22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

22 ஆவது அகில இந்திய மாநாடு

வரைவு அரசியல் தீர்மானம்

(கொல்கத்தாவில் 2018 ஜனவரி 19-21 தேதிகளில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)

நமது கட்சியின் 21 ஆவது அகில இந்திய மாநாட்டுக்குப் பின்னர் உள்ள காலத்தில் இந்தியாவில் வலதுசாரி அரசியல்  மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நான்கு முனைகளில் தனது கடுமையானத் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது; நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அது தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. வகுப்புவாத அணி திரட்டலை கூர்மையாக பல்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்திக்  கொண்டிருக்கிறது; பாராளுமன்ற ஜனநாயகம் மீதும் அதன் நிறுவனங்கள் மீதும் எதேச்சாதிகாரத் தாக்குதல்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இந்தியாவை அமெரிக்காவுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் ஒரு இளைய பங்காளியாக வலுவான முறையில் மாற்றியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நாட்டின் நலன்களையும், நாட்டு மக்களின் நலன்களையும் இந்திய ஆளும் வர்க்கம் விட்டுக் கொடுத்திருப்பதை சர்வதேச அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளின் பின்னணியில் மதிப்பிட வேண்டும். அவை இன்று இந்தியச் சூழல் மீது நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

சர்வதேச நிலைமை

1.1) 21 ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் சர்வதேச நிலைமையில் ஏற்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:

(i) மிதமான உலகப் பொருளாதார மீட்சி ஏற்பட்டிருப்பதாக முன்கணிப்புகள் கூறுகிற போதிலும், 2008 இல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட உலக முதலாளித்துவ நெருக்கடி தொடரவே செய்கிறது.

(ii) இது அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள மக்களில் மிகவும் பெரும்பான்மையோரின் மீது பொருளாதாரச் சுரண்டலை மேலும் உக்கிரப்படுத்துவதற்கும், அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. உலகின் பல நாடுகளில் இத்தாக்குதல்களுக்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கைகளும், போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன.

(iii) உலக முதலாளித்துவத்தின் இந்தத் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி உலக அளவிலும், மற்றும் தனிப்பட்ட முறையில் பல நாடுகளிலும் பொருளாதார சமத்துவமின்மையை மேலும் விரிவாக்குவதற்கு இட்டுச் சென்றுள்ளது.

(iv) அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவும், பொருளாதார நெருக்கடியின் எதிர்மறைத் தாக்கத்திலிருந்து வெளிவந்திடவும், தன்னுடைய மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை, அதிலும் குறிப்பாக தன்னுடைய அரசியல் மற்றும் ராணுவத் தலையீடுகளை, மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

(v) லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவத் தலையீடுகளுக்கு எதிராக ஓர் தீவீரமான மோதல் நடந்து கொண்டிருக்கிறது.  அமெரிக்கா தன்னுடைய ஒட்டுமொத்த ராணுவப் பிரிவுகளையும் இக்கண்டத்தில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் செல்வாக்குடன்  நிலவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையை மாற்றியமைத்திடவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

(vi) இந்தக் காலத்தில், ஐரோப்பாவில் அதிதீவிர வலதுசாரி நவீன பாசிஸ்ட் சக்திகளின் எழுச்சியும், உலகில் பல நாடுகளில் மேலும் ஒரு வலதுசாரி அரசியல் திருப்பமும் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டொனால்டு டிரம்ப்,  அமெரிக்க ஜனாதிபதியாக வந்திருப்பது  இத்தகைய போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

(vii) நாம் நம் 21 ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டதைப் போன்று, இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய முகாமிற்குள் ஏற்பட்டுள்ள பிணைப்புகளும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டிருப்பதும், புதிய தாராளமயத்தின் இந்த நீண்ட நெருக்கடியின் தாக்கத்தால் தொடர்கின்றன. ஏகாதிபத்திய மையங்களுக்கிடையே புதிய மோதல்களும், முரண்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன.

(viii) இந்தியா போன்ற பல நாடுகள் அமெரிக்க ஆதரவு நிலை எடுத்துள்ளதால், சர்வதேச அரசியல் – பொருளாதார கட்டமைப்பை பலதுருவ நிலைப்பாட்டை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகள் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றன.

(ix) அமெரிக்கா, சர்வதேச ஒப்பந்தங்கள் சிலவற்றிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டிருப்பதன் காரணமாகவும், சுயேச்சையான நாடுகளுடன் இருதரப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கே முன்னுரிமை வழங்குவதாலும்,  புவி வெப்பமயமாதல் மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச ஒப்பந்தங்களின் எதிர்காலம் ஒரு நிச்சயமற்ற கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.

(x) நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் மிக முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் நடந்தேறியுள்ளன. அவை நம்முடைய ஸ்திரத்தன்மை மற்றும் சுமுகமான அண்டை நாடுகளுடனான உறவுகளில் நேரடிப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.

(xi) சோசலிஸ்ட் நாடுகள்: இந்தக் காலகட்டத்தில், சீனாவின் பலம் மற்றும் உலக அளவிலான செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. வியட்நாமும் கியூபாவும் தங்களுடைய பொருளாதார நிலையில் ஓரளவு நிலையான வளர்ச்சியை எய்தியிருக்கின்றன. வடகொரியா என்னும் கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு நாட்டின் முக்கிய பிரச்சனை அதன் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணையை நிறுவுதல் ஆகியவற்றைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

(xii) உலகில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் வருடாந்திர சர்வதேச மாநாடுகளை நடத்தியதும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரித்ததும் தொடர்ந்து சர்வதேச கம்யூனிஸ்ட் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

உலக முதலாளித்துவ நெருக்கடி

1.2) 2008ல் உருவான பொருளாதார மந்தத்தால் ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி தொடர்வதால் முதலாளித்துவ அமைப்பே ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடிகளில் மூழ்கி வருகிறது. உலக முதலாளித்துவம் 20 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டு காலத்தில் எய்திய வளர்ச்சி விகித அளவினைத் திரும்பப் பெற இயலவில்லை. சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய உலகமயம், நாம் கடந்த 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் விவாதித்து. நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள முறைகளின்படி, அதாவது, “வலுக்கட்டாயமாகப் பறித்தெடுப்பதன் மூலம் திரட்டுதல்” மூலமாக,  மூலதனக் குவியலுக்கான செய்முறைகளை உக்கிரப்படுத்தி இருப்பது தொடர்கிறது. இந்த செய்முறை முதலாளித்துவ சுரண்டலை மேலும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக பொருளாதார சமத்துவமின்மை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிவடைந்து, அதன் காரணமாக உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் வறிய நிலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நவீன தாராளமய கொள்கைக்கே ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

1.3) சர்வதேச நிதியம் – உலகவங்கி எகனாமிக் அவுட்லுக் – அக்டோபர் 2017 ஆகியவை உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறித்து ஒரு தன்னம்பிக்கையிலான முன்கணிப்பை சித்தரித்திருக்கிறது. அது  2016 ஆம் ஆண்டில் இருந்த 3.2 சதவீத வளர்ச்சி, 2017 இல் 3.6 சதவீதமாகவும், 2018இ ல் 3.7 சதவீதமாகவும் 2020-21 வாக்கில் 3.8 சதவீதமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கிறது. அவ்வாறே இருந்தாலும் கூட, அது பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கு முன்பிருந்த பத்தாண்டு காலத்தின் சராசரியான 4 சதவீத வளர்ச்சியை விட குறைவாகவே உள்ளது. சர்வதேச நிதியம் இவ்வாறு ஒரு தன்னம்பிக்கை கண்ணோட்டத்தை சித்தரித்த போதிலும், அது 2017 ஏப்ரலில் கூறியிருந்த எச்சரிக்கையை, அதாவது “இடைக்கால முதலீட்டுகளின் இடர்கள் தொடர்ந்து இப்போதும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,” என்ற எச்சரிக்கையை மீண்டும் கூறியுள்ளது.

1.4) உலக அளவிலான வேலையின்மை: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் சற்றே முன்னேற்றம் இருப்பதால் அதனுடன் வேலைவாய்ப்பு வளர்ச்சி தொடரும் என்று வழக்கமாக எதிர்பார்க்கப்படும். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வேலையின்மை விகிதம் 2010 இல் 8.3 சதவீதமாக இருந்தது, 2017 இல் 5.7 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது என்று சர்வதேச நிதியம் மதிப்பிட்டிருக்கிறது. எனினும் வேலையின்மையின் இந்த வீழ்ச்சி உழைக்கும் மக்களுக்கு சிறந்த வாழ்நிலைமைகளை தானாகவே உருவாக்கிடாது. ஊதியங்கள் மற்றும் வருவாயின் சராசரி வளர்ச்சி 2016 இல் வெறும் 1.8 சதவீதமாக இருந்தது என்பதிலிருந்தும், அது 2017 இல் 2.3 சதவீதமாக உயரக்கூடும் என்பதிலிருந்தும் இது பிரதிபலிக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய பத்தாண்டுகளான 1999-2008 இல் சராசரியாக 3.4 சதவீதமாக இருந்த வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் இது எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்று தெரியும்.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்த மிதமான வளர்ச்சி எளிதில் இல்லாமல் போய்விடும். ஏனெனில், இந்த வளர்ச்சியின் காரணமாக உருவாகும் வேலைகள் வரையறுக்கப்பட்ட அளவில்தான் இருக்கும் என்பதுமட்டுமல்ல, தரத்திலும் மோசமாகவே உள்ளன. “உழைப்புச் சந்தை நெகிழ்வுத்தன்மை” (“labour market flexibility”) என்ற பெயரில் “ஊதிய விறைப்புத் தன்மை”யைக் (wage rigidities) குறைக்கும் நோக்கத்துடன், குறைந்த ஊதியம் அளித்தல், பகுதிநேர வேலை, கேசுவல் அல்லது சுய வேலைவாய்ப்பு போன்றவை அதிகமாக அமலாக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த மிதமான வளர்ச்சி மீட்சியானது, உழைக்கும் மக்களை மேலும் கசக்கிப் பிழிவதன் மூலம், கொள்ளை லாபம் ஈட்டுதல் என்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் பொருளாதாரச் சுரண்டலை தீவிரப்படுத்துவதன் மூலமும்தான் அடையப்பட்டுள்ளது.  இதுதான் முதலாளித்துவத்தின் வர்க்கத்தன்மை.

1.5) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதாச்சாரத்தில் உண்மை ஊதியம் குறையாவிட்டாலும், நிலையாக இருக்கக்கூடிய இந்த மிதமான பொருளாதார மீட்சியின் விளைவாக, பண்ட உற்பத்தியில் மேலும் முதலீட்டைக் கூட்டுமளவுக்குப் பொருளாதாரத்தில் உள்நாட்டு கிராக்கி அதிகரிக்கவில்லை என்பதே அதன் பொருள்.

1.6) சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் நவீனதாராளமய ஆட்சி முறையின் கீழ், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவுக்குப் பணத்தைக் குவித்து வைத்துள்ளன.  உள்நாட்டில் கிராக்கி வளர்ச்சியடையாததால்,  அவற்றால் தாம் குவித்துள்ள பணத்தை சந்தைக்கு விடுவிக்க முடியாது.  தி ஃபைனான்சியல் டைம்ஸ் கூற்றின்படி உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகளாக விளங்கும் – தி அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், தி ஐரோப்பியன் மத்திய வங்கி, தி பேங்க் ஆப் ஜப்பான், தி பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் தி ஸ்விஸ் மற்றும் ஸ்வீடிஷ் சென்ட்ரல் வங்கிகள் – இப்போது 15 டிரில்லியன் டாலர்களுக்கும் மேல் சொத்துக்களாக அல்லது 2008க்கு முந்தைய பொருளாதார மந்த நெருக்கடிக் காலத்திலிருந்ததை விட நான்கு மடங்கு அதிகமான தொகையை இருப்பு வைத்திருக்கின்றன.  இது சொத்து விலைகளை உயர்வாக வைத்திருக்கும் அதே வேளையில், பொதுவான பணவீக்கத்தைக் குறைவாக வைத்திருக்கிறது.  ‘நீர்க்குமிழி’ மீண்டும் வெடித்து மற்றொரு நிதி நெருக்கடியாக முற்றும் நிலைக்கு இது இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் உலகப் பொருளாதாரம், மற்றொரு நிதி நெருக்கடியைத் துரிதப்படுத்திடக் கூடிய விதத்தில்,  நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது.

விரிவடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகள்1.7     நம்முடைய கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டிருந்ததைப்போன்று, உலக அளவிலும் மற்றும் தனித்தனியே பல்வேறு நாடுகளிலும் நவீன தாராளமயத்தால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மையை மிகவும் அச்சந்தருகிற வகையில் ஆழமானமுறையில் விரிவாக்கியிருக்கிறது. ஏழைகள் மிகவும் கசக்கி பிழியப்படக்கூடிய அதே சமயத்தில்,  பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாகின்ற நடைமுறைகள் தொடர்ந்து வேகமடைகின்றன.  2017 கிரெடிட் சுசெ (Credit Suisse) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலக மக்கள் தொகையில் 2.7 சதவீதமாக இருப்பவர்கள் உலக வருவாயில் 70.1 சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள்.  அதே சமயம் மறுபுறத்தில், உலக மக்கள் தொகையில் 85.6 சதவீதத்தினர் உலக வருவாயில் வெறும் 8.6 சதவீத அளவிற்கே தங்கள் பங்காகப் பெற்றிருக்கிறார்கள்.

1.8      2018ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி,1980இலிருந்து உலகில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் வருமானம், அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினர் பெற்றிருக்கின்ற வருமானத்தைவிட இரு மடங்கு அளவாகும்.      உலக அளவில் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்கும், உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினருக்கும் இடையேயான தனிநபர்களின் வருமானத்தின் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது அல்லது பூஜ்யமாக இருக்கிறது. அதிகரித்துள்ள ஏற்றத்தாழ்வுகளின் விகிதம் குறித்து உலகின் பல நாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ள இந்த அறிக்கையானது, 1980க்கும் 2015க்கும் இடையிலான  நவீன தாராளமய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட காலத்தில், இந்தியாவில் உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினரின் வருமானத்தின் பங்கு 30 சதத்திலிருந்து 60 சதம் என்கிற அளவுக்குக் கூர்மையாக அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

அதிகரித்துவரும் கிளர்ச்சிகள்
1.9     தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடி உரிமைகள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுடன் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினரை வறிய நிலைக்குத் தள்ளும் இத்தகைய நிலைமைகளின்கீழ், உலகம் முழுதும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலிருந்து, வளர்ந்துவரும் நாடுகள் வரையிலும், இவற்றுக்கெதிராக வலுமிக்க போராட்டங்கள்  வெடித்துக்கொண்டிருக்கின்றன. எனினும், நாம் நம்முடைய 21ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டதைப்போன்று, இந்தப் போராட்டங்கள் அநேகமாக குணாம்சத்தில் தற்காப்பு நிலையிலேயே இருந்திருக்கின்றன. எந்த அடிப்படையில் தற்காப்பு நிலை என்று சொல்கிறோம் என்றால், ஏற்கனவே இருந்துவரும் வாழ்வாதாரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடக்கூடிய விதத்திலும், அவற்றின் மீது மேலும் தாக்குதல் மற்றும் அரிப்பு ஏற்படாமல் தடுத்திடவேண்டும் என்ற அடிப்படையிலும்தான், அப்போராட்டங்கள் நடந்திருக்கின்றன.   எனினும் அதிகரித்து வரும் இத்தகைய கிளர்ச்சிப் போராட்டங்கள்தான் அடித்தளமாகும்.  இப்போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில்  மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்துவது அவசியமாகும்.

1.10    நவீன தாராளமயத்தின் நெருக்கடி: உலகப் பொருளாதார மந்தத்திற்குப் பின்னர் கடந்த ஒன்பது ஆண்டுகளில், பெரும்பான்மையான மக்களுக்கு, குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்களுக்கு, ஒரு வகையில் அமெரிக்காவில் ரீகனும், கிரேட் பிரிட்டனில் தாட்சரும் தலைதூக்கிய பின்னர் ஏற்பட்ட  நவீன தாராளமயத்தின் எழுச்சி, உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்குப் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் சென்றடையவும், மற்ற பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வறுமையையும், துயரத்தையும் அளிக்க செய்யும் நிலைமைகளை உருவாக்கியுள்ளது என்பது இப்போது தெள்ளத்தெளிவாக்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் வளர்ச்சியின் ஆற்றல்மிகு காலத்தைக் கண்டது. முதலாளித்துவத்தின் பொற்காலம் (Golden Age) என்று இக்காலகட்டம் அடிக்கடி கூறப்படுகிறது.  அமெரிக்காவில் 1948 முதல் 1972 காலத்தில், அமெரிக்க மக்களின் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாழ்க்கைத்தரம் அதிகரித்ததை அனுபவரீதியாக உணர்ந்தார்கள். எனினும், 1972க்கும் 2013க்கும் இடையே, அடிமட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினர் உண்மை வருமானத்தில் வீழ்ச்சியை அனுபவித்த அதே சமயத்தில், உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினர் அதிகப்படியாக பலன்களை அனுபவித்தனர். இடையில் உள்ளவர்களின் உண்மையான வருமானம் என்பது முழுநேர ஆண் தொழிலாளர்களுக்கு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது குறைவாக இருக்கிறது. மக்கள்தொகையில் அடிமட்டத்தில்உள்ள 90 சதவீதத்தினரின் வருமானம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேக்க நிலையிலேயே இருந்துவருகிறது. சராசரியாக, 25 உயர் வருமான பொருளாதாரங்களில்,   65 சதவீதத்திலிருந்து 70 சதவீதத்திற்கு இடையிலான குடும்பங்கள்  2005க்கும் 2014க்கும் இடையே உண்மை வருமானத்தில் தேக்கநிலையை அல்லது வீழ்ச்சியை அனுபவித்துள்ளனர்.  பல்திறக் குழுக்களிலிருந்தும் தனி ஆட்கள் கருத்தறிந்து பொதுமக்கள் கருத்தறியும் (Gallup poll) முறைப்படி 2000ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, அமெரிக்காவில் 33 சதவீதத்தினர் மட்டுமே தங்களைத் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைத்துக்கொண்டனர். ஆனால்,  2015ஆம் ஆண்டில் இது 48 சதவீதமாக (அநேகமாக மக்கள்தொகையில் சரிபாதிப்பேராக)  மாறி இருக்கிறது. உலக அளவில் மக்கள் தொகையில் பெரும்பகுதியினரின் வறுமையும், சமத்துவமின்மையின் மிகவும் மோசமான நிலைமைகளும்,    பெரும்பான்மை மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. இது, ஓர் அரசியல் வெளிப்பாட்டிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

1.11     நவீன தாராளமயத்தின் இந்த நெருக்கடி புதிய முரண்பாடுகளை உருவாக்கி முறிவுகளுக்கும், பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது (Brexit) போன்று ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மோதல்களுக்கும் இட்டுச்செல்கின்றன. புதிய அரசியல் சக்திகளின் வெளிப்பாடுகள் மற்றும் பதற்றங்கள் அதிகரித்தல் ஆகியவை தினமும் நடைபெறும் சம்பவங்களாகிவிட்டன.

வலதுசாரி அரசியல் பெயர்வு
1.12     21ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிந்தைய காலகட்டம், உலகின் பல பகுதிகளில் மேலும் ஒரு வலதுசாரி அரசியல் திருப்பத்தைக் கண்டது. நடப்பு நெருக்கடியின் விளைவாக, ஏகாதிபத்தியமானது,  உள்நாட்டு, உள்ளூர் மற்றும் பிராந்திய பதற்ற நிலைமைகளை ஊட்டி வளர்த்திடும் உலகளாவிய பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலுடன் கூடிய மூர்க்கத்தனமான நவீன தாராளமயத்தைப் பின்பற்றுகிறது. இது, நிறவெறி, இனவெறி, அயல்நாட்டு வெறுப்பு,  அதிதீவிர வலதுசாரி நவீன பாசிஸ்ட் போக்குகளின் வளர்ச்சியை உண்டாக்குகிறது. அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி, பிரிட்டனில் பிரெக்சிட் (Brexit) வாக்கெடுப்பில் வலதுசாரிகள் அணிதிரண்டது, பிரான்சில் அதிதீவிர வலதுசாரி தேசிய முன்னணியைச் சேர்ந்த மரைன் லீ பென் (Marine Le Pen)-இன் தேர்தல் ஆதாயங்கள், ஜெர்மனியில் மாற்றுக்கான டச்லேண்ட் என்னும் கட்சியின் முன்னேற்றம் (The advance of the Alternative for Deutschland in Germany), ஆஸ்திரியாவில் அதிதீவிர வலதுசாரி ஃப்ரீடம் கட்சியை உள்ளடக்கியுள்ள வலதுசாரி அரசாங்கம் அமைந்திருத்தல், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளிலிருந்து பிரதிநிதித்துவப்படுத்துவது ஆகிய அனைத்தும் இத்தகைய வலதுசாரி போக்கின் பிரதிபலிப்பாகும். இத்தகைய போக்கின் தாக்கம் இந்திய அரசியலிலும் பிரதிபலிக்கிறது.

1.13     உலகளாவிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்திருக்கக்கூடிய இக்காலத்தில், அதனால் மக்களிடையே காணப்படும் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை அணிதிரட்டுவது யார் என்கிற ஓர் அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. மக்களின் அதிருப்தியை அணிதிரட்டுவதன் மூலம் வலதுசாரி அரசியல் முன்னேறியுள்ளதுடன், அதன்மூலம் இடது மற்றும் முற்போக்கு சக்திகள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவாகிவிடாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்தி இருக்கின்றன.  இந்த வலதுசாரிசக்திகள் மக்களின் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, ஆட்சிக்கு வந்தபின்னர், இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அதே பொருளாதாரக் கொள்கைகளை அவைகளும் பின்பற்றத்தொடங்கி, மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றி, மக்களின் அதிருப்தியை மேலும் அதிகப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. வரவிருக்கும் காலத்தில், உலகின் பல நாடுகளின் அரசியல் திசைவழி என்பது, மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை அணிதிரட்டுவதில் இடதுசாரிகள் தலைமையிலான ஜனநாயக சக்திகளுக்கும், வலது சாரிகளுக்கும் இடையாயான அரசியல் போராட்டத்தின் வெற்றியால் தீர்மானிக்கப்படும் என்பது தெளிவு. 1929-30இல் ஏற்பட்ட பெரும் மந்தநிலைமை (The Great Depression) யை அடுத்து, உலகின் ஏகபோக மூலதனத்தின் ஆதரவுடன் பாசிசம் தலைதூக்கியது. நெருக்கடியின் விளைவாக மக்களிடையே வளர்ந்துவந்த அதிருப்தியைப் வெற்றிகரமானமுறையில் பாசிஸ்ட் சக்திகள் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. இன்றைய நடப்புக் காலத்திலும், நீண்டகாலமாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக, மக்கள் மத்தியில் எழுந்துவரும் அதிருப்தி, அதிதீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிச சக்திகள் தலைதூக்குவதை ஊக்குவிக்கின்றது.

1.14     எதிரான போக்குகள்:     எனினும், பல நாடுகளில், இத்தகைய வலதுசாரி அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளைத் தடுக்கக்கூடிய விதத்தில் இடதுசாரிகளின் தலைமைகளிலான மேடைகளும் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.

1.15     இக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் சமூக ஜனநாயகக் கட்சிகள் மேலும் ஓரங்கட்டப்படுவதையும், அதிதீவிர வலதுசாரிகள் தலைதூக்குவதையும்  பார்க்க முடிந்தது. கிரீஸில் பாசோக் (PASOK), பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி, இத்தாலியன் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஜெர்மன் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி, பல ஸ்காண்டிநேவியன் சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள் போன்ற பல சமூக ஜனநாயகக் கட்சிகள் தேர்தல்களில் மிக மோசமான முறையில் செயல்பட்டு பின்னடைவை எதிர்கொண்டன. இவற்றுக்கான காரணம் என்னவென்றால், அவை, உழைக்கும் மக்களின் நலன்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு,  நவீன தாராளமயக் கொள்கைகளைத் தழுவியதுதான்.  சமூக ஜனநாயகத்தின் குணாம்சம் என்னாவாக இருந்தது என்றால் எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும்போது உழைக்கும் மக்களின் தலைவனாகத் தன்னைக் காட்டிக்கொள்வது, அரசாங்கத்தில் அமரும்போது முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பது என்பது. இத்தகைய குணம் கொண்ட சமூக ஜனநாயகக் கட்சிகளை படுதோல்வி அடையச் செய்வதன் மூலம் மக்கள் நிராகரித்துள்ளனர்.

1.16     பிரான்சில், தேர்தல்களின் இறுதிச் சுற்றில், அதிதீவிர வலதுசாரிக் கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வாக்காளர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர், நவீன தாராளமய ஆதரவாளர் மற்றும் ஒரு பாசிஸ்ட்டு ஆகியவர்களுக்கு இடையிலான போட்டியில் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்திடுவதை மறுத்து,  வாக்களிக்கவில்லை அல்லது வாக்குச்சீட்டில் யாருக்கு தங்கள் ஆதரவு என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். வேறு சில நாடுகளிலும்கூட, அதிதீவிர வலதுசாரிகள் தலைதூக்குவதற்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.
1.17     போர்த்துக்கல் (PCP) மற்றும் கிரீஸ் (KKE) போன்ற நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வலுவான சக்தியாகத்  தொடர்ந்து நீடிப்பதுடன், தேர்தல் ஆதாயங்களையும் பதிவு செய்திருக்கின்றன. சைப்ரஸில், கம்யூனிஸ்ட் கட்சி (AKEL), சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் நகராட்சித் தேர்தல்களில் தன்னுடைய நிலையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.
1.18      ஐரோப்பாவின் வேறுசில இடங்களில் நவீன-இடதுசாரி அமைப்புகள் வளர்ந்திருக்கின்றன. கிரீஸில் சிரிசா (Siriza) நவீன தாராளமய சீர்திருத்தங்களை எதிர்ப்பதாகவும், தொழிலாளர்வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை கைவிடுவோம் என்றும் பறிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் அளித்திடுவோம் என்றும் வாக்குறுதிகள் அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், இறுதிப் பகுப்பாய்வில், சிரிசா ஐரோப்பிய நிதிமூலதனத்தின் நிர்ப்பந்தங்களுக்கு சரணடைந்ததன்மூலம், வலதுசாரிகள் வளர்வதற்கான வாய்ப்பினையே உருவாக்கித்தந்துள்ளது. கிரீஸில் மக்கள் மத்தியில் விளைந்துள்ள அதிருப்தியின் விளைவாக அது இப்போது அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக அரசியல் போராட்டம் நடைபெறும் இடமாக மாறியிருக்கிறது. ஸ்பெயினில், போடிமோஸ் (PODEMOS) என்னும் ஒரு முற்போக்குக் கட்சி அமைக்கப்பட்டு, இடதுசாரி சக்திகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கணிசமான அளவிற்குத் தேர்தல் ஆதாயத்தைப் பெற்றிருக்கிறது.

1.19      கிரேட் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஜெரிமி கோர்பின் (Jeremy Corbyn) தலைமையில் புத்துணர்ச்சி பெற்று, மக்கள் பிரச்சனைகளை தேர்தல் பிரச்சாரங்களின் மையமாக வைத்து செயல்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒருவிதத்தில் அது கிரேட் பிரிட்டனில் இடதுசாரி நிகழ்ச்சிநிரலுக்குப் புத்துயிரூட்டியுள்ளது.  அமெரிக்காவில், பெர்னி சாண்டர்ஸ் (Bernid Sanders) தன்னுடைய பிரச்சாரங்களை  உழைக்கும் மக்களின் மத்தியில் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

1.20     இந்நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் காட்டுவது என்னவென்றால் எங்கெல்லாம் இடதுசாரிகளும் இடதுசாரிகள் தலைமையிலான சக்திகளும், நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டங்களை வீரியத்துடன்  முன்னின்று நடத்துகிறார்களோ, அங்கெல்லாம் சமூக ஜனநாயகத்தை ஓரங்கட்டியிருக்கிறார்கள் என்பதும் மக்களின் ஆதரவைப் பெற்று, முன்னேற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தான்.  எதிர்காலத்தில், இதுதான் அரசியல் போராட்டங்களுக்கான அரங்கமாக இருக்கப் போகிறது. நவீன தாராளமயத்திற்கு எதிராக ஒரு வலுவான இடதுசாரிகள் தலைமையிலான எதிர்ப்பு இல்லையெனில், மக்களிடையே அதிகரித்துவரும் அதிருப்தியை வலதுசாரிகள் தங்களுக்கு சாதகமாக ஆதாயமாக்கிக் கொள்வார்கள்.

ஏகாதிபத்தியத்தின் தீவிரத்தாக்குதல்

1.21     உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் தீவிரத்தாக்குதல் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகள் அல்லது நேட்டோ தலைமையிலான இராணுவத் தலையீடுகள் உலகின் பலபகுதிகளில், குறிப்பாக மத்திய ஆசியா/வட ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தொடர்கின்றன. அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் நிகழ்ச்சிப்போக்குகளில் தலையிடுவது தொடர்கிறது. தன்னுடைய இராணுவத்தினை பால்டிக் நாடுகள் மற்றும் போலந்துக்கு முதன்முறையாக விரிவுபடுத்தி இருப்பதன் மூலம் நேட்டோ மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தன்னுடைய இராணுவப் பிரிவுகளை (ஊடிஅயெவ யெவவயடiடிளே) பால்டிக் நாடுகளுக்கு அனுப்பி, உக்ரெயினில் தீவிரமானமுறையில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் தன்னை நோக்கிக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே ரஷ்யா மிகச்சரியான முறையில் பார்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், “சீனாவைக் கட்டுக்குள்வைத்திருக்கும்” (“Containment of China”) போர்த்தந்திர நோக்கத்தை மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றுவது தொடர்கிறது. சோசலிச நாடுகளுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கம் இடையேயான தற்போதைய சகாப்தத்தின் மையமான முரண்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப்:

1.21     அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவினரின் வெற்றியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் அதிருப்தியை, அரசியல் வலதுசாரிகள்  தங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தி வெற்றியை பெற்றிட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். ஆயினும், ஜனாதிபதியாக வந்தபின்னர், டிரம்ப் நவீன தாராளமயக் கொள்கைத் திசைவழி நோக்கித்தான் தன் பயணத்தைப் மிகத் தீவிரமாக பின்பற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர், ஈரான், பாலஸ்தீனம், கியூபா சம்பந்தமாக  அவருக்கு முந்தைய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல அணுகுமுறைகளை முற்றிலும் எதிர்மறையாக மாற்றியிருக்கிறார், வெனிசுலா மற்றும் வட கொரியாவுக்கு எதிராகவும் டிரம்ப் உறுதியான நிலைபாடுகளை மேற்கொண்டு புதிய மோதல்களையும், பதற்றங்களையும் உருவாக்கி கொண்டிருக்கிறார். இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அவர் அளித்துவரும் மனப்பூர்வமான ஆதரவு காரணமாக அரபு உலகத்தில் பதற்றங்களும், மோதல்களும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

1.23     அதிகரித்துவரும் இராணுவ செலவினங்கள்: உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழலை பயன்படுத்தி, இராணுவ செலவினங்கள் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. இன்றைய தினம் இராணுவச் செலவினங்களுக்கான உலக சராசரி என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமாக இருக்கும் அதே சமயத்தில்,  அமெரிக்கா, தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.58 சதவீதம் இராணுவத்திற்குச் செலவு செய்கிறது. அமெரிக்காவின் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இராணுவ செலவினங்களுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 700 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி இருக்கிறது. நேட்டோவின் அடுக்கடுக்கான செலவினங்களில் அமெரிக்கா மட்டுமே 70 சதம் எடுத்துக் கொள்கிறது. நேட்டோவின் அடுக்கடுக்கான செலவினங்கள் 2014இல் 1.4 சதவீதமாக இருந்தது, 2015இல் 1.8 சதவீதமாக உயர்ந்தது, அது 2017இல் 4.3 சதவீதமாக மேலும் உயர்ந்தது.

1.24     அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிறுவுவதை மேலும் வலுப்படுத்திக்கொள்வதைக் குறியாகக் கொண்டுதான் இவ்வாறு இராணுவ செலவினங்களை நேரடியாக அதிகப்படுத்தி இருக்கிறது. நாம் நம் முந்தைய அகில இந்திய மாநாடுகளில் குறிப்பிட்டிருப்பதைப்போல், அமெரிக்க ஏகாதிபத்தியம் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் இராணுவரீதியாகத் தலையிடுவதைத் தொடர்கின்ற அதேசமயத்தில், அமெரிக்காவின் உலக அளவிலான இராணுவ போர்த்தந்திர கவனம் பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்திருக்கிறது. பசிபிக்கில் தன்னுடைய கப்பல் படைகளில் மூன்றில் இரண்டு பங்கினை நிறுத்தி வைத்திருப்பதுடன், அமெரிக்கா “சீனாவைக் கட்டுப்படுத்தவேண்டும்” என்பதற்காக தெற்கு சீனக் கடலில் ஏற்பட்டுள்ள தாவாக்களின் மீது குறிப்பாக கவனம் செலுத்திவருகிறது. ஏனெனில், தன்னுடைய உலக மேலாதிக்க சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் போட்டியாக சீனாதான் சக்தியுடன் வளர்ந்து வருவதாக அது பார்க்கிறது.

லத்தீன் அமெரிக்கா

1.25     லத்தீன் அமெரிக்காவில், மக்களுக்கும் அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலையீடுகளுக்கும் இடையே ஓர் ஆழமான மோதல் கூர்மையாக உருவாகிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், உணவுப்பற்றாக்குறையை வலுக்கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் வெனிசுலாவைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசிலிலும் பொலிவியாவிலும் மற்றும் இதர நாடுகளிலும் இடதுசாரிகள் தலை தூக்காவண்ணம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், முன்பு இருந்ததைப்போன்று அந்நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடனும் அமெரிக்காவின் தலையீடுகள் கூர்மையாகிக் கொண்டிருக்கின்றன. சோசலிஸ்ட் கியூபாவும் அதன் தாக்குதல் இலக்காகத் தொடர்ந்து இருந்து வருகிறது. முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் கியூபாவுடனான உறவுகளில் சகஜநிலைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளைக்கூட டொனால்ட் டிரம்ப் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

1.26     2017 அக்டோபர் 15 அன்று, வெனிசுலா தங்கள் நாட்டின் மண்டல ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடத்தியது. அமெரிக்கா, பொலிவேரியன் பிற்போக்கு சக்திகளுக்கு நிதி உதவி அளித்திருப்பதன் விளைவாக, நிக்கோலஸ் மதுராவின் அரசாங்கம் இத்தேர்தல்களில் கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தது. இது, அடுத்து 2018 அக்டோபரில் நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான தேர்தலில், `ஹூகோ சாவேஸின் கட்சியான வெனிசுலா ஐக்கிய சோசலிஸ்ட்  (PSUV-United Socialist Party of Venezuela) கட்சியைத் தோற்கடிப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா நம்பியது. ஆனால், 23 ஆளுநர்பதவிகளில் 18ஐ வெனிசுலா ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (PSUV) வென்றது. வெனிசுலாவில்  மக்கள் மத்தியில், பொலிவேரிய மாற்றுக்கான (Bolivarian Alternative) ஆதரவு வலுவாக இருப்பது தெளிவான முறையில் தொடர்கிறது.

1.27     சர்வதேச தேர்தல் பார்வையாளர்களின் அறிக்கைகளுக்கு முற்றிலும் முரணான விதத்தில்,  அமெரிக்க ஏகாதிபத்தியம், வெனிசுலாவில் தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை என்று கூறிவருகிறது.  ஹொண்டுராசில்  2017 நவம்பர் 26 அன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளதாக விரிவான அளவில் புகார்கள் வந்துள்ளபோதிலும், ஜனாதிபதி ஹெர்ணாண்டஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறது.  இந்தத் தேர்தல்களில் படுமோசமானமுறையில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் அவை என்னென்ன என்றும் அமெரிக்க நாடுகளின் அமைப்பு (OAS-Organization of American States) மற்றும் ஐரோப்பிய யூனியனின் தேர்தல் பார்வையிடும் அமைப்புகளும் அடையாளம் காட்டி இருக்கின்றன.  எதிர்க்கட்சி வேட்பாளர் பதவியிலிருந்த ஜனாதிபதியைவிட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தார். தேர்தல்கள் நடைபெற்ற நாளன்று இரவு, 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டபின், வாக்குகள் எண்ணப்படுவது நிறுத்தப்பட்டு, மறுபடியும் 36 மணி நேரத்திற்குப்பின்னர் வாக்குகள் எண்ணும் பணி திரும்பவும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த முந்துநிலை திடீரென்று மறைந்து, ஹெர்ணாண்டஸ் குறைந்தவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹொண்டுராஸிலும், இதர மத்திய அமெரிக்க நாடுகளிலும் தலையீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு.  அது 2009இல் ஹொண்டுராஸில் உள்ள சுரங்கங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அங்காடிகளின் (‘sweat-shop’) நலன்களைப் பாதுகாத்திடுவதற்காக ஒரு ராணுவ சதியைத் (coup) தூண்டியது. இந்தத் தேர்தல் மோசடிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்ற கிளர்ச்சிகள் வெடித்தன. இவற்றில் எண்ணற்றோர் இறந்தனர், பலர் காயமடைந்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் ஓர் அடக்குமுறை ஆட்சி அமைக்கப்பட்டது.

1.28     மத்திய அமெரிக்காவில், நிகரகுவாவில் கிட்டத்தட்ட 13 சதவீதப்புள்ளிகள் வறுமையைக் குறைத்ததன் காரணமாக, டானியல் ஒட்டேகா (Daniel Ortega) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெனிசுலா அணியில் லத்தீன் அமெரிக்காவின் ஏனைய நாடுகளான பொலிவியா, ஈக்குவேடார்,ஹொண்டுராஸ் மற்றும் நிகரகுவாவில் இடது-முற்போக்கு அரசாங்கங்களை பலவீனப்படுத்து வதற்கானமுயற்சிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேற்கு ஆசியா

1.29     மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்கா – இஸ்ரேல் உடன்படிக்கை தொடர்ந்து ஒரு மையமான பங்கைச் செலுத்தி வருகிறது. இப்பகுதியை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் கட்டுபாட்டில் வைத்திருப்பதற்காக ஈரானைப் பலவீனப்படுத்தித் தனிமைப்படுத்துவதும், இஸ்ரேலை வலுப்படுத்துவதும் இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.

1.30     2016இல் முதன்முறையாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, கிழக்கு ஜெருசேலத்திலும், பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப்பகுதிகளிலும்  சட்டவிரோத குடியேற்றங்களைத் தொடர்ந்து வருவதற்காக இஸ்ரேலைக் கண்டனம் செய்திருந்தபோதிலும், இஸ்ரேல் சட்டவிரோத குடியிருப்புகளை மேலும் உருவாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும்,  பாலஸ்தீனத்தின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசேலத்தில் யூதர்களுக்காக ஆயிரக்கணக்கான இல்லங்களைக் கட்டுவதற்கும் கூச்சநாச்சமின்றி திட்டங்களைத் தயார்செய்திருக்கிறது.

1.31     இந்தப் பின்னணியில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்திருப்பதும், அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ்விலிருந்து அங்கே மாற்றுவதற்கும்  டொனால்டு டிரம்ப்  முடிவு செய்திருப்பதும் பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதை நியாயப்படுத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெளிப்படையான ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும்.  இது ஐ.நா. தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரான ஒன்று என்பதுடன், கிழக்கு ஜெருசலேம் 1967இலிருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதி என்ற சர்வதேச சமூகத்தினரின் நிலைப்பாட்டிற்கு எதிரானதுமாகும்.   கிழக்கு ஜெருசேலத்தை தலைநகராகக் கொண்டு ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைப்பாடாகும்.  இவ்வாறு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருக்குமாயின் அதனை நெறித்துக் கொல்வதற்கு அமெரிக்க நிர்வாகம்தான்  பொறுப்பாகும். டொனால்டு டிரம்பின் இந்த முடிவு, உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய விதத்தில் இப்பிராந்தியத்தில் மேலும் பதற்றங்களையும் மோதல்களையும் தூண்டிவிடும் தன்மையுடையதாகும்.

1.32     மத்தியக் கிழக்கு நாடுகளின் இதர பகுதிகளிலும் அமெரிக்காவின் தலையீடுகள் தொடர்கின்றன. எனினும், இப்போது சிரியாவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்று அது மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்திருப்பது தெளிவாகத் தெரியத்தொடங்கி இருக்கிறது. சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, ஆறு ஆண்டு காலமாகத் தொடர்ந்துநடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தில் சிரிய படையினரின் வெற்றி, ஒரு மிகப்பெரிய சாதனையாகும். அமெரிக்கா மற்றும் அதன் அரபுக் கூட்டணியினரால் முட்டுக்கொடுக்கப்பட்ட இஸ்லாமிஸ்ட் படையினர் தோல்வியடைந்திருப்பது மேற்கு ஆசியாவின் அரசியலில் ஆழமான விளைவினை ஏற்படுத்தும். சிரியாவில் ருஷ்யாவின் வெற்றிகரமான இராணுவத் தலையீடு இப்பிராந்தியத்தில் அதன் தாக்கத்தை வலுப்படுத்தி இருக்கிறது. ருஷ்யா – துருக்கி – ஈரான் கூட்டு முயற்சிகள் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் சூழ்ச்சித்தந்திரங்களை முறியடித்திருக்கின்றன.  தற்போது, சிரியாவில் அஸாத் (Assad) ஆட்சியைத் தூக்கி எறிந்திட வேண்டும் என்ற அமெரிக்காவின் குறிக்கோளை எய்துவது கடினமாகி இருப்பதால், அது, தன்னுடைய கவனத்தை ஈரானை நோக்கித் திருப்பியுள்ளது. இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்குப்  பிரதான இலக்காக  ஈரான் தொடார்ந்து இருக்கிறது. டொனால்டு டிரம்ப் ஈரான் அணுசக்தி ஒப்பந்ததிற்கு சான்றிதழ் வழங்க மறுத்திருக்கிறார். இந்நிலைபாடு ஈரான் மற்றும் இப்பிராந்தியத்தில் புதிய நிர்ப்பந்தங்கள் ஏவப்படும் என்பதைக் காட்டுகிறது.

1.33     தன்னுடைய கூட்டணி நாடான சவுதி அரேபியாவுடன் சேர்ந்துகொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானைப் பலவீனப்படுத்துவதற்காக, ஏமனில் சவுதி அரேபியர்கள் தமது இராணுவக் தலையீட்டைத் தொடர்வதை ஊக்குவித்து வந்துள்ளது.  ஐ.நா. ஸ்தாபனம் ஏமனில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் குழந்தைகள் 2017 டிசம்பர் இறுதியில் பசி-பஞ்சம்-பட்டினியால் இறந்திருப்பார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறது.

1.34     அதே சமயத்தில், சவுதி அரேபியாவிற்குள்ளேயே அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் ஏராளமாக நடந்துகொண்டிருக்கின்றன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முடிசூட்டிக்கொண்டதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் தலையிடுகள் கத்தார், சிரியா மற்றும் ஏமனில் தொடர்கின்றன. இப்போது அது லெபானானைக் குறிவைத்திருக்கிறது. பிரதமர் ஹரிரியின் சமீபத்திய ராஜினாமா ரியாத்தில் அறிவிக்கப்பட்டது. இப்பிராந்தியத்தைப் பலவீனப்படுத்துவதற்காக சவுதி அரேபியாவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இது என்று பரவலாக நம்பப்படுகிறது. பின்னர் பிரதமர் ஹரிரி தன் ராஜினாமானைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார். ஆயினும், இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் லெபனானில் உள்ள ஹஸ்புல்லாவை பலவீனப்படுத்திடாது.
1.35     கத்தார்: சவுதி அரேபியாவும், அதன் கூட்டணி அரசுகளுட்ம கத்தார் குடியரசை (Emirate of Qatar) தனிமைப்படுத்தி, வலிவற்றதாக்கிட மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆரம்பத்தில் ஆதரவு அளித்ததைப் பார்த்தோம். எனினும், அதே சமயத்தில், அமெரிக்கா கத்தாருடன் போர் விமானங்களை விற்பதற்கு 12 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டது. கத்தார், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய  இராணுவத் தளங்களில் ஒன்றை பராமரித்து வருகிறது. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர் பணியாற்றுகிறார்கள். மேலும் கத்தார், அமெரிக்காவின் சென்ட்காம் (US CENTCOM) எனப்படும் படைப்பிரிவின் தலைமையகத்தையும் பராமரித்துவருகிறது. இது, சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

1.36      கத்தார் உடனடியாக ஈரானுடன் தன்னுடைய தூதரக உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் என்றும், அல் ஜஜிரா மின் ஊடக வலைப்பின்னலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் முஸ்லீம் பிரதர்ஹூ`ட் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும்  சவுதி அரேபியா கோரியிருக்கிறது. கத்தாரும், ஈரானும் உலகின் மிகப்பெரிய சவுத் பார்ஸ் எரிவாயு வயல்வெளி (South Pars gas field) யைக் கூட்டாக நடத்தி வருகின்றன.  அதன் விளைவாக அவை ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் கூட்டாக செயல்பட வேண்டியது தேவை. சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபுக் குடியரசு (UAE)ம் கத்தாரில் ஆட்சி மாற்றம் கோரும் அதே சமயத்தில், கத்தாரும் தன்னுடைய கூட்டாளிகளை இப்பிராந்தியத்தில் பெற்றிருக்கிறது.

1.37      அமெரிக்காவின் கவனம் தற்போது ஈரானுக்குப் பெயர்ந்திருப்பதானது, எதிர்காலத்தில் இங்குள்ள நிலைமை எப்படி மாறும் என்பதைத் தீர்மானித்திடும் முக்கிய காரணியாக இருந்திடும். இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகளுக்கு கடையாணியாகத் தொடர்ந்து இருந்துவரும்.

1.38      இவ்வாறு எல்லாவிதமான தலையீடுகள் இருந்தபோதிலும், ஈரானின் நிலை தற்போது இப்பிராந்தியத்தில் மேலும் வலுப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. 2017 டிசம்பர் கடைசி வாரத்தில், ஈரான் முழுவதும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகள் வெடித்தன. ஜனாதிபதியாக அகமதிநிசாத் (Ahmadinejad) அவர்களின் தேர்தலுக்கு எதிராக, 2009க்குப்பின் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களாக இவை அமைந்தன.  ஈரானியத் தலைவர்கள், இந்தக் கிளர்ச்சி நடவடிக்கைகள் நாட்டில் உள்ள பொருளாதார நிலைமை, ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் அதிருப்தியைப் பிரதிபலிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் வெளியாரின் தூண்டுதலுடன், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் சவுதி அரேபியாவின் தூண்டுதலுடன் நடந்ததாகப் புகார்கள் உண்டு.  இப்பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்காக குரல் கொடுப்போரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான், ஈரான் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு சிறந்த உத்தரவாதமாக இருக்க முடியும் என்றும், அந்நியத் தலையீடுகளுக்கு எதிராக மிகச்சிறந்த வழியாக இருக்க முடியும் என்றும் முற்போக்கு சக்திகள் தொடர்ந்து கூறிவருகின்றன.

ஆப்பிரிக்கா:
1.39     அதிதீவிர மதவெறி சக்திகள் வடக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்துவது தொடர்கிறது. லிபியா மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாட்டை பலவீனப்படுத்தி சீர்குலைத்ததோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கடும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.  அதிதீவிர மதவெறி மற்றும் பயங்கரவாத சக்திகள் இப்பிராந்தியத்தில் அதிகரித்திருக்கின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் அமெரிக்கா தன்னுடைய இராணுவத் தலையீட்டை ஆப்ரிகாம் (AFRICOM) மூலமாக வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. நைஜீரியா, மாலி, சாஹல் முதலான பல நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று கூறப்படுவனவற்றில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபரிமிதமான இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவும், முக்கியமான வர்த்தக மார்க்கங்களையும் சந்தைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா இந்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

ஜிம்பாப்வே:
1.40     சுதந்திர ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக மிக உயர்ந்த தலைவராக இருந்த ராபர்ட் முகாபே, நாட்டின் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திடக் கட்டாயப்படுத்தப்பட்டார்.  சீர்கேடடைந்துவரும் பொருளாதார நிலைமை, மிக விரிவான அளவில் அதிருப்தியை உருவாக்கி இருந்தது. வளர்ந்துவரும் இந்த அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, ஏகாதிபத்தியம் இந்நாட்டில் தலையிடவும், நிறவெறித் தீயை விசிறிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளிலும் இறங்கியது. ஆளும்  ஜிம்பாம்பே ஆப்பிரிக்கன் நேஷனல் யூனியன்  பேட்ரியாடிக் ஃரண்ட் (ZANU-PF-Zimbabve African Nationalist Union-Patriotic Front), தற்போதைய துணை ஜனாதிபதியான, 75 வயதுள்ள எம்மர்சன் நங்காவாவை (Emmerson Mnangagwa), ஜனாதிபதியாகவும் அவருக்கு அடுத்து அவருடைய மனைவியை ஜனாதிபதியாக கொண்டுவருவோம் என்று மேற்கொண்ட முடிவை, நிறுத்தி வைத்திட முயற்சித்தார் முகாபே. இதுதான் முகாபேயைக் கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து இறங்குமாறு கட்டாயப்படுத்திய இராணுவத்தினரின் ஆட்சிக் கவிழ்ப்பைத் தூண்டிய நடவடிக்கையாக ஊகிக்கப்படுகிறது. பின்னர்,  ஜிம்பாம்பே ஆப்பிரிக்கன் நேஷனல் யூனியன் – பேட்ரியாடிக் ஃரண்ட், 2017 டிசம்பரில் சிறப்பு மாநாடு (extraordinary Congress) ஒன்றை நடத்தி,  கட்சியின் தலைவராக  நங்காவாவை தேர்ந்தெடுத்தது. அடுத்து வரவிருக்கும் 2018 தேர்தலின்போது ஜனாதிபதிக்கான வேட்பாளராகவும் அவரை ஒருமனதாக முடிவு செய்தது.

ஏகாதிபத்திய முகாமிற்குள் உள்ள முரண்பாடுகள்

1.41      உலகப் பொருளாதார நெருக்கடி நீண்டுகொண்டே இருக்கும் நிலைமைகளின் கீழ் உள்ள நிலைகளாலும்,  ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனம் புதுப்பிக்கப்படுவதாலும், ஏகாதிபத்திய முகாமுக்குள் நாடுகளுக்கிடையிலான பிணைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் முந்தைய அகில இந்திய மாநாடுகளில் குறிப்பிட்டிருந்த, சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழான ஏகாதிபத்திய உலகமயத்தின் காரணமாக ஏகாதிபத்திய நாடுகளுக்குள் இருந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டிருந்த நிலைமைகள் இப்போது சிதைந்துகொண்டிருக்கின்றன. பிரெக்சிட் (Brexit) வாக்கு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் போன்ற இதர முதலாளித்துவ மையங்களுக்கும் இடையே வளர்ந்துவரும் உரசல்கள் உக்கிரமடைந்துகொண்டிருக்கின்றன.  சர்வதேச நிதி மூலதனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை (Trans-Pacific Partnership Agreement) டொனால்டு டிரம்பு ரத்து செய்ததானது,  ஜப்பானின் நலன்களுக்கு எதிராக உள்ளது.  பாரிஸின் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தன்னை விலக்கிக்கொண்டது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான மோதலைக் கூர்மைப்படுத்தி இருக்கிறது. நேட்டோ கூட்டணிக்கு நிதி அளிப்பதனை ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் இந்நாடுகளுக்கிடையிலான பதற்றம் வளர்ந்து வருவதற்கு மற்றுமொரு காரணமாகும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அதனை மீறியிருப்பது அமெரிக்காவுக்கும் மற்றும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த இதர நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ருஷ்யா மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல்களை உக்கிரப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள் டொனால்டு டிரம்பின் இந்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கவில்லை. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் ஓர் உண்மையை நன்கு மெய்ப்பித்திருக்கின்றன. அதாவது, மக்களின் பொருளாதாரச் சுரண்டலை உக்கிரப்படுத்தி ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளின் மூலமாக அவர்களிடமிருந்து கொள்ளை லாபம் ஈட்டும்போது ஏகாதிபத்திய முகாம் தங்களுக்குள் இணைந்து செயல்படும். ஆனால் இதர பகுதிகள் என்று வரும்போது அவைகளுக்கிடையே மோதல்களும் முரண்பாடுகளும் முட்டி மோதுகின்றன.

புவி வெப்பமயமாதல்

1.42     உலக அளவில் கடந்த பல ஆண்டுகளாக புவிவெப்பமயமாகி வருவதன் காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதனை சரி செய்வதற்கான போராட்டம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,  அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்திருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை ஸ்தம்பித்த நிலைக்கு உள்ளாகி இருக்கிறது.

1.43     வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துவிடும் என்கிற ஐயம் சரியானதே என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றத்தைத் தூண்டும் பசுங்கூட வாயுக்களை கட்டுப்படுத்த 2016 டிசம்பரில் வரையறை செய்யப்பட்ட சர்வதேச பாரிஸ் ஒப்பந்தம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை மட்டுமல்லாமல், அறிவியல் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை. பல்வேறு நாடுகள் தாமே ஏற்றுக்கொண்ட இலக்குகளை தொகுத்துப் பார்த்தால் ஒத்துக்கொண்ட இலக்கான 2  டிகிரி செண்டிகிரேடை விட உயர்ந்து சுமார் 3 டிகிரி செண்டிகிரேடுக்கும் மேல் புவி வெப்பம் உயர்ந்துவிடும். இதுதான் மெய் என அமைந்த நிலையில் பகட்டான பேரார்வ விழைவான 1.5 டிகிரி என்பதைப் பற்றிப் பேசவே தேவையில்லை.

1.44      தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு பாரிஸ் ஒப்பந்தத்தை அமெரிக்கா வளைத்தது.  கடந்த காலங்களில் தாம் உமிழ்ந்து ஏற்கனவே வளிமண்டலத்தை மாசு செய்த மாசின் பொறுப்பை வளர்ந்த நாடுகள் ஏற்கும் வகையில் ஒவ்வொரு நாட்டின் கார்பன் உமிழ்வை குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்படுத்துவது என்ற போக்கிலிருந்து விலகி   ஒவ்வொரு நாடும் தாமே முன்வந்து வரும்காலத்தில் எத்துனை அளவு கார்பன் உமிழ்வை குறைக்கும் என பாரிஸ் ஒப்பந்தம் திசைமாறியது.  வளரும் நாடுகளின் பசுங்கூட வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்த குறை கார்பன் உமிழும் தொழில்நுட்ப பகிர்வு மற்றும் நிதியுதவிதருவது போன்ற உறுதியளிப்புகள் கைவிடப்பட்டுள்ளன. கடந்த கால மாசுகளுக்காக வளர்ந்த நாடுகளுக்கு எந்த பொறுப்பும் இல்லை என பாரிஸ் ஒப்பந்தம் வெளிப்படையாக கூறுகிறது.   பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு என்ற கொள்கையை ஏற்கவைக்க வளரும் நாடுகள் முயற்சி செய்து வெற்றி பெற்றாலும் உள்ளபடியே இந்த கொள்கை நடைமுறையில் இல்லாததாகியுள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் தொடர்ச்சியாக டிரம்ப் தலைமையில் அமெரிக்கா எல்லா சர்வதேச கால நிலை மாற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் வெளிநடப்பு செய்துள்ளது. கியோட்டோ ஒப்பந்தத்தை  நட்டாற்றில் விட்டதுபோல தான் எல்லா சர்வதேச காலநிலை ஒப்பந்தங்களையும் இறுதியில் கைவிடுவதே அமெரிக்காவின் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது.  உலகிலேயே இரண்டாவது அதிக மாசு ஏற்படுத்தும் நாடக இருந்தும். ஐரோப்பிய நாடுகளைவிடவும் மிகவும் சொற்ப அளவில் தான் அமெரிக்கா தனது மாசைக் குறைக்க வாக்குறுதி தந்தது.

1.45      எதிர்கால பேச்சுவார்த்தைகளில், குறிப்பாக 2018இல் நடைபெற இருக்கும் மாசு உமிழ்வு கட்டுப்பாடு சர்வதேச மதிப்பீடு பேச்சு வார்த்தையில், இந்தியாவின் வளர்ச்சி மீது பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தகூடிய அளவு கூடுதல் குறைப்பை சுமத்திட வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தும் வியூகம் குறித்து இந்தியா கவனமாக இருத்தல் வேண்டும்.  மோடி அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றபோதிலும், முற்போக்கு இயக்கங்கள் பொது போக்குவரத்து, சமையல் எரிபொருள், மின்சாரம் உட்பட எல்லா வித ஆற்றல்களும் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புரத்திலும் கிடைக்கும்படி குறைந்த கார்பன் மாசு தரும் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த முன் முயற்சி எடுக்கவேண்டும்.

பலதுருவக் கோட்பாடு

1.46      சென்ற அகில இந்திய மாநாட்டுக்குப்பின்னர், இக்காலகட்டத்தில், சர்வதேச உறவுகளில் பலதுருவக் கோட்பாடு சம்பந்தமாக முரண்பட்ட போக்குகள் வெளிப்பட்டிருக்கின்றன.  இந்தியாவிலும் பிரேசிலிலும் வலதுசாரி அரசாங்கங்கள் அமைந்திருப்பதும், தென் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் – தென் ஆப்பிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் – தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய புகழ்பெற்ற கூட்டணி விரைவில் தேர்தலை சந்திக்கக்கூடிய பின்னணியில், பிரிக்ஸ் (¡õRICS–  ¡õrazil, Russia, India, China and South Africa) செயல்பாடுகள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. எனினும், பிரிக்ஸ் நாடுகள் ஷாங்காயில் மிகவும் வெற்றிகரமான முறையில் நியு டெவலப்மெண்ட் பேங்க் (New Development Bank)-ஐ நிறுவியிருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறுவிதமான முரண்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளின் காரணமாக, ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களை எதிர்கொள்வதில்  இதன் செயலூக்கமும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
1.47      ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO – The Shanghai Cooperation Organization) ஒரு வலுவான மண்டல அமைப்பு என்கிற முறையில் தன்னுடைய பங்களிப்பினை ஒருமுகப்படுத்தி இருக்கிறது.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முழு உறுப்புநாடுகளாக அனுமதிக்கப்பட்டு அது மேலும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. சீனா,  ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பை நிறுவிடவும், வளர்முக நாடுகள் சிலவற்றையும் உள்ளடக்கி 60 உறுப்பினர்கள் கொண்ட ஓர் மூலதன வங்கியை அமைத்திடவும்  முன்முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

1.48      ஒருதுருவக் கோட்பாட்டின்மூலம் தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை ஒருமுகப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு நேரெதிராக, இந்த அமைப்புகளில் பல, சர்வதேச உறவுகளில் பல்துருவக் கோட்பாட்டை வலுப்படுத்திடக்கூடிய விதத்தில் வளர்த்தெடுத்திட முடியும். இந்த சமயத்தில் இந்தியா, அயல்துறை, பாதுகாப்பு மற்றும் போர்த்தந்திர நிலைபாடுகளில் அமெரிக்க ஆதரவு நிலையினை எடுத்திருப்பதால், அதன் பங்களிப்பு மிகவும் முக்கிய காரணியாக மாறியிருக்கிறது. சீனா முன்முயற்சி மேற்கொண்டு தொடங்கிய ஒரே கச்சை ஒரே சாலை (One Belt, One Road) திட்டத்தில் சேர இந்தியா மறுத்துள்ளது.  இந்தியாவின் நடப்பு அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடு இந்த அமைப்புகளின் அதிர்வலைகள் மற்றும் எதிர்கால  வல்லமையைக் கடுமையாகப் பாதித்திடுவது தொடரும்.

1.49      அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கு சவாலாக இருந்துவந்த   UNASUR, MERCOSUR, ALBA மற்றும் CELAC எனப்படும்  லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மண்டல அமைப்புகளின் ஆற்றல்கள், அர்ஜண்டினா, பிரேசிலில் அமைந்துள்ள வலதுசாரி அரசாங்கங்கள்   மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இதர நாடுகளில் நடத்தப்படும் வலதுசாரித்தாக்குதல்கள் காரணமாக பலவீனமடைந்திருக்கின்றன.

1.50      நம்முடைய 21ஆவது அகில இந்திய மாநாட்டின் போது உக்ரேன் காரணமாக ருஷ்யாவுக்கும், அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கின்றன என்று குறிப்பிட்டது இப்போதும் அது தொடர்கிறது. சிரியாவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தாக்குதல்களை ருஷ்யா மிகவும் வெற்றிகரமானமுறையில் திணறடித்து வெற்றிபெற்றுள்ளது. ருஷ்யா சீனாவுடன் தன்னுடைய உறவுகளை வலுப்படுத்தியிருப்பதுடன்,  ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் போன்ற பலதுருவக் கோட்பாட்டு அமைப்புகளையும் வலுப்படுத்திட மிகவும் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது, அமெரிக்கா கோரும் ஒருதுருவக் கோட்பாட்டிற்கு எதிராக சர்வதேச உறவுகளில் பல்துருவக் கோட்பாட்டை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்திடும்.

உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தைகள்

1.51      நாம் முன்பே குறிப்பிட்டதுபோல, அமெரிக்காவும், இதர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளும் இரு நாடுகளுக்கு இடையிலான விதத்திலும் மற்றும் பிராந்திய மட்டங்களிலுமே  வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்திட பெரிதும் விரும்புகின்றன. உலக வர்த்தக அமைப்பு இனிவருங்காலங்களில் உலக வர்த்தக விதிகளைத் தீர்மானிக்கக்கூடிய விதத்தில் பிரதான அமைப்பாக இருக்காது. 160 நாடுகளுக்கும் மேல்  உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், அமெரிக்காவும் இதர முன்னேறிய நாடுகளும் இருதரப்பு மற்றும் மண்டல அளவில் ஒப்பந்தங்கள் மூலமாக, வளர்முக நாடுகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளைப் புறந்தள்ளுவதை மிக எளிதாகக் காண்கின்றன.

1.52     இந்தியா தற்போது இரண்டு பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஒன்று, இந்தியா – ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம். மற்றொன்று, ஆர்சிஇபி (RCEP) எனப்படும் மண்டல முழுமையான பொருளாதாரக் கூட்டுத்தொழில் (Regional Comprehensive Economic Partnership) என்பதாகும். இவற்றில் இந்தியா மற்றும் 10 ஏசியன், ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா உட்பட 15 நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

1.53      பாஜக அரசின் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகள், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அமெரிக்க நலன்களுக்குச் சரணடையும் விதத்தில் மாறியிருப்பதன் காரணமாக  உள்நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் மிகவும் வேகமானமுறையில் தகர்ந்து கொண்டிருக்கின்றன. இப்பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மிகவும் கமுக்கமாக நடத்தப்படுகின்றன. இப்பேச்சுவார்த்தைகளின் விவரங்கள், கடந்த காலங்களில் மேற்கொண்டதைப்போல்,  பகிரப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில்கூட அவைகள் தாக்கல் செய்யப்படுவதில்லை. இதர நாடுகளின் வாயிலாகக் கசிந்திருக்கும் பேச்சுவார்த்தைகளின் விவரங்கள்,  இந்தியா, சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்குப் பலியாகி, உலக வர்த்தக அமைப்பின் கீழான விதிகளுக்கும் மேலாகச் சென்று வர்த்தக விதிகளைத் தளர்த்தி இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இதில் மிகவும் குறிப்பாகக் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், அவற்றின் நிர்ப்பந்தங்களுக்குப் பலியாகி, இந்தியாவின் கண்டுபிடிப்பு உரிமைகள் (patent rules) தொடர்பான விதிகளைக் கூட நீர்த்துப்போகச் செய்திருப்பதாகும். இதனால் இந்தியாவிற்குள் வரும் புதிய மருந்துகளின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கும். அந்நிய நிறுவனங்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பும் இதுதொடர்பான முதலீட்டு விதிகளில் (investment rules) சமரசம் செய்துகொள்ளப்பட்டு உள்நாட்டு நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

1.54    2017 இறுதியில் அர்ஜன்டினாவின் தலைநகரான பியுனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்ற  உலக வர்த்தக அமைப்பின் அமைச்சரவைக் கூட்டத்தில் இ-வணிகம் (e-commerce) தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றுள்ளது. இ-வணிகம் என்ற வேடத்தில் வர்த்தகத்தை தாராளமயப்படுத்திட வளர்ந்த நாடுகளால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இந்த விவாதம் நடைபெற்றுள்ளது.    இ-வணிகத்தின் வரையறையின்படி அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் மின்னணு பரிவர்த்தனையின் சில வடிவங்கள் சம்பந்தப்பட்டிருக்கும். இன்றைய உலகில் அனைத்துத் துறைகளுமே அநேகமாக இதற்குள் வந்துவிடும். முன்னேறிய நாடுகள், இ-வணிகம் மூலம் நடைபெறும் வர்த்தகத்திற்கு உள்நாட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் சுங்கவரி மற்றும் இதர தீர்வைகளைக் கைவிடுவதால், இந்திய அரசாங்கத்தின் வருவாயில் மிகப்பெரிய அளவில் இழப்பிற்கு இட்டுச்செல்லும். உலக அளவில் இயங்கும் மெகா இ-வணிக நிறுவனங்களுடன் போட்டியிடும் இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை இது கடுமையாக பாதிக்கும். இந்த நடவடிக்கையை ஆப்பிரிக்க நாடுகளின் குழு எதிர்த்திருக்கிறது. ஆனால் இந்தியா இது தொடர்பாக இன்னமும் தன் நிலையினைத் தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.

1.55      இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் மீண்டும் ஒருமுறை ஒருவிஷயம் தெளிவாகியிருக்கிறது. அதாவது, உலக வர்த்தக அமைப்பில் வளர்முக நாடுகளின் தலைவனாக விளங்கிய இந்தியா, தற்போது, உலக மூலதனத்தின் இளைய பங்காளியாக நிலைப்பாட்டினை மேற்கொண்டதன் காரணமாக, அத்தகைய பங்களிப்பிலிருந்து நழுவிக்கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது.

சோசலிச நாடுகள்

1.56    சீனம்: சென்ற அகில இந்திய மாநாட்டுக்குப்பின்னர் இக்கால கட்டத்தில், சீனாவின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டு விகிதம் 7.2 சதவீதம் என்ற அளவிற்கு விரிவடைந்திருப்பதுடன், தன் நிலையை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற அளவில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அது, உலகப் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்குத் தன் பங்களிப்பினைச் செய்திருக்கிறது.  உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏற்படுத்தப்பட்ட இன்னல்களிலிருந்து மீள்வதற்காக சீனாவால் கொண்டுவரப்பட்ட முக்கியமான மாற்றம் என்னவென்றால் அது உள்நாட்டுத் தேவை மற்றும் நுகர்வை அதிகப்படுத்துவதற்குக் கவனம் செலுத்தியதாகும். இதனை உத்தரவாதப்படுத்துவதற்காக,  அது குறைந்தபட்ச ஊதியங்களை படிப்படியாக உயர்த்தியதுடன், வறுமையின் பிடியிலிருந்து 6 கோடி (60 மில்லியன்) பேருக்கும் அதிகமானவர்களை விடுவித்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகும்.   ஒவ்வோராண்டும் நகர்ப்புறங்களில் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பிற்கான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.

1.57  சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார வல்லமை, சர்வதேச உறவுகளில் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பழைய பட்டு மார்க்கத்தையும், கடல்வழி வர்த்தக மார்க்கத்தையும் பின்பற்றி, சீனா முன்முயற்சி எடுத்துள்ள ஒரு கச்சை ஒரு சாலை (One Belt One Road) திட்டத்துடன் பல நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. சீனாவால் முன்மொழியப்பட்ட ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (The Asian Infrastructure Investment Bank)யும் சுமார் 56 நாடுகளால் வரவேற்கப்பட்டிருக்கிறது. கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகள் கூட இந்த முன்முயற்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன.  சீனாவின் அதிகரித்துவரும் வல்லமைக்கு ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் போன்ற பலதரப்பு அமைப்புகள் வலுவடைந்து வருவதும் சாட்சியமாகும். சர்வதேச உறவுகளில் சீனாவின் வளர்ந்துவரும் நிலையைப் பார்த்து  எச்சரிக்கையடைந்துள்ள  அமெரிக்கா சீனாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. தென் சீனக் கடலின் விவகாரங்கள், கொரிய தீபகற்பம் மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அது தலையிட்டுக் கொண்டிருக்கிறது.  வரவிருக்கும் நாட்களில், ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், சோசலிஸ்ட் சீனாவிற்கும் இடையே  உக்கிரமான போட்டியைப் பார்த்திட இருக்கிறோம்.

1.58      சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சமீபத்தில் முடிந்த 19ஆவது காங்கிரஸ், சீனாவின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் எழுச்சியையும் பிரதிபலித்தது. கட்சிக் காங்கிரஸ், ஷி ஜிங்பீங்கை மறுபடியும் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்திருப்பதுடன், புதிய சகாப்தத்தில் கம்யூனிஸ்ட் குணாம்சங்களுடன் சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதற்கான பாதையையும் நாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு திட்ட உருவரையையும் நிறைவேற்றியிருக்கிறது.   இந்த புதிய சகாப்தம் மார்க்சிச-லெனினிசத்தின் மீது கட்டி எழுப்பப்படும் என்று அது மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது.

1.59      சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ், ‘புதிய சகாப்தத்திற்காக சீனக் குணாம்சங்களுடன் கூடிய சோசலிசத்திற்கான சிந்தனை’ என்கிற ஒரு புதிய கருத்தாக்கத்தையும் விளக்கிக்கூறியிருக்கிறது. கட்சிக் காங்கிரஸ், “புதிய சகாப்தத்தில் சீன சமூகம் எதிர்கொண்டிருக்கிற பிரதான முரண்பாடு, சமன்செய்யப்படாத மற்றும் போதுமான அளவிற்கு இல்லாத வளர்ச்சிக்கும், மக்களின் சிறந்ததோர் வாழ்க்கைக்காக  அதிகரித்து வரும் தேவைகளுக்கும் இடையேயான முரண்பாடே. எனவே, நாம் நம் மக்களை மையப்படுத்தி வளர்ச்சித் தத்துவத்திற்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வதைத் தொடர்வதுடன், அனைத்து அம்சங்களிலும் மனித குல வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொருவருக்கும் வளமையைக் கொண்டுவருவதற்குமான பணியைத் தொடர்ந்திட வேண்டும்,”  என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.

1.60      சமன்செய்யப்படாத மற்றும் போதுமான அளவிற்கு இல்லாத வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள கூர்மையான பிரச்சனைகளை சரி செய்திட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், சீர்திருத்தங்களுக்கும், திறந்து விடுவதற்குமான பாதையைத் தொடரவும் கட்சி காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. இக்காலகட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஊழலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தி இருக்கிறது மற்றும் உயர்மட்டத் தலைவர்களில் சிலரைக்கூட விட்டுவிடாமல் கவனம் செலுத்தி தண்டித்திருக்கிறது. கட்சிக் காங்கிரஸ் இந்தப் போராட்டத்தைத் தொடரவும், மேலும் கட்சியை அனைத்துவிதமான தீய குணங்களிலிருந்தும் முழுமையாகச் சுத்தப்படுத்தி வலுப்படுத்திடவும் தீர்மானித்திருக்கிறது.

வியட்நாம்:

1.61     வியட்நாம் இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக நீடிப்பது தொடர்கிறது. இக்காலகட்டத்தில் அதன் பொருளாதாரம் சராசரியாக 6.3 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இருப்பினும்கூட, அது தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்டிருந்த சில குறியீடுகளை எட்டுவதில் தோல்வியடைந்திருக்கிறது. உதாரணமாக, 2020க்குள் நவீன தொழில்மயமானதாக நாட்டை மாற்ற வேண்டும் என்று குறியீடு நிர்ணயித்திருந்தது. எனினும் உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இதனை எய்திட முடியவில்லை. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 12ஆவது காங்கிரஸில், தொழில்மயப் பாதையில் நாட்டை இட்டுச்செல்வது என்கிற அதன் புதுப்பித்தல் (டொய் மொய்)  கொள்கையைத் தொடர்வது என்று தீர்மானித்திருக்கிறது. மேலும் கட்சிக் காங்கிரஸ், “தேச சுதந்திரம் மற்றும் சோசலிசத்தை அடைவது என்கிற லட்சியத்தில் உறுதியாக இருந்திடும் அதே சமயத்தில், மார்க்சிசம்-லெனினிசத்தையும், ஹோசிமின் சிந்தனையையும் வளர்த்தெடுப்பதும், ஆக்கபூர்வமாக அவற்றைப் பிரயோகிப்பதும், புதியசிந்தனைகளையும் வழிமுறைகளையும் கண்டுபிடிப்பதில் தீவிரமாகச் செயல்படுவதைத் தொடர்வதும் தவிர்க்கமுடியாததாகும்,” என்றும் நிறைவாகக் குறிப்பிட்டிருக்கிறது.

1.62     வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 12ஆவது காங்கிரஸ், புதுப்பித்தல் கொள்கைகளை அமல்படுத்தும்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள சில சிரமங்களையும், சவால்களையும் அடையாளம் காட்டியிருந்தது.  இக்காலத்தில் மக்களின் தனிநபர் ஆண்டு வருமானம் அதிகரித்திருந்த போதிலும், நகரங்களுக்கும் தொலைதூர குக்கிராமங்களுக்கும் இடையிலான சமத்துவமின்மைகளும், வேறுபாடுகளும்  அதிகரித்துக்கொண்டிருப்பதையும் அது பார்த்தது. கட்சியை வலுப்படுத்துவதன் மூலமும், வியட்நாமின் எதார்த்தத்துடன் ஆக்கபூர்வமான முறையில் மார்க்சிச-லெனினிசம் மற்றும் ஹோசிமின் சிந்தனையை பிரயோகிப்பதன் மூலமும்  இப்பிரச்சனைகளை எதிர்கொள்வது என்றும் கட்சிக் காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது.

1.63      சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் சமீப காலங்களில் தங்களுடைய உயர்மட்ட அளவிலான தூதுக்குழுக்களைப் பரிமாற்றம் செய்துகொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான  சச்சரவுக்குரிய பிரச்சனைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்த்துக்கொண்டிடவும் தீர்மானித்திருக்கின்றன. இது ஓர் ஆக்கபூர்வமான வளர்ச்சிப் போக்காகும். இது, இருநாடுகளுக்கும் இடையேயும் மேலும் தென் சீனக் கடலின் அண்டை நாடுகளிலும்  நிலவும் பதற்றத்தைத் தணிக்க உதவிடும்.

1.64     கியூபா: அமெரிக்காவினால் மிகவும் நேர்மையற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும்  திணிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக கியூபாவின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தொடர்கிறது. ஒபாமாவால் இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வது போன்று மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பலவற்றையும் டொனால்டு டிரம்ப் கைவிடவும், மாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்தவும்  தொடங்கியிருக்கிறார். வெனிசுலா போன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்கள் கியூபா பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அடிக்கடி நிகழும் கடும் சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களும் பொருளாதாரத்தின் மீது கடுமையானமுறையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில், கியூபா அரசும், கியூபா கம்யூனிஸ்ட் கட்சியும் (PCC), வரும் 2018இல் ராவுல் கேஸ்ட்ரோ (Raul Castro) ஓய்வுபெற இருப்பதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, பொறுப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்திட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றன. மாபெரும் தலைவராக (legendary leader-ஆக) விளங்கிய பிடல் காஸ்ட்ரோ மறைவிற்குப் பின்னர் இது தொடர்கிறது. இவ்வளவு சிரமங்கள் இருந்தபோதிலும்கூட, கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னே அணிதிரண்டு, சோசலிச அமைப்பைப் பாதுகாத்திடவும், நாட்டைப் பலவீனப்படுத்திட ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் உறுதியுடன் தடுத்து முறியடித்திடவும் உறுதிபூண்டுள்ளனர்.

1.65      கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது காங்கிரஸ், கியூபாவில் சோசலிசக் கட்டுமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதை குறித்த விவரங்களை விளக்கிடும் ஆவணங்கள் சிலவற்றை விவாதித்து, நிறைவேற்றி இருக்கிறது. இந்த ஆவணங்கள் எதிர்காலத்திற்கான பாதையையும், வளமான மற்றும் நிலையான சோசலிச சமூகத்திற்கான கட்டுமானத்தையும் அமைத்துத் தந்திருக்கின்றன. மேலும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டின் பொதுச் சொத்துக்களிலும், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக சேவைகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதால் கியூப சோசலிசத்தின் கீழ் அக்கொள்கைகளை ஒருபோதும் பிரயோகித்திட மாட்டோம் என்றும் கட்சி காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. மேலும், தேசப் பொருளாதாரத்தின் பிரதான வடிவமாக அடிப்படை உற்பத்திச் சாதனங்களின் உடைமை உரிமை மக்களிடம் இருப்பது தொடரும் என்றும் கட்சி காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது.

1.66    கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK – Democratic People’s Republic of Korea): அமெரிக்காவின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளிவிட்டு, கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, தன்னுடைய ஏவுகணை சோதனைத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது, ஓர் அணுசக்தி மூலம் ஏவப்படும் ஏவுகணையையும் உருவாக்கியுள்ளது.  தென் கொரியாவின் ஆதரவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் எவ்விதமான  இராணுவத் தாக்குதலிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு நிச்சயமான உத்தரவாதமாக இது இருந்திடும் என்று வட கொரியா (னுஞசுமு) இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும் தன் ராணுவத் தளங்களை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது, தென் கொரியாவுடன் தன்னுடைய இராணுவப் பயிற்சிகளை அணு ஆயுதங்களுடன் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. ஏற்கனவே அமெரிக்கா தன்னுடைய தாட் (Thaad) ஏவுகணை பாதுகாப்பு முறையை தென் கொரியாவில் நிறுவியிருக்கிறது.  வட கொரியாவை நேரடியாகவே அச்சுறுத்த வேண்டும் என்றும் மேலும் மக்கள் சீனக் குடியரசுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திட வேண்டும் என்கிற நோக்கத்தோடும்தான் கொரிய தீபகற்பத்தில் இவ்வாறு அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.  இத்தகைய அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காகவே  தான் ஏவுகணை திட்டங்களை மேற்கொண்டுவருவதாக வடகொரியா கூறியிருக்கிறது.

1.67     வட கொரியாவிற்கு எதிராகக்  கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக அது, தன் நாட்டு மக்களின் உணவு மற்றும் அவசியத் தேவைகளுக்காக, தன்னிடம் அபரிமிதமாக இருந்துவரும் கனிம வளங்களை வர்த்தகரீதியாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், அமெரிக்கா-தென் கொரியா இராணுவக் கூட்டணியிலிருந்து வருகின்ற தற்போதைய அச்சுறுத்தலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வட கொரியா தன்னுடைய இராணுவத்தை தயார் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காக  தன்னுடைய ஆதாரங்களை  ஏராளமாகச் செலவு செய்துகொண்டிருக்கிறது.  தென் கொரியாவுடன் ஒத்துழைப்புடன் இருப்பதற்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குளிர்கால ஒலிம்பிஸ் பந்தயத்தில் சமீபத்திய கூட்டு கொரிய அணியினரின் பங்கேற்பு வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகியவற்றுக்கிடையேயான உறவுகளில் இருந்த கடுமையைக் குறைக்கக்கூடிய விதத்தில் நடந்துள்ள ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

நம் அண்டை நாடுகள்:

பாகிஸ்தான்:

1.68     பாகிஸ்தானில் முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்கிறது. மிக அதிக எண்ணிக்கையில் நடைபெறும்  பயங்கரவாதத் தாக்குதல்களில் எண்ணற்ற அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கிறது. ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கப் படைகள் விலகிக் கொள்ளும் என்று ஒபாமா அறிவித்ததற்குப்பின்னர், அடிப்படைவாதிகளுடைய படையினரின் செயல்பாடுகள் மேலும் சிக்கலான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. எனினும், தற்போது டொனால்டு டிரம்ப் இங்கே இருந்து வரும் அமெரிக்கப் படையினரை மேலும் வலுப்படுத்திடத் தீர்மானித்திருக்கிறார். இது பாகிஸ்தானில் எத்தகைய பாதிப்பைக் கொண்டுவரும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சமீபத்தில், ஐ.நா.வில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் சர்வதேச அளவில் மேற்பார்வையுடன் கூடிய பேச்சுவார்த்தை தீர்வினை (negotiated settlement) கோரியிருந்தது.

1.69      அரசியல் ரீதியாக, பனாமா செய்தி தாள்களில் வெளியான விவரங்களின் காரணமாக, ஜனாதிபதி நவாப் ஷெரீப் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இராணுவத்தினரின் ஆதிக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, தன்னிடம் கூட்டாளியாக வர  விரும்பும் இந்தியாவை, சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தன்னுடைய கொள்கைக்காக,  தன்னுடைய உறுதியான கூட்டணி நாடாக ஏற்றுக்கொள்ளும் முயற்சிகளைத் தொடரும் அதேசமயத்தில்,  பாகிஸ்தானுடனும் வழக்கமாகவுள்ள தன்னுடைய உறவுகளைத் தொடர்கிறது. இதனால் அவ்வப்போது கூறப்பட்டுவரும் சில மோசமான விமர்சனங்கள் குறித்து அது பொருட்படுத்தவில்லை. பாகிஸ்தானுடன் இந்தியாவின் உறவுகள் மேலும் சிதிலமடைந்து வருகின்றன. 2016 செப்டம்பரில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல்கள் (surgical strikes) காரணமாக, பயங்கரவாதத் தாக்குதல்கள் பெரிய அளவுக்கு ஒன்றும் குறையவில்லை. இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலொசகர்களுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடந்ததாகக் கூறப்பட்டபோதிலும், இருநாடுகளுக்கும் இடையே அனைத்து மட்டங்களிலும்  நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.  உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான உடனடி சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை. இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள முரட்டுத்தனமான பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாடு, இந்துத்துவா தேசியவாதத்தின்  பாஜக-ஆர்எஸ்எஸ் படைக்கலத்தினரை ஊட்டி வளர்க்கிறது. இந்தியாவில் வகுப்புவாத அணி திரட்டலை பயன்படுத்தி உள்நாட்டில் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

வங்கதேசம்:

1.70    வங்க தேசத்தின் பொதுத்தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால், நாட்டில் அடிப்படைவாதிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா  2017இல் முற்பகுதியில் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்திருந்தார். இவ்வாறு ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் வங்க தேச அரசாங்கத்தின் தலைவர் அரசுமுறைப் பயணமாக அதிகாரபூர்வமாக இந்தியாவிற்கு வந்தார். இந்தப் பயணம் வெற்றிகரமானமுறையில் அமைந்தது என்று இரு நாடுகளும் கூறிவருகிறபோதிலும்,  டீஸ்டா ஆற்றின் நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சனை, தீர்வுகாணப்படாமல் தொடர்கிறது. இது தொடர்பாக ஐமுகூ அரசாங்கத்திற்கும், ஷேக் ஹசினா அரசாங்கத்திற்கும் இடையே முன்பு செய்துகொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை மேற்கு வங்க முதலமைச்சர் வெளிப்படையாகவே எதிர்த்துள்ளார். தற்போதைய பாஜக மத்திய அரசாங்கமும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண உருப்படியான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இந்தியப் பிரiஜைகள் சட்டத்திற்கு (Indian Citizenship Act) பாஜக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அங்கிருந்து அகதிகளாக வருபவர்களில் இந்துக்களுக்கு குடி உரிமை அளிப்பதற்கும், அதே சமயத்தில் முஸ்லீம்களுக்கு குடி உரிமையை மறுப்பதற்கும் வகைசெய்கிறது. இது இருநாடுகளுக்கும் இடையேயான ஓர் எரிச்சலூட்டும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்தியாவில் இந்துத்துவா வகுப்புவாதம், வங்க தேசத்தில் முஸ்லீம் அடிப்படைவாதத்தை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் ஊட்டி வளர்க்கிறது. 2018இல் வங்க தேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களில் இந்த விஷயங்கள் அநேகமாக முன்னுக்குக் கொணரப்பட்டு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் வலுப்பெறும் என்றே தெரிகிறது. இது இருநாடுகளுக்கும் இடையேயான  நட்புறவை மேலும் கடுமையாகப் பாதிக்கும்.

1.71     ரோஹின்யா நெருக்கடி தொடர்பாகவும், வங்கதேசத்திற்குள் ஏராளமாக வரும் அகதிகள் தொடர்பாகவும், மியான்மருடன் நடைபெறவுள்ள சந்திப்பின்போது மத்தியஸ்தம் செய்து வைக்குமாறு இந்தியாவை வங்கதேசம் கேட்டுக்கொண்டது. எனினும் இந்தியா அதற்கு ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் சீனா இப்பிரச்சனைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்காக ஒரு மூன்று கட்ட திட்டத்தை முன்வைத்திருக்கிறது. (அ) போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவது (இப்போது இது நடந்திருக்கிறது.), (ஆ) மியான்மரும் வங்க தேசமும் தொலைத்தகவல் தொடர்புகளை துண்டித்திடாது வைத்திருக்க வேண்டும், அகதிகளைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக ஒரு சுமுகமான தீர்வுக்கான விவாதங்களைத் தொடர்ந்திட வேண்டும், மற்றும் (இ)  மோதலுக்கு மூல காரணமாக அமைந்திருந்த ராகின் (Rakhine) மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு நீண்ட கால தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். வங்க தேசத்திற்கு சமீபத்தில் பயணம் செய்த சீன அயல்துறை அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைகளை வங்க தேசம் வரவேற்றிருக்கிறது. வங்கதேசம் சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை (One Belt, One Road) திட்டத்தில் ஏற்கனவே தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. மேலும் தெற்காசியாவில் நாடுகளுக்கு இடையேயுள்ள தாவாக்களைத் தீர்ப்பதற்கு சீனா முன்வைத்திடும் ராஜதந்திர  யோசனைகளையும் (diplomatic initiatives) முதல்தடவையாக வரவேற்றிருக்கிறது.

1.72      நேபாளம்: நீண்டகாலமாக இருந்து வந்த அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசாங்கத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டதற்குப் பின்னர் தற்போது நேபாளம் இறுதியாக தங்களுடைய குடியரசு அரசமைப்புச்சட்டத்தை பிரகடனம் செய்திருக்கிறது. அதன் கீழ் 2017 நவம்பரில் தேர்தல்கள் நடந்திருக்கின்றன.

1.73      தேர்தலில் போட்டியிடுவதற்காக நேபாள கம்யூனிஸ்ட்  (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சிக்கும் இடையே ஒரு கூட்டணி அமைந்ததானது நேபாளத்தில் சமீபத்தில் நடந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்காகும். இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி. இந்த கம்யூனிஸ்ட் கூட்டணி இத் தேர்தல்களில் மகத்தான வெற்றியை ஈட்டியது. கூட்டாட்சி முறைசாரந்த  நாடாளுமன்றத்தில் (கநனநசயட யீயசடயைஅநவே) கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் திகழ்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் கூட்டணி மொத்தம் உள்ள ஏழு மாகாணங்களில் ஆறைக் கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையுடன் ஒரு புதிய துவக்கம் வந்துவிட்டதைப் பிரகடனம் செய்கிறது. நேபாளத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு அமைந்துள்ள குடியரசு மூலம் ஏற்படும் முன்னேற்றம் நேபாளத்தில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தெற்காசியாவிலும் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கான ஒரு நீண்ட நெடிய செல்வாக்கை ஏற்படுத்திடும்.   நேபாள கம்யூனிஸ்ட்  (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியும், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் விரைவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக இரண்டறக் கலந்திடுவோம் என்று பிரகடனம் செய்திருக்கின்றன. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்காகும்.

1.74     இலங்கை: இலங்கையில் நடைபெற்றுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி அரசாங்கம் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, தற்போது ஒரு புதிய வரைவு அரசமைப்புச்சட்டத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறது.  தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கு அதிகபட்ச சுயாட்சியை அளிப்பதன் மூலமே ஐக்கிய இலங்கையின் நலன்கள் காக்கப்படும். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில், இலங்கைப் பிரதமர்  ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு விஜயம் செய்து, பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவான அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

1.75    பூட்டான்: டோக்லாம் பிரச்சனை மீது சமீபத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த முட்டுக்கட்டைக்கு  இறுதியில் இரு தரப்பினரும் தங்களுக்கு வெற்றி என கூறிக் கொள்ளும் வகையில் தீர்வுகாணப்பட்டுள்ளது.  ஓர் இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து பூடானுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த தாவாவின் அடிப்படையில் இந்தத் தகராறு எழுந்தது. பூட்டான் கிட்டத்தட்ட இப்பிரச்சனையில் நடுநிலை வகித்தபோதிலும், இவ்வாறு பிரச்சனை எழுந்தது. பூட்டான் சமீபத்தில் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் (Double Taxation Avoidance Agreement) ஒன்றை வங்க தேசத்துடன் செய்துகொண்டிருக்கிறது. சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை (One Belt One Road) திட்டத்தில் ‘சார்க்’ நாடுகளில் சேராமால்  இருக்கும் நாடுகளில்  இந்தியாவிற்கு அடுத்து, பூட்டானும் ஒன்று.  சீனாவின் ஒரு கச்சை ஒரு சாலை திட்டத்தில் மற்ற அனைத்து நாடுகளும் சேர்ந்துகொள்ள ஆர்வம் காட்டியிருப்பதும், அதன்காரணமாக தங்கள் நாடுகளுக்குள் சீனாவின் வளங்கள் கொண்டுவரப்பட்டு, தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கக்கூடிய சூழலில், இதில் சேர்ந்துகொள்வதற்கு இந்தியா காட்டிவரும் முரட்டுத்தனமான எதிர்ப்பு எதிர்காலத்தில் நம் அண்டை நாடுகளுடனான உறவுகளை சிக்கலாக்கக் கூடும்.

மாலத்தீவு:

1.76    மாலத்தீவில் மிகவும் ஆழமான நிகழ்ச்சிப்போக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாலத்தீவு உச்சநீதிமன்றம், பயங்கரவாதக் குற்றத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்து  நாடு கடத்தப்பட்டிந்த முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை அவர்மீது 2015ஆம் ஆண்டு சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்புரைத்தது. மேலும் உச்சநீதிமன்றம் 12 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் பதவியில் அமர்த்தியும் ஆணை பிறப்பித்தது. தற்போது ஆட்சி நடத்திவரும் மாலத்தீவின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்திருக்கிறார். இது விரிவான அளவில் எதிர்ப்புக்கிளர்ச்சிகளையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி இருக்கின்றன. ‘சார்க்’ நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிப்போக்குகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

கம்யூனிஸ்ட் ஒருமைப்பாடு

1.77     உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒவ்வோராண்டும் நடைபெறுவது தொடர்கிறது.  2017இல் ருஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வு இக்காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப் போல, முதலாளித்துவத்திற்கு ஓர் அரசியல் மாற்று என்ற முழக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் வலுப்படுத்தப்படவில்லை என்றால் – முதலாளித்துவ ஆட்சியாளர்களின்  கொள்கைகளால் அதிருப்திக்கு ஆளாகியுள்ள மக்களை இக்கட்சிகளின் தலைமையில் அணிதிரட்டவில்லை என்றால், மூலதனத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதும், ஏகாதிபத்திய உலகமயத்தால் ஏவப்படும் கருணையற்ற சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும் சாத்தியமல்ல.

1.78      சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவு என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்குத் தன் பங்களிப்பினைச் செய்யக்கூடிய விதத்தில், இந்தியாவில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய நாட்டில் ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார மற்றும் பல்வேறு விதமான தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களை விரிவுபடுத்தி, வலுப்படுத்துவதில் தன் பங்கை செலுத்தும் வகையிலும் கட்சி முன்னேற வேண்டும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவோம்

1.79      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பாஜக அரசாங்கம் மிகவும் இழிவான முறையில் சரணாகதி அடைந்திருப்பதற்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்கீழ் ஓர் இளைய பங்காளியாக அடிபணிந்து செயல்படும் ஒரு கேந்திரக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றியிருக்கும் நிலைக்கு எதிராகவும் இந்திய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்திடும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பொருளாதாரம், போர்த்தந்திரம், இராணுவம் மற்றும் அயல்நாட்டுக் கொள்கை என அனைத்து முனைகளிலும் பாஜக அரசாங்கம் இத்தகைய இளைய பங்காளி நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பதனை எதிர்த்திடும்.

1.80      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனம் நடத்தி வரும் போராட்டத்திற்கும், தாய்நாட்டு உரிமை மறுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் அதனைப் பெறுவதற்காக நடத்திவரும் போராட்டத்திற்கும் முழு ஆதரவு அளித்து வருவதைத் தொடரும்.

1.81      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தற்போதைய பாஜக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வளர்ந்துவருகின்ற அமெரிக்க-இஸ்ரேல்-இந்தியா ஒருங்கிணைப்பை கடுமையாக எதிர்த்திடும்.

1.82      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தனிப்பட்ட குழுக்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ மேற்கொள்ளப்படும்  பயங்கரவாதம் மற்றும் அதன்  அனைத்து விதமான வடிவங்களையும், வகைகளையும் உறுதியுடன் எதிர்த்து நிற்கும்.

1.83      இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சீனா, வியட்நாம், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, கியூபா மற்றும் லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகளுடனான தன்னுடைய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்கிறது. அவை தங்கள் தங்கள் நாடுகளில் சோசலிசத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

1.84      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அடிப்படைவாதம், மத வெறிக் கொள்கை, பகுத்தறிவற்ற கொள்கை மற்றும் படுபிற்போக்கு சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் அனைத்து சக்திகளுடனும் தன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக்கொள்கிறது.

1.85      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), உலகம் முழுதும் செயல்பட்டு வருகின்ற, குறிப்பாக தெற்கு ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகின்ற இடதுசாரி புரட்சிகர இயக்கங்களுடன் தன் தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறது.

1.86      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஏகாதிபத்தியத்தால் பல்வேறு வழிகளிலும் குறி வைக்கப்பட்டுள்ள சோசலிச நாடுகளுக்கு தன்னுடைய முழு ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.

1.87      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), உலக அளவில் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் அனைத்து வடிவங்களுக்கும் தன் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் அதே சமயத்தில்,  நவீன தாராளமயத்திற்கு எதிராகவும், அமெரிக்க இராணுவத் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும், மிகவும் ஆபத்தானமுறையில்  மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் புவிவெப்பமயமாதலுக்கு எதிராகவும், உலகம் முழுவதும் ஒரே சீரான சுற்றுச்சூழல் நீதிக்காக நடைபெறும் போராட்டத்திற்கும், தன் ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. அதே சமயத்தில், இவை அனைத்தையும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவந்து, ஒரு வலுவான, அனைவரையும் தழுவக்கூடிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை உலகில் உருவாக்கிட  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதிகாட்டும்.

தேசிய நிலைமை:

2.1    மோடி அரசின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டு கால ஆட்சி, வலதுசாரி எதேச்சாதிகார-வகுப்புவாத ஆட்சியின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. உழைக்கும் மக்களின் மீது அனைத்து வகை தாக்குதல்களையும் விளைவிக்கும் நவ-தாராளவாத கொள்கைகளை தீவிரப்படுத்தியது; நாட்டின்  மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்பை அச்சுறுத்துவதோடு, சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிரான தாக்குதல்களைத் தொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் .உடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான விடாப்பிடியான முயற்சி; அமெரிக்காவுடன் கேந்திர கூட்டணியை வலுப்படுத்தி,  ஒரு இளைய கூட்டாளி பாத்திரம் வகிப்பது; நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்தி, அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை சீர்குலைப்பதன் மூலம் எதேச்சாதிகார கட்டமைப்பை நிறுவுதல் போன்றவை இந்த ஆட்சியின் குணங்களாக உள்ளன.

2.2     கட்சியின் 21 வது காங்கிரஸ் அரசியல் நிலைமையை பின்வருமாறு மதிப்பிட்டது: “2014 மே மாத மக்களவைத் தேர்தல், அரசியல் சூழ்நிலையில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.  பாரதிய ஜனதா கட்சி 31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தாலும், மக்களவையில் அறுதி பெரும்பான்மையை முதல் முறையாகப் பெற்றுள்ளது. இது நவ-தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றவும், ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் இந்துத்துவா சக்திகள் தங்கள் வகுப்பு வாத நிகழ்ச்சி நிரலை முழுஅளவில் முன்னெடுக்கவும் வகை செய்யும் ஒரு வலதுசாரித் தாக்குதலுக்குக் களம் அமைத்துள்ளது. அத்தகைய ஒரு சூழ்நிலை வளர்ந்து வரும் எதேச்சாதிகாரத்தை முன்வைக்கிறது”. (பாரா 2.1)

2.3 தீர்மானம் பின்வரும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளது:

(i)     “பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அதிகரிப்பதற்கான அழுத்தத்துடன்  நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாகத் தொடர்வது; அதிகரிக்கும் தனியார்மயமாக்கல்; தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை நீர்த்து போக வைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக பி.ஜே.பி அரசாங்கத்தின் 11 மாத கால ஆட்சி உள்ளது.

(ii)     “மக்களுக்கு எதிரான இப்பெரும்தாக்குதல்கள் என்பது, தற்போதைய சூழலில் ஆளும் வர்க்கங்களுக்கு எதேச்சாதிகாரத்தை அவசியமாக்குகிறது”.

(iii)     “ஆட்சியில் பா.ஜ.க.  இருப்பது மற்றும் ஆர்.எஸ்.எஸ்  உடைய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது ஆகியவற்றால் நிலைமையில் ஒரு குண மாற்றம் ஏற்பட்டுள்ளது”.

(iv)     “மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் அடிப்படையையே அச்சுறுத்தும் சீர்குலைவு இந்துத்வா திட்டத்தை முன்னெடுக்க பன்முக முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பது வெளியாகிக் கொண்டிருக்கிறது”.
(v)     “அமெரிக்காவுடன் கேந்திர உறவுகளை வலுப்படுத்துவதை மோடி அரசாங்கம்  தீவிரமாக்கி வருகிறது.”
(vi)     “ஜனநாயக உரிமைகள் மீதான தீவிர அத்துமீறல்களும், சிவில் உரிமைகள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கும் எதேச்சாதிகார போக்குகளைப் பிரதிபலிக்கின்றன.”

தற்போதைய சூழ்நிலை:

2.4     கட்சி காங்கிரஸ் முடிந்து மூன்றாண்டு காலம் ஆன நிலையில், இந்த பகுப்பாய்வு மற்றும் அரசியல் சூழ்நிலை புரிதல் சரியானது என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படுகிறது. வலதுசாரி தாக்குதலை உள்ளடக்கிய அனைத்து கூறுகளும் தீவிரப்படுத்தப்படுவதே, அதன் பின்னரான காலத்திலும் நடைபெறுகிறது.

பொருளாதார சூழ்நிலை

2.5     கடந்த மூன்று ஆண்டு, ஒன்பது மாதங்களில் மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடியின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ளது. புள்ளிவிவரங்களைத் திருத்துவதன்  மூலம் பொருளாதார மந்த நிலையை மறைக்க அரசாங்கம் முயன்ற போதிலும், உண்மை வெளியே வந்துவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி  புள்ளி விவரம் மேம்பட்ட நிலையில் காட்சி அளிக்க  தொடர்ச்சியாக திருத்தம் செய்யப்பட்ட போதும், அவ்வாறான ஜி.டி.பி தொடர்வரிசைகளின்படியே, 2015-16ல் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 2017-18 க்கு 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் ஆகும். சுதந்திர இந்தியாவில் முதல் தடவையாக, 2013-14 மற்றும் 2016-17 க்கு இடையில்  வேலைவாய்ப்பு முழுமையாக சுருங்கி இருப்பதாக தொழிலாளர் துறை  புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2.6     பொருளாதாரத்தின் அடிப்படை துறைகளில் குறிப்பாக முறைசாரா துறைகளில் பொருளாதார மந்தநிலை கூர்மையாக உள்ளது. மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 1.7 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. பொது செலவினத்தில் வெட்டுக்கள், ஆதரவு விலை குறைப்பு, அரசு கொள்முதல் குறைப்பு, மற்றும்  இடுபொருள் ஒதுக்கீட்டை தனியார் வசம் ஒப்படைத்து, சில முக்கிய இடுபொருட்களின் மீது அதிக மறைமுக வரி விதிப்பு செய்ததன் விளைவாக உற்பத்தி செலவு செங்குத்தாக உயர்வு  ஆகிய காரணங்களால் விவசாய வருமானம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. பயிர் காப்பீடு, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கான ஆதாயமாக மாறியுள்ள அதே நேரத்தில், பரவலான பயிர் இழப்பிற்கு காப்பீட்டு  நிவாரணம் விவசாயிகளுக்கு  மறுக்கப்படுகிறது.

2.7     வெவ்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் உற்பத்தித் துறை வளர்ச்சி குறித்த மதிப்பீடுகள் முரண்பாடான போக்குகளைக் காட்டுவது என்பது, இந்த புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் பற்றிய நம்பிக்கையூட்டும் படத்தைக் காட்டிட திரித்து கூறப்படுகின்றது என்கிற பரவலான சந்தேகத்திற்கு வலு சேர்க்கின்றது. முறைசாரா உற்பத்தி, ஜி.எஸ்.டி இன் அமுலாக்கம் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை பிரிவான, முறைசாரா தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறுகியகால அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் சரியாகப் பிரதிபலிக்காது.   ஆனால், தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (IIB) போன்ற குறியீடுகளும் கூட, சில தொழில்துறை பிரிவுகளில் வெவ்வேறு ஆண்டுகளில் ஏற்பட்ட திடீர்  வளர்ச்சி தவிர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை தொழில் துறைகள் மந்தமான வளர்ச்சி தான் கண்டுள்ளன எனக் காட்டுகின்றன

2.8     வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை கட்டத்தவறிய பெருநிறுவன முதலாளிகளை மென்மையாகக் கையாள  வங்கிகள்  அறிவுறுத்தப்பட்டதால்,    டிசம்பர் 2014 ல் ரூ2.6 லட்சம் கோடியாக இருந்த மொத்த செயல்படா சொத்து (வாராக் கடன்) செப்டம்பர் 2017 ல் 8.37 லட்சம் கோடியாக உயர்ந்து, வங்கித் துறை வாராக்கடன் சுமையில் அழுந்தித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் வைப்புத்தொகை அதிகமாகி இருப்பினும் கடன் விண்ணப்பிப்பு மந்தமான நிலை, வங்கிகளின் கடன் அளிப்பை குறைக்கிறது.   இந்த வைப்புத் தொகைகளின் மீதான வட்டி சுமை மேலும் பொதுத்துறை வங்கிகளின் இலாபத்தை குறைத்துவிட்டது.

2.9     பல துறை சார்ந்த காரணிகள் பொருளாதார மந்தநிலைக்குப் பங்களித்த போதினும், உயர்பண மதிப்பிழப்பு மற்றும்  ஜி.எஸ்.டி அமுலாக்கம் போன்ற கொள்கை நடவடிக்கைகளே அனைத்து முக்கிய துறைகளிலும் பேரழிவை ஏற்படுத்துவதில் முன் நின்றுள்ளன.

பண மதிப்பிழப்பு

2.10      நவம்பர் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு உயர் பண மதிப்பு நீக்க  அறிவிப்பை வெளியிட்டது. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் என்று அரசு கூறியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 98.96 சதவீதம் திரும்ப வந்து விட்டன என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் கூறின. இது, குறைந்தபட்சம் 4-5 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் வங்கிக்குத் திரும்ப வராது என்ற அரசின் கூற்றுகளை மறுதளித்தன. உண்மையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளாக அரசு சொன்ன எதுவும் நிறைவேறவில்லை.

2.11.     பணமதிப்பிழப்பின் உண்மையான நோக்கம், அரசானது பின்னர் கூறியபடி,   முறைசாரா பொருளாதாரத்தை, முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது சர்வதேச நிதி மூலதனத்திற்கான லாபகரமான வணிக வாய்ப்புகளைத் திறந்து விடுவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கை ஆகும். உண்மையில், கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் மின்-பணப்பரிமாற்றங்களைக் கொண்ட பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு நன்மை பயக்கத்தக்க ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தினை ஏற்படுத்த அரசாங்கம் உருவாக்கிய பெரு வெடிப்பு-சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது. டிஜிட்டல் பொருளாதாரம் நோக்கிய இந்த மாற்றம் என்பது நமது நிதி துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவிற்கு ஏதுவாக உள்ளது. இந்திய பெருநிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலான கடன்களை வழங்குவதற்கு வளங்களைத் திரட்டி மறைமுகமாகப் பயனளிக்கும் முயற்சி இது. யாருடைய கடன்களை மோசமான கடன்கள் என்று அரசு தள்ளுபடி செய்ததோ, அந்த பெரு நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத கடன்களால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மறு முதலீடு செய்ய பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில்  செலுத்தப்பட்ட பணம் பயன்படுத்தப்பட்டது.

2.12     பண மதிப்பிழப்பு சிறிய சில்லறை வர்த்தகர்களை மோசமாக பாதித்துள்ளது, மேலும் பல சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் (SMEs) மூடுதலால் பெரிய அளவில் வேலை இழப்புகளுக்கு வழிவகுத்தது. முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யவோ, அடுத்த விதைப்பு பருவத்தில் விதைகள் மற்றும் உரங்களை வாங்கவோ முடியவில்லை.  பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களில் நூறுபேர்களுக்கு மேல் இறந்தனர். கூட்டுறவு வங்கிகளின் பரிவர்த்தனைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், குறிப்பாக  கேரளா போன்ற மாநிலங்களில், கிராமப்புற மக்களின் சிரமங்களை அதிகப்படுத்தியது. பொதுத்துறை வங்கிகளின் மீதான மக்கள் நம்பிக்கை  கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி

2.13     ஜி.எஸ்.டி அறிமுகம் என்பது கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும், இது மக்களின் மீது சுமைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நவீன தாராளவாத தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஜி.எஸ்.டி, மாநிலங்களின் உரிமைகளை பாதித்து, கூட்டாட்சி அமைப்பை பலவீனமாக்கி விட்டது. மேலும் மறைமுக வரி விதிப்பு அளவு அதிகரித்துள்ளது. பொது மக்கள், சிறு, குறு நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் முறைசாராதுறை தொழில்களில் புதிய சுமைகளை ஜி.எஸ் .டி.சுமத்தி உள்ளது.    தொழில்கள் மற்றும் சேவைகளின் பல்வேறு துறைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் அதன் சார்பு துறைகளும் ஜி.எஸ்.டி. யின் தாக்குதலை எதிர் கொண்டுள்ளன. ஜி.எஸ்.டி பல பொருட்களின் விலைகளை குறைத்துவிட்டது என்ற கூற்றுக்கு மாறாக, அநீதியான வரி அமைப்பு காரணமாக, பல பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்துள்ளது.

வங்கித் துறை –  கூட்டுக் களவாடல் முதலாளித்துவம்

2.14     வங்கி அமைப்பு பெரிய அளவிலான வாரக்கடன் சுமையால் பாதிக்கப்பட்டு  உள்ளது. முந்தைய ஐ.மு.கூ. அரசாங்கமும், தற்போதைய மோடி அரசாங்கமும் முன்னிலைப்படுத்தியுள்ள கூட்டுக் களவாடல்  முதலாளித்துவத்தின் ஓர் அம்சம் இது. வாராக்கடன்களில் 85 சதவீதம் பெருநிறுவனங்களும் பெருவணிகமும் செலுத்த வேண்டிய தொகையே. மோடி அரசின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ரூ. 2,29,082 கோடி மதிப்புள்ள   கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

2.15     மேலும், நிதி தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு கார்ப்பரேஷன்  அமைக்க வழி செய்யும் மசோதா ஒன்றினை அரசு தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஒரு வங்கியை விற்க, மற்றொன்றுடன் ஒன்றிணைக்க அல்லது மக்களின் வைப்புத்தொகையைக் கொண்டே வங்கி திவாலாவதிலிருந்து மீட்கும் அதிகாரம் இக்கார்ப்பரேஷனுக்கு அளிக்கப்படும். இந்த புதிய ஏற்பாடு,  பொதுத்துறை வங்கிகளை மூடுவது அல்லது ஒன்றிணைப்பதன் மூலம் தனியார்மயத்தை ஊக்குவிக்க ஒரு கருவியாக செயல்பட ஏதுவாக முன்மொழியப்படுகிறது. மேலும்,  பெருவணிகத்திற்கு வழங்கிய தாரளமான பெரும் கடனால் திவாலாகும் வங்கியைத் தாங்கிப்பிடித்து நிறுத்திட வைப்புதாரர்களின் பணத்தை ஒதுக்கீடு செய்ய இந்த சட்டத்தின் பிரிவை பயன்படுத்த முடியும்.

தனியார்மயமாக்குதல்

2.16     நவீன தாராளமய கொள்கைகளின் தீவிரமான அமலாக்கத்தின்  ஒரு பகுதியாக, மோடி அரசாங்கம் ஒரு பெரிய அளவிலான தனியார்மயமாக்கலை ஆரம்பித்துள்ளது. இது மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது: (அ) பாதுகாப்பு தளவாட உற்பத்தி, இரயில்வே, வங்கி,  போன்ற  அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குதல்; (ஆ) பொதுத் துறையை 100 சதவிகிதம்  அன்னிய நேரடி மூலதனத்திற்கு  திறந்து விடுதல்;  (சி) மின் விநியோகம், நீர் வழங்கல் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை சேவைகளை தனியார்மயமாக்குதல். இதன் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு  மிகப் பெரிய வாய்ப்பினை வெகுமதியாக மோடி அரசாங்கம்  வழங்குகிறது.

2.17     தனியார்மயமாக்கலை அமல்படுத்துவதில் முதன்மை அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது. அது 235 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 74 நிறுவனங்கள் மூடப்படவோ அல்லது திறன்சார் விற்பனை பாதை மூலம்  விற்கப்படவோ வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 20 பொதுத்துறை நிறுவனங்களுக்கு திறன்சார் முதலீடு விலக்கலை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரயில்வே, வங்கிகள் மற்றும் மின் வழங்கல் நிறுவனங்கள் போன்ற அரசு ஏகபோகங்கள் தனியார் பங்கேற்பிற்கு திறந்து விடப்பட வேண்டும் என்று ஆயோக் கூறியுள்ளது.

2.18     பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கல் ஏற்பாடு திட்டமிடப் பட்டுள்ளது. இதில் பிரதான இலக்கு பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை ஆகும். பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் விற்பனை செய்யப்படும் ஏற்பாடு உள்ளது. திறன்சார் பங்கேற்பு திட்டத்தின் கீழ், இந்திய பெரும் தனியார் கம்பனிகள், வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்களோடு சேர்ந்து  நீர்மூழ்கி கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் போன்றவற்றைத் தயாரிக்க அழைப்பு விடப்படுகின்றது.

2.19     எஃகுத் துறையிலுள்ள துர்காபூர் அலாய் ஸ்டீல் தொழிற்சாலை, சேலம் மற்றும் பத்ராவதி சிறப்பு ஸ்டீல் தொழிற்சாலைகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. ரயில்வேயில்,  இருப்புபாதைகளும், பிற சேவைகளும் தனியார் துறைக்கு  திறக்கப்படும் வகையில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பு திட்டத்தின் கீழ் , 400 ரயில் நிலையங்கள்  புனரமைப்பு செய்யப்படுகின்றன. நிலக்கரி படுகைகள் தனியாருக்கு ஏலம் விடப்படுகின்றன, ஏற்கனவே உள்ள  நிலக்கரி சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன.

2.20     அடிப்படை சேவைகளை தனியார் மயமாக்குவதன் மூலம் நவீன தாராளமயமானது,  நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்து  அடிப்படை சேவைகளையும் சந்தை சரக்காக பாவிக்க வைக்கிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயமாக்கலுக்கு இலக்காகி உள்ளன. நிதிஆயோக், அதன் மூன்று வருட செயல்திட்டத்தின்படி சுகாதார சேவைகளை  அனைத்து மட்டங்களிலும் தனியார்மயமாக்க விரும்புகிறது. மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவ மனைகளில் தனியார் பங்கேற்பு முன்மொழியப் பட்டுள்ளது. பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பு மாதிரியின் கீழ் 50 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை தனியார் துறைக்கு ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

விவசாய நெருக்கடி:

2.21     கிராமப்புற இந்தியாவில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களும் – எடுத்துக்காட்டாக, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நில சீர்திருத்த கொள்கை, சாகுபடி செலவு மற்றும் விளைபொருள்களின்  விலை, கடன் மற்றும் காப்பீடு, உணவு பாதுகாப்பு, விலங்கு வளங்கள் (குறிப்பாக கால்நடை வளங்கள்) மற்றும் சர்வதேச வர்த்தகம் – மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய பொருளாதாரத்தில் ரொக்க பரிவர்த்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாகையால், அன்றாட  கிராமப்புற பொருளாதார வாழ்வை பணமதிப்பிழப்பு மிக மோசமாக சேதப்படுத்தி புரட்டிப் போட்டுவிட்டது. பா.ஜ.க. ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், கால்நடை வியாபாரம் மற்றும் இறைச்சி மீதும் தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2.22     பொதுவாக, அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் விளைபொருளுக்கு நியாய விலை இன்மை ஆகியவற்றால் விவசாயிகள் கிடுக்கி பிடியில் மாட்டிக் கொண்டுள்ளர். உயரும் இடுபொருள்செலவுகள் மற்றும் கட்டுபடியாகும் விளைபொருள்விலை இன்மையின் தாக்கம் நாடு முழுவதும்  கிராமப்புறங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் சீரானவை அல்ல. இந்த தாக்கம் மிகவும் வேறுபாடுடையது. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின்  கடுமையான சுமை, ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளின் தோள்களில் விழுகிறது.

2.23     கடந்த மூன்று ஆண்டுகளில் விலை கொள்கையின் குணாம்சமாக இரண்டு போக்குகளைக் கூறலாம். முதலாவது போதாமை : விலைகள் பெரும்பாலும் விவசாயிகளின் உற்பத்தி செலவுகளை கூட ஈடுகட்டுவதில்லை. இரண்டாவதாக, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டிருந்த  குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (அவை போதுமானவையாக இல்லாத போதும்)  தேக்கமடைகின்றன. 2014 ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நரேந்திர மோடி தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரையான வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, உற்பத்தி செலவிற்கு மேல்  50 சதவிகிதம் (எம்.எஸ்.பி) என்பதை அமுல்படுத்துவதாக அறிவித்தார்.  ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்ற முடியாதது என்று பிஜேபி அரசு பிப்ரவரி 2015 ல் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து விட்டது.  அரிசி மற்றும் கோதுமைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு என்பது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளைவிட மிகக் குறைவாகவே உள்ளது.

2.24     நவீன தாராளமயமாக்கத்தால் உலக அளவிலான விலைகளுடன் உள்நாட்டு விலை சார்ந்து வரும் நிலை, சர்வ தேச விலைகளின் ஏற்ற இறக்கத்தை – மிகவும் ஏகபோக சந்தைச் சூழலில் உருவானதை  – இந்திய விவசாயத்தில் கொண்டு வந்துள்ளது. உலக வர்த்தகக் கழகத்தின்  விதிகளை  அல்லது குறிப்பிட்ட விளை பொருளுக்கான ஆதரவு உச்சவரம்பை மீறுவதால்   குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் கொள்கைகளை ஒடுக்கும் வகையில் உலக வர்த்தக கழகம் இந்திய அரசை நிர்ப்பந்திக்கிறது.  ஜனவரி 2015 ல் சாந்தகுமார் குழுவின் அறிக்கை இந்திய உணவுக் கார்ப்பரேஷனை தனியார்மயமாக்கவும் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளை நிறுத்தவும்  , அதேபோல்  மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச விலையை விட கூடுதலான குறைந்தபட்ச விலை அல்லது போனஸ்  அறிவிக்க மாநில அரசுகளை தடுக்கும் ஆணைகள் இட்டதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்கள் அம்பலமாகின்றன. மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச விலையை விட கூடுதலான குறைந்தபட்ச விலை அறிவித்த மாநிலங்களில், கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய உணவுகார்ப்பரேஷன்  நிறுத்திவிடும் என்ற அச்சுறுத்தல் வந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பு மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தால், இந்திய அரசாங்கம், லட்சக் கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவு விலை மற்றும் கொள்முதல் செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டிலிருந்து விலகி வருகின்றது என்பது தெளிவான எச்சரிக்கையாகும்.

2.25      ஊரக மற்றும் வேளாண் கடன்கள் குறித்த ஐமுகூ அரசின் கொள்கையை தேஜகூ அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. 2000ங்களில் கொண்டு வரப்பட்ட வேளாண் கடன் நடவடிக்கைகளின் மிகப்பெரும் பயனாளிகளாக கார்ப்பரேட் குழுமங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களே இருந்தார்கள்.  பொதுவாக வங்கித்துறையின் முக்கிய நடவடிக்கையாக விவசாயம் இல்லை. இது கவலைக்குரியது.

2.26      நவீன தாராளமயமாக்கல் கால கட்டத்தில் விலை ஏற்றத்தாழ்வுகள், இதனால் வருமானக் குறைவு போன்றவையே விவசாயிகளின் தற்கொலைக்கும், விவசாய நெருக்கடிக்கும் பிரதான காரணங்களாகும். இருப்பினும், விவசாய அமைப்புகளின் வலுவான கோரிக்கையாக எழுந்த பின்னும், விரிவான பயிர் மற்றும் வருமான காப்பீட்டு திட்டத்தை அரசு அலட்சியப்படுத்துகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், கடன் வாங்காத விவசாயிகளுக்கு நடைமுறையில் பெரிதாக உதவவில்லை. பிரீமிய தொகை கட்டுப்படியாகாத சூழலில், சிறு குறு விவசாயிகள், குறிப்பாக தலித், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கப்படுகின்றனர்.

இயற்கை வளங்கள் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல்

2.27     மோடி ஆட்சியின் வருகைக்கு பின்னர், ஏற்கனவே பலவீனமாக உள்ள சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்பு கட்டமைப்பிலும், நிர்வாகக் கொள்கைகளிலும் கடுமையான தாக்குதல் நடைபெறுகிறது. இது அவற்றை மேலும் பலவீனமாக்குகிறது. அதனால் பெருநிறுவன நலன்களை மேம்படுத்துவதும், பணக்கார மேம்பாட்டு நிகழ்ச்சிநிரலுக்கு வசதிகளை ஏற்படுத்துவதும் நடைபெறுகிறது. தற்போதுள்ள ஆட்சியில் பல்வேறு சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் மிகவும் தளர்த்தப்பட்டன. மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காடு மற்றும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலை அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகளும் வழக்கமான நடைமுறையாகி விட்டன, அதே சமயம் சுற்றுச்சூழல் மதிப்பீடு குறித்த முறையான கவனம்   அரிதானதாகி விட்டது.  வன மற்றும் கடலொரப் பகுதிகளிலும், முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களிலும் நிலக்கரி சுரங்கங்கள் அத்தோடு இணைந்த சாலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு அதிவிரைவு அனுமதி வழங்கப்படுகிறது . வன உரிமைச் சட்டம், பழங்குடியினர் சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், கரையோர மண்டல ஒழுங்குவிதிகள் மற்றும் பிற சட்டங்கள், விதிகள் ஆகியவை முற்றிலுமாக மீறப்பட்டு, மிதிக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வதை மாநிலங்களுக்கு  மாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு  நிறுவன அமைப்புகள் (EIA)  திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் மற்றும்  சுற்றுச்சூழலுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தி, வனத்தின் கதவுகளை அகல திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், ஏற்கனவே விளிம்பு நிலையில் உள்ள காடுகளில் வசிப்பவர்கள், பழங்குடியினர், மீனவர்கள் போன்ற பகுதியினரின் வாழ்வாதாரங்களையும் மோசமாக பாதிக்கிறது.

மக்களின்  நிலைமை:

வேலையின்மை

2.28     வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் மோடி அரசாங்கம் மிகப்பெரும் தோல்வி அடைந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய (CMIE) விவரப்படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 2017 வரை அதற்கு முந்தைய நான்கு மாதங்களான  செப்டம்பர் 2016 முதல் டிசம்பர் 2016 வரை ஒப்பிட்டு நோக்கினால்,  1.5 மில்லியன் (15 லட்சம்) வேலைகள், இழக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள். அதில் பலர் வேலை வாய்ப்பு தேடிக் கிடைக்காமல் இருப்பவர்கள். பண மதிப்பிழப்பின் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப்பகுதியில் 46.9 ஆக இருந்த தொழிலாளர்களின் வேலை பங்கேற்பு விகிதம்,  2017 ஏப்ரல் மாதத்தில் 43.5 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. பண மதிப்பிழப்பின் அதிர்ச்சியுடன், புதிய முதலீடுகள் இன்மை மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை வீழ்ச்சியுற்ற தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களுக்கு முக்கிய காரணங்களாகும். இது வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இட்டுச் செல்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD)  பொருளாதார ஆய்வறிக்கை 2017 ன் படி, 15-29 வயதுடைய இளைஞர்களில் 30 சதவீதம் பேர் வேலை அல்லது கல்வி அல்லது பயிற்சியில் இல்லை. மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை உறுதி  சட்டத்தின்படியான வேலை நாட்கள் குறைப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை மோசமடையச் செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஆயிரக்கணக்கான  பணியாளர்களை (ஐ.டி. துறையில்) பணிநீக்கம் செய்து வரும் பெருமளவிலான ஆட்குறைப்பு என்பது ஒரு புதிய அம்சமாகும்.

ஏற்றத்தாழ்வுகள்

2.29     தாராளமயமாக்கலின்  25 ஆண்டுகளுக்குப் பிறகு,  உலகின் மிக சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. தேசிய மாதிரி சர்வே நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவர அடிப்படையிலான 2016 ஆம் ஆண்டு ஆய்வு, நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒரு சதவீதமானவர்கள் நாட்டின் மொத்த சொத்துக்களில் 28 சதவீதத்தை வைத்துள்ளனர் என்று காட்டியது. 1991 ல் இது 11 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் மேல்தட்டு வர்க்கத்தினர் 10 சதவிகிதம் பேர் சராசரி சொத்து வைத்திருப்பது, 10 சதவீத அடிமட்ட மக்களின் சராசரி சொத்தை விட  228 மடங்கு ஆகும். நகர்ப்புறங்களில் 10 சதவிகித மேல்தட்டு மக்கள் சொத்துக்கள், 10 சதவீத அடிமட்ட மக்களின் சராசரி சொத்தை விட  சராசரியாக 50,000மடங்கு அதிகம். சொத்து பகிர்வின் சமத்துவமின்மை நகர்புறத்தில் அதிகம் என்பது வெளிப்படை.  நகர்ப்புறங்களில் மேல் மட்ட 10 சதவீதத்தினர் மொத்த சொத்துக்களில் 63 சதவீதத்திற்கு சொந்தமானவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் மேல் மட்ட 10 சதவீதத்தினர் 48 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர். செங்குத்தான சமத்துவமின்மையின் மற்றொரு அடையாளமாக வீட்டுச் செல்வத்தின் மீதான கிரிடிட் சுசீ அமைப்பின் அறிக்கையில் உள்ளது. இந்தியாவில்  மேல் மட்ட  ஒரு சதவீத பணக்காரர்கள்  58.4 சதவீத குடும்ப சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

உணவு பாதுகாப்பு மற்றும் ஆதார்

2.30     பொது வினியோக முறையில் பொருட்களை பெற ஆதார் உயிரி மெட்ரிக் அடையாளம் கட்டாயம் என்பது லட்சக் கணக்கான குடும்பங்களை அதிலிருந்து நீக்குவதற்கு ஒரு கருவியாகியுள்ளது. உயிரி மெட்ரிக் அடையாள அங்கீகாரம், ஆதார் கார்டு இணைப்பு ஆகியவற்றின் தோல்வி, ஏராளமான ஏழை மக்களுக்கு ரேஷன் உணவு பொருட்களை வழங்க மறுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஜார்கண்ட் மற்றும் பிற இடங்களில் பட்டினி சாவுகளுக்கு வழிவகுத்துள்ளது. பல மாநிலங்களில் உணவு பாதுகாப்பு சட்டம்  நடைமுறைப்படுத்தப் படவில்லை. முன்னுரிமை நிலையைப் பெறுவதில் இருந்து பெருமளவிலான தகுதியுள்ள மக்கள், மத்திய வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் நீக்கப் படுகின்றன. கேரளாவில் பொது விநியோக முறையை பாதிக்கும் விளைவை இது ஏற்படுத்தியிருக்கிறது.  இது மக்களின்  உணவு பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கிறது.

2.31     மொத்தத்தில், ஆதார்  ஒரு முழுமையான கண்காணிப்பு அமைப்புமுறையாகவும்,  குடிமக்களின் அந்தரங்க உரிமையை மீறுவதாகவும் உள்ளது. மேலும், ஆதார் வழங்கும் தரவுத் தளம் தனியார்  வணிக ரீதியாக சுரண்டுவதற்கு  ஏதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு:
2.32     2014 ல் இருந்து சர்வதேச எண்ணெய் விலைகளின் செங்குத்தான வீழ்ச்சியின் பலனை மக்கள் இழந்தனர். ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான வரிகளை 9 முறை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக  ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் வரி மட்டும் ரூ. 21.48 மற்றும் டீசலில் ரூ. 17.33. சர்வதேச எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளைக் குறைப்பதன் மூலம்  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் மறுக்கின்றது.

தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள்

2.33     தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதன் பகுதியாக, பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தது. முதலாளிகளுக்கு நன்மை பயக்கவும் மற்றும் ‘வியாபாரம் செய்வதை எளிதாக்கவும் ‘ தொழிலாளர் சட்டங்களை திருத்தும் செயல்முறையை  துரிதப்படுத்தியது. அப்பரெண்டீஸ் (திருத்தம்) சட்டம் மற்றும் தொழிலாளர் சட்ட திருத்த திருத்தம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊதிய கோட்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலுறவு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக முன்மொழியப்பட இருக்கிற கோட்பாடுகள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை குறைப்பதோடு, சங்கம் அமைக்கும் உரிமை,  கூட்டு பேர உரிமை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மறுக்கிறது. பிஜேபி ஆளும் பல மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி உள்ளன. அனைத்து மாநில அரசாங்கங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.

2.34     அமைப்பு ரீதியான துறையில் ஒப்பந்த மற்றும் காசுவல் தொழிலாளர்கள் பங்கு அதிகரித்துள்ளது. 2015-14ல் வேலைவாய்ப்பு -வேலையின்மை பற்றிய ஐந்தாவது   ஆண்டறிக்கையின் படி, (ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2015க்கு இடையில் நடத்தப்பட்டது),  நாட்டின் 77 சதவீதம் குடும்பங்கள் ரெகுலர் ஊதியம் பெறுவதில்லை / அத்தகைய ஊதியம் பெறுபவர் ஒருவர் கூட குடும்பத்தில் இல்லை. ரெகுலர் சம்பளம் /ஊதியம் பெறுவோரில் 57.2 சதவீதம் பேர் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்குக் குறைவாக சம்பாதிக்கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களில் 38.5 சதவீதமும், காசுவல் தொழிலாளர்களில் 59.3 சதவீதமும் ரூ. 5,000 க்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர்.

2.35     உழைப்பு படையில் பெண்களின் பங்களிப்பு 23.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அரசாங்கத் திட்டங்களில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் உள்ளடங்கிய லட்சக்கணக்கான தொழிலாளிகளை,  ”தொழிலாளர்களாக” அங்கீகரித்து அவர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் மற்றும்  சமூக பாதுகாப்பு நலன்களை வழங்க வேண்டும் என்ற சர்வதேச தொழிலாளர் கவுன்சிலின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசாங்கம் மறுத்து வருகிறது. இந்தத் திட்டங்களை தனியார்மயமாக்குவதற்கும், ஒழித்துக் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது

2.36     லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை பணமதிப்பிழப்பு அமுலாக்கத்தால் இழந்துவிட்டனர். அக்டோபர் 2016 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2017 வரையான காலப்பகுதியில் 90 லட்சம்  வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.  பெரும்பாலான நிறுவனங்கள் 2016-17 ஆம் ஆண்டில் தங்களது வேலை அளிப்பில்  நிகர சரிவைக் காட்டியுள்ளன.

பெண்கள் நிலை: பின்னடைவு

2.37     கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் சுய அதிகாரம் குறித்த பெண்கள் உரிமைகளில் ஒரு பின்னடைவு காணப்படுகிறது. பெண்கள் மீது  பாலியல் குற்றங்கள்,  குடும்ப வன்முறை, வலைத்தள குற்றங்கள் மற்றும்  தலித் பெண்களுக்கு சாதி அடிப்படையிலான வன்முறை அதிகரித்துள்ளன. 2016ம் ஆண்டு சராசரியாக ஒவ்வொரு நாளும் 106 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பெண்களுக்கு எதிராக மொத்த குற்றங்கள் 2015 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 82 சதவீதம்  அதிகரித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கும் அம்சம் . பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தபடுதல் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இருப்பினும், தண்டனை பெறுவோர் விகிதம் குறைவாகவே உள்ளது. மறுபுறத்தில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ போன்ற பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் தளர்த்தப்படுகின்றன. இது மோடியின் அரசு பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்காததோடு வர்மா கமிஷனின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் படுதோல்வி அடைந்ததைக்  காட்டுகிறது.

2.38     ஏழை, பட்டியலின சாதி மற்றும் ஆதிவாசி பெண்கள் தங்கள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளின் மீதான இரட்டை தாக்குதல்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு, உணவு பாதுகாப்பு பலவீனமடைதல், சுய உதவிக் குழுக்களின் தேவைகளை  அநியாயமாகப் புறக்கணித்தல் ஆகியவை பெண்களை மோசமாக பாதித்திருக்கின்றன. கடன் வழங்கும் அரசு நிறுவனங்கள் மூலம் உதவி கிடைக்காததால், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் ஆகியோரின் கருணையில் அவர்கள் இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் அதிகமான பெண்கள் வேலை தேடுகின்றனர் என்றாலும் வேலைகள் குறைவாக இருப்பதால் பெண்களின் உழைப்பு பங்கேற்பு விகிதம் குறைந்துவிட்டது. முறைசாரா துறையிலுள்ள பெண்கள் பணமதிப்பிழப்பால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

2.39     மத நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் என்ற போர்வையில் இந்துத்துவா சித்தாந்தங்கள்,  பெண்கள் மத்தியில் மிக வலுவான முறையில் பரப்பப்படுகின்றன. இது குடும்ப வன்முறை மற்றும்  கருவில் குழந்தையின்  பாலினம் அறிவதற்கு எதிரான சட்டங்களை  நீர்த்து போக வைக்கும் முயற்சியில்  பிரதிபலிக்கிறது, இது  பெண்களின் ஜனநாயக  இயக்கங்களால் வலுவாக எதிர்க்கப்படுகிறது. மதம் சார்ந்த சட்டங்களுக்கு உட்பட்டு முஸ்லிம் பெண்கள் தம் நீதிக்கான  போராட்டங்களை நடத்தும் போது, அதைக் கடத்தி தமதாக்க அரசு எத்தனிக்கிறது, ஆனால் அதிகரித்து வரும் சாதி ஆணவ குற்றங்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவருவதற்கு மறுக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட  அமைப்புகளின் பொதுவான மதவாத தாக்குதல், சிறுபான்மை அடிப்படைவாத சக்திகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. பெண்களின் சமமான குடிமக்கள் என்ற உரிமை இரு தரப்பிலும் இருந்தும் தாக்குதலுக்கு  இலக்காகிறது.

2.40     மோடியின் அரசாங்கம் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டது. இந்த விவகாரங்கள் அனைத்திலும், பெண்களின் உரிமை மற்றும் அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக பெண்களின் இடது மற்றும் ஜனநாயக பெண்கள் அமைப்புக்கள் முன்னணியில் உள்ளன.

தலித்துகள்: மோசமாகும் அவல நிலை

2.41       நவீன தாராளமய சீர்திருத்தங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக அமுலாக்கி வருவதால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுபவர்கள் தலித்துகள் ஆவர்.  சமூகநல மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டில் கடுமையான வெட்டுக்கள் என்பது ஏழைகள் அதிலும் குறிப்பாக தலித்துகளின்  வாழ்வாதாரங்களில், பேரழிவைக் கொண்டு வருகின்றன. தே.ஜ.கூ அரசு, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டைக்  குறைத்தது என்பது இப்பிரிவினரின் வளர்ச்சியின்  மீது விழுந்த பெரிய அடியாகும்.  வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி, ரெகுலர் வேலைகளுக்கான அரசின் பணி நியமன தடை, வேலைகள் ஒப்பந்தமயமாவது, அனைத்திலும் தனியார் மயம், தனியார் துறையில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாதது ஆகியவை குறிப்பாக  படித்த தலித் இளைஞர்களிடையே வேலையின்மையை அபாயகரமாக அதிகரித்து வருகிறது.

2.42     தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் குறையாமல் தொடர்கின்றன. 2016 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரங்கள் தலித்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் 2015 ஐ விட அதிகரித்து உள்ளன என்கிறது. 2015 ல் 38,670 குற்றப் பதிவுகள் எனில்  2016 ல் தலித்துகளுக்கு எதிராக மொத்தம் 40,801 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் சாதிப் பாகுபாட்டை வளர்த்து,  தலித்துகளுக்கு எதிராக, காலங்காலமான  இந்திய கலாசாரத்தின் பெயரால்,   ஆதிக்க சாதிகள் பாகுபாடு காட்டவும்,  அட்டூழியங்களை நடத்தவும் இந்துத்துவ சக்திகளின் ஆணவமிக்க ஊக்குவிப்பு தைரியமளித்தது.  தலித்துகள் பசு பாதுகாவலர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றனர். அனைத்து வகை கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கான மற்றும் கால்நடை வர்த்தக தடையானது தோல் பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் உள்ள பல தலித்துகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

2.43     சாதி பாகுபாடு, அன்றாட ஒடுக்குமுறை, அரசாங்கக் கொள்கைகளின் விளைவாக ஓரங்கட்டுதல் அதிகரித்து வருகிற சூழல்  காரணமாக தலித் மக்களிடையே அதிருப்தி மற்றும் வெறுப்பு அதிகரித்து வருகிறது. அட்டூழியங்கள் மற்றும் அவமானங்கள் ஆகியவற்றிற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பில் அவர்கள் கோபம் பிரதிபலிக்கிறது.  அம்பேத்கர்பவனை  இடித்துத் தள்ளியதற்காக மும்பையில் நடந்த அணிதிரட்டல், உணா கசையடி சம்பவத்திற்கான பரந்துபட்ட இயக்கங்கள்,  ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ரோஹித் வெமுலாவின் நிறுவனமயக் கொலைக்கெதிரான நாடு தழுவிய போராட்டம்,  மேற்கு உ.பி யில் தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எதிராக பீம் சேனையின் அணி திரட்டல், பீமா-கோரேகான் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட தலித்துகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து நடந்த மகாராஷ்டிரா பந்த் போன்றவை  இந்த வளர்ந்து வரும் எதிர்ப்பின் முக்கிய நிகழ்வுகளாகும்.

2.44    வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்கான தன் திட்டத்தில், அம்பேத்கரின் மரபுகளைத் தனதாக்கிக் கொண்டு, அவரை இந்துத்துவாவின் பக்தராகவும், இஸ்லாத்திற்கு எதிரானவராகவும் காட்டி, அதன் வாயிலாக தலித் மக்களை ஈர்த்திட பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.  அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் இந்த சூழ்ச்சிகளை அறிந்திருக்க வேண்டும், இந்த சக்திகளின் தீய திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும். சமூக நீதிக்காக தலித்துகள் மற்றும் பிற பலவீனமான  பகுதி மக்களை அணிதிரட்டுதல் என்பது இந்துத்துவ வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கியமான திட்டமாக இருக்க வேண்டும்.

ஆதிவாசி உரிமைகள் மீதான தாக்குதல்

2.45     இந்துத்துவா கொள்கைகளைப் பரப்புபவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் பழங்குடி அமைப்புகளின் தாக்குதல் மூலம் பழங்குடியின அடையாளங்களும், வாழ்க்கை வழிமுறைகளும் ஒற்றைத்தன்மை நோக்கி முன்வைக்கப்பட்டு,  சமஸ்கிருதமயப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிய வன விளை பொருட்கள் சேகரிப்பு உள்ளிட்ட பாரம்பரிய வாழ்வாதாரங்கள், வணிகத்தை சுலபமாக்குவது என்ற பெயரில் தீவிரமான முதலாளித்துவக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. பெருமளவிலான இடப்பெயர்ச்சி, குடிபெயர்வு மற்றும் பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் அனைத்தையும் இழந்து கொடுமையான வழிமுறையில் பாட்டாளி மயமாக்கப்படுவது ஆகியவை இந்தியாவின் பல பகுதிகளில், பிஜேபி ஆட்சியின் கீழ் நடைபெறுகிறது . இது  பொருளாதார பாதிப்பு , உணவு பாதுகாப்பின்மை, மோசமான சுகாதார நிலை மற்றும் ஊட்டச்சத்து குறைவு போன்ற நீண்டகால அழிவுகரமான தாக்கத்தை இச்சமூகங்களின் மீது ஏற்படுத்துகிறது. சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான ஆதிவாசி மாணவர் விடுதிகளின் நிலை மிக  மோசமானது. ஸ்காலர்ஷிப் நிதியை அதிகரிக்க மறுப்பது அல்லது அதீதமாக தாமதம் செய்வது ஆகியவை  ஆதிவாசி மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டின் ஒரு நேரடி வடிவமாகும். இவை போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் ஆகும்.

2.46     வன அழிப்பு இழப்பீடு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் போன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துதல் (Compensatory Afforestation Fund Management & Planning Authority Act), கனிம மற்றும் சுரங்கங்கள் (ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி) சட்டத்தில் பழங்குடிகளுக்கு எதிரான திருத்தங்கள் கொண்டு வருதல் ஆகியவை பழங்குடி நிலப்பகுதியை பறித்துக் கொள்ளவும் பெரும் இட பெயர்வுகளுக்கும் வழிவகுக்கும். ஜார்கண்டில் பா.ஜ.க அரசு சோட்டாநாக்பூர் மற்றும் சாந்தல் பர்கானாஸ் குத்தகை சட்டங்களை திருத்தி பழங்குடி நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க முயற்சித்தது. ஆனால் பழங்குடியினர்களின்  ஒன்றுபட்ட போராட்டங்கள், திருத்தங்களை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தியது. இருந்தபோதிலும் அரசு அவற்றை புதிய வடிவங்களில் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறது. வன உரிமை சட்டம்  ஒரு குறிப்பிடத்தக்க சட்டம். ஆனால் அதனை அதிகமான மாற்றங்களால் நீர்த்து போகச் செய்து, கிராம சபாக்களின் பங்கை நீக்கிட ஏதுவாக்குகின்றனர். பஞ்சாயத்து  ( அட்டவணை பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டத்தையும், ஐந்தாவது அட்டவணையையும்  நீர்த்து போக செய்தது,  ஆதிவாசிகளின் அரசியலமைப்பு உரிமைகள் பற்றி மோடி அரசாங்கம் கொண்டுள்ள அவமதிப்பைக் காட்டுகின்றன.

2.47     மோடி அரசு மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் பொருளாதார, சட்ட, சமூக, மற்றும் கலாச்சார துறைகளில் பழங்குடி உரிமைகளுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களுக்கும் எதிராக தீவிர போராட்டங்களையும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் வெற்றிகரமான ஆதிவாசி போராட்டங்களையும் இந்தக் காலம் கண்டது. இந்த போராட்டங்களில் பலவும் போலீஸ் அடக்குமுறை மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவற்றை எதிர்கொண்டன.

முற்றுகையின் கீழ் சிறுபான்மையினர்

2.48     வலதுசாரி வகுப்புவாத தாக்குதல்கள் முஸ்லீம் சிறுபான்மையினர் மத்தியில் பயம் மற்றும் பாதுகாப்பின்மை சூழலை உருவாக்கி உள்ளது.  பசு பாதுகாப்பாளார்கள் என சொல்லிக் கொள்கிறவர்கள் அப்பாவி முஸ்லீம்கள் அடித்துக் கொல்லபடுவதும்,  பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இத்தகைய சம்பவங்களைக் கையாள்வதில் காட்டப்படும் பாரபட்சமும் அவர்களின் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் போன்ற  பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், கசாப்பு கடைகள்,  இறைச்சி சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுவதன் மூலம் லட்சக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்வாதாரம் குறி வைத்து அழிக்கப்படுகிறது. அனைத்து விதமான கால்நடைகளின் வணிகம் மீதான தடை, கால்நடை மற்றும் இறைச்சி வர்த்தகத்தில் தடை ஆகியவை முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

2.49     ‘பயங்கரவாதிகள்’ மற்றும் ‘தேச விரோதிகள்’ என்ற அதிகாரபூர்வ பசப்புரை வாயிலாக போலியாக முத்திரை குத்துவது, அப்பாவி முஸ்லீம் இளைஞர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் தேச துரோக சட்டங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. இந்த அடக்குமுறை சூழலே முஸ்லீம்  அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு உதவுகின்றது. கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் முஸ்லீம்கள் மீதான துன்புறுத்துதல் மற்றும் தாக்குதல்கள் என அனைத்து பிரச்சனைகளையும் கையிலெடுக்க வேண்டும்  ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான பரந்த மேடையில் அவர்களை ஒரு பகுதியாக்க வேண்டும்.

சமூக பிரச்சினைகளை முன்னெடுப்பது

2.50     சமூகப் பிரச்சினைகளில் தலையீடு செய்வது மற்றும் கட்சியின் பொது அரசியல் தளத்தோடு அவற்றை   இணைப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பல்வேறு  கட்சி மாநாடுகள் வலியுறுத்தியுள்ளன. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மீது குறி வைத்து இந்துத்துவா தாக்குதல் நடப்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தில் கட்சி செயலூக்கத்துடன் ஈடுபட வேண்டும். சாதி ஒடுக்குமுறைக்கும், பாகுபாட்டுக்கும் எதிராக, குறிப்பாக தலித் மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்னைகளில் கட்சி தீவிரமாக செயலாற்ற வேண்டும். தலித் மற்றும் ஆதிவாசி மேடைகளின் நடவடிக்கைகளுக்கு கட்சி முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.

இந்துத்துவா தாக்குதல்

2.51     அரசியலமைப்பு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்  ஊடுருவ அரசு அதிகாரத்தை பயன்படுத்துவது என்கிற ஆர்.எஸ்.எஸ். ஸின் செயல் திட்டம் அமலாகிக் கொண்டிருப்பதைக் கடந்த நான்கு ஆண்டுகள் கண்டன. மாநிலங்களில் நியமிக்கப்பட்ட  ஆளுநர்களில் பெரும்பாலானோர் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஆவர், அவர்களில் சிலர் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகின்றனர். அரசியலமைப்பு நிறுவனங்கள் அதன் உள்ளிருப்பவர்களாலேயே சீர்குலைக்கப்படுகின்றன. பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2.52     கல்வி மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் வகுப்புவாதமயமாக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இந்திய கவுன்சில் போன்ற நிறுவனங்களின் தலைவர்களாக, ஆர்.எஸ்.எஸ் அல்லது  இந்துத்துவாவிற்கு ஆதரவானவர்கள்  நியமிக்கப்படுகின்றனர். பாட திட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகள்,  ஆசிரியர்களின் மீதான கட்டுப்பாடு, மாணவர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்கள் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. வரலாறு திருத்தி எழுதப்பட்டு, மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் பூர்வமான வரலாறு  நிராகரிக்கப்படுகிறது. பிற்போக்குத்தனமான இந்துத்துவ பார்வையில் இருந்து, அறிவியல்  நிறுவனங்கள் மற்றும் அறிவியல் மீதான தாக்குதல்கள் உருவாகின்றன. விஞ்ஞான நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. மூட நம்பிக்கைகளை மற்றும் மத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அறிவியலுக்கு மாறான கருத்துக்கள் அதிகாரபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றன.

2.53     இந்துத்துவ நிகழ்ச்சிநிரல் மத்திய அரசால் மேலே இருந்து திணிக்கப்படும் அதே நேரத்தில், கள மட்டத்தில், ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் இந்துத்துவ அமைப்புக்கள் தங்கு தடையின்றி செயல்படுகின்றன. முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு, பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் குண்டர் படை அமைக்கப்பட்டு கால்நடை வர்த்தகர்கள் அல்லது விவசாயிகள் மீது, அடித்துக் கொல்லும்  தாக்குதல்களை நடத்துகின்றன. இந்த பாசிச-வகை தாக்குதல்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பசு மாடு அல்லது மாட்டிறைச்சிப் பிரச்சினையில் முப்பதுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். மாநில அரசாங்கங்கள் பகிரங்கமாக இவற்றை ஆதரிக்கின்றன. ‘காதல் ஜிகாத்’ என முஸ்லிம் மக்களைக் குறி வைப்பது, அவர்களை’ தேச விரோதிகள் ‘என்று முத்திரை குத்துவது போன்ற நடவடிக்கைகள் வகுப்புவாத அணி திரட்டலை உருவாக்குவதற்கு இந்துத்துவ சக்திகள்  பயன்படுத்தும் மற்ற கருவிகளாகும்.

2.54     கால்நடை வர்த்தகத்தில் ஈடுபடும், மற்றும் இறந்த கால்நடைகளின் தோலுரிப்பில் ஈடுபடும் தலித்துகள் இந்த கும்பல்களின் மற்றொரு  இலக்கு. இந்த தலித் விரோத பார்வையின் விளைவாக உணாவில் நான்கு தலித் இளைஞர்களை கொடூரமாக அடித்து நொறுக்கினர்.

2.55     இந்துத்துவ தீவிரவாத குழுக்கள், முற்போக்கு, மதச்சார்பற்ற கருத்துக்களை பரப்புகின்ற அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டன. மகாராஷ்டிராவில் கோவிந்த் பன்சாரேவின் கொலைக்குப் பிறகு நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். கர்நாடகாவில், பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி இந்த படைகளின்   இலக்கானார். அவர்கள் மறுபடியும் கவுரி லங்கேஷை கொன்றனர். இத்தகைய பாசிசத்தலைமையிலான தாக்குதல்கள் இந்துத்துவ எதிர்ப்பாளர்களை மௌனப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாகும்.

ஜம்மு – காஷ்மீர்

2.56     கடந்த  கட்சி காங்கிரஸிற்கு பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சூழ்நிலையில் கடுமையான சீரழிவு ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே  பி.டி.பி.-பி.ஜே.பி கூட்டணி அரசாங்கம்  ஜம்முவிற்கும், பள்ளத்தாக்குக்கும் இடையில் வகுப்புவாத பிளவுகளை கூர்மைப்படுத்தியுள்ளது. மோடி அரசின்  அணுகுமுறை நடைமுறையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு நிலையை  மறுப்பதாகவே உள்ளது . இது முன்னெப்போதும் இல்லாத வகையில் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் இந்திய அரசுடன் அந்நியப்பட்டுப் போக வழி வகுத்தது.

2.57     ஜூலை 2016 ல் பாதுகாப்பு படையினரால் ஒரு `ஹிஸ்புல்லா போராளியாகிய புர்ஹான் வானி கொல்லப்பட்டது ஒரு பெரிய மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது. இது பாதுகாப்பு படையினரால் கொடூரமாக நசுக்கப்பட்டது. 6,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர் மற்றும் 500 க்கும் அதிகம் பேர் பெல்லட்( சிறு குண்டு)  துப்பாக்கி சூட்டால் ஒரு கண் அல்லது இரு கண்களும் பாதிக்கப்பட்டனர். இது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஓர் உந்துதல் கொடுத்தது, மறுபக்கம் பாதுகாப்பு படையினரை இதை அடக்கும் முயற்சியில் இறங்க வைத்தது. தீவிரவாதம் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டாலும், மக்கள் அந்நியப்பட்டது ஆழமாகவே தொடர்கிறது.

2.58     மோடியின் அரசாங்கம் பதட்ட நிலையையும், மக்கள் அந்நியப்பட்டு போவதையும் பலப்பிரயோகத்தால் எதிர்கொள்ள முயற்சிக்கிறது.   அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையைத் துவக்க அழைப்பு விடுக்க மறுத்துவிட்டது.  செப்டம்பர் 2016 ல் அம்மாநிலத்திற்கு வந்த நாடாளுமன்ற தூதுக்குழுவின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக, அம்மாநில நிரந்தர குடியிருப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின்  35 ஏ பிரிவை சட்டரீதியாக கேள்விக்குள்ளாக்குவதன் மூலம்  இந்துத்துவ செயல்திட்டத்தை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகங்களை எழுப்புகிறது. ஒரு முன்னாள் உளவுத்துறைத் தலைவரை பேச்சுவார்த்தை நடத்த நியமித்தது, அதுவும் தாமதமாக நியமித்தது, மத்தியஅரசின் நோக்கம் பற்றி நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

2.59     ஜம்மு காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மோடி அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறையை சிபிஐ (எம்) முழுமையாக எதிர்க்கிறது. அரசியல் தளத்தில் செயல்படும் அனைத்து தரப்புடனும் அரசியல் கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்று சிபிஐ (எம்) தனது நிலைபாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இத்துடன் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையும் சேர்த்து நடத்தப்பட வேண்டும். போலீஸ் அடக்குமுறை, பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு  ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க   வேண்டும். அரசியலமைப்பின்  370 ஆவது விதிகள் மீண்டும் அமலாக்கம் செய்யப்பட்டு,  ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பகுதிகளுக்கு பிராந்திய சுயாட்சி உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் தரப்பட வேண்டும்.

வட கிழக்கு

2.60     மோடியின் அரசு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, அசாமில் பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்தியதிலிருந்து வட கிழக்கு பிராந்தியம், வகுப்புவாத பதட்டங்கள் மற்றும் இனப் பகைமைக்கான ஒரு வளமான நிலப்பகுதியாகிப் போனது முக்கிய ஆபத்து ஆகும். குடி பெயர்ந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய நடவடிக்கையானது , அசாமியர், மற்ற இனக்குழுக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.  தேதி மற்றும் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவேட்டில் 1971மார்ச் மாதத்தை  அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்வதற்கான செயல்முறையை மாற்றும் முயற்சிகள், குறிப்பாக கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னரே குடியேறிய மக்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது.

2.61     நாகா பிரகடன ஒப்பந்த ஷரத்துக்கள் வெளியிடப்படாதது, மணிப்பூர், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மக்களிடையே மஹா நாகலாந்தின் அந்தஸ்து பற்றிய கவலையை ஏற்படுத்துகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்கள் மதவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பல்வேறு இன மற்றும் பழங்குடி சமூகங்களை வென்றெடுக்க முயல்கின்றன. இந்த நடவடிக்கைகள் மதம் மற்றும் இன ரீதியான ஒற்றுமையை அச்சுறுத்துத்துகின்றன. அதற்கு வேண்டுவதெல்லாம் உள்ளூர் மேல் தட்டுபிரமுகர்கள்  மற்றும் கட்சிகளை அதன் பக்கம் ஈர்த்து அதன் அரசியல் செயல் திட்டத்தை முன்னெடுப்பதே ஆகும்.

2.62      கடந்த அரசாங்கங்கங்களைப் போல,வடகிழக்கு பிராந்தியத்தின் விரிவான அபிவிருத்திக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு மறுப்பதே  பாஜக அரசாங்கத்தின் அணுகுமுறையாக உள்ளது. வட கிழக்கிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பத்து சதவீத அபிவிருத்தி நிதிகளை  இல்லாமல் செய்ய திட்டக் கமிஷன் ஒழிப்பு வழிவகுத்துள்ளது. இது,  இந்த பிராந்திய ஒட்டுமொத்த வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.

கூட்டாட்சி மீது தாக்குதல்

2.63     மோடி அரசு அதிகாரங்களை மையமாக்கிக் கொள்வதும் மற்றும் மாநிலங்களின் உரிமைகளை சீர்குலைத்தும் வருகிறது. ஜி.எஸ்.டி   அமலாக்கத்தால் கொஞ்சநஞ்ச வரிவிதிப்பு அதிகாரங்களையும் மாநில அரசுகள் இழந்துவிட்டன. மத்தியஅரசு தன்னிச்சையாக மாநிலங்களுக்கான  நிதியை வெட்டுகிறது.மாநில அரசு  விஷயங்களில் குறுக்கிட ஆளுநர்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்பதை உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பார்த்தோம்.. மக்களவை மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதற்கான யோசனையை மாநில சட்ட மன்றங்களின் காலத்தை குறைப்பதின்  வாயிலாகவோ அல்லது மாநில அரசாங்கங்களை வாக்களித்து முடிவிற்கு கொண்டு வரும்  அதிகாரத்தை குறைப்பதன் மூலமாகவோ மட்டுமே செய்ய முடியும்.

2.64     இந்தி திணிப்பு,  கல்வி,கலாச்சாரம் போன்றவற்றில் மத்திய அரசும், அதன் நிறுவனங்களும் ஆணை பிறப்பிப்பது ஆகியவை மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு தங்களது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் போக்கு ஆகும்.

எதேச்சாதிகார நடவடிக்கைகள்

2.65     இந்துத்துவா மற்றும் பெருநிறுவன (corporate) அதிகாரம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு எதேச்சாதிகாரத்தை நோக்கி செல்ல துரிதப்படுத்துகிறது .  தொடர்ச்சியான எதேச்சாதிகார நடவடிக்கைகளை இந்தக் காலம் கண்டிருக்கிறது. சட்ட மசோதாக்களை, நிதி மசோதா என வகைப்படுத்தும் சதிசெய்து, மாநிலங்களவையை ஓரம் கட்டி  நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்துகிறது.   சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் தேசதுரோக பிரிவுகள் ஆகியவற்றை  பயன்படுத்தி மக்களை  தேசவிரோதிகள் என முத்திரை குத்தி, எதிர்ப்புக் குரல்களை அடக்கப் பயன்படுத்தியது.

2.66     உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மீது  நான்கு மூத்த நீதிபதிகள் வெளியிட்ட கருத்துக்கள், உயர் நீதித்துறைகளின் மாண்பு, நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களால் பாதிக்கப்பட்டு வருவது பற்றிய கொந்தளிப்பான  கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற  பெயரில்  நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கம் மறுதளிக்கும் (வீட்டோ) அதிகாரத்தை பெறமுயல்கிறது.

2.67     படியாத  ஊடகங்களை பணிய வைக்க மோடி அரசு  அச்சுறுத்தும் தந்திரங்களை பயன்படுத்துகிறது. ஏற்கனவே பெரும்பகுதி கார்ப்பரேட் ஊடகங்கள் பி.ஜே.பி.யின் மூர்க்கமான இந்துத்துவா கொள்கைக்கு வலுவான ஆதரவு தருகின்றன. இவற்றில் சாதகமற்ற செய்திகளை அமுக்கிட ,வழக்குகள் தொடுப்பது, எடிட்டர்களை அகற்றுவது போன்ற நிர்ப்பந்தங்கள் அடங்கும்.

அளவற்ற பணம் மற்றும் ஊழல்

2.68     ஊழல்களை சட்டபூர்வமாக்கவும்,  பெருநிறுவனங்கள் மற்றும்  பன்னாட்டு நிறுவனங்களின்  சட்ட விரோத பணத்தை புனிதமான பணமாக்குவதற்கும் மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் என்பது,  ஆளும் கட்சி,  இந்த முறை மூலம்,  தான் அனுமதி அளித்த காண்ட்ராக்டர்களுக்கு, அதனைப்  பெற்றவர்களிடமிருந்து பிரதியுபகாரமாக நிதி பெற்றுக் கொள்ளும் ஏற்பாடே.    பத்திரத்தை அளிப்பவரோ அல்லது  பெறும் கட்சியோ நன்கொடையாளரின்  பெயரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. கூடுதலாக,  நிறுவனத்தின் நிகர இலாபத்தில் (மூன்று ஆண்டுகளுக்கு சராசரியாக) 7.5 சதவிகிதம் வரைதான் ஒரு அரசியல் கட்சிக்கான நன்கொடை தரலாம் என்ற சட்டத்தை அரசாங்கம் திருத்தியுள்ளது. இந்த உச்சவரம்பு அகற்றப்பட்டால், அதிக அளவு நன்கொடை சட்டபூர்வமாக வழங்கப்படலாம். இது கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் லஞ்சம் கொடுப்பதை பெரிய அளவில் ஊக்குவிக்கும்.

2.69     பி.ஜே.பி அரசாங்கம், அதன் ஆட்சியின் கீழ் ஊழல் இல்லை என பெருமையடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ரபேல் போர்  விமான ஒப்பந்தம் அம்பலமாகி உள்ளது. பிரதமர் தற்போதுள்ள ஒப்பந்தத்தை மாற்றி புது ஒப்பந்தம் போட்டுள்ளார். மேலும், பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு பதிலாக அனில் அம்பானி நிறுவனம் பார்ட்னராக்கப்பட்டு ரூ. 21,000 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது . பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில், மத்தியப் பிரதேசத்தில் வியாபம், மகாராஷ்டிராவில் நில மற்றும் ‘சிக்கி’ மோசடி, ராஜஸ்தான் சுரங்க ஊழல் மற்றும் சட்டிஸ்கரில் ரேஷன் ஊழல் என ஊழல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அமித்ஷாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்தின் மோசடி விவகாரம் இன்னொரு உதாரணம்.

தேர்தல் சீர்திருத்தங்கள்

2.70     தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல்களில் பெரும் பணம் கைமாறுவதை சட்டபூர்வமாக்குவதற்கு மோடி அரசு நடவடிக்கை எடுக்கும்போது, தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையும், அவசரமும் அவசியமாகிறது . தேர்தல்களில் பணத்தின் செல்வாக்கை தடுக்க தேர்தல் செலவுகளை அரசே செய்வது தேவையாகிறது. விகிதாசார பிரதிநிதித்துவ கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தேர்தல் முறையில் அடிப்படை மாற்றம் இருக்க வேண்டும். பகுதியளவு பட்டியல் முறையுடன் விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான கட்சியின் நிலைப்பாடு பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டும்.

வெளிநாட்டு கொள்கை: அமெரிக்க முகாமில்

2.71      அணி சேராக் கொள்கையிலிருந்து, அமெரிக்க சார் வெளியுறவுக் கொள்கைக்கான மாற்றம் 1991 ல் தாராளமயமாக்கல் கொள்கையோடு  உடன் நிகழ்வானது. இரண்டரை தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசாங்கங்கள், அமெரிக்காவுடன் கேந்திர ஒத்துழைப்பு உருவாக்குவதை நோக்கி முன்னேறின. அமெரிக்காவுடன் கேந்திரமான கூட்டை உருவாக்க பல நடவடிக்கைகளை எடுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பத்தாண்டு ஆட்சிக்கு பின்னர், மோடி அரசாங்கம் இந்த அமெரிக்க-சார்பு வெளியுறவுக் கொள்கையை தீவிரப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.

2.72     2015 ஜனவரியில் ஒபாமா விஜயத்தின் போது வெளியிடப்பட்ட இந்திய-அமெரிக்க கூட்டு கூர் நோக்கு அறிக்கை, , அமெரிக்காவுடன்  ஒருங்கிணைந்து ஆசியாவிற்கான இயக்க மையமாகவும் ஆசிய-பசிபிக்கிற்கான அதன் புவிசார்-அரசியல் உத்தியையும்  இந்தியா உறுதியாக ஏற்கும் நிலையை உருவாக்கியது.  நரேந்திர மோடி மேலும் ஒரு படி சென்று ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடனான முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியிலும்,    ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன், அமெரிக்க ஆதரவு நாற்கர கூட்டணியிலும் இந்தியாவை இணைந்துகொள்ள செய்தார்.

2.73     இந்தியாவை ‘பிரதான பாதுகாப்பு பங்காளியாக’ நியமிக்கும் அளவிற்கு  அமெரிக்காவுடனான  இராணுவ ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க போர் கப்பல்கள், போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப, பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் பெற இந்திய தளங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கும் LEMOA ( Logistics Exchange Agreement ) எனப்படும் உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது  ஒரு  முக்கியமான நடவடிக்கை ஆகும். இது இந்திய இறையாண்மை மீதான மீறலாகும், இது எந்த அரசாங்கமும் முன்னர் செய்யத் துணியாதது.

2.74     இஸ்ரேலுடனான உறவுகள் நெருக்கமடைந்துள்ளன. மோடிதான்  இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதம மந்திரி. இஸ்ரேல் சென்று விட்டு அருகிலுள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கு செல்லாமல் வந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் கூட அங்கு செல்வதுண்டு. வழமைக்கு மாறாக காரகசில் நடைபெற்ற அணி சேரா உச்சிமாநாட்டில் பிரதம மந்திரி கலந்து கொள்ளவில்லை.

2.75     ஜூன் 2017 ல் இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு உறுப்பினராக ஆனது.  பிரிக்ஸ் அமைப்பின் (BRICS) பகுதியாகவும் இந்தியா உள்ளது. ஆனால், மோடி அரசு பயங்கரவாத பிரச்சினையில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பல்துருவ அமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்த இந்த மன்றங்களைப் பயன்படுத்துவதில்லை.

2.76     நமது தெற்காசிய அண்டை நாட்டினருடனான மோடிஅரசின் கொள்கை அவர்களுடனான நல்ல,நெருக்கமான உறவுகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது. மாதேசிகளின் நேபாள பொருளாதார முற்றுகை கிளர்ச்சிக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக,  நேபாள மக்களையும் மற்றும் அங்குள்ள அனைத்து அரசியல் சக்திகளையும்  இந்தியா பகைத்துக்கொண்டது. பங்களாதேஷை பொறுத்தவரை,  ரோ`ஹிங்கியா அகதிகள் பிரச்சனையில்  இந்திய நிலைப்பாடு எந்த வகையிலும்  உதவிகரமாக இல்லை. பாகிஸ்தானில் மோடி அரசாங்கம் எந்தவொரு  பேச்சுவார்த்தைக்கும்  இடமளிக்காத ஒரு மோதல் அணுகுமுறையை  கையாள்கிறது. இது தேசிய பேரினவாதத்தை தூண்டிவிட்டு, வகுப்புவாத அணி சேர்க்கயை கூர்மைப்படுத்தும் குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்துடன் செய்யப்படுகிறது.

வளர்ந்து வரும் எதிர்ப்பு – அதிகரிக்கும் போராட்டம்

2.77     இந்த காலகட்டம்,  மோடியின் பொருளாதார கொள்கைகள், வகுப்பு  வாத நிகழ்ச்சிநிரல் மற்றும் எதேச்சாதிகாரத் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு உருவாகிய காலம்.

(i)     விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையானது மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பதினெட்டு நாள் வேலைநிறுத்தமும், தொடர்ந்து நடந்த போராட்டங்களும் ஆகும்; மன்சுர் (மத்திய பிரதேசம்) மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் தன்னெழுச்சி போராட்டங்கள்; ஜார்கண்டில் சாந்தல் பர்கானாஸ் மற்றும் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டங்களுக்கு திருத்தங்களை எதிர்த்து போராட்டம்; மற்றும் சிக்ராவில் உள்ள அனைத்து கிராம மக்கள்  மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் ஆதரவோடு  விவசாயிகளின் நீடித்த மற்றும் பரவலான இயக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சில கோரிக்கைகளை இந்த போராட்டங்கள்  மாநில அரசாங்கங்களிலிருந்து வென்றெடுத்தன.. நவம்பர் 20-21 தேதிகளில் 187 அமைப்புகளின் கூட்டு மேடை மூலம் கிசான் பாராளுமன்றம்  ஏற்பாடு செய்யப்பட்டது. நாடு முழுவதுமிருந்து விவ்சாயிகள் பெருமளவு திரண்டனர். இது சமீப காலங்களில் விவசாயிகளின் மிக முக்கியமான கூட்டு நடவடிக்கையாகும். இந்த அனைத்துப் போராட்டங்களிலும், அகில இந்திய விவசாய சங்கம் முக்கிய பங்கு வகித்தது.

(ii)     தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை செப்டம்பர் 2, 2016 அன்று ஒரு பொது வேலைநிறுத்தத்தை நடத்தியது, இதில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்பு அதிகரித்திருந்தது. தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக  வங்கி ஊழியர்கள், உருக்காலை தொழிலாளர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் முக்கியமான துறைவாரி  வேலைநிறுத்த போராட்டங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது பெங்களூருவில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டமாகும். நவம்பர் 9 முதல் 11, 2017 வரை, டெல்லியில், பாராளுமன்றத்திற்கு வெளியே,  தொழிலாளர்களின் மூன்று நாள் கூட்டு காத்திருப்பு போராட்டத்தில் , ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஒரு தன்நிகரில்லா எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கு பெற்றனர். இந்த போராட்டங்கள் அனைத்திலும்  இந்திய தொழிற்சங்க  மையம் ஒரு முக்கிய பங்கை வகித்தது.

(iii)     வகுப்புவாத எதேச்சாதிகார தாக்குதல்களுக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. பசு பாதுகாப்பாளர் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீதான பாசிஸ்டுவகை தாக்குதல்களுக்கு  எதிராகவும், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் கொலைகளுக்கு எதிராகவும்  வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இருந்தன.கல்புர்கி கொல்லப்பட்ட பின்னர்,  புகழ்பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்கள் விருதுகளை  திருப்பி கொடுத்தனர்.கவுரி லங்கேஷின் கொலைக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு இருந்தது.

(iv)     ரோஹித் வெமுலா இறப்பு மற்றும் தலித்துகள் மீதான உணா அட்டூழியம் ஆகியவற்றிற்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்தன.  இடது மற்றும் தலித் அமைப்புகளின் கூட்டு இயக்கங்கள்  நடைபெற்றன.  ஸ்வாபிமான் சங்கர்ஷ் மன்ச் (சுய மரியாதைக்கான போராட்ட சபை), இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகளின் ஒரு மேடையாக உருவாகி  பல்வேறு மையங்களில் பேரணிகளை நடத்தியது.

(v)     செப்டம்பர் 2017 ல், வெகுஜன, வர்க்க அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் மேடை  ஜன்ஏக்தா ஜன்அதிகார் அந்தோலன் அமைக்கப்பட்டது. இது ஒரு கோரிக்கை சாசனத்தை வெளியிட்டு, அதன் பேரில் ஒன்றுபட்ட பிரச்சாரங்களையும் போராட்டங்களையும்  தொடங்க இருக்கிறது.

நிறைவு செய்ய:

2.78     பி.ஜே.பி அதன் அரசியல் நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் கீழ், மக்கள் மீதான நவீன தாராளமய முதலாளித்துவ சுரண்டல் தீவிரமாகி உள்ளது; இந்துத்துவ நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றுவதன்  மூலம் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்பானது , அரிக்கப்பட்டு வருகிறது; மற்றும் பிஜேபி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவை அமெரிக்காவின் ஏகாதிபத்திய உத்திகளுடன் நெருக்கமாகக் கட்டிப்போடுகிறது. இவையெல்லாம்  எதேச்சாதிகார- வகுப்புவாத ஆட்சி  தொடங்கி விட்டதைக் குறிக்கிறது.

2.79     அதே நேரத்தில், மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் அதிருப்தி பெருகி வருவதின் அறிகுறிகள் உள்ளன, அவை பல்வேறு மக்கள் பிரிவுகளின் பெருகிவரும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறத்தில் ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், மறுபுறம் தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் ஆன முரண்பாடுகளும் வளர்ந்துள்ளன. இச்சூழலில் உழைக்கும் மக்களின் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க நாம் தலையிட வேண்டும்.

2.80     பெரு முதலாளித்துவ-நிலப் பிரபுத்துவ வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்தும் போது எதேச்சாதிகாரம் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுகிறது. நாம் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக செயலூக்கத்தோடு  போராட வேண்டுமெனில் நமது தந்திரோபாயங்கள் பெருமுதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை பலவீனப்படுத்துவதை நோக்கி செலுத்தப்பட வேண்டும்,

2.81      உழைக்கும் மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதார சுமைகளுக்கு எதிராக அவர்களின் பல்வேறு பிரிவினரின் போராட்டங்களை முன்னெடுக்க  கட்சி தலையீடு அதிகரிக்க வேண்டும். வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான போராட்டங்களுடன் நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கத்திற்கு எதிராக இந்த போராட்டங்களை இணைப்பதே  பாஜக-ஆர்.எஸ்.எஸ்.கூட்டிற்கு  எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வழியாகும். நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான,  இந்துத்துவா வகுப்புவாதம் மற்றும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றிணைந்தவை.

அரசியல் கட்சிகளின் நிலை

பிஜேபி

2.82    பிஜேபி குறித்து கட்சித் திட்டம் கூறுவது என்னவெனில், அது ஒரு “மக்களைப் பிரிக்கிற, வகுப்புவாத மேடையைக் கொண்ட ஓர் பிற்போக்கான கட்சியாகும். அது பிற மதங்கள் மீதான வெறுப்பு, சகிப்புத் தன்மை இன்மை மற்றும் அதி தீவிர தேசிய வெறியை அடிப்படையாகக் கொண்ட பிற்போக்கு உள்ளடக்கத்தை உடையது. பாசிச குணம் கொண்ட இராஷ்ட்ர சுயம் சேவக் சங் அமைப்பின் வழிகாட்டலிலும், கட்டுப்பாட்டிலும் இருப்பதால் அது ஒரு சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல. எப்போதெல்லாம் பிஜேபி அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போது அரசதிகாரக் கருவிகள் மற்றும் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு கிடைக்கிறது.” பாசிச குணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதுமாக பிஜேபி உள்ளது.

2.83    முந்தைய வாஜ்பாய் ஆட்சியோடு ஒப்பிடுகையில் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனான ஒருங்கிணைப்பு அதிகமாக உள்ளது. மேலும் பெரு முதலாளிகளின் பரந்த ஆதரவையும் பிஜேபிக்கு பெற்றுத்தர நரேந்திர மோடியால் முடிந்துள்ளது.
2.84    பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிரதான அரசியல் கட்சி என்கிற இடத்திலிருந்து காங்கிரசை அகற்றிவிட்டு பிஜேபி அவ்விடத்தை பிடித்து வளர்ந்தும் உள்ளது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி தனது அமைப்பையும், செல்வாக்கையும் நாடு முழுவதும் பரவச் செய்துள்ளது. தனது செல்வாக்கை விரிவாக்க, தான் பலவீனமாக உள்ள மாநிலங்களில், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து விலகி வெளிவருபவர்களை பிஜேபி  சேர்த்துக் கொள்கிறது.

2.85    தற்போது பிஜேபி தனியாகவோ, கூட்டணி வாயிலாகவோ மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 19ல் ஆட்சியில் உள்ளது. மக்களவையில் பெரும்பான்மையையும், மாநிலங்களவையில் தனிப் பெரும் கட்சி என்கிற நிலையையும் எட்டியுள்ளது. முதன்முறையாக குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி

2.86    பிஜேபியின் அதே வர்க்கத் தன்மையைக் கொண்டதே காங்கிரஸ் கட்சியாகும். பெருமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலனை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் அரசியல் செல்வாக்கும், ஸ்தாபனமும் சரிவைச் சந்தித்து வருவதோடு பிரதான ஆளும் வர்க்கக் கட்சி என்கிற இடத்தை பிஜேபியிடம் இழந்துள்ளது. காங்கிரஸ் தன்னை மதச்சார்பற்றதாகக் கூறிக் கொண்டாலும் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து தொடர்ந்து போராட இயலாதது என்பதை நிரூபித்து வருகிறது. காங்கிரஸ் நவீன தாராளமய பாதையை முன்னின்று கொணர்ந்தது. மேலும் அது ஆட்சியில் இருந்த போது அமெரிக்காவுடன்  கேந்திரக் கூட்டணியையும் ஏற்படுத்தியது. பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையிலும், காங்கிரஸ் இதே கொள்கைகளையே முன்வைக்கிறது. இக்கொள்கைகளை எதிர்ப்பது அவசியமாகும்.

2.87    மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூன்று அடிப்படைக் கடமைகள்: ஏகபோக எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியனவாகும். கட்சித் திட்டம் குறிப்பிடுவது என்னவெனில்,

“இன்றையச் சூழலில், பெருமுதலாளிகளுக்கும், அரசின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ள அவர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான போராட்டத்தை தீர்மானகரமாக நடத்தாமல் புரட்சிக்கான இந்த அடிப்படையான ஆதாரமான கடமைகளை நிறைவேற்ற இயலாது.”

2.88    பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று பெருமுதலாளிகளின் அரசியல் பிரதிநிதிகளாக நம் நாட்டில் உள்ளனர். நமது கட்சித் திட்டத்தின் அடிப்படையிலான புரிதலின்படி, பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்களின் நலன்களை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே அவர்களை ஓர் ஐக்கிய முன்னணியின் கூட்டாளிகளாகவோ அல்லது பங்குபெறுபவர்களாகவோ கொண்ட நடைமுறைத் தந்திரத்தை நாம் வகுக்க இயலாது.

2.89    ஆனால் இன்று பிஜேபி ஆட்சியில் உள்ளதையும், அது ஆர்.எஸ்.எஸ். உடன் கொண்டுள்ள அடிப்படையான இணைப்பையும் கணக்கிற்கொள்ளும் போது அதுவே பிரதான அபாயம் ஆகும். எனவே பிஜேபியையும், காங்கிரசையும் சம அபாயங்களாகக் கருதுகிற நிலையை நாம் எடுக்க இயலாது.

2.90    ஏற்புடைய பிரச்சனைகளில் காங்கிரசோடும், இதர மதச்சார்பற்ற கட்சிகளோடும் நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பதாக நமது நடைமுறை அணுகுமுறை அமைய வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாத அபாயத்திற்கு எதிராக விரிந்த மக்கள் பகுதியினரைத் திரட்டுவதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளுடன் ஒத்துழைக்க வேண்டும். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகள், காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளைப் பின்தொடர்கிற மக்களையும் ஈர்க்கிற வகையில் மேற்கொள்ள வேண்டும்.

பிராந்தியக் கட்சிகள்

2.91    பிராந்தியக் கட்சிகளின் மாறியிருக்கிற பாத்திரம் பற்றி ஆய்வு செய்து 21வது காங்கிரசின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனையில் தொகுத்துத் தந்துள்ளோம். பிராந்தியக் கட்சிகள் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவர்களின் வர்க்க சார்புகள் இக்கட்சிகள் நவீன தாராளமய கொள்கைகள் மீது காட்டுகிற அணுகுமுறையில் பிரதிபலிக்கின்றன. மத்தியில் பிஜேபி, காங்கிரசோடு கைகோர்த்து கூட்டணி அரசாங்கங்களில் கிடைக்கிற வாய்ப்புகளைப் பறித்துக் கொள்ள இவர்களுக்கு உள்ள நாட்டத்திலிருந்து உருவாகும் சந்தர்ப்பவாதத்தையும் நாம்   குறிப்பிட்டோம்.

2.92    2014 மக்களவைத் தேர்தல்களின் போது பிஜேபியோடு பெரிய பிராந்தியக் கட்சிகளான அகாலிதளம், தெலுங்கு தேசக் கட்சி, அசாம் கண பரிசத் ஆகியன கூட்டணி சேர்ந்தன. அதற்குப் பின்னர் 2015 சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பிற்கு புறம்பாக ஜனதா தளம் (ஐக்கிய) திரும்பவும் பிஜேபியுடன் சேர்ந்தது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அஇஅதிமுக பிளவுபட்டது. இரண்டு பெரிய பிரிவுகளுமே பிஜேபியுடன் நெருங்குவதற்கு போட்டி போட்டு தற்போது மீண்டும் ஒன்றாய் இணைந்துள்ளன. மாநிலங்களில் ஆட்சியிலுள்ள தெலுங்கானாவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் போன்ற பிராந்தியக் கட்சிகள் மோடி அரசை எதிர்ப்பதைத் தவிர்த்து, பிஜேபியுடன் சமரசம் செய்து கொள்ளவும் முயற்சிக்கின்றன. ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மேற்கொண்டதும் இதே நிலை தான்.

2.93    பிஜேபியுடன் கரம் கோர்க்காத பிராந்தியக் கட்சிகளும் உண்டு. இக்கட்சிகளுடன் மதவெறிக்கு எதிராகவும், எதேச்சாதிகார தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்கள் பிரச்சனைகள் மீதும் கூட்டு இயக்கங்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டும்.

2.94    ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட பிராந்தியக் கட்சியின் பாத்திரம், அரசியலைக் கணக்கிற்கொண்டு அவர்களுடனான நமது நடைமுறை அணுகுமுறையை முடிவு செய்ய வேண்டும். கட்சியின் நலனை முன்னெடுப்பது, இடதுசாரி ஜனநாயக சக்திகளைத் திரட்டுவது ஆகியவற்றை அத்தகைய அணுகுமுறை கணக்கிற்கொள்ள வேண்டும். எனினும் பிராந்தியக் கட்சிகளோடு நாடு தழுவிய கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.

இடது மாநிலங்கள்

2.95    மேற்குவங்கத்தில் பின்னடைவுகளைச் சந்தித்த பின்புலத்தில் 21வது காங்கிரசின் அரசியல் தீர்மானம் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகியவற்றில் கட்சி மற்றும் இடது தளத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியது. அதற்குப் பிறகிலிருந்தே  இடது தலைமையிலான கேரளா, திரிபுரா மாநிலங்களை பிஜேபி குறிவைத்து வருகிறது. கட்சி, இத்தகைய தாக்குதல்கள் குறித்து விழிப்போடு இருந்து எதிர்வினை ஆற்ற வேண்டும்.

கேரளா

2.96    2016 மே மாதம் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது ஜனநாயக முன்னணி 140 தொகுதிகளில் 91 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற்ற 38.8 சதவிகித வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இடது ஜனநாயக முன்னணி 43.35 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் பிஜேபியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 15 சதவிகித வாக்குகளைப் பெற்றன. இடது ஜனநாயக முன்னணி அரசு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளது. அது எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு நாளுக்கு ரூ. 600 என உயர்த்தியுள்ளது. அது பல்வேறு பிரிவினருக்கான ஓய்வூதியத்தையும் அதிகரித்துள்ளது. பொதுக்கல்வி, பொது சுகாதார முறைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  பட்டியல் சாதி / இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை கோவில் அர்ச்சர்கள் நியமனத்தில் அது அளித்துள்ளது. அரசு நான்கு குறிக்கோள்களுடனான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 1. வாழ்க்கை – வீடற்றவர்கள் அனைவருக்கும் வீட்டு வசதி அளித்தல், 2. மனித நேயம் (Aardram): முழு உடல் நலத் திட்டம், 3. பொதுக் கல்வி முறைமைகளில் மேம்பாடு, 4. பசுமை கேரளம் (Haritha) முழு சுகாதாரத்திற்கான பசுமைத்திட்டம், இயற்கை வேளாண்மை (Organic Farming), ஆறுகள் – வாய்க்கால்கள் பாதுகாப்பு.

2.97    இடது ஜனநாயக அணி ஆட்சிப் பொறுப்பை எப்போது ஏற்றதோ அப்போதிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்கள், ஆதரவாளர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தனது தாக்குதல்களை அதிகரித்து விட்டது. 13 தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். 200 இல்லங்கள் மற்றும் 50 கட்சி அலுவலகங்கள் தாக்குதல், தீக்கிரை, சூறையாடல்களுக்கு உள்ளாக்கப்பட்டன.

2.98    ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி ஊழியர்களைக் குறிவைத்து அழித்தொழிப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ம், இடது ஜனநாயக அணி அரசும் செயல்படுவதாக நாடு தழுவிய பொய்ப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ்.சும், பிஜேபியும் நடத்தி வருகின்றன. கட்சியும், இடது ஜனநாயக முன்னணியும் தீவிரமான வெகுஜனப் பிரச்சாரத்தின் மூலம் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். கூட்டின் பொய்ப்பிரச்சாரங்களை எதிர்கொண்டு வருகின்றன. இச்சூழலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பிஜேபியுடன் போட்டி போட்டு இடது ஜனநாயக முன்னணி அரசை எதிர்த்து வருகிறது.

திரிபுரா

2.99    இடது முன்னணி 1993லிருந்து தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. கலகங்களுக்கு முடிவு கட்டி அமைதியை உறுதிப்படுத்துகிற வகையில் வளர்ச்சித் திட்டங்களை தற்போதைய இடது முன்னணி அரசு அமலாக்கி வருகிறது. சமூக அளவுகோல்களில் திரிபுரா பொறாமைப்படத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது. திரிபுரா தற்போது 97 சதவிகித கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. அது குழந்தை இறப்பு விகிதத்தை கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைத்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் அடிப்படையிலான மனித உழைப்பு நாட்கள், வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டாக்கள் அளிப்பு ஆகியவற்றில் திரிபுரா இந்தியாவிலேயே மிகச் சிறந்த சாதனையைப் படைத்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகையை 62 சதவிகிதம் குறைத்திருப்பதென்பது அரசின் முக்கியமான சாதனையாகும். ஆறாவது அட்டவணையின் படி தன்னாட்சி மாவட்ட அமைப்புகள் (Autonomous District Council) வாயிலாகவும், திட்டச் செலவில் 31 சதவிகித ஒதுக்கீட்டோடு பழங்குடித் துணைத் திட்டம் நிர்வகிக்கப்படுவதன் மூலமும் பழங்குடி மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

2.100    திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியாக பிஜேபி உருவெடுத்ததிலிருந்து அது பழங்குடி மக்களுக்கும், பழங்குடியினரல்லாதவர்களுக்கும் இடையே பதட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐ.பி.எப்.டி. அமைப்பை வன்முறைப் போராட்டங்களை நடத்துமாறு தூண்டுவதோடு, அமைதியையும், நிலைத்த சூழலையும் பாதிக்கிற வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் ஆதரவாளர்களையும், பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். தாக்கி வருகின்றன. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்கள் மீது கருத்தில் கொண்டே இவையனைத்தும் செய்யப்படுகின்றன.

2.101    வகுப்புவாத சக்திகளின் கொடிய திட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்துகிற வகையில் அயராத பிரச்சாரங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது முன்னணி நடத்தி வருகின்றன.

மேற்கு வங்காளம்

2.102    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது முன்னணி மீது கடும் அடக்குமுறைகளையும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், கட்சி மீது, குறிப்பாக எந்தெந்த பகுதிகளில், கட்சி வெகுஜன தளங்களைத் தக்க வைத்துக் கொண்டதோ அங்கு பரவலான தாக்குதல்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்டுள்ளது. 2016 ஜூன் மாதத்திலிருந்து 31 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்களும், ஆதரவாளர்களும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்னொரு தாக்குதல் என்னவெனில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெரும்பான்மையை வைத்துள்ள பஞ்சாயத்து சமிதிகள், கிராமப் பஞ்சாயத்துகளை பலவந்தமாகக் கைப்பற்றுவதாகும். மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

2.103    கட்சி மக்களுடனான இணைப்பை மறு புதுப்பிப்பு செய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. கட்சி, இடது முன்னணி, வெகுஜன அமைப்புகள் பல்வேறு பிரச்சார பயணங்கள், நடைபயணங்களை நடத்தியுள்ளன. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் தலைமை செயலகம் நோக்கிய பயணம் நடந்தேறியது. எல்லா ஒன்றியங்களிலும், வாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வங்காள வெகுஜன அமைப்புகளின் மேடையால் நடத்தப்பட்ட நடைபயணங்கள், பிரச்சாரப் பயணங்கள் மிக அண்மையில் நடந்தேறிய இயக்கமாகும்.

2.104    பிஜேபியை எதிர்ப்பதென்ற போர்வையில் வகுப்புவாத திரட்டலை உருவாக்குகிற நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இதன் வாயிலாக அது இடதுசாரிகளை ஓரம் கட்ட முயற்சிக்கிறது. திரிணாமுல் காங்கிரசின் ஜனநாயக விரோத ஆட்சி, பிஜேபியின் வகுப்புவாத சூழ்ச்சி ஆகிய இரண்டையும் எதிர்த்து கட்சி போராடி வருகிறது. இத்தகைய சிக்கலான சூழலில் தனது கடமைகளை ஈடேற்றுகிற வல்லமை படைத்ததாக கட்சி அமைப்பை சீர்செய்வதோடு, கட்சி உறுப்பினர் தரத்தை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை கட்சி எடுத்து வருகிறது.

கட்சியின் சொந்த பலம்

2.105    கட்சியின் முன்னேற்றத்திற்கும், இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்குமான திறவுகோல் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதே ஆகும். மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், கேரளா, திரிபுரா தவிர்த்த மாநிலங்களில் முன்னேற்றமின்றியிருப்பது ஆகிய பின்புலத்தில் இது மிக மிக முக்கியமானதாகும். கட்சியின் தளத்தையும், செல்வாக்கையும் விரிவாக்குவதன் மூலமாக மட்டுமே நாம் இடது ஜனநாயக மாற்றை நோக்கி முன்னேற முடியும். இதற்கு மக்களிடம் உயிர்ப்பான இணைப்புகளை உருவாக்கக் கூடிய வகையில் எல்லா முனைகளிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளும், வர்க்க வெகுஜனப் போராட்டங்கள் வளர்த்தெடுக்கப்படுவதும், அவற்றை அரசியல் செல்வாக்காக மாற்றுவதும் தேவைப்படுகின்றன.

2.106    ஆளும் வர்க்கங்களின் தத்துவம் மற்றும் அரசியலை எதிர்கொள்வதற்கான அரசியல், தத்துவார்த்தப் பிரச்சாரங்களை கட்சி தீவிரமாக நடத்த வேண்டும். சமூகப் பிரச்சனைகளில் கட்சி தலையிடுவதும், போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம். வெகுஜன அமைப்புகள், விரிந்த மக்கள் பகுதியினரைத் திரட்டுகிற அமைப்புகளாக அதன் வாயிலாக மக்களைத் தொடர் இயக்கங்களில், விரிந்த போராட்டங்களில் ஈடுபடுத்துவதாகவும் உருவெடுக்க வேண்டும்.

இடதுசாரி ஒற்றுமை:

2.107    இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு இயக்கங்கள் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மட்டுமின்றி பல மாநிலங்களில் – குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, அசாம், பஞ்சாப் – நடந்தேறி வருகின்றன. எனினும் வேறுபட்ட அரசியல் நிலைபாடுகளை சில இடதுசாரிக் கட்சிகள் மேற்கொள்வதால் கூட்டு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதிலும், மேற்கொள்வதிலும், தேசிய அளவில் பல இடர்பாடுகள் உள்ளன. ஆர்.எஸ்.பி., ஃபார்வர்ட் பிளாக் கட்சிகளின் கேரள மாநிலக் கிளைகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் ஒன்று சேர்வது என்ற அரசியல் நிலைபாட்டை மேற்கொண்டுள்ளது.

2.108    ஓர் இடைவெளிக்குப் பின்னர், பண மதிப்பு நீக்கத்தின் முதலாண்டு நிறைவையொட்டியும், 2017ல் பாபர் மசூதி இடிப்பின் 25வது ஆண்டு நிறைவையொட்டியும் ஒன்றுபட்ட இடதுசாரி நடவடிக்கைகளுக்கான அறைகூவல்கள் விடுக்கப்பட்டன. வெகுஜன அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டுமேடை குறித்தும் ஒன்றுபட்ட புரிதல்களை எட்ட முடிந்தது. பொதுவான அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான இடதுசாரி ஒற்றுமைக்காக கோட்பாடு ரீதியான போராட்டத்தை நாம் அவசியம் நடத்த வேண்டும்.

இடது மற்றும் ஜனநாயக அணி

2.109    இடது மற்றும் ஜனநாயக அணியின் முதன்மை பாத்திரத்தை மீட்டெடுப்பதற்கான அறைகூவலை 21வது காங்கிரஸ் விடுத்தது. இந்த அணியே முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு உண்மையான மாற்றாக அமையும். அரசியல் தீர்மானம் இந்த அணிக்கான வரையறைகளை நிர்ணயித்தது. “தற்போதைக்கு, இடது  மற்றும் ஜனநாயக அணிக்குள் ஈர்க்கப்பட வேண்டிய சக்திகளின் குவிமையமாக இடதுசாரிக் கட்சிகள் அதன் வர்க்க, வெகுஜன அமைப்புகள், இடதுசாரிக் குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள், வெவ்வேறு கட்சிகளில் உள்ள சோசலிஸ்டுகள், மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளில் உள்ள ஜனநாயக பிரிவினர், ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கான ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுக்கிற சமூக இயக்கங்கள் ஆகியோரே இருப்பார்கள். இவர்களையெல்லாம் தனித்துவம்மிக்கதும், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கொள்கைகளினின்று நேரெதிரானதுமான திட்டத்தின் அடிப்படையிலான கூட்டு மேடையில் திரட்டுவதன் மூலமே இடது மற்றும் ஜனநாயக அணி திட்டவட்டமான வடிவம் பெறுவதை நோக்கி முன்னேற முடியும்.”.

2.110    பல்வேறு வர்க்க, வெகுஜன, சமூக இயக்கங்களை உள்ளடக்கிய ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன் என்கிற மேடை இதை நோக்கிய ஓர் நகர்வாகும். நாடு தழுவிய ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தக் கூடிய வலிமையான பொது மேடையாக இதை மாற்றுவதற்கு கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன. இடது மற்றும் ஜனநாயக மாற்றைக் கட்டுவதற்கு பங்களிப்பு நல்கக் கூடிய இத்தகைய கூட்டுப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல நமது முயற்சிகள் தேவை.

2.111    கட்சிகள், வெகுஜன அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், சமூக அமைப்புகள், அறிவு ஜீவிகள் ஆகியோரை உள்ளிட்ட இடது ஜனநாயக சக்திகளை ஓர் குறிப்பிட்ட மாநிலத்திற்கு பொருத்தமான திட்டத்தின் அடிப்படையில் ஓரணியில் திரட்டுகிற முயற்சிகள் எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் கூட்டு இடதுசாரி மேடைகள் வாயிலாக இடது மற்றும் ஜனநாயக மாற்றை நாடு தழுவிய அளவிலும் முன்னிறுத்த வேண்டும்.

2.112    நீண்ட காலமாக இதை பிரச்சார முழக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ள நிலைமையில், இக்கடமையை இனிவருங்காலங்களில் முன்னுரிமை கொண்டதாக ஏற்கிற வகையில் ஒட்டுமொத்தக் கட்சியையும் பயிற்றுவிக்க வேண்டும்.

இடது ஜனநாயகத் திட்டம்: ஓர் மாற்று

2.113    நவீன தாராளமயம் மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை இடது மற்றும் ஜனநாயகத் திட்டம் முன்வைக்கிறது. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், கிராமப்புற உழைப்பாளிகள், உழைப்பாளி மக்களின் இதர பிரிவினரின் அடிப்படைக் கோரிக்கைகள் இத்திட்டத்தில் உள்ளடங்கியதாகும். இடது ஜனநாயக மாற்றை முன்னிறுத்துவதற்கு இடது ஜனநாயக சக்திகளைத் திரட்டுகிற வகையில்  இவ்விரிவான பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் திட்டவட்டமான வடிவம் கொடுத்து, வர்க்க போராட்டங்கள், வெகுஜன இயக்கங்களைக் கட்டிட வேண்டும்.

2.114 இத்திட்டத்தின் வரையறைகள் கீழே:

1. மதச்சார்பின்மை: மதச்சார்பின்மையின் அடிப்படை கோட்பாடாக மதத்தையும், அரசையும் பிரிப்பதென்பதை அரசியல் சாசனத்தில் உள்ளடக்க வேண்டும். மதரீதியான வகுப்புவாதம் மற்றும் சாதிய வெறியின் அடிப்படையில் நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரத்தை சட்ட விரோதமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருதல், அரசு நிறுவனங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நீக்குதல்.

2. கூட்டாட்சி: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கிற வகையில் மத்திய – மாநில உறவுகளை மறுசீரமைப்பு செய்தல்; பொதுப்பட்டியலை இந்நோக்கத்திற்காக மாற்றியமைத்தல்; அரசியல் சட்டப்பிரிவு 356க்கு பதிலாகப் பொருத்தமான மாற்று பிரிவினைக் கொண்டு வருதல்; ஆளுநர்களின் பாத்திரத்தை மாற்றியமைத்தல்; அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மீட்பதன் வாயிலாக ஐம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு அதிகபட்ச சுயாட்சியை வழங்குதல்.

3. ஜனநாயகம்: குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை விரிவாக்குதல்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்தல், தேசதுரோகச் சட்டப்பிரிவை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்குதல்; மரண தண்டனையை ஒழித்தல்; பணபலத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள்; பகுதிப் பட்டியல் முறையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அறிமுகம் செய்தல்.

4. பொருளாதாரக் கொள்கை – வளர்ச்சி

(i).    திட்டமிடலை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் சீரான மற்றும் சுயசார்பு வளர்ச்சியை ஊக்குவித்தல்; உற்பத்தி சக்திகளை வளர்த்து வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்.

(ii).    அடிப்படை நிலச் சீர்திருத்தங்களை அமலாக்குதல் மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களை உறுதி செய்தல், கூட்டுறவு விவசாயம் மற்றும் சந்தைப்படுத்தலை வளர்த்தல்.

(iii).    தனியார்மயமாக்கப் பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் நாட்டுடமையாக்குதல்; மின்சாரம், தண்ணீர் வழங்கல், பொதுப் போக்குவரத்து போன்ற அடிப்படைச் சேவைகள் தனியார் வசம் அளிக்கப்பட்டிருப்பதை திரும்பப் பெறுதல், ஏகபோகத்தைக் கட்டுப்படுத்துதல்,  செல்வ மறு பங்கீட்டிற்கு வழி செய்கிற வகையில் நிதி மற்றும் வரி முறைமைகளில் நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைத் தடுக்க கடும் நடவடிக்கைகள், நிதி வரவுகளை ஒழுங்குபடுத்துதல்.

5. உழைப்பாளி மக்களின் உரிமைகள்

அ.    தொழிலாளி வர்க்கம்: ரூ. 18,000-ஐ சட்டபூர்வ குறைந்தபட்ச மாத ஊதியமாக்குதல் மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணோடு இணைத்தல்; இரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்; சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பு; காண்ட்ராக்ட் வேலை முறைமைக்கு முடிவு கட்டுதல்.

ஆ.    விவசாயிகள்: விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக உற்பத்திச் செலவு + 50 சதவிகிதம் நிர்ணயித்தல்; சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் நிவாரண நடவடிக்கைகள்; சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை முழுமையாக மத்திய அரசு தள்ளுபடி செய்தல்; விவசாயமல்லாத நோக்கங்களுக்காக கட்டாயப்படுத்தியும், கண்மூடித்தனமாகவும் நிலம் கையகப்படுத்துவதிலிருந்து விவசாய நிலங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், கார்ப்பரேட் விவசாயம் மற்றும் தனியார்மயத்தைத் தடுத்தல்.

இ.    விவசாயத் தொழிலாளர்கள்: கூலி மற்றும் சமூகப் பாதுகாப்பை விவசாயத் தொழிலாளர்களுக்கு மத்தியச் சட்டம் வாயிலாக உறுதி செய்தல், கிராமப்புற தொழிலாளர்களுக்கு வீட்டுமனைகள் மற்றும் வீட்டு வசதி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் விரிவாக்கம் மற்றும் உறுதியான அமலாக்கம்.

6.     மக்கள் நலன்: உணவு தானியங்கள் மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களின் அளிப்பை அனைவருக்குமான பொதுவிநியோகத்தின் கீழ் கொண்டு வருதல், அனைவருக்கும் ஓய்வூதியப் பயன், மூத்த குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் உடல் நலம்; பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம், நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டுவசதி, மக்களுக்குக் கட்டுப்படியாகும் முறையில் பொதுப்போக்குவரத்து விரிவாக்கம், வேலை, கல்வி, சுகாதாரத்திற்கான உரிமை.

7.    பாலின சமத்துவம்: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வடிவிலான வன்முறைகளைத் தடுப்பது, நிறுத்துவது, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பது ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை உறுதி செய்தல், சம வேலைக்கு சம ஊதியம், மாற்றுப்பாலினத்தவர் உரிமைகள்.

8. சமூக நீதி – குடிமக்கள் உரிமைகள்

1.    தலித்துகள்: சாதிய முறைமையை மற்றும் எல்லா வடிவங்களிலான சாதிய ஒடுக்குமுறையை ஒழித்தல்; பட்டியல் சாதியினர் மீதான தீண்டாமை கடைப்பிடிப்பு மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை; இட ஒதுக்கீட்டு காலியிடங்கள், பதவிகள், பதவி உயர்வுகளிலுள்ள நிலுவை இடங்களை நிரப்புதல்; தனியார்துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படல்.

2.    ஆதிவாசிகள்: ஆதிவாசிகளின் நில உரிமைகளைப் பாதுகாத்தல்; அவர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தல், வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமலாக்குதல், சிறு வன விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பழங்குடி மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படல், அட்டவணை 5, 6 மற்றும் அட்டவணைப் பகுதிகளுக்கான பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் (ஞநுளுஹ) ஆகியவற்றைப் பாதுகாத்தல்.

3.    சிறுபான்மையினர்: சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்களுக்கு கடும் தண்டனை; இஸ்லாமிய சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு, உடல் நலம், சமூக நலன் ஆகியவற்றை உறுதி செய்கிற சிறப்பு ஏற்பாட்டைக் கொண்டு வருதல்.

4.    மாற்றுத்திறனாளிகள்: சமவாய்ப்புகள் மற்றும் சமமான களம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட எல்லா பொது இடங்களிலும் தடையின்றி பிரவேசம்,

5.    இளைஞர் – சிறார் உரிமைகள்: வேலைவாய்ப்பு உரிமையை அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமை ஆக்குதல். இளைஞர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான – விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் திறன்பயிற்சி – சேவைகளை உறுதி செய்தல். அனைத்து வடிவங்களிலான சிறார் உழைப்பைத் தடை செய்தல்.

9. கல்வி, உடல்நலம் – பொழுதுபோக்கு

1.    அனைவருக்கும் கல்வியை உறுதி செய்கிற வகையில் பொதுக்கல்வி முறையை விரிவாக்குதல் மற்றும் அதன் தரம் மேம்படுத்தப்படல்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வி மீதான பொதுச் செலவினம் 6 சதவிகிதமாக இருப்பதை உறுதி செய்தல்; மதச்சார்பின்மை உள்ளடக்கம் உடையதாக பாடங்களையும், பாடத் திட்டத்தையும் மாற்றியமைத்தல் மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தைப் புகட்டுதல், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணம் மற்றும் பாடத் திட்டங்களை ஒழுங்குபடுதுத்தல்.

2.    கட்டணமற்ற உடல்நலம் பேணுதலை அளிக்கக் கூடிய விதத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பங்களிப்போடு தேசிய சுகாதார அமைப்பைக் கட்டமைத்தல், இதை உறுதி செய்கிற வகையில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் ஆக உயர்த்துதல், தனியார் மருத்துவ நிறுவனங்களை நெறிப்படுத்துதல், அத்தியாவசிய மருந்துகளின் விலைகளைக் குறைத்தல்

3.    பசுங்குடில் வாயுக்கள் வெளியாவதை வலுவான நெறிமுறைகள் வாயிலாகக் குறைத்தல், எல்லா உற்பத்தி மற்றும் நுகர்வு துறைகளிலும் எரிசக்தி திறனை உறுதி செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல், எரிசக்தி ஏற்றத்தாழ்வைக் குறைத்தல், ஆறு மற்றும் இதர நீர்வளங்களை மாசுபடாமல் பாதுகாத்தல்.

10. கலாச்சாரம் மற்றும் ஊடகம்:

பிற்போக்கான வகுப்புவாதம் மற்றும் பகுத்தறிவற்ற போக்குகளின் செல்வாக்குகளுக்கு எதிராக மதச்சார்பற்ற மற்றும் பன்முகக் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தல்; நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரியத்தைப் பேணிக் காத்தல்; எல்லா தேசிய மொழிகளுக்கும் சம நிலை. பொது ஒலிபரப்பு சேவையை பலப்படுத்தல்; ஒரே ஊடக நிறுவனம் பல்வேறு ஊடகங்களின் உடமையாளராக இருக்கும் முறையைத் தடை செய்தல்; ஊடகத்திற்கு சுயேச்சையான ஒழுங்குமுறை  ஆணையத்தை உருவாக்குதல்.

11.     வெளியுறவுக் கொள்கை: அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணியை திரும்பப் பெறுதல்; ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை.

அரசியல் நிலைபாடு

2.115    அ. நான்காண்டு மோடி அரசாங்கத்தின் அனுபவம் தெரிவிப்பது என்னவெனில், இந்துத்துவா வகுப்புவாத சக்திகளைத் தனிமைப்படுத்துவதற்கும், மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை திரும்பப் பெறுவதற்கும் பிஜேபி அரசாங்கத்தைத் தோற்கடிப்பது கட்டாயம் ஆகும்.

ஆ. ஆகவே, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளைத் திரட்டி பிஜேபியைத் தோற்கடிப்பது பிரதானக் கடமையாகும். ஆனால் இது காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வோ அல்லது தேர்தல் கூட்டணியோ இல்லாது செய்யப்பட வேண்டும்.

இ. நவீன தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிற மத்திய பிஜேபி அரசாங்கத்தையும், பிராந்தியக் கட்சிகளின் ஆட்சிகளையும் உள்ளடக்கிய மாநில அரசாங்கங்களையும் எதிர்த்துக் கட்சி போராடும். மக்களின் வாழ்நிலைப் பிரச்சனைகள் மீதும், பொருளாதாரக் கொள்கைகள் தொடுக்கிற தாக்குதல்களுக்கு எதிராகவும் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க கட்சி பாடுபடும்.

ஈ. வெகுஜன இயக்கங்களுக்காகவும், ஒன்றுபட்ட போராட்டங்களுக்காகவும், கூட்டு மேடைகளை எல்லா மட்டங்களிலும் உருவாக்க வேண்டும். மக்கள் விரோதக் கொள்கைகளுக்கான எதிர்ப்பினைத் தீவிரப்படுத்த வேண்டும். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகள் முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் திரண்டுள்ள மக்களை ஈர்க்கிற வகையில் அமைய வேண்டும்.

உ. அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்துத்துவா சக்திகள் உருவாக்குகிற தீவிரமான சவால்களின் பின்புலத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் மிக விரிவான திரட்டலுக்கான மேடைகளை உருவாக்குவது அவசியம் ஆகும். வகுப்புவாத சக்திகளை அடிமட்டங்களிலேயே எதிர்க்கிற வகையில் மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டுவதற்கு அழுத்தம் தர வேண்டும். இவற்றை அரசியல் அணியாகவோ, தேர்தல் கூட்டணிகளாகவோ பார்க்க வேண்டியதில்லை. அதுபோன்று, ஜனநாயக உரிமைகள் மீதான எதேச்சாதிகாரத் தாக்குதல்களுக்கு எதிராகவும் விரிவான ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.

ஊ. கட்சியின் சொந்த பலத்தை வளர்க்கவும், கட்டியெழுப்பவும் கட்சி முன்னுரிமை அளிக்கும். இடதுசாரி ஒற்றுமையை விரிவாக்கவும், பலப்படுத்துவதற்குமான பணிகளை கட்சி மேற்கொள்ளும்.

எ.ஓர் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், ஒன்றுபட்ட போராட்டங்களை, கூட்டு இயக்கங்களை நடத்துகிற வகையில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளையும் திரட்ட வேண்டும். அதன் வாயிலாக இடது ஜனநாயக அணி உருவாக முடியும்.  மாநிலங்களில் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலான ஓர் மேடை உருவாகிற வகையில் பல்வேறு இடது, ஜனநாயக சக்திகளை திரட்ட வேண்டும்.

ஏ.பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை அதிகபட்சமாக ஒன்று சேர்ப்பதற்குப் பொருத்தமான தேர்தல் உத்திகளை கட்சியின் மேற்கூறிய அரசியல் நிலைபாட்டிற்கு உட்பட்டு வகுக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் கடமைகள்

2.116    அ.மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நவீன தாராளமயத்தின் சுரண்டலுக்கும் – தாக்குதல்களுக்கும் ஆளாகிற அனைத்துப் பிரிவு உழைப்பாளி மக்களும் வேலை, நிலம், உணவு, கூலி, வாழ்நிலைக்கான இயக்கங்களில் திரட்டப்பட வேண்டும். அனைத்துத் தன்னெழுச்சியான போராட்டங்களிலும் கட்சி தலையீடு செய்ய வேண்டும். அவற்றை வளர்த்தெடுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஆ.இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் முன்வரிசையில் நிற்க வேண்டும். இப்போராட்டம் சமூக, கலாச்சார, அரசியல், தத்துவ தளங்களில் நடத்தப்பட வேண்டும். வகுப்புவாத சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்கிற வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிந்த மேடையை உருவாக்க வேண்டும்.

இ.சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிற பிரிவினரின் நலன்களை முன்னெடுப்பதற்கான கட்சியின் முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும். பெண்களின் உரிமைகளுக்காக கட்சி தொடர்ந்து போராடுவதோடு பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் வன்முறைகளையும் எதிர்க்க வேண்டும். இடதுசாரிகள் மற்றும் தலித்துகளின் கூட்டு மேடைகளை முன்னெடுக்க வேண்டும். ஆதிவாசி மக்களின் உரிமைகளை எல்லா அம்சங்களிலும் பாதுகாக்க கட்சி போராட வேண்டும். சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விரிந்த ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.

ஈ.தேச இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணியால் நாட்டில் வளர்ந்து வருகிற ஏகாதிபத்திய செல்வாக்குக்கு எதிராகவும் மக்களைத் திரட்டுவதற்கான பிரச்சாரங்களை கட்சி விரிவுபடுத்த வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தொண்டூழியம் செய்வதை மறைக்கப் பயன்படும் பிஜேபியின் தீவிர தேசிய நிலைபாட்டினை அம்பலப்படுத்த வேண்டும்.

உ.வளர்ந்து வருகிற எதேச்சாதிகாரத்திற்கு எதிரான சக்திகளை எவ்வளவு விரிவான அளவில் திரட்ட இயலுமோ அதைச் செய்ய வேண்டும். ஜனநாயகம், படைப்புச் சுதந்திரம், கல்வி தன்னாட்சி ஆகியன மீதான தாக்குதல்களுக்கு எதிராக விரிந்த திரட்டல் செய்யப்பட வேண்டும்.

ஊ.கட்சி தனது சுயேச்சையான பாத்திரத்தை வலுப்படுத்தவும், அதன் செல்வாக்கு, வெகுஜன தளத்தை விரிவாக்கவும் வர்க்க, வெகுஜன போராட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள், கட்சி மற்றும் இடது முன்னணி மீது மேற்குவங்கத்தில் தொடுக்கப்படும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். திரிபுரா, கேரளாவிலுள்ள இடது தலைமையிலான அரசாங்கங்களைப் பாதுகாப்பது முக்கியமான கடமையாகும்.

எ.இடதுசாரி மேடையின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைகள், பிரச்சாரங்களை முன்னிறுத்துவதன் மூலம் ஏற்கனவே உள்ள குறைபாடுகளைக் களைந்து இடதுசாரி ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இதுவே இடது ஜனநாயகத் திட்டத்தின் பால் இதர ஜனநாயக அமைப்புகளையும், சக்திகளையும் ஈர்ப்பதற்கான அடித்தளமாகும். இத்தகைய திட்டத்தின் அடிப்படையில் அமையும் இயக்கங்கள், போராட்டங்களின்   வாயிலாகவே உண்மையான மாற்றான இடது ஜனநாயக மாற்று உருவெடுக்கும்.

பலமான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவோம்

2.117    இதை எட்டுவதற்கு நாடு முழுமையும் பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவது அவசியம் ஆகும். அது மார்க்சிய – லெனினியத்தின் அடிப்படையிலான, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டால் வழி நடத்தப்படுகிற கட்சியாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் வெகுஜன தளத்தைக் கொண்ட வலுவான கம்யூனிஸ்ட் கட்சியாக உருவாக, கொல்கத்தா பிளீனம் வகுத்த அமைப்பு ரீதியான கடமைகளை கீழ்க்காணும் அம்சங்கள் மீதான குவிகவனத்தோடு அமலாக்க வேண்டும்.

அ.    கட்சியின் செல்வாக்கை விரிவாக்கவும், இடது ஜனநாயக சக்திகளைத் திரட்டுவதற்குமான வர்க்க, வெகுஜனப் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஆ.    வெகுஜனப் பாதையையும், மக்களுடன் உயிரோட்டமான தொடர்புகளையும்  மேற்கொள்ள வேண்டும்.

இ.    தரம் மிக்க உறுப்பினர் தளத்தைக் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புகிற வகையில் அமைப்பு சீர்செய்யப்பட வேண்டும்.

ஈ.    இளைஞர்களைக் கட்சிக்குள் ஈர்ப்பதற்கு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

உ.    வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் பிற்போக்கான சித்தாந்தங்களுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

2.118    நாம் செய்வோம்!

1.    எதேச்சாதிகார, வகுப்புவாத பிஜேபி ஆட்சியைத் தோற்கடிக்கிற போராட்டத்தை முன்னெடுப்போம்.!

2.    ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசத்தை நோக்கிய போராட்டம் முன்னேறுவதற்கு வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யை கட்டியெழுப்புவோம்.!

3.    இடது, ஜனநாயக மாற்றை உருவாக்க வலுவான இடது, ஜனநாயக அணியை உருவாக்குவோம்.!

* * *

நகல் அரசியல் தீர்மானத்தின் மீதான திருத்தங்களை அனுப்பவதற்கான வழிமுறை

நகல் அரசியல் தீர்மானத்தின் மீதான திருத்தங்களை அனுப்புவதற்கான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது.

1.    எல்லாத் திருத்தங்களும் பத்தி எண் / வரி எண் குறிப்பிடப்பட்டு மொழியப்பட வேண்டும்.
2.    திருத்தத்தை முன்மொழியக் கூடிய தோழர் / அவர் சார்ந்த கிளையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
3.     எல்லாத் திருத்தங்களும் மார்ச் 20, 2018க்குள்ளாக வந்து சேர வேண்டும்.
4.     தபால் / கூரியரில் அனுப்பப்படும் திருத்தங்களுக்கு
Communist Party of India (Marxist)
Central Committee, A.K. Gopalan Bhavan
27–29 Bhai Vir Singh Marg, New Delhi – 110 001

என்ற முகவரி இடப்பட வேண்டும்.
5.    உறையின் மீது ‘Amendments to the Draft Political Resolution’. என்று குறிப்பிடப்பட வேண்டும்.
6.    ஃபேக்ஸ் செய்திகளில் எழுத்துக்கள் அழிந்து போகக் கூடுமென்பதால், ஃபேக்ஸ் மூலம் அனுப்புவதைத் தவிர்க்கலாம்.
7.    இமெயில் மூலம் அனுப்புவர்கள் “text” ஆகவோ, “வேர்டு பைலாகவோ” அனுப்ப வேண்டும்.  ஆங்கிலம் தவிர்த்த மொழிகளில் அனுப்புபவர்கள் “பிடிஎப் பைலாக” அனுப்ப வேண்டும்.

8.    இமெயிலின் பொருளாக “‘Amendments to the Draft Political Resolution’. எனக் குறிப்பிட வேண்டும். pol@cpim.org என்கிற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

9.    திருத்தங்கள் கீழ்க்கண்ட வடிவில் இருந்தால் உதவிகரமாய் இருக்கும்.

வ.எண்      பத்தி எண்       வரி எண்           திருத்தம்        முன்மொழிபவர்

English Version: Draft Pol. Resolution

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...