தமிழகத்தில் இடது ஜனநாயக அணி

தமிழகத்தில் இடது ஜனநாயக அணி

(ஜூலை 23-24, 2015 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)

1.1) இடது ஜனநாயக அணி கட்டுவது முன்னுரிமை கடமை என 21-வது கட்சிக் காங்கிரஸ் பணித்துள்ளது. இடது ஜனநாயக அணி கட்டுவதின் முக்கியத்துவம் கருதி அந்தப்பார்வையோடு அன்றாடப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

1.2) கட்சித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது நிலப்பிரபுத்துவ, ஏகபோக முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரானது. இதற்கான மக்கள் ஜனநாயக அணியில் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், சிறு,குறு தொழில் முனைவர்கள் போன்ற வர்க்கங்களை திரட்டிட வேண்டும். இத்தகைய வர்க்கங்களை திரட்டி இன்று நிலவும் வர்க்கச் சமன்பாட்டில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். வர்க்கச் சமன்பாட்டில் தொழிலாளி வர்க்கத்திற்கு சாதகமாக மாற்றத்தை உருவாக்குவதற்கு கடைபிடிக்க வேண்டிய நடைமுறை உத்தியே இடது ஜனநாயக அணி.

1.3) மக்கள் ஜனநாயக அணி என்பது தொலைநோக்குத் திட்டம். இடது ஜனநாயக அணி என்பது அதை அடைவதற்கான அரசியல் நடைமுறை உத்தி. இடது ஜனநாயக அணி பற்றி 21-வது கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

1.4) “இடது ஜனநாயக அணி தான் பிஜேபி, காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவ-நிலப்பிரபுத்தவ சக்திகளுக்கான உண்மையான மாற்று சக்தியாகும். மக்கள் ஜனநாயக முன்னணிக்காக அணி திரட்டடப்பட வேண்டிய வர்க்கங்களை உள்ளடக்கியதாக இந்த அணி திகழ்கிறது. எனவே, தேர்தலை சந்திப்பதற்கோ அல்லது ஓர் அமைச்சரவையை உருவாக்குவதற்கோ பயன்படும் தேர்தல்கால கூட்டணியாக மட்டும் இது இருக்க முடியாது.”

1.5) இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான செயல்திட்டம் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 1. இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகள், 2. இடது ஜனநாயக திட்டம், 3. இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான பிரச்சாரங்கள், இயக்கங்கள், போராட்டங்கள், 4. மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற வலுவான சுயேச்சையாக செயல்படக் கூடிய கட்சியை கட்டுதல்.

1.6) இடது ஜனநாயக அணி கட்டுவதற்கு தமிழகத்தில் இன்றுள்ள சமூக பொருளாதார சூழலைப்பற்றிய புரிதல் அவசியம். 1950களிலிருந்து 1980களின் இறுதி வரை முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பின் கீழ் வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெரும் ஏற்றத் தாழ்வுகள் போன்ற பிரச்சனைகளை மக்கள் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் 1990களில் துவங்கி தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்களும், மாநிலத்தில் ஆட்சி செய்தவர்களும் அமலாக்கிய நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை அனைத்து துறைகளிலும் மேலும் மிகக் கடுமையான பாதிப்பை உருவாக்கியுள்ளது.

1.7) 1991ல் மொத்த உற்பத்தியில் 23 சதவிகிதமாக இருந்த விவசாயத்தின் பங்கு 2014-ல் 7.7 சதவிகிதமாக சரிந்து விட்டது. இதை நவீன வளர்ச்சியின் குறியீடாக பார்க்க முடியாது. காரணம் மாநிலத்தின் பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் பிற துறைகளில் வேலைவாய்ப்பின்றி வேளாண் துறையிலேயே கூலித் தொழிலாளிகளாகவும், நிலங்களை இழந்து வரும் சிறு-குறு விவசாயிகளாகவும் உழன்று கொண்டிருக்கின்றனர். 1991-ல் தொழில் உற்பத்தி மாநில உற்பத்தி மதிப்பில் 33 சதவிகிதமாக இருந்தது 2014-ல் 28.54 சதவிகிதமாக குறைந்துவிட்டது. சேவைத்துறையின் பங்கு இக்காலத்தில் 44 சதவீகிதமாக இருந்தது 63.7 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.

1.8) விவசாயத்தில் இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, கடன் வசதி குறைந்தது, கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்தது, வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. எல்லாம் சேர்ந்து விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. பொதுவாக விவசாயம் பாதிக்கப்பட்டதோடு சிறு-குறு விவசாயிகள் கூடுதலான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். விவசாய விளை நிலங்கள், விவசாயமல்லாத பயன்பாடுகளுக்கு மாற்றப்படுகிறது. விவசாய பணிகள் மேன்மேலும் இயந்திரமயமாக்கப்பட்டு வருகின்றன. விவசாய நிலப்பரப்பும் குறைந்து விவசாயத் தொழிலாளர்களின் வேலை நாட்களும் குறைந்து ஒரு பகுதி விவசாயத் தொழிலாளர்கள் பிழைப்புக்காக நகர்ப்புறம் மற்றும் இதர மாநிலங்களை நோக்கி செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகளையும் திரட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

1.9) கிராமப்புறங்களில் வேளாண்மையை பிரதான வருவாயாக கொண்டுள்ள குடும்பங்கள் 18 சதவிகிதம்தான். 65 சதவிகித குடும்பங்களின் பெரும்பகுதி வருமானம் உடல் உழைப்பிலிருந்து கிடைக்கிறது. தமிழக கிராமப்புறங்களில் மொத்தக் குடும்பங்களில கூலி வேலை செய்து வாழ்பவர்கள் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள். மொத்த கிராமப்புற குடும்பங்களில் சம்பளத்திற்கு ஒருவராவது வேலைசெய்யும் குடும்பங்கள் 10 சதவிகிதம். இத்தகையோரில் 78 சதவிகிதம்பேரின் மாத வருமானம் ரூ.5,000-ம், ரூ.5,000-க்கும் குறைவாகவும், 16 சதவிகிதத்தின் ரூ. 5,000 முதல் ரூ.10,000 வரை பெறுகின்றனர். தமிழகக் கிராமங்களில் 73 சதவிகித குடும்பங்களுக்கு சொந்த நிலம் கிடையாது. ஆக, தமிழக கிராமங்களில் கணிசமான பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர்.

1.10) ஒருபுறம் தமிழக கிராமப்புறங்களில் பெரும்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறத்தில் கிராமப்புற பணக்காரர்களின் ஆதிக்கம் பல மட்டங்களில் வலுவடைந்துள்ளது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் என்று சொல்லும்போது பெருமளவு நிலத்தின் மீது ஆதிக்கம் வகிக்கும் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ விவசாயிகள் என்று பொருள்படும். உலகமய பின்புலத்தில் நிலத்தின் மீது மட்டும் அவர்களது ஆதிக்கம் அமையவில்லை. அதேபோல அவர்களது வருமானம் மற்றும் லாபத்தின் ஒரே ஆதாரமாக நிலம் இல்லை. இந்த கிராமப்புற பணக்காரர்கள் நிலம் தவிர பணம் சம்பாதிக்கும் தொழில்களான வட்டிக்கு விடுதல், ரியல் எஸ்டேட், காண்ட்ராக்ட், கட்டுமானம், கல்வி நிலையங்கள் மற்றும் வியாபாரம் உள்ளிட்டு பல தொழில்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அரசு அதிகாரத்தில் பங்கேற்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், அதிகார வர்க்கம், காவல்துறை போன்றவற்றில் இடம்பெறுகின்றனர். பொதுவாக ஆளும் வர்க்க கட்சிகளைச் சார்ந்தவர்களாக அல்லது ஆதரவாளர்களாக செயல்படுவர். சாதிய ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். மொத்தத்தில் கிராமப்புறங்களில் அரசு அதிகாரத்தின் மீது கட்டுப்பாடு உடையவர்களாக இருக்கின்றனர். இவர்கள்தான் கிராமப்புறத்தில் ஆளும் வர்க்கப்பிரதிநிதிகளாக உள்ளனர்.

1.11) இவர்களுக்கும் உழைக்கும் வர்க்கங்களுக்கும் இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. இந்த அடிப்படையில் கிராமப்புறங்களில் அரசியல், பொருளாதார, சாதிய ஆதிக்கம் வகிக்கக் கூடிய இத்தகைய சக்திகளுக்கு எதிராக நிலத்திற்காகவும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதிக்கக் கூடிய பொருளாதார கொள்கையை அமலாக்கிடும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் போர்க்குணமிக்க இயக்கத்தின் மூலம் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகளைத் திரட்டிட இன்றைய சூழலில் கூடுதல் வாய்ப்புள்ளது.

1.12) மாத வருமானம் ரூ.10,000-மும் அதற்கும் குறைவாகவும் உள்ளவர்களே கிராமப்புறத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள். இவர்களுடைய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளுக்காக சரியான கோரிக்கைகளை உருவாக்கி கிராமப்புறங்களில் போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டத்தில் இவர்களை திரட்டிட வாய்ப்புள்ளது.

1.13) தொழில்துறையில் அன்னிய கம்பெனிகளுக்கு, இந்திய ஏகபோக நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம், வரிச்சலுகைகள் , தடையில்லா மின்சாரம் வாரி வழங்கப்படுகிறது. மறுபுறம் தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தாமை, நிரந்தரத் தன்மையுள்ள பணிகளிலும் குறைந்த கூலிக்கு ஒப்பந்த தொழிலாளர்களை வேலையில் சேர்ப்பது போன்ற மேற்கண்ட அம்சங்களே அரசின் தொழிற்கொள்கையாக உள்ளது. தமிழகத்தில் மொத்த பொருளுற்பத்தியில், தொழில் உற்பத்தியின் பங்கு உயரவில்லை. மேலும், மொத்தமுள்ள 5 லட்சம் சிறு-குறு தொழில்களில் பாதிக்கும் மேற்பட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வேலயில்லாதவர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டாண்டுகளில் (2013-14, 2014-15) மட்டும் 75.04 லட்சத்திலிருந்து 89.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டபடிப்பு முடித்தவர்கள். இது தவிர பதிவே செய்யாத ஏராளமான கிராம, நகர உழைப்பாளிகள் வேலை கிடைக்காமல் அல்லது மிகக் குறைவான கூலி பெற்று துயரத்தில் உள்ளனர்.

1.14) தமிழக நகர்ப்புறங்களில் பணியில் உள்ளோர் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 1 கோடியே 40 லட்சம். இதில் வருடத்தில் ஆறு மாதங்களுக்கும் மேல் வேலை செய்வோர் சுமார் 1 கோடியே 26 லட்சம். மீதம் 14 லட்சம் பேர் “மார்ஜினல்” உழைப்பாளர்கள்.

1.15) 2009-10 தேசிய மாதிரி (NSI) ஆய்வுப்படி தமிழகத்தில் சுமார் 1.33 கோடி பேர் நகர்ப்புற உழைப்பாளர்கள். இதில் 36.7 லட்சம் பேர் அத்துக் கூலிகள், 53 லட்சம் பேர் கூலி / சம்பள தொழிலாளிகள். மீதம் 43.2 லட்சம் பேர் சுய வேலை செய்வோர். கூலி/சம்பளத்திற்கு வேலை செய்பவர்களில் கணிசமானவர்கள் மிகக்குறைவான மாத ஊதியம் பெறுபவர்களே. முறைசாரா பணியில் உள்ளவர்கள் மொத்த உழைப்பாளிகளில் 93 சதவிகிதம் என்பது தமிழத்திற்கும் பொருந்தும்.

1.16) நகர்ப்புறத்தில் உள்ள இத்தகைய உழைக்கும் மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளில் இவர்களை திரட்டிட முடியும். நகர்ப்புற ஏழைகளை திரட்டிட ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும்.

1.17) மருத்துவம், பொறியியல், நிர்வாகயியல் போன்ற உயர்கல்வி பெரும்பான்மையாக தனியார்மயமாகிவிட்டது. பொதுவாக தனியார்மயத்தை எதிர்ப்பதோடு இத்தகைய கல்வி நிலையங்களில் அரசு தீர்மானித்த கட்டணங்களுக்கு மேல் வசூல் செய்யக் கூடாது, தரமான கட்டமைப்பு பேன்ற கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்திட வேண்டும்.
1.18 பள்ளிக்கல்வியில் குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஒருபகுதி மூடப்பட்டு விட்டன. 1300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவாக உள்ளது. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் பள்ளிக்கல்வியும் பெரும்பான்மையாக தனியார்மயமாகக் கூடிய சூழல் உருவாகி வருகிறது.

1.19) தாரளாமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக நிரந்தர வேலைவாய்ப்பு சுருங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் புதிதாக திறக்கப்படாததும், இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதும் ஆகிய கொள்கைகளினால் வேலைவாய்ப்பு குறைந்து வருகிற போது தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை கட்சியின் அகில இந்திய மாநாடு முன்வைத்திருக்கிறது.

1.20) தனியார்துறை, பொதுத்துறை ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களையும், மத்திய அரசு, மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் நடுத்தர ஊழியர்களையும், திரட்டுவதோடு உழைப்பாளி மக்களில் பெரும்பான்மையாக உள்ள முறைசாராத் தொழிலாளர்களை திரட்டுவதற்கு கூடுதல் வாய்ப்புள்ளது.

1.21) ஜனநாயக உரிமைகள் மறுப்பு, காவல்துறையின் அத்துமீறல்கள், மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. இவை உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும்.

இடது ஜனநாயக சக்திகள்

1.22) 21-வது கட்சிக் காங்கிரஸ் நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகள் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

“தொழிலாளி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள் / விவசாயிகள், நடுத்தர வர்க்கம், கைவினைஞர்கள், சிறு வியாபாரிகள், வியாபாரிகள் போன்ற பிரிவினரிடையே போராடுகின்ற அனைத்து சக்திகளின் ஒரு முன்னணியாக அது உருவாக வேண்டும்”.

இந்த அடிப்படையில்,

* இடதுசாரி கட்சிகள் மற்றும் அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள்

* இடதுசாரிக்குழுக்கள் மற்றும் அறிவு ஜீவிகள்

* மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகப் பகுதியினர்

* மலைவாழ் மக்கள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினரிடையே செயல்படும் ஜனநாயக அமைப்புகள்

* ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளை கையிலெடுத்து செயல்படும் சமூக இயக்கங்கள் போன்றவற்றை ஒன்றிணைக்கலாம்.

1.23) இடதுசாரி சக்திகள் என்றால், ஏதோ ஒருவகையில் சோசலிசத்தை லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக, மார்க்சியம் மற்றும் விஞ்ஞான சோசலிசத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமென்பதை நிபந்தனையாக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களது திட்டத்தில் நிலப்பிரபுத்துவ, ஏகபோக, ஏகாதிபத்திய எதிர்ப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். அதேபோல் சமூக அடிப்படையில் சாதிய, ஆணாதிக்கப் பாகுபாடுகளை எதிர்க்கிற கண்ணோட்டம் இருத்தல் வேண்டும். தொழிலாளிகள், கிராமப்புற ஏழைகள், பல பகுதி உழைக்கும் மக்களின் நலனுக்குக் குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். மொத்தத்தில் மார்க்சிய லெனினிய கட்சி முதல் இடதுசார்புள்ள சமூக ஜனநாயகக் குழுக்கள் வரை இருக்கலாம்.

1.24) ஜனநாயக சக்திகள் என்றால் அரசியல் பொருளாதார சமூகப்பிரச்சனைகளில் ஒரு ஜனநாயக நிலைபாட்டை எடுப்பவர்களாக இருக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவுக்குரல் எழுப்ப வேண்டும். வர்க்க அடிப்படையில் கூறுவதென்றால், முதலாளித்துவ ஜனநாயக குணாம்சம் அல்லது குட்டி முதலாளித்துவ குணாம்சம் கொண்ட கட்சிகளாக அவை இருக்கலாம். பெருமுதலாளிகளின் நலனை பாதுகாக்கும் கட்சிகளை இதில் சேர்க்க முடியாது. குறிப்பிட்ட சூழலில் இக்கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைபாட்டின் அடிப்படையிலேயே இவற்றின் ஜனநாயகத்தன்மையை நிர்ணயிக்க முடியும்.

1.25) தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, சிபிஐ (எம்.எல்.) லிபரேசன், எஸ்.யு.சி.ஐ.(சி) ஆகிய இடதுசாரி கட்சிகளும் இக்கட்சிகளின் தலைமையில் உள்ள வர்க்க, வெகுஜன அமைப்புகளும் இந்த அணியின் மையமாக இயங்க முடியும். தமிழகத்தில் சிபிஐ (எம்), சிபிஐ தவிர மற்ற இடதுசாரி கட்சிகள் மிகவும் பலவீனமான குழுக்களாக உள்ளன. இருப்பினும் இக்கட்சிகளோடு ஒத்தக் கருத்துள்ள பிரச்சனைகளில் கூட்டு இயக்கங்களை உருவாக்க வேண்டும். கருத்தொற்றுமை எட்ட முடிகிற அம்சங்களில் கூட்டறிக்கை வெளியிடலாம்.

வர்க்க வெகுஜன அமைப்புகள்

1.26) தொழிற்சங்க அரங்கத்தில் ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் தலைமையிலான அமைப்புகளும் முதலாளித்துவக் கட்சிகளின் தலைமையிலான அமைப்புகளும் இணைந்து பல பிரச்சனைகளில் கூட்டு இயக்கம் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைமையிலான தொழிற்சங்கங்களை தவிர ஆர். குசேலர் தலைமையிலான உழைக்கும் மக்கள் மாமன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களையும் கூட்டு இயக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

1.27) இடதுசாரி கட்சிகள் தலைமையிலான விவசாய சங்கங்கள் அல்லாமல் கூட்டு இயக்கங்களில் பங்கேற்க வேண்டிய மற்ற விவசாயிகள் அமைப்புகள் குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

1.28) வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகளின் கூட்டு இயக்கங்களில் இடம் பெற வேண்டிய அமைப்புகள் குறித்தும் தீர்மானிக்க வேண்டும்.

1.29) தலித் மக்களுக்காக போராடக் கூடிய அமைப்புகளை உள்ளடக்கிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயங்கி வருவதோடு தலித் மக்களின் பிரச்சனைகள் மீது ஆக்கப்பூர்வமாக இயங்கி வரும் தன்னார்வ தொண்டு அமைப்புகளையும் இயக்கங்களில் இணைக்க வேண்டும்.

1.30) நமது கட்சி தலைமையிலான தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறுபான்மை மக்கள் நலனுக்காக குரல் எழுப்பி வருகிறது. சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக அம்மக்கள் மத்தியில் இயங்கும் ஜனநாயக அமைப்புகளை கூட்டு இயக்கத்திற்கு அழைக்கலாம்.

இடதுசாரிக்குழுக்கள், அறிவுஜீவிகள்…

1.31) தமிழகத்தில் பல இடதுசாரிக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் சில பிரச்சனைகளில் நமது கட்சியின் நிலைபாட்டை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இருப்பினும் இடதுசாரிக்குழுக்கள் என்ற அடிப்படையில் இவர்களோடு நாம் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரச்சனைகளில் இவர்களோடு இணைந்து கூட்டு இயக்கம் நடத்திட வேண்டும். மாநில அளவிலும்- மாவட்ட அளவிலும் எத்தகைய குழுக்களோடு நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை பரிசீலிக்க வேண்டும்.

1.32) தமிழகத்தில் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒரு சில நிறுவனங்கள் மனித உரிமை பிரச்சனை உள்ளிட்டு பல பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமாகவும், ஆர்வத்தோடும் செயல்படுகிறார்கள். அவர்கள் சேகரித்துள்ள தகவல்கள் மற்றும் அவர்கள் எடுக்கக் கூடிய முயற்சி மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சனைகளில் நாம் தலையிடுவதற்கு உதவியாக உள்ளன. எனவே உண்மையாக பணியாற்றும் தொண்டு நிறுவனங்களோடு நாம் தொடர்பு வைத்துக் கொள்வதோடு அவைகளோடு இணைந்து செயல்படவும் திட்டமிட வேண்டும்.

1.33) மேலும் இடதுசாரி எண்ணமுள்ள அறிவுஜீவிகள் பலர் உள்ளனர். ஒருவர் கல்வி பிரச்சனையில் தலையிடுகிறார், இன்னொருவர் சுற்றுச்சூழலில் தலையிடுகிறார், இன்னொருவர் கலை இலக்கிய ஆர்வலராக உள்ளார். சிலர் மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தலையிடுகிறார்கள். சிலர் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் தலையிடுகிறார்கள். சமூகப் பார்வையுள்ள ஊடகவியலாளர்கள் உள்ளனர். மேற்கண்ட தளங்களில் செயல்படும் பலருக்கு நம்முடைய கட்சியின் நிலைபாட்டில் சில பிரச்சனைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். இருப்பினும் அவர்களுடைய பணியில் சமூகப் பார்வை இருந்தால் அவர்களுடைய பணியை நாம் பயன்படுத்துகிற போது அது ஜனநாயக இயக்க வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே இடதுசாரி மற்றும் முற்போக்கு எண்ணமுள்ள அறிவுஜீவிகளுடன் நாம் இணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய அறிவுஜீவிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ளனர். அவர்களோடு கலந்துரையாடி நமது நிகழ்ச்சிகளில் அவர்களை பங்கேற்க வைப்பதும், அவர்கள் முன்முயற்சி எடுத்தும் நிகழ்ச்சிகளில் நாம் பங்கேற்கவும் வேண்டும்.

இடது ஜனநாயக திட்டம்

1.34) “இடது ஜனநாயக திட்டம் என்பது முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, நவீன, தாராளமய கொள்கை கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான கொள்கைகளை உள்ளடக்கியதாகவும், தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவுஜீவிகள் ஆகிய பிரிவினரின் உடனடிக் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும். இடது ஜனநாயக சக்திகளால் மேற்கொள்ளப்படும் அரசியல் ரீதியான பிரச்சாரங்கள், போராட்டங்கள், வெகுஜன இயக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும்.”

1.35) 21வது கட்சிக் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள அரசியல் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள 20 அம்சங்களை கொண்ட இடது ஜனநாயக திட்டம் (இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது) பொதுவாக தமிழகத்திற்கும் பொருந்தும் என்றாலும் தமிழகத்தினுடைய பிரத்யேகமான நிலைமையை கணக்கில் எடுத்து கீழ்க்கண்டவாறு இடது ஜனநாயக அணியின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது அன்றாடப்பணியாக இருக்க வேண்டும்.

1.36) 1990-களிலிருந்து மத்திய அரசும், மாநில அரசும் அமலாக்கி வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை மாநிலம் முழுவதும் மக்களுக்கு பல பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. மணல், தாதுமணல், கிரானைட் போன்ற இயற்கை வளம் கொள்ளை போகிறது. சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், நகர்ப்புற – கிராமப்புற ஏழைகள், கல்வி, சுகாதாரம், பண்பாடு போன்றவற்றின் மீதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்திற்கான எதிர்கால திட்டத்தை முன்வைக்கும் அறிக்கை தயாரிக்க வேண்டும். (தற்போதைய நிலை மீதான விமர்சனம் மற்றும் மாற்றுக் கொள்கையை முன்வைக்கும்)

1.37) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிலைமைக்கேற்ப மாவட்ட வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை உருவாக்கிட வேண்டும். மாவட்ட வாரியாக கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள பிரதானமான மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து பட்டியலிட வேண்டும். உதாரணமாக குமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்புச் சட்டம், ரப்பர் மற்றும் முந்திரி தொழில் பாதிப்பு போன்றவைகளினால் ஒட்டுமொத்த மாவட்டத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிலைமைக்கேற்ப மாவட்ட வளர்ச்சி மக்களின் வாழ்நிலை மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் கோரிக்கைகளை, முழக்கங்களை உருவாக்கிட வேண்டும்.

1. மாநில நில உச்சவரம்பு சட்டத்தை திருத்தி உபரி நிலத்தை எடுத்து நிலமற்றவர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய முழுமையான நிலச்சீர்திருத்தத்திற்கு பாடுபட வேண்டும். விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகவோ, வலுக்காட்டாயமாகவோ நெறிகளற்ற முறையில் நிலங்களை கையகப்படுத்துவதிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பது. விளைபொருட்களுக்கு நியாய விலை, விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவது, கூட்டுறவு கடன் வசதியை உறுதிப்படுத்துதல் வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம், சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றிற்கு மத்திய சட்டம், கிராமப்புற தொழிலாளர்களுக்கு வீட்டு மனைகள், வீட்டு வசதி மற்றும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமலாக்கிட வேண்டும்.

2. தமிழகத்தில் மாநில அரசு பாசன வசதியை மேம்படுத்திட போதிய அக்கறை செலுத்தவில்லை. குடிநீர் மற்றும் பாசன வசதியை மேம்படுத்திட மராமத்து பணிகளைச் செய்து ஏரிகள், குளங்கள், கால்வாய்களை பாதுகாத்திட வேண்டும், மேலும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. அ. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலி ரூ. 15,000/-, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம், காண்ட்ராக்ட் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் நிரந்தரமாக்க்கப்பட வேண்டும். மாநில தொழிலாளர்கள் நலவாரியத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும்.

ஆ. மத்திய அரசினுடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை சட்டத்தினால் மீனவர்களுடைய வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலும், வாழ்விடமும் கேள்விக்குறியாகியுள்ளது. கடல் வளத்தை அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது தடுக்கப்பட வேண்டும். மீனவர்களுடைய நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

4. சிறு-குறு தொழில் உற்பத்தி பொருட்கள் அடுத்தடுத்து மத்திய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு சலுகைகள் மறுக்கப்படுகிறது. நீக்கப்பட்ட தொழில்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். சிறு – குறு தொழில்கள் உற்பத்தியிலிருந்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் 15 சதவிகிதம் கொள்முதல் முன்னுரிமையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உற்பத்தியிலும், வேலைவாய்ப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற சிறு-குறு தொழில்களை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. கல்விக்கு மத்திய அரசு ஜி.டி.பி.யில் 6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் உயர்கல்வி பெரும்பான்மையாக தனியார்மயமாகி விட்டது. பள்ளிக்கல்வி வேகமாக தனியார்மயமாகி வருகிறது. தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு கைவிட்டு அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். தனியார் பள்ளிகளிலும், தனியார் சுயநிதி கல்வி நிலையங்களிலும் அரசு தீர்மானித்த கட்டணங்களுக்கு மேல் வசூல் செய்வதை தடுத்திட வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவிகித இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

6. சுகாதாரத்திற்கு மத்திய அரசு ஜி.டி.பி.யில் 5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தில் அரசு மருத்துவ சிகிச்சைக்கான நிலையங்கள் கட்டமைப்புகள் பரவலாக இருந்தாலும் இவைகளுடைய செயல்பாடு மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. மருத்துவ சிகிச்சை என்பது கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு விட்டது. அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதியை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

7. உணவு தானியங்கள் மட்டுமின்றி இதர அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கும் வகையில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம்; அனைவருக்குமான ஓய்வூதிய வசதி; மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல்; பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள்; நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டு வசதி ஏற்பாடுகள். கட்டுப்படியாகும் செலவினத்தில் பொதுப் போக்குவரத்தை விரிவாக்குதல் ஆகியவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

8. சமூகப் பிரச்சனைகள்

அ. அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் மதவெறியூட்டி மதமோதல்களை உருவாக்கி வருகின்றன. கல்வியில், ஊடகத்தில், கலை இலக்கியத்தில் என எல்லா துறைகளிலும் இந்துத்துவ கருத்துக்களை புகுத்திட, திணித்திட பாஜக தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துகிறது. நேரடியாக தாக்குதலிலும் ஈடுபடுகிறது. இந்துத்துவா வகுப்புவாதத்தை எந்த வடிவத்தில் புகுத்திட சங்பரிவார அமைப்புகள் முயற்சிக்கிறதோ அங்கெல்லாம் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பாக நாம் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், வகுப்புவாதத்தை எதிர்த்திடவும் எதிர்வினையாற்றுவதோடு திட்டமிட்ட முறையில் நாம் பிரச்சாரமும், இயக்கமும் நடத்திட வேண்டும். கிறித்துவ, சிறுபான்மை மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கவும், நமது கட்சி நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிறுபான்மை வகுப்புவாதத்தையும் எதிர்த்திட வேண்டும்.

ஆ. தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், கட்சியும் தீண்டாமைக்கொடுமைக்கு எதிராக பரவலாக இயக்கங்கள் நடத்தி வருகின்றன. பிரச்சனைகள் வெடிக்கின்ற இடத்தில் தலையிடுவதோடு, பிரச்சனைகளை ஆய்வு செய்து கண்டறிந்து இயக்கங்கள் நடத்துவதற்கு திட்டமிட வேண்டும். தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் இதில் போதுமான தலையீடு இல்லை. மாநில மக்கள் தொகையில் 5ல் ஒரு பகுதியாக உள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களுடைய சமூக வாழ்வாதார பிரச்சனைகளில் வலுவான தலையீடு, இயக்கங்கள் தேவைப்படுகிறது.
கடந்த ஜூலை 2015க்கு முந்தைய மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. குறிப்பிட்ட சம்பவத்தினையொட்டி தலையிடுவதோடு பொதுவாக கலாச்சார ரீதியிலும் சாதி மறுப்பு காதல் திருமணத்தை மொத்த சமூகமும் ஆதரிக்க வேண்டுமென்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்திட தனியாக சட்டம் இயற்ற வேண்டும்.

இ. தமிழகத்தில் பழங்குடியின மக்களின் பொருளாதார சமூக கோரிக்கைகளுக்காகவும் இயக்கம் நடத்திட வேண்டும். சில பழங்குடியின மக்களுக்கு அரசு சாதிச்சான்றிதழ் வழங்க தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. மேலும் வன உரிமை சட்டத்தை அமலாக்கிடவும் வலியுறுத்த வேண்டும்.

ஈ. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து மாதர் சங்கமும், கட்சியும் தொடர்ச்சியாக தலையிட்டு வருகிறோம். பெண்களுக்கு எதிரான, சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பிரச்சனை எழுகிற போது தலையிடுவதோடு, ஆண் – பெண் சமத்துவம் பற்றியும் நம்முடைய பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான, பெண் தொழிலாளர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து இயக்கம் நடத்திட வேண்டும்.

உ. மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்து, அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அச்சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

9. சுற்றுச்சூழல்: தமிழகத்தில் பல பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசுபட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், மாநிலத்தில் மற்ற பகுதிகளிலும் எந்தவித நிபந்தனையுமின்றி அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல தொழில்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாததாலும் திடக்கழிவு மேலாண்மை சரியாக செய்யப்படாததாலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. வேலைவாய்ப்பு: தமிழகத்தில் சுமார் 1 கோடி பேர் வேலைகேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு வேலையில்லா காலத்திற்கு நிவாரணம் அளிக்கும் திட்டத்தையும் உருவாக்கிட வேண்டும்.

11. ஊழல் ஒழிப்பு: அரசு நிர்வாகத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளது. வேலைநியமனத்தில், அரசு திட்டப்பணிகளில், தொழில்களுக்கு அனுமதி வழங்குவதில், பணியிட மாறுதல் போன்றவற்றில் ஊழல் என்பது நடைமுறையாகிவிட்டது. மேலும் மணல், தாது மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் கொள்ளை போகிறது. உயர்மட்ட ஊழலை தடுப்பதற்கு தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும். கீழ்மட்ட ஊழல்களைத் தடுக்க ‘குடிமக்கள் சாசனம்’ (சேவை பெறும் உரிமை) சட்ட ரீதியாக இயற்றப்பட வேண்டும்.

12. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பகுதி பட்டியல் முறையுடன் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கொண்டு வரப்பட வேண்டும். மேலும் தேர்தல்களில் அதிகார பலம், பண பலத்தை தடுக்கக் கூடிய அளவில் மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

13. தமிழகத்தில் வாழும் பல்வேறு வகைகளைச் சார்ந்த லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டரீதியிலான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். நிபந்தனையின்றி உதவித் தொகை, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

14. சுயஉதவிக்குழுக்கள் கடன் வழங்குவது ஏழை, எளிய மக்களின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறது. ஆனால் இதில் கார்ப்பரேட் கம்பெனிகள், கந்து வட்டி காரர்கள் நுழைந்து கடன் வழங்க முனைகிற போது சுய உதவிக்குழுக்கள் பாதிக்கப்படும். எனவே, சுய உதவிக்குழுக்களை பாதுகாப்பதோடு அவற்றின் மீது ஆளும் கட்சியின் தலையீட்டையும் எதிர்த்திட வேண்டும்.

15. மாநில சுயாட்சி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி, நிர்வாக மொழி, நீதிமன்ற மொழியாக அமலாக்கப்பட வேண்டும்.

இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான போராட்டம்

1.38 இடது ஜனநாயக அணியில் இருக்க வேண்டிய வர்க்கங்களில் பெரும் பகுதியினர் தற்போது திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளின் பின்னால் உள்ளனர். இவர்களை நாம் வென்றெடுக்க வேண்டும். “இத்தகைய மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றால் அரசியல், பொருளாதார, சமூக, தத்துவார்த்த, பண்பாட்டு தளங்களில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திட வேண்டும். இதன் மூலமே வர்க்க சமன்பாட்டில் தொழிலாளர் வர்க்கத்திற்கு சாதகமான மாற்றத்தை உருவாக்க முடியும்.”

வர்க்க சமன்பாட்டை மாற்றுதல்

1.39) “இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான நமது போராட்டம் வர்க்கச் சமன்பாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கேயாகும். மக்கள் இரண்டு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தாக வேண்டுமென்ற, இருப்பிலுள்ள அமைப்பின் வரையறைக்குள் சிறைப்பட்டிருக்கும் நிலையை மாற்றுவதற்காக நாம் எடுத்து வரும் கடும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.” (10வது கட்சி காங்கிரஸ்)

1.40) இடது ஜனநாயக அணி போராட்டத்தின் மூலமாகத்தான் உருவாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை-எளிய, நடுத்தர மக்கள் ஆகியோரின் வர்க்க கோரிக்கைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதார மற்றும் பொதுவான கோரிக்கைகளுக்காகவும் நடைபெறக்கூடிய போர்க்குணமிக்க போராட்டத்தின் மூலமாகத்தான் மக்களை வென்றெடுக்க முடியும்.

1.41) மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளாலும், கிராமப்புற ஆளும் வர்க்கப் பகுதியினரான நிலச்சுவாந்தார் / கிராமப்புற பணக்காரர்களின் சமூகப் பொருளாதார ஆதிக்கத்தாலும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமப்புற உழைப்பாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வர்க்க முரண்பாடு கூர்மையடைந்து வரும் பின்னணியில் நிலச்சுவாந்தார் / பணக்காரர்களுக்கு எதிராக வலுவான வர்க்கப்போராட்டத்தினை நடத்திட திட்டமிட வேண்டும். இதைப்போலவே நகர்ப்புற முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கிராமங்களிலும் நகரங்களிலும் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலமே இடது ஜனநாயக அணியை உருவாக்கிட முடியும்.

1.42) நகர அளவில், ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காக கட்சி மற்றும் வர்க்க, வெகுஜன அரங்கங்களின் சார்பில் சுயேச்சையான இயக்கம் நடத்துவதோடு மற்ற பல அமைப்புகளையும் இணைத்து குறிப்பிட்ட பிரச்சனைகளில் போராட்டக்குழு உருவாக்கி கோரிக்கைகளை வென்றெடுக்கின்ற வகையில் இயக்கத்தை நடத்திட வேண்டும்.

1.43) வர்க்க சமன்பாட்டை மாற்றிட மேற்கண்ட அடிப்படையில் பிரச்சாரத்திற்கும், இயக்கங்களுக்கும் திட்டமிடுவதோடு மதச்சார்பற்ற பிராந்தியக் கட்சிகளோடு மக்கள் பிரச்சனைகளில் கூட்டு இயக்கத்திற்கு திட்டமிட வேண்டும். இடதுஜனநாயக அணியின் அங்கமாக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகள் வர முடியாது. இருப்பினும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வர்க்க, மற்றும் வெகுஜன பிரச்சனைகளில் இக்கட்சிகளுடன் கூட்டு இயக்கத்திற்கு செல்லலாம்.

1.44) மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிடும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை உழைக்கும் மக்களை, தலித் மற்றும் பழங்குடியினர், பெண்கள், வாலிபர்கள், மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது; அவர்களுக்கான கோரிக்கைகளை உருவாக்கி போராடுவதோடு தமிழக சமூகப் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சி குறித்து மாநிலக்குழு அறிக்கை தயாரித்து அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பில் பிரச்சாரமும், இயக்கமும் நடத்திட வேண்டும்.

அரசியல் – பொருளாதார தளத்தில்

1.45) இடது ஜனநாயக அணி திட்டத்தில் சொல்லப்பட்ட அம்சங்களோடு அவ்வப்பொழுது மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிடும் பொருளாதாரக் கொள்கைகளையும் இக்கொள்கைகளினால் ஏற்படும் பாதிப்புகளையும் எதிர்த்து இயக்கங்களுக்கு திட்டமிட வேண்டும். குடியிருப்புப் பகுதிகளிலும் பிரச்சாரம் செய்திட வேண்டும்.

1.46) மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகயை வேகமாக அமலாக்கிட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. காப்பீட்டுத்துறையில் 49 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீடு, பென்சன் நிதியம் தனியார் மயம், பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு, தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள், சாலை பாதுகாப்பு சட்டம் போன்று அடுக்கடுக்காக மக்கள் மீது மத்திய அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானவற்றை மாநில அதிமுக அரசும் ஆதரித்து உள்ளது.

1.47) கொள்கைக்கு எதிராக, அதனுடைய விளைவுக்கு எதிராக போராடுவதோடு தாராளமயப் பொருளாதாரக் கொள்கை மீது பிரமை உள்ள மக்கள் பகுதியினருக்கு கொள்கை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பிரச்சாரத்தின் மூலம் விளக்குவதற்கும் திட்டமிட வேண்டும்.

1.48) மத்திய, மாநில அரசுகளின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பில் சுயேச்சையாகவும், கூட்டாகவும் இயக்கங்களுக்கு திட்டமிட வேண்டும். கோரிக்கைகள் மீதான போராட்டங்கள், போராட்டங்கள் மூலமாக நிவாரணங்கள் பெற்றுத் தருதல், போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள மக்களை, போராட்டத்தினால் பலன் பெற்றவர்களை ஸ்தாபனப்படுத்துதல், அவர்கள் மத்தியில் அரசியலை கொண்டு செல்லுதல் ஆகிய பணிகள் தொடர் பணியாக நடத்திட வேண்டும்.

சமூக தளத்தில்

1.49) வகுப்புவாதத்திற்கு எதிரான, தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிரான மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படக் கூடிய அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் இடது ஜனநாயக அணி திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. பிரச்சனைகள் வெடிக்கின்ற இடங்களில் தலையிடுவதோடு பிரச்சனைகளை கண்டறிந்து முன்முயற்சி எடுத்து இயக்கங்களுக்கு திட்டமிட வேண்டும்.

தத்துவார்த்த தளத்தில்

1.50) கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியே மக்கள் மத்தியிலும் தத்துவார்த்த பிரச்சாரத்தை செய்திட வேண்டுமென்று சால்கியா பிளீனம் துவங்கி தொடர்ச்சியாக கட்சியினுடைய அகில இந்திய மாநாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

1.51) மாநிலத்தில் சமீப காலத்தில் சாதி அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மத உணர்வை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்., தங்களுடைய சங்பரிவார அமைப்புகளை பலப்படுத்தி வருகிறது. அடையாள அரசியல், தமிழ்தேசிய இயக்கங்கள் வர்க்கப்போராட்டத்திற்கு இடையூறாக இருக்கின்றன.

1.52) இச்சூழலில் தமிழகத்தில் தமிழ்தேசியம், திராவிட இயக்கம் குறித்த அணுகுமுறை ஆவணங்களை உருவாக்கி கட்சி அணிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் தத்துவார்த்த ரீதியில் நம்முடைய போராட்டத்தை நடத்திட வேண்டும். தனியுடைமை, சாதியம், மதவாதம், பெண்ணடிமைத்தனம் போன்ற கருத்தியல்கள் வலுவாக எதிர்க்கப்பட வேண்டும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் கேள்விக்குள்ளக்காப்பட வேண்டும். மார்க்சியம் அனைத்திலும் உயர்ந்தது என்பது முன்னிறுத்தப்பட வேண்டும். அம்பேத்கர், பெரியார் ஆகியோரது பங்களிப்பை, பாத்திரத்தை பயன்படுத்துவது இன்றைய தேவை. அதேநேரத்தில் மார்க்சிய பார்வையில் மேற்கண்ட தலைவர்களின் பங்களிப்பை பயன்படுத்திட வேண்டும்.

1.53) வி.பி.சிந்தன் நினைவக இடத்தில் நிரந்தர கட்சி கல்விக்கான கட்டிடத்தை எழுப்பி, அடுத்த மாநில மாநாட்டிற்குள் கட்சிக் கல்விக்கான நிரந்தர பள்ளியை துவக்கிட திட்டமிட வேண்டும்.
பண்பாட்டு தளத்தில்

1.54) வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமே குறிப்பிட்ட சமுதாயத்தில் ஆளும் சித்தாந்தமாக இருந்து வருகிறது. ஆளும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப, அவர்களின் நலன்களை பாதுகாத்திட மக்களின் மனங்களை செதுக்கும் இடமாக பண்பாட்டு தளம் நிலவுகிறது. ஆளும் வர்க்கம் அரசு இயந்திரத்தின் மூலமோ வன்முறையின் மூலம் மட்டுமோ ஆள்வதில்லை. பண்பாட்டு ஆதிக்கத்தின் மூலம் தங்களுடைய அதிகாரத்தை ஆளும் வர்க்கம் தக்கவைத்துக் கொள்கிறது.

1.55) கல்வி, கல்வி நிலையங்கள், கோயில்கள், சாதி, ஊடகம், கலை இலக்கியம் போன்ற பண்பாட்டு நிறுவனங்கள் மூலம் தங்களுடைய கருத்துக்களை ஆளும் வர்க்கம் நிலைநிறுத்திக் கொள்கிறது. இத்தகைய ஆளும் வர்க்க பண்பாட்டு கருத்தியலுக்கு எதிராக ஒரு மாற்று பண்பாட்டு இயக்கத்தை கட்டமைத்து அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

1.56) பண்பாட்டு தளத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் நம்முடைய பணி அமைய வேண்டும். நமது மாற்று பண்பாட்டை கலை வடிவிலும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனித உரிமை பாதுகாக்க

1.57) மனித உரிமை மீறல் பிரச்சனைகள் எழுகிற போது கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் தலையிடுகிறோம். லாக்கப் மரணங்கள், போலி என்கவுண்டர்கள், காவல்நிலையத்தில் சித்ரவதை, பொய் வழக்கு போன்ற மனித உரிமை மீறல்கள் பிரச்சனைகள் உருவாகிற போது உடனடியாக தலையிடுவதற்கும், தலையிடுவதற்கு உரிய ஆலோசனை வழங்குவதற்கும் “மனித உரிமை பாதுகாப்புக் குழு” அமைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல்

1.58) சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்து, கண்டறிந்து கட்சி மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்புகள் தலையிட வேண்டும். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் சமூக அக்கறையுடன் தலையிடக் கூடிய குழுக்களுடன் இணைந்து செயல்படுவதோடு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்து கட்சிக்கு பரிந்துரைக்க ஒரு குழு அமைக்க வேண்டும்.

ஊடகங்கள்

1.59) முதலாளித்துவ ஊடகங்களை பயன்படுத்துவதோடு தீக்கதிர், மார்க்சிஸ்ட், செம்மலர் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் நடத்தும் இதழ்கள் ஆகியவற்றை மேற்கண்ட பணிகளுக்கு திறமையாக பயன்படுத்திட வேண்டும். மேலும் சமூக வலைதளத்தை மாநிலம் முழுவதும் மாவட்டக்குழுக்கள், வர்க்க வெகுஜன அமைப்புகள் உள்ளிட்டு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

1.60) இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான செயல்திட்டத்தை அமலாக்கிட வலுவான வர்க்க வெகுஜன அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் இதற்கு ஏற்றவாறு தீக்கதிர் உள்ளடக்கத்தையும், விற்பனையையும் மேம்படுத்திட வேண்டும்.

1.61) முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும், கொள்கைகளுக்கும் இடதுஜனநாயக அணியும், அதன் திட்டங்களும் மாற்று என்பது வலுவான அரசியல் கிளர்ச்சி பிரச்சாரமாக மக்கள் முன் கொண்டு செல்லப்பட வேண்டும்.

வலுவான கட்சியை கட்டுதல்

1.62 அரசியல் ரீதியாக, ஸ்தாபன ரீதியாக வலுவான கட்சியை கட்டுவதன் மூலமே இடது ஜனநாயக அணியை உருவாக்கிட முடியும். கட்சியின் மாநில மாநாட்டு முடிவின் அடிப்படையில் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அரங்க விரிவாக்கம் குறித்து மாநிலக்குழு செயல்திட்டத்தை உருவாக்கி அமலாக்கி வருகிறோம். கட்சியின் அகில இந்திய ஸ்தாபன சிறப்பு மாநாட்டு முடிவுகளையும் அடுத்து மாநில அளவில் நாம் நடத்த திட்டமிட இருக்கிற ஸ்தாபன சிறப்பு மாநாட்டு முடிவுகளின் அடிப்படையிலும் தமிழகத்தில் வலுவான கட்சியை உருவாக்கிட வேண்டும்.

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...