மோடியின் ஈராண்டு: விலைவாசி உச்சத்தில், விவசாயம் பள்ளத்தில் …

விஜு கிருஷ்ணன்

(கடந்த இரு மாதங்களில் விலைகள் உச்சத்தில் இருந்த சமயத்தில் மக்கள் பல்வேறுவிதமான பருப்பு வகைகளில் சுமார் 40 லட்சம் டன்கள் நுகர்ந்துள்ளனர். கிலோவிற்கு 100 ரூபாய் லாபம் என்று வைத்துக்கொண்டாலும்கூட, அதானி, ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா மற்றும் ஐடிசி போன்ற பெரும் வர்த்தகச் சூதாடி நிறுவனங்கள் அடைந்த அதீத லாபம் எவ்வளவு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்)

நரேந்திர மோடி அரசாங்கத்தின் முதல் ஆண்டில் விவசாயிகளுக்கு “நல்ல காலம்’’ பிறக்கும் என்று இருந்த நம்பிக்கைகள், அதன் இரண்டாம் ஆண்டின் முடிவில் பொய்த்துப்போய் முழுவதுமாக புதைகுழிக்குள் தள்ளப்பட்டு மூடப்பட்டுவிட்டன.

3 லட்சம் கிராமங்கள்
1986-87க்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக நாட்டிலுள்ள 300 மாவட்டங்களில் உள்ள 3 லட்சம் கிராமங்கள் பாதிக்கப்பட்டு, அதில் வாழும் சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறை, பயிர் இழப்புகள் போன்றவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வறட்சியை சமாளிப்பதற்கான திட்டங்கள் எதுவும் பாஜக அரசாங்கத்திடம் இல்லை. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க பாஜக அரசாங்கம் முழுமையாகத் தவறிவிட்டது. வறண்டு போன லாட்டூர் பகுதிக்கு “தண்ணீர் ரயில்’’ அனுப்பியதற்காக 4 கோடி ரூபாய்க்கு ஒரு பில் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் படாமல் பிரதமர் நரேந்திர மோடி தனது மெழுகுச் சிலைகளை வடிவமைப்பதிலேயே சுறுசுறுப்பாக இருந்தார்.

ஒவ்வொரு நாளும் 52 விவசாயிகள்
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆனால், கடந்த ஈராண்டுகளில் விவசாயிகளின் தற்கொலைகள் மிக வேகமாக அதிகரித்திருக்கிறதேயொழிய, குறையவில்லை. வெளியாகியுள்ள ஆய்வறிக்கைகளின்படி ஒவ்வொருநாளும் 52 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி விளைபொருள்களுக்கு அதன் உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் உயர்த்தி பயிர்களின் ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என்று அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த உறுதிமொழியை இப்போது அது மிகவும் வசதியாக மறந்துவிட்டது. இது தொடர்பாக அது உச்சநீதிமன்றத்தில் ஓர் உறுதிவாக்குமூலமும் (அபிடவிட்) தாக்கல் செய்திருக்கிறது. உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் உயர்த்தி பயிர்களின் ஆதார விலை நிர்ணயிக்க முடியாது என்றும் அவ்வாறு நிர்ணயிப்பது “சந்தையைப் பாதிக்கலாம்’’ என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, விவசாயிகளின் வயிற்றில் மேலும் அடிக்கும் விதத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஓர் அரசாணை அனுப்பி இருக்கிறது. அதில் எந்தவொரு மாநில அரசாங்கமாவது மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் கூடுதலாக விவசாயிகளுக்கு போனஸ் வழங்கினால் அந்த மாநில அரசிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்வது தடை செய்யப்படும் என்றும் மிரட்டியிருக்கிறது.

ரூ.100 லாபம் யாருக்கு?
பருப்பு வகைகளுக்கு விவசாயிகள் கிலோவிற்கு வெறும் 30-40 ரூபாய் மட்டுமே கிடைக்கப் பெறுகிற அதே சமயத்தில் சந்தையில் பருப்பு விலைகள் கிலோவிற்கு 150-220 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களில் விலைகள் உச்சத்தில் இருந்த சமயத்தில் மக்கள் பல்வேறுவிதமான பருப்பு வகைகளில் சுமார் 40 லட்சம் டன்கள் நுகர்ந்துள்ளனர். கிலோவிற்கு 100 ரூபாய் லாபம் என்று வைத்துக்கொண்டாலும்கூட, அதானி, ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா மற்றும் ஐடிசி போன்ற பெரும் வர்த்தகச் சூதாடி நிறுவனங்கள் அடைந்த அதீத லாபம் எவ்வளவு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு இவர்களுக்கு பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் வசதி
செய்து தந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் இவற்றை இருப்பு வைத்துக்கொள்வதற்கான உச்சபட்ச அளவு குறித்த வரம்பை 2014 செப்டம்பர் 30 அன்று ஓர் அரசாணையின்மூலம் நீக்கிவிட்டது. இது இவற்றின் விலைகளை உயர்த்திட வழி செய்துள்ளது.

விரியும் கடன்வலை
விவசாய இடுபொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு உரிய ஆதாரவிலை கிடைக்காததும் விவசாயிகளை கடன்காரர்களாக ஆக்குவதை அதிகரித்துள்ளது. 2013 ஜனவரி – டிசம்பருக்கான என்எஸ்எஸ்ஓ (மாதிரி சர்வே) அறிக்கையின்படி, இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள விவசாயக் குடும்பங்களில் 31 சதவீதத்தினர் கடன்காரர்களாகிவிட்டனர். இவர்களில் நில சாகுபடியாளர்கள் அதிகம். அதாவது சிறு,குறு நிலம் உடைய விவசாயக் குடும்பங்கள் 52 சதவீதத்தினர் கடன்வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் சுமார் 93 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடன்வலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். கடன்வலையில் சிக்கிக்கொண்டுள்ள விவசாயிகளைக் காப்பாற்ற போதுமான அளவிற்கு வங்கிகள் மூலம் கடன் அளிக்கப்படும் என்று தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட அரசுத்தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

ரப்பர் விவசாயிகள் துயரம்
பல வணிகப்பயிர்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இவற்றின் விலையை உறுதிப்படுத்தவோ, அவற்றை உற்பத்தி செய்த விவசாயிகளைப் பாதுகாத்திடவோ அரசாங்கத்தின் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாறாக பாஜக அரசாங்கம் இவ்வணிகப் பயிர்களின் மீது தாராள வர்த்தக ஒப்பந்தங்களை மேலும் முனைப்பாக அமல்படுத்திடவும், பெரிய அளவில் வர்த்தக தாராளமயத்தை மேற்கொண்டிடவும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ரப்பர் விவசாயிகள். பண வீக்கத்தை கொண்டு கணக்கிட்டோமானால், ரப்பர் விலைகள் 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு, 1980-81 விலைக்கும் கீழே தள்ளப்பட்டிருக்கின்றன. 2011ஆம் ஆண்டில் ஒரு கிலோ 239 ரூபாயாக இருந்த ரப்பர், 2016ஆம் ஆண்டில் ஒரு கிலோ 94 ரூபாயாக கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு என்பது 27,409 கோடி ரூபாயாகும். விவசாயிகள் இவ்வாறு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பினும் எம்ஆர்எப் (ஆசுகு) போன்ற நிறுவனங்கள் தங்கள் லாபத்தை 74 சதவீதம் அளவிற்கு அதிகரித்திருக்கின்றன. மேலும் பாஜக அரசாங்கம், கார்ப்பரேட்டுகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஊக வணிகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து தரக்கூடிய விதத்தில் ராட்சசத்தனமான நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைக் கொண்டு வந்தது. நில உரிமையாளர்கள் மற்றும் நிலத்தைச் சார்ந்திருப்பவர்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களின் சம்மதம் பெற வேண்டும் என்ற விதியை ஒழித்துக்கட்ட அரசு விரும்பியது. புதிதாக உருவாக்கப்படும் எக்ஸ்பிரஸ்வே என்னும் சாலைப் போக்குவரத்தின் இரு பக்கங்களிலும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்திடவும் அவசரச் சட்டம் கோரியது. அவ்வாறு அவற்றைக் கைப்பற்றி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க அரசு விரும்பியது.விவசாயிகள் ஒன்றுபட்டு நின்று, பெரும் திரளாக அணிதிரண்டு, போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டதன் காரணமாக அரசாங்கம் இது தொடர்பாகத் தான் பிறப்பித்த அவசரச் சட்டத்தை விலக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆனால், இப்போது இதுபோன்ற சட்டத்தை மாநிலங்கள் மூலமாகக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் முதல் தாக்குதல் தொழிலாளர் வர்க்கத்தின் மீதாகும். “தொழிலாளர் சீர்திருத்தங்கள்’’ என்ற பெயரில் அவர்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுத்தது. இதனைத் தொடர்ந்து விவசாயத் தொழிலாளர்களுக்கான மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திலும் கை வைத்தது. அதற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையைக் கடுமையாக வெட்டிக் குறைத்தது.

பண்ணை இன்சூரன்ஸ் திட்டம் யாருக்கு?
விவசாயத் தொழிலாளர்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் கிடையாது. பயிர்களின் பாதுகாப்பு மற்றும் இயற்கைப் பேரிடரால் வருமான இழப்பு ஏற்படின் இன்சூரன்ஸ் வழங்குவதற்காக ஓர் ஒருங்கிணைந்த பண்ணை இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவரப்படும் என்கிற உறுதிமொழியானது பன்னாட்டு நிறுவனங்கள் பயன் அடையும் விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வழக்கமாகப் பெறுவதைவிட இந்த ஆண்டு 8000 கோடி ரூபாய் கூடுதலாக லாபம் ஈட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானம் குறைந்த மற்றும் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பயனடையும் விதத்தில் உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை. சில்லறை வர்த்தகத்தில், வேளாண்பொருள்கள் பதப்படுத்தலில், தோட்டத் துறையில் அந்நிய நேரடி முதலீடு மிகப்பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்குமுன்பு இதே பாஜக இத்துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வந்தால் பல லட்சக்கணக்கானபேர் வேலை இழப்பார்கள் என்று இவற்றிற்கு எதிராகப் பேசி வந்தது. அனைத்துப் பகுதி விவசாயிகளும் வருமானத்தை இழந்துள்ளதால், தங்கள் சொத்துக்களை விற்றுவிட ஒருபக்கத்தில் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிற அதே சமயத்தில் மீண்டும் வேளாண்துறையில் முதலீடு செய்திட இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் விவசாயிகளின் ஒற்றுமையை பலப்படுத்தி, பாஜக அரசாங்கத்தின் விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

(தமிழில்: ச. வீரமணி)

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply