அதிகம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. போதை பழக்கம் வன்முறை அதிகரிப்பின் பின்புலமாக உள்ளது. சட்ட அந்தஸ்து கிடைத்தும் மாநில பெண்கள் ஆணையத்தின் செயல்பாடு முடங்கிக் கிடக்கிறது. அதே சமயம் நியாயம் கேட்டுப் போராட பெண்கள் முன்வருவதும் அதிகரித்திருக்கிறது.

கிராமப்புறங்களில் ஊரக வேலை சட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு சரிந்துள்ளது. சட்டத்தையே கிடப்பில் போடும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தொழிலாளர் நல சட்டங்கள் தளர்த்தப்படுவதும், சங்கம் வைக்கும் உரிமை மறுக்கப்படுவதும் பெண் தொழிலாளர்களைப் பெரிதும் பாதிக்கின்றன. ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பு பிற்போக்குக் கருத்தியலை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தடைகளை எல்லாம் தாண்டி, பல்வேறு துறைகளில் பெண்கள் முத்திரை பதித்து வருகின்றனர். அவர்களின் திறமைகளும், சாதனைகளும் சமூகத்திற்கு மறுக்க இயலாத பங்கினைச் செலுத்தி வருகின்றன.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் திமுக, அதிமுக போதை பழக்கத்துக்கு எதிராக, சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக, மதவெறிக்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக வலுவான பிரச்சாரம் செய்வதற்குத் தயாராக இல்லை. அத்தகைய சமூக சீர்திருத்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பங்கினை நிச்சயம் செலுத்தும். இந்நிலையில், பல்வேறு நாடுகளில் ஜனநாயக மற்றும் வாழ்வுரிமை கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பெண்களின் பங்கு கணிசமாக உயர்ந்து வருகிறது. அரசாங்கங்களின் கருணையினால் எதுவும் நடப்பது கிடையாது, போராட்டம் தான் தீர்வுக்கான வழி என்ற புரிதலுடன் தமிழகப் பெண்களும் போராட்டக் களத்தில் நிற்கின்றனர். அவர்களுடன் இணைந்தும், வழிகாட்டியும் சமநீதிப் பாதையில் தடைகளைத் தகர்த்து முன்னேறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி ஏற்கிறது.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...