மாணவி வளர்மதி, கைப்பிரதி விநியோகித்த காரணத்தைக் காட்டி கைதுசெய்யப்பட்டிருப்பதும், குண்டர் சட்டம் போட்டிருப்பதும் – ஜனநாயக விரோதமான செயல்

நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கைப்பிரதிகள் விநியோகித்ததற்காக மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். தற்போது அவரை குண்டர் சட்டத்தில் கோவை சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை.

தமிழகத்தின் வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும், நெடுவாசல் பாதுகாக்கப்படவேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாகும்.

நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருவதும், கேடுவிளைவிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை எதிர்த்து வருவதையும் நாம் அறிவோம்.

இந்த நிலையில் மாணவி வளர்மதி, கைப்பிரதி விநியோகித்த காரணத்தைக் காட்டி கைதுசெய்யப்பட்டிருப்பதும், குண்டர் சட்டம் போட்டிருப்பதும் – ஜனநாயக விரோதமான செயல்.

மதக் கலவரங்களை விளைவிக்க தவறான பொய்ச் செய்திகளை பரப்புவதையும், தற்கொலையை கொலையாகச் சித்தரிக்கும் வேலையையும் செய்து – கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பாஜகவினர் சுதந்திரமாக நடமாடிவருகின்றனர்.

அதே சமயம் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம், நெடுவாசல் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் என தொடர்ச்சியாக – தமிழக அரசும் காவல்துறையும் போராட்டக் குரல்களை ஒடுக்குவதற்கும், முடக்குவதற்குமே முயல்கிறது.

தொடர்ச்சியாக குண்டர் சட்டத்தை, அடக்குமுறைக்காக பயன்படுத்திவருவது கண்டிக்கத்தக்கதாகும்.

மாணவி வளர்மதியை விடுவிப்பதுடன், போராட்டங்களை ஒடுக்கும் போக்கினை தமிழக அரசு கைவிடவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– ஜி.ராமகிருஷ்ணன்

Check Also

மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்

மாண்புமிக்க நீதிபதிகளே! மூத்த வழக்கறிஞர்கள் என்கிற முறையிலும், இந்தியாவின் குடிமக்கள் என்கிற முறையிலும், மிகுந்த கவலையோடும், மன வருத்ததோடும் இதை ...