காவல் துறையின் மோப்ப நாய் “டெவில்” வரவழைக்கப்பட்டதுடன், கைரேகை, தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில் மரணமடைந்த முத்துவின் படம், பிரதமர் மோடி படத்துக்குச் செருப்புமாலை அணிவிக்கப்பட்ட படமும் சேர்த்து “பாஜக பிரமுகர் கொலை”, “மர்ம மரணம்” என உள்ளூர் நாளிதழ்களிலும், தொலைகாட்சி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதனால் திருப்பூரில் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டது. உடனடியாக சில பகுதிகளில் கடையடைப்பும் நடைபெற்றது.
பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராசன் நேரில் திருப்பூருக்கு வந்து முத்துவின் வீட்டுக்கும் சென்று வந்தார். அவர் அளித்த பேட்டியில், “சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது, இது திட்டமிட்ட கொலை என்றும், காவல் துறையினர் தற்கொலையாக திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என தெரிவித்தார். இதுதவிர பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, சத்தமில்லாமல் திருப்பூர் வந்து சென்றதாகவும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருவதாக இருந்து தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான அவரது மரணம் குறித்த விசாரணையில் உண்மைகள் புலப்படத் தொடங்கின. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களும், இது தற்கொலை என அறிக்கையளித்தார். காவல்துறை தற்கொலைக்கான காரணத்தையும் கண்டறிந்ததாக தெரிவித்தது. மாரிமுத்துவின் தனது சொந்த வாழ்க்கை சிக்கல்களால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
பொதுவாக தன் கட்சியின் உறுப்பினர், அதிலும் மாவட்ட துணைத்தலைவர் இறந்ததும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுவதுதான் இயற்கை. ஆனால், அந்தத் தற்கொலையைப் பார்த்தபிறகு, மிகுந்த சாவகாசமாக கருப்புக் கொடி, இந்து முன்னணிக் கொடி, பிரதமர் படம், செருப்பு மாலை என இத்தனையும் அணிவித்துவிட்டு மற்றவர்களுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு தற்கொலையை கொலை என்று ஜோடித்து, அரசியல் எதிரிகளைப் பலிவாங்குவதற்கு – திட்டமிட்ட கலவரத்தை உருவாக்குவதுதான் இதன் நோக்கம். ஒருவேளை இது தற்கொலை என்று உடனடியாக வெளிவந்திருக்காவிட்டால், என்ன நடந்திருக்கும்? வழக்கம் போலவே அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பத்தை வெட்டுவார்கள், சிறுபான்மையினரின் சொத்துக்களையும் வியாபார நிறுவனங்களையும் சேதப்படுத்துவார்கள், கொள்ளையடிப்பார்கள், அப்பாவி இந்து இளைஞர்களை, கொள்ளையடிக்கும் ஆசை காட்டி கலவரத்திலும், கொள்ளையிலும் ஈடுபடுத்தி – ருசிகாட்டுவார்கள். சிறுபான்மையினர் தாக்கப்படுவார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி, தீராப் பகைமை நிலைநிறுத்தப்பட்டுவிடும்.
ஒவ்வொரு பிரச்சனை நிகழும்போதும் மாரிமுத்துவைக் கொன்றவர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டு சிறுபான்மையினர் தாக்குதலுக்கு இலக்காக்கப்படுவார்கள்.
இத்தனை நடந்தபிறகும், தமிழக காவல்துறை ஒரு மிகப்பெரிய கலவரத்துக்கான சூழலை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியவர்களை கைது செய்ய வேண்டாமா? வெளிப்படுத்த வேண்டாமா? அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தவேண்டாமா? என்பது ஒருபக்கம் இருக்க. ஆர்.எஸ்.எஸ் வழக்கத்துக்கு மாறாக இந்தப் பிரச்சனையில் தன்னுடைய நோக்கம் நிறைவேறவில்லை என்பதைத் தாண்டி எதுவும் பேசாமல் மெளனம் காக்கிறது. ஒவ்வொரு கொலையும் அவர்களுக்கு லாபம் கொழிக்கும் நிகழ்வுதான். ஒவ்வொரு மரணமும் அவர்களைப் பொருத்தமட்டில் சிறுபான்மையினரைக் குறிவைப்பதற்கான கருவிதான். ஆனால் ஒவ்வொருமுறை அம்பலப்படும்போதும் அதைப் பற்றி எந்த குற்ற உணர்வும் இன்றி இதே போன்ற அடுத்த ஒரு சதிக்கு அவர்கள் தயாராகிறார்கள். இத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சங்க பரிவாரங்களும்.