மோடியின் ஈராண்டுகள்: வறுமைக்கு என்ன மருந்து?

-சவெரா

இருபது கோடிக்கும் மேலான மக்கள் போதுமான உணவின்றி நாள்தோறும் பசி-பட்டினியுடன் படுக்கைக்குச் செல்லும் ஒரு நாட்டில், மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்களும், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் ரத்தச்சோகையுடன் காணப்படுகிற ஒரு நாட்டில், இவற்றைச் சரிசெய்திட எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மோடி அரசாங்கம் மவுனமாக இருக்கிறது என்றால் அது ஒருவகையில் கிரிமினல் நடவடிக்கையே தவிர வேறல்ல.  இவ்வாறு நாட்டு மக்களில் கோடிக்கணக்கானோர் வாழ்வு குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது சொரணையற்று இருக்கின்ற அதே சமயத்தில், தேசியக் கொடிக்கு மதிப்பு அளியுங்கள், தேசிய  கீதத்திற்கும் மற்றும் அதுபோன்ற அடையாளங்களுக்கும் மதிப்பு கொடுங்கள் என்று கூறி தாங்கள்தான் “தேசியவாதத்தை’’ முன்னெடுத்துச் செல்லும் ஜாம்பவான்கள் போன்று மோடியும் அவரது கட்சியும் பீற்றிக்கொள்வது இயல்புக்கு மீறிய செயலேயாகும். மோடி மற்றும் பாஜகவின் போலி தேசியவாதத்தின் ஆழம் எந்த அளவிற்கானது என்பதைச் சற்றே ஆராய்வோம்.

நாட்டில் மக்கள் இயக்கங்களிடமிருந்து வந்த உக்கிரமான நிர்ப்பந்தத்தை அடுத்து 2013ஆம் ஆண்டில் ஐமுகூ அரசாங்கம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டமானது இன்றளவும்கூட நாட்டு மக்கள் அனைவருக்குமான பொது விநியோக முறை என்னும் கோரிக்கையை சட்டபூர்வமானது என்றோ நியாயபூர்வமானது என்றோ ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும், நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் வாங்கக்கூடிய விலையில் ஒரு நாளைக்கு இரு வேளை உணவு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. இது ஒரு முன்னேற்றமான நடவடிக்கையே. ஆனால், மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் கடந்த ஈராண்டுகளில் மூன்று முறை இந்தச் சட்டத்தின் அமலாக்கத்தை ஒத்தி வைத்திருக்கிறது. கடைசியாக 2015 மார்ச்சில் ஆறு மாத காலத்திற்காக ஒத்தி வைத்தது. 

ஏன்? அரசுத்தரப்பில் அதிகாரபூர்வமாகப் பறையறிவிக்கப்பட்ட ஒரே காரணம், மாநில அரசாங்கங்கள்  இச்சட்டத்தின்கீழ் உணவு தான்யங்களைப் பெறுவோர்  குறித்து அடையாளம் காட்ட வில்லை என்பதாகும்.  ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இது உண்மைதான். ஆனால் இதனை விரைவுபடுத்தும் விதத்தில் மத்திய அரசு செய்ததுதான், என்ன?  எதுவும் கிடையாது. இந்தியாவை எதிர் கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்று பசி-பட்டினி என்று பாஜகவோ அல்லது அதன் பிரதமரோ எந்தக் காலத்திலுமே கருதாததால்தான், இவ்விஷயங்கள் போகிறபோக்கில் இயற்கையாகவே  போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். 

ஆனாலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அமலாக்குவதற்கான காலக்கெடுவை திரும்பத் திரும்ப நீட்டித்துக்கொண்டே செல்வதன் பின்னணியில், ஓர் உண்மையான காரணமும் உண்டு அது, `உணவு மான்யம்’ என்று வழக்கமாக அழைக்கப்படுவதன் கீழ் அரசாங்கம் ஒதுக்கிடும் ஒரு பெரும் தொகையை  இதன்மூலம் ஒதுக்காமல் சேமித்துக் கொண்டிருப்பதாகும். அரசின் செலவினங்களை வெட்டிச் சுருக்குவது என்கிற மோடி அரசின் தந்திரம் இதற்கு மிகவும் சரியாகப் பொருந்தியுள்ளது. ஆனால், அது நாட்டில் அவதிக்குள்ளாகி இருக்கும் கோடிக்கணக்கான ஆண்கள்-பெண்கள்-குழந்தைகளை நேரடியாக அது பாதித்துள்ளது என்பதைப்பற்றி அது பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பொது விநியோக முறையை தற்சமயம் 33 மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு, கேரளம் மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் விதிவிலக்கு. தமிழ்நாடும், கேரளாவும் மக்களுக்கு உணவு தான்யங்களை விநியோகிப்பதற்கு ஏற்கனவே தங்கள் சொந்த அமைப்பு முறையைக் கைக்கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, மத்திய அரசாங்கத்திடமிருந்து ஆழமான அக்கறையுடன் அதனை நிறைவேற்ற உந்துதல் எதுவும் இல்லாத நிலையில், மக்களின் துயரார்ந்த வாழ்நிலைகள் குறித்து அக்கறையற்ற நிலையில் ஆட்சி புரிந்துவரும் பல மாநில அரசுகள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் “அமலாக்கத்தை’’ பெயரளவில்தான் மேற்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை – பண்டல்காண்ட் பகுதியைத் தவிர வேறு எங்கும் – இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை. 

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை திட்டமிட்டு அடித்து நொறுக்கும் மோடி அரசாங்கத்தின் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. அந்த்யோதயா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வறியவர்களிலும் வறியவர்களாக வாழும் மக்களுக்கு உணவு தான்யங்களை அளித்திடுவதற்கு இருந்த நிபந்தனைகளை மேலும் கடுமையாக்கிட மத்திய உணவு அமைச்சகம் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தான்யங்களைப் பெறுவதற்கு தாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் என்ற அடையாள அட்டையை அவர்கள் காட்ட வேண்டும், அந்த்யோதயா திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் புதிதாக குடும்பங்கள் எதனையும் சேர்த்திடக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இவை அனைத்தும், இத்திட்டத்தை மெல்ல மெல்ல சுருக்குவது மட்டுமல்ல, நாளடைவில் அதன் கழுத்தை நெறித்து ஒழித்துக்கட்டுவதேயாகும். உதாரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தைச் சேர்ப்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் உள்ள குடும்பங்கள்தான் இருந்திட வேண்டும் என்கிறது. அப்படியானால் அதன்பின்னர் கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு காரணங்களால் அதிகரித்துள்ள குடும்பங்களைச் சேர்த்திட முடியாது, பிழைப்பு தேடி பல்வேறு மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து செல்லும் மற்றும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குள்ளேயே தங்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் எப்படி ஜீவித்திருப்பார்கள்? இதைப்பற்றியெல்லாம் இந்த அரசாங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 

மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற மற்றொரு தாக்குதல், கர்ப்பிணிப் பெண்களுக்கும், பெற்ற குழந்தையைப் பேணி வளர்க்கும் தாய்மார்களுக்கும்  ஆறாயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தையும் கைவிட்டுவிட்டதாகும். மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் இந்த முக்கிய ஷரத்துக்கான விதிகளை உருவாக்கவே இல்லை.  அதேபோன்று மிகவும் முன்னோடித் திட்டம் என்று அறிவிக்கப்பட்ட இந்திரா காந்தி மணமகள் சகாயம் அளிக்கும் திட்டம் (ஐழுஆளுலு-ஐனேசைய ழுயனோi ஆயவசவைஎய ளுயாயலடிப லுடிதயயே)  நாட்டில் 53 மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மணமகளின் வயது மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இதனைப் பலருக்கு விரிவாக்கிடவும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. ஒரு பெண்ணுக்கு இரு குழந்தைகளுக்கும் மேல் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் அவருக்கு உணவு தான்யங்கள் அளிப்பது மறுக்கப்படும். 

இவ்வாறு இந்த சட்டத்தின் அமலாக்கம் என்பது வெறும் பெயரளவிலானதே என்பதை அரசாங்கள் மிகவும் தெளிவான முறையில் உணர்த்தி இருப்பதால், இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளும் அதன்படியே நடந்துகொண்டு வருகிறார்கள். உதாரணமாக, மாவட்டக் குறைதீர் மையத்தின் அதிகாரிகளை மக்கள் யாராவது சென்று தங்கள் குறைகளைக் கூறினால், அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அந்த அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

மக்களைப் பற்றி மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதற்கு இவை மட்டுமல்ல, இவற்றுக்கு இணையாக இன்னும்  ஏராளமானவற்றைக் கூற முடியும். ஊட்டச்சத்துக் குறைவாக உள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ள மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடிகள் மற்றும் யௌவனச் சிறுமிகளுக்கான திட்டம் போன்றவைகளுக்கு  மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிவந்த திட்டச் செலவினங்களையும் கடுமையான முறையில் மோடி அரசு வெட்டிச் சுருக்கி இருக்கிறது. இவற்றின் விளைவாக ஊட்டச் சத்துத் தேவைப்படும் நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்கு அவை போதிய அளவுக்குக் கிடைக்காததால், மிகவும் மோசமான முறையில் அவர்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். 

இவை மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளித்து வந்த மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்  திட்டத்தின்கீழ் ஒதுக்கிவந்த பட்ஜெட் செலவினத்தையும் காலத்தே ஒதுக்காததன் காரணமாகவும், உணவு தான்யங்களை போதிய அளவிற்கு விநியோகிக்காததன் காரணமாகவும் அவர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். 

நாட்டில் பெரும்பான்மையான பகுதிகள் கடந்த ஈராண்டு காலமாக தொடர்ந்து வறட்சிக்கு ஆளாகியுள்ளன. எனினும் மோடி அரசாங்கம், வறட்சியால் வாடி வதங்கி அவதிக்குள்ளாகி இருக்கும் ஏழை மக்களைக் காப்பாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுத்திருக்கிறது. அரசின் இத்தகைய மெத்தனமான சொரணையற்ற போக்கை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தபின்னர்தான், அரசாங்கம் ஏதோ கொஞ்சம் அசைந்து கொடுத்திருக்கிறது. 

இவ்வாறு மோடி அரசாங்கம், ஏழை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அவசியமான திட்டங்களுக்கான செலவினங்கள் அனைத்தையும் வெட்டிச் சுருக்கி அவர்களை அனைத்துவிதங்களிலும் கசக்கிப்பிழிவதன் காரணமாகவும், “சந்தை சக்திகள்’’ அவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைத்திட அனுமதித்திருப்பதன் காரணமாகவும், நாட்டில் பசி-பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக்குறைவால் வாடும் மக்களின் துன்ப துயரங்கள் மேலும் பலமடங்கு பல்கிப் பெருகியுள்ளன.

(தமிழில்: ச.வீரமணி)

Check Also

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ...

Leave a Reply