மேற்குவங்க இடதுசாரி ஊழியர்கள் மீது போலீஸ் தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

 

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில், இடதுசாரி விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக அமைதியாக பேரணி நடத்தியவர்கள் மீது மேற்குவங்க காவல்துறை மிகக் கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதலில் 900க்கும் மேற்பட்ட இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் தலைவர்களும், ஊழியர்களும் காயமடைந்துள்ளனர், 100 பேர் கடுமையான காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் காந்தி பிஸ்வாஸ், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மக்களவை உறுப்பினருமான தோழர் முகமது சலீம், அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் தோழர் ஹன்னன் முல்லா உள்ளிடோருக்கும் மிகக்கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நல கொள்கைகளை அமல்படுத்த வேண்டும், கிராமப்புற நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அமைதியாக பேரணி நடத்தியவர்கள் மீது கொடூரமானத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட மம்தா பானர்ஜி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

எந்தவொரு அரசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எழுப்புவோரை அடக்குமுறையின் மூலம் தடுத்துவிட முடியாது. இடதுசாரி அமைப்புகள் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேற்குவங்க காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக தமிழகத்தில்  உள்ள ஜனநாயக இயக்கங்கள்  குரல் எழுப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலைபாடு

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 26.4.2021 அன்று காலை 9.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை ...