மோடியின் ஈராண்டு: மகளிர், குழந்தைகள் நலன் …

-அதிரா

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்களின் நிலையை சற்றே நினைத்துப் பாருங்கள். தங்கள் கிராமங்களிலிருந்து பல மைல்கள் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவரும் காட்சியைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களில் உள்ள சேரிவாழ் பெண்கள் தங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் லாரிகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் நின்று தண்ணீர் பிடிப்பதையும் பார்க்க முடியும். அதேபோன்று எண்ணற்ற பெண்கள் சுள்ளிகள் சேகரிப்பதையும், வயல்களில் வேலை செய்வதையும், கட்டுமானப் பணிகளில் வேலை செய்வதையும், நகரங்களில் உள்ள நடுத்தரக் குடும்பங்களில் வீட்டு வேலைகள் செய்வதையும் பார்க்க முடியும். இவை அனைத்தையும் செய்துவிட்டு வந்து தங்கள் வீடுகளிலும் சமையல் செய்வதும் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பேணிப் பாதுகாப்பதும் பெண்களின் வேலையாக இருப்பதையும் பார்க்க முடியும். இவ்வாறு உற்சாகமற்ற எண்ணற்ற பணிகளை நாள்தோறும் திரும்பத் திரும்பச் செய்வதென்பதே இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையாக எவ்வித மாற்றங்களும் இன்றி பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

பெண்களின் இத்தகைய அவலவாழ்க்கை தொடர்பாக மோடி சர்க்கார் எந்தவிதமான அணுகுமுறையைக் கையாள்கிறது? “நல்ல காலம்’’ பிறந்துள்ளது என்று படாடோபமாக அறிவித்த மோடி அரசாங்கத்தின் கடந்த ஈராண்டு கால ஆட்சி என்பது உண்மையில் பெண்களைப் பொறுத்தவரை “கெட்ட காலமாகவே’’ இருந்துள்ளது. பெண்களின் வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் இதற்குமுன் செயல்படுத்தி வந்த மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ஐசிடிஎ°) போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அரசின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன அல்லது திட்டங்களே அமல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

அங்கன்வாடி, “ஆஷா’’ அல்லது பள்ளிக்கூடங்களில் மதிய உணவு சமையலர்கள் போன்ற திட்டங்களில் நாட்டிலுள்ள லட்சக்கணக்கான பெண்கள் அற்ப ஊதியம் பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையைக் கழித்து வந்தனர். இவர்களது பணி என்பது கிராமப்புறங்களில் வாழும் பல லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அளித்து பாதுகாத்தது. இவர்களது பணி மட்டும் இல்லாதிருந்திருக்குமானால் இக்குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கும். இவை அனைத்தையும் இவர்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மாதம் 3000 ரூபாய் பெற்றுக் கொண்டும், சமையல் உதவியாளர்கள் மாதம் 1500 ரூபாய் பெற்றுக் கொண்டும் செயல்படுத்தி வந்தார்கள். இத்தொகை என்பது நாட்டில் அரசாங்கத்தால் இதுபோன்று பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத் தொகையில் பாதிக்கும் கீழானதாகும்.
எனவே, இந்தத் திட்டப்பணிகளுக்கான ஒதுக்கீட்டில் ஏதேனும் வெட்டு என்பதன் பொருள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் மீதான நேரடித் தாக்குதலாகும். எந்தவொரு குடும்பமாக இருந்தாலும், அக்குடும்பத்தில் ஏதேனும் பொருளாதார நெருக்கடி என்று வந்தால், அதனால் உடனடியாகப் பாதிக்கப்படுவது பெண்குழந்தைகள் மற்றும் பெண்களேயாகும். அவர்களின் உணவு அல்லது சுகாதாரப் பாதுகாப்பு அல்லது கல்விக்கான செலவினம் வெட்டப்படும். இத்தகைய ஆணாதிக்க மனோபாவம் அங்கிங்கெனாதபடி எங்கும் காணப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன்கீழ் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். கடந்த ஈராண்டுகளாகத் தொடர்ந்து பருவமழை பொய்த்துப்போனதன் காரணமாக நாட்டிலுள்ள சுமார் 10 மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடிக்கு ஆளாகியுள்ளன. எனினும் இம்மாநிலங்களில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களில் வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் 100 நாட்களுக்கு மேல் வேலை பெற்றுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மோடி அரசாங்கம் அமைந்தபின், இத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மிகவும் சுருக்கப்பட்டு, இத்திட்டத்தைப் பட்டினிபோட்டுள்ளதால், இத்திட்டத்தின்கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில் மிகக் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மதிப்பீட்டின்படி, 2014-15க்கான ஆண்டின் முடிவில், ஒன்பது மாநிலங்களில் இத்திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 1203 கோடி ரூபாயாகும். 2015-15ஆம் ஆண்டுக்கான நிதியை இம்மாநிலங்கள் பெற்றபின்னர்தான் இந்த நிலுவைத் தொகை சரி செய்யப்பட்டது.

குறிப்பாக இந்நிலுவைத் தொகை வழங்கப்படாத பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பெண்களேயாவர்.
அதேபோன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ஐசிடிஎ°) இதற்குமுன் ஒவ்வோராண்டும் 15,300 கோடி ரூபாய் பெற்றுவந்தது. அது இப்போது 14,000 கோடி ரூபாயாக சுருக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இத்திட்டத்தின்கீழ் 1,500 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பாதுகாப்பில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இதுவரை கர்ப்பிணிப் பெண்களுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் பாத்தியதைப் பெற்றிருந்தனர். இவர்களது பட்ஜெட்டில் இது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

விவசாய நெருக்கடி மற்றும் கிராமப்புற வறுமை காரணமாக கிராம மக்கள் மிகப்பெரிய அளவில் நகரங்களை நோக்கிப் புலம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது வயது மிகுந்த மூதாட்டிகளும், ஆதரவற்ற அநாதைப் பெண்களுமேயாகும். இத்தகைய சூழ்நிலையில் 2007-2008ஆம் ஆண்டில் 200 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்ட முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்திட எந்த முயற்சியையும் மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
அடுத்து சுகாதாரத்திற்கு வருவோம். இந்தியாவில் 75 சதவீத மக்கள், சுகாதாரப் பாதுகாப்பைத் தங்களிடமிருக்கின்ற பணத்தை வைத்துத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. இதனை வலுப்படுத்திட மோடி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. அதற்கு மாறாக, அதனை மேலும் குறைத்திடவே நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது. இதன்மூலம் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

தேசிய சுகாதாரத் திட்டம் என்கிற பொது சுகாதார முறையை வலுப்படுத்துவதற்கான திட்டத்திற்கு 2015-2016ஆம் ஆண்டில் 19,135.37 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது, தற்போது 2016-17இல் 19,437 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்ற போதிலும், பணவீக்சகம் மற்றும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டோமானால், உண்மையில் இது 6-7 சதவீதம் குறைவேயாகும்.

பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு அவர்களின் மக்கள்தொகைக்கேற்ப மொத்த திட்டச் செலவினத்தில் 8.6 சதவீதம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் அது, அநேகமாக அதில் பாதியளவிற்கே வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று, தலித்துகளுக்கான துணைத் திட்டத்திற்கு மொத்த திட்டச் செலவினத்தில் 16.6 சதவீதம் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் வெறும் 7 சதவீதம்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சுமார் 52,470 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது.
மோடியின் பேச்சுக்களில் மட்டும்தான் பெண்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான முறையில் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான முக்கிய திட்டங்களுக்கு அளித்துள்ள ஒதுக்கீடுகளை ஆராய்ந்துபார்க்கும்போது அவர்களுக்கு இதற்குமுன் அளித்து வந்த திட்டச் செலவினங்களில் 50 சதவீதம் வரை வெட்டிப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. பெண்கள் குறித்து மோடியின் பேச்சுக்களில் உள்ள அளவிற்குத் தாராளம் அவர்களது திட்டச் செலவினங்களில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதேபோன்று பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டச் செலவினங்களும் குறைக்கப்பட்டுவிட்டது. இது 2014-15இல் மொத்த செலவினத்தில் 4.19 சதவீதமாக இருந்தது, இப்போது 2015-16இல் 3.71 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

“பெண்களுக்கான பட்ஜெட்டில் 12.2 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் 2014-15க்கான திருத்திய பட்ஜெட்டின்படி, அநேகமாக 49.3 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது,’’ என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறுகிறது. உண்மையில், அனைத்து அமைச்சகங்களிலும் சேர்த்து பெண்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில், மோடி அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இதற்கு முன்பிருந்த அரசாங்கம் செலவு செய்துவந்த ஐசிடிஎஸ், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகிய அனைத்துத் திட்டங்களுக்குமான பட்ஜெட் ஒதுக்கீடுகளைக் கடுமையாக வெட்டிக் குறைத்திருக்கிறது. அதே சமயத்தில் “பாரத் மாதா கீ ஜே’’ போன்ற சாரமற்ற முழக்கங்கள்,மூலம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.

(தமிழில்: ச. வீரமணி)

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply