மீத்தேன் திட்டத்தை முற்றிலும் இரத்து செய்க! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தஞ்சை திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்காக கிரேட் ஈஸ்டர்ன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 819 ஏக்கர் விளை நிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என சொல்லப்பட்டது. 500 முதல் 1650 அடி வரையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதால் இது விவசாயத்தைக் கடுமையாக பாதிக்கும். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய இயக்கங்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து, அதிமுக அரசு 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இத்திட்டத்தை ஆராய 5 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. மேலும், இத்திட்டம் நிறுத்தப்படும் எனவும் அறிவித்தது. திமுக ஆட்சிக் காலத்தில்தான் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், மக்களை பாதிக்கும் இத்திட்டத்தை திமுக எதிர்க்கும் என அறிவித்தது. தமிழகத்தின் பிற கட்சிகளும், விவசாய அமைப்புகளும் இத்திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

நிலத்தடியில் இருக்கும் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு எடுப்பதுடன், நிலக்கரிச் சுரங்கம் கண்டறிந்து தொடர்ந்து இயங்குவதுதான் தன் விருப்பம் என கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனத்துடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாத இறுதியில் முடிவுக்கு வருகிறது.

இத்திட்டத்தை ஆய்வு செய்த நிபுணர் குழு அறிக்கை இன்னும் வெளியிடப்படாததுடன். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை இரத்து செய்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. இதன் காரணமாக, எதிர்காலத்தில் மீத்தேன் திட்டம் செயலாக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

நாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...