மார்ச் 14, 2017 – விவசாயிகள் சாலை, ரயில் மறியல் : மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 10.03.2017 சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு.

தீர்மானம்:1

மார்ச் 14, 2017 – தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை,

ரயில் மறியல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. வறட்சி நிவாரணப் பணிகளுக்கென்று தமிழக அரசு கோரிய 39,565 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. மத்திய பி.ஜே.பி., அரசின் பாரபட்சமான இந்தப் போக்கை கண்டித்தும், உடனடியாக தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்திற்கான தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து நிலங்களுக்கும் நிவாரணம் வழங்குவதுடன், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், 30 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் – 14ந் தேதி மாநில முழுவதும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானித்திருக்கிறது.

வறட்சியால் வாடும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக நடைபெறும் இந்த சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

 

தீர்மானம் – 2

ரேசன் கடைகளில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில்,

20 கிலோ அரிசி தொடர்ந்து வழங்கிடுக

ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் 20 கிலோ அரிசி பாதியாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக கோதுமை வழங்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் இல்லை என்பதால் சில கடைகள் திறப்பதில்லை. வெளிமார்க்கெட்டில் பொருட்கள் விலைகள் குறைந்துவிட்டன என்று சொல்லி ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த குறைந்த விலைப்பொருட்கள் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வறட்சியினால் கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லை, வருமானமும் இல்லை. நகர்ப்புற உடலுழைப்புத் தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களின் நிலையும் அதுவே. அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில் நடுத்தர பகுதி மக்களின் வாழ்க்கைத் தரமும் குறைந்துள்ளது. தற்போது அஇஅதிமுக அரசு வாட்வரியை உயர்த்தி பெட்ரோல் – டீசல் விலைகளை பெருமளவு உயர்த்தியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் கடுமையாக உயரும்.  இந்நிலையில் ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய பாஜக அரசு உணவுப் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவது என்ற பெயரால் மானிய விலையில் மத்திய தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதை படிப்படியாக சுருக்கி  ரேசன் முறையை சீர்குலைக்க முயன்று வருகிறது. ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட கூடாது என்று நிர்ப்பந்தித்து வருகிறது. அரசு மானியங்கள் மற்றும் நலத்திட்ட பயன்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய மோடி அரசு தானடித்த மூப்பாக ஏழை, எளிய மக்கள் ரேசன் பொருட்கள் பெறும்உரிமை மீது இந்த தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை செயல்படுத்தும் வகையிலேயே மாநில அரசின் செயல்பாடுகளும் உள்ளன.

எனவே ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட்டு,  துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்டு அனைத்துப் பொருட்களும் ரேசன் கடைகளில் தொடர்ந்து வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும், அரிசிக்கு பதிலாக கோதுமை என்பதை கைவிட்டு விலையில்லா அரிசி 20 கிலோ தொடர்ந்து வழங்க வேண்டுமென்றும், ஆதார் அட்டை வலியுறுத்தக் கூடாது என்றும், ரேசன் அட்டை உள்ள அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பாஜக அரசு மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை வெட்டிச் சுருக்காமல், மானிய விலையில் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...