மோடியின் ஈராண்டு: வேலையின்மை வளர்கிறது

-சவெரா

மோடி சர்க்காரின் மாபெரும் தோல்வி என்பது வேலைவாய்ப்பு தொடர்பானதேயாகும். (நம்பிக்கைத் துரோகம் என்ற வார்த்தை கூட மிகவும் பொறுத்தமாகஇருக்கும்) ஈராண்டுகளுக்கு முன்மோடி தன் தேர்தல் பிரச்சாரத்தின்போது,  திரும்பத்  திரும்ப  அளித்த  வாக்குறுதி …  “வேலையில்லாக் காலம் முடிவுக்குவரப்போகிறது, நல்ல காலம் வந்து கொண்டிருக்கிறது,’’ என்பதேயாகும்.

கடந்த சில ஆண்டுகளாகவே,`வேலையின்மை வளர்ச்சி’ யால்  உழன்றுகொண்டிருந்த  ஒரு நாட்டில், அதிலும்  இளைஞர்கள்  தங்கள் தகுதிக்குக்குறைவான வேலை அல்லது அற்ப ஊதியத்துடனான வேலையால் கடுமையாகப்பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில்,  மோடியின்  வார்த்தைகள்  பலராலும்  வரவேற்கப்பட்டன. ஆனால் ஈராண்டுகளுக்குப்  பின்னர் கண்ட  கனவுகள் தகந்தன,   மக்களை பேச்சுவன்மையால் ஏமாற்றிய தலைவராகத்தான் மோடி பார்க்கப்படுகிறார்.

இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் வலுவான தொழிலாளர்பட்டாளத்தில்  இருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் சேர்ந்து  கொண்டிருக்கிறார்கள்.  

இவ்வாறு வேலை தேடுவோர்அனைவரும் இளைஞர்கள், நன்கு படித்தவர்கள். அவர்களில் வயல்களிலும், சாலைகள் அமைப்பதிலும் அற்பஊதியத்திற்கு வேலை செய்து கொண்டிருப்பதில் திருப்தி அடையவில்லை. ஆயினும், நாட்டில் தொழில்மயத்திற்காகஉருப்படியான திட்டம் எதுவும் இல்லாத நிலையில், அவ்வாறு திட்டங்கள் தீட்டி வேலையில்லா இளைஞர்களைஈர்த்துக் கொள்வதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாத  நிலையில்,  மோடி  அரசாங்கத்தின்  வாய்ச்  சவடால்  அனைத்தும் எவ்விதப் பயனையும்  அளிக்காது காற்றில் கரைந்தன.

வேலைவாய்ப்பு தொடர்பாக என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? வேலையில்லா இளைஞர்களுக்குவேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய விதத்தில் நாட்டில் எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லாதபோதிலும்கூட,வேலையில்லாமை அல்லது இருக்கும் வேலையையும் பறிக்கக்கூடிய நிலைமைகள் வேகமாக உருவாகிக்கொண்டிருப்பதுதான் மிகுந்த கவலையை அளித்துக் கொண்டிருக்கின்றன.  இவை என்ன என்று சற்று சுருக்கமாகஆராய்வோம்.

மூழ்கிக்கொண்டிருக்கக்கூடிய பொருளாதாரத்தை அல்லது தேக்க நிலையில் இருக்கக்கூடிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி? அரசாங்கத்தின் தரவின்படி, 2015 பிப்ரவரிக்கும் 2016 பிப்ரவரிக்கும் இடையில் தொழில் உற்பத்தி அட்டவணை (IIP-Index of Industrial Production) வெறும் 2 சதவீதம் அளவிற்கே வளர்ந்திருக்கிறது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் மிகவும் மோசமானதாகும். சென்ற (2014 பிப்ரவரிக்கும் 2015 பிப்ரவரிக்கும் இடையிலான) ஆண்டில் இது 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்திருந்தது. உற்பத்தித் தொழில்பிரிவில் (manufacturing sector) சென்ற ஆண்டு 5.1 சதவீதமாக வளர்ச்சி இருந்த அதே சமயத்தில் இந்த ஆண்டு அது வெறும் 0.7 சதவீதமேயாகும். இந்தத் தரவுகள் அனைத்தும் 2016 ஏப்ரல் 12 அன்று மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (Ministry of Statistics and Program Implementation) வெளியிடப்பட்டவைகளாகும்.

அதே சமயத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP-Gross Domestic Product)தொடர்பாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தரவு (இதுகுறித்து மிகவும் விரிவான அளவில் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன) மொத்த  உள்நாட்டு உற்பத்திக்கு அரசின் செலவினம் என்பது மிகவும் குறைந்துவிட்டது என்றும், முதலீடு குறைந்துவிட்டது என்றும், ஏற்றுமதி குறைந்துவிட்டது என்றும் இறக்குமதி குறைந்துவிட்டது என்றும் கூறுகிறது. இதன் பொருள் என்ன?  மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் அரசின் செலவினமும் அதன்மூலம் மக்களுக்குக் கிடைத்து வந்த வாங்கும் சக்தியும் வீழ்ச்சியடைந்துவிட்டது  என்பது பொருளாகும்.  அதாவது மோடி விரும்பிய இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற முழக்கத்துடன் சிறிய முதலீடு மற்றும் உலக அளவிலான வர்த்தகம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று பொருள்.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உருப்படியான அடிப்படை எதுவும் இல்லை என்பதாகும்.  நாட்டு மக்களில் மூன்றில் இரு பங்கு மக்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வந்த வேளாண்மையும் கூட 1.1 சதவீத அளவிற்கே வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அரசாங்கம் முக்கியமான  எட்டு தொழில் பிரிவுகளுக்கான உற்பத்தித் தரவுகளை வெளியிட்டிருக்கிறது. கச்சாஎண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு உற்பத்திப்பொருட்கள், உருக்கு, நிலக்கரி, சிமென்ட், ரசாயன உரம் மற்றும்மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில் பிரிவுகளே அவை. இவை அனைத்தும் பெரிய அளவிலானவேலையளிப்பவர்களையும், நாட்டின் மொத்த தொழில் உற்பத்தியில் 38 சதவீதம் அளவிற்கு பங்களிப்பினைச்செலுத்தக் கூடியவைகளுமாகும்.

2016 மார்ச் முடிய கிடைத்துள்ள தரவுகளின்படி, கச்சா எண்ணெய், இயற்கைஎரிவாயு மற்றும் உருக்கு உற்பத்தி கடந்த ஓராண்டில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.  மற்றவை 4-6 சதவீதம்  அளவிற்கு  வளர்ந்திருக்கின்றன.  ரசாயன உரம் மட்டும் 11.3 சதவீத அளவிற்கு  வளர்ந்திருக்கிறது.  இத்தொழில் பிரிவுகளில் உற்பத்தி  வீழ்ச்சியடைந்து  கொண்டிருந்தாலும் அல்லது  சற்றே வளர்ந்திருந்தாலும்  மக்களுக்கு  வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வாய்ப்பு என்பது பெரிய  அளவிற்கு இல்லை.
அடுத்ததாக, கிராமப்புறங்களில்வேலை வாய்ப்பு குறித்து ஆராய்வோம். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புறவேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் கிராமப்புறங்களில் வேலையின்மைக்கும், குறைந்த வருமானம் பெற்றுவந்தவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் அளித்தது. நாடு முழுதும் சராசரியாக ஆண்டிற்கு 45 நாட்களுக்கு, சராசரியாகநாளொன்றுக்கு 140 ரூபாய் ஊதியத்தில் வேலை அளித்தது.  இதை ஒன்றும் முழுமையான அளவில் வேலை என்றேகூறிட முடியாது. எனினும், 2015-16ஆம் ஆண்டில் நாடு முழுதும் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்வதற்காக 8கோடியே 40 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டில்இத்திட்டம் தொடங்கியபின்னர் இதுவே அதிகபட்ச அளவாகும்.  நாடு முழுதும் எந்த வேலை கிடைத்தாலும்செய்வதற்குத் தயாராயிருக்கிற வேலையில்லாப் பட்டாளத்தின் குறியீடே இதுவாகும்.  இதில் 1 கோடியே 20 லட்சம்பேர்களுடைய வேலைக்கான விண்ணப்பங்கள் (சுமார் 14 சதவீதம்) திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன, அவர்களுக்குவேலை எதுவும் தரப்படவில்லை. ஒரு நாள்கூட அவர்களுக்கு வேலை வழங்கப்பட வில்லை.
நாட்டில் அதிகமான அளவில் தொழிலாளர்கள் வேலைபார்த்திடும் தொழிற்சாலைகள் தொடர்பான ஆய்வறிக்கையை லேபர் பீரோ நடத்தி வெளியிட்டிருக்கிறது.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எட்டு தொழில்பிரிவுகளின் கீழ் உள்ள தொழிற்சாலைகள் குறித்தும் ஆய்வு செய்து, எத்தனை வேலைகள் கூடுதலாகி இருக்கின்றன மற்றும் எத்தனை வேலைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன என்று கணக்கெடுத்திடும்.டெக்°டைல், தோல், உலோகங்கள், ஆட்டோமோபைல்°,  ரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆபரணங்கள்  (gems & jewelry), போக்குவரத்து, தகவல்தொழில்நுட்பம்/பிபிஓ (ITES/BPO) மற்றும் கைத்தறி/விசைத்தறி ஆகிய எட்டு தொழில்பிரிவுகளே இவையாகும்.  2016 மார்ச் மாதத்தில் கடைசி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 2015 ஜூலையிலிருந்து செப்டம்பர் வரைக்குமான காலத்திற்கான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்றபின் ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து, கடந்த 15 மாதங்களாக – அதாவது 2014 ஜூலைக்கும் 2015 அக்டோபருக்கும்   வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கைகளை ஆராயுங்கால்,   இந்தக் காலத்தில் வெறும் 4.3 லட்சம் வேலைகள் கூடுதலாகி இருக்கின்றன. 2009ஆம் ஆண்டிற்குப் பிந்தைய ஆண்டுகளில் இது மிகவும் குறைவான ஒன்றாகும். கூடுதலான வேலைவாய்ப்புகளில் கணிசமான அளவு, தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) துறையில் ஏற்பட்டிருக்கிறது. கைத்தறி/விசைத்தறி, போக்குவரத்து, கற்கள் மற்றும் தங்க நகை ஆபரணங்கள் மற்றும் தோல் ஆகிய துறைகளில் வேலைகள் இழப்புக்கு ஆளாகி இருக்கின்றன.
மேற்படி ஆய்வு அறிக்கைகளிலிருந்து ஒன்று மிகவும் தெள்ளத்தெளிவாகிறது. பிரதமர் மோடி உலகம் முழுதும் சுற்றிவந்து, “இந்தியாவில் உற்பத்தி செய்க’’ (‘Make in India’) என்று தொழில் அதிபர்களையும், முதலீட்டாளர்களையும் கெஞ்சிய போதிலும், இந்தியாவில் குறைந்தபட்சக் கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் மற்றும் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது என்று இந்தியாவை விற்றபோதிலும், பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. இந்தியத் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மிகவும் நலிவடைந்திருப்பது வெள்ளிடைமலை. 2015 செப்டம்பரில் வங்கிகள் 3.4 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்கள் (உற்பத்தி அல்லாத சொத்துக்கள் அதாவது NPAs-non-productive assets ) என்று அறிவித்திருக்கிறது. இவற்றில் பெரும்பகுதி தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவைகளேயாகும். தொழில் பிரிவுகளை அமைப்பதற்காக அல்லது கட்டிட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அளிக்கப்பட்டவைகளாகும். ஆயினும் இது எதுவுமே நடைபெறவில்லை. இவ்வளவு பெரிய தொகை, (இது முழுக்க முழுக்க மக்களுக்குச் சொந்தமானவை) புகையாய் போய்க் கொண்டிருக்கிறது. அதேபோன்றே புதிய முதலீடுகளின் வாயிலாக வேலைவாய்ப்புகளின் நிலைமைகளும் இருக்கின்றன. இதுதான் மக்களுக்கு மோடி சர்க்காரின் நன்கொடையாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply