கிரானைட் மலையை பேச்சில் மறைக்க முடியாது !

21 ஆண்டு கிரானைட் கொள்ளைக்கு திமுக-அதிமுக இருவருமே பொறுப்பு
(29.04.2016 அன்று மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளார் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை) 
மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, கிரானைட் முறைகேடு பற்றிய விசாரணையில் அதிமுகதான் நடவடிக்கை எடுத்ததென்று கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிரானைட் முறைகேடு குறித்து முதலில் உத்தரவிட்டது திமுகதான் என்று புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விசாரணையை வெளிக்கொண்டுவந்தது யார் ? உண்மையை வெளியே கொண்டுவந்தது யார்? என்பதில் இரு கட்சிகளுக்கும் போட்டியில்லை. உண்மையில் முறைகேட்டின் மூலம் பலனடைந்தது யார்? மூடி மறைத்தது யார் என்பதில்தான் இருகட்சிகளுக்கும் போட்டி.
கடந்த 25 ஆண்டுகளில் அதிமுக மூன்று முறையும், திமுக இரண்டு முறையும் ஆட்சியில் இருந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கிரானைட் மலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மொட்டையடிக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததில் முறைகேடு செய்தவர்கள் மூலம் ஆதாயம் பெற்றதில் இரு கட்சிகளுக்கும் சம பங்கு உண்டு.
முதலில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதில் உள்ள முரண்பாடுகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையில் 176 கிரானைட் குவாரிகளுக்கு குத்தகை அனுமதி வழங்கிஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு முதல் 2002 வரையில் 36 குத்தகை அனுமதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. 2003 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 139 குத்தகை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாநிலத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற 2001 – 2006 ஆண்டுகளில் 77 குத்தகை அனுமதிகளும், திமுக ஆட்சி நடைபெற்ற 2006-2011 ஆண்டுகளில் 68 குத்தகை அனுமதிகளும் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கிரானைட் முறைகேட்டில் இரண்டு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. மத்திய அமைச்சரவையில் திமுகவும், மாநில ஆட்சியில் அதிமுகவும் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக செயல்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட கனிமத் துறை துணை இயக்குனராக சி.ஏ.சண்முகவேல் (29.08.2003 – 01.08.2005) இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இக்காலத்தில் கீழவளவு கிராமத்தில் செந்தில்குமார், முருகேசன், பிபின் முல்ஜித் தாக்கர், பல்லவா கிரானைட்ஸ், எடயப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோரமண்டல் முகமை, கீழையூரின் கோட்டை வீரன், ஆர்.எம்.ராமநாதன், எரவபட்டியில் பி.எல்.படிக்காசு, நவீன் பட்டி கேலக்சி என்டர்பிரைசஸ் ஆகியவை குத்தகைக் காலத்திற்கு பிறகும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. திருவாதவூர் கிராமத்தின் பண்டைச் சின்னங்களுக்கு அருகே குவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நடைபெற்றது அதிமுக ஆட்சிக் காலத்தில் தான்.

திமுக தலைவர் குடும்பத்தினரே முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

திமுக தலைவரின் குடும்பத்தினர் குடும்பத்தினர் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது உண்மை. மத்திய அமைச்சராக மு.க.அழகிரி செயல்பட்ட காலத்தில், அவரது மகன் துரைதயாநிதி ஒலிம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரராக செயல்பட்டுள்ளார். அதே சமயம் பல அரசியல்வாதிகள் பினாமி வழியாக குவாரிகளை இயக்கிவந்ததாக கிரானைட் கொள்ளை குறித்த ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதைப் போலவே தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளைகளும் இக்காலத்தில் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற முறைகேடுகளில் அதிமுகவுக்கு நெருக்கமானவர்களுக்கும் தொடர்புள்ளது.

2009 ஆம் ஆண்டே பத்திரிக்கைகளில் கிரானைட் கொள்ளைகள் குறித்த செய்திகள் வெளியாகின, முதலமைச்சரிடமே இதுபற்றிய புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனாலும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கிரானைட் கொள்ளைக்கு அவர்கள் காரணமாக இருந்ததால்தான், புகார் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். 2010 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் தினபூமி பத்திரிக்கை கிரானைட் கொள்ளை பற்றி விரிவான செய்தி வெளியிட்டனர், ஊழலை, கொள்ளையை வெட்டவெளிச்சமாக்கிய தினபூமி ஆசிரியர், மகன், நண்பர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தார்.

அதிமுக ஆட்சிக்காலத்திலும் அரசே முன்வந்து இந்த வழக்கை எடுக்கவில்லை. மாறாக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உ.சகாயம் ஐ.ஏ.எஸ் ரகசியமாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் ரூ.16 ஆயிரம் கோடி வரையிலும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தற்போது, அந்த முறைகேடு மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. அறிக்கை அளித்த இரண்டு நாட்களில் உ.சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார்.
திமுக ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் கிரானைட் கொள்ளை குறித்து கோப்பு ஒன்று அனுப்பியுள்ளனர் அதில் எந்த உத்தரவும் வழங்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.  திமுக ஆட்சியில் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. நான் முதலமைச்சர் ஆன பிறகு – மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பப்பட்ட பின் மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சகாயம், அன்சுல் மிஸ்ரா போன்ற அதிகாரிகள் எப்படி அரசு நிர்வாகத்தினுள்ளேயே ஒத்துழைப்பில்லாமல் அழைக்கடிக்கப்பட்டார்கள் என்பதும். பலமுறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டது நாடறியும். நேர்மையாக நடந்துகொண்டதற்காக சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கு பதவி உயர்வுக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டதும் நடந்துள்ளது. தாதுமணல் கொள்ளையை விசாரித்த அதிகாரியிடமிருந்து கோப்புகளை பெற்றுக்கொள்ளவே அரசு தாமதம் செய்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திக் கேட்டபோதும் அந்த அறிக்கை சட்டமன்றத்தின் பார்வைக்கு வரவில்லை. இப்படி, முறைகேடுகளை மூடி மறைப்பதாகவே அரசின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. உ.சகாயத்தை விசாரணை அதிகாரியாக நியமிக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது அதையும் மீறித்தான் அவர் விசாரணை அதிகாரியாக நீதிமன்றத்தால்தான் நியமிக்கப்பட்டார்.

ஒலிம்பஸ் கிரானைட் உள்ளிட்டு 3 நிறுவனங்கள் …

உண்மையில் 15 க்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் தொடர்புபெற்றுள்ளன.  மூன்று நிறுவனங்களை மட்டும் முதல்வர் குறிப்பிட்டிருப்பது ஏன்?
16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1 லட்சத்து ஆராயிரம் கோடி ரூபாய்கள் பல்வேறு வழிகளில் இழப்பு ஏற்பட்டுள்ளன. அதுவும் அரசு ஒத்துழைப்பு கிடைக்காததால், உத்தேசமாக மதிப்பிட்டிருப்பதுதான்.

அதிமுக ஆட்சியில் கிரானைட் முறைகேடுகள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு – குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக கிரானைட் முறைகேட்டை மூடி மறைப்பதற்கே அதிமுக அரசு வழக்குகளை பதிவு செய்தது. உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கவேண்டுமென நினைத்திருந்தால் கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்தை ஏன் மாற்ற வேண்டும். உ.சகாயத்தை சட்ட ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தபோது அதிமுக அரசு ஏன் எதிர்த்தது?

சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர் விசாரணை செய்து நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதன் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 4 மாதங்களுக்கு மேல் அரசு தனது கருத்தை தெரிவிக்காமல் இழுத்தடிப்புச் செய்துவருகிறது. அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்றால் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வராமல் தாமதப்படுத்துவதானே அன்றி வேறெதுவும் இல்லை.

2012 ஆம் ஆண்டே கிரானைட் வெட்டியெடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.

கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டது நிறுத்தப்பட்டது அரசு முயற்சியால் அல்ல. நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கே காரணம்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த முதலில் உத்தரவிட்டது திமுகதான் என்று கூறியுள்ளார். இதுவும் கூட முழு உண்மையல்ல. மார்க்சிஸ்ட் கட்சி இது குறித்து தொடர்ச்சியாக கேள்வியெழுப்பிவந்துள்ளது. அப்போதெல்லாம் திமுக தலைமை எதுவும் கூறவில்லை. அப்படி விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தால் அந்த விசாரணையின் முடிவு என்ன? அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசுக்கு இழப்பு என்று மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற விபரத்தை வெளியிட மு.க.ஸ்டாலின் தயாரா?
மு.க.ஸ்டாலின் பேசும்போது, சகாயம் விசாரிக்கத் தேவையில்லை என்று கூறியது அதிமுக அரசு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மைதான். சகாயம் அறிக்கையை வெளியிட வேண்டுமென திமுக கோராதது ஏன்? 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே? இதற்கு திமுகவின் பதில் என்ன? இந்த விசயத்தில் மெளனம் சாதித்த திமுக தற்போது வேறு வழியில்லாமல் சமாளிக்க முயற்சிக்கிறது.
தமிழகத்தில் நடைபெற்றுள்ள மிகப் பிரம்மாண்டமான கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை மற்றும் ஆற்று மணல் கொள்ளை ஆகியவற்றின் பின்னணியில் திமுக – அதிமுக இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும் உள்ளனர் என்பது வெளிப்படை திமுக – அதிமுக அல்லாத ஆட்சி அமைந்தால்தான் இந்த முறைகேட்டின் முழுப் பரிமாணமும் வெளிவரும். தவறிழைத்தவர்களை சட்டப்படி தண்டிக்கவும் முடியும்.
ஜி.ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...