”யெச்சூரி என்பது ஜாதிப் பெயர் அல்ல!”

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை, தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில் சந்தித்தோம். ஒரு மணி நேரத்துக்கு மேல் நீண்ட அந்த உரையாடல், யெச்சூரி என்ற பெயர் குறித்த கேள்வியுடன் தொடங்கியது…

“யெச்சூரி என்பது ஜாதிப் பெயரா, அல்லது உங்கள் குடும்பப் பெயரா?”

யெச்சூரி என்பது ஒரு கிராமத்தின் பெயர். ஆந்திராவில், கோதாவரி ஆற்றங்கரையில் யெச்சூரி என்ற ஒரு கிராமம் இருந்தது. அதுதான், என் தந்தை வழித் தாத்தாவின் கிராமம். ஒரு முறை கோதாவரியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, அந்தக் கிராமம் அடித்துச் செல்லப்பட்டது. அதில், இரண்டு குடும்பங்கள் மட்டுமே உயிர் பிழைத்தன. அதில் ஒன்று, எங்கள் தாத்தாவின் குடும்பம். வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு, எங்கள் தாத்தா குடும்பம் காக்கிநாடாவில் செட்டிலாகிவிட்டது. எங்கள் மூதாதையர் கிராமத்தின் பெயர்தான், என் பெயரிலுள்ள யெச்சூரி. என்னுடைய முழுப் பெயர் யெச்சூரி வெங்கட சீத்தாராம ராவ். என் தாத்தாவின் பெயரும் வெங்கட சீத்தாராம ராவ்தான். ராவ் என்பது சாதிப்பெயர் என்பதால், அதை நீக்கிவிட்டேன்.”

“உங்களுக்கும் சென்னைக்குமான பிணைப்பு பற்றி…”
“எங்கள் குடும்பம் மூன்று தலைமுறைகளாக சென்னையில்தான் வசித்தது. அப்போது, இதை நாங்கள் சென்னைப்பட்டினம் என்றுதான் அழைப்போம். இதுதான் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகர். என் தாத்தா (தாய் வழி) குடும்பத்தினர், மயிலாப்பூரிலுள்ள சி.பி.கோயில் தெருவில் வசித்தார்கள். அந்த வீட்டில்தான் என் அம்மா பிறந்தார். நான் பிறந்த வீடும் அதுதான். உண்மையில், நான் பிறந்தது சென்னை அரசுப் பொது மருத்துவமனை. என் அம்மா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், என் அப்பா, கிண்டி பொறியியல் கல்லூரியிலும் படித்தவர்கள்.

என் தாத்தா, ஒரு வழக்கறிஞர் . பின்னாளில் அவர், உயர் நீதிமன்ற நீதிபதி ஆனார்.  நான் பிறந்த பிறகு, 1954-ல் மாநில மறுசீரமைப்பு நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆந்திரா கிளை, குண்டூருக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த என் தாத்தா, ஆந்திரா பெஞ்சுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். எங்கள் குடும்பமும் குண்டுரூக்கு இடம்பெயர்ந்தது. 1956-ல், ஹைதராபாத்தில் ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகு, எங்கள் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டது. ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டோம்.

சென்னையிலிருந்து எங்கள் குடும்பம் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது என்றாலும், வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் கோடைக் காலத்தில் குடும்பத்துடன் சென்னைக்கு வந்துவிடுவோம். இரண்டு மாதங்கள் சென்னையில் கழிப்போம். நாங்கள் தங்கியிருப்பது, மயிலாப்பூரிலுள்ள இந்தியன் ஆஃபீஸர்ஸ் அசோசியேஷனில்தான். சென்னையில், எங்களுக்கு நிறைய குடும்ப நண்பர்கள் உண்டு.”

“மூன்றாண்டு கால ஆட்சியின் நிறைவை பி.ஜே.பி-யினர் கொண்டாடி வருகிறார்களே?”

“என்ன சாதனை செய்துவிட்டார்கள் என்று இந்தக் கொண்டாட்டம்? தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றியுள்ளார்கள் என்றால், அந்தக் கொண்டாட்டத்தில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால், ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். இதுவரை, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்கள்? அமைப்பு ரீதியான துறையில் 2015-ல் வெறும் 1.3 லட்சம் வேலைகளையும், 2016-ல் வெறும் 2.3 லட்சம் வேலைகளையும் உருவாக்கியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில், உருவாக்கப்பட்ட வேலைகள் வெறும் 3.6 லட்சம்தான்.

அதுமட்டுமல்ல, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கியிருக்க வேண்டிய நிதியில், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இவர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை. இதை, உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசே தெரிவித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில், 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவில்லை. இத்திட்டத்தில் ஏற்கெனவே வேலை செய்தவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. இந்தியாவில் ஐ.டி துறையில் பணியாற்றும் 40 லட்சம் இளைஞர்களில், 50-60 சதவிகிதம் பேர், இந்த ஆண்டில் வேலையைவிட்டு அனுப்பப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 36-40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மோடி அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் இந்தத் துயரத்துக்கு, கடன் சுமையே காரணம். ஆனால், விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்ய இந்த அரசு தயாராக இல்லை. இவையெல்லாம் சாதனைகளா? இவற்றுக்காகத்தான் இந்தக் கொண்டாட்டமா?”

“இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை உட்படமத்திய பி.ஜே.பி அரசின் ‘அதிரடி’ நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்”
“முன்றாண்டு கால பி.ஜே.பி ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. இப்படி பல்வேறு பிரச்னைகளால், மோடி அரசின் மீது மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள். அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, வகுப்புவாதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். வகுப்புவாதச் செயல்பாடுகளின் மூலம், மதரீதியாக மக்களை ஒன்றுதிரட்டுவது என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பி.ஜே.பி., தற்போது அதைச் செய்து வருகிறது. மதரீதியாக மக்களை அணிதிரட்டும் திட்டப்படிதான், ‘பசுப் பாதுகாப்பு‘, ‘கலாசாரக் காவல்’ என்று தனியார் ராணுவத்தை இறக்குகிறார்கள். இதன் மூலமாக தலித்துகள், முஸ்லிம்கள், இடதுசாரிகள் ஆகியோரை குறிவைக்கிறார்கள். ‘இந்து ராஷ்டிரா’ என்ற அவர்களின் திட்டத்துக்காக இவற்றையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.”

“காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகளுக்கும், மோடி அரசின் செயல்பாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?”

“முதல் ஐ.மு.கூட்டணி அரசு, முற்போக்கான பலவற்றைக் கொண்டுவந்தது. தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை, உணவு உரிமை, பழங்குடியினருக்கான உரிமை, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உட்பட சுதந்திர இந்தியாவில் அதுவரை இல்லாத பல நல்ல விஷயங்கள் கொண்டுவரப்பட்டன. இரண்டாம் ஐ.மு.கூட்டணி அரசைப் பொறுத்தவரை, நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றில் பெரும்பாலானவை இன்னும் விசாரணையில் உள்ளன. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை, இரண்டாம் ஐ.மு.கூ அரசு சரியாகச் செயல்படுத்தவில்லை. இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் எந்தப் பலனையும் கொடுக்கவில்லை. இப்படியான பலவீனங்கள் இருந்தன. ஆனால், அந்த ஆட்சியில் வகுப்புவாத ஆபத்துகள் இல்லை.

மோடி அரசோ, தேசத்துக்கு மிகவும் ஆபத்தான வகுப்புவாத அஜெண்டாவுடன் செயல்படுகிறது. பிரதமரே வகுப்புவாத ரீதியில் பேசுகிறார். உதாரணத்துக்கு, முத்தலாக் விவகாரம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முத்தலாக் முறையை நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது. அது, முழுக்க முழுக்கப் பெண்களுக்கு எதிரானது. ஆனால், இதை பிரதமர் பேசுவதற்கு ஓர் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. உண்மையிலேயே, பெண்களின் நலனில் பிரதமருக்கு அக்கறை இருக்குமானால், பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியிருக்கலாமே? கடந்த மூன்றாண்டுகளில், தங்களின் தனிப்பெரும்பான்மை அரசைக் கொண்டு நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இருந்தும், ஏன் அதை நிறைவேற்றவில்லை?. எனவே, முத்தலாக் பற்றி அவர்கள் பேசுவது வெறும் வேஷம். தங்களின் வகுப்புவாத அஜெண்டாவுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள். பிரதமரின் சொந்தத் தொகுதியில்தான், உலகத்திலேயே அதிகமான விதவைப்பெண்கள் வாழுகிற இடங்கள் உள்ளன. அங்கு, அந்த விதவைகள் மறுமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அது எவ்வளவு பெரிய கொடுமை. அந்தப் பெண்களுக்காகப் பிரதமர் ஏன் குரல் கொடுக்கவில்லை?”

“பி.ஜே.பி-யைக் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். ஆனால், சமீபத்திய தேர்தல்களில் பி.ஜே.பி-யின் செல்வாக்கு அதிகரித்துள்ளதே?”

“இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகுதானே, பீகாரில் தேர்தல் நடந்தது! அங்கு வெற்றிபெற்றது யார்? உ.பி.யில், 2014-ல் பெற்ற வாக்குகளை விட இந்தத் தேர்தலில் மூன்று சதவிகித வாக்குகள் குறைவாகவே பி.ஜே.பி பெற்றுள்ளது. உத்தரகாண்டில், முந்தைய தேர்தலைவிட 10 சதவிகித வாக்குகளைக் குறைவாகவே பெற்றுள்ளது. கோவாவில் ஆட்சியைப் பிடித்தாலும், அங்கு பி.ஜே.பி-க்குப் பெரும்பான்மை இல்லை. மணிப்பூரிலும் அதே கதைதான். கோவாவிலும், மணிப்பூரிலும் ஆள் பலம், பண பலம், குதிரை பேரம், குறுக்கு வழி போன்றவற்றின் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளனர். உ.பி-யில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்திருந்தால், 90 இடங்களுக்கு மேல் பி.ஜே.பி-யால் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆட்சியைப் பிடித்துவிட்டதால், அவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளதைப் போல ஒரு தோற்றம் உள்ளது. ஆனால், 69 சதவிகித மக்கள் பி.ஜே.பி-க்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பது மட்டுமே பி.ஜே.பியின் பலம்.”

நன்றி:- விகடன்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...