உயர்கல்வி நிலைய சாதீய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுக!

ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம்:
நீதிவிசாரணைக்கு உத்தரவிடுக!
உயர்கல்வி நிலைய சாதீய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக, நவீன வரலாற்றுத் துறையில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக் கிருஷ்ணன் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நான்காண்டுகள் கடும் முயற்சிக்குப் பின் பல்கலைக் கழகத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற முத்துக் கிருஷ்ணன், கல்வியிலும், எழுத்திலும் ஈடுபாடுள்ள மாணவராக இயங்கிவந்துள்ளார். தலித் விடுதலை அரசியலிலும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.

தன்னுடைய வலைப்பூவிலும், முகநூலிலும் தொடர்ந்து எழுதி வந்த முத்துக் கிருஷ்ணன், தனது கடைசிப் பதிவில் சமநீதி மறுக்கப்படுவதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். “எம்.பில்/ஆராய்ச்சி படிப்புகளில் நுழைய, வைவாவின் போது சமநீதியில்லை. சமநீதி மறுப்புத்தான் இருக்கிறது.” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வி நிலையங்களில் தலித்/பழங்குடி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே படித்துவருகின்றனர். ஆனால் அவர்கள் மத்தியில்தான் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது. இது பல்கலைக் கழகங்களில் நிலவும் சமூக ஒடுக்குமுறை குறித்த கவலையை அதிகரிக்கிறது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலையை ஒட்டி, உயர் கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பற்றி கவலையோடு விவாதிக்கப்பட்டது. ஆனால், பல்கலைக் கழகங்களில் நிலவும் சூழலை மாற்ற எதுவும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. உயர்கல்வி நிலையங்களில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலை மேற்கொள்வோரை தண்டிக்கும் வகையில் ‘ரோஹித் சட்டம்’ இயற்றப்பட வேண்டும், மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வலியுறுத்தியிருந்தது. ’ரோஹித் சட்டம்’ இயற்றப்பட வேண்டுமென மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். உயர் கல்வி நிலையங்களில் சாதீய சூழலை மாற்றுவது உடனடி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாகும்.

தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதிவிசாரணை வேண்டுமென குடும்பத்தார் கோரியுள்ளனர். நீதிவிசாரணைக்கு உத்தரவிடுவதுடன், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென மத்திய அரசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

– ஜி.ராமகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர்

Check Also

கொங்கு நாடு பிரிவினை முழக்கம்: சங்க பரிவாரத்தின் சுயநல அரசியலே! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு ...