மக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை

Download PDF


மக்கள் நலக் கூட்டணி

2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை

முன்னுரை

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக திகழும் இந்தியாவில் தமிழ்நாடு, தனிச்சிறப்புக்குரிய மாநிலமாக விளங்குகிறது. தொன்மை வாய்ந்த நதிக்கரை நாகரீகம், பண்பாட்டுக் கூறுகளை தன்னகத்தே கொண்டு ஓங்கி உயர்ந்து நின்ற பெருமை தமிழ் இனத்திற்கு உண்டு. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மொழி தமிழ் என்ற பெருமையும், உலகப் பொதுமறையாம் திருக்குறளை தரணிக்கு தந்து பெரும்புகழையும் கொண்டது தமிழ்நாடு.

“அகிலும் தேக்கும் அழியாக்குன்றம்

அழகாய் முத்துக் குவியும் கடல்கள்

முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்

முல்லைக்காடு மணக்கும் நாடு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடி மகிழ்ந்த தமிழகம், இயற்கை வளங்கள் செறிந்த பூமியாக விளங்கியது.

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

கண்டதோர் வையை பொருநை நதி

மேவியே ஆறு பல ஓட

திருமேனி செழித்த தமிழ்நாடு

என்ற பாரதி பாடலுக்கு இலக்கணமாக, ஆறுகளால் செழித்து செல்வம் குவித்த சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. தமிழர்களின் பழந்தொழில் வேளாண்மை, பாருக்கு உணவளித்த பெருமையும், கீர்த்தியும் கொண்டது. மரபு வழி நெசவுத் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியது தமிழகம் என்பதும் மாற்ற முடியாத வரலாறு ஆகும்.

வர்த்தகம் தேடி வந்த வெள்ளையர்கள், நம் மண்ணை அபகரித்து ஆட்சி அதிகாரம் செய்ய முற்பட்ட போது எதிர்த்து நின்று போராடிய வீர மரபு தமிழர்களுக்கு உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணற்ற வீரத் தலைவர்களை நாட்டுக்குத் தந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு.

விடுதலை கண்ட இந்தியாவில், சமூக நீதி தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் தமிழ்நாடு தான் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. நாட்டு விடுதலைக்குப் பிறகு 20 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சி, 1967 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த கூட்டணியால் வீழ்த்தப்பட்டது. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969 முதல் தற்போது வரை 47 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இரண்டே கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. திமுகவும், அதிமுகவும்  மாறி, மாறி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இங்கு இரு துருவ அரசியலே கொடி கட்டி பறந்தது. தமிழக மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சி செய்த இரு கட்சிகளின் தலைமையும் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஆற்றிய பணிகள் என்ன என்று திரும்பி நோக்கினால் வேதனை தான் மிஞ்சுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய வேளாண்மை தொழில் வளர்ச்சி கடந்த 47 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து பூஜ்ஜியத்திற்கும் கீழே போய்விட்டது. வேளாண் தொழிலுக்கு அடுத்த நிலையிலிருந்த நமது பாரம்பரிய நெசவுத் தொழில் பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது.

தமிழகத்தின் அள்ள அள்ள குறையாத இயற்கை வளங்கள் ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்டன. ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு, மலையளவு இரு கட்சிகளும் பணத்தைக் குவித்துக் கொண்டன. நீர் ஆதாரங்களான ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் சிற்றோடைகள் புதர் மண்டி, தூர்ந்து போயின. அங்கேயும் ஆக்கிரமிப்புகள் அட்டியின்றி தொடர்ந்து வருகின்றன. இயற்கை கருணை காட்டும் போதெல்லாம் பெய்யும் பெருமழை விழலுக்கு இறைத்த நீராயிற்று. குடிக்க தண்ணீர் இன்றியும், விவசாயத்திற்கு போதிய நீர் இன்றியும், கால்நடைகளைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கும் தமிழ்நாட்டு கிராமங்கள் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்ததற்கு திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் தான் காரணம். தொலைநோக்கு திட்டங்களும், தூய நிர்வாகமும் அறம் சார்ந்த நல்லாட்சியும் விடைபெற்று பல்லாண்டுகள் ஆகிவிட்டன. வெற்று ஆடம்பர அரசியலும், விளம்பர மோகமும், குடும்ப ஆட்சியும், அருவருக்கத்தக்க வகையில் கோலோச்சி வருகின்றன. தலைமைச் செயலகம் முதல் உள்ளாட்சி நிர்வாகம் வரை எங்கும், எதிலும் லஞ்சமும், ஊழலும் வியாபித்து விட்டன. ஆட்சி நிர்வாகத்தில் புற்றுநோய் என ஊழல் புரையோடிக் கிடக்கிறது.

ஏழை, எளியோருக்கு சுயமரியாதை மிக்க வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய அரசு, அவர்களை இலவச போதைக்குள் தள்ளி வாக்கு அறுவடைக்கு பயன்படுத்தி வரும் அவலம், இந்திய நாட்டில் திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் தொடங்கி வைத்த சீரழிவு கலாச்சாரம் ஆகும்.

இலவசங்களை வாரி இறைப்பதற்கு அரசுக் கருவூலம் இடம் தராததால் மதுக்கடைகளை திறந்து வைத்தனர். இன்று தமிழ்நாடே குடிநோய்க்கு அடிமை ஆகி கிடப்பதற்கு திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆட்சிப் பீடத்திலிருப்போரின் மதுபான உற்பத்தி ஆலைகள் தான் ‘டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு மதுப்புட்டிகளை விற்பனை செய்கின்றன. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் குடும்பத்தினர் அல்லது பினாமிகள் நடத்தும் மதுபான ஆலைகள், மதுபான கொள்முதலில் பல்லாயிரம் கோடிகளை குவித்து குபேர குடும்பங்களாக திகழ்கின்றனர். ஆனால் சாதாரண, ஏழை, எளிய மக்களின் குடும்பங்கள் அடுத்த வேளை உணவுக்கும் வழியின்றி, வருமானத்தையெல்லாம் மதுபானக் கடைகள் பறித்துக் கொண்டதால், பட்டினி கிடக்கும் பரிதாபம் நீடிக்கிறது.

ஆட்சியில் இருந்த போது மதுவிலக்கை பற்றி வாய் திறக்க மறுத்தவர்கள் தமிழகம் மதுவுக்கு எதிராக கிளர்ச்சி எழுந்து போராட தலைப்பட்டதும், இப்போது ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இலவசமாகத் தர வேண்டிய கல்வியும், மருத்துவமும், விற்பனை பண்டம் ஆகி விட்டன. ஆனால் இலவசப் பொருட்கள் கொடுத்து மக்களை ஏமாற்றி ஏற்றம் கண்டவர்கள் இன்னொரு வாய்ப்பு கேட்டு மக்களிடம் வருகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக, வருங்காலத்தை தீர்மானிக்கும் இளைய தலைமுறை, தமிழ்நாட்டில் நடக்கும் இரு துருவ அரசியலில் சலிப்புற்று, மாற்றம் நிகழாதா என்று ஏக்கப் பெருமூச்சு விட்டனர். காலம் தான் வரலாற்றுப் போக்கைத் தீர்மானிக்கிறது. தேவை எழுகிற போது தான் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் புதிய சக்தி ஒன்று எழுச்சி பெற்று வருகிறது. இந்த வரலாற்று சுழற்சிதான் தமிழகத்தில் இருதுருவ அரசியலுக்கு முடிவுகட்ட “மக்கள் நலக் கூட்டு இயக்கம்” உருவாக அடித்தளமாக அமைந்தது. ஜூலை 27, 2015இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ‘மக்கள் நலக் கூட்டியக்கம்’ உருப்பெற்றது. தமிழக மக்கள் நலனை முன்னிறுத்தியும், 47 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகளால் வெறுப்புற்று இருக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டவும் மக்கள் நலக் கூட்டியக்கம் மக்கள் திரள் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த போது மக்கள் நலக் கூட்டணி துயர் துடைப்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டது.

தமிழக மக்களின் பேராதரவு நாளுக்கு நாள் பெருகி வந்த சூழலில் மக்கள் நலக் கூட்டியக்கம், தமிழ்நாட்டில் மாற்று அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி, குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை மக்கள் மன்றத்தின் பார்வைக்கு வைத்தது. நவம்பர் 2, 2015இல் மக்கள் நலக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணியாக உருப்பெற்று 2016, தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தை சந்திப்பது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் வெளியிடப்பட்டது.

மாற்று அரசியல் பாதையை அமைத்த மக்கள் நலக் கூட்டணி, தமிழக வரலாற்றில் புதியதோர் சகாப்தத்தை படைக்கும் வகையில், ஜனவரி 26, 2016ல் மதுரையில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த மதுரை மாநாடும், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் மாற்று அரசியல் எழுச்சிக்கான பல கட்ட சுற்றுப்பயணங்களும், தமிழக மக்களிடையே நம்பிக்கை விதைகளை விதைத்தன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில், மக்களைச் சூறையாடிய திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்திட, ஜனநாயக முற்போக்கு கட்சிகள் கரம் கோர்க்க வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி வேண்டுகோள் விடுத்தது. மக்கள் நலக் கூட்டணி, மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்வதையும், மக்கள் ஆதரவு பெருகி வருவதையும் கண்டு ஆட்சியிலிருப்போரும், ஆட்சிக்கு வரத் துடிப்போரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இந்நிலையில் தான் மார்ச் 23, 2016ல் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் உடன்பாடு காண இசைவு அளித்து இணைந்தது. அதன் பின்னர் ஏப்ரல் 7, 2016இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் உடன்பாடு கண்டது.

தமிழகத்தில் 47 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக, மக்கள் நம்பிக்கையை பெற்ற தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காணுகிறது.

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அகரம் எழுதப் போகும் வரலாறு தொடங்கப் போகிறது.

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று, பாழ்பாட்டுக் கிடக்கும் பைந்தமிழ்நாட்டை சீரமைக்கவும், தமிழக மக்களுக்கு உண்மையான மக்களாட்சி, நல்லாட்சி வழங்கவும் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையை தமிழக மக்கள் மன்றத்தின முன்பு வைக்கிறது.

தமிழ்நாட்டிற்கு புதிய விடியலை உருவாக்கப்போகும் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணிக்கு தமிழக மக்கள் பேராதரவை வழங்கிட வேண்டுமென்று மக்கள் நலக் கூட்டணி தமிழக மக்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறது.

 1. கூட்டணி ஆட்சி

நாடு விடுதலை பெற்றதற்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வந்த ஒரு கட்சி ஆட்சி முறையினால், ஜனநாயக சர்வாதிகாரமும், லஞ்ச ஊழலும், மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரான விளைவுகளுமே ஏற்பட்டன என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதேசமயம் மேற்குவங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் நீண்ட காலத்திற்கு பல கட்சிகள் பங்கேற்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று சீரிய நிர்வாகம் தழைத்து ஓங்கியதையும், மறுதலிக்க முடியாது. தமிழ்நாட்டில் கடந்த 47 ஆண்டுகளாக மாறி, மாறி தொடர்ந்து வரும் திமுக, அதிமுக ஆட்சிகளில், கட்டுப்பாடற்ற முறையில் ஆட்சி நிர்வாகம் ஊழல்மயமாகி போயிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பில் இருந்தோர், கோடி, கோடியாய் செல்வம் குவிக்க அரசு அதிகாரம் பயன்பட்டதேயொழிய, தமிழ்நாடு வீழ்ச்சியின் பள்ளத்தாக்கில் தூக்கி எறியப்பட்டு விட்டது. தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு கட்சி ஆட்சி முறை என்பது விடைபெறும் காலம் வந்து விட்டது. நேர்மையான, தூய்மையான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகமும், கண்காணிப்புடன் கூடிய கூட்டணி ஆட்சியும், இன்றைய இன்றியமையாத தேவையாகி இருக்கிறது. தமிழகத்தில் மாற்று அரசியல் கொள்கைகளை முன்வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா கூட்டணி வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற திமுக, அதிமுக அரசுகள் மக்கள் நல அரசாக இல்லாமல் கொடூர கார்ப்பரேட் ஆதரவு அரசாகவே இயங்கின. உண்மையான மக்கள் நல அரசை, தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா கூட்டணி ஆட்சி வழங்குவதுடன் இந்திய நாட்டுக்கு வழி காட்டக்கூடிய வகையில் கூட்டணி அரசு செயற்படும்.

 1. நெறிமுறைக்குழு (Ethics Committee)

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி, தமாகா ஆகியவை இணைந்து அமைக்கப்போகும் கூட்டணி அரசில், அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சமூக, பொருளாதார திட்டங்களுக்கும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கிட பல்துறை அறிஞர்கள், நிபுணர்கள் கொண்ட “நெறிமுறைக்குழு” (நுவாiஉள ஊடிஅஅவைவநந) ஒன்று அமைக்கப்படும். அரசின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், கண்காணிப்புடன் கூடிய ஆலோசனைகளை அளிக்கவும், நெறிமுறைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

 1. பொது கண்காணிப்புக்குழு (Public Auditing committee)

கடந்த காலங்களில் மிக நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் மக்களுக்காகப் போட்ட திட்டங்கள், நடைமுறைக்கு வரும் போது திட்ட ஒதுக்கீட்டின் தொகை, படிப்படியாக குறைந்து திட்டம் நிறைவு பெறும்போது, மிக சொற்ப அளவில் தான் பயன் கிட்டியது என்பதை மறுக்க முடியாது. அரசுத் திட்டங்களுக்காக செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் பல்வேறு மட்டங்களில் ஆட்சியின் தலைமை தொடங்கி, கீழ்மட்டம் வரையில் கொள்ளை அடிப்பதுதான் எழுதப்படாத விதியாக போய்விட்டது. இதனை கருத்தில் கொண்டு அரசு பணிகள் அனைத்தையும் கிராம பஞ்சாயத்து அளவில் தொடங்கி அனைத்து அரசுத் துறைகளின் ஒப்பந்தப் பணிகள் வரை கண்காணிப்புக்கு உட்படுத்திட மக்கள் பங்கேற்புடன் கூடிய பொது கண்காணிப்புக்குழுக்கள் (ஞரடெiஉ ஹரனவைiபே ஊடிஅஅவைவநந) அமைக்கப்படும். இதன் மூலம் மக்கள் வரிப்பணம் சூறையாடப்படுவது தடுக்கப்படுவதுடன், அரசின் திட்டங்கள் செவ்வனே நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்படும்.

 1. ஊழல் ஒழிப்பு

உயர்மட்ட ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமலாக்கப்படும்.

ஊழலை ஒழிக்க உருவாக்கப்படும் லோக் ஆயுக்தா சட்டத்தில் கீழ்மட்ட அரசு நிர்வாகம் தொடங்கி முதலமைச்சர் அலுவலகம் வரையில், ஊழலை அறவே ஒழிக்கும் வகையில் சட்டவிதிகள் கடுமையாக்கப்படும்.

கிராம ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை ஊழலற்ற நேர்மையான, திறமையான நிர்வாகத்தை உறுதி  செய்வோம்.

அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அனைத்தும் வெளிப்படையாக வெளியிடப்பட்டு மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களது சொத்து விபரத்தை ஒவ்வொரு ஆண்டும் பகிரங்கமாக வெளியிட வேண்டும்,

ஊழல் வழக்குகளுக்கு உள்ளானவர்கள் அதிகாரப் பொறுப்பிலிருந்து விலகி விசாரணையைச் சந்திப்பது உறுதி செய்யப்படும்.

 1. பட்டா மாறுதல்

அரசுத்துறை ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக இருப்பது வருவாய்த்துறையின் கீழ் வரும் பத்திரப்பதிவுத்துறை ஆகும். கடந்த 45 ஆண்டுகளாக இத்துறையில் நடைபெற்று வரும் ஊழல்களை ஒழிக்க மக்கள் நலக் கூட்டணி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதற்கு தேவையான மின்னணுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதுடன், கணினி செயல்பாடுகளுக்கான மென்பொருள் உருவாக்கப்படும். பொதுமக்கள் சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் பத்திரப் பதிவுத்துறையை நாடும் போது எதிர்கொள்ளும் பிரசச்னைகள், லஞ்ச, ஊழல்களால் வெறுத்து விட்டனர். மேலும் பட்டா வாங்கும் போதும், பட்டா மாறுதல் செய்யும் போதும் மக்கள் வருவாய்த்துறை அலுவலகம் நாடும் போது, அலைக்கழிக்கப்படுவதாலும், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாலும் சலிப்பு அடைகின்றனர். பட்டா வாங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு மக்களுக்கு குறித்த காலக்கெடுவுக்குள் பட்டா அளித்தல், பட்டா மாறுதல் செய்தல் போன்றவற்றில் லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்பட்டு, பொதுமக்கள் விரும்பும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். சொத்து பத்திரப்பதிவு செய்யும்போதே, பட்டா வழங்குவதற்கான திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

 1. வெளிப்படையான அரசு நிர்வாகம்

நேர்மையான நிர்வாகம், விரைவான, நிறைவான மக்கள் சேவை ஆகியவைகளை உறுதிப்படுத்த “சேவை பெறும் உரிமைச் சட்டம்” நிறைவேற்றப்படும்.

‘அரசைத் தேடி மக்கள்’ என்பதற்கு மாறாக, ‘மக்களை நாடி அரசு’ என்ற வகையில் நிர்வாக அமைப்பில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்,

சட்டமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம். சட்டமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுவதோடு, சட்டமன்ற விவாதக் குறிப்புகள் அனைத்தும் அரசின் வலைத்தளத்தில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

சமூக விரோதக் கும்பல்கள் போலி ஆவணங்கள் மூலம் வீடு, மனை, நிலங்களை கைப்பற்றுவதை தடுக்கப் பத்திரப் பதிவுத் துறையில் நவீன மின்னணு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த கால ஆட்சிகளின் ஆடம்பர செலவுமுறைகள் தவிர்க்கப்பட்டு சிக்கன நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட கால அளவில் மக்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி, அதற்கான தகவல் தொகுதி மக்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.

அரசு விழாக்களை ஆளும் கட்சியினரின் விழாக்களாக உருக்குலைக்கப்பட்ட போக்கைத் தடுத்து நிறுத்தி, அரசு நிகழ்ச்சிகளை ஆளுங்கட்சிகளின் குறுக்கீடில்லா, கட்சி சார்பற்ற அரசு விழாவாக நடத்திட பொருத்தமான விதிகள் வகுக்கப்படும்.

அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படாமல் இருக்க சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டு அரசின் அனைத்து சான்றிதழ்களும் லஞ்சம், ஊழலின்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கணினிமயமாக்கப்படும். இ-சேவை முறையில் இணைக்கப்படும்.

 1. தகவல் உரிமைச் சட்டம்

மக்களாட்சி அமைப்பில் இது ஒரு பெரிய கொடை என்றே சொல்லலாம். இதன் செயல்பாட்டை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்வது வழிமுறை தெரியாதவர்களுக்கு விவரித்து உதவி செய்வது அரசின் பொறுப்பாகும். பெரும்பாலான மக்களுக்கு ஏதாவது ஒரு வழியில் அரசு நிர்வாகத்தில் பிரச்சினைகள் உள்ளன. அரசு அதிகாரிகள் சாதாரண பொதுமக்களின் விண்ணப்பங்கள் வேண்டுகோளை கண்டு கொள்வதே கிடையாது. RTI ஒரு வலிமையான ஆயுதம். முறையாக பிரயோகித்தால் பிரதமர் அலுவலகம் முதல் தாலுகா அலுவலகம் வரை பதில் சொல்லும் கட்டாயம் RTI மூலம் கிடைத்திருக்கிறது. இதன் முழு பலமும் இன்னும் வெளிப்படவில்லை. வெளிப்பட உதவினால் பெரிய மாற்றங்கள் நிகழும் என்பது திண்ணம். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் RTI  முழு முனைப்புடன் செயல்பட எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அரசு அலுவலர்கள் RTI க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றும் சூழல் ஏற்படுத்தப்படும்.

 1. உள்ளாட்சி நிர்வாகம்

உள்ளாட்சிகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதிகாரங்கள் பரவலாக்கப்படும்.

அரசு வருவாயில் 30 விழுக்காடு நிதி உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சிகள் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்படும்.

உள்ளாட்சி நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட்டு திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து மக்களின் ஒப்புதல் பெறப்படும்.

நகர்ப்புறங்களில் வார்டு அடிப்படையிலான மக்கள் சபை கூட்டங்கள் நடத்துவது கட்டாயமாக்கப்படும்.

உள்ளாட்சிகளில் ஊழலை முழுமையாக ஒழித்திட “புகார் விசாரணை ஆணையம்”

(ombudsmen committee) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு, உள்ளாட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த புகார்கள் விசாரிக்கப்படவும், குற்றம் நிரூபணமானால் தண்டனை வழங்கவும் உரிய சட்டம் கொண்டு வரப்படும்.

கிராமப்புற – நகர்ப்புற சிறிய நடுத்தர கட்டுமானப் பணிகள் ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றுவது மட்டுமின்றி, மக்களின் நேரடிப் பங்களிப்போடு வாய்ப்புள்ள இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில்  உள்ளாட்சி அமைப்புகள் மூலமே நிறைவேற்றப்படும். ஒப்பந்தப்புள்ளி கோருவது வலைதளத்தில் வெளியிடப்படும்.

உள்ளாட்சிகளில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் தங்களது அதிகாரங்களை சுயேட்சையாகவும்,யாருடைய தலையீடு இன்றியும் செய்திட உத்தரவாதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உள்ளூர் இயற்கை வளங்கள் பயன்பாடு குறித்து அரசு, கிராம சபைகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கும். உள்ளூர் இயற்கை வள வருமானத்தில் உரிய பங்கு ஊராட்சிகளுக்கு அளிக்கும்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தானிய உலர் அறைகள், குளிரூட்டும் அறைகள், பழுக்க வைக்கும் அறைகள் உள்ளிட்ட சிப்பம் கட்டும் கூடங்கள் அமைத்துத் தரப்படும்.

 1. கனிம வளம்

ஆற்று மணல், தாது மணல், கிரானைட், பாக்சைட், சுண்ணாம்புக்கல் முதலான கனிமவள கொள்ளைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படும்.

இதுகாறும் நடந்துள்ள கனிம கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு துணைபோன அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்துக் கனிம வள வியாபாரமும் அரசு நிர்வாகத்தின் மூலம் மக்கள் குழுக்களின் மேற்பார்வையோடு நேர்மையான முறையில் செயல்படுத்தப்படும்.

விவசாயிகள் சொந்த உபயோகத்திற்கு ஏரி, குளங்களில் மண் எடுத்துச் செல்வதற்கு தடையின்றி உடனுக்குடன் அனுமதி வழங்கப்படும்.

ஆட்சேபணையுள்ள இடங்களில் மணல் அள்ளுவது தடுத்து நிறுத்தப்படும். அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துவது தடுத்து நிறுத்தப்பட்டு நதிநீர் படுகைகள் மிச்சமிருப்பதை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. சமூக நீதி

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்படும்.

தனியார் துறையில் இடஒதுக்கீட்டினை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துவோம். மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு வழங்க ஆவன செய்யப்படும்.

சமூக நீதிக்கு எதிராக அண்மைக் காலத்தில் இந்துத்துவா சக்திகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. இதனைத் தடுக்க ஜனநாயக முற்போக்கு  சக்திகளும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட  பழங்குடியின மக்களும் சிறுபான்மை மக்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அரசுத்துறைகளில் மாநில அரசால் செயல்படுத்தப்படும் இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளையறிக்கை அவ்வப்போது வெளியிடப்படும்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.

 1. மதவெறி / சாதி வெறி சக்திகளை எதிர்ப்போம்

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இந்திய நாட்டின் பாரம்பரிய பன்முகத் தன்மைக்கு விரோதமாக மதவெறி கருத்துக்களை பரப்பி மதக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. ‘பசுவதைத் தடை’ என்ற பெயரில் மாட்டிறைச்சியை மையப்படுத்தி படுகொலைகளும், பதற்றமும் உருவாக்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது.

சமூகத்தில் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையாளர்களாக வாழ்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி படுகொலைகள் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதிர்ச்சிகரமான தாக்குதல்களாக அமைந்துள்ளன. மதவெறி இந்துத்துவ சக்திகளை எதிர்த்து வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். மக்கள் ஒற்றுமையைப் பேணிக்காத்து அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் மாநிலமாக தமிழகத்தை திகழச் செய்து ‘மதச்சார்பின்மையினைத்’  திறம்பட நிலை நாட்டுவோம். மேலும் அறிவியல் பூர்வமான, முற்போக்கு பகுத்தறிவு கருத்துக்களை மக்கள் மத்தியில் முழு வீச்சுடன் எடுத்துச் செல்வதுடன் கருத்துச் சுதந்திரத்தையும், படைப்பாளிகளையும் பாதுகாப்போம். சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவோம்.

சாதிவெறி சக்திகளை எதிர்த்து, சகோதர உணர்வை வலுப்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுத்திட தனிச் சட்டம் இயற்றப்படும்.

சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க  உரிய ஏற்பாடு செய்யப்படும்.

சாதி மறுப்புக் காதலர்கள், தம்பதியினரைப் பாதுகாக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கென தனி காவல்பிரிவு உருவாக்கப்படும்.

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

 1. தமிழ்மொழி வளர்ச்சி

தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும்.

தாய்மொழியான தமிழ் மொழிப் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண் 266-ஐ திருத்தம் செய்து தமிழ் மொழிப் பாடத்தை முதல் பாடமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தாய்மொழி வழிக் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட உயர்கல்விப் பாடப்பிரிவுகளும் தாய் மொழி வழி பயிற்றுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தமிழைப் பயிற்று மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உயர்நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழி வழக்காடு மொழியாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் தற்போது உள்ள அரசு நூலகங்கள் மேம்படுத்தப்படுவதுடன் புதிய நூலகங்கள் உருவாக்கப்படும். நூலகங்களுக்கு தேவையான பல்துறை நூல்கள் அவ்வப்போது முறையாக வாங்கப்படும். அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சீரமைக்கப்படும்.

வெளி மாநிலத்தவர்கள் விரும்பும் மொழியில் தங்களது கல்வியை தொடர சட்ட நடவடிக்கை மேற்கெள்ளப்படும்.

மத்திய அரசு பணிக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் தமிழில் எழுத உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப்பண்பாட்டு மீட்சிக்கும் தொண்டாற்றி வருகிற தாய்த்தமிழ் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளாக அறிவிப்பதோடு மு ழுக்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திட, காலமாற்றத்தினூடாக  உன்னதமாக வளர்த்திட நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

 1. உலக தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்தல்

தகவல் தொடர்பு துறையில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர் சிவா அய்யாதுரை எனும் தமிழ் இளைஞர் என்பது நமக்கு பூரிப்பை தருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இளைஞர்கள்தான் ஆய்வுத்துறைகளில் முன்னிலையில் இருக்கின்றனர். தமிழர்களின் தொன்மையான அறிவு பாரம்பரியத்தை நிரூபித்துக் கொண்டிக்கும் தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள மக்கள் நலக் கூட்டணி அரசு திட்டமிடும்.

 1. வெளிநாட்டு தமிழர் நல அமைச்சகம்

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திட முன்முயற்சி எடுத்துக் கொண்ட தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்மொழியின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும், தேமதுர, தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்த, அறிஞர் தனிநாயகம் அடிகள் பெயரால், உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி ஆராய்ச்சி, வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் உலகத் தமிழ் இருக்கைகள், துறைகள் உருவாக்கப்படும்.

இன்றைய உலகமய சூழலில் தமிழ் மொழியை உலக ஆய்வு மொழியாக மாற்றுவது அவசியமானது. தமிழ் மொழிக்காக உலகின் பல பல்கலைக்கழகங்களில் இருக்கைகளும், துறைகளும் ஏற்படுத்தி, தமிழ் ஆய்வுக்கும், வளர்ச்சிக்கும் வாசலை திறந்து வைப்பது வரலாற்று கட்டாயம் ஆகும். இந்த கடமையை நிறைவேற்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்களும், அந்தந்த நாடுகளில் உரிய நிதி அளித்து உதவிடுவர் என்பது திண்ணம். மக்கள் நலக்கூட்டணி ஆட்சிப்பொறுப்பு ஏற்றதும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள், துறைகள் அமைந்திட ஆக்கப்பூர்வமான பணியை மேற்கொள்ளும்.

பூமிப்பந்தில் சிதறிக் கிடக்கின்ற தமிழர்களின் நலனுக்காகவும், அவர்கள் வாழும் நாடுகளில் தமிழ்மொழியை பயிற்றுவிக்கவும் தமிழர்களின் பண்பாடு, மரபுகள் பேணிப் பாதுகாக்கப்படவும் தமிழக அரசின் சார்பில் வெளிநாட்டுத் தமிழர்கள் நல அமைச்சகம் என்ற பெயரில் தனித்துறை ஒன்று உருவாக்கப்படும். உலகின் 65 நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் தாயகத்துடன் இணைக்கும் பண்பாட்டு உறவுப் பாலமாக, ‘வெளிநாட்டுத் தமிழர் நல அமைச்சகம்’ செயல்படும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றனர். இவர்கள் மொழியை இழந்து, தங்கள் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதுமுள்ள சீனர்களின்  மொழி, பண்பாட்டை பாதுகாத்திட சீன அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைப் போல, வெளிநாட்டில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து, உறவுப்பாலம் அமைத்திட, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் பணியாற்றும்.

 1. மாநில உரிமைகள்

மத்திய-மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டாட்சி முறைக்கும் உடன் விளைவாக மாநில சுயாட்சி நிலை பெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநிலங்களிலிருந்து மத்திய அரசு பெறுகின்ற வரிவருவாயில் 50 விழுக்காட்டினையும், வரி அல்லாத இதர வருவாயில் உரிய பங்கினையும் ஒதுக்கீடு செய்திட வலியுறுத்தப்படும்.

பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இல்லாத எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers) அனைத்தையும் மாநிலங்களுக்கு வழங்கிடப் போராடுவோம். மாநில அரசின் கடன் சுமைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வற்புறுத்தப்படும்.

தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் நிர்வாக மொழியாக தீர்மானிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

 1. இலங்கை தமிழர்கள் பிரச்சனை

இலங்கை தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தவும், நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெறவும் பன்னாட்டு நீதிபதிகளையும் கொண்ட நம்பகத் தன்மை வாய்ந்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு – கிழக்கு மாநிலங்களில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். தமிழர் தாயகத்தின் உள்ள கட்டாய சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். தமிழ் மொழிக்கு சம உரிமை அளிப்பதும், இன அடையாளங்களை பாதுகாப்பதும் இன்றியமையாததாகும். இலங்கை தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

மனிதன் என்ற முறையில் ஐ.நா. மன்றம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க வலியுறுத்துவோம்.

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இலங்கை தமிழர் அகதிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதும், வேலைவாய்ப்பு பெறுவதும் உறுதி செய்யப்படும். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஏதிலிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான நிலைமை உறுதி செய்யப்படும். இலங்கைத் தமிழர்கள் விருப்பமின்றி அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.

உலகில் பல நாடுகளில் அகதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளும், உரிமைகளும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அளிக்கப்படும்.

 1. சட்டம் – ஒழுங்கு

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சிறுமிகள் மீது பாலியல் கொடுமைகள், வழிப்பறி, நகைப் பறிப்பு போன்றவை  நடைபெறாமல் தடுத்திடவும், சீரான சட்டம் – ஒழுங்கை பேணிப் பாதுகாத்திடவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சமூக விரோத சக்திகளை முறியடிப்பது, கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி, கடத்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளை முற்றாக ஒழித்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வது உறுதி செய்யப்படும். காவல்துறை மக்களுக்கான சேவைத்துறை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

காவல்நிலையங்களில் கைதிகள் சித்தரவதைகள், லாக்கப் மரணங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. காவல்துறை மேல் அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் விஷ்ணுப் பிரியா என்ற டி.எஸ்.பி. தற்கொலை போன்ற மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும். தவறிழைக்கும் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் அத்தகைய காவலர்கள் மீது ஐ.பி.சி. 166 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொலைகுற்றங்கள், பாலியல் கொடுமைகள் குறித்த வழக்குகளை நீதிமன்றங்களில் முறையாக நடத்திட தனியான காவல்பிரிவு உருவாக்கப்படும்.

காவலர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை மற்றும் 8 மணி நேர வேலை உறுதி செய்யப்படும்.

மக்களை அச்சுறுத்துகிற கூலிக் கொலையாளிகள், ரௌடிகள், சமூக விரோதிகள் குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுத்து, அவர்களது சமூக விரோத நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணித்து முற்றாக ஒடுக்கப்படும்.

குற்றங்களை தடுக்க மக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் முக்கிய நகரங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பகல் நேரப் பணி மட்டுமே வழங்கப்படும். எக்காரணத்தை முன்னிட்டும் இரவு நேரப் பணி வழங்கப்பட மாட்டாது.

ஊர்க்காவல் படையில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காவல்துறையில் பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்படும்.

காவல்துறையில் முழு அளவில் காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.

 1. ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு

பல நகரங்களில் விளம்பரத் தட்டிகள் வைப்பதற்கு கூடக் காவல்துறை அனுமதிப்பது இல்லை. இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன் மக்கள் இயக்கங்கள் மற்றும் வெகுமக்கள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கிட ஆவன செய்யப்படும்.

 1. கருத்து சுதந்திரம்

முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பாதுகாக்கப்படும்.

தமிழகத்தில் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை சகித்துக் கொள்ளமுடியாது. இனி எழுதுவதையே நிறுத்திக் கொள்வோம் என்று, மனம் வெதும்பி எழுத்தாளர்கள் அறிவிக்கும் மோசமான சூழலை இனியும் அனுமதிக்க கூடாது. எழுத்துச்சுதந்திரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலையிடுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும். ஆங்கிலேயர்களின் சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் இருந்த சட்டங்கள் அவை. மக்கள் நலக்கூட்டணி ஆட்சியில் படைப்பாளர்கள் சுதந்திரத்தை பாதுகாப்பதுடன், புதிய சிறந்த படைப்புகள் உருவாகும் சூழல் ஏற்படுத்தப்படும்.

 1. ஊடகவியலாளர்கள் மற்றும் அரசு உறவுநிலை

மக்கள் பிரச்சினைகளை சிறப்பான முறையில் வெளிக்கொணர்வதில் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் பங்களிப்பு உன்னதமானது.  இதனை நன்கு மக்கள் நல கூட்டணி உணர்ந்துள்ளதால் ஊடகவியலாளர்களுடன் சிறப்பான உறவு நிலையை பராமரித்திட உறுதி ஏற்கிறது . மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணரும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அனைத்து ஊடகங்களும் அப்பணியை இன்னும் முனைப்புடன் செய்திட அரசு ஊக்குவிக்கும்.  வெளிகொணரப்படும் அனைத்து மக்கள் பிரச்சினைகளும் அதற்கென ஏற்படுத்தப்படும் துறை கருத்தில்? கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை உடனுக்குடன் தொடர்பு கொண்டு நிவாரண நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தும்.

மக்கள் பிரச்சினைகளை சிறப்பாகவும் ஆதாரங்களுடனும் பரிந்துரைகளுடனும் வெளிப்படுத்தும் ஊடகம் அரசின் பாராட்டு பத்திரத்தைப் பெறும் வண்ணம் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பத்திரிகை செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் (இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது) அமையும்படி பார்த்துக்கொள்ளப்படும்.

பத்திரிகை ஊடகங்கள் மீது அரசின் சார்பில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது.

 1. பத்திரிகைத்துறை

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள ‘பத்திரிகைச் சுதந்திரம்‘ பாதுகாக்கப்படும். பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் பரிவுடன்  நிறைவேற்றப்படும்.

அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மக்கள் உரிமை போராட்டங்களில் பங்கேற்றோர் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகள், பொய் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு விளம்பரங்கள் பாரபட்சமினறி அனைத்து பத்திரிகைகளுக்கும் வழங்கப்படும்.

 1. பத்திரிகையாளர் நலன்

பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வாடகை வீடு திட்டம், புதிய மருத்துவக் காப்பீடு, மாத ஓய்வூதியம் அதிகரிப்பு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வீட்டு மனைகள் அளிக்கப்படும். மாவட்ட, வட்ட அளவில் பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச பேருந்து சலுகை அளிக்கப்படும். பத்திரிகையாளர்கள் குடும்ப நலனை கருத்திற்கொண்டு ரூ. 2 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீடு அரசு சார்பில் வழங்கப்படும். அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இரு சக்கர வாகன கடன்  வட்டியின்றி வழங்க பரிந்துரை செய்யப்படும். வட்டாரப் பத்திரிகையாளர்களுக்கும் அங்கீகார அட்டை வழங்கப்படும்.

 1. மதுவிலக்கு

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம்” உருவாக்கப்பட்டு மது ஒழிப்பிற்கு தீவிர பிரச்சாரம்  மேற்கொள்ளப்படும். போதை ஒழிப்பிற்கான சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ற முறையில் அரசுத் துறையில் மாற்றுப் பணி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் மது உற்பத்தி ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டு மது உற்பத்தி ஆலைகளை நிரந்தரமாக மூட  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 1. வருவாய் ஈட்டும் வழிகள்

தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். தமிழக அரசுக்கு மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ. 29,672/- கோடியாகும். டாஸ்மாக் கடைகளை மூடினால், அரசுக்கு வரும்  வருமானத்தை ஈடுகட்டுவதற்கு மக்கள் நலக்கூட்டணி கீழ்க்கண்ட திட்டங்களை செயற்படுத்தும்.

 1. கனிமவளங்கள் மூலம் வருவாய்

ஆற்றுமணல், தாதுமணல் மற்றும் கிரானைட் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம், இது வரை தனியார் நிறுவனங்களும், ஆட்சியாளர்களும் கொள்ளையடித்த தொகை, தமிழக அரசின் கருவூலத்திற்கு வந்து சேரும். இந்த வகையில் கணிசமான தொகை வருமானமாக ஈட்டப்படும்.

 1. பட்ஜெட்டில் சேமிப்பு

2015-16ம் ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டின் படி அரசின் முக்கியமான நான்கு வகைச்செலவுகள் பின்வருமாறு :

அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.41,215 கோடி, ஓய்வூதியமாக ரூ.18,667 கோடி என மொத்தம் ரூ.59,882 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்த பட்ஜெட்டில் இது 41 விழுக்காடு ஆகும்.

இலவசங்கள் மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.59,185 கோடி. மொத்த பட்ஜெட்டில் இது 40 விழுக்காடு ஆகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலவசப் பொருட்களை விநியோகிக்க, பராமரிக்க ஒதுக்கப்பட்ட தொகை ரூ.42,441 கோடி ஆகும். அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.8,488 கோடி, இது மொத்த பட்ஜெட்டில் 7 விழுக்காடு ஆகும்.

2015 – 2016ம் ஆண்டு கட்ட வேண்டிய வட்டி ரூ.17,856 கோடி. மொத்த பட்ஜெட்டில் இது 12 விழுக்காடு ஆகும்.

தமிழக அரசின் செலவு வகைகளில் அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம் இரண்டும் இன்றியமையாதது ஆகும். ஆனால், இலவசங்களுக்காக செலவிடப்படும் தொகை, மற்றும் மானியங்கள் தொகையை குறைக்க வேண்டிய தேவை இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான சீருடை, புத்தகம், புத்தகப்பை போன்ற விலையில்லாப் பொருட்கள், முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் உதவிகளுக்கான மானியங்கள் தொடர வேண்டும். ஆனால் மற்ற தேவையற்ற இலவசங்களை முறைப்படுத்துவதன் மூலம் கணிசமாக வருவாய் சேமிக்க முடியும்.

கடந்த 2011 முதல் 2016 -ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் மட்டும் மேற்கண்ட திட்டங்களுக்காக ரூ.18,749 கோடி செலவாகி உள்ளது. இதனைத் தவிர்த்தால் ஆண்டுக்கு ரூ.3,750 கோடி சேமிக்க வழி இருக்கிறது.

அவசியமற்ற இலவசங்களைத் தவிர்ப்பதன் மூலமும், அவற்றை விநியோகிக்க, பராமரிக்க ஆகும் செலவு சுமார் 50 சதவிகிதம் குறையும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4,244 கோடி சேமிக்கலாம்.

 1. பதிவுத்துறை வருவாய்

தமிழ்நாட்டில் மொத்த வரி வருவாயில் சராசரியாக 10-11 விழுக்காடு முத்திரைத்தீர்வை, பதிவுக்கட்டணங்களின் மூலம் பெறப்படுகிறது. ஆனால், உண்மையான சந்தை மதிப்பீடு வரி செலுத்தினால் அரசுக்குக் கூடுதலாக 20 விழுக்காடு வரை வருவாய் கிடைக்கும். இந்த வகையில் அரசுக்கு ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.15,000/- கோடி ஆகும். பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் ஊழல்களை களைந்து சீரமைத்தால் அரசுக்கு சுமார் ரூ.15,000/- கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

 1. வரி வருவாய்

இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் ஆய்வின்படி, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள வரி வசூலிப்பது, புதிய வரி வருவாய் ஈட்டுவது, வருவாய் இழப்புகளைத் தடுப்பது போன்ற மதிப்பீட்டு அறிக்கையின்படி சுமார் 5000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்துவதன் மூலம், வரி வருவாய் கூடுதலாக அரசின் கருவூலத்தை நோக்கி, 5000 கோடி ரூபாய் வரும் வாய்ப்பு உள்ளது.

 1. மானியங்கள் மூலம் இழப்பு

கடந்த 5 ஆண்டுகளில் உணவு மானியத்திற்கு தமிழக அரசு செலவிட்ட தொகை ரூ.24,900 கோடி ஆகும். ஆண்டுக்கு சராசரியாக ரூ.4,980 கோடி; போலி குடும்ப அட்டைகள் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் தானியத்தில் 16.67 விழுக்காடு வீணாவதாகவும், ஊழல்களால் 19.71 விழுக்காடு இழப்பு ஏற்படுவதாகவும் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வருகிறது. இந்த மோசடிகளை களைவதன் மூலம் உணவு மானியத்தில் சுமார் ரூ.1,660 கோடி சேமிக்கலாம்.

மின்சார மானியத்துக்கு 2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.22,430 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஆண்டு சராசரி ரூ.4,486 கோடி. மின் உற்பத்தி நிலையங்களை சிறப்பாகப் பராமரிப்பது, மின் கடத்தி சாதனங்களின் தரத்தை உயர்த்தி மின் இழப்பைத் தவிர்ப்பது, பழைய மீட்டர்களை அப்புறப்படுத்துவது, மின் உபயோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை விதிப்பது, மின் சிக்கனம், மின் திருட்டை தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் பெருமளவு மின்சாரத்தை சேமிக்க முடியும். இதனால் ஓர் ஆண்டுக்கு ஆகும் மானியச் செலவான ரூ.4,486 கோடியில் மூன்றில் ஒரு பகுதியான ரூ.1,495 கோடி அரசின் கருவூலத்தில் சேமிப்பாக இருக்கும்.

மதுக்கடைகளை மூடுவதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மேற்கண்ட வருவாய் ஈட்டும் வழிமுறைகளை, மக்கள் நலக்கூட்டணி அரசு செயற்படுத்தும்.

 1. வேளாண்மைத் துறை

தமிழகத்தில் விவசாயத்துறை நலிவுற்று வருகிறது. இது தொடர்ந்தால் வேளாண்மைத் தொழிலே எதிர்காலத்தில் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். எனவே, விவசாயத்துறையைப் பாதுகாக்கவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், தற்போது விவசாயத்துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி -2.25 விழுக்காடு என்பதை அடுத்த 5 ஆண்டுகளில் 10 விழுக்காடு உயர்த்திட வழிவகை காண்போம்.

விவசாயத் துறையின் வளர்ச்சி என்பது தொழில்துறை மற்றும் சேவைத்துறை வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும். தொழில்துறை வளர்ச்சி தற்போதுள்ள 7.6 விழுக்காடு என்பதை 12 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை அதிகரிக்கவும், சேவைத்துறையில் ஆண்டு சராசரி வளர்ச்சி 8.8 சதவிகிதத்திலிருந்து 16 விழுக்காடு ஆக அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்படும்.

 1. வேளாண் உற்பத்தி

வேளாண் உற்பத்தியை அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்படும்.

 1. வேளாண்துறையில் வேலைவாய்ப்பு

வேளாண்மைத் துறையில் ஆண்டுக்கு ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயத்துறை ஆராய்ச்சி மற்றும் சேவைத்துறைகள் மூலமும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலமும் இந்த இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. விவசாய கடன் தள்ளுபடி

தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலுவையில் உள்ள மற்றும் தவணை தவறிய அனைத்து வகை விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்களையும் மக்கள் நலக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற உடனே ரத்து செய்யப்படும்.

கடன் கோருகிற அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படும்.

சிட்டா – அடங்கல் கேட்காமல் விவசாயக் கடன் அட்டை (KCC) ஆதாரமாகக் கொண்டு வேளாண் நகைக்கடன் (AJL) 4 சதவிகித வட்டியில் வழங்கப்படும்.

2011-2016 ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 2423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்கள் நலக் கூட்டணி அரசு இந்த அவல நிலையை போக்கிட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

தனியார் கடனிலிருந்து விவசாயிகளை விடுவிக்க விவசாயிகள் கடன் நிவாரணச்சட்டம் மற்றும் திட்டம் உருவாக்கப்படும். ஜப்தி நடவடிக்கை அனுமதிக்கப்படமாட்டாது.

 1. வேளாண் விளைபொருள் விலை நிர்ணயம்

வேளாண் விளைபொருட்களான நெல், கரும்பு, மணிலா, பருத்தி, மரவள்ளி, ராகி, கம்பு, சோளம், மக்காச்சோளம், மஞ்சள், இரப்பர் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் அடக்க விலையோடு 50 விழுக்காடு சேர்த்து விலை தீர்மானிக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000/- கொள்முதல் விலை

வழங்குவதுடன் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதும் 15 விழுக்காடு  வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். கூட்டுறவு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு அதன் அரவை திறன் மேம்படுத்தப்படும்.  ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு விலை தீர்மானிக்கப்படுவதுடன் கரும்பு விவசாயிகளின் இதர குறைகளும் களையப்படும்.

நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- விலை தீர்மானிக்கப்படும்.

                தேவையான அனைத்து இடங்களிலும் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். கொண்டு வரப்படும் அனைத்து நெல்லும் கொள்முதல் செய்யவும், உடனடியாக பணப்பட்டுவாடாவும் உத்தரவாதம் செய்யப்படும்.

கொப்பரைத் தேங்காய் கொள்முதலில் தற்போதுள்ள நடைமுறை நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பயனளிக்கவில்லை. எனவே கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளவாறு உரிதேங்காய் கொள்முதல் செய்யவும் அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ. 25/- என்று நிர்ணயிக்கப்படும்.

விவசாய விளை பொருட்கள் விலை சரிவு மற்றும் அதிக விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் சந்தை தலையீட்டுத் திட்டம் (ஆயசமநவ ஐவேநசஎநவேiடிn ளுஉhநஅந) போன்று ஏற்படுத்தி விவசாய விளைபொருள் கொள்முதல் மற்றும் விற்பனையை மேற்கொள்ள உரிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.

விவசாய பொருளுற்பத்தி முகாமைகளுக்கு (Farmers Producer Company) மூலதன நிதியாக சொத்து பிணையின்றி வங்கிகள் மூலமாக ரூ. 5 கோடி வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. எத்தனால் உற்பத்தி

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு விழுக்காட்டை அதிகரிப்பது, அதன் பயன்பாட்டைப் பரவலாக்குவது குறித்து கடந்த 2001-லிருந்தே மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 2009ல் எரிபொருள் எண்ணெய் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 விழுக்காடு எத்தனாலைப் பெட்ரோலியத்துடன் கலக்க வேண்டும். இதைப் படிப்படியாக 2017ல் 20 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்று பரிந்துரைத்தது. 2014ல் மத்திய அரசின் ‘வாகன எரிபொருள் தொலை நோக்குத் திட்டம் மற்றும் கொள்கை 2025’லும் இது வலியுறுத்தப்பட்டது. கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழகத்தில் 20 விழுக்காடு எத்தனாலை பெட்ரோலியத்துடன் கலக்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும்.

 1. விவசாயக் கல்லூரிகள்

தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமாக விளங்கும் வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் மாவட்டங்கள் தோறும் அரசு விவசாயக் கல்லூரிகள் திறக்கப்படும்.

 1. வேளாண்மைத் துறை நிர்வாகம்

விவசாயிகளது அன்றாட பிரச்சனைகளை முறையிடவும், தீர்வு காணவும் மாவட்ட அளவில் மக்கள் பிரதிநிதிகளையும் கொண்ட வேளாண் குறை தீர்வுக்குழு அமைக்கப்படும்.

விவசாயப்பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் பல்துறை அலுவலகத்துக்கு கால் கடுக்க அலைவதை தவிர்த்திட ஒவ்வொரு தொடக்க வேளாண் சங்கத்திலும் – அனைத்து துறை பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை சாளர அலுவலகம் திறக்கப்பட்டு – விவசாயிகளின் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதற்காக நிரந்தரமாக மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படும். இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் இடம் பெறுவர்.

விவசாயிகளுக்கு உரம், பூச்சிமருந்து, விதை உள்ளிட்ட இடுபொருட்கள் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படும்.

கிராம ஊராட்சிகளுக்கு விவசாயப் பணிகளுக்கான இயந்திரங்களை அரசே வாங்கித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இயந்திரங்களை குறு, சிறு விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும். வேளாண் இயந்திரங்களை 50 விழுக்காடு மானியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும். உரிய நேரத்தில் கிடைக்க இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின்இணைப்பு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படும். புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு ஒருவார காலத்தில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள விவசாய மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் 20 மணிநேரம் வழங்கப்படும்.

உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை அரசே தீர்மானிக்கும். வேளாண் விளை பொருட்களை சேமித்து பாதுகாக்கவும், மதிப்புக் கூட்டவும், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். உயிர்ம வேளாண்மை பொருட்களுக்கு தனி சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவோம். சத்துணவில் குறிப்பிட்ட அளவு  சிறுதானிய பொருட்களை அரசே வழங்க நடவடிக்கை எடுப்போம்.

ஏரி,குளம், கால்வாய் போன்றவற்றை தூர்வாரி பராமரிக்கவும், நீர்ப்பாசனத்தை முறைப்படுத்தவும் தனித்துறை ஏற்படுத்தப்படும். மழைநீர் சேமிப்பு, நீர் செறிவூட்டல் மூலம் நிலத்தடி நீர்வளம் பெருக்கப்படும். பருவநிலை மாற்றம் குறித்து ஆராய மாநில அளவில் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்

தமிழகத்தின் விவசாயத்தில் முக்கியப் பங்கு வகித்த நமது பாரம்பரிய விதைகள் பல அழியும் தருவாயில் உள்ளன. வேளாண் நிபுணர்களின் துணையோடு அவற்றைப் பாதுகாக்கவும், பாரம்பரிய விதைகளைக் கொண்டு சாகுபடிகளை மேற்கொள்ளவும் முயற்சி எடுக்கப்படும்.

விவசாயிகள் பயிரிடும் நீண்ட காலப் பயிரான சவுக்கு தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மழை வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்போது, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பது இல்லை. எனவே, சவுக்கு பயிரிடப்படும் நிலங்கள் வேளாண்மைத்துறையின் கீழ் கொண்டுவரப்படும்.

சிறு, குறு விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.

விளைநிலங்கள் வேறு பயன்பாடுகளுக்கு மாற்றுவதை தடுக்க நில பயன்பாட்டுச் சட்டம் கொண்டுவரப்படும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த அனுமதியளிக்கப்பட மாட்டாது.

பழங்கள் – காய்கறிகள் அழுகாமல் பாதுகாத்திட குளிர்பதன கிடங்குகள் தேவையான பகுதிகளில் அமைக்கப்படும்.

 1. பயிர்க் காப்பீடு

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், தனிநபர் பயிர்க் காப்பீடு பெறவும், அனைத்து பயிர்களுக்கும் இதனை விரிவுபடுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்திற்கு தனிநபர் – தனி நிலம் பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். எலி – குரங்கு – மயில் – பன்றி – யானை போன்ற விலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு, பயிர் இழப்பிற்கும் காப்பீட்டு திட்டம் விரிவுபடுத்தப்படும்

வனவிலங்கு சட்டம் 1998ம் ஆண்டில் இருந்த நிலையிலிருந்து மாற்றி அமைக்கப்படும். வன எல்லை தாண்டி விலங்குகள் வராமல் அரசு கட்டுப்படுத்திக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கந்துவட்டி, மீட்டர் வட்டிக் கொடுமைகளில் இருந்து விவசாயிகளையும், பொதுமக்களையும் காப்பாற்றுகின்ற முறையில் ‘மக்கள் நல வங்கி’ ஒன்றை அரசு சார்பில் தொடங்கி அதன் மூலம் கடன் தேவைகள் நிறைவேற்றப்படும்.

 1. வேளாண் சார்ந்த தொழில்கள்

வேளாண் சார்ந்த துணைத் தொழில்களான தேனீ வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, சிப்பி காளான் உற்பத்தி, தீவனப் பயிர் உற்பத்தி, கடல் பாசி உற்பத்தி, சிறுதானிய பயிர் சாகுபடி போன்றவற்றுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றுக்கு மானிய உதவியுடன் கடன் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, பசு, ஆடு, மாடுகள், கோழிகள் பராமரிக்க விவசாயிகளுக்கு  தேவையான உதவிகள் செய்யப்படும்.

தமிழ்நாட்டின் மரபு வகை மாட்டு இனங்களான உம்மளச்சேரி, காங்கேயம், ஆலம்பாடி, புளியங்குளம் ஆகியவை அரிய வகைகளாகும். இவற்றை பாதுகாக்கவும், வளர்த்தெடுக்கவும் உரிய முயற்சிகளை மக்கள் நலக் கூட்டணி அரசு செய்யும்.

உணவு பதப்படுத்தும் மற்றும் மதிப்புக் கூட்டும் வேளாண் தொழிற்சாலைகளை PPP (Private-Public-partnership) முறையில் தேவையான பகுதிகளில் அமைக்கப்படும்.

தென்னை விவசாயத்தை அதிகமாகக் கொண்டுள்ள மாவட்டங்களில் தேங்காய் மற்றும் தென்னங்கீற்று போன்ற சார்புப் பொருட்களுக்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

 1. பனை வளர்ச்சி

தமிழ்நாட்டின் பாரம்பரிய பனைமரங்களை பாதுகாக்கவும், பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பதநீரிலிருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கவும் பனை வளர்ச்சி வாரியம் ஏற்படுத்தப்படும்.

 1. நீரா மென்பானம்

இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் நீரா என்ற பானத்தை தென்னை பாலிலிருந்து தயாரிக்க தென்மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. அதனை ஏற்று கேரள மாநில அரசு நீரா மென்பானம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தென்னை மலர் மொட்டுக்களிலிருந்து சுரக்கக் கூடியது தான் தென்னைப் பால். விரியாத தென்னம்பாளையிலிருந்து வடித்தெடுக்கும் தென்னைப் பால் தான் நீரா என்று அழைக்கப்படுகிறது. லாரிக் அமிலத்தை உள்ளடக்கியதால் இது தாய்ப்பாலுக்கு இணையானதாகக் கூறப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம் சத்துகள் நிறைந்தும், கொழுப்பு, ஆல்கஹால் இல்லாத பானமாகவும் இருப்பதால் நீராவுக்கு கல்லீரல் நோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் இந்திய அறிவியல் கழக ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்டதில் நீரா அருந்தும் பழக்கத்தால் கல்லீரல் நோய் பாதிப்பகளை முற்றிலும் குணப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. நீரா அருந்துவதன் மூலமாக காசநோய், சிறுநீரகப் பிரச்சனைகள் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், உடல் நலத்திற்கு தேவையான சர்க்கரை, வைட்டமின் ஏ, பி மற்றும் சி மினரல் இரும்பு, பாஸ்பரஸ், அஸ்கார்கபிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதற்கு சீசன் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் தென்னையிலிருந்து எடுக்க முடியும். இந்த பானத்தை பாட்டிலில் அடைத்து, ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை கெடாமல் பாதுகாத்து வைக்க முடியும். அதில், சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளும் பருகலாம். மேலும் குழந்தைகளுக்கான சிறப்பு மிட்டாய் வகைகளும் தயாரிக்க முடியும். ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் மற்றும் இளநீர் வெட்டுவதால் ஆண்டுக்கு ரூ. 1,500 கிடைக்கும். ஆனால் நீரா எடுத்தால் மாதம் ரூ. 1,500/- கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தென்னையிலிருந்து நீரா இறக்கி கருப்பட்டி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இந்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் வழிகாட்டுதலின்படி நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளன. தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான நீரா மென்பானம் தயாரித்து விற்பனை செய்ய மக்கள் நலக் கூட்டணி அரசு அனுமதி வழங்கும்.

 1. வாசனை திரவிய ஆலைகள்

தமிழகத்தில் பயிரிடப்படும் வாசனை மலர்களான ரோஜா மற்றும் மல்லிகை மலர்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற வகையில் கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, கரூர் மாவட்டம் வைகை நல்லூர், நெல்லை மாவட்டம் தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், மதுரை மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகிய பகுதிகளில் மலர்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்குகளை இரண்டு ஆண்டுகளுக்குள் அமைக்கவும், இந்த வாசனை மலர்களைப் பயன்படுத்தி வசானைத் திரவியங்கள், வாசனைப் பொடிகள் தயாரிக்கும் ஆலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. மூலிகைச் செடிகள் வளர்ப்பு

தரிசு நிலங்களில் மூலிகைச் செடிகள் பயிரிடுவதற்கான வாய்ப்புகளைக் கண்டு அறிந்து அவற்றில் மூலிகைச் செடிகளை வளர்ப்பதற்கு விவாசயிகளை ஊக்குவித்து, தேவையான நிதி ஆதாரங்களுக்குக் கடன் வழங்கவும், பயிரிடப்படும் மூலிகைச் செடிகளைச் சந்தைப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.

 1. முந்திரி பதப்படுத்துதல்

தமிழ்நாட்டில் 93000 ஹெக்டேரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் இருந்து ஆண்டுக்கு 40000 டன் முந்திரிக் கொட்டை கிடைக்கிறது. தமிழகத்தில் விளையும் முந்திரிக் கொட்டை தரம், சுவை மிகுதியாக இருந்தும் தற்போது உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். முந்திரியை வணிகர்கள் சொற்ப விலைக்குக் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளுக்கு உரிய விலைகிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டம் பண்ருட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதிகளில் முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் மற்றும் முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் நிறுவப்படும்.

 1. பழச்சாறு ஆலைகள்

திருச்சி, கரூர் மாவட்டங்களில் வாழைப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை, சேலம், தேனி, தர்மபுரி மாவட்டம் பர்கூர் ஆகிய பகுதிகளில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகள், அரவக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் மூலனூர் ஆகிய பகுதிகளில் முருங்கைப் பவுடர் தயாரிக்கும் ஆலை, பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காய பவுடர் தயாரிக்கும் ஆலை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, பொள்ளாச்சிப் பகுதிகளில் தக்காளிப் பழம் பதப்படுத்தும் ஆலைகள், தேனி மாவட்டத்தில் திராட்சையிலிருந்து பழச்சாறு தயாரிக்கும் ஆலை, நெல்லை மாவட்டம் புளியங்குடி, கடையம் பகுதிகளில் எலுமிச்சைப் பழச்சாறு தயாரிக்கும் ஆலைகள் அமைக்கப்படும்.

 1. வேளாண் புள்ளி விபர ஆணையம்

 தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் போன்று மாநில அளவில் வேளாண் புள்ளி விபர ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, விவசாயத்துறை உற்பத்தி, ஏற்றுமதி, விளைபொருள் விலை நிர்ணயம், பயிர் சாகுபடி, விவசாயிகள் பெற்றுள்ள கடன் மற்றும் விவசாயிகள் வாழ்நிலை குறித்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில் வேளாண்மைத்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிக்கு குறைந்தபட்ச வருமானத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்திட விவசாய வருமான ஆய்வுக்குழு அமைக்கப்படும்.  6 மாத காலத்துக்குள் குழுவின் அறிக்கை பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 1. இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண்மைத்துறையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் தனித்துறை ஏற்படுத்தப்படும். அடுத்த ஐந்தாண்டிற்குள் 25 சதவிகித நிலப்பரப்பை இயற்கை வேளாண்மைக்கு கொண்டுவரப்படும்.

மண்புழு தயாரிக்கவும் கால்நடைகளின் சாணம், சிறுநீர் சேகரிக்கவும்  சிமெண்ட் தளம் அமைக்க நிதி உதவி வழங்கப்படும்.

இயற்கை முறை விவசாயத்திற்கு தேவையான உரிய மானியம் வழங்கப்படும். மரபணு மாற்று பயிர்களுக்கும், அதன் சோதனைகளுக்கும் தடை விதிக்கப்படும்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கையை நேசிக்கும் அனைவரின் வழிகாட்டியாக மாறி உள்ளார். இரசாயன உரங்கள் மண்ணை அழிக்கிறது. கார்ப்பரேட் மருத்துவம் உடலை அழிக்கிறது என்பதுதான் அவரது கருத்து ஆகும். நம்மாழ்வார் உருவாக்கிய கானகம், வானகம் போன்றவை இயற்கை வேளாண்மைக்கான பயிற்சி மற்றும் ஆய்வு மேற்கொள்கிறது. விவசாயத்தை இயற்கையோடு இயைந்த வகையில் வளர்ச்சி பெறச் செய்ய ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு மக்கள் நலக்கூட்டணி அரசு, எல்லா வகையிலும் வசதி, வாய்ப்புக்களை உருவாக்கித்தரும்.

 1. பால் உற்பத்தி மற்றும் விலை குறைப்பு

பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்குவதோடு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். பசும்பாலுக்கு ரூ. 30/-ம், எருமைப் பாலுக்கு ரூ. 35/-ம் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.

உற்பத்தியாகின்ற பால் முழுவதையும் மாநில அரசின் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

அதிமுக அரசு உயர்த்திய பால் விலை உரிய மானியத்துடன் குறைக்கப்படும். இதற்கான அரசு  மானியம் வழங்கப்படும்.

 1. விவசாயிகளை பாதிக்கும் திட்டங்கள் ரத்து

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல் எரிவாயு, பெட்ரோலியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இடமளிக்காமல் விவசாயத்திற்கு மட்டுமேயான பகுதியாக இருக்க, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

கெயில் நிறுவனம் கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்ல கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 1. பாசனம்

தமிழ்நாட்டின் நதிநீர் பிரச்சினைகள் மற்றும் பாசனம் தொடர்பான சிக்கல்கள் இருப்பதால், நீர்ப்பாசனத்துக்கெனத் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.

மேட்டூர் நீர்த்தேக்கம், வீராணம் ஏரி, பொன்னேரி உள்ளிட்ட பெரிய ஏரிகள் மற்றும்  சிற்றோடைகள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் போன்றவை தூர்வாரப்பட்டு, நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் முற்றாக அகற்றி, நீர்வழித்தடங்களின் இயல்பான போக்கு மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தமான மாற்று இடம் வழங்கப்படும்.

மழைநீர், மழைக்கால வெள்ளநீர், சேதாரமில்லாமல் சேமிக்கப்பட, உரிய பொருத்தமான புதிய ஏற்பாடுகள் உருவாக்கப்படும்.

நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சொட்டுநீர் பாசன பயன்பாட்டை மேலும் பரவலாக்கி அதற்கான மானியமும் உயர்த்தி வழங்கப்படும்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அத்திக்கடவு – அவினாசி திட்டம், காவிரி – குண்டாறு – வைகை திட்டம், தாமிரபரணி – கருமேனியாறு இணைப்புத்திட்டம், பாண்டியாறு – புன்னம்புழா போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் எண்ணெக்கொல்புதூர் கால்வாய் திட்டம், பாளையபுதூர் அடுத்த ஜெகநாதன் கோம்பை அணைக்கட்டுத்திட்டத்தை நிறைவேற்றுவோம்.

நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதை தடுத்திட அரசு செலவில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக  அனைத்து கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும் உள்ள அரசு நிலங்களில் பண்ணைக் குட்டைகள் வெட்டப்படும். பண்ணைக் குட்டை வெட்டப்படும் பட்டா நிலத்திற்கு சொந்தமான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

ஆழ்குழாய்கள் இறக்கி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மேற்கொள்ளப்படும்.

அனைத்து பாசனக் கால்வாய்களும் சீரிய முறையில் நவீனப்படுத்தப்படும். இதற்கென தனிவாரியம் உருவாக்கி உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசுத் துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம் பெற ஆவன செய்யப்படும்.

மழைநீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்திடக் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் 50 கி.மீ. தூரத்துக்கு ஒரு கதவணை கட்டி நீரைத் தேக்குவது, கடல் நீர் உட்புகாமல் தடுத்திட முகத்துவாரங்களில் தடுப்பணைகள் கட்டுவது போன்ற பணிகள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படும்.

நீர் நிலைகளின் (ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்) வரலாற்றை அறிந்து அவற்றின் இன்றைய நிலைமை என்ன என்பதை எல்லாரும் அறியும்படி செய்யப்படும். இவற்றில் இனி வரும் காலங்களில் ஒரு அடி நிலம் கூட ஆக்கிரமிக்கப்படாதபடி பாதுகாக்கப்படும். மழைநீர் சேகரிப்பை ஒரு இயக்கமாக மாற்றுவது கட்டாயத் தேவை ஆகும்.

நீர் இன்றி அமையாது உலகு என்பதை விவசாயம் சார்ந்த நமது நாட்டை விட அறிந்தவர் யார்? ஆக்கிரமிப்புகளைக் கண்டு வாளாவிருந்துவிட்டோம். நீர் நிலைகள் எல்லாம் காலப் போக்கில் அளவில் சுருங்கியும் சில மறைந்தும் விட்டன. விழிப்புணர்வு ஏற்பட உதவுவோம். பேணிப் போற்றிப் பாதுகாப்போம். நீர் நிலைகள் பற்றிய ஆவணத் தொகுப்பு 6 மாத கால கட்டத்தில் அரசால் வெளியிடப்படும்.

 1. நதிநீர் பிரச்சனைகள்

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைத்திடவும், காவிரியின் குறுக்கே மேகதாது, இராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணை கட்டத் திட்டமிடும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை தண்ணீரைத் தேக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பவானி நதி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் ஆந்திர அரசு தடுப்பு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தென்னக நதிகளையும், மாநில ஆறுகளையும் இணைக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.

நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீரைத் திறந்து விடுவதற்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், செண்பகவல்லி அணையைச் சீரமைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அண்டை மாநிலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீரை தமிழகத்திற்கு பெறுவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்துக் கட்சியினர் ஒருங்கிணைப்போடு நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் நமது உரிமைகளை போராடிப் பெற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், அண்டை மாநிலங்களோடு சுமூக நல்லுறவு கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 1. நிலம்

உபரி நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவது என்பதில் தனித்து வாழும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கணவன் – மனைவி இருவரின் பெயரிலும் கூட்டுப் பட்டா வழங்கப்படும்.

சாகுபடி பரப்பளவு குறைவதைத் தடுக்கும் வகையில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், விவசாயம் அல்லாத ஏனைய பணிகளுக்கு மாற்றப்படுவதையும் தடுத்திட தேவையான சட்டம் இயற்றப்படும்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894-ஐ விட கொடுமையான பிரிவுகள் கொண்ட, “தொழிற் சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் – 1997”, விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரிக்க வழிவகை செய்கிறது. இதனை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலம் கையகப்படுத்தும் போது விவசாயத்திற்கு முக்கியத்துவம் குறையாத வகையில் புதிய அணுகுமுறை மேற்கொள்ளப்படும்.

நீண்ட காலமாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். இந்நிலங்களில் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் நிலமற்ற ஏழை குத்தகைதாரர்களுக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் அந்நிலங்களை சொந்தமாக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். இதனால் கோவில் சம்பந்தப்பட்ட பூஜை மற்றும் பராமரிப்பு பணிகள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  குத்தகை சாகுபடியாளர்களின் பழைய நிலுவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும்.

தமிழகத்தில் எஸ்டேட் நிலங்களில் நீண்ட காலமாகக் குத்தகைச் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பணிபுரியும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 150 நாட்கள் வேலை வழங்கிடவும், கூலி நாளொன்றுக்கு ரூ. 250/- வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் விவசாயத்திற்கு பயனுள்ள வகையில் விரிவுபடுத்தப்படும்.

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தைப் போல் நகர்ப்புற ஏழைகளுக்கு ‘நகர்ப்புற வேலை உறுதித் திட்டம்’ உருவாக்கப்பட்டு வேலையளிக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்.

 1. இயற்கை இடர்பாடு

தொடர்ந்து ஏற்பட்டு வரும் இயற்கை இடர்பாடுகளால் கடலோர மீனவர்கள், விவசாயிகள், கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் பெரும் நாசத்திற்கும், நட்டத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் நட்டத்தை முழுமையாக ஈடு செய்யும் வகையில் நிவாரண உதவிகள் வழங்கிட  “இயற்கை பேரிடர் நிவாரண உதவித் திட்டம்” வகுக்கப்படும். இத்தகைய பேரிடர்களை தடுக்கும் வகையிலான நிரந்தரப் பேரிடர் தடுப்பு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

 1. சென்னை மாநகரம் பாதுகாப்பு

உலகம் முழுவதும் நகரமைப்பு திட்டமிடுதல்களில் முதலில் நீர்வழிப்பாதைகள் தான் முடிவு செய்யப்படும். அதன்பிறகு தான் மனிதர்கள் வாழும் பகுதி தீர்மானிக்கப்படும். சென்னை மாநகரமும் ஒரு காலத்தில் மழைநீர்ப் பிடிப்பு பகுதியாகவும், நீர்நிலைகள் நிறைந்த பகுதியாகவும் தான் இருந்தது. சென்னையின் மூன்று முக்கிய நதிகளான கூவம், அடையாறு, பக்கிங்காம் ஆகியவற்றின் நீர்த் தடப்பகுதிகள் ஆக்கிரமிப்புகளால், 2015 நவம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், வரலாறு காணாத பேரழிவை சென்னை மாநகரம் சந்தித்தது. எனவே மேற்கண்ட மூன்று ஆறுகளை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்ற வழக்குகள் தொடுக்கப்படும். நதிநீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள், மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சென்னை மாநகரம் பாதுகாக்கப்படும்.

சென்னையில் சாபக்கேடாக கொடுங்கையூரில் மலைபோல் குவிந்து கிடக்கும் மருத்துவக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள் போன்ற குப்பை மேட்டால் அப்பகுதியில் சுற்றுச் சூழல் நாசமாகி மக்கள் கொடூர புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இதைப்போலவே பெருங்குடி குப்பை மேடும் அப்பகுதி மக்களுக்கு சுகாதாரக்கேட்டையும் புதிய, புதிய நோய்களையும் உருவாக்கி வருகிறது. இவை இரண்டையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்ய மக்கள் நலக் கூட்டணி அரசு திட்டங்களை செயற்படுத்தும்.

 1. கிராமப்புற, நகர்ப்புற மேம்பாடு

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டுமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். ஏற்கனவே பல வகை புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும்.

சொந்த வீடு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் குடியிருக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வீடு கட்டுவதற்கான பெருந்திட்டம் உருவாக்கப்படும். குடியிருக்க வீடில்லாத அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கப்பட்டு குடிசைகள் இல்லா தமிழகம் அமையத் திட்டமிடப்படும்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுமை வீடுகள் கட்டும் இலக்கு நிர்ணயிக்கப்படும். இத்திட்டத்திற்கு அரசு நிதியுதவி வீடொன்றுக்கு ரூ. 4 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் இதர நகரங்களில் வாழும் குடிசைப் பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்.

நகர்ப்புறங்களில் ஓடும் எல்லா நதிகளும் கரையமைத்துப் பாதுகாக்கப்படும். கரை அமைப்பது, மற்றும் நீர்வழிகளை அழகுற பராமரிப்பதில் தனியார் பங்களிப்பு கோரப்படும். கூவம் நதி துவங்கி, நொய்யல் ஆறு உள்ளடங்கி தென் கோடியில் பாயும் தாமிரபரணி நதி மற்றும் பிற நதிகள் எல்லாம் உயிர் நாடிகளாகப் போற்றப்படும் நிலை வர எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். நதிகளின் அகலம் நகர்ப்புறங்களில் ஒரு அடிகூட குறையாத வண்ணம் பராமரிக்கப்படும். நதிகள் மாசு அடைவது கடும் குற்றச் செயலாக அறிவிக்கப்பட்டு, விதிமுறைப்படி தண்டனைகள் பெற்றுத்தரப்படும். கடலில் கலந்து வீணாகும் நதி நீரின் அளவு பெருமளவில் குறைக்கப்பட அறிஞர்கள் மற்றும் துறை சார்ந்த மக்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் அரசு பொது மயானங்கள் அமைக்கப்படும்.

அரசுத் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களில் கிராமப்பஞ்சாயத்துக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.

பஞ்சாயத்து தலைவர்களை உருவாக்கும் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிலையத்தை தலைவர்கள் மேம்பாட்டு பயிற்சி நிலையமாக மாற்றியமைத்து தலைவர்களுக்கான பயிற்சியளிக்கப்படும்.

கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கு அவர்களது பணியினை மேம்படுத்தும் வகையில் கேரள மாநிலத்தில் உள்ளவாறு மாத ஊதியம் வழங்கப்படும்.

 1. நகர்ப்புற மக்கள்

நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். மக்கள் கூடுமிடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி, நகர்ப் புறங்களில் வடிகால் வசதி மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த ஆவன செய்யப்படும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சி மன்றங்களில் துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

தொழில்வளம்

 1. சிறு-குறு தொழில் வளர்ச்சி

சிறு – குறு தொழிலுக்கு முன்னுரிமை அளித்தல், கடந்த காலத்தைப் போலவே சில குறிப்பிட்ட தொழில்களின் உற்பத்தியை சிறு தொழில்களுக்காக ஒதுக்குதல், தடையற்ற மின்சாரம், இத்தொழில்களுக்கு நிரந்தரமாக உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளை பெற்றுத் தருவது போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி சிறு-குறு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்படும்.

சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்கள் 15 சதவிகிதம் கொள்முதல் செய்வது  கட்டாய முறையாக அமல்படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் – குறிப்பாக கிராமப்பகுதிகளில் – புதிய தொழிற்பேட்டைகள் துவக்கப்படும்.  ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் மானிய விலையில் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு இடம் வழங்கப்படும்.

தமிழக அரசு அறிவித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் அந்த தேதியிலிருந்தே அமலாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு அமைக்கப்படும் தொழிற் சாலையின் 10 விழுக்காடு பங்குகள் நில உரிமையாளர்களுக்கு வழங்கவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலையும், நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளித்திடவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுத்தப்படும்.

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குறுந்தொழில் பேட்டைகள், மூலப்பொருள் வங்கி அமைத்தல், சொத்துப் பிணையம் இன்றி கடன் உதவி வழங்குதல் மற்றும் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை நீட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மோட்டார் பம்ப் செட் உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளுக்கு வாட் வரியை 2 விழுக்காடு என்ற அளவில் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள், மேலும் நலிவடைய விடாமல் பாதுகாப்பதுடன், உள்நாட்டு சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தி வளர்த்துப் பாதுகாக்கும் யுக்திகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். உலகச்சந்தை வாய்ப்பைப் பெற்றுத்தரவும், உள்நாட்டு உற்பத்தியில் தரமான நவீன தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுத்தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 1. பெருந்தொழில் நிறுவனங்கள்

பெருந்தொழில் முதலீட்டாளர்களிடம் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை கட்டாயமாக்கிச் செயல்படுத்தப்படும்.

தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். அரசின் சலுகைகளை அளிப்பதில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள நோக்கியா, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களை மீண்டும் இயங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் தொழில்முனைவோருக்கு ஒற்றைச்சாளர முறையில் தேவையான உரிமங்கள் அரசு அனுமதி பெற விண்ணப்பித்த ஒருமாத காலத்திற் குள் வழங்கப்படும்.

தென்மாவட்டத்தில் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல ஆண்டுகளாக தொழிற்சாலைகள் நிறுவப்படாமல் இருக்கின்ற நிலையை மாற்றி புதிதாக அமையவுள்ள தொழிற்சாலைகள் அங்கு அமைக்கப்படும். இதன் மூலம் தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சிக்கு வழிகாணப்படும்.

 1. மோட்டார் தொழில்

இந்தியாவின் பிற மாநிலங்களின் பெருநகரங்களில் இருப்பதைப் போன்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் ‘ஆட்டோ நகர்’ உருவாக்கப்படும். இதற்கு தேவைப்படும் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும். இதன் மூலம் பொறியியல் பட்டதாரிகள், பட்டய பொறியாளர்கள், ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 1. தீப்பெட்டித் தொழில்

தீப்பெட்டித் தொழிலின் மூலப்பொருட்களான மெழுகு (வேக்ஸ்), கந்தகம் (சல்பர் குச்சி) போன்றவற்றின் விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, விலை உயர்வு, இயந்திரமயமாக்கல் போன்ற காரணங்களால், கையினால் செய்யப்படுகின்ற சிறு தீப்பெட்டித் தொழில் நலிவு அடைந்து வருகிறது. இதனைப் பாதுகாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நலக்கூட்டணி அரசு செய்யும்.

 1. நெசவுத் தொழில்

விவசாயத்திற்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள நெசவுத் தொழில் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படும். சிறு மற்றும் குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு தற்போது அரசு வழங்குகின்ற 500 யூனிட் கட்டணமில்லா மின்சாரத்தை 1000 யூனிட் வரை உயர்த்தப்படும். மேலும் இச்சலுகை 10 எச்.பி. உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி 15 எச்.பி. வரை உயர்த்தப்படும்.

விசைத்தறிகள் தரம் உயர்த்துவதற்கும், சிறு மற்றும் குறு விசைத்தறி உரிமையாளர்கள் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்திக்கு தேவையான கருவிகள் வாங்கிடவும் உரிய மானிய உதவிகள் அளிக்கப்படும்.

விசைத்தறிகளுக்குப் பயன்படும் நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 விழுக்காடு விற்பனை வரி 2 விழுக்காடாகக் குறைக்கப்படும்.

திருப்பூர் மாவட்டம், ‘பல்லடத்தில்’ உள் கட்டமைப்பு வசதிகளுடன் நவீன ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அயல்நாட்டுச் செலாவணியை ஈட்டுவதற்கும் அடித்தளமாக உள்ள விசைத்தறித் தொழில், மத்திய அரசின் ஜவுளிக் கொள்கை காரணமாகப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாடற்ற நூல் விலை உயர்வு, விசைத்தறித் தொழிலைக் கடுமையாக பாதித்து உள்ளது. நாட்டின் பருத்தி விளைச்சலில் 61 விழுக்காடு சந்தைக்கு வந்த பிறகு, உள்நாட்டு தேவை போக மீதமுள்ள பஞ்சை மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். ஆனால், பருத்தி ஏற்றுமதியால் பஞ்சு, நூல் விலை அபரிதமாக உயர்ந்து விட்டது. தேவைக்கு ஏற்ப பஞ்சு கொள்முதல் செய்யும் சிறு மற்றும் நடுத்தர ஆலைகள் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் ஆலைகளை மூடவும், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க வேண்டிய நிலையும் உருவாகின்றது. இதன் காரணமாக விசைத்தறிகள் மற்றும் திருப்பூர் பின்னல் ஆடை, ஆயத்த ஆடைத் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஆகவே, விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்கவும், பருத்தி ஏற்றுமதிக் கொள்கையை இரத்து செய்யவும், தொழில் நெருக்கடிகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து களையவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நெசவுத் தொழிலில் புதுமையான கட்டமைப்பு வசதி காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய வணிக உத்திகள், உயர் தொழில்நுட்பப் பயிற்சிகளைச் செயல்படுத்தவும், ஒருங்கிணைந்த உயர்தொழில்நுட்பப் பயிற்சிகளைச் செயல்படுத்தவும், ஒருங்கிணைந்த உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காக்கள் அமைக்கவும் வலியுறுத்தப்படும்.

 1. கைத்தறி மற்றும் பட்டு நெசவுத் தொழில்

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட 22 ரகங்களை நீடிக்க வகை செய்தல், பஞ்சு, சிட்டாநூல், தட்டுப்பாட்டை போக்குதல், கைத்தறி பட்டு நெசவுத் தொழிலுக்குத் தேவையான வெள்ளி, தங்க சரிகை விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல் மற்றும் துணிகளைச் சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி போன்றவற்றை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உலகின் பட்டு உற்பத்தியில் சீனத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்திய மாநிலங்களில் பட்டு உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடம் வகிக்கிறது. மல்பரி, முகா, டாசர், எரி ஆகிய 4 வகை பட்டுக்களால் தங்கம், வெள்ளி சரிகைகளால் கலைநயத்துடன் தயாரிக்கப்படும் பட்டு ஆடைகளை வெளிநாட்டினரும் விரும்பி வாங்குகின்றனர். காஞ்சிபுரம் பட்டு தமிழகத்திற்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டும் வர்த்தக மையமாக திகழ்கிறது. காஞ்சிபுரம் ஓரிக்கையில் இயங்கி வந்த தமிழ்நாடு சரிகை நூற்பாலையிலிருந்து சரிகைகள் உற்பத்தி செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் பயன்பட்டு வந்தனர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் பட்டு நெசவுக்கான கச்சா மூலப்பொருட்களான கோரப்பட்டு, தங்கம், வெள்ளி சரிகை, கள்ளச்சந்தையில் இடைத்தரகர்களால் பதுக்கி கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நெசவாளர்களின் மூலதனம் சூறையாடப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பலகோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்ட பட்டு பூங்காத் திட்டம் முடங்கிப்போயுள்ளது. பட்டு உற்பத்தியாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டு காஞ்சியில் பட்டுப் பூங்கா திட்டம் செயல்பட நடவடிக்கை எடுப்போம்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில் தொடங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

நெசவாளர்களின் வங்கிக் கடன்களை தமிழக அரசே ஏற்றுக் கொள்வதுடன், விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலுக்கு புத்துயிர் அளிக்கப்படும்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் ஒரு குழு அமைத்து உரிய முறையில் தீர்வு காணப்படும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.

 1. பொதுத்துறை பாதுகாப்பு

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத் மிகுமின் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மக்கள் நலக் கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தமிழக அரசின் 64 பொதுத்துறை நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் மட்டுமே குறைந்தபட்சம் லாபம் ஈட்டி வருகின்றன. தமிழ்நாடு வேளாண்மை தொழில்கள் வளர்ச்சி கழகம், கோழியின வளர்ச்சிக் கழகம், கரும்புப் பண்ணைக் கழகம், கட்டுமானக் கழகம், மெக்னீசியம் மற்றும் மரைன் கெமிக்கல்ஸ் லிமிடெட், எஃகு நிறுவனம், கிராஃபைட்ஸ் நிறுவனம், சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் லிமிடெட், மாநிலப் பொறியியல் மற்றும் பயன்நோக்கு நிறுவனம், தோல் வளர்ச்சி நிறுவனம், திரைப்பட வளர்ச்சிக் கழகம், பொருள் போக்குவரத்துக் கழகம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படாமல் நலிவடைந்து விட்டன. இவற்றை லாபகரமாக இயக்கிட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

 1. தொழிலாளர்கள் நலன்

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் முதலீடுகள் கொண்டுவரப்படும். அதேசமயம் தொழிலாளர்களின் ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.

தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான சட்டத் திருத்தம் இயற்றப்படும்.

‘பன்னாட்டு தொழில்நிறுவனங்கள்’ மற்றும் ‘உள்நாட்டு பெரிய நிறுவனங்களில்’ தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நிலைநாட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகளில், நாட்டுக்குள் இன்னொரு நாடு போல் தொழிலாளர் நலச் சட்டங்கள் செல்லுபடியாகாத நிலை உள்ளது. பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் இந்நாட்டு சட்டங்களை அமுலாக்க  உறுதி செய்யப்படும்.

முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் நலவாரியங்களும் தீர்மானிக்கப்பட்ட நலவாரியக் குழுக்கள் மூலமே செயல்படுத்தப்படும். வாரிய உறுப்பினர்கள் பயன்பெறுவதற்கு தடையாக உள்ள நிபந்தனைகளை இரத்துச் செய்ய தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொழிலாளர் விரோத மத்திய பாஜக அரசு இயற்ற துடிக்கும் ‘சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை’ திரும்பப் பெற உரிய முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களைத் திருத்த முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அரசுத் துறைகளிலும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நிரந்தர பணிகளில் தொழிலாளர்களை ஒப்பந்தக்கூலிகளாக்கி உழைப்பு சுரண்டப்படுவதை தடுக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பஞ்சாலைகளில் நவீனக் கொத்தடிமை முறையாக உள்ள சுமங்கலித் திட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கிச் செல்லும் கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள் உருவாக்கப்படும்.

பட்டாசு தயாரிக்கும் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்.

தையல் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும். தேவையான கடனுதவி வழங்கப்படும். நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படும்.

 1. அமைப்புசாரா தொழிலாளர் நலன்

தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பிற்கும், தேவைக்கும் பொருத்தமான முறையில் மாற்றி அமைக்கப்படும். மேலும் விரிவான சமூக நலத்திட்டங்களை தொழிற்சங்கங்களில் ஆலோசனைகளைப் பெற்று அமலாக்கப்படும்.

எங்கு விபத்து நடந்து இறந்தாலும் முறைசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இயற்கை மரண நிவாரணத் தொகை ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும். நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் இதர பணப்பயன்கள் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,000/- ஆக உயர்த்துவதுடன், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியமும் வழங்கப்படும்.

கூட்டுறவு தையல் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தையல்கூலி நியாயமான அளவு உயர்த்தப்படும்.

பெண் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் சம உரிமை – சம வாய்ப்பு வழங்கப்படும். பெண் தொழிலாளர்களின் பணியிடங்களில் சந்திக்க நேரும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரிக்க விசாரணை குழுக்கள் நிறுவனங்கள் தோறும்  அமைப்பது கட்டாயமாக்கப்படும்.

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்தப்படும்.

தொழிலாளர் துறையின் கீழ் உள்ள அனைத்து முத்தரப்புக்குழுக்களும் உரிய முறையில் அமைக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இக்குழுக்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

கல் குவாரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பதிவேடுகள் பராமரிப்பு, கூலி நிர்ணயம், மருத்துவ வசதி, பாதுகாப்பு கவசங்கள், விபத்துக்கான இழப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய தொழிலாளர் நலச்சட்டங்களை உறுதியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும். கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் ஒன்று அமைக்கப்படும்.

 1. அரசுத் தொழிலாளர் நலன்

மாநில அரசின்  பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றிற்கு நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்.

தொழிலாளர்துறை, தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.

தொழிலாளர்களின் பணிநீக்கம், பணியிடை நீக்கம் போன்ற தொழில் தாவாக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும்.

குறைந்தபட்ச ஊதிய தொழில்களில் தற்போதைய நடைமுறையில் உள்ள பஞ்சப்படி கணக்கீட்டை வருட சராசரிக்கு பதிலாக ஆறு மாத சராசரி (ஏப்ரல்-செப்டம்பர், அக்டோபர் – மார்ச்) அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்படும்.

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

 1. விவசாயத் தொழிலாளர் நலன்

விவசாயத் தொழிலாளர்களுக்கான அனைத்து நலத் திட்டங்களும் முழுமையாகவும், தாமதமின்றியும் நிறைவேற்றப்படும். விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் நலவாரிய பணிகள் முறைப்படுத்தப்படும்.

 1. ஆட்டோ தொழிலாளர்கள் நலன்

ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் கல்வித் தகுதி பாராமல் பேட்ஜ் வழங்கப்படும்.

 1. தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள்

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களில் சட்டப்படியான 8 மணி நேரம் வேலை என்பதை கட்டாயமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிறுவனங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் உறுதியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. போக்குவரத்து தொழிலாளர் நலன்

தமிழ்நாடு அரசு போக்குவரக் கழகத்தில் கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு பணி ஓய்வு பெற்ற பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய கம்யூட்டேசன் தொகை, கிராஜூவிட்டி தொகை, விடுப்பு ஒப்படைப்பு தொகை (E.L) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (D.A) உள்ளிட்ட பல்வேறு பணப்பயன்களை அதிமுக அரசு இதுவரை வழங்கவில்லை.

பணியில் இருக்கின்ற சுமார் 1.5 இலட்சம் தொழிலாளர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டில் போடப்பட்ட 12வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் நிலுவைத் தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவும் இல்லை.

போக்குவரத்து கழங்களில் நிதிப்பற்றாக்குறையை சரி செய்ய தொழிலாளர்களது வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை உள்ளிட்ட பணம் ரூ.4,500 கோடியை போக்குவரத்து கழக நிர்வாகங்கள் செலவு செய்து விட்டன. போக்குவரத்து கழகங்கள் செலவு செய்த தொழிலாளர் தொகையை திரும்ப வழங்கப்படும்.

திமுக- அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது 5000க்கும் மேற்பட்டோர் எவ்வித பணியும் பார்க்காமல் ஓ.டி. என்ற பெயரால் சம்பளம் பெறுகின்றனர். இந்த நடைமுறை முற்றாக ஒழிக்கப்படும்.

போக்குவரத்து கழகங்களில் தொழிலாளர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வேலைப் பளு குறைக்கப்படும்.

போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

 1. மின்சாரத்துறை

மின்உற்பத்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தமிழகத்தை மின் உபரி மாநிலமாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மரபுசாரா எரிசக்தி திட்டங்களான காற்றாலை மின்உற்பத்தி, சூரிய ஒளி உற்பத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில், 1600 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின்சார உற்பத்திக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்ட ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்திற்காக, பத்தாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, இத்திட்டம், பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசின் அலட்சியம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றது. தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய உதவும் ஜெயங்கொண்டம் மின் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம பஞ்சாயத்துகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை வலுப்படுத்தி கிராமங்களில் மின் வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த தனிநபர் வீடுகளில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கிட மானியத்துடன் வட்டி இல்லாக் கடன் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகத்தின் சார்பில்  வெளிமாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதில் நடைபெறும் ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் முறைகேடுகள், ஊழல்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும்.

தொழில்நுட்ப ரீதியில் மின்சாரம் கொண்டு செல்லும் பாதைகளில் ஏற்படும் மின்இழப்பை (Transmission Loss) குறைப்பதற்கும், அடிக்கடி மின்அழுத்தம் குறைவதை தடுத்து நிறுத்தி தடையின்றி தரமான மின்சாரம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நகரங்களிலும், கடற்கரையோர கிராமங்களிலும் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சார வாரியத்தில் ஊழலை ஒழித்து, நிர்வாகச் சீரமைப்பின் மூலம் மின்சார வாரியம் நட்டமின்றி இயங்கிட வழிவகை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் 152 நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள், 12 மாநகராட்சிகள், இதில் அன்றாடம் சுமார் 20 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேருகின்றன. இவற்றை பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து (கேஸ்) வாயு மூலம் ஆயிரம் மெகாவாட்டும் மக்கா குப்பைகளில் இருந்து எரித்து அனல் மின்சாரம் மூலம் இரண்டாயிரம்  மெகா வாட் மின்சாரம் ஆக கூடுதல் மூன்றாயிரம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதன் மூலம் 25 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

 1. மின் கட்டணம்

திமுக ஆட்சியிலிருந்த போதும், தற்போது அதிமுக அரசும் மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றினர். மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்துள்ள விதிமுறைகள் முற்றிலும் மக்கள் விரோதமானது. இதனை கண்டு கொள்ளாத இரண்டு ஆட்சியாளர்களும் மின்கட்டணத்தை அதிகரிப்பதில் காட்டிய அக்கறையை மக்கள் மறந்து விடவில்லை. மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் மின் கட்டணம் மக்களை பாதிக்காத வகையில் ஒரே சீராக வசூலிக்கப்படும். தற்போதுள்ள மின்கட்டணம் குறைக்கப்படும்.

மின்சாரக் கட்டணம் செலுத்தும்போது இரு மாதங்களுக்கு ஒருமுறை என்று தற்போதுள்ள நடைமுறையால் சாதாரண எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாதா மாதம் மின் கட்டணம் செலுத்தும் வகையில் மாற்றப்படும்.

 1. கல்வி

சமூக நீதி, மனித நேயம், மத நல்லிணக்கம், நாட்டுப்பற்று, பாலியல் சமத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களை மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

கல்வித்துறையை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு மொத்த உற்பத்தி மதிப்பில் 5 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.

கல்வித்துறை தனியார்மயமாக்கப்படுவது தடுக்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களைப் போன்று அரசு கல்வி நிறுவனங்களிலும் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழி வழி கல்விக்கு ஊக்கமளிக்கப்படும்.

பல கல்வி வாரியங்கள் என்ற நிலையை மாற்றி ஒரே சீரான கல்வியமைப்பு உருவாகிட நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் மேல்நிலை கல்வி வாரியம் (CBSE) கேந்திர வித்யாலயா (KV) பள்ளிகளின் பாடத்திட்டத்திற்கு இணையாக சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் செழுமைப்படுத்தப்படும்.

மழலைப் பள்ளியில் துவங்கி பிளஸ் 2 வரை தொடரும் தனியார் பள்ளிகளின் கட்டணம் மற்றும் நன்கொடைக்கொள்ளைக்கு முடிவு கட்டப்படும்.

 1. பள்ளிக் கல்வி

அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும். ஒருவகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். கிராமங்கள்தோறும் பள்ளி வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டு பள்ளியினுடைய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.

முழுமையான சமச்சீர்கல்வி, அருகமை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பன அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சமச்சீர் கல்வி என்பது பாடத்திட்டம் மட்டும் என்று குறுக்கப்படாமல், கட்டமைப்பு வசதிகள், மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம், ஆசிரியர் நியமனம்  போன்றவை உள்ளிட்டு ‘பொதுப்பள்ளி கல்வித்திட்டம்’ எனும் பொருளில் அமலாக்கப்படும்.

கல்வி பெறும் உரிமை சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். 18 வயது வரை இலவச கட்டாயக்கல்வியை  அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டை ஒற்றைச்சாளர முறையில் அரசே நிரப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிக்கல்வி நிலைமைகளையும், பிரச்சனைகளையும்  ஆழமாக ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகள் வழங்கிட தகுதியான நிபுணர்குழு அமைக்கப்படும்.

பள்ளிகளில் இடைநிலை கல்வியில் (6-9 வகுப்புகள்) மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, கணினி, ஓவியம், இதர கலைகள் மற்றும் உடற்பயிற்சி பாடங்களுக்கு கூடுதல் பாட வேளைகள் ஒதுக்கி கற்பிக்கப்படும்.

தற்போதைய தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பீடு மூலம் 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மேல்நிலைக் கல்வியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதை மாற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மேம்படுத்தி மாற்றி அமைக்கும் விதத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆசிரியர் மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும்.

மேல்நிலைக்கல்வியில் பெரும்பாலான தனியார்பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடம் நடத்தப்படாமல் இரண்டு ஆண்டுகளும் 12ம் வகுப்பு பாடம் நடத்தப்படுகிறது. இதனால் உயர்கல்வியில் நமது மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, 11, 12 வகுப்புகளில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஈராண்டுகளில் நான்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஈராண்டு முடிவில் ஒரே சான்றிதழாக வழங்கப்படும்.

பள்ளி மேலாண்மை, மாணவர்கள் பங்கேற்புடன் ஜனநாயகப்படுத்தப்படும். பெற்றோர் ஆசிரியர் அமைப்பு வலுப்படுத்தப்படும். மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்படும்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் அனைத்து பள்ளிகளுக்கும் உறுதி செய்யப்படும். இரவு காவலர், கடைநிலை ஊழியர், பதிவு எழுத்தர், எழுத்தர், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் கல்வி பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து முடிவிற்கு கொண்டு வரப்படும்.

அரசுப் பள்ளிகள் மூடப்படுவது தடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களும் சமூக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கல்வித்தரம், கட்டணம், ஆசிரியர், பணியாளர் ஊதியங்கள் மற்றும் இதர நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒழுங்குபடுத்தப்படும். இது தொழில்முறை கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய் மொழி வழி கல்விக்கு முன்னுரிமையும், ஊக்கமும் அளிக்கப்படும். ஆங்கில மொழி சிறப்பான முறையில் கற்றுத்தரப்படும். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புக்கு வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

அனைத்துப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும். ஆண், பெண் இரு பாலரும் அவற்றைப் பயன்படுத்த ஆவன செய்யப்படும். பள்ளிகளில் விளையாட்டு என்பது கட்டாயப்பாடமாக ஆக்கப்படும். சிறப்பு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்படும்.

கல்வியில் பின்தங்கிய மற்றும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தும் வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட அளவில் நடமாடும் மனநல மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்டம் – 1974 காலத்திற்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

கடந்தகால ஆட்சிகளில் ஏற்படுத்தப்பட்ட ஆங்கில மொழி ஆய்வகங்கள் விளம்பரத்திற்காகவே தொடங்கப்பட்டன. செயல்படவே இல்லை. எனவே அருகில் உள்ள கல்வியியல் கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் மூலம் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பயன்படுத்தக்கூடிய நிலையில் கழிவறை வசதி செய்து தரப்படும். இவை தொடர்ந்து பராமரிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்பாடத் திட்டமாக அறிவிக்கப்படும். இதற்கு தேவையான கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச விடுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவிற்கு இல்லை.  இலவச விடுதிகளை மேம்படுத்தவும், உணவு மானியத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள்  மேம்படுத்தப்படும்.

மொழிவழிச் சிறுபான்மை மக்களுக்காக உள்ள கல்வி நிலையங்களை முறையாக நடத்துவதோடு தேவைக்கேற்ப கூடுதல் கல்வி நிலையங்கள் துவக்கப்படும். மேலும் இக்கல்வி நிலையங்களில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கிட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மலைவாழ் மாணவர்களுக்காக, உண்டு உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மலைக்கிராமங்களில் கூடுதலான பள்ளிகள் துவக்கப்படும்.

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியில் கற்பிக்க வழி செய்யப்படும். தனிதேர்வுகள் நடத்தி பொதுத்தேர்வில் அம்மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 1. பால் இலவசம்

அனைவருக்கும் ஊட்டச்சத்து என்பதில் உறுதியாக உள்ளோம். ஏழை பணக்காரர் என்கிற வேறுபாடின்றி அனைத்து குழந்தைகளுக்கும் வேண்டிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வோம். அதன் ஒரு படியாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில், பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் நாள் ஒன்றுக்கு அரை லிட்டர் பால் இலவசமாக ஆவின் முகவர்கள் மூலம் வழங்கப்படும். பால்வாடி முதல் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் பால் வழங்கப்படும்.

 1. உயர்கல்வி

பாஜக அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள ‘அந்நியக்கல்வி நிறுவனங்கள் ஒழுங்காற்று மசோதா’வை திரும்ப பெறத் தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

உயர் கல்வித்துறையை முழுமையாக வர்த்தகமயமாக்கிட, உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுடன் செய்து கொண்ட பொது உடன்படிக்கை அனைத்தையும் இரத்துச் செய்ய வலியுறுத்துவோம்.

பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்திட தக்க விதிமுறைகள் வகுக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்படும்.

உயர்கல்வி நிலைமைகளையும், பிரச்சனைகளையும் ஆழமாக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கிட தகுதியான நிபுணர் குழு அமைக்கப்படும்.

மாநில அரசின் சார்பில் மாவட்டந்தோறும் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள், ஊழியர்கள் காலிப்பணி இடங்களைத் தேர்வு வாரியங்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும். கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

தனியார் உயர்கல்வி நிறுவனங்களைக் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கல்வித்தரம், கட்டணம் மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐஏஎஸ்/ ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வாகும் வகையில் சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

கலை, அறிவியல் சுயநிதி கல்லூரிகளுக்கும் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர முறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளுக்கும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கிட தக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 1. கல்விக் கடன்

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உரிய காலங்களில் உயர்த்தி வழங்கப்படும்.

கல்விக் கடன் கோருகிற அனைத்து மாணவர்களுக்கும் நிபந்தனையின்றி கடன் வழங்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு மாநில அரசே அவற்றை செலுத்தும்.

ஆய்வு படிப்புகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

 1. டாக்டர். அப்துல் கலாம் உயர்கல்வி உதவித் தொகை (DR.Abdul kalam Higher Education Fellowship)

DR.Abdul kalam Postgraduate Fellowship For M.sc/MS/M.Tech/ME/MBA/MA students DR.Abdul kalam Doctoral Fellowship For M.phil & Ph.D students

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம் “இளைஞர்கள்தான் இந்தியாவின் மாபெரும் சக்தி, இந்தியாவில் உள்ள 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும், அவர்களுக்குச் சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அவரைக் கவுரவிக்கும் வகையிலும் அவரது கனவை நனவாக்கும் வகையிலும் மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கீழ்க்கண்ட இரு உயர்கல்வி உதவித் தொகைகள் (DR.Abdul kalam Higher Education Fellowship) வழங்கப்படும்.

 1. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு படிக்க DR.Abdul kalam Postgraduate Fellowship For M.sc/MS/M.Tech/ME/MBA/MA etc. students @ Rs. 5,000/ Month.
 2. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் படிக்க DR.Abdul kalam Doctoral Fellowship For M.phil & Ph.D students @ Rs..8,000/ Month For M.phil students  & Rs.. 10,000/ Month For Ph.D students.

தமிழகத்தின் ஏழை மாணவர்கள் தங்களது மேற்படிப்பு கனவுகளை இத்திட்டங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருந்தலைவர் காமராஜரும் & பேரறிஞர் அண்ணாவும் தமிழகம் இந்தியாவிற்கு முன்மாதிரியான கல்வி, சமூக நீதி திட்டங்களை அறிமுகப்படுத்தி யுள்ளனர். அந்த வகையில் மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சியில் இத்திட்டங்களை வழங்குவதன் மூலம் தமிழகம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விளங்கும்.

 1. தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள்

தமிழகத்தில் கீழ்க்கண்ட உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுரை: தமிழ்நாடு வங்கி மற்றும் நிதி மேலாண்மைக் கல்வி நிறுவனம் (Institute of Banking and Finance)

கோவை: இந்திய விஞ்ஞானக் கழக நிறுவனம் (Institute of science)

தஞ்சாவூர்: பன்னாட்டு உயிரி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (International Institute of Biotechnology)

திருப்பூர்: பன்னாட்டு பனியன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (International Institute of Knitwear Technology)

சேலம்: சுரங்கம் மற்றும் செயற்கை வைரம் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (Tamil Nadu Institute of Mining and Gemology)

தேனி: உயிரி மருத்துவம் பொறியியல் புல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Research Institute for Development of Bio-Medical Engineering)

கன்னியாகுமரி: ஆசிரியர் பயிற்சி அகடமி (Academy of Teachers Training Montessory of Postgraduate).

விழுப்புரம்: தமிழ்நாடு போக்குவரத்து கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Logistics)

நாகர்கோவில்: செவிலியர் பயிற்சி மற்றும் மருத்துவமனை நிர்வாகவியல் அகடாமி (Academyof Nursing and Hospital Management)

திண்டுக்கல்; விமானப் பயிற்சிக் கல்வி நிறுவனம் (Tamil Nadu Institute of Aviation)

கொடைக்கானல்: விளையாட்டுத்துறை அகடமி (Sports Academy).

சென்னை: இந்திய ஆட்சிப் பணி பயிற்சி நிறுவனம் (IAS Academy)

 1. சுகாதாரம்

தமிழகத்தில் சுகாதாரத்துறைக்கு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (SGDP) 6 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும்.

மாவட்டத்திற்கு ஒரு பன்னோக்கு மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகள் துவக்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு பொது மருத்துவமனை வரை மருத்துவக்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுவதுடன் வட்ட அரசு மருத்துவமனைகளிலும், முழு உடல் பரிசோதனைக்கான பன்னோக்கு நோய் காண் மையங்கள் அமைக்கப்படும். போதுமான மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுசுகாதாரத் துறையின் தரம் உயர்த்தப்படும்.

சமீப காலங்களில் கிராமப்புற நல்வாழ்வு சேவையில் நோய் தடுப்பு செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க கிராமப்புற சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போதுமான அளவு நியமிக்கப்படுவர்.

குடும்பம் ஒன்றுக்கு நோய் சிகிச்சை செலவு ரூ. 6 லட்சமாக உயர்த்தி வழங்குவதோடு அனைத்து நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் அனுமதிக்கும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டம் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவப்பணியாளர்கள், மருத்துவர்கள் கிராமப்புற பணியில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட விழுக்காடும் ஏழை எளிய நோயாளிகளுக்கு கட்டணமில்லா மருத்துவ சேவை கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மரபுவழி மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகள் மேம்படுத்தப்படும். இதற்கென சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்படுவதுடன் இதற்காக மாநில அளவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

முதியோருக்கு வீடுதோறும் சென்று மருத்துவ வசதி வழங்கிட செயல்திட்டம் வகுக்கப்படும்.

அனைவருக்கும் இலவசமாக நல்வாழ்வு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இதற்காக மத்திய அரசு சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தப்படும். ஜி.டி.பி.யில் குறைந்தபட்சம் 5 விழுக்காடு நிதியை ஒதுக்கவும், மொத்த செலவினத்தில் (மத்திய பட்ஜெட் + மாநில பட்ஜெட்) 50 விழுக்காட்டை மத்திய அரசு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படும். (தற்போது 30 விழுக்காடு மட்டுமே மத்திய அரசு அளிக்கிறது)

அரசு மருத்துவமனைகளை, சீரமைத்து தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், சுகாதார சேவைகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் செழுமைப்படுத்தப்படும்.

தனியார் மருத்துவக்கல்லூரிகளின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிப்பதுடன் “Capitation Fee” வாங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ‘கல்விக் கட்டணம்’ முதலியவற்றை அரசே குழு அமைத்து நிர்ணயம் செய்யும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டணம், சிகிச்சை முறைகள் முதலியவை ஒழுங்குபடுத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் பொதுப்பெயர் கொண்ட Generic மருந்துகளைத் தயாரிக்க 1990களில் மூடப்பட்ட TDPL (Tamilnadu Dada Pharmaceuticals Limited), IDPL (Indian drugs Pharmaceuticals Limited) போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் உருவாக்கிட அல்லது சீரமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் விபத்து தடுப்பு மற்றும் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும். (ஆண்டுக்கு தமிழகத்தில் மட்டும் 16000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர்)

டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவக்கூடிய தொற்று நோய்களைத் தடுப்பதற்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுப்பதுடன், சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவிற்கு மருத்துவர், செவிலியர் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் ‘நிரந்தரமாக’ நியமிக்கப்படுவார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதும், “அவுட் சோர்சிங்” செய்வதும் நிறுத்தப்படும்.

மது, புகையிலை மற்றும் போதை மருந்துகளுக்கு ஆளானவர்களை மீட்டெடுக்க மீட்சி மற்றும் மறுவாழ்வு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்வாழ்வு சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு சீரமைக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 100 விழுக்காடு தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கும் நிலை தொடருகிறது. ஏழை, எளிய பெண்கள் கருவுற்ற காலத்தில் ஊட்டச் சத்து அளிப்பதை அரசு தலையாய கடமையாக செய்யும்.

அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் / புறநோயாளிகள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும். உள்நோயாளிகள் மற்றும் நோயாளி உதவியாளர் அனைவருக்கும் படுக்கை வசதி உறுதி செய்யப்படும். மருத்துவமனை மற்றும் வார்டுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். நோயாளிகளின் சிகிச்சை முறைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.

தொடர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒரு சிறப்பு பரிந்துரை மருத்துவமனை மாவட்டம் தோறும் 5 மாவட்டங்களுக்கு ஒன்று மற்றும் மாநிலம் முழுமைக்குமாக அரசு பொது மருத்துவமனை சென்னை தலைமை  இடமாகக் கொண்டும் அமையும். இந்த திட்டத்தின் மூலம் தொடர் மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் முதல்நிலை மருத்துவமனைகளில் இருந்து அடுத்த பரிந்துரை மருத்துவமனை (மாவட்ட அளவில்) அனுப்பப்படுவர்.  அவரே இன்னும் சிறப்பு தொடர் சிகிச்சை தேவைப்படும் எனில் நோயாளி மண்டல (5 மாவட்டங்களுக்கு ஒன்று வீதம் அமைக்கப்படும்) பரிந்துரை மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். அதையும் தாண்டி  சிறப்பு சிகிச்சை சென்னையில்தான் கிடைக்கும் என மருத்துவர்களால் தீர்மானிக் கப்படும் நோயாளிகள் மட்டும் சென்னை அரசு பொது மருத்துவமனை வந்து சிகிச்சை பெற வழிவகை செய்யப்படும். இதன்மூலம் சென்னை பொது மருத்துவமனையின் வேலைப்பளு வெகுவாக குறையும்; மேலும் உயர்தர சிகிச்சையுடன் கூடிய ஆராய்ச்சி நிலையமாகவும் செயல்பட துவங்கும் என்பது திண்ணம்.

இன்றைய தினம் அரசு பொது மருத்துவமனை சாதாரண காய்ச்சல் தலைவலி தொடங்கி கேன்சர் நோய் வரை சிகிச்சை அளிப்பதால் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு மேல் சிகிச்சைக்காக மண்டல பரிந்துரை மருத்துவமனை மூலம் அனுப்பப்படும் நோயாளிகளின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும்.  மற்றபடி எல்லா அரசு மருத்துவ மனைகளின் செயல்பாடுகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் .  அதன்மூலம் எல்லா நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படும்.

 1. சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் நாசத்திற்கும், ஆறுகள் மாசு அடைவதற்கும் காரணமான சாயப்பட்டறைக் கழிவுகள், நகரக்கழிவுகள் கலந்து காவிரி, பவானி, தாமிரபரணி,பாலாறு, அமராவதி, நொய்யல் போன்ற ஆறுகள் நஞ்சாவதைத் தடுக்க சிறப்பு முன்னுரிமை திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நாசகர நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்ணீர் வணிகத்திற்காகவும், மென்பானங்கள் தயாரிப்புக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிலத்தடி நீர், ஆற்று நீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தியும், நிலத்தடி நீரை உறிஞ்சியும் அதிக கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை முற்றாக அழித்திட சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.

அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகளும், மின்னணுக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகளும் தமிழக எல்லையில் கொட்டப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகர் மற்றும் தமிழ்நாட்டின் இதர நகர பகுதிகள் அனைத்திற்கும் – நிரந்தர பசுமை திட்ட ஆணையம் என்ற தனி அமைப்பு ஆரம்பிக்கப்படும். இதில் நகர பகுதிகளில் உள்ள நகராட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறை அனைத்து ஒருங்கிணைந்த ஆணையம் – தனித்தனியாக செயல்படும். அதற்கு தமிழக வரவு – செலவு அறிக்கையில் ஒரு விழுக்காடு நிதி  ஒதுக்கீடு செய்யப்படும்.

 1. திடக்கழிவு மேலாண்மை

குப்பைகளற்ற தூய்மையான தமிழகம்

அங்கிங்கெனாதபடி தமிழ் நாடெங்கும் குப்பை மேடாக கிடக்கும் சூழல் மாற்றப்படும். குப்பை பிரச்சினைக்கு தலைநகர் சென்னையும் விதிவிலக்கல்ல.  தலைநகரில் திரும்பிய பக்கமெல்லாம் குப்பை மேடுதான்.  இரண்டு நதிகளும் கூவம் மற்றும் அடையாறு நன்னீர் நதி இன்னும் நிலை மாறி கழிவு நீர் ஓடைகளாக கடந்த பல ஆண்டுகளாக இருக்கின்றன. இதே நிலைமை தான் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில். குப்பைகளை எரித்து நீக்குவதும் ஒரே வழி என்று நகராட்சி அமைப்புகள் நிறைவேற்றி வருகின்றன. இதனால் ஊரெங்கும் புகைக்காடு. மக்களுக்கு சுவாச பிரச்சினைகள். குப்பை நீக்கம் ஒரு புதிய அணுகுமுறைக்கு உட்படுத்தப்படும்.  உலக நாடுகளில் இந்த பிரச்னை எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பது கண்டறியப்பட்டு இங்கும் நடைமுறைப்படுத்தப்படும்.  இதனை மக்கள் நலக் கூட்டணி அரசு செய்யும்.  குப்பைகளற்ற தமிழகம் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் கொண்டு வரப்படும்.  பொது மக்களிடம் விழிப்புணர்வு இந்த விஷயத்தில் வெகு அவசியம்.  குப்பைத் தொட்டியில் தான் குப்பைகளை போடவேண்டும் மீறுபவர்கள் நடவடிக்கைகளுக்கு உள்ளவார்கள் என எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தப்படும்.  அதிக அளவில் குப்பை போடுபவர்களிடமிருந்து குப்பை அகற்றும் கட்டணம் வசூலிக்கப்படும். அண்டை மாநில குப்பைகள் நம் மாநில எல்லை ஓரத்தில் இரவு நேரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிராதார நதி மற்றும் நீர்நிலைகளில் குப்பை கொட்டும் பழக்கம் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாகும்.

 1. நச்சுப் புகை

தொழிற்சாலைகளின் புகைபோக்கி மூலம் வெளியேற்றப்படும் புகையின் மாசு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.  வாகனங்கள் வெளியேற்றும் புகை மற்றும் ஒலி ஒரு கட்டுபாட்டுக்குள் பராமரிக்கப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்படும். காவல் துறையின் நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள் இந்தப் பணியில் ஈடுபடும். மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் திடக்கழிவு மேலாண்மை உடனுக்குடன் செய்யப்படும். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள் போன்றவை தனிப்பட்ட நபர்களால் ஏற்பாடு செய்யப்படும் போது, காவல்துறை அனுமதி அளிக்கப்படும் போதே உள்ளாட்சி நிறுவனத்துக்கு கழிவு மேலாண்மை கட்டணமும் வசூலிக்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்படும், மருத்துவக்கழிவுகள் மற்றும் மின்னணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றப்படும். அரசு, பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளிலும் முறையான மாசுக் கட்டுப்பாடு ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. சாயப்பட்டறை கழிவுகள்

சாயத் தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையங்களை அரசு ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களை ஒருங்கிணைத்து இரசாயனக்கழிவுகளால் மாசடைந்த நீரிலிருந்து இரசாயனக்கழிவுகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாதவாறு தண்ணீர் முற்றிலுமாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதை 100 விழுக்காடு அறிவியல்பூர்வமாக உறுதிபடுத்திக் கொண்டு, கடலில் கலக்கவிடும் திட்டத்தை அமலாக்குவோம். இதற்கான நிதியை, மாநில அரசு, மத்திய அரசு, தொழில் முனைவோர் சமமானவிகிதத்தில் செலுத்துவதை உறுதிப்படுத்த, பொருத்தமான நிர்வாக ஏற்பாட்டை உருவாக்குவோம். இதன் மூலம், தடையற்ற தொழில் வளர்ச்சி, மாசுபடாத விளைநிலம் என்ற சூழ்நிலையை தமிழ்நாட்டில் உருவாக்குவோம்.

 1. புவி வெப்பமயம்

உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயமாதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பருவகால மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதை அண்மைக் காலமாக பார்க்கிறோம். தொழிற்சாலைகள் வெளியேற்றும் கரியமிலவாயு போன்றவற்றால் புவிவெப்பமயமாதல் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கணித்துள்ளனர். புவிவெப்பமயமாதலை தடுப்பதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன.  புவிவெப்பமயமாதலுக்கு காரணமான பசுமைக் குடில் வாயுக்கள் (ழுசநநn ழடிரளந ழுயளநள) குறைப்பதற்கு இந்திய அரசு மேற்கொள்ளும் செயல்திட்டங்களை மாநில அரசு முழுமையாக கடைப்பிடிக்கும்.

 1. மரம் நடுதல் பேரியக்கம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கைத் தாய் வழங்கிய அருட்கொடை விருட்சங்களான மரங்களை மனிதர்கள் வேட்டைத்தொழிலுக்கும், சுயநலத்துக்கும் வெட்டி அழித்ததால் புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருவது பேராபத்தில் முடியும். தமிழகத்தில் சிலர் மரங்களை வெட்டுவதையே போராட்டமாக ஆக்கி இயற்கை வளத்தை அழித்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலும், பின்னர் நாயக்கர் மன்னர்கள் காலத்திலும் சாலை ஓரங்களில் மரங்களை நட்டு, பராமரித்து பாதுகாத்தல் அரசின் கடமையாக இருந்தது.

எனவே, மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிப்பதற்கான ஆக்கபூர்வமான ஒரு திட்டத்தை மக்கள் நலக்கூட்டணி முன் வைக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் குறிப்பாக தொழில்முறை கல்வி படிப்பில் சேர்க்கும் போதும், வேலை வாய்ப்புக்கு நேர்காணல் நடத்தும் போதும் விண்ணப்பித்தவர்களின் குடும்பத்தினர் 25 மரக்கன்றுகள் நட்டிருந்தால் ஒரு மதிப்பெண் என்றும், 50 மரக்கன்றுகள் நட்டிருந்தால் 2 மதிப்பெண் என்றும், அதற்கு மேல் 100 மரக்கன்றுகள் நட்டிருந்தால் 3 மதிப்பெண் என்றும் வழங்கப்படும். இதில் மரக்கன்று நடாமலே ஏமாற்றும் வகையில் பொய்யான தகவல் அளிப்போர், உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு 5 மதிப்பெண் குறைக்கப்படும். தமிழகத்தை பசுமை வளம் செழிக்கும் மண்ணாக மாற்றிட ‘மரம் நடுதல் பேரியக்கத்தை’ மக்கள் நலக்கூட்டணி அறிவிக்கிறது.

 1. மின்னணு கழிவுகள் அகற்றம்

இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2018ம் ஆண்டிற்குள் முப்பது லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும் என்று அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்ட் சல்லிவான் கூட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள எட்டு பெரிய நகரங்களில் மின்னணு கழிவுகள் அதிகமாக உள்ளன. இதில் சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 67 ஆயிரம் டன் மின்னணு கழிவுகள் ஏற்படுகின்றன. மின்னணு கழிவுகளில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்களின் பங்கு அதிகபட்சமாக 70 விழுக்காடு அளவுக்கு உள்ளது. அடுத்து தொலைதொடர்பு சாதனங்கள் 12 விழுக்காடு, மின்சார உபகரணங்கள் 8 விழுக்காடு, மருத்துவக் கருவிகள் 7 விழுக்காடு இவை தவிர பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் பங்கு 4 விழுக்காடாக உள்ளது. ஒட்டுமொத்த அளவில் மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சாலைகளின் பங்கு 70 விழுக்காடு. அதே சமயம் வீடுகளில் உருவாகும் மின்னணு கழிவு 15 விழுக்காடாக உள்ளது. வீடுகளிலிருந்து வெளிவரும் மின்னணு கழிவுகளில் டி.வி., பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷன் ஆகியவை மிக அதிக பங்கினை கொண்டுள்ளன. கம்ப்யூட்டர் 20 விழுக்காடு, மொபைல் ஃபோன் 2 விழுக்காடாக உள்ளது.

கம்ப்யூட்டர், டி.வி., மொபைல் ஃபோன் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றில் நச்சுத்தன்மை இருப்பதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. எனவே மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதும், மறுசுழற்சி செய்வதும் சுற்றுச் சூழல் துறையின் இன்றியமையாத கடமையாகிறது. மக்கள் நலக் கூட்டணி அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்திட்டங்களை வகுக்கும்.

 1. வேலைவாய்ப்பு

வேளாண்மைத்துறை, சேவைத்துறை மற்றும் தொழில் துறையில் 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும்.

படித்த வேலை இல்லாத இளைஞர்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதற்கான தகவல் தளம் (Data Base) உருவாக்கப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் செய்யப்படும்.

குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டதாரி ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட உறுதி செய்யப்படும்.

சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல்துறை போன்ற அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 2 லட்சம் பணியிடங்களும் அந்தந்த தேர்வு வாரியங்கள் மூலமும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், ஊழலற்ற நேர்மையான முறையில் நிரப்ப ஆவன செய்யப்படும்.

தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு  டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து தேர்வு வாரியங்களிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து, சுயதொழில் முனைவோராக உருவாக்கிட ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும். சுயதொழில் துவக்கிட வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

ஓவியக்கல்வி, உடற்கல்வி, தொழில்கல்வி, தையல், இசை, கணினி, தோட்டக்கலை என பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர்.

மத்திய அரசு வழங்குவது போன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500/- மருத்துவப்படி ரூ.500/- ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை 40 சதவிகிதம் கணக்கிட்டு வழங்குவது, ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச பணிக்காலம் 20 ஆண்டு ஆக நிர்ணயம் செய்தல் போன்றவற்றை அமல்படுத்துவோம்.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மூலம் குறைந்தபட்சம் 50 ஏக்கர் தரிசு/மேய்ச்சல் நிலங்களை எடுத்து அதில் சூரிய மின்சக்தி /காற்றாலை மூலம் தலா 1 மெகாவாட் மின்சாரம் தயாரித்தால்  இதன் மூலம் 1 லட்சம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 72 ஆயிரத்திற்கும் மேறபட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில் ஆடு, மாடு, பன்றி, கோழி போன்ற கால்நடைகள் உள்ளன. அவற்றின் கழிவுகள் வீணாக குப்பைகளாகின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும் கோபர் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் அந்தந்த கிராமங்களில் எரிபொருளாக சமையலுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாயப்பு அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 528 நகர பஞ்சாயத்துகள், 152 நகராட்சிகள், 12 மாநகராட்சிகளில் வாரச்சந்தை என்ற பெயரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை பயன்படுத்தக்கூடிய உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தையும் உற்பத்தியாளர்களே நேரடியாக வாரத்தின் ஒருநாள் சந்தைப் படுத்தலாம். இதன் மூலம் பொருட்களின் விலையை பாதியாக குறைக்கலாம், விவசாயிகளுக்கும் இரட்டிப்பு விலை வழங்கப்படும்.

படித்த இளைஞர்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் பட்டதாரிகள், ஐஏஎஸ். ஐபிஎஸ், ரயில்வே, வங்கி, ஸ்டாப் செலக்சன் மற்றும் கம்யூட்டர் கம்பெனிகள் – தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற போதிய பயிற்சி இல்லாத நிலை உள்ளது. இதனை தவிர்ப்பதற்கும், 386 ஊராட்சி ஒன்றியத்திலும் தலா ஒரு பயிற்சி நிலையம் வீதம் சிறப்பு நிபுணர்களை கொண்டு வருடம் முழுவதும் பயிற்சி அளிக்கப்படும்.

கோகோ கோலா, பெப்சி போன்ற பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களினால் மக்களின் ஆரோக்கியம் பாழ்படுவதுடன் கிராமப்புற பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில் இளநீர், பதநீர் மற்றும் பழச்சாறுகள் விநியோகம் செய்யும் பொருட்டு அமைக்கப்படும் கடைகளுக்கு ரூ. 5 லட்சம் அல்லது 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பெறுவர்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகளை பரவலாக்கிட நகர்ப்புறங்களில் இதற்கான தொழில் மையங்கள் அமைக்கப்படும்.

அரசு துறையில் உள்ள பல்வேறு ஒப்பந்தப் பணிகள் (சிறிய பாலம் அமைத்தல், சாலை பராமரிப்பு, செப்பனிடல்) படித்த வேலை இல்லா இளைஞர்களைக் கொண்டு அமைக்கப்படும் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும்.

முறைசாரா தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதற்கான தகவல் தளத்தை உருவாக்கி, அவர்களுக்கான வேலைவாய்ப்பு கண்டறிவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும்.

படித்த வேலை இல்லா இளைஞர்கள் பயிற்சிக்குச் செல்வதற்கும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கும் பேருந்துகளில் இலவசப் பயணத்திற்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பிற மாநிலங்களுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு ரயில் கட்டணம் செலுத்தப்படும்.

வேலையில்லா காலத்துக்கு படித்த இளைஞர்களுக்கு நிவாரணம் / உதவித் தொகை வழங்கப்படும்.

 1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை தவிர திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மண்டல அலுவலகங்கள் அமைக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக தகுதி வாய்ந்த வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் அரசியல் தலையீடு அறவே இருக்காது.

குரூப் – 1 தேர்வுக்கான வயது உச்ச வரம்பு 35 லிருந்து 45 ஆக உயர்த்தப்படும்.

 1. இருசக்கர வாகனம் வாங்குவதற்கு நிதி உதவி

இன்று கிராமப்புற வேலைவாய்ப்பிற்கு இருசக்கர வாகனம் இன்றியமையாததாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்புக்காக சுதந்திரமாக செயற்பட இரு சக்கர வாகனம் கண்டிப்பான தேவையாக மாறியிருக்கிறது. வங்கிகளில் வாகனக் கடன் தர மறுப்பதால் இவர்கள் கூடுதல் வட்டிக்கு கடன் நிறுவனங்களை நாடிச் செல்லும் சூழல் ஏற்பட்டு சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

கிராமப்புற படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் வேலைவாய்ப்பின் பொருட்டு இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு வங்கிக் கடன் பெறுவதற்கு அரசு உத்தரவாதம்  (Govt. guarantee) அளிக்கும்.

 1. கடல் தொழிலில் வேலைவாய்ப்பு

உலகில் பழம்பெருமை மிக்க மூத்த கடலோடி இனம் எனற சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் தமிழர்களுக்கு இருக்கிறது. மூவாயிரம் ஆண்டு காலம் தொய்வில்லாமல், தொடர்ச்சியாக கடல்வழி வணிகம் நடத்தியவர்கள் தமிழர்கள். உலகில் எந்த இனமும் இந்தச் சாதனையை எட்டிப்பிடித்தது இல்லை. சீனர்களின் கடல் வணிகம் கி.மு. 100களில் தொடங்கி, கி.பி. 1300இல் முடிவுற்றது. ரோமானியர்களும், கிரேக்கர்களும், கி.மு. 100ல் தொடங்கி கி.பி. 300 வரை, சுமார் 400 ஆண்டுகளே கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். எகிப்தியர்கள், சுமேரியர்கள், யூதர்கள், கிறித்துவிற்கு முன்பாகத் தொடங்கி, கிறித்துவிற்கு முன்பாகவே முடித்து விட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

சுமேரியாவும், சிந்து வெளியும் சமகாலத்தில் கி.மு. 4000 ஆண்டுகளில் கடல் வணிகத்தை தொடங்கி கி.மு. 1500களிலேயே முடிவுற்றன. ஆனால் தமிழர்கள் சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அத்தொடர்பு சோழ மன்னர்களின் காலமாகிய கி.பி. 1300 வரையில் தொடர்ந்தது. அதாவது கி.மு. 4000 முதல் கி.பி. 1300 வரை இதன்படி 5300 ஆண்டுகள் என்றாகிறது. இருப்பினும் பதிவு செய்யப்பட்ட வரலாறுகள் கி.மு. 1700ல் தொடங்கி கி.பி. 1300 வரை தொடர்கிறது. சுமார் 3000 ஆண்டுகால கடல் வணிக வரலாறு தமிழினத்திற்கு மட்டுமே உண்டு.

இத்தகைய பாரம்பரிய சிறப்புக் கொண்ட தமிழினத்தின் கடல் தொழில், கடல் வணிகம் காற்றின் திசை போக்கு, மரக்கலங்களை செலுத்தும் திறன் போன்றவை தமிழின இளைஞர்களின் மரபு அணுக்களோடு ஒன்றி கலந்திருப்பவையாகும். உலகில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிகமும் பல்கி பெருகி வரும் சூழலில், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, கடல் தொழிலின் படிப்பும், முறையான பயிற்சியும் அளித்தால் உலகெங்கினும் சென்று, கப்பல்களில் பணிபுரியும் வாய்ப்பு ‘கடலளவு’ கிட்டும். இதனை கருத்தில் கொண்டு தமிழக இளைஞர்கள் கடல் தொழிலில் பயிற்சி பெற தேவையான திட்டங்கள் செயற்படுத்தப்படும். கடல் தொழில் படிப்பு மற்றும் பயிற்சி மையங்கள் கடற்புர நகரங்களில் அமைக்கப்படும்.

வெளிநாடுகளில் கடல் தொழில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு கடல்தொழில் சான்றிதழ்கள் வழங்கிட, தூத்துக்குடியில் இதற்கான மையம் அமைக்கப்படும்.

பாரம்பரிய மீன்பிடித் தொழிலுடன், நவீன தொழில்நுட்பங்களை கற்றுத் தேர்ந்த மீனவ இளைஞர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட, கடலோரப் பகுதிகளில் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.

 1. வறுமை ஒழிப்பு

தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்கத்தினால் மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய வகையில்  உருவாக்கப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தும் முறையாக அமுலாக்கப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை அடையாளம் காண்பதில் கடந்த காலத்தில் பல கோளாறுகள் நிகழ்ந்துள்ளள. எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை முறையாக அடையாளம் கண்டு அவர்களுக்கான நலத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 30 கிலோ தரமான விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்குவதோடு, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி வழங்கப்படும். ரேசன் பொருட்கள் அனைத்தும் பாக்கெட் முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

கிராமப்புற, நகர்ப்புறங்களில் ஏழை முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.3,000/-மாக உயர்த்தி வழங்கப்படும். அதிமுக அரசால் ஓய்வூதியம் வழங்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் மீண்டும் வழங்கப்படும்.

முதியோர்களுக்கும், உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும் இலவசப் பேருந்துச் சலுகை வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள், முதிர்கன்னிகள் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு மாத ஓய்வூதியமாக ரூ. 3,000/- உயர்த்தி வழங்கப்படும்.

நொறுங்கி கிடக்கும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி ஊக்குவிக்கப்படும். பட்டதாரி இளைஞர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கி விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுத்த ஊக்குவிக்கப்படும். இதற்கென தனி நிதியம் உருவாக்கப்படும். அறுவடைக்கு பிந்தைய தொழில் நுட்பத்திற்கு பயிற்சி அளிப்பது, உணவு பதப்படுத்தும் தொழிலை கிராமப்புறங்களில் பரவலாக்குவது, படித்த படிப்பை இடையில் கைவிட்டு சுயதொழில்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்குவதுடன், முறையாக கடன் வழங்கி தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படும்.

 1. சமூக நலன்

இந்திய அரசு 2014 ஆம் ஆண்டில் வெளியிட்ட தேசிய மனநலக் கொள்கை அடிப்படையில் மாநில அளவிலும் மனநலக் கொள்கை மற்றும் செயல்திட்டம் உருவாக்கப்படும். பொது நல்வாழ்வு சேவையுடன் மனநல சேவையும் இணைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் மனநலத்திற்கான சிகிச்சைகள் தரப்படும். மனநல பராமரிப்பு நிறுவனங்களில் மனநிலை பாதிப்புக்கு ஆளானவர்களைச் சேர்ப்பதற்கு விதிகள் எளிதாக்கப்படும்.

வன்னியர் பொதுசொத்து நலவாரியம் முழுமையாகச் செயல்படும் வகையில் நிலுவையில் உள்ள வாரிய சட்ட வரைவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.

 1. சாலையோர வியாபாரிகள் நலன்

சாலை ஓர வியாபாரிகள், வியாபார உரிமையை பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் 09.09.2013 இல் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதலின்படி சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 2014 நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டையும், வியாபாரச் சான்றும் வழங்கப்படும்.

சாலையோர வியாபாரம் அங்கீகரிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறை மூலம் தேவையான உரிமங்கள் அளிக்கப்படும். மேலும் சாலையோர வியாபாரிகள் நலனுக்கான 2014 சட்டத்தில் தெரிவிக்கப்பட்டவாறு குடிநீர், கழிப்பறை வசதி, கழிவுகள் வெளியேற்றுதல் ஆகிய வசதிகளை உள்ளடக்கிய வியாபார மண்டலங்கள் அமைப்பதற்குத் திட்டம் வகுக்கப்படும்.

சாலையோர வியாபாரிகள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்யும் நிலைமை இருப்பதால், கந்து வட்டிக் கொடுமைக்குப் பலியாகி இன்னலுக்கு ஆளாகின்றனர். இவர்களின் நிதி தேவையை நிறைவு செய்வதற்கு அரசு சார்பில் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் 5,000 ரூபாய் முதல் ஒரு இலட்சம் வரை நிபந்தனையின்றி எளிய முறையில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

 1. அமைப்புச்சாரா தொழிலாளர் நலன்

தமிழகத்தில் மூன்று கோடி பேர் அமைப்புச்சாரா தொழிலாளர்களாக, தினக் கூலிகளாக இருக்கிறார்கள். அமைப்புச் சாரா தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைப்புச் சாரா தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சங்கங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும்.

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும்.

உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கான 17 நல வாரியங்கள் சிறப்பாக இயங்கிட தனிக் கவனம் செலுத்தப்படும். நலவாரியங்களில் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பதிவு செய்யும் நடைமுறைகள் எளிதாக்கப்படும். வாரியங்கள் வழங்கும் பணப் பயன்கள் அதிகரிக்கப்படும்.

விபத்தில் இறக்கும் அமைப்புச் சாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 இலட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்படும்.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதிய முறை ரத்து செய்யப்பட்டு,  முறையான ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படும். துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையான காலணிகள், கையுறைகள் முகமூடிகள் உள்ளிட்ட பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கப்படும்.

துப்புரவுத் தொழிலாளர்களும், அமைப்புச் சாரா தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ வசதிகள் கிடைக்க தனித் திட்டம் உருவாக்கப்படும்.

பெண் தொழிலாளர்கள் பணி ஓய்வு வயது 55 ஆக நிர்ணயம் செய்யப்படும்.

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் தனியாக ஆணையம் அமைக்கப்படும்.

 1. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நலன்

தமிழகத்தில் பல வடிவங்களில் நீடித்து வரும் தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்திட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சாதி வேறுபாடின்றி வழிபடும் உரிமை நிலைநாட்டப்படும்.

தீண்டாமை கடைப்பிடிப்போர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் மூலம் உறுதியான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றமிழைத்தோருக்கு தண்டனை வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு புகார் அளித்தவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்படாமல் இம்மக்களின் மேம்பாட்டுக்கு மட்டுமே செலவழிக்கப்படும். இதனை உறுதிப்படுத்த உரிய சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படும்.

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை தொடர்பான அரசாணை எண்: 92 முறையாக நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும்.

அரசு ஒப்பந்தங்கள் மற்றும் குத்தகைகளில் தலித் மக்களுக்கு குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கப்படும்.

பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு நிலமற்ற தலித்துகளுக்கு வழங்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

அரசு ஆணை எண் 1010/10ஏ/1892ம் ஆண்டின் அறிவிப்புப்படி 12 இலட்ச ஏக்கர்  பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுவித்து நிலமற்ற தலித் மக்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு, பொதுத்துறை மற்றும் மாநில அரசுப் பணிகளில் உள்ள பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

மலைப் பகுதிகளில் பட்டா வழங்கத்தடை விதிக்கும் அரசு ஆணை 1168-ஐ ரத்து செய்வோம்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

மலக் குழிக்குள் இறங்கும் மனித இழிவை ஒழித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வழிவகை செய்யப்படும்.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால், பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துவதைத் தடுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வன உரிமைச்சட்டம் 2006 உடனடியாக அமல்படுத்தப்படும்.

கல்வராயன்மலை, ஜவ்வாது மலையில் புதிய கலைக்கல்லூரிகள் துவங்கப்படும்.

உண்டு-உறைவிடப்பள்ளிகளை புனரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

மாநில அளவில் பழங்குடியினர் நல வாரியம் அமைக்கப்படும்.

மலைவாழ் மக்கள் கூடுதலாக வசிக்கும் மாவட்டங்களில் மாதந்தோறும் மலைவாழ்மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.

மலைவாழ் மக்களின் வாழ்விடங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை, போக்குவரத்துவசதிகள் செய்து தரப்படும்.

மலைவாழ் மக்கள் சேகரிக்கும் வனசிறு மகசூல்களுக்கு குறைந்தபட்ச விலை தீர்மானிப்பதுடன் லேம்ப் சொசைட்டி மூலம் கொள்முதல் செய்யப்படும்.

மலைப்பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை மூலப்பொருட்களாகக் கொண்டு தொழிற்சாலைகள் துவங்கப்படும்.

பட்டியலில் உள்ள அனைத்து பழங்குடியினருக்கும் சாதிச்சான்றிதழ் தடையின்றி, தாமதமில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நரிக்குறவர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரிவினர், புலையன் ஈரோடு மாவட்ட மலையாளி ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி, குமரி மாவட்ட மக்களை பாதிக்கும் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்படும்.

 1. சமூக கோரிக்கைகள்

மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் ஐம்பது ஆண்டு கால கோரிக்கையான பட்டியல் வகுப்பில் (எஸ்.சி.) உள்ள (49) பள்ளர், (35) குரும்பர், (26) கடையர், (28) காலாடி, (54) பண்ணாடி, (17) தேவேந்திரகுலத்தார், (72) வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கு உரிய அரசாணை வெளியிடப்படும்.

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் ஈழவா, தியா மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 1. பட்டியலினத்தவர் நலன்

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை செப்டம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் டாக்டர் அம்பேத்கர் படம் வைக்கப்படும். அனைத்து அரசு நூலகங்கள் மற்றும் கல்லூரி நூலகங்களில் தமிழில் வந்துள்ள அம்பேத்கரின் படைப்பு தொகுப்புகள் வைக்கப்படும்.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் 60 விழுக்காடு பிற வகுப்பினர் 40 விழுக்காடு சேர்க்கப்படும் வகையில் துணைத்திட்ட நிதியிலிருந்து 5 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்படும். மாவட்ட விழிப்புணர்வு குழு செம்மைப்படுத்தப்படும்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. பிற்படுத்தப்பட்டோர் நலன்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைப்படி தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும்.

மண்டல் குழு பரிந்துரைகள், 1990ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போது, பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை 52 விழுக்காடு ஆகும். கடந்த 25 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில சாதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை அடிப்படையில் 27 விழுக்காட்டிற்கும் அதிகமாக இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்துவோம்.

வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் போது பிற்படுத்தப்பட்டோருக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. மேலும் அரசு உதவித் தொகை வழங்குவதிலும் பாகுபாடுகள் உள்ளன. இதனை சீர்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

 1. மகளிர் நலன்

மாநில மகளிர் ஆணையம் முறையாக இயங்கவும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள் சமஉரிமை பெற உள்ள தடைகள் அகற்றப்படும்.

பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு, மகளிர் உரிமை, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதோடு, பாலியல் நிகர்நிலை கண்ணோட்டம் குறித்து துறை சார்ந்த பயிற்சியளிக்கப்படும்.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சட்டவிரோதமாக 8 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்திட நிர்ப்பந்தப்படுத்துவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 2013ல் நிறைவேற்றப்படட சட்டத்தின் அடிப்படையில் புகார் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரத்து

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேசிய வங்கிகள் வழங்கியுள்ள கடன்களை ரத்து செய்து அவற்றை மாநில அரசே செலுத்தும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். தற்போது பெண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு தனியார் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனுக்கு அதீத வட்டி வசூல் செய்வதை சட்டப்படியான வட்டி அளவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமண உதவித் தொகை அனைவருக்கும் ரூ. ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

அனைத்து உதவி தொகையும் ரூ.3,000/- ஆக உயர்த்த பட்டு, சேவை உரிமை சட்டத்தின் மூலம் லஞ்சமின்றி வழங்கப்படும்.

மாநில அரசின் நிதி நிலை அறிக்கை பாலின நிகர் நிலை கண்ணோட்டத்துடன் (Gender Budgeting)தயாரிக்கப்படும்.

மாநில மகளிர் ஆணையத்தின் சுயேச்சையான செயல்பாடு உறுதி செய்யப்படும். அதன் பரிந்துரைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து துறையினருக்கும் பாலின சமத்துவ விழிப்புணர்வூட்டும் பயிற்சியளிக்கப்படும்.

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ உதவி துவங்கி வழக்கு உதவி வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் விதத்தில் உதவி மையங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக மாவட்ட அளவில் உருவாக்கப்படும்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க புகார் குழுக்கள் அமைக்கப்படும்.

பொதுவாக வன்முறையால் பாதிக்கப்பட்டோரையும், அவர்களது சாட்சிகளையும்  பாதுகாக்க சட்டம் (Witness Protection Act) இயற்றப்படும்.

பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் வார்டுக்கு ஒன்று என்ற முறையில் சுமார் 1000 கூடங்கள் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள விளையாட்டு மைதானங்களைப் பெண்களும், சிறுமியரும் பயன்படுத்தும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

 1. திருநங்கையர் நலன்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

திருநங்கையர்கள் பாதுகாப்பாக குடியிருப்பதற்கு தனியாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

 1. மீனவர்கள் நலன்

பழவேற்காடு ஏரி, பக்கிங்காம் கால்வாய், மன்னார் கடல் பகுதிகளைச் சூழலியல் சீர்கேடுகளிலிருந்து பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிற, கடற்கரை உவர்நீர் இறால் பண்ணைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கடற்கரையில் மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடித் தங்குதளங்கள், வணிக முனையங்கள், கடல் அரிப்புத் தடுப்புச் சுவர்கள் உள்ளிட்ட அடிப்படை மீன்பிடிக் கட்டுமானத் தேவைகள் நிறைவேற்றப்படும்.

அந்தமான் கடல் பகுதியில் தமிழக விசைப் படகுகள், மீன்பிடிக்க நவீன தொழில்நுட்பமும், வழிகாட்டுதலுடன் பாதுகாப்பும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

மன்னார் பல்லுயிர் சூழலியல் பகுதியில் விசை மீன்பிடிப் படகுகளின் இயக்கத்தைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டுக் கடலில் ரெட்டைமடி, சுருக்குமடி வலை பயன்பாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நமது ஆழ்கடல் மீன் வளங்களைக் கொள்ளையிட்டு, கடலைச் சீரழிக்கும் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களின் உரிமங்களைத் திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

ஒருங்கிணைந்த நடுவண் கடல் மீன்பிடிச் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வற்புறுத்துவோம். பாரம்பரிய மீன்பிடிப் படகுகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 3 கடல் மைல் எல்லைக்குள் விசைப் படகுகள் மீன் பிடிப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி டெர்லைட், கடலூர் சிப்காட், எண்ணுhர், பேசின் பிரிட்ஜ் அனல் மின்நிலையம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள கடல் சீர்கேட்டைத் தணிக்கை செய்து, கடல் சூழலைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடி வலைகள் அடிக்கடி சேதம் அடைவதால் அவற்றை முழு மானியத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மீனவர் நலவாரியத்தில் உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி, வீடு, உதவித்தொகை, தொழில் கடன் உள்ளிட்ட அரசின் சலுகைகள் எளிதில் கிடைக்க ஆவன செய்யப்படும்.

துறைமுகம், கடலோர காவல்படை உள்ளிட்ட கடல் சார்ந்த அரசுப் பணிகளில் மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சி எடுக்கப்படும்.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு விசைப்படகுகளைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுவதுடன், மீனவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

மீனவர்கள் காணாமல் போவதும், உயிரிழப்பதும் அடிக்கடி நடக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு நமது மீனவர்களுக்கு சக்தி வாய்ந்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசின் உதவித்தொகை மற்றும் குடும்ப நிவாரண நிதி வழங்குவதற்கு தற்போதுள்ள நடைமுறைகளை மாற்றி, மீனவர் குடும்பங்கள் துயர் துடைக்க திட்டம் வகுக்கப்படும்.

மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளிலும் மீனவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தீவுகளையும், கடல் வளத்தையும் பாதுகாக்க இந்தத் தீவுகளை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக கடலோரப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அணு மின்சக்தி திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மறுஆய்வு செய்யப்படும்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள கடலோடிகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

காஞ்சி மாவட்டத்தில் கொட்டிவாக்கம் தொடங்கி, ஆலம்பரை குப்பம் வரை உள்ள 44 மீனவ கிராமங்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலில் சென்று மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். சாதாரண, பெரிய வகை விசைப் படகுகளில் சென்று மீன் பிடித்துவரும், இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனி மீன்பிடித் துறைமுகம்  அமைப்பதற்கு, தமிழக அரசின் அறிவிப்பு செயல்படுத்தப்பட வில்லை. எனவே, இடைக்கழிநாடு, ஆலம்பரைக் குப்பம் பகுதியில் தனி மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.

கடலூர் துறைமுகத்தில் முகத்துவாரத்தைத் தூர் வாரி கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில், கரையோரத்தில் கருங்கற்கள் பாவப்படும். இதைப்போல தமிழகம் முழுவதும் உள்ள கடல் முகத்துவாரப் பகுதிகளைத் தூர்வாரி மீன்வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் ரத்து

பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களின் தொழிலையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு 20.02.2016 இல் மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில், இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா 2016, நடைமுறைக்கு வந்தால், இலட்சக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் என்றும், கடல்வளம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் என்று பாரம்பரிய மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா ரத்து செய்யப்பட்டு பாரம்பரிய, நாட்டு மீனவர்கள் மற்றும் சிறு விசைப்படகு மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

மொத்தத்தில் மீனவர்கள் நலன் காக்க கீழ்க்கண்ட அம்சங்களை நிறைவேற்ற வலுவான நடவடிக்கைகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

நம் கடலின் மீன்வளத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதைத் தடுத்து நிறுத்தப்படும்.

மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பு ஆணையை இரத்துச் செய்ய வலியுறுத்துவோம்.

மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி உரிமைகள் வழங்கப்படும்.

மீன்பிடி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைத்துப் பெண்களையும் மீனவத் தொழிலாளர்களாக அங்கீகாரம் செய்யப்படும்.

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 10,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வீடில்லாத கடலோர மீனவக் குடும்பங்கள் அனைவருக்கும் இலவசமாக வீடுகள் கட்டித் தரப்படும்.

உள்நாட்டு மீனவர்களுக்கு நீராதாரங்களின் மீன்பிடி குத்தகை வழங்குவதை கட்டாயமாக்கப்படும். அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்தாக்குதலுக்கு உள்ளாவதையும், படகுகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறித்துச் செல்வதையும் தடுத்து, இந்நிகழ்வுகள் தொடராமல் முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவை நிறைவேற்றப்படும்.

 1. சிறுபான்மையினர் நலன்

அனைத்து மத சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்திட அரசியல் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.

சிறுபான்மை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக சச்சார் குழு மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லீம்களின் கல்வி, வாழ்நிலை, பொருளாதாரம் மேம்பட முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்ற பகுதிகளைத் தேர்வு செய்து அதற்கான சிறப்பு திட்டங்கள் உருவாக்கி அமலாக்கபபடும்.

மதம் மாறிய தலித் கிறித்துவ மக்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள், சலுகைகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் தூண்டி வரும் மத வன்முறைகளை ஒடுக்கவும், வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முஸ்லீம் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்புக்கான சிறப்பு திட்டங்கள் உருவாக்கி, அமலாக்கப்படும்.

அனைத்து துறைகளிலும் சிறுபான்மை மக்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்தப்படும் வகையில் சம வாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும்.

சிறுபான்மை முஸ்லீம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வற்புறுத்துவதோடு, தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள உள் ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்கவும், அந்த இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்பதை கண்காணிக்கவும் அதிகாரம் பெற்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.

 1. இஸ்லாமிய சிறைக் கைதிகள் விடுதலை

வழக்கு விசாரணை எதுவும் இல்லாமல் பல்லாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம்களின் வழக்குகள் மறு பரிசீலனை செய்யப்பட்டு,  அப்பாவி முஸ்லீம்கள் விடுதலை செய்யப்படவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வகுப்புவாத மோதல்கள் வராமல் தடுக்கவும், மத நல்லிணக்கம் பேணவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படும்.

 1. வணிகர் நலன்

சிறு வணிகர்கள் சுய தொழில் புரிவோருக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இலவசக் காப்பீட்டு வசதி வழங்கப்படும்.

வரிவிலக்கு தொடர்பான வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உலக வர்த்தக ஒப்பந்தம் என்பது மக்கள் விரோத ஒப்பந்தமாகும். உள்நாட்டு வணிகர்களை ஒழித்துக் கட்டும் இந்த ஒப்பந்தம் பெரும்பான்மையான மக்களின் வாழ்வதாரமான சுயதொழில்கள் அனைத்தையும் அந்நிய மற்றும் ஏகபோக சக்திகளுக்கு பலிகொடுக்கும் ஒப்பந்தமாகும். கடந்த கால்நூற்றாண்டு காலமாக மத்திய அரசில் எந்த ஆட்சி நடந்தாலும், இந்த நாசகர உலக வர்த்தக ஒப்பந்தத்தை செயற்படுத்தி வருகிறது.

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதுடன், இந்தியாவில் 20 கோடி மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ்நாட்டில் 30 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ள சில்லரை வணிகத்தை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். சில்லரை வணிகத்தை காப்பாற்ற மக்கள் நலக்கூட்டணி முழு முயற்சி செய்யும்.

விற்பனை வரித்துறையில் அண்மையில் கணினிமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சிறு வணிகர் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் அந்நிய வணிக நிறுவனங்கள தங்கு தடையின்றி உள்ளே நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், உள்நாட்டு சில்லரை வணிகர்களுக்கு பெரும் கேடு செய்யும் சட்டமாகும். இதனை திரும்பபெற வலியுறுத்துவோம்.

சில்லரை வணிகத்தை ஒழித்து விட்டு வெளிநாட்டினரின் கொள்ளைக்கு வழிவகுக்கும் ஆன்லைன் வணிகம், யூக பேர வணிகம் ஆகிய கேடுகளை அனுமதிக்கவே கூடாது. சில்லரை வணிகம் மட்டுமின்றி மொத்த வணிகத்திலும் அந்நிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படும்.

வெளிநாடுகளிலிருந்தும் – வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்பொருட்களின் தரத்தை ஆராய நிபுணர்குழு அமைக்கப்படும்.

உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

தங்க நகைகளுக்கு விதிக்கப்படும் 1 சதவிகித கலால்வரி, இந்தியாவில் தங்க நகை உற்பத்தி மற்றும் விற்பனையை அடியோடு வீழ்த்திவிடும். மேலும் தங்க நகைகளின் விலை அதிகமாக உயரும். இந்த வரி விதிப்பு என்பது விரைவில் இந்தியாவுக்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முயலும் அந்நிய நகை வணிக நிறுவனங்களுக்கு உதவிட ஏற்படுத்தப்பட்ட சதித் திட்டமாகும். எனவே தங்க நகைகளுக்கான கலால் வரியை மத்திய அரசு முற்றாக கைவிட வலியுறுத்தப்படும்.

 1. மாற்றுத் திறனாளிகள் நலன்

மாநிலம் முழுதும் ஊராட்சி, வார்டு வாரியாக முகாம்கள் நடத்தி, கணக்கெடுப்பு செய்து, மாற்றுத் திறனாளிகள் குறித்த தகவல் தளம் உருவாக்கப்படும்.

மாற்றுத் திறனாளி உதவித் தொகை ரூ.3,000/- ஆக உயர்த்தப்படும். அதைப்பெறுவதற்கான வழிமுறை எளிமைப்படுத்தப்படும்.

சட்டப் படி அரசு பணிகளில் 3 விழுக்காடு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும். ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 4 மணி நேரம் பணி செய்து முழு ஊதியம் பெறுவது நிச்சயப்படுத்தப்படும்.

கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்க, திருமணத்தை ஒட்டி ரூ.5 லட்சம் பெண்ணின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்படும்.

தற்போதுள்ள மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தை, சிவில் நீதிமன்ற அந்தஸ்துடன் கூடிய ஆணையமாக மாற்றி, பொருத்தமான மாற்றுத் திறனாளி அதன் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தங்கும் வசதியுடன் சிறப்புக்கல்விக்கான ஏற்பாடு மாவட்டம் தோறும் உருவாக்கப்படும்.

அரசு மற்றும் பொது கட்டிடங்களில் தடையில்லா சூழலை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கேட்கும் திறனற்றோர், பேசும் திறனற்றோருக்காக மாவட்டம் தோறும் 100 சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமித்திட ஏற்பாடு செய்யப்படும்.  சைகை மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களுடைய உடல் பாதிப்பிற்கேற்ப ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.

பார்வையற்றோர் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்புத்தொகை ரூ.1,000/-லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தி தரப்படும்.

சுயதொழில் புரியும் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் மூலமும், என்.என்.எப்.டி.சி. மூலமும் கடன் உதவித்தொகை வழங்கப்படும்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் செய்யக்கூடிய பணிகளைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின்படி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பில் மூன்று விழுக்காட்டில் ஒரு விழுக்காடு பார்வையற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கி, சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை காணப்படும்.

வீடு இல்லாத மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

பார்க்கும் திறனற்றோர், கேட்கும் திறனற்றோருக்கு அரசு கல்வி நிலையங்கள் மூலம் தரமான உயர்கல்வி கிடைக்க வழி செய்யப்படும்.

செயற்கை அவயங்கள், கருவிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எளிதாகக் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

 1. குழந்தைகள் நலன்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலவாழ்வு சேவையை அடிப்படை உரிமையாக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும். 18 வயதுகொண்ட அனைத்து நபர்களும் குழந்தைகளே என்று குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 2013 குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் குழந்தைகளுக்கான சட்டங்கள், விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படும்.

மாநில குழந்தை உரிமை ஆணையம் பலப்படுத்தப்படும். தேசிய குழந்தைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தவும், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநில அளவில் குழந்தைகளுக்கான கொள்கை மற்றும் செயல் திட்டம் வெளியிடப்படும்.

இடம் பெயர்ந்து வரும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்படும்.

பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆற்றுப்படுத்துநர்கள் நியமிக்கப்படுவதும், ஆற்றுப்படுத்தும் அமர்வுகள் நடைபெறுவதும் உறுதி செய்யப்படும். தோழமையான அணுகுமுறை பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுவது கண்காணிக்கப்படும்.

5ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு எவ்வித தண்டனையும் இருக்காது. அதற்கு மேல், அடிப்பது, சித்தரவதை செய்வது, பழி வாங்குவது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்படும்.

பள்ளிகளில் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க உறுதியான  நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றம் இழைப்பவர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குழந்தை திருமண தடுப்பு சட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும். இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து வலுவான பரப்புரை செய்யப்படும்.

 1. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு

அது பீடி சுற்றும் தொழிலாகட்டும், பட்டாசு தயாரிக்கும் தொழிலாகட்டும், தீப்பெட்டி தொழிலாகட்டும், சிறிய வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகளாகட்டும், செங்கல் சூளைகளாகட்டும் இப்படி எல்லா தொழில் முனையங்களிலும் சிறுவர் – சிறுமிகளை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் வழக்கம் நாடெங்கும் பரவலாக காணப்படுகிறது. எந்த அரசு சார்ந்த நல வாரியங்களும் இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட இன்றுவரை முன் வரவில்லை அல்லது முடியவில்லை. இதை ஒரு எதிர்ப்பு இயக்கமாக மாற்றி பல ஆண்டுகள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வந்தால் ஒழித்துவிட முடியும். எல்லா குழந்தைகளுக்கும்  5 வயது முதல் 18 வயது வரை கல்வி கற்பதுதான் ஒரே வேலையாக மாற்றி செயல்வடிவம் கொடுத்தால் அழித்தொழித்து விடக்கூடிய கொடுமைதான் இது. மக்கள் நலக் கூட்டணி தன்னை இம்முயற்சியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறது. மக்கள் நலக் கூட்டணி அரசு அமைகிறபோது குழந்தைத் தொழிலாளி ஒழிப்பு காலவரையுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றிட ஆவன செய்யப்படும்.

 1. அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நலன்

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு வழங்கியுள்ள ஊதியம் மற்றும் அனைத்து படிகளையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊதிய முரண்பாடுகள் தீர்க்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் எவ்வித முறைகேட்டிற்கும் இடமின்றி கலந்தாய்வு அடிப்படையில் நிறைவேற்றப்படும்.

குடிநீர், சென்னை மெட்ரோ வாட்டர், துப்புரவு மேல்நிலை தொட்டி இயக்குபவர் உள்ளிட்ட தொகுப்பூதியம் / மதிப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

அனைத்து துறைகளிலும் உள்ள தொகுப்பூதிய, மதிப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

 1. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து

தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டம் முற்றாக ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். ஓய்வூதியத்தை பங்குச் சந்தையுடன் இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வலுவாக முயற்சிக்கப்படும்.

புதிய அரசு நலத் திட்டங்கள் மற்றும் இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.

மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

கருணை அடிப்படை பணி நியமனம் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனுக்குடன் வழங்கப்படும்.

ஊழியர் விரோத நடத்தை விதிகள் ரத்து செய்யப்படும். கடந்த ஆட்சியின் போது தொழிற்சங்க ரீதியான இயக்கங்களில் ஈடுபட்டதற்காக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்.

அரசு ஊழியர் – ஆசிரியர்கள் பணி வரன்முறை, பணி ஓய்வு, இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட நிர்வாக ரீதியான பிரச்சனைகள் குறித்து அனைத்து சங்கங்களையும் அழைத்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும்.

1988ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் என்பது கடந்த திமுக அரசால் பறிக்கப்பட்டது.

ஆகவே மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தினை தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்படும்.

01.06.2006 முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்யப்படுவர். தற்போது தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவர்.

ஒவ்வொரு கல்வியாண்டும் மே மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கான அனைத்து பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வுகள் வெளிப்படையாக நடத்தப்பட்டு கல்வியாண்டு துவக்கத்தில் தலைமையாசிரியர் உட்பட அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டு கற்றல் கற்பித்தல் பணி தடையின்றி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண் ஆசிரியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதத்திலிருந்து 10 மாதமாக உயர்த்தப்படும். மருத்துவ விடுப்பு மற்றும் பேறுகால விடுப்பில் செல்லும் ஆசிரியர்களின் பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் பாதுகாக்கப்படும்.

ஆசிரியர்களுக்கான வீட்டு வசதி வாரியம் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு குறைந்த வட்டி விகிதத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆசிரியர்களுக்கு வாடகை குடியிருப்புகள் செய்து தரப்படும்.

பணியிடங்கள் அனைத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தை பராமரிப்பு மையங்கள் நிறுவப்படும்.

ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தி ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படும். மேலும் மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தமிழகத்தில் 8வது ஊதியக்குழு மூலம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

அரசுப்பள்ளிகள், கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்பட்டு முறையான ஊதிய விகிதங்கள் தீர்மானிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்படும்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.

 1. ஓய்வூதியர்கள் நலன்

ஓய்வூதிய தொகையை பங்குச் சந்தையில் இணைத்து செயல்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீடு அரசே ஏற்று நடத்தும்.

ஓய்வூதியர்கள் தொடர்பான பொதுவான தீர்ப்பினை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வூதியர்களுக்கான கம்யூட்டேசன் தொகை பிடித்தம் 12 ஆண்டுகளாக குறைக்கப்படும்.

 1. நீதித்துறை

உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காலியாகவுள்ள நீதிபதிகள் பணியிடங்கள் அனைத்தும் உடனே பூர்த்தி செய்யப்படும். பணி நியமனங்கள் அனைத்தும் எவ்வித முறைகேடுகளுமின்றி தகுதியான நபர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்.

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 22 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. நீதித்துறையில் தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளை விரைந்து முடிக்க தகவல் தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வழக்குகளுக்கு அதிவிரைவில் தீர்வு காணப்படும்.

நீதித்துறையின் செயற்பாடுகள், நாட்டின் அனைத்து மாநில மக்களுக்கும் விரைவான பயன் அளிக்கக் கூடிய விதத்தில் அமைந்தால்தான், உண்மையான கூட்டு ஆட்சி நிலைபெறும். எனவே, உச்சநீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தி செயற்படுத்துவோம்.

 1. தேர்தல் சீர்திருத்தம்

ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் பண ஆதிக்கம் தேர்தலில் முற்றாக ஒழிக்கப்பட்டு ஜனநாயக அடிப்படையில் மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்வதுடன் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்திட வழிவகை காணப்படும்.

அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவர் என்ற தற்போதைய தேர்தல் முறை மட்டுமின்றி அனைத்து வாக்காளர்களது வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் பொருத்தமான அம்சங்களுடன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு நிறைவேற்றப் போராடுவோம்.

 1. விலைவாசி

விலைவாசி உயர்வுக்கும், பதுக்கலுக்கும் காரணமாக இருக்கும் இணையதள வர்த்தகம் (Online Trading), முன்பேர வர்த்தகம்  (Future Trading)

ஆகியவை தடுத்து நிறுத்தப்படும். பதுக்கல்காரர்கள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 1. பொது விநியோகம்

விண்ணப்பித்து காத்திருக்கும் தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் புதிய குடும்ப அட்டைகள் தாமதமின்றி வழங்கப்படும்.

அனைத்து குடும்பத்திற்கும் குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டு ஆக வழங்கப்படும்.

500 குடும்ப அட்டைகள் உள்ள குடியிருப்புகளுக்கு தனியே ஒரு நியாய விலைக்கடையும், 100 குடும்ப அட்டைகள் உள்ள குடியிருப்புகளுக்கு பகுதிநேர கடையும் திறக்கப்படும். நடமாடும் நியாய விலை கடைகள் தேவையான இடங்களில் ஏற்படுத்தப்படும்.

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தரம் பாதுகாக்கப்படும்.

எண்ணெய், பருப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பாக்கெட் மூலம் வழங்கப்படும்.

காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் நியாய விலை கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.

சென்னையில் செயல்படும் அமுதம் அங்காடிகள் போல் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் அமைக்கப்படும்.

நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அமுதம் அங்காடிகளில் வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படும்.

 1. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி (S & T)

தமிழகத்தின்  தென்பகுதியில் ஒரு மத்திய அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.  மாநில உயிரி தொழில்நுட்ப ஆலோசனை மையம் மற்றும் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும். இதில் அறிஞர்கள், விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். இந்த ஏற்பாடு வேளாண் உற்பத்தி, உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளுக்காக மேற்கொள்ளப்படும்.

 1. விளையாட்டுத்துறை

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பு கட்டாயமாக்கப்படும். பள்ளிகளில் விளையாட்டு மைதானம், விளையாட்டு சாதனங்கள், பயிற்சி ஆசிரியர் உட்பட கட்டாயக் கல்விக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

எல்லா  மாவட்டங்களிலும் விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை / இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கான விளையாட்டு மையங்கள் / தங்கும் விடுதி வசதிகள் ஆகியவை உருவாக்கப்படும்.

அனைத்து நகரங்களிலும் பொதுமக்கள் காலையில் நடைபயிற்சி செய்வது உட்பட, பெரியவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டுத் திடல்கள் (Gymnasium, Indoor Games உள்பட)  மற்றும் 400 மீட்டர் தடகள ஓடுதளம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்வது போன்றவை அனைத்து உள்ளாட்சி / நகராட்சி அமைப்புகள் மூலம் நிறைவேற்றப்படும்.

 1. இளையோர் கடமை

இன்றைய சமுதாயம் விளையாட்டுடன் கூடிய உடற்பயிற்சிகளைத் துறந்து அல்லது மறந்து வெகுகாலமாகிவிட்டது. வியர்வை சுரப்பிகள் எல்லாம் தம் கடமை மறந்து வருகின்றன. துரித உணவுகளை விரும்பி வெகு அதிகமாக உட்கொள்ளும் கலாசாரம் பெருகிற்று. இதன் விளைவாக இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த குறைபாடுகள், மிகவும் பெருத்த உடல் அமைப்பு  என்று இளைஞர்களின் உடல் நலன் சீரழிந்து வருகிறது. விளையாட்டின் அவசியத்தை வலியுறுத்தி ஊர்கள் தோறும் விளையாட்டுகளை ஒழுங்கு செய்து இளைய தலைமுறைகளின் அன்றாட நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டிய அவசியம் வந்துவிட்டது. உலக அரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கமோ இரண்டு வெள்ளிப் பதக்கமோ கஷ்டப்பட்டு பெற்றுத்தான் இந்தியா வெற்றி பெற்ற நாடுகளின் பட்டியலில் கடைசியில் இடம் பெறுகிறது. அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு தேசம் அதன் இளைய சமுதாயம் விளையாட்டின் அவசியத்தை மறந்துவிட்டது.  இதனை நினைவூட்டவும், தொடர்ந்திடவும் ஒரு இயக்கம் தேவை. மக்கள் நலக் கூட்டணி அரசு இக்கடமையை நிறைவேற்றும்.

 1. நீச்சல் பயிற்சி

இயற்கையாகவே கடின உழைப்பும், உடல் உறுதியும் கொண்ட மீனவ இளைஞர்கள் நீச்சல் போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் சர்வதேசத் தரத்துடன் கூடிய நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

 1. போக்குவரத்து

நான்கு வழி நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண வசூல் மையங்களை மூடுவதற்கு தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் வகையில் தேவையான அனைத்து இடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும். பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வாய்ப்பான இடங்களில் நீர்வழி போக்குவரத்து துவக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.

மதுரை, கோவை, திருச்சி ஆகிய பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை துவக்கிட செயல்திட்டம் வகுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒருவழி இரயில் பாதைகள் அனைத்தும் இருவழி ரயில்பாதையாக மாற்றிடவும், இரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கப்படவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சரக்கு போக்குவரத்திற்கு சென்னை முதல் குமரி வரை தனி ரயில் பாதை அமைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குமரி மாவட்டத்தில் சுவாமித்தோப்புக்கு அருகில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான 832.70 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை விமானத் தளம் (Green Field Airport) அமைக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் குளச்சல் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள துறைமுகப் பணிகள் துரிதமான முறையில் கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 1. பங்களிப்புடன் கூடிய இரயில்வே திட்டங்கள்

இதுவரை இரயில்வே திட்டம் எதுவானாலும், அது புதிய இரயில் சேவையாக இருந்தாலும், இரட்டை வழித்தடம் அமைப்பதாக இருந்தாலும், புதிய வழித்தடம் அமைப்பதாக இருந்தாலும் ரயில்வே என்றால் அது மத்திய அரசுத்துறை. எனவே மாநில அரசு ஒன்றும் செயவதற்கில்லை என்ற அணுகுமுறையே இருந்திருக்கிறது. இரயில்வே துறையோ, மாநில அரசின் பங்களிப்பை (நிதி பங்கீடு) இப்போதெல்லாம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறது. அப்போதுதான் திட்டங்கள் செயல் வடிவம் பெறும். எனவே, மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அரசின் நிதிப் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்வடிவம் பெறும். புதிய ரயில் சேவைகள் (குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு) கால வரையரையுடன் செயல்படுத்தப்படும் என உறுதி கூறுகிறோம்.

 1. விமான போக்குவரத்து

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கும் சென்னை தவிர திருச்சி, மதுரை, கோவை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களை மேம்படுத்தி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2013ல் மதுரை விமான நிலையம் சுங்கவரி விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கானஅடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக தென்தமிழ்நாட்டின் மையமாகத் திகழும் மதுரை விமான நிலையத்தின் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, விரிவான பன்னாட்டு விமான நிலையமாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் சுற்றுலா வளர்ச்சியும், தென் தமிழகத்தில் இருந்து ஆயத்த ஆடைகள், துணிகள், காய்கறி, பழங்கள், மல்லிகைப்பூ, வாகன உதிரி பாகங்கள், ரப்பர், வேதிப்பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

 1. பொது போக்குவரத்து

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையினால் போக்குவரத்து வாகனங்களின் எரிபொருள் செலவும் அந்நிய செலாவணியும் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தவும், சாலைப் போக்குவரத்து விபத்துகளை தடுக்கவும், பொதுப் போக்குவரத்து முறையை ஊக்கப்படுத்திட உரிய செயல்திட்டங்கள் வகுக்கப்படும்.

 1. சுங்கவரி

சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் சுங்கவரிச் சாவடிகள் அமைத்து இருக்கின்றது. போக்குவரத்துக்கான வாகனங்கள் சாலை வரி (Road Tax) ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகின்ற நிலையால், நெடுஞ்சாலைச் சுங்கவரியும் வாகனங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கின்றன. கட்டுப்பாடற்ற முறையில் சாலை சுங்கவரி வசூலிப்பதை இரத்து செய்ய வலியுறுத்தப்படும்.

 1. சாலைப்போக்குவரத்து

அதிமுக அரசு வரலாறு காணாத வகையில் உயர்த்திய பேருந்து  கட்டணம் குறைக்கப்படும். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு நிகராக சகல வசதிகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

பெரு நகரங்களில் உள்ள சாலைகளில் மிதிவண்டி பயணத்திற்கும் பாதசாரிகளுக்கும் தனிப்பாதைகள் அமைக்கப்படும்.

அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தவிர்த்திட சாலைகளை அகலப்படுத்தி தரமானதாக மேம்படுத்துவது, மாநில சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகள் போல் பிரிப்பான்கள் ஏற்படுத்துவது, சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைப்பது, அரசுப் பேருந்துகளின் தரத்தை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை பெருகி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 15 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். 40 ஆயிரம் பேர் கை, கால்களை இழந்து முடமாகிறார்கள். ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒருமுறை விபத்து நடக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் 4 பேர் விபத்தில் சிக்கி செயல் இழக்கின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காடு அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.

விபத்து ஏற்பட்ட உடனேயே அளிக்கும் சிகிச்சைக்காகவே சுமார் 7 இலட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. உடல் ஊனம் அடைவதால் கோடிக்கணக்கான ரூபாய் தேசிய இழப்பு ஏற்படுகிறது.

இந்தக் காரணங்களால் சாலை விபத்துகளை தேசியப் பேரிடராகக் அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படும்.

அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாததால், சாலைப் பாதுகாப்புக்கான சட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன. எனவே, சாலை விபத்துக்களைத் தடுக்கவும், அதற்கான ஆலோசனைகள் கூறவும், சாலை விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவும், ‘சாலை பாதுகாப்புக்கான மத்திய வாரியம்’ அமைக்க வலியுறுத்தப்படும்.

 1. திரைப்படத்துறை

திரைப்படத்துறைக்கு விதிக்கப்படும் 30 விழுக்காடு வரி 15 விழுக்காடாக குறைக்கப்படும்.

திரைத்துறையில் தனிநபர்கள் ஆதிக்கம், அரசின் தலையீடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். திரைத்துறையினரின் கருத்து சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும்.

திரைப்படத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், நலிவுற்ற திரைப்படத்துறை – சின்னத்திரை கலைஞர்கள் நலன் பாதுகாக்கப்படும்.

திருட்டு விசிடிக்கள் விற்பனை தடுக்கப்படும்.

அரசு நிர்ணயித்துள்ள திரையரங்கு கட்டணங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

குறைந்த செலவில் எடுக்கப்படும் தரமான திரைப்படங்கள் மற்றும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலியுறுத்தும் திரைப்படங்களை தேர்வு செய்து பாராட்டும், பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

 1. சுற்றுலா வளர்ச்சி

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசின் பங்களிப்பு என்பது பெயரளவிற்குக் கூட இல்லை. உலக தொல்லியல் வரைபடத்தில் (World Heritage Centre) இடம் பெற்றுள்ள தமிழக சுற்றுலா மையங்களுக்கு, இராஜஸ்தானின் அரண்மனை ரயில் போன்ற தனி சுற்றுலா இரயில் இயக்கிட வலியுறுத்துவோம்.

சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு புதிய தொடர்வண்டித் தடம் அமைத்தல், புதிய சுற்றுலா விடுதிகளைக் கட்டுதல், ஹெலிகாப்டர் சேவை, விரைவுப் படகுப் போக்குவரத்து, பலூன் விளையாட்டுகள், மலை ஏற்றம் என அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் சுற்றுலாத் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

வரலாற்று சிறப்புமிக்க தலங்கள் சுற்றுலா வட்டத்தில் இணைக்கப்படும்.

சுற்றுலா வாகனங்கள் இயக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டு, உள்ளூர் சுற்றுலா வாகனங்கள் இயக்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் மீண்டும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முதன்மைக் காரணமாக இருப்பது ஓட்டுநர்கள் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பணி செய்வதுதான். எனவே அனைத்து பெருநகரங்கள் உள்ளிட்ட சிறு நகரங்களிலும் உள்ள விடுதிகளில், வாகன ஓட்டுநர்கள் ஓய்வு அறைகள் அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாக செயல்படுத்தப்படும்.

* * *

தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா. கூட்டணி ஆட்சியில் சிறப்புத்திட்டங்கள்

 1. தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைப்போம்: இதன் மூலம் தூய்மையான நல்லாட்சி அமையும்.
 2. அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கிட பல்துறை அறிஞர்கள், நிபுணர்கள் கொண்ட நெறிமுறைக்குழு (Ethics Committee) அமைக்கப்படும். அரசின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், கண்காணிப்புடன் கூடிய ஆலோசனை களை அளிக்கவும் நெறிமுறைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
 3. அரசுப்பணிகள் அனைத்தையும் கிராம பஞ்சாயத்து அளவில் தொடங்கி அனைத்து அரசுத்துறைகளின் ஒப்பந்தப்பணிகள் வரை கண்காணிப்புக்கு உட்படுத்திட மக்கள் பங்கேற்புடன் கூடிய பொது கண்காணிப்புக்குழுக்கள் (Public Auditing Committee) அமைப்போம்.
 1. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவோம். இதில் தலைமைச்செயலகம் தொடங்கி கீழ்மட்டம் வரையில் புகார்கள் விசாரிக்கப் பட்டு, தவறு இழைப்போர் தண்டிக்கப்படுவார்கள்.
 2. நேர்மையான நிர்வாகம், விரைவான, தூய்மையான மக்கள் சேவையை உறுதிப்படுத்த சேவை பெறும் உரிமைச்சட்டம் கொண்டு வருவோம்.
 3. முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம் ஏற்படுத்தி மது ஒழிப்புக்கு தீவிர பிரச்சாரம் மேற் கொள்ளப்படும்.
 4. வேளாண் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
 5. விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
 6. விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சிக்கு தீவிர கவனம் செலுத்தப்படும்.
 7. சிறு, குறுந்தொழில்கள் நலிவடையாமல் பாதுகாக்கப்படும்.
 8. பெருந்தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் அனுமதி உடனே வழங்கப்படும்.
 9. கல்வித்துறையில் புரட்சி உருவாகும்; தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்படும்.
 10. மருத்துவத்துறையில் மறுமலர்ச்சி எங்கள் நோக்கம். அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, உயர்ந்த தரத்துடன் வழங்குதல் எங்கள் குறிக்கோள்.
 11. மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் அரசே ஏற்கும். இதுவரை மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
 12. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேசிய வங்கிகள் அளித்த கடன்களை அரசே செலுத்தும்.
 13. அ.தி.மு.க. அரசு உயர்த்திய பால்விலை, மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும். போக்குவரத்துக் கட்டண உயர்வு இருக்காது.
 14. கர்ப்பிணிப் பெண்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயண அட்டை வழங்கப்படும்.
 15. படித்து பட்டம் பெற்ற பெண்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
 16. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு தனியான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இலவச பயண அட்டை அளிக்கப்படும்.
 17. கிராமப்புறங்களில் மூத்த குடிமக்கள், மகளிர், குழந்தைகள் நலனுக்காக நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் இயக்கப்படும்.
 18. கிராமங்களிலும், நகரங்களிலும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இலவசமாக மினரல் குடிநீர் வழங்கப்படும்.
 19. தமிழகம் முழுவதும் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன் பெற்றுள்ளவர்களின் கடனுக்கான வட்டி மற்றும் அபராத வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படும்.
 20. நெசவாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* * *

 

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...