மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்

நன்றி: தீக்கதிர் 

ஆங்கிலத்தில்: http://peoplesdemocracy.in/2016/0724_pd/political-line-cpim-rejoinder-critics

  • ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு குறித்து, கட்சியின் கடந்த மத்தியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொண்ட தேர்தல் உத்தி என்பது கட்சியின் அரசியல் உத்தியிலிருந்து விலகிச் செல்வது என்றும், இது நெறிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மத்தியக் குழு முடிவு செய்துள்ளது. இடது மற்றும் தாராளவாத சிந்தனைக் கொண்ட சில அறிவுஜீவிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் எத்தகைய கூட்டணியையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக தங்களது ஏற்பின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மத்தியில் பாஜக அதிகாரத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் விரிந்து பரந்த அரசியல் கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் இத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்றும் ஊடகங்களில் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு செய்யவில்லையென்றால் மத்திய ஆளுங்கட்சியான பாஜக தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொள்வதோடு நாடு முழுவதும் வலிமை பெறும் என்பது அவர்களது கருத்தோட்டமாக உள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாட்டை விமர்சிக்கும் விமர்சகர்களைப் பொறுத்தவரை, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள பெரும் அளவிலான வன்முறை மற்றும் அசாதாரணமான சூழல் காரணமாக மட்டும் இத்தகைய கருத்தை தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை, அகில இந்திய அளவில் இத்தகைய கூட்டணி ஏற்படுவது அவசியம் என்று கூறுகின்றனர். ஏனெனில், மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசின் துணையுடன் இந்துத்துவா சக்திகள் வலுப்பெறுவதைத் தடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். வகுப்புவாத அபாயம் மற்றும் பாஜகவின் பிற்போக்கான குணாம்சம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும் என்பது அவர்களது வாதமாக உள்ளது. இடதுசாரிகளால் மட்டும் தேர்தல் களத்தில் பாஜகவை வீழ்த்த முடியாது; எனவே காங்கிரஸ் கட்சியுடனும் கைகோர்த்துக் கொண்டு இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த கருத்தோட்டத்தை ஏற்காதவர்களை ‘வறட்டு வாதிகள்’ என்றும் ‘சித்தாந்த தூய்மையை’ மட்டும் வலியுறுத்துபவர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மோடி அரசாங்கம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் அமைந்துள்ள நிலையில், வகுப்புவாத சக்திகளால் ஏற்பட்டுள்ள பேராபத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சரியாக மதிப்பிடவில்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலேயே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற கருத்தோட்டத்தை கட்சி நிராகரித்தது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் வர்க்கத் தன்மை குறித்து கட்சிக்கு இருந்த புரிதல்; இரண்டாவதாக, வலதுசாரி பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளை எத்தகைய முறையில் எதிர்த்துப் போராடுவது என்பது குறித்த புரிதல் ஆகும்.இந்தியாவில் ஆளும் வர்க்கமான பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. வர்க்கத்தன்மையைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் வேறுபாடு இல்லை.

இவ்விரு கட்சிகளுமே ஆளும் வர்க்கத்தின் நலனையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எனவேதான் காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் ரீதியிலான கூட்டணி எதையும் அமைத்துக் கொள்வது என்பது இயலாது. இவ்வாறு செய்வது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் வர்க்க நலனில் சமரசம் செய்து கொள்வது என்று பொருளாகும். மேலும் உழைக்கும் மக்களின் நலனை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேட்சையான பாத்திரத்தை விட்டுக் கொடுப்பதும் ஆகும். எனினும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே உள்ள அரசியல் வேறுபாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து வைத்துள்ளது. பாஜக என்பது இந்துத்துவா சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் கட்டுப்படுத்தப்படுவது. காங்கிரஸ் கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சியாக இருந்தபோதும் பெரு முதலாளித்துவத் தன்மை கொண்டுள்ளதால், வகுப்புவாதத்துடன் ஊசலாட்டக் குணத்தோடு சமரசம் செய்து கொள்ளும் இயல்புடையது. பாஜக தற்போது மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான நோக்கம் என்பது பாஜகவை தோற்கடிப்பது மற்றும் வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்துவதே ஆகும்.வகுப்புவாத சக்திகள், குறிப்பாக இந்துத்துவா சக்திகள் எழுச்சி பெற்றுள்ளதை சூனியத்திலிருந்து பார்க்கக் கூடாது. 1990களில் ஆளும் வர்க்கம் தாராளமய அடிப்படையின் நவீன தாராளமயமாக்கல் கொள்கையை மும்முரமாக செயல்படுத்திய காலத்தில்தான் வகுப்புவாத சக்திகள் கணிசமான அளவில் வளரத் துவங்கின. நவீன தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரலை முன்னுக்குக் கொண்டுவர ஆளும் வர்க்கம் வகுப்புவாதத்தை பயன்படுத்திக் கொண்டது. நவீன தாராளமயமாக்கல் பாணி, சுதந்திரச் சந்தை, முதலாளித்துவம் என்பது வகுப்புவாதம் மற்றும் ஏனைய பிளவுவாத சக்திகளை வளர்த்துவிட்டது. மோடி அரசு மிகவும் உக்கிரமான முறையில் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதோடு, அவர்களது அதிகாரப்பூர்வ சித்தாந்தமான வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுத்துச் செல்கிறது. இந்த இரு சக்திகளும் நமது நாட்டில் வலதுசாரி தாக்குதலுக்கு எண்ணெய் ஊற்றுகிறது.நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்துடன் இந்துத்துவா மற்றும் இதர வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தையும் இணைக்க வேண்டும் என்ற தெளிவான புரிதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது. இத்தகைய இரண்டு போராட்டங்களையும் இணைத்து முன்னெடுக்கும்போதுதான் பாஜகவை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி தோற்கடிக்க முடியும். ஆளும் வர்க்கத்தின் கட்சி என்ற முறையில் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுப்பதாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக தீர்மானகரமான போராட்டத்தை முன்னெடுப்பதோடு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் பிளவுவாத, வகுப்புவாத நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக மக்களை அணி திரட்டுவது அவசியமாகும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதன் மூலம் இடதுசாரிக் கட்சிகளால் இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சிதான் நவீன தாராளமயமாக்கல் கொள்கையை துவக்கி வைத்து தீவிரப்படுத்திய கட்சியாகும். மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள் என்பது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு பின்பற்றிய அதே கொள்கைகளே என்பதுதான் மிக முக்கியமான பிரச்சனையாகும். பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு, தனியார்மயம், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகைகள், கார்ப்பரேட்டுகள் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கு ஆதரவான விவசாயக் கொள்கை, அமெரிக்காவுடன் ராணுவ மற்றும் கேந்திர உடன்பாடு என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றிய அதே கொள்கைகளைத்தான் பாஜக கூட்டணி அரசும் பின் தொடர்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றிய தாராளமயமாக்கல் கொள்கையால் விளைந்த லஞ்ச ஊழலால் ஏற்பட்ட மக்களின் அதிருப்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு பலன் அளித்தது என்பதையும் மறந்து விடக் கூடாது. இதே போன்று, அசாம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகளின் தவறான ஆட்சி மற்றும் ஊழல், பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு தேர்தலில் பலன் அளித்தது. மோடி அரசு பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும் வலிமை மிகுந்த இடது மற்றும் ஜனநாயக கூட்டணியை உருவாக்கி வளர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள அரசியல் அடிப்படை காரணமாக இத்தகைய கூட்டணியின் ஒரு பகுதியாக அந்தக் கட்சி இருக்க முடியாது.இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே கூட்டணி ஏற்பட வேண்டும் என்று கூறுபவர்கள், வலதுசாரி சக்திகளின் தாக்குதலுக்கு எதிராக நாடாளுமன்ற மற்றும் தேர்தல் கட்டமைப்புக்குள் உருவாகும் கூட்டணியை மட்டுமே முன்னிறுத்துகின்றனர். வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தேர்தல் போராட்டமாக மட்டுமே குறுக்கிவிடுகின்றனர்.

ஆனால் வலதுசாரி சக்திகளுக்கு எதிராக அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியிலான போராட்டம் தான் தேவையான ஒன்றாக உள்ளது. இந்த போராட்டத்தைப் பொறுத்தவரை இடதுசாரிக் கட்சிகள் வறட்டுத்தனமான பார்வையைக் கொண்டிருக்கவில்லை. நவீன தாராளமயமாக்கல் கொள்கை மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் விரிவான, ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்திற்கான இயக்கத்தைக் கட்டமைத்து வளர்க்க வேண்டும் என்கிற நிலைபாட்டையே கொண்டுள்ளன.வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைக் கொண்ட விரிவான மற்றும் கூட்டு மேடை அமைக்கப்படவேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான விரிந்து, பரந்த மேடையை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் அணி திரட்டப்பட வேண்டும். ஆனால் இதை இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையிலான அரசியல் உடன்பாடுஎன்று மட்டும் குறுக்கி அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. சுருக்கமாகச் சொல்வதானால் இப்போதுள்ள சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான குறிக்கோள் பாஜகவை தனிமைப்படுத்துவது மற்றும் தோற்கடிப்பது. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதால் இதை சாத்தியமாக்க முடியாது. இது சில விமர்சகர்கள் குறிப்பிடுவது போல சமதூரத்தில் விலக்கி வைப்பது என்ற கொள்கை ஆகாது.

  • கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் விவாதிக்கப்படுகிற மற்றொரு விஷயம் என்னவென்றால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமளவு மக்களின் ஆதரவை பெற முடியாத நிலை ஏற்பட்டது ஆகும். திமுக அல்லது அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்ததன் காரணமாகவே தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகளின் இத்தகைய நிலைமைக்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாதது மட்டுமே பிரதான பிரச்சனையல்ல – கட்சியின் வெகுஜன அடித்தளம் மற்றும் கட்சியின் அரசியல் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதும் ஆகும்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்ட நிலையில், கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நடைமுறை உத்தி குறித்த விவாதத்திலும் இது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. கட்சி வலுவாக உள்ள மூன்று மாநிலங்களான மேற்குவங்கம், கேரளம், திரிபுரா தவிர மற்ற மாநிலங்களில் கட்சியின் சுயேட்சையான வலிமை மற்றும் வெகுஜன அடித்தளத்தில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த வீழ்ச்சி குறிப்பிட்ட காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களும் சீர்செய்ய வேண்டிய முறைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கை பல்வேறு வர்க்கங்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து சரியான புரிதல் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தையும் வெகுஜன இயக்கங்களையும் கட்டி வளர்ப்பதற்கான சரியான உத்திகளும் முழக்கங்களும் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய போராட்டங்களை நடத்தவும் அரசியல் செல்வாக்கை திரட்சிப்படுத்தவும் கட்சியை வலிமைப்படுத்துவதற்கான சரியான நடவடிக்கைகள் கட்சி அமைப்புக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். கட்சியை வலிமைமிகு அமைப்பாக கட்டமைப்பது, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவது, இதன் மூலம் இடது ஜனநாயக கூட்டணியை உருவாக்குவதுதான் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கொள்கைகளுக்கு உண்மையான மாற்றாகும் என்று கட்சியின் அரசியல் நடைமுறை உத்தி வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு, அசாம், ஆந்திரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கட்சியின் சுயேட்சையான வலிமையை கெட்டிப்படுத்த முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றாகத் திகழ்வது, இந்த மாநிலங்களில் கட்சி நீண்ட நெடுங்காலமாக மாநில முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான மாநிலக் கட்சிகளுடன் நீண்ட காலமாக கட்சி கூட்டணி வைத்து வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில், கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையைப் பின்பற்றுகிற, ஊழலில் ஊறித்திளைத்துள்ள திமுக மற்றும் அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்ததால் மக்கள் நம்மை ஒரு அரசியல் மாற்றாக கருதவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. மாநில மாநாட்டு அறிக்கை கூறுகிறது: “கட்சியின் வலிமை மற்றும் அரசியல் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களில் ஒன்று, கடந்த 40 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுகவுடன் தொடர்ச்சியாக கூட்டணி வைத்திருந்தது ஆகும்.”

21வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி கூறுவது என்னவென்றால், பிரதான மாநிலக் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடவேண்டும். குறிப்பாக மாநில அரசுகளுக்கு தலைமை தாங்குவதன் மூலம் நவீன தாராளமயமாக்கல் கொள்கையை பின்பற்றுகிற, அதன் மூலம் ஊழலில் ஈடுபடுகிற மாநிலக் கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டும். மேலும் அது கூறுகிறது: “நம்முடைய கட்சியின் நலனுக்கு உகந்ததாகவும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை மாநிலத்தில் அணி திரட்ட உதவுவதாகவும் இருந்தால் மட்டுமே, மாநில முதலாளித்துவ கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொள்ளவேண்டும்.”

இந்த அணுகுமுறையின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் கட்சி திமுக மற்றும் அதிமுகவுடன் எத்தகைய உடன்பாட்டையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவினை எடுத்தது. இப்போதுள்ள சூழலில் திமுக அல்லது அதிமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டால் அது தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னேற்றத்திற்கோ அல்லது இடது, ஜனநாயக கூட்டணியை கட்டுவதற்கோ உதவிகரமாக இருக்காது. தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராட தமிழ்நாட்டில் திமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்வது என்பது கட்சியை முன்னெடுத்துச் செல்வது மற்றும் இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவது என்ற நோக்கத்திற்கு எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்.

இது தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒன்றல்ல.

பிரதான மாநில முதலாளித்துவக் கட்சிகளுடன் நீண்டகாலமாக அல்லது மீண்டும் மீண்டும் கூட்டணி வைத்திருந்த அசாம் , பீகார் , ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வி குறித்து கவலை கொள்கிற இடதுசாரிக் கட்சிகளின் மீதான நல்லெண்ண விரும்பிகள் இந்த அடிப்படையான எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் பெறுகிற லாபம் மட்டுமே கட்சியின் சுயேட்சையான வலிமையை வளர்த்தெடுத்துச் செல்லவோ, வலிமை மிகு இடது மற்றும் ஜனநாயக இயக்கத்தை உருவாக்கவோ பயன்படாது.

  • கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு ஸ்தாபன பிளீனம் நடத்தப்பட்டது. கட்சி அமைப்பை சீர்படுத்தவும், வலிமைப்படுத்தவும், மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய கட்சியை கட்டமைக்கவும் (மாஸ் லைன்) உகந்த வகையில் அரசியல் நடைமுறை உத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன தாராளமயமாக்கல் கொள்கை மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடக்கூடிய வலிமை மிகு சக்தி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே. இடதுசாரிக் கட்சிகள் தலைமையிலான தொழிற்சங்கங்களின் முன் முயற்சி காரணமாக மத்திய தொழிற்சங்கங்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இத்தகைய கூட்டு மேடையின் விளைவே எதிர்வரும் செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் ஆகும். இடதுசாரிக் கட்சிகள் தலைமையிலான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் முக்கியப் பாத்திரம் காரணமாக நிலம் கையகப்படுத்துவதற்கான அவசரச் சட்டத்திற்கு எதிராக ஒன்றுபட்ட பெரும் இயக்கத்தை உருவாக்க முடிந்துள்ளது.

அடிப்படை சேவை வசதிகள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்தும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலை எதிர்த்தும் எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இத்தகைய போராட்டங்களை மேலும் எவ்வாறு விரிந்து பரந்த அளவில் எடுத்துச் செல்வது என்பது குறித்தும் கட்சி பிளீனம் விவாதித்துள்ளது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை பொறுத்தவரையில், நாடு தழுவிய முறையில் இடதுசாரி சக்திகளுக்கு குறிப்பிட்ட அளவு வலிமையே இருந்தபோதும், பிளவுவாத இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலிமையாக உள்ள மாநிலங்களில் பாஜக – ஆர்எஸ்எஸ் கூடாரத்திற்கு எதிரான போராட்டம் கூர்மையுடன் நடைபெறுகிறது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் -பாஜகவுக்கு இடையில் நடைபெற்று வரும் மோதல் இதற்கு சாட்சியமாகும். இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிராக தத்துவார்த்த தளத்திலும், அரசியல் தளத்திலும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து, பிளீனம் வழிகாட்டியுள்ளது.

மோடி அரசாங்கம் பின்பற்றுகிற நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராகவும், பாஜக- ஆர்எஸ்எஸ் தூண்டிவிடுகிற வகுப்புவாத தாக்குதல்களுக்கு எதிராகவும மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்தும். இதைச் செய்கிற அதே நேரத்தில், தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், நகர்ப் புற மற்றும் கிராமப்புற ஏழைகள் இதர உழைக்கும் மக்கள் பிரிவினர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவதற்கான பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் . இதில் ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் எத்தகைய கூட்டணியையும் கட்சி வைத்துக்கொள்ளாது.

கட்சிக்குள் நடைபெறும் விவாதங்களை தனிப்பட்ட தலைவர்களுக்கு இடையிலான மோதலாகவும் தலைமைக்கு எதிரான கலகமாகவும் சித்தரிக்க சில பகுதி ஊடகங்களால் தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேற்குவங்கம் மற்றும் கேரளத்தில் செயல்படும் சில பாரம்பரிய கம்யூனிஸ்ட் விரோத செய்தித்தாள்கள் இத்தகைய வேலைகளில் முன்னணியில் உள்ளன. கட்சி தனது நடைமுறை உத்தியை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்கின்ற அளவிற்கு சிலர் செல்கின்றனர். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை கட்சி கைவிட்டு விடவேண்டும் என்று அத்தகைய ஊடகங்கள் விரும்புகின்றன. கட்சியை ஒரு சமூக ஜனநாயக கட்சியாக மாற்றி விட வேண்டும் என்ற சித்தாந்த ரீதியிலான தாக்குதலின் ஒரு பகுதியே ஆகும் இது. ஆனால் அவர்களுக்கு பணிந்து விடும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.

தமிழில்: மதுக்கூர் இராமலிங்கம்

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...